திங்கள், 23 நவம்பர், 2009

அமுதைப் பொழியும் நிலவே

வெண்ணிலவு கோடையில் தந்த சிறிதளவு குளிர்ச்சி போதாது, மேலும் தொடர வேண்டும். கோடையின் வெப்பத்தால் மிகவும் தாக்குண்டு களைத்துப் போன உடலும் மனமும் மேலும் புத்துணர்ச்சி பெற நிலவின் துணை அவசியம்.
தேவர்களும் அசுரர்களும் அமுதம் பெறவேண்டிப் பாற்கடலைக் கடைகையில் அதற்கு மத்தாக மந்தரகிரியையும் நாணாக வாசுகி எனும் பாம்பையும் கொண்டார்கள். மத்தாகிய மலையைத் தாங்கிப் பிடிக்க திருமால் ஆமையாக அவதாரம் செய்தார் (கூர்மாவதாரம்). அவ்வாறு பாற்கடலைக் கடைகையில் திருமாலுடைய மேனி வெப்பமடையவே சிவபெருமானின் சடாமுடியில் இருக்கும் நிலவின் ஒளிக் கதிர்கள் அவர் மேல் வீசி அவரது மேனி வெப்பத்தைத் தணித்தனவாம்.

இணங்கேன் ஒருவரை; நின் இரு தாள் அன்றி எப்பொழுதும் வணங்கேன் ஒருவரை வாழ்த்துகிலேன்; வஞ்ச நெஞ்சர் உடன் பிணங்கேன் - அமுதம் பெருகும் செம் பாதிப் பிறை முடித்த அணங்கே! சரணம் கண்டாய், மதுராபுரி அம்பிகையே!

என்று குலசேகர பாண்டியன் அருளிய மதுராபுரி அம்பிகை மாலை

அமுதைப் பொழியும் நிலவே

பாடல்களுள் நிலவிலிருந்து அமுதம் பெருகுவதாகக் குறிப்பிடப்பட்டுள்ளது. அத்தகைய அமுதைப் பொழியும் நிலவை அருகில் அழைக்கிறாள் பருவமடைந்த நிலையில் ஆசைகள் அரும்பும் மனத்தினளான ஒரு அழகிய கன்னிப்பெண்.

அமுதைப் பொழியும் நிலவே

திரைப்படம்: தங்கமலை ரகசியம்
பாடியவர்: பி. சுசீலா
இயற்றியவர்: க்விஞர் பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம்
இசை: டி.ஜி. லிங்கப்பா ஆண்டு: 1957

அமுதைப் பொழியும் நிலவே நீ
அருகில் வராததேனோ ஓ... அருகில் வராததேனோ ஓ...
அமுதைப் பொழியும் நிலவே நீ
அருகில் வராததேனோ அருகில் வராததேனோ
அமுதைப் பொழியும் நிலவே நீ
அருகில் வராததேனோ அருகில் வராததேனோ

இதயம் மேவிய காதலினாலே
ஏங்கிடும் அல்லியைப் பாராய் ஆ...ஆ..
இதயம் மேவிய காதலினாலே
ஏங்கிடும் அல்லியைப் பாராய்
புதுமலர் வீணே வாடிவிடாமல்
புதுமலர் வீணே வாடிவிடாமல்
புன்னகை வீசி ஆறுதல் கூற

அருகில் வராததேனோ அருகில் வராததேனோ
அமுதைப் பொழியும் நிலவே நீ
அருகில் வராததேனோ அருகில் வராததேனோ

மனதில் ஆசையை மூட்டிய பின்னே
மறைந்தே ஓடிடலாமா ஆ..ஆ..ஆ..ஆ..
மனதில் ஆசையை மூட்டிய பின்னே
மறைந்தே ஓடிடலாமா
இனிமை நினைவும் இளமை வளமும்
இனிமை நினைவும் இளமை வளமும்
கனவாய் கதையாய் முடியும் முன்னே

அருகில் வராததேனோ அருகில் வராததேனோ
அமுதைப் பொழியும் நிலவே நீ
அருகில் வராததேனோ அருகில் வராததேனோ

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக