வெள்ளி, 19 செப்டம்பர், 2014

அன்னையின் அருளே வா வா வா!

தினம் ஒரு பாடல்: ஜூலை 2, 2014

"நீரின் றமையா துலகெனின் யார்யார்க்கும் 
வானின் றமையா தொழுக்கு"

உலகில் உயிர்கள் வாழ நீர் அடிப்படைத் தேவையாகும். உயிர்கள் வாழ்வதாலேயே பூமியை உலகம் என்கிறோம். உயிர்கள் அழிந்து பட்டால் அதுவும் ஏதேனும் ஒரு வெற்றுக் கிரகமாக ஆகிவிடும். அத்தகைய அபாயத்தையே நோக்கி மனிதகுலம் அறிந்தே முன்னேறுகிறது. இங்கே கற்றவரும் கல்வியறிவில்லாத மூடர்களும் ஓரே மன நிலையில் செயல்படுகின்றனர். காரணம் சுயநலம். 

எப்பாடு பட்டாகிலும் ஒரு வீடு கட்ட வேண்டும் அல்லது வாங்க வேண்டும். கேளிக்கைகள் பல வேண்டும். மாலை நேரமானால் மனம் மயங்கிக் களியாட்டம் போட மது வேண்டும். தான் மட்டும் நிறையத் தங்க நகைகள் அணிய வேண்டும். நிறைய சம்பாதிக்க வேண்டும். காரில் பயணிக்க வேண்டும். ஆகாய விமானத்தில் உலகம் முழுதும் சுற்ற வேண்டும். மூன்று வேளைக்கு நான்கு வேளை வயிறாற வகை வகையாய் உண்ண வேண்டும். விதவிதமாக உயர் ரக ஆடைகள் அணிந்து மகிழ வேண்டும். மிக உயர்ந்த பதவிகளில் அமர்ந்திருக்க வேண்டும். பிறர் தம் முன்னர் கை கட்டி வாய் பொத்தி நின்று மரியாதை செலுத்த வேண்டும். பெரிய தொழிலதிபர்களாகத் திகழ வேண்டும். உலகிலேயே முதல் செல்வந்தனாகத் திகழ வேண்டும் என்பன போன்ற நப்பாசையின் காரணமாக மனிதன் பித்தம் பிடித்தவனைப் போல் செயல்பட்டு இந்த பூமியின் இயற்கை வளங்களை வாரியிறைத்து விற்றுப் பணம் எனும் வெற்றுக் காகிதத்தை பதிலுக்குப் பெற்று அடுக்கும் விபரீத விளையாட்டில் இறங்கி விட்டான்.

ஆதி காலம் முதல் இந்தக் கணம் வரையிலும் நிகழ்ந்த மானிட சரித்திரத்தைக் கூர்ந்து கவனித்தோமெனில் நாம் நம் அறியாமையை நன்கு உணரலாம். எத்துணை கோடி பணமிருந்தாலும் அதில் கோடியில் ஒருபங்கினையும் நாம் முழுமையாக அனுபவிப்பதற்கு முன்னரே உயிர் துறந்து காற்றோடு காற்றாய் மண்ணோடு மண்ணாய் இருந்த இடம் தெரியாமல் அழிந்து மறைந்து போகிறோம். மீதமிருக்கும் அற்பப் பணம் நம் மக்களையும் அவர்கள் பெறும் சந்ததியினரையும் தீய வழியில் தள்ளுகிறது. அதனால் நம் சந்ததியினர் பாவங்கள் பல செய்து, அதனால் பகை மூண்டு மாண்டு போகின்றனர். நம் சந்ததியே பூண்டோடு அழிந்து போகின்றது. இதற்குச் சான்று சரித்திர ஏடுகளில் உள்ளது. வரலாற்றுச் சிறப்பு மிக்க எண்ணிறந்த மன்னர்களும், செல்வந்தர்களும் தொன்று தொட்டு இந்த உலகின் பல நாடுகளில் வாழ்ந்ததற்கான சான்றுகளை நாம் வரலாற்று நூல்களில் படிக்கிறோம். 

அத்தகையோரின் வாரிசுகள் எத்துணை பேர் இன்று நம்மிடையே உயிரோடு வாழ்கின்றனர் என்று நாம் எண்ணிப் பார்த்தோமானால் மிகவும் சொற்பமானோரின் வாரிசுகளே உளர் என்பதை நாம் அறியலாகும். அத்துடன் அந்த வாரிசுகள் மிகவும் சாதாரண மனிதர்களாகவும், பல சந்தர்ப்பங்களில் மிகவும் ஏழைகளாகவும் அடையாளமே தெரிந்து கொள்ள முடியாத நிலையில் திகழ்பவர்களாகவும் இருக்கக் காண்கிறோம். 

நான் ஒரு சுயநலவாதியாக வாழ்ந்து மடிந்தால் அதன் பிறகு என்னைப்பற்றி என் மனைவி மக்களுமே எண்ணிப் பார்க்க விரும்ப மாட்டார்கள். இவ்வுலகம் உய்யவும் உலக மக்கள் துன்பங்கள் நீங்கி இன்புற்று வாழவும் நான் எதுவுமே செய்யாது மடிந்தேனாகில் இவ்வுலகம் என்னைப் பற்றி ஒரு நாளும் எண்ணாது. ஆனால் பயனுள்ள ஏதேனும் ஒரு செயலை நான் செய்து அதனால் இவ்வுலகமும் வருங்கால சந்ததியினரும் பயனடைவார்களே ஆயின் நான் இறந்த பின்னரும் என் பெயர் பல காலம் விளங்கும். அத்தகைய பயனுள்ள வாழ்க்கை வாழப் பண பலமோ சிறப்பான சமூக அந்தஸ்தோ தேவை என்பதில்லை. சாதாரண மனிதன் ஒவ்வொருவரும் இவ்வுலக 
நலன் கருதி அதற்காக சிறிதளவேனும் சேவை செய்ய இயலும். விளை நிலங்களையும் மலைவளங்களையும் பல பன்னாட்டு நிறுவனங்களும் பண முதலைகளும் தங்கள் சுயநலத்துக்காக அழித்து அவற்றில் விளையும் மரங்களையும் பயிர்களையும் அழித்து அவ்விடங்களில் தொழிற்சாலைகளுக்காகவும் இருப்பிடங்களுக்காகவும் கல், மணல், சிமென்டு, இரும்பு என இவ்வாறான பொருட்களைக் கொண்டு கட்டிடங்கள் கட்டுவதையும், இரும்பு, அலுமினியம், நிலக்கரி, சந்தன மரங்கள் போன்ற அரிய மரங்கள் முதலியவற்றுக்காக வன வளங்களை அழிப்பதையும் நிறுத்தப் போராடுவது. நம்மாலியன்ற அளவு மரங்களை நட்டு வளர்ப்பதுவும். காய் கறிகள் முதலானவற்றை நம் வீடுகளிலும் இதர இடங்களிலும் வளர்த்தலும் நாமெல்லோரும் பல குழுமங்களாக சேர்ந்து செய்யலாம். 

உயிர் வாழ் இன்றியமையாத தண்ணீரைத் தொடர்ந்து தருவதாலேயே நதிகளை மக்கள் தாயாக வழிபடுகின்றனர். தமிழர்களின் நதிகளுள் தலையாயது காவிரி நதி. ஆடி மாதம் மழை பெய்ய, காவிரியில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுகையில் பல விழாக்கள் கொண்டாடப் படுகின்றன. அவற்றுள் காவிரியைப் போற்றி வணக்கும் விழாவே "ஆடிப் பெருக்கு".


திரைப்படம்: ஆடிப் பெருக்கு
இயற்றியவர்: கொத்தமங்கலம் சுப்பு
இசை: ஏ.எம். ராஜா
பாடியவர்: சீர்காழி கோவிந்தராஜன்
ஆண்டு: 1962

அன்னையின் அருளே வா வா வா! 
அன்னையின் அருளே வா வா வா! 
ஆடிப் பெருக்கே வா வா வா! 
அன்னையின் அருளே வா வா வா! 

பொன்னிப் புனலே வா வா வா! 
பொங்கும் பாலே வா வா வா! 

அன்னையின் அருளே வா வா வா! 

குடகில் ஊற்றுக் கண்ணாகி 
குலத்தைக் காக்கும் பெண்ணாகி 
குடகில் ஊற்றுக் கண்ணாகி 
குலத்தைக் காக்கும் பெண்ணாகி 
கண்ணன் பாடி அணை தாண்டி 
கார்முகில் வண்ணனை வலம் வந்து 

அன்னையின் அருளே வா வா வா! 

திருவாய் மொழியாம் நாலாயிரமும் 
தேனாய்ப் பெருகும் தமிழே வா 
திருவாய் மொழியாம் நாலாயிரமும் 
தேனாய்ப் பெருகும் தமிழே வா 
திருமால் தனக்கே மாலையாகி 
திருவரங்கம் தனை வலம் வரும் தாயே! 

அன்னையின் அருளே வா வா வா! 

கட்டிக் கரும்பின் சுவையும் நீ 
கம்பன் கவிதை நயமும் நீ 
கட்டிக் கரும்பின் சுவையும் நீ 
கம்பன் கவிதை நயமும் நீ 
முத்துத் தாண்டவர் பாடலிலே 
முழங்கும் பக்திப் பெருக்கும் நீ 

வான் பொய்த்தாலும் தான் பொய்யா 
வற்றாக் கருணை காவேரி 
வான் பொய்த்தாலும் தான் பொய்யா 
வற்றாக் கருணை காவேரி 
வளநாடாக்கும் தாயே நீ 
வாழிய வாழிய பல்லாண்டு!