திங்கள், 4 ஜனவரி, 2016

மனம் ஒரு குரங்கு மனித மனம் ஒரு குரங்கு

தினம் ஒரு பாடல் - ஆகஸ்டு 15, 2014

ஒருவன் வாழ்வில் எந்த ஒரு காரியத்திலும் சித்தியடைய முதற்கண் அவனது மனம் அவனது கட்டுப்பாட்டில் இருக்க வேண்டும். ஐம்புலன்களின் வழியே நுகரும் பலவிதமான இன்பங்களில் ஈடுபட்டுப் பொழுதைக் கழிக்க மனமே தூண்டுகிறது. அத்தூண்டுதலுக்கு அடிமையாவோர் தம் லக்ஷியங்களிலிருந்து தம்மையறியாமலே விலகி இன்பநாட்டத்தில் ஈடுபட்டுத் தம் பொன்னான காலத்தை வீணடித்துப் பிற்காலத்தில் வருந்துவது நிச்சயம். 

இளம் வயதில் கல்வி கற்கும் பருவத்தில் கல்வியில் மனதைச் செலுத்தித் தேராமல் போவோரும் போதிய அளவு மதிப்பெண்களைப் பெறாதவரும் அதன் பின்னர் வேலை கிடைக்காமலும் தம் வயதையொத்த நண்பர்களை விடக் குறைவான ஊதியத்திற்கு இரண்டாம் தர, மூன்றாம் தர நிறுவனங்களில் வேலை செய்ய நேர்ந்தும் அல்லல் பட்டு வாழ்வில் முன்னேற இயலாமல் கீழ்நிலையிலேயே கிடந்து வாடுவர். 

தன் மனதிற்குப் பிடித்த ஒருவர் மேல் காதல் கொண்டவர் உரிய காலத்திற்குள் தன் காதலைத் தன் மனதிற்குப் பிடித்தவரிடம் தெரிவிக்காமல் போனால் அவரது காதல் தோல்வியில் முடிவதும் நிச்சயம். இதற்கெல்லாம் காரணம் அவரது மனம் அவரது 
கட்டுப்பாட்டில் இல்லாதிருத்தலே ஆகும்.

"மந்திரம் கால் மதி முக்கால்" என்றொரு பழமொழி உண்டு. அதன் பொருளாவது எந்த ஒரு காரியத்திலும் வெற்றி பெற மந்திரம் அதாவது மனதின் திறம் கால் பங்கும் மதி அதாவது அறிவு முக்கால் பங்கும் காரணமாகின்றன என்பதேயாம். 

யோகம் பயிலுகையில் முதலில் உடற்பயிற்சியும், அதன் பின்னர் சுவாசப் பயிற்சியும் செய்வித்து இறுதியில் மனப் பயிற்சியைக் கற்பிக்கிறார் ஒரு யோகா ஆசிரியர். உடல் பயிற்சியும் மூச்சுப் பயிற்சியும் மனதைப் புலன்களின் கட்டுப்பாட்டிலிருந்து விடுவிக்க மிகவும் அவசியமாகின்றன. மனம் கட்டுப்பாட்டுக்குள் வந்த பின்னர் மனப் பயிற்சி செய்கையில் மனதில் திறன் கூடுகிறது. கட்டுப்படா மனத்தைப் பயிற்சி செய்விக்க இயலாது. 

ஒரு மாணவன் ஒவ்வொரு பாடத்தையும் கற்பிக்கவென்று பள்ளி கல்லூரிகளில் ஒதுக்கப் படும் நேரத்தைத் தவற விட்டாலோ, கல்வி பயிலுகையில் ஆசிரியர் சொல்லித் தருவதை கவனியாமல் இருந்தாலோ அவன் கல்வியில் திறமை பெற இயலாது. அது போலவே யோகம் பயிலும் மாணவனும் மனதை முதலில் கட்டுப்படுத்தத் தவறிடின் யோகம் கைகூடாது. அனைத்திற்கும் மேலாக மனம் ஐம்புலன்களின் வழியே இழுத்துச் செல்லப்பட்டு இன்பநாட்டம் அதிகரிக்கையில் ஒருவர் எவ்விதப் பாபச் செயலையும் செய்யத் தயங்காத தன்மையை அடைவர். 

அது அவரை மனித நிலையிலிருந்து தாழ்த்தி மிருக நிலைக்குக் கொண்டு சென்று விடும்.

ஒரு குரங்கு எவ்வாறு மரத்தின் கிளைகளிடையேயும் மரங்களிடையேயும் தாவுகிறதோ அதைப் போலவே மனம் ஆசைகளின் வயப்பட்டு ஒரு நிலையில் நிற்காமல் தாவிடும். ஒரு குரங்கு எவ்வாறு மரத்திலிருக்கும் பழங்கள் யாவற்றையும் பிய்த்தெரிந்து தனக்கே உணவில்லாமல் ஆக்கி அழிவுப் பாதையில் செல்கிறதோ அதே போல் மனமும் ஒரு கட்டுப்பாடற்ற மனிதனை அழித்து விடுவதோடு அவனைச் சேர்ந்தவர்களையும் சமுதாயத்தையும் அழித்து விடும் அபாயகரமான தன்மையடைகிறது. 

நம் நாட்டுக்கு சுதந்திரம் கிடைத்து 67 ஆண்டுகள் கழிந்த பின்னரும் இன்னமும் பசியும் பஞ்சமும், நோயும், ஏமாற்றும், கொலைகளும் கொள்ளைகளும், பெண்களைக் கொடுமைப் படுத்தும் கொடூரமும், பச்சிளம் குழந்தைகளைக் கற்பழித்துக் கொல்லும் படுபாதகங்களும் தொடர்ந்து நடைபெற்று சமுதாயம் அமைதியற்று விளங்கக் காரணம் மக்களின் மனங்கள் கட்டுப்பாடற்றுத் தவறான வழியில் ஆசைவயப்பட்டுச் செயல்படுவதனாலேயே ஆகும். மக்கள் என்றால் நாட்டின் குடிகளாக விளங்கும் பொதுமக்களும் ஆட்சிப் 
பொறுப்பில் இருக்கும் அதிகார வர்க்க மக்களும் சேர்த்தே கொள்ள வேண்டும்.



திரைப்படம்: மனம் ஒரு குரங்கு
இயற்றியவர்: வீ. சீதாராமன்
இசை: டி.பி. ராமச்சந்திரன்
பாடியவர்: டி.எம். சௌந்தரராஜன்

மனம் ஒரு குரங்கு மனித மனம் ஒரு குரங்கு அதைத்
தாவ விட்டால் தப்பி ஓட விட்டால் நம்மைப்
பாபத்தில் ஏற்றி விடும் அது பாசத்தில் தள்ளி விடும்

மனம் ஒரு குரங்கு மனித மனம் ஒரு குரங்கு அதைத்
தாவ விட்டால் தப்பி ஓட விட்டால் நம்மைப்
பாபத்தில் ஏற்றி விடும் அது பாசத்தில் தள்ளி விடும்

மனம் ஒரு குரங்கு மனித மனம் ஒரு குரங்கு

அடித்தாலும் அணைத்தாலும் வழிக்கு வராது
அப்படியே விட்டுவிட்டால் முடிவும் இராது
அடித்தாலும் அணைத்தாலும் வழிக்கு வராது
அப்படியே விட்டுவிட்டால் முடிவும் இராது
நயத்தாலும் பயத்தாலும் அடங்கி விடாது
நமக்குள்ளே இருந்து கொண்டு நன்மை தராது

மனம் ஒரு குரங்கு மனித மனம் ஒரு குரங்கு

வெள்ளிப் பணம் நாடி வாலாட்டம் போடும்
கள்ளத்தனம் செய்து வெறியாட்டம் ஆடும்
வெள்ளிப் பணம் நாடி வாலாட்டம் போடும்
கள்ளத்தனம் செய்து வெறியாட்டம் ஆடும்
கள்ளைப் பாலாக்கிக் களியாட்டம் போடும்
கள்ளைப் பாலாக்கிக் களியாட்டம் போடும்
கடவுள் இருப்பதைக் கருதாமல் ஓடும்

மனம் ஒரு குரங்கு மனித மனம் ஒரு குரங்கு

கலையின் பெயராலே காமவலை வீசும்
காசு வருமென்றால் மானம் விலைபேசும்
நிலையில் நிற்காமல் கிளைதோறும் தாவும்
நிம்மதியில்லாமல் அலைபோல மோதும்

மனம் ஒரு குரங்கு மனித மனம் ஒரு குரங்கு அதைத்
தாவ விட்டால் தப்பி ஓட விட்டால் நம்மைப்
பாபத்தில் ஏற்றி விடும் அது பாசத்தில் தள்ளி விடும்
மனம் ஒரு குரங்கு 

1 கருத்து: