வெள்ளி, 26 பிப்ரவரி, 2016

கண்ணுக்கு குலமேது?

தினம் ஒரு பாடல் - 18 பிப்பிரவரி 2016

அரசியல் என்பது ஒரு சாக்கடை என்பது இந்தியாவில் மட்டுமல்ல, உலகெங்கிலும் அவ்வாறே நடைமுறையில் உள்ளது என்பதை அறிந்தால் நாம் எளிதில் நம்ப மாட்டோம் ஆனால் உண்மை அதுவேயாகும். உலக அரசியல் இந்திய அரசியலை விடவும் மிகவும் மோசமான பாதையில் செல்கிறது. மனித உயிர்களை வைத்து விளையாடுகின்றனர் அரசியல்வாதிகளும் அவர்களது ஊழல்களுக்கு உறுதுணையாய் நின்று உலக மக்கள் கடுமையாய் உழைத்து ஈட்டிய பொன் பொருளைக் கொள்ளையடிக்கும் வர்த்தக நிறுவனங்களும். மருந்துகள் எனும் பெயரில் விஷத்தை மனிதர்களின் உடலுக்குள் செலுத்தி வியாதிகள் வரச் செய்து பல தனியார் மருத்துவமனைகளில் சென்று சிகிச்சை பெறும் நிலைக்குத் தள்ளுகின்றனர். இதற்கு வசதியாகவே அரசு மருத்துவ மனைகள் போதிய மருத்துவ வசதியோ, மருத்துவர்களோ, உரிய மருந்துகளோ, முறையான நடைமுறையோ இல்லாது செயல்படும் நிலையை உருவாக்குகின்றனர் அரசியல்வாதிகள். அரசு மருத்துவ மனையில் சேர்ந்தால் உயிர் பிழைப்பது நிச்சயமல்ல எனத் தெரிகின்ற நிலையில் மக்கள் வேறு வழியின்றி உயிரைக் காப்பாற்றிக் கொள்ளத் தனியார் மருத்துவ மனைகளை நாடுகின்றனர். முக்காலே மூணு வீசம் தனியார் மருத்துவ மனைகளில் வசூலிக்கும் கட்டணம் சாமான்ய மக்களால் செலுத்த இயலாத அளவுக்கு அநியாயமாக உயர்த்தப்பட்டுள்ள நிலையில் பலர் போதிய மருத்துவ உதவி பெற இயலாத நிலையில் உயிர் விடும் கொடுமைகள் தினந்தோறும் நடந்து கொண்டிருந்த போதிலும் அதைப் பற்றி எந்த செய்தி நிறுவனங்களும் போதிய அக்கரை செலுத்தாமையால் மருத்துவத் துறையில் நிகழும் அநீதிகள் மக்களுக்குத் தெரியாமலே போய் விடுகின்றன.

சுற்றுப்புறச் சூழலைத் தூய்மையாக வைத்திருக்க வேண்டி மக்களிடம் வீட்டு வரி, சாலை வரி, குடிநீர் வரி, சுகாதார வரி எனப் பலவித வரிகளைத் தொடர்ந்து வசூல் செய்து சேர்த்த நிதியை அதற்குரிய பணியில் செலவிடாமல் குப்பை கூளங்கள் தெருக்களெங்கும் கொட்டிக் கிடக்க, சாக்கடைகள் அடைபட்டிருக்க, குடிநீருடன் சாக்கடை கலக்க, ஆற்று மணல் கொள்ளை போகவும் ஆற்று நீர் வற்றவும், ஆற்று நீரில் ஆலைக் கழிவு நீர் தடையின்றிக் கழிக்கவும் வகை செய்து மக்களின் வரிப்பணத்தையும் விழுங்கி ஏப்பம் விட்டு மேலும் நோய் நொடிகள் பரவ வகை செய்து அவ்வழியிலும் தனியார் மருத்துவ மனைகளையே மக்கள் மீண்டும் மீண்டும் நாடிச் செல்லும் நிலையை உருவாக்கும் விதத்திலேயே மாநில மத்திய அரசுகள் செயல்படுகின்றன. பலவிதமான கவர்ச்சிகரமான திட்டங்கள் அறிவிக்கப் பட்டாலும் அவற்றில் எவையும் நிறைவேற்றப் படுவதில்லை. மாறாகத் தேர்தல் வருகின்ற சமயத்தில் இலவசத் தொலைக்காட்சி, இலவச மிக்சி, இலவச மடிக்கணிணி, இலவசக் குடிநீர், இலவச மருந்துகள் எனப் பலவிதமாக மக்கள் உயிர்வாழ இலவசங்களை நம்பும் நிலைக்கு அனைவரையும் பிச்சைக் காரர்களை விடவும் கேவலமான நிலையில் வைத்து அவர்களது பொன்னான வாக்குகளை விலைக்கு வாங்கி மீண்டும் மீண்டும் ஆட்சிப் பொறுப்பில் எவ்வாறாயினும் அமர்ந்து விடுகின்றனர் ஊழல் அரசியல்வாதிகள். மக்களும் வேறு மாற்றில்லாமையால் மாறி மாறி ஊழல் அரசியல்வாதிகளையே தேர்ந்தெடுக்கும் கட்டாயத்தில் வைக்கப்பட்டு வாழ வழி தெரியாமல் உழல்கின்றனர். ஏதோ தங்கள் அப்பன் பாட்டன் சேர்த்து வைத்த பரம்பரைச் சொத்துக்களிலிருந்து தானதருமம் வாரி வழங்குகிற பாவனையில் மக்களிடமிருந்து வசூலிக்கும் வரிப் பணத்தின் ஒரு பகுதியை இலவசங்களுக்குச் செலவழித்து வள்ளல்கள் போன்றதொரு பிரமையை ஏற்படுத்திக்கொண்டு காசுக்கு ஜே போடும் கூட்டமொன்றின் துணையுடன் பவனி வருகின்றனர் ஊழல் அரசியல்வாதிகள். 

மக்கள் ஒற்றுமையாக இருக்க இயலாத நிலையையும் சாதி மத பேதங்களைத் தூண்டிவிட்டு உருவாக்கி விடுகின்றனர் நம் அரசியல்வாதிகள். அதனால் மக்கள் சிதறுண்டு கிடக்கையில் காசுக்கு ஓட்டுக்கள் வாங்குவது அரசியல்வாதிகளுக்கு எளிதாய் விடுகிறது. இதனுடன் சாராயமும் தண்ணீர் போலத் தாராளமாக அரசாங்கத்தாலேயே விற்கப்படுகிறது நம் தமிழ்த் திரு நாட்டில். பொழுது விடிந்தவுடன் கால்கள் தாமாகவே நம் குடிமக்களை சாராயக் கடைகளுக்கு இட்டுச் செல்கின்றன. தாம் உழைத்து சம்பாத்தித்த பணத்துடன் வீட்டில் மனைவியும் குழந்தைகளும் வேலை செய்து சம்பாதிக்கும் தொகையையுமே இவர்கள் சாராயம் வாங்கச் செலவழிக்கின்றனர். இந்த அரசியல்வாதிகள் எத்தனை கோடிகள் பணம் சேர்த்தாலும் சேர்த்த பணத்தை அனுபவிக்க அவர்கள் நீண்ட காலம் வாழ்வதில்லை. நோய் நொடிகள் அவர்களையும் விட்டு வைப்பதில்லை. இவ்வாறு தானும் வாழாமல் பிறரையும் வாழவிடாமல் மிருகங்களினும் கேவலமாக உயிர்வாழ்வோர் இழிவானவர்களே.

ஔவையார் சொல்கிறார்

சாதி இரண்டொழிய வேறில்லை சாற்றுங்கால்
நீதிவழுவா நெறிமறையின் மேதினியில்
இட்டார் பெரியார் இடாதார் இழிகுலத்தோர்
பட்டாங்கில் உள்ள படி.

என்று.

அதாவது தான் நேர்மையாக உழைத்து ஈட்டிய பொருளைக் கஷ்டப்படும் பிறருக்குக் கொடுத்து உதவுவோர் பெரியார். கொடுக்காமல் எல்லாம் தனக்கென வாழ்வோர் இழிகுலத்தோர் என்கிறார். 

நம் பாரத நாட்டின் பழம் பெரும் காவியங்களில் ஒன்று மஹாபாரதம். அதில் கூறப்படும் நிகழ்ச்சிகள் அனைத்தையும் அனைவரும் ஏற்றுக்கொள்ளாவிடினும் அக்காவியம் வாழ்க்கையின் பரிமாணங்களை விளக்கி நமக்குப் பல் நீதி நெறிகளை எடுத்துரைக்கிறது என்பது யாரும் மறுக்க முடியாத உண்மையாகும். அக்கதையில் குந்திதேவி எனும்ஒரு இளம் பருவப்பெண் துருவாச மகரிஷி தங்கள் அரண்மனைக்கு வரும் போது அவருக்கு மிகுந்த பக்தியுடன் விருந்தோம்பலைச் செய்யவே மனம் மகிழ்ந்த மகரிஷி அவளுக்கு ஒரு மந்திரத்தை உபதேசிக்கிறார். அம்மந்திரத்தைக் கூறி அவள் எந்த தெய்வத்தை அழைத்தாலும் அத்தெய்வம் பிரத்தியக்ஷமாகித் தன் அம்சமுள்ள புத்திர்ப்பேற்றை அவளுக்குக் கொடுக்கும் என ஆசீர்வதிக்கிறார். அவள் அம்மந்திரத்தை சோதித்துப் பார்க்கும் ஆவலில் வானத்தில் பிரகாசிக்கும் சூரிய பகவானை நோக்கி அம்மந்திரத்தை உச்சரிக்கவே சூரியன் வந்து அவளுக்குஒரு ஆண் பிள்ளையைக் கொடுக்கிறான். பிள்ளையைப் பெற்றெடுத்த குந்திதேவி பழிக்கஞ்சி அக்குழந்தையை அழகிய ஒரு பேழையில் வைத்து மூடி நதியில் விட்டு விடுகிறாள். குழந்தையை திருதராஷ்டிர மன்னனின் தேரோட்டி எடுத்து கர்ணன் எனப் பெயர் சூட்டி வளர்க்கிறான். கர்ணன் பெரிய வீரனாக வளர்ந்த போதிலும் அவன் ஒருதேரோட்டி மகன் ஆனதால் அருஜ்ஜுனனுடன் சமமாக யுத்தம் செய்ய யோக்கியதையற்றவன் என பீஷ்மரும், துரோணரும், பாண்டவர்களும் அவனை அவமதிக்கையில் திருதராஷ்டிர மன்னனின் மகன் துரியோதனன் கர்ணனைத் தான் அங்கேயே அங்க தேசத்து அரசனாக முடி சூட்டி வைக்கிறான். அவையினரின் மத்தியில் தான் பட்ட அவமானத்தைத் துடைத்து கௌரவம் கொடுத்த துரியோதனனிடம் கர்ணன் நட்புக் கொள்கிறான். இடையில் கர்ணன் வேறொரு சிற்றரசனின் மகளை சந்தித்துக் காதல் கொள்ளவே துரியோதனனும் அவன் மனைவியும் அச்சிற்றரசனைக் கண்டு அவன் பெண்ணைக் கர்ணனுக்கு மண முடிக்கின்றனர். கர்ணன் ஒரு தேரோட்டி மகன் எனத் தெரிய வரவும் பெண்ணைக் கொடுத்த சிற்றரசன் தன் பெண்ணைக் கணவன் வீட்டுக்கு அனுப்பாமல் கர்ணனை அவன் குலத்தைச் சொல்லி அவமானப் படுத்துகிறான். மனம் புண்ணாகித் தன் அரண்மனைக்குத் திரும்பும் கர்ணனுக்கு ஒரு இன்ப அதிர்ச்சி, அங்கே அவன் மனைவி வந்திருக்கிறாள். அவள் அவன் மனதைத் தேற்றி அவன்ஒரு கொடையாளி, எனவே பிறரை விட மேலானவன், வீரமானவன் என அவனது மனதில் இருக்கும் சோகத்தை மாற்றுகிற வகையில் அமைந்த பாடல் இன்றைய பாடலாக அமைகிறது.

சாதிகள் இல்லையடி பாப்பா குலத்
தாழ்ச்சி உயர்ச்சி சொல்லல் பாவம்
நீதி உயர்ந்த மதி கல்வி அன்பு
நிறைய உடையவர்கள் மேலோர்

எனும் மஹாகவி பாரதியாரின் உணர்ச்சி மிகும் அறிவுரைகளை செவி மடுப்போம். சாதிச் சண்டையை ஒழிப்போம். சாதி மதச் சண்டையை வளர்த்து அரசியல் ஆதாயம் தேடும் தருக்கர் கூட்ட்டத்தைத் தமிழகத்தில் கால் பதிய வைக்க மாட்டோம் எனும் உறுதியுடன் தமிழ் மக்கள் யாவரும் ஒன்று பட்டு வாழ்வோம், உயர்வோம், நாட்டை உயர்த்துவோம். தமிழனென்று சொல்லித் தலை நிமிர்ந்து நிற்போம்.


திரைப்படம்: கர்ணன்
இயற்றியவர்: கவிஞர் கண்ணதாசன்
இசை: மெல்லிசை மன்னர்கள் எம்.எஸ். விஸ்வநாதன், டி.கே. ராமமூர்த்தி
பாடியவர்: P. சுசீலா

கண்ணுக்கு குலமேது?
கண்ணுக்கு குலமேது கண்ணா கருணைக்கு இனமேது?
கண்ணுக்கு குலமேது கண்ணா கருணைக்கு இனமேது?
கண்ணுக்கு குலமேது? 
விண்ணுக்குள் பிரிவேது கண்ணா?
விண்ணுக்குள் பிரிவேது கண்ணா? விளக்குக்கு இருளேது?

கண்ணுக்கு குலமேது கண்ணா கருணைக்கு இனமேது?
கண்ணுக்கு குலமேது?

பாலினில் இருந்தே ஆ..ஆ..ஆ..ஆ..
பாலினில் இருந்தே நெய் பிறக்கும் கண்ணா
பரம்பொருள் கண்டே உயிர் பிறக்கும்
வீரத்தில் இருந்தே குலம் பிறக்கும் அதில்
மேலென்றும் கீழென்றும் எங்கிருக்கும்?

கண்ணுக்கு குலமேது கண்ணா கருணைக்கு இனமேது?
கண்ணுக்கு குலமேது?

கொடுப்பவர் எல்லாம் ஆ..ஆ..ஆ..ஆ..
கொடுப்பவர் எல்லாம் மேலாவர் கையில்
கொள்பவர் எல்லாம் கீழாவார்
தருபவன் இல்லையோ கண்ணா நீ
தருமத்தின் தாயே கலங்காதே
தருமத்தின் தாயே கலங்காதே

கண்ணுக்கு குலமேது கண்ணா கருணைக்கு இனமேது?
கண்ணுக்கு குலமேது?

வியாழன், 25 பிப்ரவரி, 2016

அன்னையின் அருளே வா வா வா

தினம் ஒரு பாடல் - டிசம்பர் 14, 2015

சோழ வள நாடு சோறுடைத்து எனும் பெருமை கொண்ட சோழநாட்டைக் குலோத்துங்க மன்னன் ஆண்ட காலத்தில் அந்நாட்டின் அம்பர் எனும் ஊரிலே சிலம்பி எனும் பெயர் கொண்ட தாசி ஒருத்தி வசித்து வந்தாள். விதிவ்சத்தால் அவள் மிகவும் ஏழ்மை நிலையில் வாழ நேரிட்டது. அச்சமயம் குலோத்துங்க சோழ மகாராஜாவின் அவைக்களப் புலவராகக் கவிச்சக்கரவர்த்தி கம்பர் இருந்தார். கம்பர் தனக்கு ஆயிரம் பொன் கொடுப்போர் யாராயினும் அவர் மேல்ஒரு பாடல் இயற்றிப் பாடுவது வழக்கமாயிருந்தது. அவ்வாறு அவர் வாயால் பாடல் பெற்றவர்கள் பெரும் செல்வந்தர்களாகிச் சிறப்பாக வாழ்ந்தனர் என்பதும் அக்காலத்தில் பிரசித்தம். 

இதனைக் கேள்விப்பட்ட சிலம்பி அரும்பாடு பட்டுச் சிறுகச் சிறுக ஐந்நூறு பொற்காசுகளைச் சேர்த்த நிலையில் ஒருநாள் கம்பர் அவள் வீடிருக்கும் வழியே வந்து கொண்டிருந்ததைக் கேள்விப்பட்டுத் தான் சேர்த்து வைத்திருந்த ஐந்நூறு பொற்காசுகளைக் கம்பரிடம் தந்து தன் ஏழ்மை நிலையைக் கூறித் தான் ஆயிரம் பொன் கொடுக்க இயலாது எனவும் தயை கூர்ந்து தன் ஏழ்மை நீங்கப் பாட வேண்டும் எனவும் வேண்டிக் கொண்டாள். ஐந்நூறு பொற்காசுகளைப் பெற்றுக்கொண்ட கம்பர் ஆயிரம் பொன்னுக்குத் தான் முழுப்பாட்டு, ஐந்நூறு பொன்னுக்கு அரைப்பாட்டே இயற்ற முடியும் என்று கூறி சிலம்பி வீட்டுச் சுவற்றில் ஒரு கரித்துண்டால் கீழ்க்கண்டவாறு எழுதிவிட்டுச் சென்றுவிட்டார்.

"தண்ணீருங் காவிரியே தார்வேந்தன் சோழனே
மண்ணாவ துஞ்சோழ மண்டலமே"

கையிலிருந்த ஐந்நூறு பொன்னும் போய்ப் பாடலும் பூர்த்தியாகாத நிலையில் சிலம்பி மேலும் ஏழ்மையுற்றுப் பெரிதும் வாடினாள். இந்நிலையில் ஒரு நாள் அவள் வீட்டு வழியே கால்நடையாய் வந்த ஔவை மூதாட்டி சிலம்பியின் வீட்டுத் திண்ணையில் சற்றே இளைப்பார வேண்டி அமர்ந்தார். அக்காலத்தில் தொடங்கி சமீப காலம் வரையிலும் அனேகமாக எல்லா ஊர்களிலும் வீடுகளின் முன்னர் திண்ணை ஒன்றைக் கட்டி வைப்பது வழக்கம். வழிப்போக்கர்கள் இளைப்பாறிவிட்டுச் செல்லட்டும் எனும் நல்ல நோக்கில் அவ்வாறு அமைத்தார்கள் மக்கள். அது மட்டுமின்றி எவரேனும் வழிப்போக்கர்கள் தம் வீட்டுத் திண்ணையில் அமர நேர்ந்தால் அவர்களுக்கு தாகம் தீரவும் பசியாறவும், நீராகாரமும் அன்னமும் இட்டு உபசரிப்பதைத் தமிழர்கள் தம் முதற் கடமையாகக் கொண்டு வாழ்ந்தார்கள். அதன் பொருட்டே திருவள்ளுவர்

விருந்து புறத்ததாற் தானுண்டாற் சாவா
மருந்தெனினும் வேண்டற்பாற் றன்று.

என்று விருந்தோம்பலின் மகிமையை உலகுக்குணர்த்தும் வண்ணம் எழுதிவைத்தார். அவரது அறிவுரையை அனைவரும் தவறாது கடைபிடித்து நேர்மையாய் பரோபகார சிந்தையுடன் வாழ்ந்தனர்.

தன் வீட்டுத் திண்ணையில் வந்தமர்ந்த ஔவை மூதாட்டி பசிதீர வேண்டுமெனும் எண்ணம் கொண்ட சிலம்பி தான் அருந்துவதற்காக வைத்திருந்த கூழை ஔவையாருக்கு அளித்துப் பருக வேண்டினள். அவளது தயையைக் கண்டு மகிழ்ந்து அவள் கொடுத்த குழை அருந்திய ஔவை எதேச்சையாக அங்கே சுவற்றில் எழுதியிருந்த இரு வரிகளைக் கண்டு அது என்னவென்று சிலம்பியைக் கேட்க சிலம்பியும் நடந்ததை விளக்கிக் கூறினாள். சிலம்பி மேல் கருணை கொண்ட ஔவைப் பிராட்டி ஒரு கரித்துண்டைக் கையில் எடுத்துக் கடைசி இரண்டு வரிகளை எழுதி அப்பாடலைப் பூர்த்தி செய்தார்.

தண்ணீருங் காவிரியே தார்வேந்தன் சோழனே
மண்ணாவ துஞ்சோழ மண்டலமே - பெண்ணாவாள்
அம்பர்ச் சிலம்பி அரவிந்தத் தாளணியும் 
செம்பொற் சிலம்பே சிலம்பு.

எனப் பாடல் முற்றுப் பெற்றதனால் சிலம்பி பெரும் புகழ் பெற்றுச் செல்வச் சீமாட்டியானாள் என்பது கதை.

சோழ நாட்டை ஆண்ட மன்னனின் கருணைக்குக் காவேரி நதியை இணையாகக் கூறினார் கம்பர். அத்தகைய காவேரி நதி தற்போது அரசியல் சாக்க்டைச் சண்டையில் மாட்டிக்கொண்டு அல்லல் படும் கோலத்தை எண்ணி எண்ணி இதயம் நோகிறது. ஒவ்வொரு ஆண்டும் தஞ்சை மாவட்ட விவசாயிகள் காவேரி நீருக்காக ஏங்குவதும். கர்நாடக அரசு தண்ணீர் தர மறுப்பதும், தமிழக அரசு உச்ச நீதி மன்றம் சென்று வழக்குத் தொடர்ந்தும் உண்ணாவிரதங்கள் இருந்தும் போராடுவதும் என நடக்கும் நாடகத்தால் பாசனத்துக்கு நீரின்றித் தவிக்கும் விவசாயிகள் மனம் நொந்து பேதலிக்கும் நிலைமையே நிலவி வருகிறது. தமிழ்நாட்டை ஆண்டுவந்த இரு கட்சியினரும் தாம் மட்டுமே காவேரி நதி நீர் பெற்றுத் தரப் பாடு பட்டதாகவும் எதிர்க் கட்சியினர் வேஷம் போடுவதாகவும் ஆண்டாண்டு தோரும் நடைபெறும் ஒரு கூத்தும் சலித்து விட்டது.

காவேரி நதியில் ஆண்டு தோறும் ஆடி மாதம் அடை மழையுடன் கூடி வெள்ளம் பெருகி ஓடுவது வழக்கம். அதனால் ஆடி 18ஆம் நாள் ஆண்டுதோறும் ஆடிப்பெருக்கு எனும் பண்டிகையைத் தமிழர்கள் சிறப்பாகக் கொண்டாடிக் காவேரி நதியில் சென்ரு நீராடுவதும் வழிபாடு செய்வதும் என மகிழ்ச்சியாக வாழ்ந்து வந்தனர். சில ஆண்டுகளாக ஆடிப்பெருக்கைக் காணவில்லை, காரணம் காவேரி நீரைத் தமிழகத்துத் தராமல் கர்நாடக மாநிலத்தார் பெரும்பாலும் தாங்களே உபயோகம் செய்யும் வண்ணம் பல ஏற்பாடுகளைச் செய்ததேயாகும். தற்போதும் காவேரி நதியைத் தேக்கி வைக்கப் புதியதொரு அணை கட்டக் கர்நாடக மாநிலத்தில் மும்முரமாக ஏற்பாடு நடந்து கொண்டிருக்கிறது. தமிழ்நாட்டின் தலைவர்கள் பலரும் முன்னணி நடிகர்களும் இதற்குக் கண்டனம் தெரிவித்துள்ளனர்.

அது மட்டுமின்றி, தமிழ்நாட்டுக்குக் கர்நாடகாவிலிருந்து வரும் காவேரி நீரில் கழிவு நீர் மிகவும் அதிகமான அளவில் கலக்கப் பட்டு வருவதாக ஒரு புகார் எழுந்துள்ளது. இது வேண்டுமென்றே செய்ததா அல்லது அந்த அளவுக்குக் கர்நாடக மாநிலம் அசுத்தமாகிவிட்டதா எனச் சிந்திக்கத் தோன்றுகிறது, காரணம் சமீப காலத்தில் கர்நாடக மாநிலத்தில் குறிப்பாக பெங்களூரில் பல ஏரிகளில் கழிவு நீர்க் கலப்பால் நுரை பொங்கி சுற்றுப்புறச் சூழல் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளதே ஆகும்.

வான் பொய்த்தாலும் தான் பொய்யா வற்றாக் கருணை காவேரி எதிர்காலத்தில் தமிழ்நாட்டுக்கு நீர் தருவாளா என்பதே கேள்விக்குறியாகியுள்ளது.


திரைப்படம்: ஆடிப்பெருக்கு
இயற்றியவர்: கொத்தமங்கலம் சுப்பு
இசை: ஏ.எம். ராஜா
குரல்: சீர்காழி கோவிந்தராஜன்

அன்னையின் அருளே வா வா வா
 அன்னையின் அருளே வா வா வா
 ஆடிப் பெருக்கே வா வா வா
 அன்னையின் அருளே வா வா வா 
பொன்னிப் புனலே வா வா வா
 பொங்கும் பாலே வா வா வா 

அன்னையின் அருளே வா வா வா 

குடகில் ஊற்றுக் கண்ணாகி
 குலத்தைக் காக்கும் பெண்ணாகி
 குடகில் ஊற்றுக் கண்ணாகி
 குலத்தைக் காக்கும் பெண்ணாகி
 கண்ணன் பாடி அணை தாண்டி
 கார்முகில் வண்ணனை வலம் வந்து 

அன்னையின் அருளே வா வா வா 

திருவாய் மொழியாம் நாலாயிரமும்
 தேனாய்ப் பெருகும் தமிழே வா
 திருவாய் மொழியாம் நாலாயிரமும்
 தேனாய்ப் பெருகும் தமிழே வா
 திருமால் தனக்கே மாலையாகி
 திருவரங்கம் தனை வலம் வரும் தாயே 

அன்னையின் அருளே வா வா வா 

கட்டிக் கரும்பின் சுவையும் நீ
 கம்பன் கவிதை நயமும் நீ
 கட்டிக் கரும்பின் சுவையும் நீ
 கம்பன் கவிதை நயமும் நீ
 முத்துத் தாண்டவர் பாடலிலே
 முழங்கும் பக்திப் பெருக்கும் நீ 

வான் பொய்த்தாலும் தான் பொய்யா
 வற்றாக் கருணை காவேரி
 வான் பொய்த்தாலும் தான் பொய்யா
 வற்றாக் கருணை காவேரி
 வளநாடாக்கும் தாயே நீ
 வாழிய வாழிய பல்லாண்டு  

செவ்வாய், 23 பிப்ரவரி, 2016

சட்டி சுட்டதடா கை விட்டதடா

தினம் ஒரு பாடல் - டிசம்பர் 13, 2015

ஆசை கோபம் களவு கொண்டவன் பேசத் தெரிந்த மிருகம் என்றான் கவிஞன் கண்ணதாசன். அதை மெய்ப்பிக்கும் விதத்தில் தமிழ்நாட்டில் சமீபத்தில் பெருமழையால் விளைந்த சேதங்களும் அதனைத் தொடர்ந்து பல மனிதர்களின் நடவடிக்கைகளும் அமைந்திருந்ததை அனைவரும் பார்த்தும் கேட்டும் வருகிறோம். எங்கும் ஒரு சிறு துளி நிலத்தையும் விட்டு வைக்காமல் போட்டி போட்டுக் கொண்டு பல அரசியல்வாதிகளும், வியாபார நிறுவனங்களும், கல்லூரி நிர்வாகங்களும், வீடு கட்ட விரும்பும் பொது மக்களும் எனப் பாகுபாடின்றி ஆக்கிரமிப்புச் செய்தனர். மழைக்காலங்களில் நீரைத் தேக்கி வைத்து வெயில் காலத்தில் நிலத்தடி நீரைக் காப்பாற்றித் தரும் பல ஏரிகளையும் மரங்கள் வளர்ந்து விவசாயம் செய்துவந்த பல நிலங்களையும் ப்ளாட் போட்டு விற்றுப் பெரும் செல்வந்தரானோர் பலருளர். அதில் அரசுக்குச் சொந்தமான நிலத்தைத் திருட்டுத்தனமாகப் போலி ஆவணங்கள் தயாரித்துத் தனியார் வசமாக்கிய மோசடிகள் பலவுண்டு என்பதை அனைவரும் அறிவர். சாக்கடை போடவென்று ஒதுக்கப்பட்ட அரசு நிதியைச் சென்னை மாநகராட்சியின் மாண்பு மிகு கவுன்சிலர்கள் பலர் தங்கள் வீட்டுக்கு எடுத்துச் சென்று சாக்கடை போடாமலே போட்டதாகக் கணக்குக் காட்டி நகைகளும் பல்வேறு சொத்துக்களும் வாங்கிக் குவித்துக் கோடீஸ்வரர்கள் ஆயினர் என்பதும் உலகறிந்த ரகசியமாகும். தெருக்களில் குப்பைகள் கொட்டிக் கிடக்க அவற்றை அவ்வப்பொழுது அள்ளி எரியாமல் வீடுகளின் முன் 
குவித்து வைத்து வீட்டுச் சொந்தக் காரர்களை மிரட்டியும் பயமுறுத்தியும் பணம் சம்பாதித்த பல கவுன்சிலர்கள் கதையும் தமிழ்நாடு அறியும்.

பேராசை பெருநஷ்டம் எனும் பழமொழிக்கேற்ப சென்னையில் பெய்த கனமழையால் சாலைகளெங்கும் தண்ணீர் பெருக்கெடுத்தோடி வெள்ளம் வடியப் பல நாட்கள் ஆன நிலையில் சாலையில் சென்று கொண்டிருந்த பல வாகனங்கள் முழுவதும் தண்ணீரில் மூழ்கி நாசமாயின. ஏரிகள் மூடப்பட்டதல் செல்ல இடமின்றி வெள்ள நீர் மக்கள் வசிக்கும் பகுதிக்குள் புகுந்து நிரம்பவே பல கட்டிடங்கள் முதல் தளம் முழுவதும் மழை நீரில் மூழ்கி மக்கள் யாவரும் மொட்டை மாடியில் தஞ்சம் புகுந்து தவிக்கும் நிலை ஏற்பட்டது.  சாக்கடைகள் போடப்படாததால் சாக்கடைகளில் செல்ல வேண்டிய கழிவு நீரும் மழை நீருடன் சேர்ந்து கொண்டு மக்கள் வசிக்கும் பகுதிகளில் தெருக்களிலும் வீடுகளுக்குள்ளும் புகுந்து நிரம்பி ஊரே சாக்கடைக் கோலம் பூண்டு ஊழித் தாண்டவம் புரிந்த கொடுமைகளை நேரில் கண்டவரே உணரக்கூடும். தொலைக்காட்சிகளிலும் இணைய தளங்களிலும் வேடிக்கை பார்த்துத் தெரிந்து கொண்ட நம்மைப் போன்ற பலரும் வெள்ளத்தால் விளைந்த துன்பங்களை முழுமையாக உணர இயலாது என்பதே உண்மை.

உள்ளதும் போச்சுடா நொள்ளைக் கண்ணா என்பது போல் பேராசைப் பட்டு நிலங்களை ஆக்கிரமித்து சொத்து சேர்க்கும் ஆசையில் தகாத முறையில் ஆக்கிரமிப்பு செய்த பலரும் இன்று வீடிழந்து கையில் உள்ள பொருளிழந்து செய்து வந்த தொழில் இழந்து, பெரு மூலதனத்தில் செய்து வந்த வியாபாரங்கள் அழிந்து அவதிப் படுகின்றனர் என்பது கண்கூடு. அரசியல்வாதிகள் இது நாள் வரை பொய் சொல்லி நடத்தி வந்த நாடகங்கள் யாவும் மழை நீரில் நீலச்சாயம் பூசி வந்த நரி நனைந்த போது வெளியானது போல் வெளியாகியது ஒரு தெய்வச் செயல் என்றே சொல்லலாம். தெய்வ நம்பிக்கை இல்லாதோரும் நம்பும் விதமாக வந்துற்றது இப்பேரழிவு.

சுயநலம் ஒன்றே பெரிதெனக் கொண்டு வாழ்ந்த பல செல்வந்தர்களும் ஏழைகள் போலாயினர். அவர்களுக்கு உயிர்ப்பிச்சை தந்தவர் வெகு சாமான்ய மக்களே எனக் கண்டபோது அவர்களது அறிவுக் கண் திறந்ததென்றே கொள்ளலாம். அரசு இயந்திரங்கள் முடங்கிப்போன நிலையில் அரசு நடத்தும் சாராய வியாபாரம்மட்டும் நிற்காமல் நடந்தது ஜனநாயகத்துக்கு சாவு மணி அடித்தாற் போல் இருந்தது. 

பொது மக்கள் தாங்களாகவே சென்று பலருக்கும் உதவிகள் புரிந்து ஒருவரையொருவர் காப்பாற்றிக்கொண்டு உயிர் பிழைக்கப் பாடுபட்டனர்.  நமக்கு நாமே திட்டம் என்று நாட்டைக் கொள்ளையடித்த சில அரசியல்வாதிகளுன் சுயரூபத்தை மக்கள் கண்டு கொண்டார்கள்.

இனியாகிலும் நேர்மையான அரசியல் தமிழ்நாடில் நிலவ மக்கள் வழிவகை செய்வார்களா? பொதுநல நோக்குடன் தம் இன்னுயிரையும் துச்சமாக மதித்து வெள்ள நீரில் இறங்கியும் படகுகள் விட்டும் பல 

மக்களின் இன்னுயிரைக் காத்து, உணவும் உடையும் பெற்றுத் தந்து ஊட்டி உயிர் காத்த தமிழ் இளைய தலைமுறையினர கையில் ஆட்சிப் பொறுப்பை ஒப்படைத்து அவர்களை வழிநடத்தி தமிழ்நாட்டில் நல்லாட்சி நிலைபெறச் செய்வாரக்ளா?

அந்தக் கூட்டணி, இந்தக் கூட்டணி என்று புதுப் புதுப் பெயர்களால் பழைய சுரண்டல் அரசியல்வாதிகள் பலர் அமைக்கும் கூட்டணிகள் கண்டு ஏமாறாமல் புதிய நல்வழியைக் கண்போம். இளைஞர்கள் கையில் எதிர்காலத்தை நம்பி ஒப்படைப்போம். அவர்கள் அன்புடையவர்கள், அறிவுடையவர்கள், திறமையுடையவர்கள், மக்களைப் பெரிதும் மதித்து நடப்பவர்கள், நாணயமானவர்கள்.

இளைய தலைமுறையை வரவேற்போம்! எதிர்காலத்தை வளமானதாக அமைப்போம், நேர்மையைக் கடிபிடிப்போம். கடமை, கண்ணியம், கட்டுப்பாடு என வெறும் வாய் ஜாலம் செய்து மானம் மரியாதை 

அனைத்தையும் இழந்தாலும் பரவாயில்லை, எப்படியாவது மக்களை ஏமாற்றிக் கோடிக்கணக்கில் கொள்ளையடித்துப் பெரும் பணம் சேர்ப்போம் எனும் சுயநல நோக்குடையோரை விரட்டியடிப்போம்.


இயற்றியவர்: கவிஞர் கண்ணதாசன்
குரல்: டி.எம். சௌந்தரராஜன்

சட்டி சுட்டதடா கை விட்டதடா
புத்தி கெட்டதடா நெஞ்சைத் தொட்டதடா
புத்தி கெட்டதடா நெஞ்சைத் தொட்டதடா 
நாலும் நடந்து முடிந்த பின்னால்
 நல்லது கெட்டது தெரிந்ததடா 

சட்டி சுட்டதடா கை விட்டதடா
புத்தி கெட்டதடா நெஞ்சைத் தொட்டதடா 

பாதி மனதில் தெய்வம் இருந்து பார்த்துக் கொண்டதடா
மீதி மனதில் மிருகம் இருந்து ஆட்டி வைத்ததடா
பாதி மனதில் தெய்வம் இருந்து பார்த்துக் கொண்டதடா
மீதி மனதில் மிருகம் இருந்து ஆட்டி வைத்ததடா
ஆட்டி வைத்த மிருகம் இன்று அடங்கி விட்டதடா
ஆட்டி வைத்த மிருகம் இன்று அடங்கி விட்டதடா
அமைதி தெய்வம் முழுமனதில் கோவில் கொண்டதடா 

சட்டி சுட்டதடா கை விட்டதடா
புத்தி கெட்டதடா நெஞ்சைத் தொட்டதடா 

ஆரவாரப் பேய்களெல்லாம் ஓடிவிட்டதடா
ஆலயமணி ஓசை நெஞ்சில் கூடிவிட்டதடா
தருமதேவன் கோவிலிலே ஒளி துலங்குதடா 
தருமதேவன் கோவிலிலே ஒளி துலங்குதடா மனம் 
சாந்தி சாந்தி சாந்தி என்று ஓய்வு கொண்டதடா 

சட்டி சுட்டதடா கை விட்டதடா
புத்தி கெட்டதடா நெஞ்சைத் தொட்டதடா  

திங்கள், 22 பிப்ரவரி, 2016

ஏமாற்றாதே ஏமாற்றாதே ஏமாறாதே ஏமாறாதே

தினம் ஒரு பாடல் - டிசம்பர் 12, 2015

சில காலம் முன்பு வரை தொலைக்காட்சிகளிலும் பத்திரிக்கைகளிலும் வரும் செய்திகளைப் பெரும்பாலும் உண்மையென்று நம்பி ஏற்றுக்கொள்ளும் மனநிலையிலேயே நம்மில் பெரும்பாலோர் இருந்து வந்தோம். சபீப காலமாக சமூக வலைத்தளங்களான முகநூல், ட்விட்டர், வாட்சப் மற்றும் கூகுள் குழுமங்கள், யாஹூ குழுமங்கள் வாயிலாக இணையதளப் பயனாளிகள் பலரும் தங்களுக்குள் பரிமாரிக் கொள்ளும் செய்திகளின் மூலம் நாம் அறிய வந்தது என்னவெனில் தொலைக்காட்சிகள் மற்றும் பத்திரிக்கைகள் முதலன ஊடகங்கள் அதிகப்படியாகப் பொய்ச் செய்திகளை வெளியிட்டு வருகின்றன என்பதே. 

பணம் பெற்றுக்கொண்டு அதற்கு ஈடாக முறைகேடான அரசியல்வாதிகளை உத்தமர்களாகச் சித்தரிப்பதும் நல்லவர்களை சமூகவிரோதிகளாக சித்தரிப்பதும்  அனேகமாக எல்லா செய்தி ஊடகங்களும் செய்யும் மோசடி என்பது தெரிய வந்துள்ளது. தற்காலம் சென்னையில் ஏற்பட்ட கனமழையால் ஏற்பட்ட விபரீத விளைவுகளை அவை எந்த அளவு வெளியிட்டுள்ளன எந்த அளவு வெளியிடவில்லை. அரசியல் சார்பாகப் பேசுகின்றனவா என்பன போன்ற கோணத்தில் நாம் ஆராய முற்பட்டிருக்கிறோம். இது ஒரு வரவேற்கத்தக்க மாற்றமேயாகும்.

இன்றளவும் உலக மக்களில் பெரும்பாலோர் தொலைக்காட்சிகளில் எதைக் காட்டினாலும் மெய்யென்று நம்புவோரேயாவர். உதாரணமாக ஒரு லாரி ஒரு வீட்டின் மேல் மோதும்பொழுது என்னவாகும் என எண்ணிப் பார்த்தோமெனில் நமக்குத் தெரியும் லாரி சேதமுற்றுக் கவிழும், வீடு இடியும் என. லாரி மிகவும் கனமான வாகனம். 

ஆகாய விமானம் மிகவும் இலகுவான வாகனமாயிருப்பதாலேயே அது ஆகாயத்தில் பறக்க இயல்கிறது. ஒருதிடப்பொருள் ஒரு திரவத்தில் மிதக்க வேண்டுமெனில் அத்திடப் பொருளினால் இடப்பெயற்சி செய்யப்பட்ட திரவத்தின் எடையை விட அத்திடப் பொருளின் எடை குறைவாக இருக்க வேண்டும் என்பது ஆர்க்கிமிடிஸ் எனும் விஞ்ஞானி அறிந்து கூறிய மிதத்தல் விதியாகும். இவ்விதியைப் பள்ளிகளில் விஞ்ஞானப் பாடம் பயிலும் அனைவரும் அறிவர், பாடங்களை மறந்து போனோரைத் தவிர. 

அத்தகைய ஆகாய விமானமொன்று ஒரு கட்டிடத்தின் மேல் மோதினால் என்னவாகும் என எண்ணிப் பார்த்தோமேயானால் அது சேதமுற்றுக் கிழே விசுந்து நொருங்கும் எனவும் கட்டிடத்தில் விமானம் மோதிய பகுதி சிறிதளவு சேதமுறும் என்பதும் தெரியவரும். அது மட்டுமின்றி ஒரு விமானத்தில் உள்ள ஏவியேஷன் பெட்ரோல் எனும் எரிபொருளின் வெப்பநிலை 700 டிகிரி செல்சியஸ். ஒரு கட்டிடத்தின் தூண்கள் மற்றும் விட்டங்களில் உயபோகிக்கப்படும் இரும்புக் கம்பிகளின் உருகுநிலை 1000 டிகிரி செல்சியஸ். ஒரு இரும்பு (எவர்சில்வர்) பாத்திரத்தை கேஸ் அடுப்பில் வைத்து எவ்வளவு நேரம் சூ.டேற்றினாலும் பாத்திரம் உருகுவதில்லை. இதை செய்து பார்க்கலாம். 

அவ்வாறிருக்க ஆகாய விமானத்தின் எரிபொருள் எரிவதனால் இரும்புக் கம்பிகள் உருகுவதில்லை என நாம் அறியலாம். சமீபத்தில் கணிணியில் க்ராபிக்ஸ் எனும் தொழில் நுட்பத்தை உபயோகப் படுத்திப் பல அரசியல்வாதிகள் உண்மையான புகைப்படங்களை மாற்றிப் பொய்யான தோற்றத்தைத் தரும் வண்ணம் செய்து ஏமாற்றுவது நமக்குத் தெரிய வந்துள்ளது.

இத்தகையே ஏமாற்று வேலையை உபயோகித்தே 9/11 என்று சொல்லப்படுகிற நியூயார்க் நகர இரட்டை கோபுரங்கள் தகர்க்கப் படுவது போன்ற பொய்யான கிராபிக்ஸ் வீடியோவை உலகெங்கிலுமுள்ள தொலைக்காட்சி நிறுவனங்கள் ஒளிபரப்புச் செய்து உலக மக்களை ஏமாற்றின. காரணம் ஈராக் நாட்டில் பேரழிவு ஆயுதங்கள் எவையும் இல்லையென ஐநா குழு கண்டறிந்ததால் ஈராக் நாட்டின் மேல் போர் தொடுக்க அமெரிக்காவுக்கு ஒரு வலுவான காரணம் தேவைப்பட்டது. மக்கள் கவனிக்கத் தவறிய உண்மை இன்னொன்றாவது இடிந்தவை இரண்டு கட்டிடங்களல்ல.மூன்று. அவற்றுள் இரண்டு 100 மாடிகள் ஒன்று 70 மாடிகள். 70 மாடிக் கட்டிடத்தின் மேல் எந்த ஆகாயவிமானமும் மோதியதாகக் காட்டவில்லை கிராபிக்ஸ் செய்தி. இது ஊடகங்களும் அமெரிக்காவும் செய்த மாபெரும் தவறு. 

உண்மையில் இம்மூன்று கட்டிடங்களும் அமெரிக்க ராணுவத்தால் வெடி வைத்துத் தகர்க்கப் பட்டன என்பதே உண்மை. இவ்வுண்மையைப் பல அறிஞர்கள் நிரூபித்துள்ளனர். யூட்யூப் தளத்தில் அதற்கான வீடியோக்கள் பல உள்ளன.  அவற்றுள் ஒன்று இதோ: https://youtu.be/4LZns-O9rCw

உலக மக்கள் அனைவரின் கண்களில் மண்ணைத் தூவி அமெரிக்கா அன்று நடத்திய மோசடி நாடகத்தை மெய்யென இன்னும் பெரும்பாலான மக்கள் நம்பிக் கொண்டிருக்கிறார்கள். அரசியல்வாதிகள் உண்மையை அறிவார்கள் ஆனால் வெளியிட மாட்டார்கள். காரணம் உண்மையைச் சொன்னால் மக்கள் நம்ப மாட்டார்கள் என்பதும் பொய் சொன்னாலே பெரும்பாலோர் நம்புவர் என்பது அவர்களின் கணிப்பு. சமீப காலம் வரை அக்கணிப்பு சரியாகவே இருந்தது ஆனால் சமீப காலமாக மக்கள் சிந்திக்கத் தொடங்கியுள்ளனர். 

உண்மைகள் வெளிவரும் காலம் வந்து விட்டது.


திரைப்படம்: குடியிருந்த கோவில்
இயற்றியவர்: வாலி
இசை: கே.வி. மஹாதேவன்
குரல்: டி.எம். சௌந்தரராஜன்
ஆண்டு: 1969
 
ஏமாற்றாதே ஏமாற்றாதே ஏமாறாதே ஏமாறாதே
ஏமாற்றாதே ஏமாற்றாதே ஏமாறாதே ஏமாறாதே
ஏமாற்றாதே ஏமாற்றாதே ஏமாறாதே ஏமாறாதே
அந்த இருட்டுக்கும் பார்க்கின்ற விழியிருக்கும் எந்த
சுவருக்கும் கேட்கின்ற காதிருக்கும்
அந்த இருட்டுக்கும் பார்க்கின்ற விழியிருக்கும் எந்த
சுவருக்கும் கேட்கின்ற காதிருக்கும்
சொல்லாமல் கொள்ளாமல் காத்திருக்கும்
சொல்லாமல் கொள்ளாமல் காத்திருக்கும் தக்க
சமயத்தில் நடந்ததை எடுத்துரைக்கும்

ஏமாற்றாதே ஏமாற்றாதே ஏமாறாதே ஏமாறாதே

பொது நீதிக்கும் நேர்மைக்கும் பயந்துவிடு நல்
அன்புக்கும் பண்புக்கும் வளைந்து கொடு
பொது நீதிக்கும் நேர்மைக்கும் பயந்துவிடு நல்
அன்புக்கும் பண்புக்கும் வளைந்து கொடு
இன்றோடு போகட்டும் திருந்திவிடு
இன்றோடு போகட்டும் திருந்திவிடு உன்தன்
இதயத்தை நேர்வழி திருத்தி விடு

ஏமாற்றாதே ஏமாற்றாதே ஏமாறாதே ஏமாறாதே

நிழல் பிரிவதில்லை தன் உடலை விட்டு அது
அழிவதில்லை காலடிகள் பட்டு
நிழல் பிரிவதில்லை தன் உடலை விட்டு அது
அழிவதில்லை காலடிகள் பட்டு நீ
நடமாடும் பாதையில் கவனம் வைத்தால்
நடமாடும் பாதையில் கவனம் வைத்தால் இங்கு
நடப்பது நலமாய் நடந்து விடும்.

ஏமாற்றாதே ஏமாற்றாதே ஏமாறாதே ஏமாறாதே
ஏமாற்றாதே ஏமாற்றாதே ஏமாறாதே ஏமாறாதே

சனி, 20 பிப்ரவரி, 2016

பச்சை மரம் ஒன்று இச்சைக் கிளி ரெண்டு

தினம் ஒரு பாடல் -  டிசம்பர் 4, 2015

மக்கள்மெய் தீண்டல் உடற்கின்பம் மற்று அவர்
சொற்கேட்டல் இன்பம் செவிக்கு.

மக்கட்பேறு பொல் பிரிதொரு செல்வம் இவ்வுலகில் கிடையாது. தாம் பெற்ற குழந்தையின் ஸ்பரிசமே பெற்றோருக்கு உடல் வழியாகக் கிடைக்கும் பேரின்பமாகும். அக்குழந்தையில் மழலைச் சொல் கேட்பது செவிக்கு இன்பமாகும். தன் குழந்தை பிறந்து வளர்ந்து உட்கார்ந்து பழகிய நிலையில் த்ந்தை அதன் மடியில் தலை வைத்துப் படுத்து, "நான் தான் உன் குழந்தையாம், எங்கே அப்பாவைத் தாலாட்டித் தூங்க வை" என்று செல்லமாகக் கேட்க அக்குழந்தை தன் பிஞ்சுக் கரங்களால் அவனது தலையை மெல்லத் தட்டும் பொழுது உண்டாகும் எல்லையே இல்லை. அக்குழந்தை நாளடைவில் வளர்ந்து பெரியவனாகிக் குடும்பத்தைக் காக்கும் காலம் வருகையில் தந்தையும் தாயும் வயது முதிர்ந்து ஓய்வெடுக்கும் காலம் தொடர்ந்து வந்து சேர்கிறது. இதுவே வாழ்வின் நியதி.

அவ்வாறு வயதில் முதிர்ந்த பெற்றோருக்குப் பிள்ளைகள் தாயும் தந்தையும் போல் செயலாற்றிப் பணிவிடை செய்து பெற்றோரைப் பேணிக் காப்பது நம் மரபாகும். அத்தகைய இன்பத்தைப் பெறப் பெற்றோர்கள் கொடுத்து வைத்திருக்க வேண்டும். அதாவது அவர்கள் தம் பிள்ளைகளை முறையாகப் பேணி வளர்த்து ஆளாக்கி, நன்னெறிகளைக் கற்றுக் கொடுத்து, தம் கடமைகளை ஆற்றும் பொறுப்புணர்வை ஏற்படுத்தி வாழ்விக்க வேண்டும். கடமை தவறிய பெற்றோர் பின்னாளில் தம் பிள்ளைகளின் சேவையைப் பெறும் தகுதியை இழக்கின்றனர். இதுவே உலக நியதி. வங்கியில் பணத்தை சேமித்து வைத்தால் மட்டுமே நமக்கு அவசரத் தேவைக்கு வங்கியிலிருந்து பணம் பெற முடியும். உலக வாழ்வும் வங்கிக் கணக்குப் போன்றதே ஆகும். கொடுத்து வைத்தால் தான் கிடைக்கும். 

பிள்ளைகளின் கடமையாவது பெற்றோர் எந்நிலையிலிருந்தாலும் அவர்களை வயதான காலத்தில் தகுந்த முறையில் பேணிக் காப்பதேயாகும். பெற்றோர் தம் கடமையைச்  செய்யத் தவறி விட்டனர். அதனால் நாம் பெற்றோருக்குப் பிற்காலத்தில் உதவத் தேவையில்லை எனும் மனப்பான்மையை வளர்த்துக் கொள்ளலாகாது. காரணம் அத்தகைய மனப்பான்மையே அவர்களது பிள்ளைகளுக்கும் வளர ஏதுவாகித் தம் பெற்றோரைத் தாம் காப்பாற்றாமல் விட்டமைக்கு தண்டனையாய்த் தம் பிள்ளைகளால் கைவிடப்படும் சூழ்நிலை உருவாகக் கூடும்.

இதில் யாரையும் குற்றம் சொல்லிப் பயனில்லை. செய்ய வேண்டிய கடமைகளை உரிய முறையில் செய்தால் அதன் பலன் உரிய காலத்தில் உரிய முறையில் கிடைக்கும் என்பதே கருத்து. உலகில் தந்தை, தாய், பிள்ளைகள் இவர்கள் ஒருங்கிணைந்து வாழ்வதே முறையான குடும்ப அமைப்பாகும். அக்குடும்ப அமைப்பைத் தழுவி வாழ்தலே இல்லறமாகும். இல்லறமல்லது நல்லறமன்று. இல்லறம் வளர்ச்சியுறுவதன் அடையாளமே தாத்தா, பாட்டி, சித்தப்பா, பெரியப்பா, அத்தை, மாமன் முதலான உறவுகள் பல்கிப் பெருகி ஒருவரோடொருவர் உறுதுணையாய் வாழும் பேரின்ப வாழ்வு.


திரைப்படம்: ராமு
வரிகள்: கவிஞர் கண்ணதாசன்
இசை: எம்.எஸ். விஸ்வநாதன்
குரல்: பி. சுசீலா
ஆண்டு: 1966

பச்சை மரம் ஒன்று இச்சைக் கிளி ரெண்டு
பாட்டுச் சொல்லித் தூங்கச் செய்வேன் ஆரிராரோ

பச்சை மரம் ஒன்று இச்சைக் கிளி ரெண்டு
பாட்டுச் சொல்லித் தூங்கச் செய்வேன் ஆரிராரோ

அள்ளித் தந்த அன்னை சொல்லித் தந்த தந்தை
உள்ளம் கொண்ட பிள்ளை நானல்லவோ?
அள்ளித் தந்த அன்னை சொல்லித் தந்த தந்தை
உள்ளம் கொண்ட பிள்ளை நானல்லவோ?
கட்டித் தங்கம் என்று கன்னம் தொட்டுக் கொண்டு
ஆசை முத்தம் தந்தேன் ஆரிராரோ
கட்டித் தங்கம் என்று கன்னம் தொட்டுக் கொண்டு
ஆசை முத்தம் தந்தேன் ஆரிராரோ

பச்சை மரம் ஒன்று இச்சைக் கிளி ரெண்டு
பாட்டுச் சொல்லித் தூங்கச் செய்வேன் ஆரிராரோ

பெட்டைக் கிளி கொஞ்சும் பிள்ளைக் கிளி பாடும்
தந்தைக் கிளி அங்கே தேடி வரும்
பெட்டைக் கிளி கொஞ்சும் பிள்ளைக் கிளி பாடும்
தந்தைக் கிளி அங்கே தேடி வரும்
இன்பம் என்ற போதும் துன்பம் வந்த போதும்
என்றும் எங்கள் சொந்தம் மாறாது
இன்பம் என்ற போதும் துன்பம் வந்த போதும்
என்றும் எங்கள் சொந்தம் மாறாது

பச்சை மரம் ஒன்று இச்சைக் கிளி ரெண்டு
பாட்டுச் சொல்லித் தூங்கச் செய்வேன் ஆரிராரோ
பாட்டுச் சொல்லித் தூங்கச் செய்வேன் ஆரிராரோ
பாட்டுச் சொல்லித் தூங்கச் செய்வேன் ஆரிராரோ

வெள்ளி, 19 பிப்ரவரி, 2016

மகராஜா ஒரு மகராணி

தினம் ஒரு பாடல் - டிசம்பர் 02, 2015

இல்லறத்தில் நல்லறத்தைப் பேணும் இணையிலா மதிப்பு மிகு சமுதாயம் நம் இந்திய சமுதாயம். நம் சமுதாய அமைப்பைச் சீர்குலைத்து நம் நாட்டை எல்லாத் துறைகளிலும் பின்தங்கிய நிலையிலேயே என்றும் வைத்திருந்து தாங்கள் லாபமடையும் நோக்கத்துடன் கட்டவிழ்த்து விடப்பட்ட அந்நிய நாட்டுக் கலாச்சாரச் சீர்கேட்டு இயந்திரங்களான பலவிதமான திரைப்படங்களும் தொலைக்காட்சி நிகழ்ச்சிகளும் மற்றும் போதை மருந்துகள், பலவிதமான மதுபான வகைகள், புகையிலையை அடிப்படையாகக் கொண்ட சிகரெட் போன்ற எவையும் நம் கலாச்சாரத்தை சீர்குலப்பதில் இதுவரை வெற்றி கண்டதில்லை. இனிமேலும் வெற்றி காணம் போவதுமில்லை. அதன் காரணம் நம் குடும்ப அமைப்பில் கணவன் மனைவி இருவரிடையே ஏற்படும் இணைபிரியாத உறவுப் பிணைப்பேயாகும்.

காதல் ஒருவனைக் கைப்பிடித்தே அவன் 
காரியம் யாவினும் கை கொடுத்தே
மாதர் அறங்கள் பழமையைக் காட்டிலும்
மாட்சி பெறச் செய்து வாழ்வமடி

என்ற பாரதியின் வரிகளுக்கிணங்கக் கணவனும் மனைவியும் ஒருவரோடொருவர் தீராப் பாசம் கொண்டு இருவரும் இணைபிரியாமல் ஆயுட்காலம் முழுவதும் எத்துணை நன்மை தீமைகள் வந்துற்ற போதும் அவையனைத்தையும் இருவரும் சேர்ந்தே எதிர்கொள்ளும் வாழ்க்கை முறையை நம் மக்கள் கடைபிடிப்பதுடன் தங்கள் வருங்கால சந்ததியினருக்கும் தமது வாழ்வின் மூலம் செயல்முறையிலேயே விளக்கி வரும் நடைமுறை நம் நாட்டின் குடும்ப அமைப்பை வலுவூட்டுகிறது. ஒரு ஆணும் ஒரு பெண்ணும் கணவன் மனைவியாகத் திருமணத்தில் ஒன்று சேர்ந்து வாழ்வைத் துவங்குகையில் இருவரும் ஒருவரிடம் மற்றவர் காணும் இன்பத்தைப் பெரிதாகக் கருதி மகிழ்ந்து இல்வாழ்வு வாழ்கின்றனர். அவ்வுறவு அப்பெண் தன் முதல் குழந்தையை வயிற்றில் சுமந்து பெறுகையில் மேலும் வலுபடுகிறது. கர்ப்பமுற்றுத் தாயாகும் நிலையில் இருக்கும் தன் மனைவியைக் கணவன் கண்ணும் கருத்துமாகப் பேணிப் பாதுகாக்கத் தொடங்குகிறான். அச்சூழலில் அப்பெண்ணுக்கு அனைத்து உறவுகளுமே அவள் கணவன் வடிவில் அமைவது நம் இல்லறத்தின் மகிமையாகும்.

குழந்தை பிறந்தவுடன் கணவனும் மனைவியும் அடையும் பேரின்பத்துக்கு ஈடிணையே கிடையாதென்பது அவ்வாறு முதல் குழந்தை பெறும் தம்பதியருக்கேயன்றி வேறு யாருக்கும் முழுமையாகப் புரியாது. அது முதற்கொண்டு அத்தம்பதியரின் முழுக் கவனமும் தங்களது குழ்ந்தையைப் பேணி வளர்ப்பதிலேயே செல்கிறது. அக்குழந்தைக்கு விதவிதமாக உடைகளும் அலங்காரங்களும் சூட்டி மகிழ்ந்து அது மழலையில் அம்மா, அப்பா என அழைத்திடும் தருணத்தை வெகு ஆவலுடன் எதிர்பார்த்துக் காத்திருப்பதில் இருக்கும் சுகமே தனி. குழந்தை முதலி அம்மா என்றோ அப்பா என்றோ அழைத்து விட்டால் அன்று குதூகலம் பொங்கி வழியும். பின் அக்குழந்தை சின்னச்சின்ன நடைநடந்து செம்பவள வாய்திறந்து அம்மா என்றழைத்துக்கொண்டு விளையாடுவதும் புதிய வார்த்தைகளைக் கற்றுக்கொள்வதும் வாழ்வின் அனுபவித்து மகிழும் காலமே. பிள்ளை சற்றே வளர்ந்து நன்கு பேசிப் பழகும் தருணத்தில் கணவன் மனைவி இருவருக்கும் மட்டுமன்றி அக்குழந்தைக்கும் அதனுடன் ஒன்றாக வளர்ந்து உறவு கொண்டாடி மகிழ் இன்னுமொரு குழந்தை வேண்டும் எனும் ஆவல் பிறக்கிறது. 

இரண்டாவது குழந்தை பெறும் ஆசை பெருகப் பெருக இல்லறத்தின் சுவை மேலும் பன்மடங்காகக் கூடுகிறது. நம் முன்னோர்கள் பழங்காலத்தில் கட்டுப்பாடின்றி அளவுக்கதிகமான பிள்ளைகளைப் பெற்றதால் அவர்களை முறையாக வளர்த்து ஆளாக்க முடியாமல் பல காலம் அவதியுற்றனர் என்பது நம்மில்  50 ஆண்டுகளைக் கடந்தவர்களுக்கு மட்டுமே நன்கு புரியும். அத்தகைய அவதியைத் தவிர்க்கவே நாட்டில் குடும்பக் கட்டுப்பாடு அமலுக்கு வந்தது. மூன்று குழந்தைகள் என்று கட்டுப் பாடு முதலில் தொடங்கித் தற்போது இரண்டு என்ற அளவில் குறைந்து சிலர் ஒன்றே ஒன்று கண்ணே கண்ணு என்ற நிலையை உருவாக்கிடப் பெரும் முயற்சி செய்து வருகின்றனர். அவ்வாறு உடன் பிறப்பே இல்லாமல் ஒரே குழந்தையாக வளரும் பிள்ளைகள் சகோதர பாசத்தை உணர மாட்டர்கள். எனவே இரண்டு குழந்தைகள் என்ற அளவில் நிறுத்திக் கொண்டு அளவான குடும்பத்துடன் மகிழ்ச்சியாக வாழ்வதே உத்தமம்.


திரைப்படம்: இரு மலர்கள்
இயற்றியவர்: கவிஞர் வாலி
இசை: எம்.எஸ். விஸ்வநாதன்
பாடியோர்: டி.எம். சௌந்தரராஜன், சதன், ஷோபா

மகராஜா ஒரு மகராணி இந்த இருவருக்கும் இவள் குட்டி ராணி
குட்டி ராணி கொக் சிக் கொக் சிக்
மகராஜா ஒரு மகராணி இந்த இருவருக்கும் இவள் குட்டி ராணி

பொங்கும் அழகில் தங்க நிலாவே தங்கச்சிப் பாப்பாவோ?
பொங்கும் அழகில் தங்க நிலாவே தங்கச்சிப் பாப்பாவோ?
புத்தம் புதிய பூச்செண்டாட்டம் புன்னகை செய்வாளோ?
புத்தம் புதிய பூச்செண்டாட்டம் புன்னகை செய்வாளோ?

அம்மா கொக் சிக் கொக் சிக்

மகராஜா ஒரு மகராணி இந்த இருவருக்கும் இவள் குட்டி ராணி

மலர்களெல்லாம் இவளுக்கென்றே மாளிகை அமைத்ததம்மா
மலர்களெல்லாம் இவளுக்கென்றே மாளிகை அமைத்ததம்மா
மாலைத் தென்றல் சொன்னதைக் கேட்கும் மந்திரி ஆனதம்மா
பூனையும் நாயும் காவல் காக்கும் சேனைகள் ஆனதம்மா
அம்மா அப்பா மடி மேல் இவளின் ராஜாங்கம் நடக்குதம்மா

அம்மா கொக் சிக் கொக் சிக்

மகராஜா ஒரு மகராணி இந்த இருவருக்கும் இவள் குட்டி ராணி

யாரது இங்கே மந்திரி? குட்டி ராணி வந்தா நீ எந்திரி
யாரது இங்கே மந்திரி? குட்டி ராணி வந்தா நீ எந்திரி
வணக்கம் வணக்கம்
வணக்கம் வணக்கம் சின்ன ராணி இங்கு
எனக்கிட்ட கட்டளை என்ன ராணி?
ஓடிப் பிடித்து விளையாட ஒரு தம்பிப் பாப்பா வேண்டும் என் கூட
ஓடிப் பிடித்து விளையாட ஒரு தம்பிப் பாப்பா வேண்டும் என் கூட
ஆகட்டும் தாயே அது போல நீங்க நினைத்ததை முடிப்பேன் மணம் போலே

இவளுக்கொரு தம்பிப் பயல் இனிமேல் பிறப்பானோ?
இளவரசன் நான் தான் என்று போட்டிக்கு வருவானோ?
ராணியம்மா மனது வைத்தால் எதுவும் நடக்குமம்மா
ராஜாவுக்கும் இது போல் ஆசை நாள் தோறும் இருக்குதம்மா

அம்மா கொக் சிக் கொக் சிக்

மகராஜா ஒரு மகராணி இந்த இருவருக்கும் இவள் குட்டி ராணி
மகராஜா ஒரு மகராணி இந்த இருவருக்கும் இவள் குட்டி ராணி

புதன், 17 பிப்ரவரி, 2016

பலே பலே பலே தேவா

தினம் ஒரு பாடல் - 2015 நவம்பர் 30

அறியாமை இருள் சூழ்ந்த உலகில் அறிவிருந்தும் அறியாதவர்கள் போல் பெருதற்கரிய மானிடப் பிறப்பெய்திய நாம் பொழுதை வீணாக்கி ஆசை வயப்பட்டு அழியும் பொருட்கள் மேல் கவனத்தைத் திருப்பி வாழ்நாள் முழுதும் வீணாளாகவே கழிக்கிறோம். பெரும்பாலோருக்கு மரணம் வரையிலும் இத்தகைய அற்பப் பொருளாசை போவதில்லை. அத்தகையோர் இறக்கும் பொழுதிலும் இருளிலேயே உழன்று கிடக்கின்றனர். தாம் ஏன் வாழ்ந்தோம் என்றே தெரியாமல், தெரிந்து கொள்ள எவ்வித முயற்சியும் எடுக்காமல் வந்ததும் போனதும் தெரியாமல் அடையாளமின்றி அழிந்து போகும் பெரும்பாலோரில் ஒருவராக இல்லாமல் நாம் ஒவ்வொருவரும் இவ்வுலகில் ஏன் பிறந்தோம், நமக்கு விதிக்கப் பட்ட கடமைகள் என்ன, இப்பிறவி வந்துற்றதன் காரணம் என்ன, இதற்குப் பின்னர் நமது கதி என்ன என்பன போன்ற உண்மைகளைக் கண்டறிய முயற்சித்தோமானால் மாயையின் திரை விலகி மெய்ஞ்ஞானம் பிறப்பது உறுதி. 

அத்தகைய மெய்ஞ்ஞானம் எய்திய ஞானியர் தங்கள் வாழ்நாள் உள்ளளவும் தம் தேவைகளைக் கருதாமல் பிறர் நலனிலே அக்கரை கொண்டு சேவை புரிவதொன்றே குறிக்கோளாகக் கொண்டு வாழ்கின்றனர்.  உலக வாழ்வில் ஏற்படும் இன்ப துன்பங்கள் பெரும்பான்மையான மக்களை வெகுவாகப் பாதிப்பது போல் ஞானியரை பாதிப்பதில்லை. காரணம் அவர்கள் அறிவார்கள் இன்ப துன்பங்கள் நிரந்தரமல்ல, தோன்றி மறையும் இயல்பையுடையன என்று. எத்துணை பெரிய இன்பம் வந்தாலும் இத்தகைய ஞானியர் அதனால் தன்னை மறந்து அறிவு மயங்கி சிற்றின்ப நோக்கம் கொண்டலைவதில்லை. மாறாகத் தாம் பெற்ற இன்பம் பெருக இவ்வையகம் எனும் பரந்த மனப்பான்மையுடன் தான் பெற்ற இன்பத்தைப் பிறருடன் பகிர்ந்து கொண்டு பிறரும் நலமடையப் பாடுபடுகினறனர். அதே போல் எத்துணை பெரும் துன்பம் வந்துற்ற போதும் அதனால் சிறிதளவும் மனச் சோர்வடையாமல் அத்துன்பம் நீங்குதற்குரிய வழியைத் தேடியறிந்து நீக்குவதில் வெற்றியும் பெறுகின்றனர்.

அண்ணல் காந்தியடிகளும், அன்னை தெரசாவும், மஹாகவி பாரதியாரும், கப்பலோட்டிய தமிழன் சிதம்பரம் பிள்ளையவர்களும் மற்றும் எண்ணிறந்த ஞானியர்கள் அவதரித்து மக்கள் நலனே வாழ்வாகக் கொண்டு சேவைபுரிந்து நம் நாட்டுக்குப் பெருமை சேர்த்துள்ளனர். வேறு சில சுயநல நோக்கர்கள் இத்தகைய தியாகிகளின் பெயருக்குக் களங்கம் கற்பிக்கும் விதத்தில் வரலாற்றை மாற்றியமைக்கவும் பொய்ச் செய்திகளைப் பரப்பவும் பெரிதும் முயற்சிக்கின்றனர். இத்தகையோர் கையாளும் ஆயுதம் துவேஷம். சாதி மதத்தின் பெயராலும் ஏழை பணக்காரன் வித்தியாசத்தின் பெயராலும் பிறர் மனதில் வெறுப்புளர்ச்சியை வளர்க்கின்றனர் இத்தகைய சுயநலவாதிகள். இறுதியில் அவர்களது சுயநலம் அவர்களையே அழிப்பதுடன் அவர்கள் காட்டிய தவறான பாதையில் செல்ல விழைவோரையும் அழிக்கின்றது. இதற்கு வரலாற்று ஆதாரங்கள் பல உள்ளன.

பத்தோடு பதினொன்று அத்தோடு நாமும் ஒன்று எனும் போக்கில் செம்மரி ஆட்டுக்கூட்டம் போல் ஒன்று சாய்கின்ற திக்கிலேயே மற்றதும் சாய்வது போல் கண்மூடித்தனமாக உலக மக்களில் பெரும்பாலோர் செய்யும் அற்பப் பொருள் தேடும் தவற்றை விடுத்து மெய்ஞ்ஞானம் பெற விழைவோர் முதற்கண் கடைபிடிக்க வேண்டியது இறைபக்தியே. இறையென்பது இதுவே என்று மதங்கள் வரையரை செய்வது போல் இறையைத் தேட வேண்டியதில்லை. இறை சக்தி இருப்பதையும் அதனால் நாம் கட்டுண்டு இயங்குவதையும் உணர்ந்து அதன்படி நடந்தாலே போதுமானது. நம்மை இயக்கும் எல்லாம் வல்ல இறைசக்தி நம்மை நிச்சயம் கரை சேர்க்கும் எனும் நம்பிக்கையுடன் தன்னையறியும் முயற்சியில் ஈடுபட்டால் ஞானம் பெறலாம்.


தஞ்சை டி.என். ராமையா தாஸ்
குரல்: சீர்காழி கோவிந்தராஜன்

பலே பலே பலே தேவா 
பாரோரறியாருன் மாயா 
பலே பலே பலே தேவா 
பாரோரறியாருன் மாயா இந்தப்
பாரோரறியாருன் மாயா

ஒருவரின் சோகம் ஒருவரின் யோகம்
சர்வமும் உணர்ந்திடும் உனக்குப் பின் மோகம்
அடியார் யாரோ? அறியார் யாரோ?
அடியார் யாரோ? அறியார் யாரோ?
அதையே விதியும் அறியாதையா

பாரோரறியாருன் மாயா

உலகினில் சுகதுக்க ஊஞ்சலிலே தினம்
உனது மாயை விளையாடுதையா
உண்மையில் உன்தன் மாயா லீலையே
உண்மையில் உன்தன் மாயா லீலையே
உணர்ந்தவன் தானே தன்யனையா

பாரோரறியாருன் மாயா

பலே பலே பலே தேவா 
பாரோரறியாருன் மாயா இந்தப்
பாரோரறியாருன் மாயா

செவ்வாய், 16 பிப்ரவரி, 2016

சின்னத் தாயவள் தந்த ராசாவே!

தினம் ஒரு பாடல் - நவம்பர் 29, 2015

பெண்களை தெய்வமாகப் போற்றி வணங்கிக் கொண்டாடி மகிழும் பாரம்பரியம் மிக்க பண்பாடுடைய நாடு பாரத நாடு. பாரத மக்கள் குடும்ப வாழ்க்கையை ஸ்வர்க்கமாகக் கருதுகின்றனர். குடும்ப வாழ்க்கையை முறையாகத் தம் பிள்ளைகளுக்கு அமைத்துக் கொடுப்பதே பெற்றோரது தலையாய கடமையாக அமைந்த கலாச்சாரம் இந்தியக் கலாச்சாரம். திருமணத்தில் தொடங்கி வாழ்நாள் உள்ளவரை கணவன் மனைவி பந்தம் ஏனைய உறவுகளைக் காட்டிலும் இன்றியமையாததும் மேலானதுமாகப் போற்றி வந்த நம் முன்னோர் அப்பண்பை நம் அனைவருக்கும் இளமையிலிருந்தே ஊட்டி வளர்த்துள்ளனர். 

அத்தகைய சிறப்பு மிக்க பாரத நாடு இன்று எந்த நிலையில் உள்ளது என்று எண்ணிப் பார்க்கையில் மனது பொறுக்க மாட்டேன் என்கிறது. பெண்கள் நாள் தோறும் பல விதங்களில் அனைவர் முன்னிலையிலும் அவமதிக்கப் படுவதும், ஒழுக்கம் கெட்ட பல குற்றவாளிகளால் கற்பழிக்கப் படுவதும், கொல்லப் படுவதும் சாதாரண நிகழ்வுகளாகி விட்டன. இத்தகைய சீர்கேடுகளைத் தடுத்துப் பெண்களின் நலனைக் காக்கும் கடமையை அரசாங்கமும் அரசு நிர்வாகத்தில் இயங்கும் காவல் துறை, புலனாய்வுத் துறை மற்றும் நீதித் துறை தங்களது கடமையை முறையாக செய்கின்றனரா என்பது பெரும் கேள்விக்குறியாகி விட்டது நமது நாட்டில் இன்றைய சீர்கேடான அரசியல் சூழ்நிலையால். பெண்களுக்கெதிராக இழைக்கப்படும் குற்றங்களை விசாரிக்க சிறப்பு நீதிமன்றங்கள் பெயரளவில் இருந்த போதிலும் அவை விரைவில் குற்றவாளிகளுக்கு உரிய தண்டனை வழங்குவதில் தவறுகின்றன. நீதி பெற அளவுக்கதிகமான தாமதம் ஏற்படுவதுடன் குற்றவாளிகள் சாட்சிகளை அழித்துவிட்டு தண்டனையிலிருந்து தப்பிக்கவும் ஏதுவாகிறது. 

இவையன்றி மேலும் பல சந்தர்ப்பங்களில் அப்பாவிப் பெண்கள் சில ஆண்களால் ஆசை காட்டி ஏமாற்றப்பட்டு மும்பை, கல்கத்தா, டெல்லி போன்ற நகரங்களுக்குக் கடத்தப்பட்டு விபச்சாரத்தில் ஈடுபடுத்தப் படும் மகா கொடுமைகளும் நம் நாட்டில் தினந்தோறும் நடைபெற்று வந்த போதிலும் இக்குற்றங்களை வெளிச்சம் போட்டு சமூக விழிப்புணர்ச்சியை ஏற்படுத்தும் கடமையைச் செய்ய வேண்டிய தொலைக் காட்சி மற்றும் இதர செய்தி ஊடகங்கள் அவ்வாறான தம் கடமைகளைப் புறக்கணித்து ஊழல் அரசியல்வாதிகள் மற்றும் பணம் படைத்தோர் தரும் பெரும் பணத்துக்காகவும் இதர பல சலுகைகளுக்காகவும் தேவையற்ற செய்திகள் பலவற்றை வெளியிட்டு மக்களிடையே குழப்பம் விளைவிக்கும் துர்ச் செயலை மிகுதியாகச் செய்து வருவது வேதனையளிக்கிறது.

பெண்கள் மேல் நடத்தப் படும் பாலியல் கொடுமைகளுக்குப் பெரிதும் துணை போவது போதை மருந்துகள் ஆகும். பாலுணர்ச்சியைத் தூண்டும் போதை மருந்துகள் பல நகரங்களில் பகிரங்கமாக விற்கப்படுகின்றன என்பது நாடறிந்த உண்மை. இருந்த போதிலும் அரசும் காவல் துறையும் இப்போதை மருந்து விற்பனையையும் அதனைத் தொடர்ந்து பெண்களுக்கெதிராக இழைக்கப் படும் கொடுமைகளையும் கண்டு கொள்ளாமல் குற்றவாளிகள் தரும் கையூட்டைப் பெற்றுக்கொண்டு வாளாவிருப்பதும் அனைவரும் அறிந்ததே.

பெண்களுக்கு உரிய மரியாதை தருவது மக்கள் அனைவரின் கடமையாகும். பெண்களை அவமதிப்போர் யாராயினும் அவரைத் தட்டிக் கேட்கும் உரிமை அனைவருக்கும் உண்டு. குற்றச்செயல்களை மக்களுக்கு உரிய முறையில் தகுந்த நேரத்தில் சரியான தகவல் ஆதாரங்களுடன் எடுத்துச் சொல்லும் கடமையைச் செய்யும் ஊடகங்கள் பல நம் நாட்டில் உருவாக வேண்டும். பணத்திற்காக ஊடகத்தை விபச்சாரத்திற்கொப்பானதொரு நிலையில் வைத்திருக்கும் பாதகர்கள் அழிந்தொழிய வேண்டும். மக்கள் கவனததைக் குற்றச் செய்திகளிலிருந்து திசை திருப்பும் ஏமாற்று ஊடகங்களை மக்கள் புறக்கணிக்க வேண்டும். அரசியல்வாதிகளின் செய்தி நிறுவனங்களாகப் பல ஊடகங்கள் பொய்ப் பிரச்சாரத்தில் ஈடுபடுகின்றன. இக்கொடுமையும் தடுக்கப்பட வேண்டும்.

இளம் வயதில் அறியாப் பருவத்தில் எவனோ ஒருவனால் ஏமாற்றப்பட்ட ஒரு பெண் குழந்தை பெறுகிறாள். பெற்ற பிள்ளையை சமுதாயத்தின் கொடுமைகளுக்கஞ்சி ஒரு இரயில் வண்டியின் சரக்குப் பெட்டகத்தில் வைத்து அனுப்பி விடுகிறாள். தாயில்லாமல் வளரும் அப்பிள்ளை ஒரு குற்றவாளியாக வளர்கிறான். அதன் பின்னர் ஒரு நாள் யதேச்சையாகத் தன் தாயைக் காண்கிறான். தாயும் அவனும் ஒன்று சேர்வதைப் பல கட்டக் கதையாகப் படமாக்கி ரசிகப் பெருமக்களை பிரமிக்க வைத்த திரைப்படம் தளபதி. அந்தத் தாயின் தவிப்பை வெளிப்படுத்தும் வகையில் அமைந்த அப்படத்தின் பாடல் ஒன்று இன்றைய பாடலாக மலர்கிறது.


திரைப்படம்: தளபதி
இயற்றியவர்: கவிஞர் வாலி
இசை: இளையராஜா
பாடியோர்: எஸ். ஜானகி

சின்னத் தாயவள் தந்த ராசாவே!
முள்ளில் தோன்றிய சின்ன ரோசாவே!

சொல்லவா ஆராரோ?
நம் சொந்தங்கள் யாராரோ?
உந்தன் கண்ணில் ஏன் தான் நீரோ?

சின்னத் தாயவள் தந்த ராசாவே!
முள்ளில் தோன்றிய சின்ன ரோசாவே!

பால் மணம் வீசும் பூமுகம்
பார்க்கையில் பொங்கும் தாய் மனம்
ஆயிரம் காலம் ஊர்வலம்
வேண்டிட வந்த பூச்சரம்
வெய்யில் வீதியில் வாடக் கூடுமோ?
தெய்வக் கோயிலை சென்று சேருமோ?
எந்தன் தேனாறே!

சின்னத் தாயவள் தந்த ராசாவே!
முள்ளில் தோன்றிய சின்ன ரோசாவே!

சின்னத் தாயவள் தந்த ராசாவே!
முள்ளில் தோன்றிய சின்ன ரோசாவே!

சொல்லவா ஆராரோ?
நம் சொந்தங்கள் யாராரோ?
உந்தன் கண்ணில் ஏன் தான் நீரோ?

சின்னத் தாயவள் தந்த ராசாவே!
முள்ளில் தோன்றிய சின்ன ரோசாவே!

தாயழுதாளே நீ வர
நீ அழுதாயே தாய் வர
தேய்பிறை காணும் வெண்ணிலா
தேய்வது உண்டோ என் நிலா
உன்னை நான் தான்
நெஞ்சில் வாங்கிட
மெத்தை போலுன்னை மெல்லத் தாங்கிட
விழி மூடாதோ

சின்னத் தாயவள் தந்த ராசாவே!
முள்ளிள் தோன்றிய சின்ன ரோசாவே!

சின்னத் தாயவள் தந்த ராசாவே!
முள்ளிள் தோன்றிய சின்ன ரோசாவே!

சொல்லவா ஆராரோ?
நம் சொந்தங்கள் யாராரோ?
உந்தன் கண்ணில் ஏன் தான் நீரோ?

சின்னத் தாயவள் தந்த ராசாவே!
முள்ளில் தோன்றிய சின்ன ரோசாவே!