சனி, 30 ஜனவரி, 2016

துள்ளித் துள்ளி அலைகளெல்லாம் என்ன சொல்லுது?

இவ்வுலகில் வாழும் அனைத்து உயிரினங்களும் வாழ்வை அனுபவித்து இயற்கையோடியைந்து நன்கு வாழ்வின்றன ஆனால் மனிதன் மட்டும் எத்துணை நலன்கள் இருந்த போதும் திருப்தியடையாமல் இல்லாததை எண்ணி ஏங்கி இருக்கும் இன்பங்களை அனுபவிக்காமல் துன்புறுகிறான். தன்னிடம் இருக்கும் நலன்களை எண்ணிப் பார்த்து மகிழாமல் பிறரிடம் தன்னிடமில்லாத நலன்கள் இருக்கக் கண்டு பிறர் மேல் பொறாமை கொண்டு மனம் புழுங்குகிறான். 

ஏனைய உயிரினங்கள் ஐந்தறிவிற்கும் குறைந்தவை என்றும் மனிதனுக்கு ஆறறிவென்றும் நம் ஆன்றோர்கள் வகுத்த உண்மையை உணராமல் தனது ஆறாவது அறிவைப் பயன்படுத்தத் தவறுவதுடன் பிற ஐந்தறிவு ஜீவிகளுக்கு இருக்கும் அளவும் அறிவுத் தெளிவு பெறாமல் அறியாமையில் மூழ்கிக் கிடந்து வாடுகிறான்.

இதன் காரணம் என்ன?

பிற உயிரினங்கள் தமக்கு இயல்பாகக் கிடைக்கும் உணவைத் தேடி உண்டு தன் உறவுகளோடும் பிற உயிரினங்களோடும் கலந்து பழகி மகிழ்கின்றன. இவ்வுலகிலுள்ள பொருட்கள் எவையும் தமது என்று உரிமை கொண்டாடுவதில்லை. அடுத்த வேளை உணவைப் பற்றிக் கவலைப்படுவதில்லை. உடலை மறைக்க உடையோ, வசிக்கப் பிரத்யேகமான விசேஷ இருப்பிடமோ வேண்டுவதில்லை. கிடைத்த உணவை அருந்திக் கிடைத்த இடத்தில் படுத்துறங்கிக் கவலையில்லாமல் வாழ்கின்றன. மனிதன் தனது தேவைக்கு மேல் பொன்னும் பொருளும், மாடி மனை வீடுகளும், நிலங்களும், வாகனங்களும், ஆடம்பர வசதிகளும் பெறுவதொன்றே பெரிய குறிக்கோளாகக் கொண்டு தன் அன்றாட வாழ்வில் பெறும் சிறு சிறு இன்பங்களைத் தொலைக்கிறான். 

வாழ்நாள் முழுதும் பாடுபட்டுத் தேடிய பணத்தைப் பெரும்பாலும் மருத்துவச் செலவுகளுக்கும் வேண்டாத விஷயங்களுக்கும் வாரியிறைத்து விட்டுப் பெரும் துன்பமுற்று இறந்து போகிறான். தன்னுடைய வாழ்க்கை எத்துணை அற்பமானதாய்ப் போய்விட்டதே என மரணமடையும் தருவாயிலும் உணரத் தவறுகிறான். இத்தகைய அறியாமையில் மூழ்கி அல்லலுறும் வாழ்வு வாழ வேண்டுமா? அதனால் ஏதேனும் பலனுண்டா என எண்ணிப் பார்த்து மனிதன் பிற உயிர்களிடமிருந்து வாழ்க்கைப் பாடத்தைக் கற்று அவற்றுடனும் இயற்கையுடனும் இயைந்து வாழ என்று பழகுகின்றானோ அன்றே துன்பம் நீங்கி இன்பம் பெற வழி பிறக்கும்.

காக்கை குருவி எங்கள் ஜாதி நீள் 
கடலும் மலையும் எங்கள் கூட்டம்
நோக்கும் திசையெலாம் நாமன்றி வேறில்லை
நோக்க நோக்கக் களியாட்டம்

என்று பாடி இவ்வுலக வாழ்வைத் தான் உயிரோடிருந்த 35 வருட சொற்ப காலத்திலேயே முழுமையாக அனுபவித்து சொர்க்கத்தை இங்கேயே கண்டு வறுமை தன்னை வாட்டிய போதிலும் வருந்தாமல் நம் நாட்டு மக்கள் அந்நியரிடம் அடிமைப்பட்டுக் கிடந்த நிலை மாறப் பாடுபட்ட மஹாகவி பாரதியின் அறிவுத் திறனை நாமெல்லோரும் அடைய வேண்டாமா? இவ்வுலகில் இருக்கும் வரை நாமும் சுகமடைத்து பிறரையும் சுகமடையச் செய்து இவ்வுலகிலேயே சொர்க்கம் காண நாம்  முயற்சி செய்ய வேண்டாமா?

இளம் காதலர்கள் இருவர் கடலலைகள் துள்ளுவதிலும், நண்டு, வண்டு முதலான உயிரினங்கள் வாழ்க்கையை அனுபவிப்பதையும், குருவிகள் கூடு கட்டி இன்பமாய் வாழ்வதையும் கண்டு தாமும் இன்பமாய் வாழப் பழகுகின்றனர் இன்றைய பாடலின் வாயிலாக.


திரைப்படம்: தலை கொடுத்தான் தம்பி
இயற்றியவர்: 
இசை: எம்.எஸ். விஸ்வநாதன், டி.கே. ராமமூர்த்தி
பாடியோர்: பி. சுசீலா, ஏ.எம். ராஜா
ஆண்டு: 1959

துள்ளித் துள்ளி அலைகளெல்லாம் என்ன சொல்லுது? பல
துண்டு துண்டா எழுந்து அது எங்கே செல்லுது?
துள்ளித் துள்ளி அலைகளெல்லாம் என்ன சொல்லுது? பல
துண்டு துண்டா எழுந்து அது எங்கே செல்லுது?

கள்ளவிழிப் பார்வை தன்னைக் கண்டு கொள்ளூது கோபம்
கொண்டே துள்ளுது உன் கன்னத்தில் கிள்ளிவிட்டு சிரிக்கச் சொல்லுது
கள்ளவிழிப் பார்வை தன்னைக் கண்டு கொள்ளூது கோபம்
கொண்டே துள்ளுது உன் கன்னத்தில் கிள்ளிவிட்டு சிரிக்கச் சொல்லுது

தென்கடலின் ஓரத்திலே ஜிலுஜிலுக்கும் ஈரத்திலே
சின்னச் சின்ன நண்டு வந்து என்ன பண்ணுது?
தென்கடலின் ஓரத்திலே ஜிலுஜிலுக்கும் ஈரத்திலே
சின்னச் சின்ன நண்டு வந்து என்ன பண்ணுது? அது
நில்லாத வேகத்திலே அல்லும் பகல் மோகத்திலே
நீண்ட வளை தோண்டிகிட்டுக் குடும்பம் பண்ணுது

இத்தனையும் நம்மைப் போல இன்பம் தேடுது இதை
எண்ணும் போது நமது மனம் எங்கோ போகுது

கண்டதும் மலரில் வண்டு காதல் கொள்வதேன்? அது
வந்து வந்து மெய்மறந்து மயங்கிப் போவதேன்?
கண்டதும் மலரில் வண்டு காதல் கொள்வதேன்? அது
வந்து வந்து மெய்மறந்து மயங்கிப் போவதேன்?

கண்டவுடன் காதல் கொள்ளும் காரணமும் தேன்
கண்டவுடன் காதல் கொள்ளும் காரணமும் தேன் சிங்
கார மலர்த் தேன் நான்
கன்னி மலர் நாடியதும் வண்டு போலத்தான்

அஅஆ அஅஅஅஅஅ ஆ அஅஅஅஅஅ ஆஆஆ ஆஆ அஅஅஅஅஅஅஅ

பாக்கு மரச் சோலையிலே பளபளக்கும்பாளையிலே
பறந்து பறந்து குருவியெல்லால் என்ன பின்னுது?
பாக்கு மரச் சோலையிலே பளபளக்கும் பாளையிலே
பறந்து பறந்து குருவியெல்லால் என்ன பின்னுது? அது

வாழ்க்கை தன்னை உணர்ந்து கிட்டு மனசும் மனசும் கலந்து கிட்டு
மூக்கினாலே கொத்திக் கொத்திக் கூடு பின்னுது

இத்தனையும் நம்மைப் போல இன்பம் தேடுது இதை
எண்ணும் போது நமது மனம் எங்கோ போகுது

அஅஅ ஆஅ ஆஅ ஆஅ ஆஅ ஆ அஅஆ
ஆஅ ஆ அஅஆ ஆஅ ஆ அஅஆ ஆஅ ஆ அஅஆ
ஆஅ ஆ அஅஆ ஆஅ அஅஅ அஅஅஆ