திங்கள், 23 நவம்பர், 2009

சின்னச் சின்னக் கண்ணனுக்கு என்ன தான் புன்னகையோ?

நாம் ஒவ்வொருவரும் குழந்தைப் பருவத்தில் வாழ்வை மிகவும் அனுபவித்து அளவிலா மகிழ்ச்சியுடன் வாழ்ந்துள்ளோம். இதற்கு விதிவிலக்காகக் குழந்தைப் பருவத்தில் மிகவும் துயருற்று வருந்துபவர்களும் உலகில் உளர். இதனாலேயே மூதாட்டி ஔவை "கொடிது கொடிது வறுமை கொடிது, அதனினுங் கொடிது இளமையில் வறுமை" என்றாள். ஒரு குழந்தையை தெய்வத்துக்கு நிகராகக் கருதிப் பேணுவது உலகிலுள்ளோர் அனைவரது வழக்கம், இதற்குக் காரணம் குழந்தைப் பருவத்தில் யாருக்கும் கள்ளம், கபடு, சூது, வாது, போட்டி, பொறாமை முதலான தீய குணங்கள் இருப்பதில்லை.
"நீங்கள் குழந்தைகளைப் போலானாலன்றி மோக்ஷ சாம்ராஜ்யத்தை அடைய மாட்டீர்கள்" என்று இயேசுநாதர் கூறியுள்ளார். இதன் பொருள் குழந்தைகளின் உள்ளத்தைப் போன்று நிஷ்களங்கமாக உங்களது இதயத்தை வைத்துக் கொள்ளுங்கள். தீய குணங்களைக் கொள்ளாதீர்கள், அப்பொழுது தான் நீங்கள் உண்மையான மகிழ்ச்சியை அடைவீர்கள் என்பதாகும்.

வயதில் மிகவும் முதிர்ந்த பெரியோர்களாயினும், இளம் வாலிபர்களாயினும், நடுத்தர வயதினராயினும் அவர்கள் யாவரும் மிகவும் விரும்பிப் பழகுவது குழந்தைகளிடமே. தினமும் சிறிது நேரம் நமது அன்றாடப் பணிகளின் தொல்லையிலிருந்து விலகி, குழந்தைகளுடன் சேர்ந்து விளையாடி மகிழ்ந்தால் நம் துன்பங்களெல்லாம் மறந்து நம்முள் ஒரு புத்துணர்ச்சி உண்டாகி, நாம் உற்சாகமாக வாழ வேண்டுமெனும் ஆவல் பெருக்கெடுத்து, துன்பங்களுக்கிடையிலும் மகிழ்ச்சியுடன் இருக்க நாம் கற்றுக் கொள்ளலாம்.

சின்னச் சின்னக் கண்ணனுக்கு என்ன தான் புன்னகையோ?

படம்: வாழ்க்கைப் படகு
இயற்றியவர்: கவிஞர் கண்ணதாசன்
இசை: எம்.எஸ். விஸ்வநாதன், பி. ராமமூர்த்தி
பாடியவர்: பி.பி. ஸ்ரீனிவாஸ்
ஆண்டு: 1964

சின்னச் சின்னக் கண்ணனுக்கு என்ன தான் புன்னகையோ?
சின்னச் சின்னக் கண்ணனுக்கு என்ன தான் புன்னகையோ?
கண்ணிரண்டும் தாமரையோ கன்னம் மின்னும் என்தன் கண்ணா
சின்னச் சின்னக் கண்ணனுக்கு என்ன தான் புன்னகையோ?
சின்னச் சின்னக் கண்ணனுக்கு என்ன தான் புன்னகையோ?

பால் மணக்கும் பருவத்திலே உன்னைப் போல் நானிருந்தேன்
பட்டாடை தொட்டிலிலே சிட்டுப்போல் படுத்திருந்தேன்
அந்நாளை நினைக்கையிலே என் வயது மாறுதடா
உன்னுடன் ஆடி வர உள்ளமே தாவுதடா
கண்ணிரண்டும் தாமரையோ கன்னம் மின்னும் என்தன் கண்ணா

சின்னச் சின்னக் கண்ணனுக்கு என்ன தான் புன்னகையோ?

ஒருவரின் துடிப்பினிலே விளைவது கவிதையடா
இருவரின் துடிப்பினிலே விளைவது மழலையடா
ஈரேழு மொழிகளிலே என்ன மொழி பிள்ளை மொழி
கள்ளமற்ற வெள்ளை மொழி தேவன் தந்த தெய்வ மொழி
கண்ணிரண்டும் தாமரையோ கன்னம் மின்னும் என்தன் கண்ணா

சின்னச் சின்னக் கண்ணனுக்கு என்ன தான் புன்னகையோ?

பூப்போன்ற நெஞ்சினிலும் முள்ளிருக்கும் பூமியடா
பொல்லாத கண்களடா புன்னகையும் வேஷமடா
நன்றி கெட்ட மாந்தரடா நானறிந்த பாடமடா
நன்றி கெட்ட மாந்தரடா நானறிந்த பாடமடா
பிள்ளையாய் இருந்து விட்டால் இல்லை ஒரு துன்பமடா
கண்ணிரண்டும் தாமரையோ கன்னம் மின்னும் என்தன் கண்ணா

சின்னச் சின்னக் கண்ணனுக்கு என்ன தான் புன்னகையோ?

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக