புதன், 24 செப்டம்பர், 2014

மின்னுவதெல்லாம் பொன்னென்று எண்ணி

தினம் ஒரு பாடல் ஜூலை 10, 2014

இவ்வுலகில் ஒவ்வொரு மனிதனும் தான் என்று பிறந்தானோ அன்றிலிருந்து தான் இறந்து இவ்வுலகை விட்டு மறையும் வரை மிகவும் அதிகப்படியாக நினைப்பதும் பேசுவதும் கனவு காண்பதும் தன்னைப் பற்றித்தான். பிறர் துன்பமுற்ற போதும் அதைப் பொருட்படுத்தாமல் தான் உண்டு தன் வேலை உண்டு என்று வாழ்ந்து பொருளீட்டி, பெரும் பட்டங்களும் பதவிகளும் பெற்று, பிறரால் பாராட்டப்பட்டு ஒரு செயற்கையான மிதப்பிலேயே என்றும் வாழ ஆசைப்படுகின்றான். இந்நிலையை நன்குணர்ந்த சிலர் கூட்டுச்சேர்ந்து நல்லவர் போல் நடித்து இத்தகைய ஒவ்வொரு மனிதனையும் தீர ஏமாற்றுகிறார்கள், ஏமாற்றிக் கொண்டிருக்கின்றனர், இனியும் ஏமாற்றிக் கொண்டே 
இருப்பர். இத்தகைய மனிதனும் ஏமாந்து கொண்டேயிருப்பான் ஏனெனில் அவனுக்கு ஏமாறாமல் இருக்க என்றும் தெரியாது. தெரிந்து கொள்ளவும் அவன் முயற்சிக்க மாட்டான்.

ஒரு சினிமா தியேட்டரில் டிக்கெட் வாங்க க்யூ வரிசையில் பலர் நிற்கையில் அனைவரையும் முண்டியடித்துக் கொண்டு முன்னேறி முதல் டிக்கெட் வாங்குவதில் ஒவ்வொரு மனிதனுக்கும் ஏகப் பெருமை. அளவிலடங்காத மகிழ்ச்சி தான் க்யூ வரிசையில் நின்ற அனைவரையும் முந்தியதில். க்யூ வரிசையில் நிற்பவர் ஒவ்வொருவரும் இவ்வாறு முண்டியடித்து முன்னேறுவோரைக் கண்டு வெறுத்தாலும் அவர்களை எதிர்த்து ஒன்றும் செய்ய பயப் படுகின்றனர். பிறரை ஏமாற்றித் தான் மட்டும் நலமடையும் குறுகிய மனப்பான்மை கொண்ட மனிதர்களே இந்த உலகில் மெஜாரிட்டி என்பதில் எள்ளளவும் ஐயமில்லை. இடையில் எவனேனும் நல்ல குணமுள்ள ஒரு மனிதன் தென்படுவானேயாகில் அவன் மேல் என்ன பழி சுமத்தலாம், அதன் மூலம் தான் என்ன இலாபம் அடையலாம் என எப்பொழுதும் கணக்குப் போட்டு, பிறர் தலையிலே மிளகாய் அரைத்து வாழும் குள்ளநரிகள் மனிதர்களுள் ஏராளம், ஏராளம். அவர்களை எளிதில் அடையாளம் காண இயலாது. அதனால் சிற்றறிவு படைத்த மாந்தர்கள் என்றும் எவரையும் நம்பாமல் சந்தேகத்துடனேயே வாழ்க்கை நடத்துகின்றனர்.

தீமையே செய்து பழக்கப்பட்டோருக்கு நன்மை செய்வது இயலாது. இரண்டு நாட்கள் முன்னர் என் மகளுடன் என் வீட்டிலிருந்து சற்றுத் தொலைவில் இருக்கும் ஒரு பேக்கரிக்கு வழக்கம் போல் 'வாக்கிங்' போகையில் வழியிலே ஒரு சிறு பூனைக்குட்டி சாலையோரத்தில் ஒரு சிறு வீட்டின் அருகிலிருக்கும் சந்தில் நின்று "மியாவ்" என்று குரல் கொடுத்துக் கொண்டிருந்ததைக் கண்டேன். சில ஆண்டுகள் முன்னர் எனக்குப் பிள்ளைகள் பிறக்காதிருந்த காலத்தில் நான் பல பூனைக் குட்டிகளை வீட்டில் வளர்த்ததுண்டு. இந்தப் பூனைக்குட்டியைக் கண்டதும் அருகில் சென்று தடவிக் கொடுத்தேன். அதுவும் என் கையில் உரசிக் கொண்டே மியாவ், மியாவ் என்று குரல் எழுப்பியது. அது பசிக்குரல் என்பது எனக்குத் தெரிந்தது. எனவே அப்பூனைக் குட்டியை பேக்கரிக்குத் தூக்கிச் சென்று உண்ண ஏதேனும் வாங்கித் தரலாம் என எண்ணி அதைத் தூக்கியபடி நடக்கத் துவங்கினேன். ஆனால் அப்பூனைக் குட்டி என்னுடன் வர மறுத்து முரண்டு செய்யவே அதனைக் கிழே இறக்கி விட்டேன். அப்போது சற்று தூரத்தில் நின்று கொண்டிருந்த ஒரு பெரிய கருப்பு நாய் அப்பூனையைத் துரத்தியது. நல்ல வேளை! பூனை நாயிடம் அகப்படாமல் தப்பிப் பிழைத்து ஒளிந்து கொண்டது. 

பேக்கரிக்குச் சென்று திரும்புகையில் பூனைக்கு ஒரு பிஸ்கட் வாங்கி வந்து போட்டேன். அது பிஸ்கட்டை தின்ன மறுத்ததுடன் என் கால்களுக்கிடையே வந்து என் கால்களில் உரசிக் கொண்டு மீண்டும் பசிக்குரல் எழுப்பியது. திரும்பி வரும் வழியில் ஒரு சிறு ஹோட்டல் இருந்தது. அங்கே அதற்கு சிறிது பால் வாங்கித் தரலாம் என்று எண்ணி அதைத் தூக்கிக் கொண்டு நடக்க முற்பட்டேன். இரண்டடி எடுத்து வைப்பதற்குள் இறக்கி விடச்சொல்லி முரண்டு பிடித்தது. இருப்பினும் இறக்கி விட்டவுடன் மீண்டும் என் கால்களைச் சுற்றி உராய்ந்தது. இரண்டடி இரண்டடியாக அதனை அந்த ஹோட்டல் வரை இட்டுச் சென்றேன். ஹோட்டலில் பால் தீர்ந்து விட்டிருந்தது. 

ஏதேனும் இட்டிலித் துண்டுகள் இருந்தால் ஒரு சிறு இலையில் வைத்து பூனைக்குக் கொடுக்கும் படி அங்கிருந்த சிப்பந்தியிடம் வேண்ட அவரும் இட்டிலித்துண்டுகளை அதன் முன் வைக்க அது புசித்தது.

பூனையைக் காப்பாற்றிய மகிழ்வுடன் அன்றிரவு உறங்கி எழுந்து மறு நாள் காலை அது எப்படியிருக்கிறது எனப் பார்க்க அந்த ஹோட்டலுக்குப் பொடி நடையாக நடந்து சென்று விசாரிக்கையில் பூனை எங்கோ சென்று விட்டது எனக்கூறிய ஹோட்டல் முதலாளி (பெண்மணி) "இங்கே ஏன் பூனையைக் கொண்டுவந்து விட்டீர்கள்? இங்கு வருவோர் நாங்கள் பூனை வளர்ப்பதாக நினக்கின்றனர். வியாபாரம் கெடுகிறது." என்றாளே பார்ப்போம். அந்த ஹோட்டல் ஒரு அசைவ ஹோட்டல். மிருகங்களைக் கொன்று சமைத்து விற்றுப் பொருள் சேர்த்து சேர்த்து மனிதத் தன்மையே மறைந்து விட்டது கண்டு மிகவும் வருந்தினேன்.

இத்தகைய ஏமாற்றங்கள் காதலில் மிகவும் அதிகம். இக்காலத்தில் பெண்கள் ஏமாற்றுவதாக ஆண்கள் புலம்பித் தவிக்கின்றனர். முற்காலத்தில் (1955 - அப்போது எனக்கு 2 வயது) ஆண்கள் ஏமாற்றுவதாகப் பெண்கள் புலம்பித் தவித்தனர். தான் விரும்பிக் காதலித்த ஒருவன் திருடன் என எண்ணிய ஒரு பெண் தன் ஏமாற்றத்தை நினைத்து வருந்திப் பாடும் ஒரு பாடல் இன்றைய பாடலாக மலர்கிறது.



திரைப்படம்: கோமதியின் காதலன்
இயற்றியவர்: கே.டி. சந்தானம்
இசை: ஜி. ராமநாதன்
பாடியோர்: ஜிக்கி, சீர்காழி கோவிந்தராஜன்
ஆண்டு: 1955

மின்னுவதெல்லாம் பொன்னென்று எண்ணி
கண்ணிருந்தும் குருடானேன் - நான்
கண்ணிருந்தும் குருடானேன்

மின்னுவதெல்லாம் பொன்னென்று எண்ணி
கண்ணிருந்தும் குருடானேன் - நான்
கண்ணிருந்தும் குருடானேன்

செல்வம் இருந்தும் சீரோடு வாழ்ந்தும்
கள்வனெனும் பழி கொண்டேன் - என்
காதலிலும் தோல்வி கண்டேன்

செல்வம் இருந்தும் சீரோடு வாழ்ந்தும்
கள்வனெனும் பழி கொண்டேன் - என்
காதலிலும் தோல்வி கண்டேன்

எண்ணத்திலே இடி வீழ்ந்ததே
ஆஆஆஆஆ ஆ ஆஆஆஆஆ
எண்ணத்திலே இடி வீழ்ந்ததே
இதயத்திலே இருள் சூழ்ந்ததே
ஆஆஆ ஆஅஆஆஆ ஆஆஆ ஆ
கண்ணியமில்லாக் கள்வனின் நேசம்
பெண்மைக்கே இழிவானதே

மின்னுவதெல்லாம் பொன்னென்று எண்ணி
கண்ணிருந்தும் குருடானேன் - நான்
கண்ணிருந்தும் குருடானேன்

உண்மைக்கே திரை மூடினேன்
ஆஆஆஆ ஆ ஆஆஆஆஆ
உண்மைக்கே திரை மூடினேன்
உருமாறி உறவாடினேன்
ஆஆஆ ஆஆஆஆஆ ஆ ஆஆஆ
உண்மைக்கே திரை மூடினேன்
உருமாறி உறவாடினேன்
நம்பிக்கை கொண்ட நங்கையின் உள்ளம்
வெம்பவே வினை தேடினேன்

செல்வம் இருந்தும் சீரோடு வாழ்ந்தும்
கள்வனெனும் பழி கொண்டேன் - நான்
கள்வனெனும் பழி கொண்டேன்