வெள்ளி, 22 ஜூலை, 2011

இறைவனிடம் கையேந்துங்கள்

பிற அனைத்து உயிரினங்களினும் மேலான அறிவுள்ளவனாகக் கருதப்படும் மனிதன் உண்மையில் அத்தகைய கருத்துக்கு அருகதையுள்ளவனா என்பது சிந்திக்கத் தக்கதே. இயற்கையின் ரகசியங்களை ஆராய்ந்தறிந்த மனிதன் அதனால் ஏற்பட்ட விஞ்ஞான முன்னேற்றத்தின் துணையுடன் செயற்கைக் கோள்கள் முதல் பல அற்புதமான சாதனங்களையும் படைத்ததனால் செருக்கடைந்து தன்னை இறைவனுக்கு நிகராக எண்ணிக்கொண்டு மனிதத் தன்மையை மறந்தான். பிறரிடம் அன்பு செலுத்துவதன் அவசியத்தை உணரத் தவறிவிட்டான். தன் வாழ்நாள் வெகு சில காலமே எனும் உண்மையை அறிந்தும் அறியாத மயக்க நிலையிலேயே ஆயுள் முழுமையும் கழித்து தான் சேர்த்த செல்வங்களைத் தானும் முழுமையாக அனுபவியாமல் பிறரது துயர் துடைக்கவும் உதவாமல் மடிந்த பின்னரும் பிறர் துன்பப்படக் காரணமாகிறான்.

இததகைய சிற்றறிவாளரான மனிதர்களுள் பிறரை விட ஏதேனும் ஓர் வகையில் அனுகூலமான நிலைமையில் உள்ளவன் அவ்வனுகூலத்தைத் தனக்கு சாதகமாகப் பயன்படுத்தித் தான் மட்டும் வாழ்வில் உயர முயல்கிறான். அத்தகைய அனுகூலத்தைப் பெறாதவன் பலவீன்மடைந்து வாழ்வின் அடிப்படைத் தேவைகளையும் பூர்த்தி செய்ய வகையின்றி வருந்துகிறான். அவ்வருத்தத்தில் தன்னை விட மேலான நிலைமையிலுள்ளவனைக் கண்டு பொறாமை கொண்டு மன நிம்மதியையும் இழக்கிறான்.

இத்தகைய ஏற்றத் தாழ்வு கருதும் மனப்பான்மையுள்ள மாந்தர்கள் துன்பங்களிலிருந்து என்றும் விடுதலை பெற மாட்டார்கள். உலக வாழ்வில் இரவும் பகலும் மாறி மாறி வருவதைப் போலவே பிறப்பும் இறப்பும் இன்பமும் துன்பமும் மாறி மாறி வருபவையே. இந்த ரகசியத்தை உணர்ந்தவனே அறிவாளி. அத்தகைய அறிவாளிகளும் இதே சமுதாயத்தில் நம் கண்முன்னரே வாழ்ந்து வருகிறார்கள் என்பதை நாம் அறிந்து நாமும் அவர்கள் போல அறிவாளிகளாகி வாழ்வில் விதிவசமாக நேரும் துன்பங்களைத் தாங்கப் பழகிக் கொள்வோமெனில் வாழ்வில் என்றும் இன்பம் நிலவ வழி ஏற்படும்.

நமக்கொரு துன்பம் நேருகையில் அதிலிருந்து விடுபட நாம் சாதாரணமாக சக மனிதர்களின் உதவியை நாடுகிறோம். சக மனிதர்கள் உதவாவிடில் மனமொடிந்து நம்மை நாமே கடிந்து கொண்டு துன்பத்திலேயே உழல்கிறோம். வாழ்வில் நேரக்கூடிய அனைத்துத் துன்பங்களிலிருந்து விடுபடும் சக்தி நமக்குள்ளேயும் உண்டு என்பதும் மேலும் இயற்கையின் துணையும் நமக்கு என்றும் உள்ளதென்பதும் சற்றே சிந்தித்தோமெனில் நமக்கு விளங்கும். அத்தகைய அறிவுத் தெளிவு பெற மிகவும் இன்றியமையாதது இறையுணர்வாகும். இறையுணர்வு கொண்டவர் ஆணவமகன்று என்றும் எங்கும் நிறைந்திருக்கும் இறைவனை உணர்வால் உணர்ந்து அறிவால் அறிந்து அவனருளை நாளும் வேண்டிப் பெற்று இன்ப வாழ்வு வாழ்வது திண்ணம்.

வையகத்துக்கில்லை மனமேயுனக்கு நலஞ்
செய்யக் கருதியிது செப்புவேன் பொய்யில்லை
எல்லாமளிக்கும் இறை நமையுங் காக்குமெனும்
சொல்லா லழியுந் துய்ர்

இறைவனிடம் கையேந்துங்கள்

இயற்றியவர்: ஆர். அப்துல் சலாம்
பாடியவர்: நாகூர் ஈ.எம். ஹனீபா

இறைவனிடம் கையேந்துங்கள் அவன்
இல்லையென்று சொல்லுவதில்லை
பொறுமையுடன் கேட்டுப்பாருங்கள் அவன்
பொக்கிஷத்தை மூடுவதில்லை
இறைவனிடம் கையேந்துங்கள் அவன்
இல்லையென்று சொல்லுவதில்லை

இல்லையென்று சொல்லும் மனம் இல்லாதவன்
ஈடு இணையில்லாத கருணையுள்ளவன்
இன்னல்பட்டு எழும் குரலைக் கேட்கின்றவன்
எண்ணங்களை இதயங்களைப் பார்க்கின்றவன்

இறைவனிடம் கையேந்துங்கள் அவன்
இல்லையென்று சொல்லுவதில்லை

ஆசையுடன் கேட்பவர்க்கு அள்ளித்தருபவன்
அல்லல் துன்பம் துயரங்களைக் கிள்ளியெறிபவன்
பாசத்தோடு யாவரையும் பார்க்கின்றவன்
பாவங்களைப் பார்வையினால் மாய்க்கின்றவன்
அல்லல்படும் மாந்தர்களே அயராதீர்கள்
அல்லாவின் பேரருளை நம்பி நில்லுங்கள்
அவனிடத்தில் குறையனைத்தும் சொல்லிக்காட்டுங்கள்
அன்பு நோக்குத் தருகவென்று அழுது கேளுங்கள்

இறைவனிடம் கையேந்துங்கள் அவன்
இல்லையென்று சொல்லுவதில்லை

தேடும் நேயர் நெஞ்சங்களில் குடியிருப்பவன்
தேடாத மனிதருக்கும் உணவளிப்பவன்
வாடும் இதயம் மலர்வதற்கு வழிவகுப்பவன்
வாஞ்சையோடு யாவருக்கும் துணை நிற்பவன்
அலைமுழங்கும் கடல்படைத்து அழகுபார்ப்பவன்
அலையின் மீதும் மலையின் மீதும் ஆட்சி செய்பவன்
தலைவணங்கிக் கேட்பவர்க்குத் தந்து மகிழ்பவன்
தரணியெங்கும் நிறைந்து நிற்கும் மகா வல்லவன்

இறைவனிடம் கையேந்துங்கள் அவன்
இல்லையென்று சொல்லுவதில்லை

ராஜா என்பார் மந்திரி என்பார்

உலகில் ஒவ்வொரு ஜீவராசியும் வாழ உறவுகள் மிகவும் இன்றியமையாதவையாகும். தனக்கென உறவுகள் யாரும் இல்லாத ஒரு மனிதரோ மற்ற உயிரினங்களோ வாழ்வில் விருப்பமின்றி விரக்தியுற்று வாழ்வதை விட சாவதே மேல் என எண்ணும் மனோநிலைக்குத் தள்ளப்படுதல் இயற்கை. ஒருவர் தனக்கு மிகவும் பிர்ய்மான ஒரு உறவினரை விதிவசத்தால் இழக்கையிலும் இத்தகைய விரக்தி மனப்பான்மை உருவாகக்கூடும், ஆனால் அந்த சமயத்தில் தன்னை விட்டுப் பிரிந்த உறவினரைத் தவிர ஏனைய உறவுகளில் பற்று வைத்திருப்பின் இத்தகைய விரக்தி நிலை மாறி வாழ்வில் மீண்டும் ஈடுபாடு ஏற்படலாகும்.

இவ்வுண்மையை விளக்கும் ஒரு ஆங்கிலக் கவிதை உள்ளது. அது ஆல்ஃப்ரட் லார்ட் டென்னிசன் எனும் ஆங்கிலக் கவிஞர் எழுதியது. அக்கவிதை போர்க்களத்தில் உயிரிழந்த ஒரு வீரனின் உடல் அவனது வீட்டில் கொண்டு வைக்கப்படுகையில் அவனது மனைவி உறும் துயரையும் துயரிலிருந்து அவள் மீள்வது குறித்த சம்பவத்தையும் விவரிப்பதாக அமைந்துள்ளது.

கணவனின் உயிரற்ற உடலை அவர்கள் வீட்டுக்குக் கொண்டு வந்தனர். அவள் அதனைக் கண்டு மயங்கவில்லை புலம்பவுமில்லை, மாறாக துக்கத்தால் செயலிழந்த நிலையில் ஸ்தம்பித்துப் போயிருந்தாள். அத்தருணத்தில் அங்கே அவளது உதவிக்காக உடனிருந்த பெண்கள் அவள் அழ வேண்டும், இல்லாவிடில் அவள் அதிர்ச்சியிலே இறந்து விடுவாள் எனக்கூறி அவளுக்கு அழுகையை வரவழைக்கும் முயற்சியாக அவளது கணவனைப் புகழ்ந்து பேசினர். அவனது அருமை பெருமைகளை நினைவுகூர்ந்தனர். அவன் அனைவராலும் விரும்பப்பட்டவன் என்றும் நம்பிக்கைக்குரியவன் என்றும் போற்றினர். இருப்பினும் அவள் பேசவில்லை அசையவுமில்லை. அப்போது வேறொரு பெண் தன் இடத்திலிருந்து எழுந்து வந்து அவனது முகத்தை மறைத்திருந்த துணியை அகற்றினாள். ஆனாலும் அவள் அசையவில்லை அழவுமில்லை. அப்போது தொண்ணூறு வயதான மூதாட்டி ஒருத்தி எழுந்து வந்து அப்பெண்ணின் குழந்தையை எடுத்து அவளது முழங்காலின் மீது வைக்கவும் கோடைக் காலத்தில் வரும் புய்லுக்கொப்பாக அவளது கண்களில் கண்ணீர் பெருகியது, "ஓ என் செல்வமே உனக்காகவே நான் வாழ்கிறேனடா!" என்று அக்குழந்தையை அணைத்தபடி கதறியழுது தன் துயரத்தை வெளிக்கொணர்ந்தாள்.

அந்த ஆங்கிலக் கவிதை வரிகளாவன:

Home they brought her warrior dead:
She nor swooned, nor uttered cry:
All her maidens, watching, said,
'She must weep or she will die.'
Then they praised him, soft and low,
Called him worthy to be loved,
Truest friend and noblest foe;
Yet she neither spoke nor moved.

Stole a maiden from her place,
Lightly to the warrior stepped,
Took the face-cloth from the face;
Yet she neither moved nor wept.

Rose a nurse of ninety years,
Set his child upon her knee--
Like summer tempest came her tears--
'Sweet my child, I live for thee.'

Alfred Lord Tennyson

உறவுகளின் மீது பற்றுள்ள வரையிலேயே ஒருவனுக்கு உலக வாழ்க்கை பிடிக்கும். உறவுகளை அவன் வெறுக்கும் நிலை ஏற்படுகையில் உலக வாழ்வினை அவன் வெறுப்பான். இதுவே இயற்கை நியதி. உலகில் வாழ்வதற்கு நம் அனைவருக்கும் முதற்கண் உறவுகள் அவசியம். உறவுகளே நம் வாழ்நாள் உள்ளவரையிலும் நமக்குத் துணை. செல்வமும் செருக்கும் உறவுகள் தரும் சுகத்தைத் தர மாட்டா. உலகில் ஒருவருக்கு அவரது குடும்பத்தார் மட்டுமே உறவாவதில்லை உலகிலுள்ள மனிதர்கள் மட்டுமன்றிப் பிற உயிர்கள் யாவுமே உறவுகளாகக் கொண்டு வாழ்வோர் பிற யாரையு்ம்விட அதிக மன மகிழ்ச்சியுடன் பேரானந்த வாழ்வு பெறுவதுறுதி. பல சமயங்களில் உடன் பிறந்தோரே ஒருவருக்கு ஜன்மப் பகையாக விளங்குவதும் உண்டு.

சொந்த சகோதரர்கள் துன்பத்தில் சாதல் கண்டும்
சிந்தையிரங்காரடி கிளியே செம்மை மறந்தாரடி

என்று இத்தகைய அன்பில்லாத மனிதர்களைப் பற்றி மஹாகவி பாரதியார் குறிப்பிடுகிறார்.

ஆகவே அனைவரும் நமக்கு உறவு எனக் கொண்டு நாம் வாழ்வோமாகில் அனைவரும் நம்மை உறவென எண்ணி நம்மிடம் மிக்க அன்பைப் பொழிந்து நமக்கு என்றும் துணையாக விளங்குவர். அப்பொழுது வாழ்வில் எத்தகைய துன்பங்கள் நமக்கு வரினும் அவற்றையெல்லாம் தீர்த்து வைக்க நாம் தேடிக்கொண்ட உறவுகள் கை கொடுக்கும்.

ராஜா என்பார் மந்திரி என்பார்

திரைப்படம்: புவனா ஒரு கேள்விக்குறி
இயற்றியவர்: பஞ்சு அருணாசலம்
இசை: இளையராஜா
பாடியோர்: எஸ்.பி. பாலசுப்பிரமணியம், எஸ். ஜானகி

ராஜா என்பார் மந்திரி என்பார் ராஜ்ஜியம் இல்லை ஆள ஒரு
ராணியும் இல்லை வாழ ஒரு உறவுமில்லை அதில் பிரிவுமில்லை
அந்தரத்தில் ஊஞ்சல் ஆடுகிறேன் நாளும்
அந்தரத்தில் ஊஞ்சல் ஆடுகிறேன் நாளும்
ராஜா என்பார் மந்திரி என்பார் ராஜ்ஜியம் இல்லை ஆள ஒரு
ராணியும் இல்லை வாழ

கல்லுக்குள் ஈரம் இல்லை நெஞ்சுக்கும் இரக்கம் இல்லை
ஆசைக்கு வெட்கம் இல்லை அனுபவிக்க யோகம் இல்லை
பைத்தியம் தீர வைத்தியம் இல்லை உலகில் எனக்கு ஒரு வழி இல்லை

ராஜா என்பார் மந்திரி என்பார் ராஜ்ஜியம் இல்லை ஆள ஒரு
ராணியும் இல்லை வாழ

நிலவுக்கு வானம் உண்டு மலருக்கு வாசம் உண்டு
கொடிக்கொரு கிளையும் உண்டு எனக்கென்று என்ன உண்டு?
ஏன் படைத்தானோ இறைவனும் என்னை
மனதில் எனக்கு நிம்மதி இல்லை

ராஜா என்பேன் மந்திரி என்பேன் ராஜ்ஜியம் உனக்கு உண்டு ஒரு
ராஜகுமாரன் உண்டு நல் உறவுமுண்டு அதில் பரிவுமுண்டு
அந்தரத்தில் ஊஞ்சல் ஆடுவதேன் நாளும்?

தெய்வத்தில் உன்னைக் கண்டேன் தினம் தினம் பூஜை செய்தேன்
நிலவுக்குக் களங்கமென்று இடம் விட்டு விலகி நின்றேன்
மயக்கமும் ஏனோ கலக்கமும் ஏனோ? கலக்கமும் ஏனோ?
உலகில் உனக்கும் சரித்திரம் உண்டு

ராஜா என்பேன் மந்திரி என்பேன் ராஜ்ஜியம் உனக்கு உண்டு ஒரு
ராஜகுமாரன் உண்டு நல் உறவுமுண்டு அதில் பரிவுமுண்டு

கடவுள் உள்ளமே ஓர் கருணை இல்லமே

உலகிலுள்ள அனைத்து ஜீவராசிகளையும் விட மேலாகக் கருதப்படுபவன் மனிதன். இதற்குக் காரணம் மனிதனின் பகுத்தறிவும் பிற உயிர்களின் இன்ப துன்பங்களில் பங்கு கொள்ளும் பண்புமேயாகும். இதனாலேயே இறைவனை எல்லோரும் மனித வடிவில் மனதில் வடித்துப் பல்வேறு பெயர்களாலும் வணங்குகிறோம். இயற்கையின் அரிய சக்திகளை ஆராய்ந்தறிந்து அவற்றைக் கொண்டு பல வியக்கத்தக்க சாதனங்களை மனிதன் உருவாக்கியுள்ளதை நாம் நன்கறிவோம். முற்காலத்தில் புராண இதிகாசக் கதைகளில் விண்ணில் பறக்கும் புஷ்பக விமானங்களையும் மாயக் கண்ணாடியையும் பிரம்மாஸ்திரம் போன்ற அதீத சக்தியுள்ள ஆயுதங்களையும் பற்றி குறிப்பிட்டிருக்கக் காண்கிறோம். அத்தகைய சாதனங்கள் கற்பனையாகவே இருந்திருக்கக்க்கூடும் எனினும் அக்கற்பனைகளுக்கு உண்மை வடிவமளித்து இன்று விஞ்ஞான ரீதியில் அவற்றுக்கொப்பான சாதனங்கள் பலவற்றை மனிதன் தொடர்ந்து படைத்து வருவதைக் காண்கிறோம்.

மனிதனின் அறிவு வளர வளர அவனது மனிதத் தன்மை பெருமளவில் குறைந்து வருவதையும் காண்கையில் மனம் பெரிதும் வேதனை கொள்கிறது. தனது பகுத்தறிவைப் பொருளீட்டுவதற்கும் பிறரை விடத் தான் உயர்ந்த நிலையில் வாழ்வதற்கும் உதவும் ஒரு கருவியாகவே பயன்படுத்தப் பழகிய மனிதன் தனது பேராசையால் பிறர் பெரும் அல்லலுறுவதைக் கண்டும் காணாதவன் போல் உண்மையில் ஒரு கொடிய வனவிலங்கினும் கேவலமான மனப்பான்மையுடன் வாழ்வதைக் காண்கையில் மனிதர்கள் யாருமே இல்லாத ஒரு இடத்துக்கு நாம் சென்றால் என்ன எனுமளவுக்கு நல்லோர் பலர் இதயம் துன்புற்று வருந்துகின்றனர்.

நல்லவர்களெல்லோரும் சமுதாயத்தை விட்டகன்று விட்டால் துன்பங்கள் மேலும் பெருகி ஜீவன்கள் வருந்தி மடிவரன்றோ? எனவே அறியாமையால் தீமைகள் செய்வோரைத் திருத்த உரிய முயற்சிகள் மேற்கொண்டு நல்ல எண்ணம் கொண்டவர்களாக அவர்களை மாற்றி சமுதாயத்தை மேம்படுத்த அறிவுள்ளவர்கள் யாவரும் ஒன்று சேர்ந்து பாடுபட்டாலே உலகில் துன்பப்படுவோரது எண்ணிக்கை குறைந்து அமைதி நிலவும். எல்லா மனிதர்களும் நம் உறவு என்று உணர்ந்து வேற்றுமை நீங்கி ஒற்றுமையுணர்வுடன் இருப்பவர் இல்லாதோருக்குக் கொடுத்துதவி இன்னல் தீர்த்து எல்லாரும் எல்லாமும் பெற வேண்டும் எனும் உயர்ந்த எண்ணததை நாம் வளர்த்துக் கொள்ள வேண்டும். குறிப்பாக உடல் ஊனமுற்றவர்களுக்கு நம்மாலான உதவிகளைத் தவறாது செய்தல் வேண்டும்.

ஏழையின் சிரிப்பில் இறைவனைக் காண்போம் என்று ஏட்டில் எழுதிவைத்து விட்டு ஏழ்மை அகலப் பாடுபடாமல் ஏழை மேலும் ஏழையாக, செல்வந்தர்கள் மேலும் பெரும் செல்வந்தர்களாக இடையே நல்லவர் போல் நாடகமாடி சமுதாயத்தை சுரண்டுவோருடன் சேராது உண்மையாய் ஊருக்குழைப்பவர் யாரென்று இனங்கண்டு அத்தகைய நல்லோரைத் துணைக்கொண்டு நன்மையே அனைவருக்கும் விளையப் பாடுபடுவோம். கடவுள் இல்லை என்று சொல்லிக்கொண்டு, பகுத்தறிவாளர்கள் என்று தம்மைப் பறைசாற்றிக்கொண்டு ஆலயங்களின் சொத்துக்களைக் கொள்ளையிட்டு, சாதி வெறியைத் தூண்டிவிட்டு ஊரிரண்டுபட்டால் கூத்தாடிக்குக் கொண்டாட்டம் என்பது போல் நம்முள் சண்டையை மூட்டிவிட்டு நம் அனைவர் கண்களிலும் மண்ணைத் தூவித் தான் மட்டும் லாபமடைபவன் யார் என்றறிந்து அவனை விலக்கி மெய்யன்பர்கள் காட்டிய பாதையில் பயணம் மேற்கொள்வோம் இறையருளை வேண்டிப் பெறுவோம். இப்பிறவிப் பயன் துன்புறும் பிற ஜீவன்களுக்கு உதவுவதே எனும் உண்மையை உணர்ந்து அதன்படி உத்தமர்களாக வாழ்ந்து உன்னத நிலையை எய்துவோம்.

கடவுள் உள்ளமே ஓர் கருணை இல்லமே

திரைப்படம்: அன்புள்ள ரஜினிகாந்த்
இயற்றியவர்: குருவிக்கரம்பை ஷண்முகம்
இசை: இளையராஜா
பாடியோர்: லதா ரஜினிகாந்த்

கடவுள் உள்ளமே ஓர் கருணை இல்லமே
கடவுள் உள்ளமே ஓர் கருணை இல்லமே
அடைக்கலம் கொடுத்தவன் அருளைப் பாடுவோம்
தந்தை இல்லை தாயும் இல்லை
தெய்வம் அன்றி யாரும் இல்லை
தந்தை இல்லை தாயும் இல்லை
தெய்வம் அன்றி யாரும் இல்லை

கடவுள் உள்ளமே ஓர் கருணை இல்லமே

சின்னச் சின்னப் பூக்கள் சிந்திய வேளை
அன்பு என்னும் நூலில் ஆக்கிய மாலை
பாதம் செல்லும் பாதை காட்டிடும்
தலைவா எம் தலைவா
ஊனம் உள்ள பேரைக் காத்திடும்
இறைவா என் இறைவா
ஜீவன் யாவும் ஒன்று இங்கு யாரும் சொந்தமே
ஜீவன் யாவும் ஒன்று இங்கு யாரும் சொந்தமே
இதுதான் இயற்கை தந்த பாச பந்தமே

கடவுள் உள்ளமே ஓர் கருணை இல்லமே
கடவுள் உள்ளமே ஓர் கருணை இல்லமே

கண்ணிழந்த பிள்ளை காணும் உன்னை
கண்ணிருக்கும் பேர்கள் கண்டது இல்லை
ஊருக்கொரு வானம் இல்லையே
இறைவா உன் படைப்பில்
ஆளுக்கொரு ஜாதியில்லையே
அது போல் உயிர் பிறப்பில்
உண்ணும் உணவும் நீரும் தினம் தந்த தெய்வமே
உண்ணும் உணவும் நீரும் தினம் தந்த தெய்வமே
என்றும் உமக்கே நாம் நன்றி சொல்லுவோம்

கடவுள் உள்ளமே ஓர் கருணை இல்லமே
கடவுள் உள்ளமே ஓர் கருணை இல்லமே
அடைக்கலம் கொடுத்தவன் அருளைப் பாடுவோம்
தந்தை இல்லை தாயும் இல்லை
தெய்வம் அன்றி யாரும் இல்லை
கடவுள் உள்ளமே ஓர் கருணை இல்லமே

பொறுமை என்னும் நகையணிந்து

நமது பாரத நாட்டில் குடும்ப வாழ்வின் சிறப்பை மக்கள் அனைவரும் உணர்ந்து அதற்குரிய நெறிமுறைகளைக் கடைபிடித்து வாழ்வதாலேயே பல்வேறு அரசியல் மற்றும் சமூகப் பிரச்சினைகள் எழுந்தபோதும் அனைத்தையும் மீறி நாட்டில் என்றும் அமைதி நிலவி வருகின்றது. குடும்ப வாழ்வின் சிறப்பினை நமக்கெல்லாம் எடுத்துரைத்து அன்றும் இன்றும் என்றும் தொடர்ந்து நம்மை நல்வழிப்படுத்தி வரும் ஆன்றோர் பெருமக்களுள் தலையாயவர் ஔவைப் பிராட்டியாவார். ஔவையார், கம்பர், ஒட்டக்கூத்தர், புகழேந்திப் புலவர், திருவள்ளுவர் முதலானோர் ஓரே காலத்தில் வாழ்ந்ததாக ஒரு கருத்து நிலவுகிறது. அதற்கேற்றாற்போலவே அவர்களுக்குள் இடையிடையே நிகழ்ந்த கருத்துப் பரிமாற்றங்களும் கவிதைப் போர்களும் விரிவாக எழுதி வைக்கப்பட்டுள்ளன. இவ்வரலாறுகள் எவ்வளவு தூரம் உண்மை என்பது குறித்த ஆராய்ச்சியைத் தவிர்த்து இவற்றில் காணப்படும் கருத்துக்களூம் அவை வாழ்க்கைக்கு எவ்வாறு பயன்படும் என ஆராய்ந்தோமெனில் மிகவும் பயனுண்டு என்பதில் ஐயமில்லை.

ஔவையார் கதையை மிகவும் விரிவாகவும் விஸ்தாரமாகவும் பெரும்பொருட் செலவில் 1953ஆம் வருடம் அந்நாளைய தமிழ்த்திரையுலகின் ஜாம்பவானாகப் போற்றப்படும் ஜெமினி திரு எஸ்.எஸ். வாசன் அவர்கள் தயாரித்து வெளீயிட்டார். இத்திரைப்படம் தற்பொழுதும் பல தமிழ்த் தொலைக்காட்சி நிறுவனங்கள் வழியே அவ்வப்பொழுது திரையிடப்படுகிறது. தமிழ் மக்கள் அனைவரும் பார்த்து மகிழ்ந்து பின்பற்ற வேண்டிய அரிய பல விஷயங்கள் இத்திரைப்படத்தில் உள்ளன.

ஔவையார் கதையில் வரும் ஒரு சம்பவமாவது: ஒரு சோலையில் ஒரு நாள் பெண்டாட்டிக்கு பயந்து நடக்கும் தன்மையுள்ள ஒரு ஆடவன் தனிமையில் அமர்ந்து தன் எதிரே இருந்த கல் ஒன்றைத் தன் மனைவியாக பாவித்து அதனுடன் அதிகார தோரணையில் உரையாடும் காட்சியை அவ்வழியே வந்த ஔவையார் கண்டார். அவனது இல்லத்துக்குச் சென்று அவன் வாழ்க்கை எவ்வாறு அமைந்துள்ளதென அறியும் ஆவலில் அவர் அவ்வாடவனை நோக்கி இன்று உன் வீட்டில் எனக்கு உணவு அளிக்க வேண்டுமெனக் கூறி அவனுடன் அவனது இல்லத்துக்குச் சென்றார். ஔவையை வீட்டுக்கு வெளியே இருந்த திண்ணையில் சற்றே அமருப்படிக் கூறி உள்ளே சென்ற அந்த ஆடவன் அங்கே தனது கூந்தலை வாரிப் பின்னிக்கொண்டிருந்த தன் மனைவியிடம் மிகவும் குழைந்து பேசி அவளுக்குத் தன் கையாலேயே தலைவாரிப் பின்னி விட்டுப் பின் மெல்லத் தன்னை நம்பி தங்களது இல்லத்தில் உணவு அருந்த வந்திருந்த ஔவையாரைப் பற்றிக் கூற, பதிலுக்கு அவள் சீற, அவன் மீண்டும் மன்றாட அவள் அரைமனதுடன் சம்மதித்து ஔவையாருக்கு வேண்டா வெறுப்பாக உணவு பரிமாறினாள்.

அவளது அக்கரையின்மை கண்டு மனம் வருந்திய ஔவையார் அவள் பரிமாரிய உணவை அருந்த மனமின்றி எழுந்து நின்று அந்த ஆடவனைப் பார்த்து, "கணவனுக்கேற்ற சேவை மனப்பான்மையுடன் கணவனை தெய்வமாக எண்ணிப் போற்றி வாழும் மனைவி ஒருவனுக்குக் கிடைப்பாளேயாயின் எத்துணைத் துன்பங்கள் வரினும் அவளுடன் கூடி வாழலாம். ஆனால் அத்தகைய மனைவியானவள் கணவனை மதியாது அவன் சொல்லை மீறி அவனுக்கு அவமரியாதை ஏற்படும் விதமாக நடப்பளேயாயின் அக்கணவன் இல்லறத்தைத் துறந்து துறவறம் மேற்கொள்வதே தகும் எனும் பொருளில்,

பர்த்தாவுக்கேற்ற பதிவ்ரதை உண்டானால்
எக்காலும் கூடியிருக்கலாம் சற்றேனும்
ஏறுமாறாக இருப்பளேயாமாகில் சற்றேனும்
ஏறுமாறாக இருப்பளேயாமாகில்
கூறாமல் சந்நியாசம் கொள்

என்ற பாடலைக் கூறி அங்கிருந்து சென்றுவிட்டார். உடனே ஔவையின் அறிவுரையை செவிமடுத்த அந்த ஆடவன் தன் சட்டையைக் கழற்றிப் போட்டுவிட்டு காஷாயம் தரித்துத் துறவியாகி வீட்டை விட்டுச் சென்று விடுகிறான். இதனால் மனம் பதைபதைக்க அவனது மனைவி ஓடோடிச் சென்று ஔவையாரிக் கால்களில் விழுந்து தன்னைக் காப்பாற்றுமாறு வேண்ட ஔவையார் அவள் கணவனை சமாதானப் படுத்து இருவரையும் சேர்ந்து வைத்து அதன் பின்னர் பாடுவதாக அமைந்துள்ள பாடல் இன்றைய பாடலாக மலர்கிறது.

பொறுமை என்னும் நகையணிந்து

பர்த்தாவுக்கேற்ற பதிவ்ரதை உண்டானால்
எக்காலும் கூடியிருக்கலாம் சற்றேனும்
ஏறுமாறாக இருப்பளேயாமாகில் சற்றேனும்
ஏறுமாறாக இருப்பளேயாமாகில்
கூறாமல் சந்நியாசம் கொள்

இருந்து முகம் திருத்தி ஈருடன் பேன் பார்த்து
விருந்து வந்ததென விளம்ப
இருந்து முகம் திருத்தி ஈருடன் பேன் பார்த்து
விருந்து வந்ததென விளம்ப
வருந்தி மிக ஆடினாள் ஆடினால் ஆடிப்
பழமுறத்தால் சாடினாள் ஓடோடத் தான்

பொறுமை என்னும் நகையணிந்து
பெருமை கொள்ள வேண்டும் பெண்கள்
பொறுமை என்னும் நகையணிந்து

அருமை பெருமை தெரிந்து
அருமை பெருமை தெரிந்து
அருமை பெருமை தெரிந்து
அருமை பெருமை தெரிந்து நாதன்
அன்புடன் இல்லற இன்பமடைந்திட

பொறுமை என்னும் நகையணிந்து
பெருமை கொள்ள வேண்டும் பெண்கள்
பொறுமை என்னும்

கூடி நடந்து கொள்ள வேண்டும்
கோப தாபம் தள்ள வேண்டும்
கூடி நடந்து கொள்ள வேண்டும்
கோப தாபம் தள்ள வேண்டும்
கோடி செம்பொன் குவிந்தாலும்
குளிர்ந்த வார்த்தை சொல்ல வேண்டும்
கோடி செம்பொன் குவிந்தாலும்
குளிர்ந்த வார்த்தை சொல்ல வேண்டும்
நாடி மணந்த நாதனோடு ஆஆஆஆஆ
ஆஆஆஆஆஆஆ ஆஆஆஆஆஆ
நாடி மணந்த நாதனோடு
நாறும் மலரும் போலக் கூடி
நாடி மணந்த நாதனோடு
நாறும் மலரும் போலக் கூடி
நல்லறமாகிய இல்லற வாழ்வினில்
எல்லையில்லாத பேரின்பமடைந்திட

பொறுமை என்னும் நகையணிந்து
பெருமை கொள்ள வேண்டும் பெண்கள்
பொறுமை என்னும்