"கல்லானே யானாலும் கைப்பொருளொன் றுண்டாயின்
எல்லாருஞ் சென்றங் கெதிர்கொள்வர் இல்லானை
இல்லாளும் வேண்டாள்மற் றீன்றெடுத்த்த தாய்வேண்டாள்
செல்லா தவன்வாயிற் சொல்."
பொருளாதரத்தில் நலிவுற்றவனை உற்றார் உறவினர் யாரும் மதிக்க மாட்டார்கள், அவனை ஒரு சுமையாகவே கருதுவது உலக இயல்பு. பெற்ற மகனைத் தனக்குப்பின் பேணிக்காக்கத் தக்கதொரு உற்ற துணைவியைத் தேடித்தரும் கடமையுள்ள தாயே வரும் மருமகள் தன் மகனிடமும் தன்னிடமும் பிற குடும்ப உறுப்பினரிடமும் அன்புடன் பழகும் பாங்குள்ளவளா? கடமையைச் செய்யும் பொறுப்பு மிக்கவளா? என்று ஆராய்ந்தறிவதைக் காட்டிலும் அவள் எவ்வளவு நகைகள் அணிந்து வருகிறாள்? எத்தனை பணம் சீதனமாகக் கொண்டு வருகிறாள்? என்றறிவதிலேயே அதிக அக்கரை காட்டுவதும் உலக இயல்பு.
ஒருவன் வாழ்க்கைத் துன்பங்களால் துயருற்று வருந்துகையில் அவன் எத்தகைய இழிநிலையை அடைந்தாலும், அது பொருளாதாரப் பிரச்சினையாயினும், உடல் ஊனம், நோய் முதலான பிரச்சினையாயினும் அதிலிருந்து அவனை மீட்க முன்வந்து தன்னலம் கருதாது அவனைக் கைதூக்கிக் கரையேற்றி உண்மையான அன்பு செலுத்தும் உன்னத உறவு இவ்வுலகில் நட்பு ஒன்றேயாகும். இத்தகைய நட்பு பெரும்பலும் மலர்வது ஒன்றாக வாழ்ந்து ஒன்றாகக் கல்வி கற்று வாழ்வில் உயர வழி தேடும் மாணவப் பருவத்திலேயே ஆகும்.
கல்லூரியில் சில பல ஆண்டுகள் ஒன்றாகக் கல்வி பயின்ற நண்பர்கள் தம் கல்வி பயிலும் காலம் முடிந்து ஒருவரையொருவர் பிரிய வேண்டிய சூழ்நிலை அனைவர் மனதிலும் வினோதமான உணர்வுகளை விதைப்பதாகும். இதுநாள் வரை நம்முடன் மனமொப்பி, ஆடிப் பாடி ஒன்றுகூடி மகிழ்ந்து, கல்வியில் ஒருவருக்கொருவர் உதவியிருந்த நண்பர்களைப் பிரிகிறோம் எனும் உணர்வு நண்பர்கள் ஒவ்வொருவரது மனதிலும் நீங்காததொரு ஏக்கத்தை உண்டாக்க வல்லது.
அவ்வாறு கல்வியில் தேர்ச்சிபெற்று வாழ்க்கைப் போராட்டத்தில் குதிக்க வேண்டிப் பிரியும் நண்பர்களில் பலர் பல ஆண்டுகள் கழித்து மீண்டும் ஒன்றாய்க் கூடி மகிழும் வாய்ப்புக் கிட்டினால் அதனை விட ஒருவர்க்கு சொர்க்கம் வேறில்லை.
இவ்வாறே 1976ஆம் ஆண்டு கோவை தொழில்நுட்பக் கல்லூரியில் பொறியியல் பட்டப் படிப்பை முடித்துப் பிரிந்து சென்ற எனது கல்லூரித் தோழர்களில் பெரும்பாலோர் 25 ஆண்டுகளுக்குப் பின்னர் 2001ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் நாங்கள் கல்வி பயின்ற கல்லூரி வளாகத்திலேயே மீண்டும் அவரவர் மனைவி மக்களுடன் ஒன்று கூடி, இரண்டு நாட்கள் கலந்து பழகி மகிழ்ந்தோம். அந்த அனுபவத்தின் சுவையை மீண்டும் மீண்டும் அனுபவிக்க வேண்டும் எனும் தீராத ஆவலால் அதன் பின்னர் இரண்டாண்டுகளுக்கோர் முறை அதேபோல் குடும்பத்தினருடன் ஏதேனும் ஓரிடத்தில் ஒன்று கலந்து மகிழும் வாய்ப்பை உருவாக்கிக் கொண்டு 2003ஆம் ஆண்டு பெங்களூரிலும், 2005ஆம் ஆண்டு சென்னையிலும் 2007ஆம் ஆண்டு திருச்சியிலும் கொண்டாடிய நாங்கள் இந்த ஆண்டு டிசம்பர் மாதம் சேலம் அருகிலுள்ள ஏற்காட்டில் ஒன்று கூடுவதென முடிவு செய்து அதற்கான ஏற்பாடுகள் நிறைவேறிக் கொண்டிருக்கின்றன.
இன்று நண்பர்கள் தினம் (Friendship Day) என்று சொல்கிறார்கள். நண்பர்களை ஆண்டுக்கு ஒரு நாள் நினைத்தால் போதுமா? நண்பர்களின் நினைவு அமுதமன்றோ? அதனை நாள்தோறும் சுவைக்கும் ஆசையால் எனது கல்லூரித் தோழர்களுக்கென cit76.com என ஓர் இணையதளத்தை பிரத்யேகமாக உருவாக்கி நடத்தி வருகிறேன்.
இந்த நன்னாளில் உலகெங்குமுள்ள மாந்தர்களிடையேயும் நாடுகளுக்கிடையேயும், பல்வேறு மதத்தினரிடையேயும், ஆண்கள் பெண்கள் அனைவரிடையேயும் நட்புணர்வு மலர்ந்து ஒருவருக்கொருவர் உதவும் பண்பு பெருகி, நட்பின் வாயிலாக
"யாம் பெற்ற இன்பம் பெருக இவ்வையகம்" என எல்லாம் வல்ல இறைவனை வேண்டுகிறேன்.
பசுமை நிறைந்த நினைவுகளே
படம்: ரத்தத் திலகம்
இயற்றியவர்: கவிஞர் கண்ணதாசன்
இசை: கே.வி. மஹாதேவன்
பாடியோர்: டி.எம். சௌந்தரராஜன், பி. சுசீலா
பசுமை நிறைந்த நினைவுகளே பாடித்திரிந்த பறவைகளே
பழகிக் கழித்த தோழர்களே பறந்து செல்கின்றோம்
பசுமை நிறைந்த நினைவுகளே பாடித்திரிந்த பறவைகளே
பழகிக் கழித்த தோழர்களே பறந்து செல்கின்றோம்
குரங்குகள் போலே மரங்களின் மேலே தாவித்திரிந்தோமே
குரங்குகள் போலே மரங்களின் மேலே தாவித்திரிந்தோமே
குயில்களைப் போலே இரவும் பகலும் கூவித் திரிந்தோமே
குயில்களைப் போலே இரவும் பகலும் கூவித் திரிந்தோமே
வரவில்லாமல் செலவுகள் செய்து மகிழ்ந்திருந்தோமே
வரவில்லாமல் செலவுகள் செய்து மகிழ்ந்திருந்தோமே
வாழ்க்கைத் துன்பம் அறிந்திடாமல் வாழ்ந்து வந்தோமே நாமே
வாழ்ந்து வந்தோமே
பசுமை நிறைந்த நினைவுகளே பாடித்திரிந்த பறவைகளே
பழகிக் கழித்த தோழர்களே பறந்து செல்கின்றோம்
எந்த ஊரில் எந்த நாட்டில் என்று காண்போமோ
எந்த ஊரில் எந்த நாட்டில் என்று காண்போமோ
எந்த அழகை எந்த விழியில் கொண்டு செல்வோமோ
எந்த அழகை எந்த விழியில் கொண்டு செல்வோமோ
இந்த நாளை வந்த நாளில் மறந்து போவோமோ
இந்த நாளை வந்த நாளில் மறந்து போவோமோ
இல்லம் கண்டு பள்ளி கொண்டு மயங்கி நிற்போமோ - என்றும்
மயங்கி நிற்போமோ
பசுமை நிறைந்த நினைவுகளே பாடித்திரிந்த பறவைகளே
பழகிக் கழித்த தோழர்களே பறந்து செல்கின்றோம்
பசுமை நிறைந்த நினைவுகளே பாடித்திரிந்த பறவைகளே
பழகிக் கழித்த தோழர்களே பறந்து செல்கின்றோம் நாம்
பறந்து செல்கின்றோம்
very good!
பதிலளிநீக்கு