ஞாயிறு, 10 ஜூலை, 2011

தேன் உண்ணும் வண்டு

வெகு சில ஆண்டுகளுக்கு முன்னர் நம் நாட்டிலும் மற்றும் உலகெங்கிலும் இயற்கை வளங்கள் மிகச் செழிப்பாக விளங்கியதுண்டு. ஆறுகளிலும் குளங்களிலும், ஏரிகளிலும் கிணறுகளிலும் நீர் தூய்மையாக இருந்தது. எனவே மக்கள் குடிநீருக்காக வருந்தும் சூழ்நிலை பாலைவனம் போன்ற ஒரு சில பகுதிகளிலன்றி வேறு எங்கும் இருக்கவில்லை. மக்களின் வாழ்க்கை முறை மிகவும் எளிதாக இருந்ததால் தேவைகளும் குறைவாகவே இருந்தன. நாளடைவில் விஞ்ஞான வளர்ச்சியுடன் மக்களின் தேவைகள் வளர்ந்ததுடன் தனிமனித ஒழுக்கம் குறைந்ததனால் மக்கள் இயற்கையைப் பாதுகாக்கத் தவறிவிட்டனர். இதன் காரணமாக ஒரு சில இடங்களிலன்றி வேறெங்கும் இயற்கைச் சூழ்நிலையைக் காண்பது அரிதாகி வ்ருகிறது. கிராமங்கள் குறைந்து நகரங்கள் பெருகி, மரங்களும் செடிகளும் புல்வெளிகளும் இருந்த இடங்களிலெல்லாம் கல்லாலும் மண்ணாலும் ஆன கட்டடங்கள் தொடர்ந்து கட்டப்பட்டு வளங்கள் குன்றி வருகின்றன. இது மிகவும் ஆபத்தான போக்காகும். இத்தகைய போக்கு மாறாவிடில் வெகுவிரைவில் மனிதகுலம் மட்டுமன்றிப் பிற உயிர்களும் உண்ண உணவும் அருந்த நீரும் இன்றி வாடி மடியும் நிலை நேர்ந்துவிடும். சீனா, ஜப்பான் முதலிய நாடுகள் இவ்வபாயத்தை உணர்ந்து இருப்பிடங்கள் அமைக்கையில் அவற்றை இயற்கைச் சூழ்நிலையில் ஏற்படுத்துவதில் கருத்தாக இருக்கின்றனர். அவர்களிடம் உலகின் பிற நாடுகளில் வாழும் மக்களும் அரசாங்க நிர்வாகிகளும் பாடம் கற்றுக்கொள்ள வேண்டும்.

இயற்கை வளங்கள் செழித்து விளங்கிய காலத்தில் மனித குலத்தினர் காதல்வயப்படுகையில் தங்களது காதல் உணர்வை இயற்கையில் நிகழும் சம்பவங்களுடன் ஒப்பிட்டு மகிழ்ந்து அது போலவே தாங்களும் மனதார இணைந்து உயர்வு பெற்ற வாழ்வை வாழ்ந்தனர். மீண்டும் அத்தகைய செழிப்பான காலம் வருமா என்பது கேள்விக்குறியாகவே உள்ளது. அத்தகைய காலம் மீண்டும் வர வேண்டுமெனில் மனிதன் தனது பேராசையை விட்டு அனைவரும் ஒற்றுமையாய் எளிய வாழ்க்கை வாழ்வதிலே திருப்திகொண்டு தீமைகளைக் குறைத்து இயற்கை வளங்களைப் பாதுகாப்பதில் அதிக அக்கரை கொண்டு உலகை வளப்படுத்த வேண்டும்.

தேன் உண்ணும் வண்டு

திரைப்படம்: அமரதீபம்
இயற்றியவர்: ஆத்மநாதன்
இசை. T. சலபதி ராவ், G. ராமநாதன்
பாடியோர்: ஜிக்கி, ஏ.எம். ராஜா
ஆண்டு: 1956

தேன் உண்ணும் வண்டு மாமலரைக் கண்டு
திரிந்தலைந்து பாடுவதேன் ரீங்காரம் கொண்டு
பூங்கொடியே நீ சொல்லுவாய் ஓஓஓஓ
பூங்கொடியே நீ சொல்லுவாய்

வீணை இன்பநாதம் எழுந்திடும் விநோதம்
விரலாடும் விதம் போலவே
காற்றினிலே தென்றல் காற்றினிலே
காற்றினிலே சலசலக்கும் பூங்கொடியே கேளாய்
புதுமை இதில் தான் என்னவோ ஓஓஓஓ
புதுமை இதில் தான் என்னவோ?

மீன் நிலவும் வானில் வெண்மதியைக் கண்டு
ஏனலைகள் ஆடுவதும் ஆனந்தம் கொண்டு
மென்காற்றே நீ சொல்லுவாய் ஓஓஓஓ
மென் காற்றே நீ சொல்லுவாய்

கானமயில் நின்று வான்முகிலைக் கண்டு
களித்தாடும் விதம் போலவே..
கலையிதுவே வாழ்வின் கலையிதுவே
கலையிதுவே சலசலெனும் மெல்லிய பூங்காற்றே
காணாததுமேன் வாழ்விலே ஓஓஓஓ
காணாததுமேன் வாழ்விலே

கண்ணோடு கண்கள் பேசிய பின்னாலே
காதலின்பம் அறியாமல் வாழ்வதும் ஏனோ?
கலைமதியே நீ சொல்லுவாய் ஒஓஓஓ
கலைமதியே நீ சொல்லுவாய்
ஓஓஓ ஓஓஓ

சிரிப்பேன் சிரிப்பேன் சிரித்துக்கொண்டிருப்பேன்

இடுக்கண் வருங்கால் நகுக அதனை
அடுத்தூர்வது அஃதொப்ப தில்

எனும் குறள் வழியே நாம் வாழ்நாள் உள்ளளவும் என்றும் எத்தகைய துன்பம் நேரிடினும் சிரித்த முகத்திடனேயே இருக்கப் பழக வேண்டும். இன்பம் துன்பம் எதுவும் நிரந்தரமில்லை. இவ்வுலகில் அனைத்தும் தோன்றி மறையும் இயல்புடையவையே. வாழ்வில் ஏற்படும் துன்பங்களால் விளையும் கவலையை நீக்க வல்ல அருமருந்து சிரிப்பு ஒன்றே. "வாய் விட்டுச் சிரித்தால் நோய் விட்டுப் போகும்" என்றொரு பழமொழி உள்ளது. இதன் பொருளாவது சிரித்த முகத்துடன் சந்தோஷமான மனநிலையை என்றும் கொள்பவர்களுக்கு நோய்களை எதிர்த்துப் போரிடும் சக்தி இயல்பாகவே அதிகரிக்கிறது என்பதேயாகும்.

"சிரித்த முகமில்லாதவன் கடை வைக்க முடியாது" எனும் ஒரு சீனப் பழ்மொழி உள்ளது. இதன் பொருளாவது ஒரு வியாபாரி தன் கடைக்கு வரும் வாடிக்கையாளர்களை இன்முகத்துடன் எதிர்கொண்டு அவர்கள் வாங்க விரும்பும் பொருட்களை அவர்களுக்கு முறையாக விற்றாலன்றி அவரது வியாபாரம் செழிக்காது என்பதே. மேலும் ஒருவர் தம் துன்பங்களையே என்று பெரிதென எண்ணி எந்நாளும் வாடிய முகத்துடனே காணப்படுவாராகில் அவரிடம் யாரும் சென்று உரையாடவோ பழகவோ விரும்ப மாட்டார்கள். துன்பங்களைத் துணிவுடன் எதிர்கொண்டு என்றும் இன்முகத்துடன் விளங்குபவர்களையே உறவினரும் நண்பர்களும் விரும்புவர்.

வாழ்வில் உண்மையில் விளையும் துன்பங்களுக்காக வருந்துவது யதார்த்த நிலை. அவ்வாறன்றி வாழ்விலுள்ள அனைத்து நிகழ்ச்சிகளிலும் துன்பங்களே விளைவதாகக் கற்பனை செய்துகொண்டு மகிழ்ச்சியான வாழ்வின் பாதையை நிரந்தரமாக அடைத்து என்றும் மனச் சோர்வுடனே காணப்படுவது இன்னொரு நிலை. இத்தகைய ஒரு மனோ வியாதியால் எல்லாவற்றிலும் துன்பத்தையே கண்டு அவதிப்படும் ஒரு நபர் தன் மன நிலை தேறி, தானும் பிறரைப் போலவே இன்ப துன்பங்களை சிரித்த முகத்துடனே எதிர்கொள்ளப் பழகி பக்குவமடைவதைக் காட்டும் ஒரு வித்தியாசமான தமிழ்த்திரைப்படம் "சின்னஞ்சிறு உலகம்".

எதைப்பார்த்தாலும் அதில் ஒரு துன்ப சூழ்நிலை ஏற்படுவதாகக் கற்பனை செய்து வருத்தப் படும் கதாபாத்திரத்தில் நாகேஷ் இப்படத்தில் நடித்துள்ளார்.

சிரிப்பேன் சிரிப்பேன் சிரித்துக்கொண்டிருப்பேன்

திரைப்படம்: சின்னஞ்சிறு உலகம்
இயற்றியவர்: கவிஞர் வாலி
இசை: கே.வி. மஹாதேவன்
பாடியோர்: சீர்காழி கோவிந்தராஜன், எல்.ஆர். ஈஸ்வரி
ஆண்டு: 1966

சிரிப்பேன் சிரிப்பேன் சிரித்துக்கொண்டிருப்பேன்
மூச்சும் பேச்சும் உள்ளவரை
நினைப்பேன் நினைப்பேன் நினைத்துக்கொண்டிருப்பேன்
நெஞ்சில் நினைவு நீங்கும் வரை
சிரிப்பேன் சிரிப்பேன் சிரித்துக்கொண்டிருப்பேன்
மூச்சும் பேச்சும் உள்ளவரை - உன்னை
நினைப்பேன் நினைப்பேன் நினைத்துக்கொண்டிருப்பேன்
நெஞ்சில் நினைவு நீங்கும் வரை

அடி ஆயாயாயாய அக்கூ

இருப்பேன் இருப்பேன் இருந்துக்கிட்டிருப்பேன்
ஒங்கிட்ட சிரிப்பு உள்ளவரை
ரசிப்பேன் ரசிப்பேன் ரசிச்சிக்கிட்டிருப்பேன்
கடோசி மூச்சு நிக்கும் வரை
இருப்பேன் இருப்பேன் இருந்துக்கிட்டிருப்பேன்
ஒங்கிட்ட சிரிப்பு உள்ளவரை
ரசிப்பேன் ரசிப்பேன் ரசிச்சிக்கிட்டிருப்பேன்
கடோசி மூச்சு நிக்கும் வரை - என்
கடோசி மூச்சு நிக்கும் வரை

ஒரு பல்லவி என்பது நீயாக - அனு
பல்லவி என்பது நானாக - மனம்
சரணம் சரணம் என்றாக - இசை
பாடிடுவோம் நாம் ஒன்றாக

மலைக் காட்டுக்குள் ஊரணி நானாக - அதில்
கவலை ஏத்தம் நீயாக - நல்ல
நல்ல மானம் வெட்கம் வரப்பாக - நாம்
வாழ்ந்து காட்டணும் பொறுப்பாக

சிரிப்பேன் சிரிப்பேன் சிரித்துக்கொண்டிருப்பேன்
மூச்சும் பேச்சும் உள்ளவரை - உன்னை
நினைப்பேன் நினைப்பேன் நினைத்துக்கொண்டிருப்பேன்
நெஞ்சில் நினைவு நீங்கும் வரை

உன் கண்களில் பூத்தது அல்லிப்பூ - இரு
கன்னத்தில் சேர்ந்தது ரோஜாப்பு உன்
உள்ளத்தில் இருப்பது பூரிப்பு - இரு
உதட்டில் இருப்பது புன்சிரிப்பு

இது சினிமாக் காரங்க அளப்பு அதைப்
படிச்சிட்டுத் தான் இந்த வர்ணிப்பு
சினிமாக் காரங்க அளப்பு அதைப்
படிச்சிட்டுத் தான் இந்த வர்ணிப்பு - சொந்த
மூளைக்கு வேண்டும் ஒளப்பு - அது
என்னைக்கும் நெரந்தரப் பொளப்பு

சிரிப்பேன் சிரிப்பேன் சிரித்துக்கொண்டிருப்பேன்
மூச்சும் பேச்சும் உள்ளவரை - உன்னை
நினைப்பேன் நினைப்பேன் நினைத்துக்கொண்டிருப்பேன்
நெஞ்சில் நினைவு நீங்கும் வரை

இருப்பேன் இருப்பேன் இருந்துக்கிட்டிருப்பேன்
ஒங்கிட்ட சிரிப்பு உள்ளவரை
ரசிப்பேன் ரசிப்பேன் ரசிச்சிக்கிட்டிருப்பேன்
கடோசி மூச்சு நிக்கும் வரை - என்
கடோசி மூச்சு நிக்கும் வரை