புதன், 25 ஜனவரி, 2012

சும்மாக் கெடந்த நெலத்தைக் கொத்தி


இந்தியா ஒரு விவசாய நாடு. இங்கே விளையும் தானியங்களுக்குப் பஞ்சமில்லை. இது கனியும் கிழங்கும் தானியங்களும் கணக்கின்றித் தரும் நாடு என்று அமரகவி பாரதியால் புகழப்பெற்றது. இருப்பினும் இந்நாட்டில் ஊருக்கெல்லாம் உணவளிக்கும் விவசாயிகள் அநேகமாக அனைத்து மாநிலங்களிலும் கடன் தொல்லையால் பாதிக்கப்பட்டுத் தற்கொலை செய்துகொள்ளும் நிலைக்குத் தள்ளப்படுகின்றனர். விவசாயிகள் தற்கொலை வெகு காலமாகவே ஒரு தொடர்கதையாக நிகழ்ந்து வந்த போதிலும் அது பற்றி ஆட்சியாளர்கள் எவரும் எவ்வித அக்கரையும் கொள்வதில்லை. விவசாயிகள் பெரும்பாலும் கடன் வாங்குவது செயற்கை இரசாயன உரத்துக்கும் பல்வேறு காரணங்களால் தங்களது நிலத்தில் விளையும் விளைபொருட்கள் பாழவதாலும் சரியான விலைக்கு விற்கப் படாமல் நஷ்டமடைவதாலும் உண்டாகும் இக்கட்டான சூழ்நிலையை சமாளிப்பதற்குமே ஆகும்.

இயற்கையோடு இயைந்த வாழ்வு வாழ்ந்து வந்த இந்திய மக்கள் அந்நியர் ஆதிக்கத்தால் மதிமயங்கி செயற்கை வழிமுறைகளைப் பின்பற்றியதன் விளைவால் இன்று பல விளைநிலங்கள் செயற்கை உரங்களாலும், விஷத் தன்மை கொண்ட பூச்சிக்கொல்லி மருந்துகளாலும் பாழ்பட்டு மலட்டுத் தன்மையை எய்தியுள்ளன. அவற்றில் பயிர்கள் செழித்து வளர ஏற்ற சூழ்நிலையில்லாமல் போவதால் பலர் தம் விளைநிலங்களை வந்த விலைக்கு விற்றுவிட்டு, கிராமங்களை விட்டு நகரங்களை நாடிச் சென்று அங்கே அரை வயிற்றுக் கஞ்சிக்காகக் கூலி வேலை செய்து நடைபாதையோரங்களில் படுத்துறங்கிப் பரிதாப வாழ்வை மேற்கொள்ளும் சூழ்நிலை நம் நாட்டில் உருவாகியுள்ளது. அது மட்டுமின்றி நாம் உண்ணும் உணவு மட்டுமின்றி நிலத்தடி நீரும் பாழ்பட்டு விஷமாகின்றது, சுற்றுச் சூழல் மாசுபடுகின்றது, உலகம் வெப்பமயமாகி உலகமே அழிவுப்பாதையில் இட்டுச்செல்லப்படுகின்றது.

விவசாயிகளின் வாழ்க்கையில் முன்னேற்றம் காணவும் உலகைக் காக்கவும், இயற்கை வழி விவசாயத்தைக் கடைபிடிக்க வேண்டியதன் அவசியத்தை வலியுறுத்துவதுடன் விவசாயிகளை முறையாக வழிநடத்கிறார் இயற்கை விஞ்ஞானி கோ. நம்மாழ்வார்.

http://www.mazhalaigal.com/entertainment/video/agriculture/agriculturist/2009102402_mega-tv-meeting.php

தஞ்சை மாவட்டம் திருக்காட்டுப் பள்ளியைச் சேர்ந்த நம்மாழ்வார் தமிழ்நாட்டின் முதன்மை இயற்கை அறிவியலாளர்களில் ஒருவர். இவர் அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் வேளாண்மை இளங்கலைப் படிப்பைக் கற்றவர். கோவில்பட்டி மண்டல மழைப்பயிர் ஆய்வகத்தில் 1960ஆம் ஆண்டு ஆய்வு உதவியாளராகப் பணியில் சேர்ந்து ஆய்வகங்களில் நிலவும் களப்பணியில் ஈடுபடாது செய்யப்படும் பயனில்லாப் பணிகளுக்கு எதிராக்க குரல் கொடுத்து மூன்றாண்டுகளில் வெளியேறினார். பசுமைப் புரட்சி, நிலச்சீர்திருத்தம், தொழில்மயமாக்கம், சூழல் பாதுகாப்பு தொடர்பாக காரமான விமர்சனங்களையும் ஆக்கபூர்வமான மாற்றுக்களையும் முன்வைத்தவர். தமிழ்நாட்டில் இயற்கை வழி வேளாண்மை முறைகளை ஊக்குவித்து வருபவர். குடும்பம் அமைப்பு உட்பட 250க்கும் மேற்பட்ட அரசு சாரா அமைப்புகளின் அமைப்பாளரும் ஆவார்.
"தமிழின வாழ்வியல் பல்கலைக்கழகம்" என்ற அமைப்பினைத் தொடங்கி, தமிழ்நாட்டின் கிராமப்புறங்கள் எல்லாவற்றையும் கால்நடையாக எட்டி, அங்கு கருத்தரங்கங்களும், பயிற்சி வகுப்புகளும் நடத்தி வருபவர். "பேரிகை' என்றொரு இயற்கை உழவாண்மை வாழ்வியல் மாத இதழை வெளியிடுகிறார். தமிழ்நாடு மாசு கட்டுப்பாட்டு வாரியம், இவருக்குச் "சுற்றுச் சூழல் சுடரொளி' விருதினை வழங்கியது.

இவர் காட்டிய வழியில் இன்று லட்சக்கணக்கான விவசாயிகள் நடந்து மிக்க பயனடைந்து வருவதால் இன்று செயற்கை உரங்களும் பூச்சிக்கொல்லி மருந்துகளும் தவிர்க்கப்பட்டு இயற்கை விவசாயத்தை மேற்கொள்ளும் விவசாயிகளின் எண்ணிக்கை நாளுக்கு நாள் கூடி வருகிறது.

உழுதுண்டு வாழ்வாரே வாழ்வார் மற்றெல்லாம்
தொழுதுண்டு பின்செல் பவர்

என்ற குறளுக்கிணங்க உலக மக்கள் யாவரும் தொழுது வணங்கும் நிலையில் விவசாயிகளை என்று வைக்கிறோமோ அன்றே உலகம் உய்யும்.

சும்மாக் கெடந்த நெலத்தைக் கொத்தி

திரைப்படம்: நாடோடி மன்னன்
பாடியவர்:  டி.எம். சௌந்தரராஜன், பி. பானுமதி
இயற்றியவர்: சுரதா
இசை: எஸ்.எம். சுப்பையா நாயுடு
ஆண்டு: 1958

ஓ ஓஓஓ ஓஓஓ ஓஓஓஓஓஓஓ ஓஓஓஓஓ
ஓஓஓஓஓஓஓஓஓஓஓஓஒ ஓஓஓஓஓஓஓஓஓஓஓஓஓஓ
ஓஓஓஓஓஓஓஓஓஓஓஓஒ ஓஓஓஓஓஓஓ

சும்மாக் கெடந்த நெலத்தைக் கொத்தி
சோம்பலில்லாமே ஏர் நடத்தி
சும்மாக் கெடந்த நெலத்தைக் கொத்தி
சோம்பலில்லாமே ஏர் நடத்தி
கம்மாக் கரைய ஒசத்திக் கட்டிக்
கரும்புக் கொல்லையில் வாய்க்கா வெட்டி
சம்பாப் பயிரைப் பறிச்சு நட்டு
தகுந்த முறையில் தண்ணீர் விட்டு
நெல்லு வெளெஞ்சிருக்கு வரப்பும்
உள்ளே மறைஞ்சிருக்கு
நெல்லு வெளெஞ்சிருக்கு வரப்பும்
உள்ளே மறைஞ்சிருக்கு அட

காடு வெளஞ்சென்ன மச்சான் நமக்குக்
கையுங்காலுந்தானே மிச்சம் கையுங்காலுந்தானே மிச்சம்
காடு வெளஞ்சென்ன மச்சான் நமக்குக்
கையுங்காலுந்தானே மிச்சம் கையுங்காலுந்தானே மிச்சம் இப்போ
காடு வெளையட்டும் பொண்ணே நமக்குக்
காலமிருக்குது பின்னே காலமிருக்குது பின்னே
காடு வெளையட்டும் பொண்ணே நமக்குக்
காலமிருக்குது பின்னே காலமிருக்குது பின்னே

மண்ணைப் பிளந்து சுரங்கம் வெச்சு
பொன்னை எடுக்கக் கனிகள் வெட்டி
மண்ணைப் பிளந்து சுரங்கம் வெச்சு
பொன்னை எடுக்கக் கனிகள் வெட்டி
மதிலு வச்சு மாளிகை கட்டி
கடலில் மூழ்கி முத்தை எடுக்கும்
மதிலு வச்சு மாளிகை கட்டி
கடலில் மூழ்கி முத்தை எடுக்கும்
வழிகாட்டி மரமான தொழிலாளர் வாழ்க்கையிலே
பட்ட துயரினி மாறும் ரொம்பக்
கிட்ட நெருங்குது நேரம் கிட்ட நெருங்குது நேரம் அவர்
பட்ட துயரினி மாறும் ரொம்பக்
கிட்ட நெருங்குது நேரம் கிட்ட நெருங்குது நேரம் அட

காடு வெளஞ்சென்ன மச்சான் நமக்குக்
கையுங்காலுந்தானே மிச்சம் கையுங்காலுந்தானே மிச்சம்
காடு வெளையட்டும் பொண்ணே நமக்குக்
காலமிருக்குது பின்னே காலமிருக்குது பின்னே

மாடா உழைச்சவன் வாழ்க்கையிலே பசி
வந்திடக் காரணம் என்ன மச்சான்? அவன்
தேடிய செல்வங்கள் வேறு இடத்திலே
சேர்வதினால் வரும் தொல்லையடி
பஞ்சப் பரம்பரை வாழ்வதற்கே இனிப்
பண்ண வேண்டியது என்ன மச்சான்? தினம்
கஞ்சி கஞ்சி என்றால் பானை நெறையாது
சிந்திச்சு முன்னேற வேண்டுமடி
வாடிக்கையாய் வரும் துன்பங்களை இன்னும்
நீடிக்கச் செய்வது மோசமன்றோ? - இருள்
மூடிக்கிடந்த மனமும் வெளுத்தது
சேரிக்கும் இன்பம் திரும்புமடி இனி
சேரிக்கும் இன்பம் திரும்புமடி
நல்லவர் ஒன்றாய் நைந்து விட்டால் மீதம்
உள்ளவரின்ர்கள் நிலை என்ன மச்சான்?
நாளை வருவதை எண்ணி எண்ணி அவர்
நாழிக்கு நாழி தெளிவாரடி அட

காடு வெளஞ்சென்ன மச்சான் நமக்குக்
கையுங்காலுந்தானே மிச்சம் கையுங்காலுந்தானே மிச்சம்
நானே போடப் போறேன் சட்டம் பொதுவில்
நன்மை புரிந்திடும் திட்டம் நாடு நலம் பெறும் திட்டம்
நன்மை புரிந்திடும் திட்டம் நாடு நலம் பெறும் திட்டம்
நன்மை புரிந்திடும் திட்டம் நாடு நலம் பெறும் திட்டம்