திங்கள், 23 நவம்பர், 2009

ஏட்டில் படித்ததோடு இருந்து விடாதே

நற்பண்புகளை வளர்க்காத கல்வி பயனற்றது என்பதனாலேயே பள்ளிகளிலும் கல்லூரிகளிலும் பயிலும் மாணவர்களுக்குப் பல அறிஞர்கள் எழுதிய நீதிகளையும் அத்தகைய உத்தமர்கள் வாழ்க்கை வரலாறுகளையும் போதிக்கின்றனர் ஆசிரியப் பெருமக்கள். கல்வி கற்றுத் தேர்ந்த பின்னர் அக்கல்வித் தகுதியைக் கொண்டு பொருளீட்டுவது ஒன்றையே நோக்காகக் கொண்டு தாம் கற்ற நீதிகளையும் பிற நன்னெறி புகட்டும் செய்திகளையும் காற்றில் பறக்கவிட்டு வாழ்வோர் வாழ்க்கை முழுமையடையாது. ஒருவர் உலகில் அனைவராலும் மதிக்கப்பட வேண்டுமெனில் அவர் நற்பண்புகளின் உறைவிடமாக விளங்குதல் அவசியம்.
நற்பண்புகளில் முக்கியமானது பிறரது நம்பிக்கையில் குறுக்கிடாமை. ஒருவர் தமக்குப் பிடித்த மதத்தைத் தழுவுதலும், தமக்குப் பிடித்த கடவுளரை வணங்குதலும், கடவுள் நம்பிக்கை இல்லாதிருப்பதும், சோதிடத்தில் நம்பிக்கை வைப்பதும், சோதிடம் மூடநம்பிக்கை எனக் கொள்வதும் அவரது தனி உரிமை. இதில் பிறர் குறுக்கிடுவது அநாகரீகமாகக் கருதப்படும்.

தாம் நம்புவதையே பிறரு்ம் நம்ப வேண்டும் என யாரும் யாரையும் கட்டாயப்படுத்துதல் ஜனநாயக மரபன்று. நம்மில் மூத்தோரிடம் பணிவாக நடந்து கொள்தலும், பிறர் மனம் புண்படும் படி ஏதும் கூறாதிருத்தலும், அனைவரிடமும் இன்சொல் பேசிப் பழகுதலும் குறிப்பிடத்தக்க அவசியமான நற்பண்புகளாகும்.

ஏட்டில் படித்ததோடு இருந்து விடாதே

திரைப்படம்: குமாரராஜா
ஆண்டு: 1957
இசை: டி.ஆர். பாப்பா
பாடலாசிரியர்: பட்டுக்கோட்டை கலியாணசுந்தரம்
பாடியவர்: பி.லீலா

ஏட்டில் படித்ததோடு இருந்து விடாதே
ஏட்டில் படித்ததோடு இருந்து விடாதே
ஏன் படித்தோம் என்பதையும் மறந்து விடாதே - நீ
ஏட்டில் படித்ததோடு இருந்து விடாதே

நாட்டின் நெறி தவறி நடந்து விடாதே - நம்
நாட்டின் நெறி தவறி நடந்து விடாதே
நல்லவர்கள் தூற்றும் படி வளர்ந்து விடாதே - நீ

ஏட்டில் படித்ததோடு இருந்து விடாதே

மூத்தோர் சொல் வார்த்தைகளை மீறக் கூடாது - நீ
மூத்தோர் சொல் வார்த்தைகளை மீறக் கூடாது - பண்பு
முறைகளிலும் மொழிதனிலும் மாறக்கூடாது
மாற்றார் கைப் பொருளை நம்பி வாழக் கூடாது - தன்
மானமில்லாக் கோழையோடு சேரக் கூடாது - நீ

ஏட்டில் படித்ததோடு இருந்து விடாதே

துன்பத்தை வெல்லும் கல்வி கற்றிட வேணும்
சோம்பலைக் கொல்லும் திறன் பெற்றிட வேணும்
வம்பு செய்யும் குணமிருந்தால் விட்டிட வேணும் - நீ
வம்பு செய்யும் குணமிருந்தால் விட்டிட வேணும்
அறிவு வளர்ச்சியிலே அறிவு வளர்ச்சியிலே வான்முகட்டைத் தொட்டிட வேணும்
அறிவு வளர்ச்சியிலே வான்முகட்டைத் தொட்டிட வேணும் - நீ

ஏட்டில் படித்ததோடு இருந்து விடாதே

வெற்றி மேல் வெற்றி வர விருது வர பெருமை வர
மேதைகள் சொன்னது போல் விளங்கிட வேணும்
வெற்றி மேல் வெற்றி வர விருது வர பெருமை வர
மேதைகள் சொன்னது போல் விளங்கிட வேணும்
பெற்ற தாயின் புகழும் நீ பிறந்த மண்ணின் புகழும் ஆ
பெற்ற தாயின் புகழும் நீ பிறந்த மண்ணின் புகழும்
வற்றாமல் உன்னோடு வளர்ந்திட வேணும் - நீ

ஏட்டில் படித்ததோடு இருந்து விடாதே
ஏன் படித்தோம் என்பதையும் மறந்து விடாதே - நீ
ஏட்டில் படித்ததோடு இருந்து விடாதே

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக