திங்கள், 16 ஜனவரி, 2012

உலகம் சமநிலை பெற வேண்டும்

இறைவன் நாம் வாழ்வதற்கு எல்லா வளங்களையும் அளித்திருந்தும் தம்மிடையே அவற்றைப் பகிர்ந்து கொண்டு இன்பமாய் வாழ மனமின்றி சுயநலத்தால் மதிமயங்கிய மாந்தர்கள் சமுதாயத்தில் ஏற்றத் தாழ்வுகள் வளரக் காரணமாகின்றனர். இதனால் மனிதர்களுக்குள்ளே பல்வேறு வகைகளிலும் கருத்து வேறுபாடுகளும் சண்டை சச்சரவுகளும் பெருகி சமூக அமைதி குலைகிறது. மனிதர்களை மிருகங்களிடமிருந்து மேம்படுத்தி உயர்வைத் தரும் கட்டுக்கோப்பான சமுதாய அமைப்பின் சட்டதிட்டங்கள் யாவினையும் மீறி அநீதிப் பாதையில் செயல்படும் வலிமையுள்ளவர்கள் செல்வந்தர்களாக வாழ்கையில் வலிமையற்ற மனிதர்கள் குறைந்த வருவாயில் வாயைக்கட்டி வயிற்றைக் கட்டி வாழ வேண்டிய ஏழ்மையில் தள்ளப்படுகின்றனர்.

பல்வேறு காரணங்களால் சமூக நீதி நிலைபெறாமையால் ஏழைகள் மேலும் ஏழைகளாகையில் செல்வத்தர்கள் மேலும் செல்வந்தர்கலாகின்றனர். இந்நிலை தொடர்கையில் ஏழ்மையில் தள்ளப்பட்ட மனிதர்கள் மனம் நொந்து வாடும் நிலை தொடர்கிறது. இம்மன வாட்டம் நாளடைவில் பெரும் கோபமாக உருவெடுத்து அத்தகைய கோபம் முற்றுகையில் கலவரமாக வெடித்து பொது சொத்துகளுக்கு சேதாரம் ஏற்பட்டு மனிதர்கள் ஒருவரையொருவர் தாக்கிக்கொண்டு மடியக்கூடிய அளவுக்குப் பெரும் கேடாக முடிகிறது. இத்தகைய சமூக நிலை உருவாவது ஒரு நாட்டின் வளர்ச்சியைப் பாதித்துப் பெரும் வீழ்ச்சியை சந்திக்க நேரிடுகிறது. எகிப்து, லிபியா உட்பட உலக நாடுகள் பலவற்றிலும் சமீப காலத்தில் ஏற்பட்ட கலவரங்களும் உள்நாட்டுப் போரும் நம் நாட்டில் ஏற்படாமல் தடுப்பது இந்திய மக்கள் அனைவரின் தலையாய கடமையாகும். இதற்கு ஒரே வழி சமூக நீதி நிலைநாட்டப்பட்டு மக்களிடையே நிலவும் ஏற்றத் தாழ்வுகள் குறைந்து அனைவரும் சம அந்தஸ்தைப் பெற்று அமைதியாகவும் ஒற்றுமையாகவும் வாழ ஏற்ற சூழ்நிலை உருவாக்கப்படுவதேயாகும்.

அத்தகைய சம நிலை உலகில் ஏற்பட வேண்டுமெனில் மனிதர்கள் அறியாமை இருளிலிருந்து மீண்டு அறிவொளி பெற வேண்டும். அதற்கு ஒவ்வொரு நாட்டிலும் மக்கள் நலம் பேணும் நல்லாட்சி மலர வேண்டும். உலக நாடுகளிடையே ஒற்றுமை வளர வேண்டும். போர், பகை அச்சம் நீங்கி வளர்ச்சிப்பாதையில் உலகம் செல்ல வேண்டும். போதும் என்ற மனம் கொண்டு மனிதர் யாவரும் பேராசை நீக்கி இருப்பதைக் கொண்டு தானும் சிறப்புடன் வாழ்ந்து பிறருக்கும் அளித்து உலக மக்கள் யாவரும் ஒருவர் பெற்ற மக்களே எனும் ஒரு உன்னத நிலையில் ஒருங்கிணைந்து வாழ வேண்டும். அப்பொழுது உலகம் நிலைபெற்று இயற்கை வளங்கள் பெருகி அழிவுப்பாதையிலிருந்து மீண்டு செழிக்கும்.

உலகம் சமநிலை பெற வேண்டும்

திரைப்படம்: அகத்தியர்
பாடியவர்: சீர்காழி கோவிந்தராஜன்
இயற்றியவர்: உளுந்தூர்ப் பேட்டை சண்முகம்
இசை: குன்னக்குடி வைத்தியநாதன்
ஆண்டு: 1972
உலகம் சமநிலை பெற வேண்டும்
உயர்வு தாழ்வில்லா நிலை வேண்டும்
உலகம் சமநிலை பெற வேண்டும்
உயர்வு தாழ்வில்லா நிலை வேண்டும்
நிறைவே காணும் மனம் வேண்டும்
இறைவா அதை நீ தர வேண்டும்
நிறைவே காணும் மனம் வேண்டும்
இறைவா அதை நீ தர வேண்டும்
உலகம் சமநிலை பெற வேண்டும்
உயர்வு தாழ்வில்லா நிலை வேண்டும்

இமயமும் குமரியும் இணைந்திடவே
எங்கும் இன்பம் விளைந்திடவே
சமயம் யாவும் தழைத்திடவே
சத்தியம் என்றும் நிலைத்திடவே

உலகம் சமநிலை பெற வேண்டும்
உயர்வு தாழ்வில்லா நிலை வேண்டும்
நிறைவே காணும் மனம் வேண்டும்
இறைவா அதை நீ தர வேண்டும்
உலகம் சமநிலை பெற வேண்டும்
உயர்வு தாழ்வில்லா நிலை வேண்டும்

அறிவும் அன்பும் கலந்திடவே
அழவில் வையம் மலர்ந்திடவே

நெறியில் மனிதன் வளர்ந்திடவே
நேர்மை நெஞ்சில் நிறைந்திடவே

உலகம் சமநிலை பெற வேண்டும்
உயர்வு தாழ்வில்லா நிலை வேண்டும்
நிறைவே காணும் மனம் வேண்டும்
இறைவா அதை நீ தர வேண்டும்
உலகம் சமநிலை பெற வேண்டும்
உயர்வு தாழ்வில்லா நிலை வேண்டும்

அன்பு நடமாடும் கலைக்கூடமே

அன்பிலார் எல்லாம் தமக்குரியர் அன்புடையார்
என்பும் உரியர் பிறர்க்கு

எனும் குறள் வழி நின்று சுயநலம் நீக்கிப் பொதுநலம் பாராட்டும் உத்தமர்கள் பலரும் உலகில் இருப்பதாலேயே உலகில் உயிர் வாழ்க்கை நிலைபெற்று வருகிறது. சுயநலவாதிகளால் இயற்கை வளங்கள் அழிக்கப்பட்டு வரும் முறைகேடுகள் பல நிகழ்ந்த போதிலும் அவற்றை அனைவரும் அறியும் வண்ணம் எடுத்துரைத்துப் பாதுகாக்க உரிய நடவடிக்கை எடுக்கப்பட வேண்டியதன் அவசியத்தை இத்தகைய பொதுநலவாதிகள் தொடர்ந்து விளக்கி வருவதுடன் அதற்கான விழிப்புணர்வை ஏற்படுத்தி வருவதாலேயே சமுதாயம் பாதுகாக்கப் படுகிறது.

நெல்லுக்கிறைத்த நீர் வாய்க்கால் வழியோடிப்
புல்லுக்குமாங்கே பொசியுமாம் தொல்லுலகில்
நல்லார் ஒருவர் உளரேல் அவர் பொருட்டு
எல்லோர்க்கும் பெய்யும் மழை

எனும் ஔவை மூதாட்டியின் வாக்குக்கிணங்க சமுதாய சேவையே வாழ்க்கையாகக் கொண்டு திகழும் உன்னத மாந்தர் பலர் உள்ளதாலேயே அறியாமையால் தவறு செய்யப் புகும் பலரும் மனம் திருந்தி நல்வழி செல்லும் நிலை உருவாகியுள்ளது.

மக்களைக் காக்க வேண்டிய அரசுகள் கடந்த பல ஆண்டுகளாக அரசுத்துறையில் இயங்கி வந்த தொழில்கள் பலவற்றையும் தனியாருக்கு தாரைவார்த்ததனால் நாட்டின் வளங்கள் யாவும் சிறிது சிறிதாக சுரண்டப்படுவதுடன் வரி ஏய்ப்பு அதிகரித்து செல்வந்தர்கள் மேலும் அதிக செல்வந்தர்களாவதும் ஏழை மக்கள் மேலும் ஏழ்மைப்பட்டு அன்றாடம் உண்ண உணவுக்கு உடுக்கும் உடைக்கும், உறையும் இடத்துக்கும், குழந்தைகளின் கல்விக்கும், மருத்துவ வசதிகளுக்கும், போக்கு வரத்துக்கும் போதிய பணத்த ஈட்ட வழியின்றி விலைவாசி உயர்வினால் துன்புற்று வாடுகையில், துன்பப்படும் மக்களுக்கு தைரியமூட்டி, முறையாகத் தங்களுக்குக் கிடைக்க வேண்டிய அடிப்படைத் தேவைகளைப் பூர்த்தி செய்துகொள்ள உரிய வசதிகளைப் பெறும் மார்க்கத்தை இப்பொதுநல சேவகர்கள் காட்டி வருகின்றனர்.

இப்பொதுநல வாதிகள் பலரும் ஒன்று திரண்டு ஒரு பேரியக்கத்தை உருவாக்கி செயல்படும் நிலை தற்போது ஏற்பட்டுள்ளது மகிழ்ச்சிக்குரியதாகும். தவறு செய்யும் அரசியல்வாதிகளும் அதிகாரிகளும் தண்டனையிலிருந்து தப்பிக்க இயலாத சூழ்நிலை சிறிது சிறிதாக உருவாகி வருவது ஆறுதல் தருவதாக உள்ளது.

மனிதர்களாகப் பிறந்த நாம் ஏன் பிறந்தோம்? நமக்கு முற்பிறவியும் மறுபிறவியும் உண்டா இல்லையா? அவ்வாறு இருந்தால் முற்பிறவியில் நாம் யாராக இருந்தோம்? மறுபிறவியில் யாராக இருப்போம்? எனபன போன்ற பல கேள்விகளுக்கும் விடை தெரியாமல் மாயையில் சிக்குண்டு இவ்வுலகம் சாஸ்வதமென்று எண்ணி பொருள் தேடுவதிலும் சிற்றின்பங்களை அனுபவிப்பதிலுமே நேரத்தை செலவழித்து அர்த்தமற்ற வாழ்க்கையை வாழ்கிறோம். இவ்வாறான சுயநல வாழ்வை நாம் வாழ்வதால் நமக்கும் பயனில்லை பிறர்க்கும் பயனில்லை. நாம் இருக்கையில் நம்மைப் பலரும் போற்ற வேண்டும், இறந்த பின்னரும் நம்மை நினைத்து மகிழ வேண்டும். அப்பொழுது தான் நாம் வாழ்ந்த வாழ்க்கைக்கு ஒரு அர்த்தம் உண்டாகும்.

அதற்கு ஓரே வழி பொதுநலவாதிகள் உருவாக்கிய இயக்கத்தில் இணைந்து சேவை புரிவதேயாகும். அவ்வாறு நாம் பொதுநலத்தைப் பேணும் மார்க்கத்தில் செல்வோமெனில் நம்மை அனைவரும் போற்றி வணங்குவர் என்பதில் ஐயமில்லை. அனைவரிடமும் நாம் அன்பு செலுத்துகையில் அனைவரும் நம் மேல் பன்மடங்கு அன்பு செலுத்துவர்.

அன்பு தான் இன்ப ஊற்று
அன்பு தான் உலக ஜோதி
அன்பு தான் உலக மகா சக்தி!

அன்பு நடமாடும் கலைக்கூடமே

திரைப்படம்: அவன் தான் மனிதன்
இயற்றியவர்: கவிஞர் கண்ணதாசன்
இசை: எம்.எஸ். விஸ்வநாதன்
பாடியவர்: பி. சுசீலா, டி.எம். சௌந்தரராஜன்

அன்பு நடமாடும் கலைக்கூடமே ஆசை மழைமேகமே
கண்ணில் விளையாடும் எழில் வண்ணமே கன்னித் தமிழ் மன்றமே
அன்பு நடமாடும் கலைக்கூடமே ஆசை மழைமேகமே
கண்ணில் விளையாடும் எழில் வண்ணமே கன்னித் தமிழ் மன்றமே

மாதவிக் கொடிப்பூவின் இதழோரமே மயக்கும் மதுச்சாரமே
மாதவிக் கொடிப்பூவின் இதழோரமே மயக்கும் மதுச்சாரமே
மஞ்சள் வெயில் போலும் மலர் வண்ண முகமே மன்னர் குலத் தங்கமே
பச்சை மலைத்தோட்ட மணியாரமே பாடும் புது ராகமே

அன்பு நடமாடும் கலைக்கூடமே ஆசை மழைமேகமே
கண்ணில் விளையாடும் எழில் வண்ணமே கன்னித் தமிழ் மன்றமே

வெள்ளலை கடலாடும் பொன்னாடமே விளக்கின் ஒளிவெள்ளமே
வெள்ளலை கடலாடும் பொன்னாடமே விளக்கின் ஒளிவெள்ளமே
செல்லும் இடந்தோறும் புகழ் சேர்க்கும் தவமே சென்னல் குலமன்னனே
இன்று கவிபாடும் என் செல்வமே என்றும் என் தெய்வமே

மாநிலம் எல்லாமும் நம் இல்லமே மக்கள் நம் சொந்தமே
காணும் நிலமெங்கும் தமிழ் பாடும் மனமே உலகம் நமதாகுமே
அன்று கவிவேந்தன் சொல் வண்ணமே யாவும் உறவாகுமே

அன்பு நடமாடும் கலைக்கூடமே ஆசை மழைமேகமே
கண்ணில் விளையாடும் எழில் வண்ணமே கன்னித் தமிழ் மன்றமே

நமது வெற்றியை நாளை சரித்திரம் சொல்லலும்

ஒரு நாடு முழுவதும் நலமாக இருந்தால் மட்டுமே அதன் குடிமக்கள் ஒவ்வொருவரும் நலமாக வாழ முடியும். நாட்டில் பஞ்சம் தலைவிரித்தாடினால் மக்கள் அனைவரும் அவதிக்குள்ளாவர். ஒரு நாட்டில் செல்வம் பெருகி மக்கள் நலமாய் வாழ வழிவகுக்க வேண்டியது அரசாங்கத்தின் இன்றியமையாத கடமை. ஜனநாயக நாடான நமது இந்தியாவில் அரசாங்கத்தின் ஒவ்வொரு அமைச்சரையும் தேர்ந்தெடுப்பது நாட்டு மக்களே என்பதால் அவர்கள் தகுதியுள்ளவர்களை மட்டுமே தேர்ந்தெடுப்பது அவசியம். அத்துடன் அவ்வாறு தம்மால் தேர்ந்தெடுக்கப் படக் கோரி வாக்குக் கேட்டு ஒவ்வொரு வேட்பாளரும் மக்களை அணுகுகையில் மக்கள் தம் தொகுதிகளில் நிலவும் பிரச்சினைகளை அவ்வேட்பாளர் தீர்க்கப் பாடுபடுவார் எனும் உத்தரவாதத்தை அவரிடமிருந்து பெற வேண்டும்.

இதற்கு முதலில் ஒவ்வொரு தொகுதி மக்களும் தம் தொகுதியில் நிலவும் பிரச்சினைகள் அனைத்தையும் மிகத் தெளிவாக அறிந்திருத்தல் அவசியமாகிறது. அப்பிரச்சினைகள் குறித்த விவரங்களை வேட்பாளரும் தெளிவாக அறிந்திருத்தல் அவசியமே. இதுகாலம் வரை இத்தகைய தெளிவு இரு தரப்பிலும் இருந்ததில்லை என்பதால் தேர்தல் முடிந்த பின்னர் பதவிக்கு வரும் வேட்பாளர்கள் முறையாக சேவை செய்யாமல் மக்களை ஏமாற்றித் தம் சுயநலம் பேணுவதே நடைமுறையாக இருந்து வந்துள்ளது. கடந்த ஐந்து ஆண்டுகளில் நமது நாட்டின் பல்வேறு துறைகளிலும் பெரும்பாலும் ஊழலே மலிந்து மக்கள் அரசாங்கத்தாலேயே கொள்ளையடிக்கப்பட்டு வந்துள்ளனர் எனும் கசப்பான உண்மை இந்திய தணிக்கைத் துறையின் அறிக்கைகள் வாயிலாக வெட்ட வெளிச்சமானதாலும் தகவல் பெரும் உரிமைச் சட்டத்தின் மூலமும் ஊடகங்களின் ஊக்கமிக்க செயல்பாட்டினாலும் ஊழல் செய்தவர் யார் யார் என்பதை மக்கள் தெள்ளத் தெளிவாக அறிந்து கொள்ளும் வாய்ப்புக் கிடைத்தது.

அரசாங்கத்தில் முக்கியப் பதவிகள் வகிப்பவர்களின் ஊழலினால் பெரிதும் பாதிக்கப்பட்டு மக்கள் வறுமையில் வாடி உள்ளம் குமுறும் நிலை சற்றும் மாறாமல் நீடித்திருக்க, குற்றம் புரிந்த பலரும் குற்றம் வெளிவந்த பின்னர் வெகு காலமாகிய பின்னரும் அதற்குரிய தண்டனை பெறுவதோ மக்களிடமிருந்து களவாடப் பட்ட பெரும் தொகை திரும்பவும் மக்கள் நலனுக்காக செலவிடப் படுவதோ இவற்றுள் எதுவும் நிறைவேறாமல் குற்றவாளிகள் தொடர்ந்து பதவிகளில் ஒட்டிக்கொண்டிருப்பதும், குற்றவாளிகளுள் சிறையில் அடைக்கப்பட்ட ஒரு சிலர் மீது நடைபெறும் வழக்குகள் ஆமை வேகத்தில் நகர்ந்து கொண்டிருப்பதும் மக்களின் பொறுமையைப் பெரிதும் சோதிப்பதாக உள்ளது.

இந்த நிலையில் தமிழ்நாட்டில் மாநகராட்சிகளுக்கும், நகராட்சிகள் மற்றும் ஊராட்சிகளுக்கும் தேர்தல் விரைவில் அறிவிக்கப்பட உள்ளது. இதுகாலம் வரை இல்லாதிருந்த ஒரு விழிப்புணர்வை மக்களுக்கு ஏற்படுத்த வேண்டும் எனும் உன்னத நோக்குடன் சென்னையைச் சேர்ந்த மாணவர்கள் பலர் ஒன்று கூடி சென்னையில் மக்களை தினம் பாதிக்கும் பல்வேறு குறைபாடுகளை முறையாகக் கணக்கிட்டு மக்கள் யாவரும் அறியும் வண்ணம் வெளியிடும் முயற்சியில் இறங்கியுள்ளனர். சாலைகளின் தரம் மற்றும் குறைபாடுகள், பொதுக்கழிப்பிடங்களின் நிலை, ஏழை மக்களின் வாழ்க்கை நிலவரம் உள்ளிட்ட அனைத்து விவரங்களையும் தேவையான இடங்களில் வீடியோ பதிவு செய்தும், தேவையான விவரங்களைத் திரட்டியும் http://www.transparentchennai.com/ எனும் இணையதளத்தை அமைத்து அதில் பதிவு செய்து அதன் மூலம் அரசின் செயல்பாட்டை மதிப்பீடு செய்யவும் தேர்தலில் நிற்கும் வேட்பாளர்களைக் கட்டுப்படுத்தவும், அவர்களது செயல்பாட்டை மதிப்பிடவும் என மக்களுக்கு உதவும் மாபெரும் தொண்டில் இறங்கியுள்ளனர்.

நாட்டிலுள்ள அனைவருக்கும் முன்னோடிகளாக உருவெடுத்துள்ள இவ்விளைஞர்களின் பணி பாராட்டத்தக்கது மட்டுமின்றி நாட்டின் அனைத்து மாவட்டங்களிலும் ஊர்களிலும் உள்ள யாவரும் பின்பற்ற வேண்டிய ஒன்றாகும். காந்தியவாதி அன்னா தலைமையில் மக்கள் பெருந்திரளாக ஊழலுக்கு எதிரே போராடும் சூழலுடன் இத்தகைய குறைகள் கண்டறியப்பட்டு நிவர்த்தி பெற எடுக்கப்படும் இயக்கங்களும் நாடெங்கிலும் பல்கிப் பெருகி ஊழல் புரிய எண்ணுவோர் அஞ்சி நடுங்கித் திருந்தும் கட்டாய நிலை விரைவில் ஏற்பட வழி கிடைத்துள்ளது.

"காற்றுள்ள போதே தூற்றிக்கொள்" எனும் பொன்மொழிக்கிணங்க இந்த ஆரோக்யமான சூழலைப் பயன்படுத்தி மக்கள் யாவரும் ஒன்று கூடிப் போராடினால் நாட்டில் அநீதிகள் குறைந்து நீதி நிலைபெற வழி பிறக்கும் என்பதில் எள்ளளவும் ஐயமில்லை. மக்கள் நலனைக் கருத்தில் கொண்டு அமைந்த இப்படை வெல்வதுறுதி.

நமது வெற்றியை நாளை சரித்திரம் சொல்லலும்

திரைப்படம்: உலகம் சுற்றும் வாலிபன்
இயற்றியவர்: புலவர் வேதா
இசை: எம்.எஸ். விஸ்வநாதன்
பாடியவர்: சீர்காழி கோவிந்தராஜன்
ஆண்டு: 1973

நமது வெற்றியை நாளை சரித்திரம் சொல்லலும்
இப்படை தோற்கின் எப்படை வெல்லும்?

நீதிக்கு இது ஒரு போராட்டம் - இதை
நிச்சயம் உலகம் பாராட்டும்

ஆஆ ஆஆ ஆஆ ஆஆ ஆஆஆஆஆஆஆஆஆ

வல்லோர்கள் சுரண்டும் பொல்லாத கொடுமை
இல்லாமல் மாறும் ஒரு தேதி

ஆஆஆஆஆஆஆஆஆ ஆஆஆஆஆஆஆஆஆ

வல்லோர்கள் சுரண்டும் பொல்லாத கொடுமை
இல்லாமல் மாறும் ஒரு தேதி - அன்று
இல்லாமை நீங்கி எல்லோரும் வாழ
இந்நாட்டில் மலரும் சமநீதி

நம்மை ஏய்ப்பவர் கையில் அதிகாரம்
இருந்திடும் என்னும் கதை மாறும்
நம்மை ஏய்ப்பவர் கையில் அதிகாரம்
இருந்திடும் என்னும் கதை மாறும்

ஆற்றலும் அறிவும் நன்மைகள் ஓங்க
இயற்கை தந்த பரிசாகும் - இதில்
நாட்டினைக் கெடுத்து நன்மையை அழிக்க
நினைத்தால் எவர்க்கும் அழிவாகும்

நல்லதை வளர்ப்பது அறிவாற்றல்
அல்லதை நினைப்பது அழிவாற்றல்

நமது வெற்றியை நாளை சரித்திரம் சொல்லலும்
இப்படை தோற்கின் எப்படை வெல்லும்?
நமது வெற்றியை நாளை சரித்திரம் சொல்லலும்
இப்படை தோற்கின் எப்படை வெல்லும்?