வியாழன், 18 செப்டம்பர், 2014

நிலவோடு வான்முகில் விளையாடுதே

தினம் ஒரு பாடல்: ஜூன் 23, 2014

இயற்கையில் எவ்வுயிரும் தனித்தியங்குவதில்லை, இயங்கவும் இயலாது. ஓருயிர் மற்றோருயிரைச் சார்ந்தே இயங்குகின்றது. ஓருயிர் மற்றோருயிரை உணவாக உட்கொள்கிறது. அவ்வுணவைப் பிரிதோருயிருடன் பகிர்ந்து உண்கிறது. அது போலவே ஐம்புலன்களாலும் ஓருயிர் அனுபவிக்கும் சுகங்கள், துயர்கள் அனைத்தும் பிற உயிர்களுடன் சேர்ந்தே அனுபவிப்பது சாத்தியமாகும். புலன்களுக்கப்பால் அப்புலன்களை இயக்கக்கூடிய மனம் சார்ந்த இன்ப துன்பங்களையும் பிற உயிர்களுடன் கலந்து கூடியே அனுபவிக்கலாகும். தனக்காக மட்டும் எவரும் வாழ்தல் சாத்தியமன்று. அனைவரும் வெறுத்தொதுக்கத்தக்க குற்றவாளிகளுக்கும் பிரியமானவர்கள் உலகத்தில் 
இருந்தே தீருவர். இது உலக நியதி.

இந்நியதிப்படியே ஒரு ஆணும் ஒரு பெண்ணும் ஒருவர் மேல் ஒருவர் கொள்ளும் காதலும் நிலைபெறுகிறது.ஒருவரது துணையை மற்றவர் மனம் நாடுகின்றது. தன் துணைவர் அருகில் இல்லாத நேரங்களில் மனம் மிகவும் அல்லல் படுகின்றது, படுத்துகின்றது. இயற்கையில் இவ்வுலகின் ஒப்பற்ற அழகுக்கு சிகரம் வைத்தாற் போன்று விளங்கும் வெண்ணிலாவுடன் விண்ணிற் பரவிப் பரந்து, பிரிந்தொன்று சேர்ந்து பல விதமாய்த் தோற்றமளிக்கும் மேகம் விளையாடுகின்ற விளையாட்டு கண்களுக்கும் மனதுக்கும் மிக இனிதாகத் தோன்றுகின்றது. நிலாவை சில காலம் மறைத்தும், சில காலம் வெளியே காண்பித்தும் என அம்மேகம் விளையாடும் கண்ணாமூச்சி ஒருவரைத் தன் காதல் துணையின் பால் நாட்டம் கொள்ளச் செய்வதில் வியப்பேதுமில்லையன்றோ?


திரைப்படம்: ராஜ ராஜன்
இயற்றியவர்: கு.ச. கிருஷ்ணமூர்த்தி
இசை: கே.வி. மஹாதேவன்
பாடியோர்: சீர்காழி கோவிந்தராஜன், ஏ.பி. கோமளா

நிலவோடு வான்முகில் விளையாடுதே - அந்த
 நிலை கண்டு எனதுள்ளம் துணை தேடுதே
 நிலவோடு வான்முகில் விளையாடுதே - அந்த
 நிலை கண்டு எனதுள்ளம் துணை தேடுதே
 நிலவோடு வான்முகில் விளையாடுதே 

எழில் மேவும் கண்கள் என் மேல் வலை வீசுதே
 எழில் மேவும் கண்கள் என் மேல் வலை வீசுதே
 இனிதாகவே இன்பக் கதை பேசுதே
 இனிதாகவே இன்பக் கதை பேசுதே 

நிலவோடு வான்முகில் விளையாடுதே - அந்த
 நிலை கண்டு எனதுள்ளம் துணை தேடுதே
 நிலவோடு வான்முகில் விளையாடுதே 

புதுப் பாதை தனைக் காண மனம் நாடுதே - உண்மை
 புரியாமல் வெட்கம் வந்து திரை போடுதே
 புதுப் பாதை தனைக் காண மனம் நாடுதே - உண்மை
 புரியாமல் வெட்கம் வந்து திரை போடுதே

 மதுவுண்ண மகிழ்வோடு வரும் காதல் வண்டின்
 மனம் நோக மலரே உன் இதழ் மூடுமா?
மதுவுண்ண மகிழ்வோடு வரும் காதல் வண்டின்
 மனம் நோக மலரே உன் இதழ் மூடுமா? 

இதயம் ஒன்றாகி உறவாடுவோம்
 எந்நாளும் பிரியாத நிலை காணுவோம்
 இதயம் ஒன்றாகி உறவாடுவோம்
 எந்நாளும் பிரியாத நிலை காணுவோம் - ஓ 

நிலவோடு வான்முகில் விளையாடுதே - அந்த
 நிலை கண்டு எனதுள்ளம் துணை தேடுதே
 நிலவோடு வான்முகில் விளையாடுதே 

போனால் போகட்டும் போடா

தினம் ஒரு பாடல் - ஜூன் 11, 2014

அடக்கம் அமரருள் உய்க்கும் அடங்காமை
ஆரிருள் உய்த்து விடும்.

அடக்கம் என்பது அடங்கியிருத்தல். ஐம்புலன்களின் ஆசைகளைக் கட்டுப்படுத்தித் தன்னை அடக்கி வாழ்தல், தன் தாய் தந்தையருக்கு அடங்கி அவருக்குப் பணிவிடைகள் செய்து பணிந்து வாழ்தல், வித்தையைக் கற்றுத் தரும் குருவுக்கு மரியாதை செய்து அவர் சொற்படி நடந்து அவர் மாணவன் எனும் பெயர் விளங்க வாழ்தல், தம்மிலும் வலிமையுள்ளோருடன் பலம் தெரியாமல் மோதலில் இறங்காமல் அடங்கியிருத்தல். தம் நண்பரோடும், உற்றார், உறவினர் மற்றும் சமுதாயத்துடன் அடங்கியிருத்தல் என்று பல விதமாகப் பொருள் தரும் என்றாலும் அவற்றுள் கடைபிடிக்கத் தக்கவை எவை, தகாதவை எவையென அறிவினால் அறிந்து அதன்படி நடத்தலே சிறந்தது. 

நம் கண்முன்னர் வேறொருவருக்கு எவரேனும் தீங்கிழைத்தால் அதனைக் கண்டும் காணாமல் போவதால் குற்றவாளிகளுக்கு சட்டத்தின் மீதும் தர்மத்தின் மீதும் பயமில்லாமல் மென்மேலும் பெரிய குற்றங்களைத் துணிந்து செய்து சமுதாயத்துக்குத் தொடர்ந்து தீங்கு விளைவிக்கின்றனர். அத்தகைய குற்றவாளிகளை சட்டப்படி தண்டிக்க உதவுவதும் பாதிக்கப்படுவோருக்குத் துணை நிற்பதும் நம் ஒவ்வொருவரது கடமைகளாகும். அதனை மஹாகவி பாரதி தன் பாப்பாப் பாடலில்,

பாதகம் செய்பவரைக் கண்டால் சற்றும்
பயங்கொள்ளலாகாது பாப்பா
மோதி மிதித்துவிடு பாப்பா - அவர்
முகத்தில் உமிழ்ந்து விடு பாப்பா!

என்று குழந்தைகளுக்கு அறிவுறுத்துவது போல் நம் அனைவருக்கும் அறிவுறுத்துகிறார்.

மனிதராகப் பிறந்த ஒவ்வொருவரும் அடைய வேண்டியது மோட்சம் எனும் உயர்ந்த நிலையேயல்லாது பெரும் செல்வமும் சுகபோகமும் அல்ல. இவ்வுலகில் நாம் தேடியுழைத்து ஈட்டும் பொருட்கள் யாவும் அழியும் தன்மை உடையன. நாமும் அழியும் தன்மையுடையவர்களே. எனவே பொன்னும், பொருளும், பெண்ணும் பிற சுகமும் தேடுவதை விடுத்து ஞானம் பெற முயல்வதே மானிடப் பிறவியெடுத்ததன் முதற்கடமை. அல்ல, எனக்கு ஞானம் வேண்டாம், இவ்வுலக சுகமே முக்கியம் என்போர் மீண்டும் மீண்டும் பிறந்து அல்லல் படுவதுறுதி.

அடக்கத்துடன் வாழ்ந்து வரும் ஞானியர் பலர் நம்மிடையே இருக்கையிலும் அவர்களை நாம் அடையாளம் காண முடியாமல் அஞ்ஞான இருள் மறைக்கிறது. ஞானியரை அடையாளம் காண நமக்கும் ஞானம் சிறிது வேண்டும். அத்தகைய ஞான மார்க்கத்தை விடுத்து ஒருவர் அடங்கிப் போகிறார் என்பதால் அவர் அறிவில் குறைந்தவர் என எண்ணி அவரை ஒடுக்கி நம் சக்தியை வெளிப்படுத்த எண்ணுவது மடமையிலும் மடமையே.

அடக்கம் உடையார் அறிவிலர் என்றெண்ணிக்
கடக்கக் கருதவும் வேண்டாம் மடைத்தலையில்
ஓடுமீன் ஓட உறுமீன் வருமளவும்
வாடி யிருக்குமாம் கொக்கு.

ஞானம் என்பதும் முக்தியென்பதும் மனிதப் பிறவியில் ஒருவர் எய்தக்கூடிய பெரும் பேறுகள் ஆகும். அந்தப் பேறுகளைப் பெற உலக நன்மைக்காக உழைத்து வாழ வேண்டும். லட்சியத்தைக் கைவிடாமல் எந்த நஷ்டம் வந்தாலும் அதனால் மனம் சோர்ந்து விடாமல் தொடர்ந்து பிறருக்காக சேவை செய்து வாழ வேண்டும். அப்படி சமுதாய நன்மைக்காகவே வாழும் ஒரு மருத்துவர் தன்னுடன் பணி செய்யும் செவிலியைத் திருமணம் செய்து கொள்கிறார். இடையில் மனைவிக்கு உடல்நலம் குன்றி அவள் படுத்த படுக்கையாகிறாள். அதனால் மருத்துவர் தன்னை நம்பியிருக்கும் பிற நோயாளிகளைக் கவனியாமல் தன் மனைவி மேல் மட்டுமே கவனம் செலுத்தவும் 
அவர் மனைவி தான் உடனிருக்கும் வரை தன் கணவன் தன் கடமையை சரிவர் நிறைவேற்ற மாட்டார் என்று எண்ணி அவரை விட்டுப் பிரிந்து சென்று விடுகிறாள். போகுமுன் அவருக்கு ஒரு கடிதம் எழுதி வைத்து விட்டுப் போகிறாள். அக்கடிதத்தைப் படித்த மருத்துவர் சோகத்துடன் பாடுவதாக அமைந்த ஒரு தத்துவப்பாடல் இதோ:



திரைப்படம்: பாலும் பழமும்
இயற்றியவர்: கவிஞர் கண்ணதாசன்
இசை: எம்.எஸ். விஸ்வநாதன். டி.கே. ராமமூர்த்தி
பாடியோர்: டி.எம். சௌந்தரராஜன், எம்.எஸ். விஸ்வநாதன்

ஓஹொஹோ ஓஹோ ஹோ ஹொஹொஹோஓஓஓ

போனால் போகட்டும் போடா
போனால் போகட்டும் போடா - இந்த
பூமியில் நிலையாய் வாழ்ந்தவர் யாரடா?
போனால் போகட்டும் போடா - இந்த
பூமியில் நிலையாய் வாழ்ந்தவர் யாரடா?
போனால் போகட்டும் போடா.

ஓஹொஹோ ஓஹோஹோ ஹோஓஓஓ 
ஓஹோஹோஓஓஓ ஓஓஓஓஓஓஓ ஓஓஓ ஓஓஓஓஓஓஓ

வந்தது தெரியும் போவது எங்கே?
வாசல் நமக்கே தெரியாது
வந்தவர் எல்லாம் தங்கிவிட்டால் இந்த
மண்ணில் நமக்கே இடமேது?
வாழ்க்கை என்பது வியாபாரம் - வரும்
ஜனனம் என்பது வரவாகும் - அதில்
மரணம் என்பது செலவாகும்.

போனால் போகட்டும் போடா ஆஆஆ
போனால் போகட்டும் போடா
போனால் போகட்டும் போடா
போனால் போகட்டும் போடா.

இரவல் தந்தவன் கேட்கின்றான் - அதை
இல்லையென்றால் அவன் விடுவானா?
உறவைச் சொல்லி அழுவதனாலே
உயிரை மீண்டும் தருவானா?
கூக்குரலாலே கிடைக்காது - இது
கோட்டைக்குப் போனால் ஜெயிக்காது - அந்தக்
கோட்டையில் நுழைந்தால் திரும்பாது.

போனால் போகட்டும் போடா ஆஆஆ
போனால் போகட்டும் போடா - இந்த
பூமியில் நிலையாய் வாழ்ந்தவர் யாரடா?
போனால் போகட்டும் போடா.

ஓஹொஹோ ஹோஹோஹோ ஹோஓஓஓ 
ஓஹோஹோஓஓஓ ஓஓஓஓஓஓஓ ஓஓஓ ஓஓஓஓஓஓஓ

எலும்புக்கும் சதைக்கும் மருத்துவம் கண்டேன்
இதற்கொரு மருந்தைக் கண்டேனா?
இருந்தால் அவளைத் தன்னந்தனியே
எரியும் நெருப்பில் விடுவேனா?
நமக்கும் மேலே ஒருவனடா - அவன்
நாலும் தெரிந்த தலைவனடா - தினம்
நாடகமாடும் கலைஞனடா.

போனால் போகட்டும் போடா ஆஆஆ
போனால் போகட்டும் போடா - இந்த
பூமியில் நிலையாய் வாழ்ந்தவர் யாரடா?
போனால் போகட்டும் போடா
போனால் போகட்டும் போடா
போனால் போகட்டும் போடா.

ஓஹொஹோ ஹோஹோஹோ ஹோஓஓஓஓஹோஓ