திங்கள், 23 நவம்பர், 2009

யாரை நம்பி நான் பொறந்தேன்

வளர் சிதை மாற்றம் என்பது இவ்வுலகில் பிறப்பெடுத்து வாழும் ஜீவன்கள் அனைத்திற்கும் இயற்கை வகுத்த நியதி. அதிலிருந்து ஒருவரும் தப்ப இயலாது. பிள்ளைப் பிராயம் முதல் ஒரு குறிப்பிட்ட காலம் வரை நம் உடலின் ஒவ்வொரு அங்கமும் வளர்ச்சியடைந்து, நடுத்தர வயது முதல் இறுதிக் காலம் வரை ஒவ்வொருவரது உடல் பாகங்களும் சிறிது சிறிதாகத் தேய்மானம் அடைந்து செயலிழக்கும் தன்மையைப் பெறும் மாற்றத்தையே வளர் சிதை மாற்றம் என்கிறோம். இத்தகைய மாற்றத்தை நாம் சந்திக்கும் ஒவ்வொரு முதியவரிடமும் கண்டும் நாம் மட்டும் என்றும் முதுமையடையாமல் சுகமாய் வாழ வேண்டும் எனும் நப்பாசையும் ஒவ்வொருவரிடமும் உள்ளது என்பதும் மறுக்க முடியாத உண்மை.
தன்னைப் பெற்று சீராட்டி, பாராட்டி, வளர்த்து ஆளாக்கிய பெற்றோர்கள் வயது முதிர்ச்சியால் ஏற்படும் பலவீனங்களால் வருந்தித் துயருறும் காலத்தில் அவர்களைப் பேணிக் காத்தல் பிள்ளைகளின் தலையாய கடமையாகும். வாழ்வின் சிற்றின்பங்களில் சிக்கிப் பெற்றோரது பொருளை மட்டும் தன் சுகங்களுக்காக அனுபவித்து விட்டுப் பொருள் தீர்ந்த பின்னர் அவர்களை நிராதரவாக விடும் பிள்ளைகள் பிள்ளைகளே அல்ல. வயதான காலத்தில் உடல் நலம் குன்றித் துன்பப் படும் பெற்றோருக்குப் பிள்ளைகளே உற்ற துணை என்பது மனித குலம் வாழ ஆன்றோர் வகுத்த நீதி.

அற்ற குளத்தின் அருநீர்ப் பறவை போல்
உற்றுழித்தீர்வர் உறவல்லர் அக்குளத்தில்
கொட்டியும் ஆம்பலும் நெய்தலும் போலவே
ஒட்டி உறவார் உறவு.

என்று தமிழ் மூதாட்டி ஔவை இக்கருத்தை வலியுறுத்துகிறார்.

"மாதா பிதா குரு தெய்வம்" என்று தெய்வத்திற்கும் மேலாகப் பெற்றோரை நியமித்தனர் சான்றோர். அத்தகைய பெற்றோரைப் பேணிக் காப்போம், நம் நற்செயலைக் கண்டு நம் பிள்ளைகள் நமக்கு வயது முதிர்கையில் அவர்கள் நமக்காகச் செய்யத்தக்க கடமைகளை நிறைவேற்ற விழைவார்கள் எனும் மன நிறைவுடன் வாழ்வோம். தன் பிள்ளைகள் தன்னைக் கைவிட்டதாகக் கருதும் தந்தை ராஜா ரகுபதி வேடத்தில் நடித்துள்ள சிவாஜி கணேசன் பாடுவதாக அமைந்த இப்பாடல் பிள்ளைகளால் கைவிடப் பட்ட முதியவர்களுக்கும் மன உறுதி ஏற்படுத்துவதாக அமைந்துள்ளது.

யாரை நம்பி நான் பொறந்தேன்

திரைப்படம்: எங்க ஊர் ராஜா
இயற்றியவர்: கவிஞர் கண்னதாசன்
இசை: எம்.எஸ். விஸ்வநாதன், பி. ராமமூர்த்தி
பாடியவர்: டி.எம். சௌந்தரராஜன்

யாரை நம்பி நான் பொறந்தேன் போங்கடா போங்க என்
காலம் வெல்லும் வென்ற பின்னே வாங்கடா வாங்க
யாரை நம்பி நான் பொறந்தேன் போங்கடா போங்க என்
காலம் வெல்லும் வென்ற பின்னே வாங்கடா வாங்க

குளத்திலே தண்ணியில்லே கொக்குமில்லே மீனுமில்லே
குளத்திலே தண்ணியில்லே கொக்குமில்லே மீனுமில்லே
பெட்டியிலே பணமில்லே பெத்த புள்ளே சொந்தமில்ல

யாரை நம்பி நான் பொறந்தேன் போங்கடா போங்க என்
காலம் வெல்லும் வென்ற பின்னே வாங்கடா வாங்க

தென்னையப் பெத்தா இளநீரு பிள்ளையப் பெத்தா கண்ணீரு
தென்னையப் பெத்தா இளநீரு பிள்ளையப் பெத்தா கண்ணீரு
பெத்தவன் மனமே பித்தம்மா பிள்ளை மனமே கல்லம்மா
பானையிலே சோறிருந்தா பூனைகளும் சொந்தமடா
சோதனையைப் பங்கு வச்சா சொந்தமில்லே பந்தமில்லே

யாரை நம்பி நான் பொறந்தேன் போங்கடா போங்க என்
காலம் வெல்லும் வென்ற பின்னே வாங்கடா வாங்க

நெஞ்சமிருக்கு துணிவாக நேரமிருக்கு தெளிவாக
நெஞ்சமிருக்கு துணிவாக நேரமிருக்கு தெளிவாக
நினைத்தால் முடிப்பேன் சரியாக நீ யார் நான் யார் போடா போ
ஆடியிலே காத்தடிச்சா ஐப்பசியில் மழை வரும்
தேடி வரும் காலம் வந்தா செல்வமெல்லாம் ஓடி வரும்

யாரை நம்பி நான் பொறந்தேன் போங்கடா போங்க என்
காலம் வெல்லும் வென்ற பின்னே வாங்கடா வாங்க

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக