திங்கள், 20 ஜூன், 2011

ஆடுவோமே பள்ளு பாடுவோமே

கவிஞர்கள் வாக்கு வன்மை பெற்றவர்கள். அவர்கள் வாழ்த்தினாலும் வைதாலும் அவர்களது வாக்கு பலிக்கும் என்று நம் சமுதாயத்தில் பெரும்பாலானோர் நம்புகின்றனர். இத்தகைய வாக்குப் பலிதம் கொண்ட கவிஞர்கள் பலரைப் பற்றியும் அவர்கள் வாக்கு பலித்த நிகழ்ச்சிகளையும் நாம் நூல்களில் படித்துள்ளோம் பிறர் சொல்லிக் கேள்விப்பட்டதும் உண்டு. அவ்வாறு படித்த கேள்விப்பட்ட நிகழ்ச்சிகள் உண்மையில் நிகழ்ந்தனவா அல்லது அவற்றைப் பிறருக்கு எடுத்துரைத்தவர் தம் கற்பனையைக் கலந்து மிகைப்படுத்தினரா எனபதை நாமறியோம்.

எது எவ்வாறாயினும் நமது நாட்டிலே பிறந்து வளர்ந்து நம் தேச விடுதலைக்குப் பாடுபட்டுழைத்த மஹாகவி பாரதியார் சொன்ன வாக்கு பலித்ததை நாம் கண்கூடாகக் காண்கிறோம். வெள்ளையரின் ஆதிக்கத்தில் நம் நாடு இருந்த காலத்திலேயே வாழ்ந்து மறைந்த போதிலும் சுதந்திர இந்தியாவைத் தன் மனக்கண் முன்னர் கண்டு அதில் ஒரு சுதந்திரம் பெற்ற பிரஜையாக மனதாலேயே வாழ்ந்தார் பாரதியார்.

கவிஞர்கள் மட்டுமல்ல, உண்மையான நம்பிக்கையுடன் யாரும் இத்தகைய மனநிலையை அடைவாரெனில் அவரது எண்ணம் ஈடேறுவது உறுதி. இது மனத்தின் மாபெரும் சக்தியாகும். பல மாபெரும் தலைவர்கள் தங்களது உடல், பொருள், ஆவி அனைத்தையும் நாட்டுக்கென அர்ப்பணித்து ஆயுள் முழுதும் தாமும் தமது குடும்பமும் வறுமையில் வாடிய போதிலும் அதனைப் பொருட்படுத்தாது நாடு விடுதலையடைவதொன்றே தமது லட்சியமாகக் கொண்டு பாடுபட்டுப் பெற்றுத்தந்த சுதந்திரத்தை நாம் இந்நாளில் பெரும்பாலும் இழந்து விட்டோம். ஏழைகள் வளம் பெறக்
கோடானு கோடிகள் கொட்டிக் கொடுப்பதாக அரசியல் மேடைகளெங்கும் பேசப்பட்டாலும் அவ்வாறு கொட்டிய கோடிகள் யாவும் இடையில் உள்ள சுயநலவாதிகளுகே பெரும்பாலும் போய்ச்சேரும் இழிநிலை நம் நாடெங்கிலும் நிலவுகிறது.

இத்தகைய நிலைமை நீங்கி நம் நாடு நல்லாட்சி பெற்று நீதி நிலைபெற வேண்டுமென்று நாமெல்லோரும் என்றும் மனதில் விரும்பிப் பிரார்த்தனை செய்வதுடன் அத்தகைய நல்ல நிலைமை ஏற்படத் தக்கவாறு நமது வாழ்வையும் நடவடிக்கைகளையும் அமைத்துக் கொண்டு, சுயநலத்தை விடுத்து, துன்பப் படுவோருக்கு நம்மாலியன்ற உதவிகளைத் தவறாமல் செய்து வாழ்வோம்.

ஆடுவோமே பள்ளு பாடுவோமே

இயற்றியவர்: மஹாகவி பாரதியார்
இசை: எஸ்.வி. வெங்கரராமன்
பாடியவர்: டி.கே. பட்டம்மாள்

ஆடுவோமே பள்ளு பாடுவோமே
ஆனந்த சுதந்திரம் அடைந்து விட்டோமென்று
ஆடுவோமே பள்ளு பாடுவோமே
ஆனந்த சுதந்திரம் அடைந்து விட்டோமென்று
ஆடுவோமே பள்ளு பாடுவோமே
ஆனந்த சுதந்திரம் அடைந்து விட்டோமென்று
ஆடுவோமே

எங்கும் சுதந்திரம் என்பதே பேச்சு
எங்கும் சுதந்திரம் என்பதே பேச்சு நாம்
எல்லோரும் சமமென்பதுறுதியாச்சு
எங்கும் சுதந்திரம் என்பதே பேச்சு நாம்
எல்லோரும் சமமென்பதுறுதியாச்சு
சங்கு கொண்டே வெற்றி ஊதுவோமே
சங்கு கொண்டே வெற்றி ஊதுவோமே

பூம்.. புபுபு பூம் புபுபு பூம் புபுபு பூம்

சங்கு கொண்டே வெற்றி ஊதுவோமே
இதை தரணிக்கெல்லாமெடுத்து ஓதுவோமே
சங்கு கொண்டே வெற்றி ஊதுவோமே
இதை தரணிக்கெல்லாமெடுத்து ஓதுவோமே
ஆடுவோமே

உழவுக்கும் தொழிலுக்கும் வந்தனை செய்வோம்
உழவுக்கும் தொழிலுக்கும் வந்தனை செய்வோம் - வீணில்
உண்டு களித்திருப்போரை நிந்தனை செய்வோம்
உழவுக்கும் தொழிலுக்கும் வந்தனை செய்வோம் - வீணில்
உண்டு களித்திருப்போரை நிந்தனை செய்வோம்
விழலுக்கு நீர் பாய்ச்சி மாயமாட்டோம் வெறும்
வீணருக்குழைத்துடலம் ஓயமாட்டோம்
ஆடுவோமே

நாமிருக்கும் நாடு நமதென்பதறிந்தோம்
நாமிருக்கும் நாடு நமதென்பதறிந்தோம் இது
நமக்கே உரிமையாம் என்பதறிந்தோம்
நாமிருக்கும் நாடு நமதென்பதறிந்தோம் இது
நமக்கே உரிமையாம் என்பதறிந்தோம்
பூமியில் எவர்க்கும் இனி அடிமை செய்யோம்
பூமியில் எவர்க்கும் இனி அடிமை செய்யோம்
பூமியில் எவர்க்கும் இனி அடிமை செய்யோம் பரி
பூரணனுக்கே அடிமை செய்து வாழ்வோம் பரி
பூரணனுக்கே அடிமை செய்து வாழ்வோம்

ஆடுவோமே பள்ளு பாடுவோமே
ஆனந்த சுதந்திரம் அடைந்து விட்டோமென்று
ஆடுவோம் ஆடுவோம் ஆடுவோம் ஆடுவோம் ஆடுவோமே

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக