திங்கள், 4 ஜனவரி, 2010

நான் உன்னை வாழ்த்திப் பாடுகிறேன்

மனிதத் தாயின் கருவறையிலிருந்து வெளியேறி பூமித்தாயின் மடியில் விழுந்த நாள் முதலாய் நாம் காண்பவற்றையும், பிற புலன்களால் உணர்பவற்றையும் தெரிந்து கொள்ளும் முயற்சியில் புதிய அறிவையும் அனுபவங்களையும் பெற்று வாழ்ந்து வருகின்ற நிலையில், பொறுப்பேதுமின்றி விளையாடித் திரியும் பிள்ளைப் பருவம் முடிந்ததும், வாழ்க்கை ஒரு போராட்டம் என உணர்கிறோம். அப்போராட்டத்துக்கு நம்மைத் தகுதியுடையவர்களாக ஆக்கிக்கொண்டு பல விதமான இலக்குகளை விதித்துக் கொண்டு அவற்றை அடையும் முயற்சியில் தொடர்ந்து செயல்படுகிறோம். காலம் செல்லச் செல்ல இலக்குகள் மாறுவதும், வெற்றி, தோல்வி எனும் இருவேறு நிலைகளால் மனம் ஒரு நிலையில் நில்லாமல் அலைபாய்வதும் எனப் பல காலம் இருந்த பின்னர் உலகே மாயம், வாழ்வே மாயம் எனப்பல தத்துவங்களைப் பற்றிப் பேசி ஒரு வித விரக்தி நிலையில் நாம் காலத்தைக் கழிக்கிறோம்.

இரவும் பகலும் மாறி மாறி வருவதைப் போலவும், கோடை, வசந்தம், குளிர்காலம் என்று பருவ காலங்கள் மாறி மாறி வருதல் போலவும் வாழ்க்கையின் ஒவ்வொரு நிகழ்விலும் வெவ்வேறு நிலைகளை உணர்ந்த போதிலும் அவ்வித வேற்றுமைகளால் மனம் சஞ்சலமடையாமல், அமைதியான நிலையில் சலனமற்றிருக்கும் தன்மையை நாம் அடைவோமேயானால் வாழ்வின் இடர்ப்பாடுகளால் அதிகம் பாதிக்கப்படாமல் தொடர்ந்து வாழ்வை உற்சாகமுடன் வாழ வழி காணலாம்.

புத்தாண்டு பிறக்கும் இத்தருணத்தில் சென்ற ஆண்டின் வெற்றிகளையும் மகிழ்ச்சிகளையும் உடன் அழைத்துச் செல்கையில், கடந்த காலத்தின் துன்பங்களையும் தோல்விகளையும் மூட்டை கட்டி எங்காவது போட்டுவிட்டு, இன்று புதிதாய்ப் பிறந்தோம் எனும் மனப்பாங்குடன் வருங்காலத்தை வரவேற்போம்.

மஹாகவி பாரதியார் தமது பகவத் கீதை உரையில் கீழ்க்கண்டவாறு கூறுகிறார்:

"பொலிக, பொலிக, பொலிக, போயிற்று வல்லுயிர்ச் சாபம், நலியும் நரகமும் நைந்த நமனுக்கு யாதொன்றுமில்லை; கலியுங்கெடும், கண்டு கொண்மின்" என்று நம்மாழ்வார் திருவாய் மொழியிற் கூறிய நம்பிக்கையை உள்ளத்தில் நிலை நிறுத்திக் கொள்ள வேண்டும். இதற்குப் பக்திதான் சாதனம். பக்தியாவது, "ஈசன் நம்மைக் கைவிட மாட்டான்" என்ற உறுதியான நம்பிக்கை.

"வையகத்துக் கில்லை மனமே, யுனக்கு நலஞ்
செய்யக் கருதியது செப்புவேன் - பொய்யில்லை,
எல்லா மளிக்கும் இறைநமையுங் காக்குமென்ற
சொல்லா லழியுந் துயர்"


நான் உன்னை வாழ்த்திப் பாடுகிறேன்


திரைப்படம்: நூற்றுக்கு நூறு
இயற்றியவர்: கவிஞர் வாலி
இசை: வி. குமார்
பாடியவர்: பி. சுசீலா
ஆண்டு: 1971

பன்னிரண்டு மணியளவில் குளிர்ப்
பனி விழும் நள்ளிரவில்
க்ண்ணிரண்டில் மலர்ந்திடவே - இன்பக்
கனவுகள் வர வேண்டும்
ஹேப்பி பர்த்டே டூ யூ

நான் உன்னை வாழ்த்திப் பாடுகிறேன் நீ வர வேண்டும்
உன் நினைவில் மயங்கி ஆடுகிறேன் நீ வர வேண்டும்
நான் உன்னை வாழ்த்திப் பாடுகிறேன் நீ வர வேண்டும்
உன் நினைவில் மயங்கி ஆடுகிறேன் நீ வர வேண்டும்
கடந்த வருடம் நடந்ததெல்லாம் பழைய ஏட்டிலே
கனிந்து வரும் புது வருடம் புதிய பாட்டிலே

நான் உன்னை வாழ்த்திப் பாடுகிறேன் நீ வர வேண்டும்
உன் நினைவில் மயங்கி ஆடுகிறேன் நீ வர வேண்டும்

மாதா கோவில் மணியோசை நம்மைப் போற்றும் அருளோசை
தேவா நீயும் வா
உருகும் மெழுகில் ஒளியுண்டு ஒளியின் நிழலில் உறவுண்டு
உயிரே நெருங்கிவா
வருங்காலம் பொன்னாக வாழ்நாளில் ஒன்றாக
எதிர்பார்க்கும் நேரத்தில் எனைத் தேடி வாராயோ?
நெஞ்சே என்னிடம் நினைவோ உன்னிடம்
நெஞ்சே என்னிடம் நினைவோ உன்னிடம்

உன்னை வாழ்த்திப் பாடுகிறேன் நீ வர வேண்டும்
உன் நினைவில் மயங்கி ஆடுகிறேன் நீ வர வேண்டும்

இதயம் எனது காணிக்கை இணைவோம் என்ற நம்பிக்கை
அழைத்தேன் ஓடிவா
ஓடும் காலம் ஓடட்டும் இளமை நின்று வாழட்டும்
அழகைத் தேடி வா
உனக்காகப் பெண்ணுண்டு உறங்காத கண்ணுண்டு
தனக்காக வாழாமல் தவிக்கின்ற நெஞ்சுண்டு
ஆசை ஊஞ்சலில் ஆடும் வேளையில்
ஆசை ஊஞ்சலில் ஆடும் வேளையில்

உன்னை வாழ்த்திப் பாடுகிறேன் நீ வர வேண்டும்
உன் நினைவில் மயங்கி ஆடுகிறேன் நீ வர வேண்டும்
நான் உன்னை வாழ்த்திப் பாடுகிறேன் நீ வர வேண்டும்
உன் நினைவில் மயங்கி ஆடுகிறேன் நீ வர வேண்டும்