வியாழன், 14 ஜூலை, 2011

அன்பென்ற மழையிலே

நான் யார்? இவ்வுலகில் நான் ஏன் வந்து பிறந்தேன்? என்ற கேள்விகளுக்கு விடை தெரியாதிருந்தும் மாயையினால் பொய்யான இவ்வுடலை மெய்யென்றும் இவ்வுடலைச் சுமந்து அலையும் இந்த ஜடமே நான் என்றும் இவ்வுலகமே எனக்கு நிலையான இருப்பிடமென்றும் எண்ணி, எந்நாளும் தேவைக்கு மேல் பணத்தையும், பொன்னையும், பொருளையும் சேர்ப்பதிலேயே காலத்தைக் கழித்து, தன்னைப் பற்றிய சிந்தனையிலேயே ஆழ்ந்து பிறர்க்கன்பு செய்யாது, தாம் தேடிய செல்வத்தைத் தானும் அனுபவியாது பிறரையும் அனுபவிக்க விடாது வீணடித்து, என்றோ ஒரு நாள் இவ்வுடல் மண்ணோடு மண்ணாக, இவ்வுடலைச் சுமந்த உயிர் சென்ற இடம் தெரியாது காற்றோடு காற்றாய்க் கரைந்து போக மறைந்திடும் மானுடனே!

நீ இவ்வாறான பொருள் தேடியலையும் வாழ்வு வாழ்ந்து மடிந்தாயெனில் நீ மறைந்த பின்னர் நீ இருந்த சுவடே தெரியாது அழிந்து போகும். அவ்வாறன்றி நீ இவ்வுலகில் வாழும் காலத்தில் உனது இன்றியமையாத தேவைகளைப் பூர்த்தி செய்யத் தேவையான செல்வத்தை மட்டும் உண்மையான உழைப்பினால் சம்பாதித்து, அதிகப்படியான காலத்தைப் பிறர் துயர் துடைக்கும் பணியிலும் தேச சேவையிலும் செலவழித்தாயெனில் உன் பூத உடல் மறைந்து போன பின்னரும் நீ புகழுடம்பெய்தி மரணமில்லாப் பெருவாழ்வு வாழ்ந்து மக்கள் மனங்களில் இவ்வுலகம் உள்ளளவும் இறையெனக் கருதிப் போற்றப் படுவாய்.

இவ்வுண்மையை உனக்கும் எனக்கும் உணர்த்தவென்றே இவ்வுலகில் மனிதனாய் அவதரித்து அன்பெனும் மழை பொழிந்து மனிதகுலம் பண்பட வாழ்ந்து காட்டி உலகம் உய்யச் செய்த கருணைக் கடல் இயேசுபிரான். அவர் காட்டிய அன்பு நெறியைக் கடைபிடித்து எவரோடும் பேதமின்றி எல்லோரும் ஓர் குலம் எல்லோரும் ஓரினம் என்ற கொள்கையுடன் வாழ்வோமாக! அமர வாழ்வு பெறுவோமாக!

அன்பென்ற மழையிலே

படம்: மின்சாரக் கனவு
இயற்றியவர்: வைரமுத்து
இசை: A.R. ரஹ்மான்
குரல்: அனுராதா ஸ்ரீராம்

அன்பென்ற மழையிலே அகிலங்கள் நனையவே
அதிரூபன் தோன்றினானே
வைக்கோலின் மேலொரு வைரமாய் வைரமாய்
வந்தவன் மின்னினானே
விண்மீன்கள் கண்பார்க்க சூரியன் தோன்றுமோ
புகழ்மைந்தன் தோன்றினானே
கண்ணீரின் காயத்தை செந்நீரில் ஆற்றவே
சிசுபாலன் தோன்றினானே

அன்பென்ற மழையிலே அகிலங்கள் நனையவே
அதிரூபன் தோன்றினானே அதிரூபன் தோன்றினானே
போர்கொண்ட பூமியில் பூக்காடு காணவே
புகழ்மைந்தன் தோன்றினானே புகழ்மைந்தன் தோன்றினானே

கல்வாரி மலையிலே கல்லொன்று பூக்கவும்
கருணைமகன் தோன்றினானே
நூற்றாண்டு இரவினை நொடியோடு போக்கிடும்
ஒளியாகத் தோன்றினானே
இரும்பான நெஞ்சிலும் ஈரங்கள் கசியவே
இறைபாலன் தோன்றினானே
முட்காடு எங்கிலும் பூக்காடு பூக்கவே
புவிராஜன் தோன்றினானே

அன்பென்ற மழையிலே அகிலங்கள் நனையவே
அதிரூபன் தோன்றினானே அதிரூபன் தோன்றினானே
வைக்கோலின் மேலொரு வைரமாய் வைரமாய்
வந்தவன் மின்னினானே வந்தவன் மின்னினானே
அன்பென்ற மழையிலே அகிலங்கள் நனையவே
அதிரூபன் தோன்றினானே அதிரூபன் தோன்றினானே
வைக்கோலின் மேலொரு வைரமாய் வைரமாய்
வந்தவன் மின்னினானே வந்தவன் மின்னினானே

கத்தாழங் காட்டு வழி

உலகிலேயே மிகவும் அதிகப்படியான மக்கள் ஏழ்மை நிலையில் வாழும் நாடுகளில் ஒன்றாக இந்தியா இருந்த போதிலும் இங்குள்ள சமுதாய அமைப்பினாலும் குடும்ப வாழ்க்கை முறையின் வலிமையாலும் அனைவரும் ஒருவருகொருவர் தம்மாலியன்ற உதவிகளைச் செய்வதை ஒரு முக்கியக் கடமையாகக் கருதி வாழ்வதால் நம் நாடு பேரழிவிலிருந்து காக்கப்பட்டு வருகிறது.

நமது பாரம்பரியமான குடும்ப வாழ்க்கை முறை நம் ஒவ்வொருவருக்கும் வாழ்வது எப்படி என்பதைக் கற்றுத் தருவதால் எதிர்பாராத காரணங்களால் ஒரு குடும்பத் தலைவன், அதாவது தந்தை இறைவனடி சேர்கையில் அக்குடும்பத்தின் மூத்த பிள்ளைகள் தியாக மனப்பான்மையுடன் குடும்பப் பொறுப்பை ஏற்றுக்கொண்டு தனக்கு இளையவர்களையும் தாயையும் காப்பது ஒரு உயர்ந்த நெறியாகக் கடைபிடிக்கப்பட்டு வருகிறது. இத்தகைய சூழ்நிலையில் குடும்பத்தின் மூத்த பிள்ளை அண்ணனாகவும் இளையவர் தங்கையாகவும் அமைகையில் அந்த அண்ணன் தன் தங்கைக்காகத் தன் உடல், பொருள், ஆவி அனைத்தையும் தர சித்தமாக இருப்பதுடன் அவளது நல்வாழ்வுக்கு ஆவன செய்வதும் நம் நாட்டில் தொன்றுதொட்டு நடைமுறையில் இருந்து வருகிறது. இதற்கு அடிப்படைக் காரணம் நமது நாட்டின் உயர்ந்த இலக்கியங்கள் காட்டும் வாழ்க்கை நெறி.

எத்துணை நன்மை இருப்பினும் நம் சமுதாயத்தில் நகரங்களாயினும் கிராமமாயினும் அங்கும் பிறருக்குத் தீமை செய்து அதன் மூலம் தன் சுயநல நோக்கத்தை நிறைவேற்றிக் கொள்ளும் புல்லுருவிகளும் இருப்பதுண்டு. அத்துடன் நம் சமுதாயத்தில் சூதாட்டம் ஒரு பெரிய சாபக்கேடாக அன்று முதல் இன்றுவரை நிலவியிருக்கிறது. சில கிராமப்புறங்களில் கோழிச்சண்டை இன்றும் பெரும் சூதாட்டமாக விளங்குகிறது.

நமது நாட்டின் கிராமங்களில் மக்கள் வாழ்க்கை மிகவும் இனிமையானது. இங்கே ஆரவாரம் குறைவு அமைதி நிறைவு. இயற்கைச் சூழலில் மனித உறவுகள் மேம்பட்டு விளங்கும் வாழ்க்கை கிராம வாழ்க்கை. அத்தகைய ஒரு கிராமத்தில் ஒரு குடும்பத்தில் தாய் தந்தையரை இழந்த நிலையில் அண்ணன் ஒருவன் தன் தங்கையை சீராட்டிப் பாராட்டி வளர்த்து அவளை மற்றொரு கிராமத்தைச் சேர்ந்த உறவினர்களுள் ஒருவருக்கு மணமுடித்து வைத்து, புகுந்த இடத்தில் தன் தங்கை சீரோடும் சிறப்போடும் வாழத் தன் உதவியாகப் பல பொருள்களைச் சேர்த்து வைத்து சீதனமாக அவற்றைத் தன் தங்கையும் அவள் கணவனும் திருமணம் முடிந்த பின்னர் அவர்களது கிராமத்துக்குச் செல்கையில் சில மாட்டு வண்டிகளில் ஏற்றி அனுப்புகிறான்.

அவ்வாறு ஊர் மெச்சும் வகையில் திருமணம் செய்து கொடுத்த தங்கை நல்வாழ்வு வாழ்ந்தாளா? அல்லது அவள் சூதாட்டமே வாழ்க்கையாகக் கொண்ட சுயநலவாதிகளின் சூழ்ச்சிக்கு பலியானாளா? என்னும் கேள்விக்கான பதிலை கிராமத்துக்கே உரிய பாணியில் எடுத்துரைக்கும் கதையே கிழக்குச் சீமையிலே.

கத்தாழங் காட்டு வழி

திரைப்படம்: கிழக்குச் சீமையிலே
இயற்றியவர்: வைரமுத்து
இசை: ஏ.ஆர். ரெஹ்மான்
பாடியவர்: ஜெயசந்திரன், எஸ். ஜானகி

கத்தாழங் காட்டு வழி கள்ளிப்பட்டி ரோட்டு வழி
வண்டி கட்டிப் போறவளே வாக்கப் பட்டுப் போறவளே

வண்டி மாடு எட்டு வச்சு முன்னே போகுதம்மா
வாக்கைப் பட்ட பொண்ணு மனம் பின்னே போகுதம்மா
வண்டி மாடு எட்டு வச்சு முன்னே போகுதம்மா
வாக்கைப் பட்ட பொண்ணு மனம் பின்னே போகுதம்மா

கத்தாழங் காட்டு வழி கள்ளிப்பட்டி ரோட்டு வழி
வண்டி கட்டிப் போறவளே வாக்கப் பட்டுப் போறவளே

வண்டி மாடு எட்டு வச்சு முன்னே போகுதம்மா
வாக்கைப் பட்ட பொண்ணு மனம் பின்னே போகுதம்மா
எட்டு மேல எட்டு வச்சு முன்னே போகுதம்மா
பொட்டு வச்ச பொண்ணு மனம் பின்னே போகுதம்மா

தாயி விருமாயி மனசு மருகுதம்மா
உழுத புழுதியிலும் உன் முகமே தெரியுதம்மா
தங்கம் போல் நான் வளர்த்த தங்கச்சி பிரியக்கண்டு
கத்தாழங் காட்டுக்குள்ளே காளைகளுங் கதறுதம்மா
வாசப்படி கடக்கையிலே வரலையே பேச்சு
பள்ளப்பட்டி தாண்டிபுட்டா பாதி உயிர் போச்சு

வண்டி மாடு எட்டு வச்சு முன்னே போகுதம்மா
வாக்கைப் பட்ட பொண்ணு மனம் பின்னே போகுதம்மா
எட்டு மேல எட்டு வச்சு முன்னே போகுதம்மா
பொட்டு வச்ச பொண்ணு மனம் பின்னே போகுதம்மா

கத்தாழங்காட்டு வழி கள்ளிப்பட்டி ரோட்டு வழி
வண்டி கட்டிப் போறவளே வாக்கப் பட்டுப் போறவளே

வண்டி மாடு எட்டு வச்சு முன்னே போகுதம்மா
வாக்கைப் பட்ட பொண்ணு மனம் பின்னே போகுதம்மா

அண்ணே போய் வரவா அழகே போய்வரவா
மண்ணே போய்வரவா மாமரமே போய்வரவா
அணில்வால் மீசை கொண்ட அண்ணே ஒன்ன விட்டு
புலிவால் மீசை கொண்ட புருஷனோட போய்வரவா
சட்டப்படி ஆம்பளைக்கு ஒத்த இடம் தானே
தவளைக்கும் பொம்பளைக்கும் ரெண்டு இடம் தானே

வண்டி மாடு எட்டு வச்சு முன்னே போகுதம்மா
வாக்கைப் பட்ட பொண்ணு மனம் பின்னே போகுதம்மா
எட்டு மேல எட்டு வச்சு முன்னே போகுதம்மா
பொட்டு வச்ச பொண்ணு மனம் பின்னே போகுதம்மா
வண்டி மாடு எட்டு வச்சு முன்னே போகுதம்மா
வாக்கைப் பட்ட பொண்ணு மனம் பின்னே போகுதம்மா
எட்டு மேல எட்டு வச்சு முன்னே போகுதம்மா
பொட்டு வச்ச பொண்ணு மனம் பின்னே போகுதம்மா

மக்கள் ஒரு புறம் தெய்வம் ஒருபுறம்

அன்பு நண்பர்களே,

பொதுவாக அரசியல் குறித்த கருத்துக்களை இலைமறைவு காய்மறைவாகவே தெரிவித்து வருபவன் நான். மிகவும் தீவிரமாக அரசியல் தொடர்பாக விவாதிப்பது என் வழக்கமல்ல. தினசரி நாட்டு நடப்புகளைக் கண்காணித்து வரும் பொழுது என்னையும் மீறி என் உடலும் மனமும் நடுங்குகிறது. நாடு நல்லவர் கையில் இல்லை என்பது தெள்ளத் தெளிய உலகறிய நிரூபணமாகிவிட்டது. மத்திய அரசும் சரி, மாநில அரசும் சரி, மக்களுக்கு எவ்விதத்திலும் நன்மை புரியும் எண்ணம் சிறிதுமின்றி அவர்களை எப்படியாகிலும் ஏமாற்றி நாட்டைக் கொள்ளையடிப்பதிலே பெரும்பாலும் கவனம் செலுத்துகின்றனர் தற்பொழுது ஆட்சி புரிபவர்.

ஆங்கிலேயன் நம் நாட்டை அடிமைப்படுத்திய காலத்தில் மக்களிடையே ஒற்றுமை நிலவினால் தன் ஆட்சிக்கு ஆபத்து விளையும் என அறிந்து அதனைத் தடுக்க மக்களிடையே சாதிமத பேதத்தைத் தூண்டி விட்டு ஆங்காங்கே கலவரங்கள் உருவாக இடமளித்து இடையில் தன் ஆட்சியை நிலைநிறுத்திக் கொண்டு ஏறத்தாழ 900 ஆண்டுகள் நம் நாட்டை அடிமைத்தளையில் வைத்திருந்தான் ஆங்கிலேயன். நம் முன்னோர் கோடானு கோடி பேர் நாட்டை அந்நிய ஆதிக்கத்திலிருந்து விடுவிக்க 1857ஆம் ஆண்டு முதல் 1947ஆம் ஆண்டுவரை பல விதங்களிலும் போரிட்டு தம் இன்னுயிரையும் ஈந்து பெற்றுத்தந்த சுதந்திரத்தை தற்போது ஆளும் அரசுகள் ஏற்கெனவே இழக்கச் செய்து விட்டதுடன் இதுவரை கொள்ளையிட்டதைக் காட்டிலும் பன்மடங்கு கொள்ளையிட்டு விவசாயம் செய்ய நிலங்கள் இல்லாதவாறு செய்து வனப்பகுதிகளையும் அழித்து வருகின்றனர். இதனால் பல ஊர்களில் யானைகளும் புலிகளும் காடுகள் குறைந்து உணவுப்பற்றாக்குறை ஏற்பட்டதால் மக்கள் வசிக்கும் பகுதிக்கு வந்து பெரும் கேட்டை விளைத்து வருகின்றன.

இத்தனை கேடுகள் விளைந்த பின்னரும், நாட்டைக் கொள்ளையடித்தவர்களது முகத்திரை முழுதும் கிழிந்த பின்னரும் அவர்கள் யார் மீதும் உரிய நடவடிக்கை எடுக்காது வழக்குகளை பலவீனப்படுத்திக் குற்றவாளிகள் எளிதில் தப்பிக்க ஏதுவான விதத்திலேயே மத்திய மாநில அரசுகள் செயல்புரிகின்றன.

தெய்வ கிருபையால் இத்தனை பெரும் கேடுகள் விளைகின்ற இக்காலத்திலும் நமக்கெல்லாம் வழிகாட்டும் விதமாக இது நாள் வரை பல ஆண்டுகள் சாதிச் சண்டைகளாலும் தீவிரவாதத்தாலும் சீர்குலைந்து கொண்டிருந்த மாநிலமான பீஹாரில் இன்று மக்கள் அனைவரும் சாதிமத உணர்வின்றி அனைவரும் ஓரினம் அது பீகாரி இனம் எனும் உயர்ந்த மனோநிலையைக் கைக்கொண்டு கடந்த ஐந்து ஆண்டுகளாக அமைதியாக முன்னேற்றப் பாதையில் பயணம் செய்கின்றனர்.

ஆயிரம் உண்டிங்கு சாதி எனில் அந்நியர் வந்தது புகல் என்ன நீதி? என்று வெள்ளையனை வெளியேற்றப் பாடிய பாரதியின் பாடல் வரிகளை மனதில் கொள்வோம். நாம் அனைவரும் ஒரே சாதி அது தமிழ் சாதி ஓரே மதம், அது இந்திய மதம் எனும் மனப்பான்மையைக் கைக்கொண்டு அனைவரும் ஒருமுகமாக வருகின்ற சட்டமன்றத் தேர்தலில் தீயவர்கள் அனைவரையும் விலக்கி உண்மையாக மக்களுக்காகப் பாடுபட்டு, சாதிமத பேதத்தை ஒழித்து, மக்களை இலவசங்களைக் கொடுத்துப் பிச்சைக்காரர்களாக்காமல் அவர்கள் உழைத்து வாழத்தக்க சூழலை ஏற்படுதக் கூடிய தலைவர்களைத் தேர்ந்தெடுப்போமானால் நாம் இந்த சன்மத்தில் அமைதியாக வாழ்வதுடன் நம் சந்ததியினரும் நல்வாழ்வு வாழ வழிவகுக்கலாம். நாம் இவ்வுலகில் நிரந்தரமாக இருக்கப் போவதில்லை. இருக்கும் சில காலத்தில் வருங்காலம் சிறப்பாக இருக்க நம்மாலான நற்பணிகளைச் செய்து நாட்டில் நல்லாட்சி ஏற்படுத்துவது ஒன்றே நாம் செய்யத்தக்கது.

மக்கள் ஒரு புறம் தெய்வம் ஒருபுறம்

டமக்கு டமக்கு டம டம்டம்டோரா டமக்கு டமக்கு டம டம்டம்டோரா
டமக்கு டமக்கு டம டம்டம்டோரா டமக்கு டமக்கு டம டம்டம்டம்
டமக்கு டமக்கு டம டம்டம்டோரா டமக்கு டமக்கு டம டம்டம்டோரா
டமக்கு டமக்கு டம டம்டம்டோரா டமக்கு டமக்கு டம டம்டம்டம்

மக்கள் ஒரு புறம் தெய்வம் ஒருபுறம்
பக்கம் துணையென நிற்கும் இருபுறம்
எட்டுத் திசைகளும் தொட்டுத் தகர்த்திடக் கேட்கும் நம் முரசு

கோடிக்கரங்களும் நீரை விட்டன
கொள்கை விதைகளும் வேரை விட்டன
நாளை தாய்க்குலம் நம்மை வாழ்த்திட பூக்கும் நல்லரசு

குற்றம் செய்தவன் கொற்றவனாயினும்
கோட்டை கொத்தளம் கொண்டவனாயினும்
தர்மம் கெட்டது தட்டிக் கேட்பது என்தன் வாழ்க்கை நெறி

நோட்டைக் கொடுத்திங்கு ஓட்டைக் கேட்பவர்
கேட்டை விளைத்திங்கு நாட்டைக் கெடுப்பவர்
மூட்டை முடிச்சுடன் ஓட்டம் எடுத்திட செய்வான் விருதகிரி

டமக்கு டமக்கு டம டம்டம்டோரா டமக்கு டமக்கு டம டம்டம்டோரா
டமக்கு டமக்கு டம டம்டம்டோரா டமக்கு டமக்கு டம டம்டம்டம்

டமக்கு டமக்கு டம டம்டம்டோரா டமக்கு டமக்கு டம டம்டம்டோரா
டமக்கு டமக்கு டம டம்டம்டோரா டமக்கு டமக்கு டம டம்டம்டம்

வாக்குகள் கேட்டு வாங்கும் போது நாக்கில் நூறு பொய் வைப்பார்
மக்கள் வாக்கை வாங்கிக்கொண்டு மக்கள் காதில் பூ வைப்பார்
காலம் மாறும் காட்சிகள் மாறும் கேள்வி கேட்டால் தான்
கரைகள் போகும் துணி வெளுப்பாகும் துவைத்துப் போட்டால் தான்

எது நடந்தாலும் நமக்கெனவென்று ஒதுங்கிடலாமா தோழா தோழா
வறியவர் துன்பம் வலியவர் பார்த்து இருப்பது கூடாது
பிறர்க்கெனக் கொஞ்சம் இளகிடும் நெஞ்சம்
படைத்திட வேண்டும் தோழா தோழா
பொதுநலத் தொண்டு புரிந்தவர்க்குண்டு புகழ்மிகு வரலாறு

டமக்கு டமக்கு டம டம்டம்டோரா டமக்கு டமக்கு டம டம்டம்டோரா
டமக்கு டமக்கு டம டம்டம்டோரா டமக்கு டமக்கு டம டம்டம்டம்

எல்லார்க்கும் எல்லாம் வாய்க்கும் நாளில் என்தன் எண்ணம் ஈடேறும்
இல்லாமல் போனால் மேலும் மேலும் என்தன் கண்கள் சூடேறும்
என்னைத் தொடர்ந்து வருகின்ற பேரை என்றும் விட மாட்டேன்
தோழர் தமக்குத் துன்பங்கள் வந்தால் சோற்றைக் கூட தொடமாட்டேன்

இடி மழை மின்னல் இடைவரும் போதும்
நடுங்கிட மாட்டேன் நான் தான் நான் தான்
முன்வைத்த காலைப் பின் வைக்கும் வேலை என்னிடம் கிடையாது
தடந்தோள் உண்டு தடக்கை உண்டு
தடைகளை செய்வேன் தூள்தான் தூள்தான்
லட்சிய தாகம் இருக்கின்ற பேர்க்கு இதயங்கள் உடையாது

மக்கள் ஒரு புறம் தெய்வம் ஒருபுறம்
பக்கம் துணையென நிற்கும் இருபுறம்
எட்டுத் திசைகளும் தொட்டுத் தகர்த்திடக் கேட்கும் நம் முரசு

கோடிக்கரங்களும் நீரை விட்டன
கொள்கை விதைகளும் வேரை விட்டன
நாளை தாய்க்குலம் நம்மை வாழ்த்திட பூக்கும் நல்லரசு

குற்றம் செய்தவன் கொற்றவனாயினும்
கோட்டை கொத்தளம் கொண்டவனாயினும்
தர்மம் கெட்டது தட்டிக் கேட்பது என்தன் வாழ்க்கை நெறி

நோட்டைக் கொடுத்திங்கு ஓட்டைக் கேட்பவர்
கேட்டை விளைத்திங்கு நாட்டைக் கெடுப்பவர்
மூட்டை முடிச்சுடன் ஓட்டம் எடுத்திட செய்வான் விருதகிரி

டமக்கு டமக்கு டம டம்டம்டோரா டமக்கு டமக்கு டம டம்டம்டோரா
டமக்கு டமக்கு டம டம்டம்டோரா டமக்கு டமக்கு டம டம்டம்டம்

டமக்கு டமக்கு டம டம்டம்டோரா டமக்கு டமக்கு டம டம்டம்டோரா
டமக்கு டமக்கு டம டம்டம்டோரா டமக்கு டமக்கு டம டம்டம்டம்

அவனியெல்லாம் புகழ் மணக்கும்

காஞ்சி மாநகர் வரலாறு

ஏகாம்பரநாதர் கோயில் வேகவதி ஆற்றின் கரையில், வடநாடும் தென்னாடும் வணங்கிப் போற்றும் தொண்டைமான் இளந்திரையன் என்ற குறுநில மன்னனால் ஆளப்பட்ட பழைய நகரம் காஞ்சி மாநகரமாகும். இக்காஞ்சி மாநகரத்தை மேலும் செப்பம் செய்து கடிநகராக்கினான், கரிகால் பெருவளத்தான் எனும் சோழப் பேரரசன்.
சைவம், வைணவம், சமணம், சாக்கியம் போன்ற சமயங்கள் காஞ்சி மாநகரைக் கண்டிருக்கின்றன. தெய்வநலம் மணக்கும் திருநகரம் காஞ்சி மாநகரமாகும். திரும்பிய பக்கமெல்லாம் கோவில்களும் கோட்டங்களும் நிறைந்துள்ள இந்நகரில் கச்சி ஏகம்பனே! என்றும், காஞ்சி வரதப்பா! என்றும் வணங்கி நிற்போர் பலர்.

புத்த சமயத்தைச் சார்ந்த அறவண அடிகள் காஞ்சியில் வாழ்ந்தார். இந்நகரில்தான் மாதவியின் மகளான மணிமேகலை துறவு பூண்டு புத்த சமயக் கொள்கைகளைக் கற்றறிந்தாள். அறவண அடிகள் தங்கியிருந்த அவ்விடம் இன்று அறவணஞ்சேரி என்றும், அறப்பணஞ்சேரி என்றும் வழங்கப்படுகிறது.

நாலந்தா பல்கலைக் கழகத்தின் தலைவராக விளங்கியவர் காஞ்சியில் பிறந்த தருமபாலர் என்னும் தத்துவ ஞானி ஆவார். திருப்பருத்திக்குன்றம் என்னும் இடத்தில் சமணர்கள் நிறைந்து வாழ்ந்த காரணத்தால் அவ்வூர் சமணக்காஞ்சி (ஜைனக்காஞ்சி) என்று வழங்கப்படுகிறது.

ஐந்நூறு ஆண்டுகளுக்கும் மேலாக ஆட்சி புரிந்த பல்லவர்களின் காலத்தில் கலைமகளும், திருமகளும் கலந்து உறைந்திருந்த காரணத்தால் கல்விக் கரையிலாக் காஞ்சி மாநகர் என்று அப்பர் சுவாமிகளால் அருளப்பெற்றது.

முத்தி தரும் தலங்கள் ஏழனுள் முக்கியமானதும், புராண வரலாற்றுப் பெருமைகள் நிறைந்ததுமான காஞ்சிபுரம் ஒரு கோவில் நரகமாகும்.

சிற்பக் கலையில் சிறந்து, கலை நுணுக்கத்தில் உயர்ந்து, வான்முட்டி நிற்கும் கோபுரங்கள் ஏராளம்! சிற்பங்களைச் செதுக்கி, அழகு படுத்தப்பட்ட உயர்ந்த தூண்கள் எழில் கூட்டுகின்றன. எங்கு நோக்கினும் எண்ணத்தைக் கொள்ளை கொள்ளும் எழில் கொஞ்சும் இறைவன் திருமேனிகள் கண்கொள்ளாக் காட்சியாகும்.

இவற்றுடன் இன்னும் பலப்பல சிறப்புகளைப் பெற்றதும் வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த நகரேஷு காஞ்சி என்று புகழப்பெற்ற காஞ்சிபுரத்தைப் பற்றி மேலும் அறிய:

http://www.ekambaranathartemple.org/

இன்றைய பாடல் காஞ்சி நகரைப் பற்றியதாக அமைகிறது.

அவனியெல்லாம் புகழ் மணக்கும்

திரைப்படம்: காஞ்சித் தலைவன்
இயற்றியவர்: ஆலங்குடி சோமு
இசை: கே.வி. மஹாதேவன்
பாடியோர்: எல்.ஆர். ஈஸ்வரி குழுவினர்
ஆண்டு: 1963

அவனியெல்லாம் புகழ் மணக்கும் அருமைக் காஞ்சி நகரம் நம்ம
அருமைக் காஞ்சி நகரம் அது அழகுக்கெல்லாம் சிகரம்
அவனியெல்லாம் புகழ் மணக்கும் அருமைக் காஞ்சி நகரம் நம்ம
அருமைக் காஞ்சி நகரம் அது அழகுக்கெல்லாம் சிகரம்

தோரணம் கட்டிய வீதியிலே - தங்கத்
தேரோடி வரும் வேளையிலே ஹே
தோரணம் கட்டிய வீதியிலே - தங்கத்
தேரோடி வரும் வேளையிலே ஹே
தோகை விரித்தே ஆடிடுவோம்
தோகை விரித்தே ஆடிடுவோம் காஞ்சித்
தரணியை வாழ்த்தியே பாடிடுவோம் காஞ்சித்
தரணியை வாழ்த்தியே பாடிடுவோம்

அவனியெல்லாம் புகழ் மணக்கும் அருமைக் காஞ்சி நகரம் நம்ம
அருமைக் காஞ்சி நகரம் அது அழகுக்கெல்லாம் சிகரம்

கன்னம் சிவந்திட கூந்தல் கலைந்திட
என்ன நடந்தது கூறடி - உன்தன்
எண்ணம் கவர்ந்தவன் யாரடி?
கன்னம் சிவந்திட கூந்தல் கலைந்திட
என்ன நடந்தது கூறடி - உன்தன்
எண்ணம் கவர்ந்தவன் யாரடி?
தீர நடையாளனோ யானைப்படையாளனோ
தீர நடையாளனோ யானைப்படையாளனோ - மக்கள்
இடர் வெல்லும் கொடைவள்ளல்
நரசிம்மன் போன்றவனோ? - மக்கள்
இடர் வெல்லும் கொடைவள்ளல்
நரசிம்மன் போன்றவனோ?

அவனியெல்லாம் புகழ் மணக்கும் அருமைக் காஞ்சி நகரம் நம்ம
அருமைக் காஞ்சி நகரம் அது அழகுக்கெல்லாம் சிகரம்

வலை வீசி மீன் பிடிக்க கடலிருக்கு நீ
விளையாடப் பல்லவத்தின் மடியிருக்கு
வலை வீசி மீன் பிடிக்க கடலிருக்கு நீ
விளையாடப் பல்லவத்தின் மடியிருக்கு
கலை காக்க நரசிம்மன் துணையிருக்கு
கலை காக்க நரசிம்மன் துணையிருக்கு கண்ணே
கனியமுதே உன்னால் என்தன் உயிரிருக்கு

அவனியெல்லாம் புகழ் மணக்கும் அருமைக் காஞ்சி நகரம் நம்ம
அருமைக் காஞ்சி நகரம் அது அழகுக்கெல்லாம் சிகரம்