புதன், 9 ஜூலை, 2014

கடவுளும் நானும் ஒரு ஜாதி

தினம் ஒரு பாடல், ஜூன் 8, 2014

"புல்லாகிப் பூடாய்ப் புழுவாய் மரமாகிப்
பல்விருக மாகிப் பறவையாய்ப் பாம்பாகிக்
கல்லாய் மனிதராய்ப் பேயாய்க் கணங்களாய்
வல்லசுர ராகி முனிவராய்த் தேவராய்ச்
செல்லாஅ நின்றஇத் தாவர சங்கமத்துள்
எல்லாப் பிறப்பும் பிறந்திளைத்தேன் எம்பெருமான்
மெய்யேயுன் பொன்னடிகள் கண்டின்று வீடுற்றேன்.'' 

என்ற மாணிக்கவாசகரின் திருவாசகத் தீர்ப்பிலிருந்து தெரிவதென்னவெனில் மனிதப் பிறப்பெய்துமுன் நாம் ஒவ்வொருவரும் மனிதரிலும் அறிவிலும் ஆற்றலிலும் குறைந்த பல பிறப்புக்களை எடுத்துள்ளோம் என்பதே. அத்தகைய மனிதப் பிறவி பெறுதற்கரிது ஏனெனில் அறிவை வளர்த்துக்கொண்டு, பற்றுக்களைக் களைந்து பரம மெய்ஞ்ஞானம் பெற்றுப் பிறவிப் பிணி நீக்கிப் பேரின்ப வாழ்வு வாழ ஒரு வாய்ப்பை அளிப்பது மனிதப் பிறவி. 

இப்பிறவியில் மனத்தை அசுத்தப்படுத்தும் காமம், குரோதம், கோபம், லோபம் மதம், மாத்சர்யம் ஆகிய ஆறு தீய குணங்களை ஞானத் தீயால் பொசுக்கித் தவத்தால் அழிப்பவர் யாரோ அவரே மனிதப் பிறவியை அடுத்து வரக்கூடிய பேய், கணங்கள், வல்லசுரர் எனும் பாபம் நிறைந்த சபிக்கப்பட்ட பிறப்புகளை எய்தாமல் நேரடியாக முனிவராகவும் தேவராகவும் ஆக வல்லவர் ஆவார்.

தேவர் எனப்படும் கடவுளுக்குப் பிறப்பும் இல்லை இறப்பும் இல்லை. அத்தகைய இறைத் தன்மையையும் அதற்கேற்ற வல்லமையையும் இவ்வுலகில் பிறந்த ஒவ்வொருவராலும் அடைய முடியும் என்று சுவாமி விவேகானந்தர் தம் ராஜ யோகா உரையில் உறுதியாகக் குறிப்பிடுகின்றார். அத்துடன் தவம் செய்யும் வழிகள், தவம் செய்வோர் அடையத்தக்க பல்வேறு அமானுஷ்ய சக்திகள் ஆகியன பற்றியும் விவரமாகக் குறிப்பிட்டுக் காட்டுகிறார். ஒரே சமயத்தில் பல இடங்களில் தோன்றுவதும், எங்கோ வேறு ஓரிடத்தில் நடைபெறும் நிகழ்வை 
ஞானக் கண்ணால் காண்பதும், எங்கோ வெகுதொலைவில் இருக்கும் ஒருவரிடம் மனத்தால் தொடர்பு கொண்டு பேசுவதும் அத்தகைய சக்திகளுள் சிலவாகும் என்கிறார் விவேகானந்தர்.

கோயில் சுடுகாடு கொல்புலித்தோல் நல்லாடை 
தாயுமிலி தந்தையிலி தான் தனியன் காணேடீ 
தாயுமிலி தந்தையிலி தான்தனியன் ஆயிடினும் 
காயில் உலகனைத்துங் கற்பொடிகாண் சாழலோ

திருவாசகத்தின் எனும் வரிகளால் தாயும் தந்தையுமற்ற அநாதை என்று இறைவனை இகழ்வது போலப் புகழ்கிறார் மாணிக்க வாசகர். அதன் உள்ளர்த்தமாவது தாய், தந்தை, உற்றார் உறவினர் என்பவர்கள் யாவரும் நமக்கு உண்மையான சொந்தங்களல்ல, இடையில் தோன்றி மறையும் பந்தங்களே என்பதாகும். இவ்வுண்மை உணர்ந்தோரே ஞானியராகத் தகுந்தவர் ஆவர். நம்மால் இல்லறம் நடத்துகையில் முனிவர்கள் போல் தவம் செய்தல் சாத்தியமன்றெனினும். கர்மயோகம் செய்வதன் மூலம் இல்லறத்திலேயே ஞானம் எய்துதல் இயலும் என்பதை உலகுக்கு உணர்த்திய முனிவர் சனகர் ஆவார். 

ஞானமடைவதற்கு முதலில் எதற்கும் துக்கப்படும் இயல்பைக் கைவிட வேண்டும். எது வந்தாலும் ஏற்றுக்கொள்ளும் மனப்பக்குவம் அடைதல் வேண்டும். புல்லினும் அற்பமான கவலையை விடுத்து தான் வாழும் ஒவ்வொரு நிமிடமும் பேரானந்த நிலையில் லயித்திருக்க எவன் ஒருவன் பழகிக்கொள்கிறானோ அவனே ஞானியாவான்.

நம் கதாநாயகன் அத்தகைய ஒரு ஞானியாவான். படிப்பறிவற்ற அநாதையாயிருக்கையிலும் கவலையின்றிக் கை வண்டியிழுத்துக் கடவுள் தன்மையுடன் வாழ்பவன்.



திரைப்படம்: தாயில்லாப் பிள்ளை
இயற்றியவர்: கவிஞர் கண்ணதாசன்
இசை: கே.வி. மஹாதேவன்
பாடியவர்: ஏ.எல். ராகவன்

ஹாஹஹாஹா ஹாஹாஹாஹா ஹாஹஹாஹ ஹா
ஹாஹஹாஹா ஹாஹாஹாஹா ஹாஹஹாஹ ஹா

கடவுளும் நானும் ஒரு ஜாதி ஒரு ஜாதி அந்த
கௌரவம் எனக்கும் சரிபாதி
கடவுளும் நானும் ஒரு ஜாதி ஒரு ஜாதி அந்த
கௌரவம் எனக்கும் சரிபாதி
கடவுளும் நானும் ஒரு ஜாதி ஒரு ஜாதி

கடவுளைப் பெத்த அம்மா யாருன்னு
கடவுளுக்கே இன்னுந் தெரியாது 
கடவுளைப் பெத்த அம்மா யாருன்னு
கடவுளுக்கே இன்னுந் தெரியாது இந்தக்
கட்டையப் பெத்தவ யாரோ எவரோ
எனக்கும் இன்னும் புரியாது
கட்டையப் பெத்தவ யாரோ எவரோ
எனக்கும் இன்னும் புரியாது
புரியாது புரியாது புரியாது

கடவுளும் நானும் ஒரு ஜாதி ஒரு ஜாதி 

அடி விழுந்தாலும் உதை விழுந்தாலும்
கடவுள் அழுவது இல்லீங்க
அடி விழுந்தாலும் உதை விழுந்தாலும்
கடவுள் அழுவது இல்லீங்க என்ன
அடிச்சுப் பாருங்க ஒதைச்சுப் பாருங்க
நானும் அழவே மாட்டேங்க
அடிச்சுப் பாருங்க ஒதைச்சுப் பாருங்க
நானும் அழவே மாட்டேங்க
அழ மாட்டேங்க அழ மாட்டேங்க அழ மாட்டேங்க!

கடவுளும் நானும் ஒரு ஜாதி ஒரு ஜாதி

கடவுள் படித்த பள்ளிக்கூடத்த 
தேடுறேன் தேடுறேன் பல நாளா
கடவுள் படித்த பள்ளிக்கூடத்த 
தேடுறேன் தேடுறேன் பல நாளா அதக் 
காண முடியல்லே அதனால் நானும்
படிப்ப விட்டுட்டேன் சிலநாளா
காண முடியல்லே அதனால் நானும்
படிப்ப விட்டுட்டேன் சிலநாளா
சில நாளா சில நாளா சில நாளா

கடவுளும் நானும் ஒரு ஜாதி ஒரு ஜாதி அந்த
கௌரவம் எனக்கும் சரிபாதி
கடவுளும் நானும் ஒரு ஜாதி ஒரு ஜாதி

ஹாஹஹாஹா ஹாஹாஹாஹா ஹாஹஹாஹ ஹா
ஹாஹஹாஹா ஹாஹாஹாஹா ஹாஹஹாஹ ஹா

செவ்வாய், 8 ஜூலை, 2014

இதய வானிலே உதயமானதே

ஜுன் 06, 2014

நிறைவேறக் கடினமான, அல்லது தாமதமாகும் ஆசைகள் நம் மனதில் இருக்கையில் அந்த ஆசை நிறைவேறும் நாளை எண்ணி எண்ணி ஏங்குவதும், நிறைவேறி விட்டாதவே கற்பனை செய்து கனவு கண்டு மகிழ்வதும் மனித இயல்பு. மஹாகவி பாரதியார் நம் நாடு ஆங்கிலேயர் ஆட்சியிலிருந்து சுதந்திரம் பெறுவதற்கு முன்பே இவ்வுலகை விட்டு இறைவனடி சேர்ந்து விட்டாரானாலும் தன் கண் முன்னே சுதந்திரம் வந்து விட்டதாகக் கற்பனை செய்து ஆடுவோமே பள்ளு பாடுவோமே ஆனந்த சுதந்திரம் அடைந்து விட்டோமென்று பாடினார். இது தேசபக்தியினால் வரும் கனவு. இத்தகைய உயர்ந்த கனவுகள் தமக்கென வாழாப் பிறர்க்குரியாளரான மிகவும் அறிவு முதிர்ந்த ஞானியருக்கே தோன்றும். 

நம்மைப் போன்ற இல்லற வாழ்வில் சுகம் தேடும் சாதாரண மனிதர்களுக்குத் தோன்றும் கனவுகள் பெரும்பாலும் இவ்வுலக வாழ்வில் எய்த விரும்பும் சுகபோகங்களைப் பற்றியதாகவே இருக்கும். அதிலும் குறிப்பாகத் திருமண வயதில் இருக்கும் வாலிபர்களுக்கும் இளம் பெண்களுக்கும் அக்கனவு அநேகமாகக் காதல் கனவாகவே இருக்க வாய்ப்புகள் அதிகம். அத்தகைய கனவுகளும் கற்பனைகளும் மனதில் தோன்றுகையில் ஒருவரது இதய வானில் அது வரை காணாத ஒரு புதிய உலகமே உதயமாகும். அப்புதிய உலகத்திலே அவர் தன் காதல் துணையுடன் கற்பனையில் அனுபவிக்கும் சுகமே பேரின்ப நிலையை அளிப்பதாக அமைவதுண்டு.

இங்கே ஒரு சிற்பி தன் மனதைக் கொள்ளை கொண்ட அன்புக் காதலியை எண்ணிக் கனவு கண்டு தன் இதய வானில் கோட்டை கட்டித் தன் காதல் வாழ்வில் அனுபவிக்கக் கூடிய இன்பங்களை மனதிலே கண்டு இன்புற்று இனிமையாகப் பாடுகிறான். அவனது குரலுடன் அவனது காதலியின் குரலும் சேர்ந்து ஒலிக்க அங்கே ஒரு புதிய உலகமே உருவாகிறது.



திரைப்படம்: கற்புக்கரசி
இயற்றியவர்: பட்டுக்கோட்டை கலியாணசுந்தரம்
இசை: ஜி. ராமநாதன்
பாடியவர்: டி.எம். சௌந்தரராஜன், ஜிக்கி

இதய வானிலே உதயமானதே
இதய வானிலே உதயமானதே - நான்
இது வரையில் காணாத புதிய லோகமே
இதய வானிலே உதயமானதே - நான்
இது வரையில் காணாத புதிய லோகமே
இதய வானிலே உதயமானதே

இன்பநிலை...
இன்பநிலை என்னவென்று கண்டு கொண்டேனே - நான்
கண்டு கொண்டேனே - மெய்
அன்புவலை வீசும் தங்கச் சிலையைக் கண்டேனே - மெய்
அன்புவலை வீசும் தங்கச் சிலையைக் கண்டேனே
ஆனந்தமெனும் தேனமுதம் உண்ணுகின்றேனே
எல்லாம் இனிமேலே ஆகும் மனம் போலே
எல்லாம் இனிமேலே ஆகும் மனம் போலே

இதய வானிலே உதயமானதே நான்
இது வரையில் காணாத புதிய லோகமே

நன்மையெல்லாம்........
நன்மையெல்லாம் நாடி வந்து சேரக் கண்டேனே - நான்
சேரக் கண்டேனே 
நல்லோர் உறவு தேடிவரும் பலனைக் கண்டேனே
நல்லோர் உறவு தேடிவரும் பலனைக் கண்டேனே

எந்நாளும் இதை எண்ணியெண்ணி மகிழ்ந்திடுவேனே
எந்நாளும் இதை எண்ணியெண்ணி மகிழ்ந்திடுவேனே
எல்லாம் இனிமேலே ஆகும் மனம் போலே
எல்லாம் இனிமேலே ஆகும் மனம் போலே

இதய வானிலே உதயமானதே நான்
இது வரையில் காணாத புதிய லோகமே
இதய வானிலே உதயமானதே

இஷ்ட தெய்வம் நேரில் வந்து தோன்றக் கண்டேனே
இஷ்ட தெய்வம் நேரில் வந்து தோன்றக் கண்டேனே - அது
என்னையென்றும் கைவிடாது என்று கண்டேனே - அது
என்னையென்றும் கைவிடாது என்று கண்டேனே

எந்நாளும் இதை எண்ணியெண்ணி மகிழ்ந்திடுவேனே
எந்நாளும் இதை எண்ணியெண்ணி மகிழ்ந்திடுவேனே
எல்லாம் இனிமேலே ஆகும் மனம் போலே
எல்லாம் இனிமேலே ஆகும் மனம் போலே

இதய வானிலே உதயமானதே நான்
இது வரையில் காணாத புதிய லோகமே
இதய வானிலே உதயமானதே

திங்கள், 7 ஜூலை, 2014

யாரடி வந்தார் என்னடி சொன்னார்?

பெண்கள் அலங்காரப் பிரியர்கள். தங்கள் உடலை ஆரோக்கியமாக வைப்பதிலும் பெண்கள் சமர்த்தர்கள். அதிலும் குறிப்பாக நம் நாட்டுப் பெண்கள் உடையலங்காரமும். சடையலங்காரமும், நகையலங்காரமும் உலகப் பிரசித்தி பெற்றவை.


கவிஞர் கண்ணதாசன் பெண்கள் அழகுறத் திகழ எவ்வாறு இருக்க வேண்டும் என்று பின் வருமாறு கூறுகிறார்:


"அழகு என்றால், முடியை ஆறு அங்குலமாக வெட்டி, ஜம்பரைத் தூக்கிக் கட்டி, பின்னால் வருவோருக்கு முக்கால் முதுகு தெரிகிற மாதிரி ஜாக்கெட் போட்டு, பாதி வயிற்றையும் பார்வைக்கு வைக்கும் நாகரிக அழகல்ல.

காஞ்சிபுரம் கண்டாங்கி கட்டி, அரைக்கை ரவிக்கை போட்டு, ஆறடிக் கூந்தலை அள்ளி முடித்து, மல்லிகைப் பூச்சூடி, முகத்துக்கு மஞ்சள் பூசி, குங்குமப் பொட்டு வைத்து, கால் பார்த்து நடந்து வரும் கட்டழகையே, `மகாலட்சுமி போன்ற அழகு’ என்றார்கள்.

அவள் பார்க்கும்போது கூட நேருக்கு நேர் பார்க்கமாட்டாள்.

“யான்நோக்கும் காலை நிலன்நோக்கும் நோக்காக்கால்
தான்நோக்கி மெல்ல நகும்.”

என்றான் வள்ளுவன்."

ஆறடிக் கூந்தல் பெண்கள் யாரேனும் வளர்த்திப் பராமரித்துள்ளனரா? தற்காலத்தில் பராமரிக்கின்றனரா? என்ற கேள்வி நம்முள் பலத்த சந்தேகத்துடன் எழுகிறது.


இந்த ஆறடி கூந்தலைப் பற்றிக் கவிஞர் கண்ணதாசன் ஒரு பாடலில் அமர்க்களமாய் அள்ளித் தெளித்திருக்கிறார் தமக்கே உரிய தெள்ளு தமிழில்.



திரைப்படம்: வானம்பாடி
இயற்றியவர்: கவியரசு கண்ணதாசன்
இசை: எம்.எஸ். விஸ்வநாதன்
பாடியவர்: எல்.ஆர். ஈஸ்வரி
ஆண்டு: 1963

யாரடி வந்தார் என்னடி சொன்னார்? 
ஏனடி இந்த உல்லாசம்?
யாரடி வந்தார் என்னடி சொன்னார்? 
ஏனடி இந்த உல்லாசம்?
காலடி மீதில் ஆறடிக் கூந்தல் 
மோதுவதென்னடி சந்தோஷம்?
காலடி மீதில் ஆறடிக் கூந்தல் 
மோதுவதென்னடி சந்தோஷம்?

யாரடி வந்தார் என்னடி சொன்னார்? 
ஏனடி இந்த உல்லாசம்?

ஆறடிக் கூந்தலை அள்ளி முடித்து
ஓரடி ஈரடி மெல்ல எடுத்து
ஆறடிக் கூந்தலை அள்ளி முடித்து
ஓரடி ஈரடி மெல்ல எடுத்து
பாரடி வந்து பக்கத்திலே - காதல்
காவடி தூக்கும் கண்களிரண்டை
வேலடி போலடி போடி வராமல்
காவடி தூக்கும் கண்களிரண்டை
வேலடி போலடி போடி வராமல்
ஏனடி நின்றாய் வெட்கத்திலே?

யாரடி வந்தார் என்னடி சொன்னார்? 
ஏனடி இந்த உல்லாசம்?
காலடி மீதில் ஆறடிக் கூந்தல் 
மோதுவதென்னடி சந்தோஷம்?
யாரடி வந்தார் என்னடி சொன்னார்? 
ஏனடி இந்த உல்லாசம்?

நில்லடி நில்லடி கண்ணடியோ ஓஓஓஓஓஓஓ
என்னடி என்னடி சொல்லடியோ ஓஓஓஓஓ
நில்லடி நில்லடி கண்ணடியோ
என்னடி என்னடி சொல்லடியோ
முன்னடி பின்னடி போடடியோ - இங்கு
அன்றொரு நாளடி வந்தவள் யாரடி
என்பதைக் கேளடி உண்மையைக் கூறடி
அன்றொரு நாளடி வந்தவள் யாரடி
என்பதைக் கேளடி உண்மையைக் கூறடி
என் பெயர் கேட்டுச் சொல்லடியோ!

யாரடி வந்தார்?
யாரடி வந்தார் என்னடி சொன்னார்? 
ஏனடி இந்த உல்லாசம்?
காலடி மீதில் ஆறடிக் கூந்தல் 
மோதுவதென்னடி சந்தோஷம்?
காலடி மீதில் ஆறடிக் கூந்தல் 
மோதுவதென்னடி சந்தோஷம்?

யாரடி வந்தார் என்னடி சொன்னார்? 

ஏனடி இந்த உல்லாசம்?

வெள்ளி, 4 ஜூலை, 2014

மல்லிகைப் பூ ஜாதி ரோஜா

june 04, 2014

ஏறத் தாழ ஒரு வருடத்துக்கு என் உடல் நிலை, மற்றும் பல்வேறு கடமைகள் காரணமாகத் தடைபட்டிருந்ததினம் ஒரு பாடல் பதிவைத் திரும்பவும் புத்துணர்ச்சியோடு தொடர்கிறேன். 60 ஆண்டுகளைக் கடந்து வருகின்ற ஜீலை மாதம் 8ஆம் நாள் 61 வயது நிறைவடைய இருக்கும் நான் என் அனுபவத்தில் கண்டறிந்து உணர்ந்தவற்றை இணையத் தமிழ் நண்பர்கள் பலருடன் பகிர்ந்து கொள்ளும் பெரும் பேறு கிட்டியது என் பெரும் பாக்கியம்.


வாழ்வில் என்றும் நாம் பிறர்க்கு உதவி செய்யத்தக்க சந்தர்ப்பத்தை எதிர்நோக்கியே வாழ வேண்டும். தனக்கு தனக்கு என்று மட்டும் வாழ்ந்து அடையாளம் தெரியாமல் மடிவது மடமை. நம்மிடம் எவ்வளவு பொருள் உள்ளது என்பது பிறர்க்கு உதவி செய்ய ஒரு பொருட்டல்ல. இன்றும் நம்மிடையே பலர் பிறருக்குதவும் நோக்கத்துடனே வாழ்ந்து வருகின்றனர், தான் ஈட்டிய செல்வமனைத்தையும் பிறர் நலனுக்காகவே செலவிட்டுத் தியாக வாழ்வு வாழ்கின்றனர். இத்தகைய தெய்வப் பிறவிகளைப் பற்றிய செய்திகள் முகநூல் உட்படப் பல இணைய தளங்களில் தினந்தோறும் வருவதைப் பார்க்கிறோம். நாமும் அத்தகைய நல்லோரை உதாரணங்களாகக் கொண்டு சேவை மனப்பான்மையுடன் வாழ்வோமெனில் அதில் கிடைக்கும் பேரானந்தம் வேறுதிலும் கிடைக்காது என்ற உண்மையை உணர்வோம். 


முக்கியமாக நாம் உடல் ஊனமுற்றோருக்கும், பார்வையற்றோருக்கும், வறுமையால் வாடும் ஏழைகளுக்கும், வயதில் மூத்தவர்களுக்கும் உவந்து சேவை செய்ய வேண்டும். அப்பொழுதுதான் நாம் மனித நிலையிலிருந்து தெய்வ நிலையை எய்த முடியும். அதையே கவிஞர் கண்ணதாசன், "மனிதன் என்பவன் தெய்வமாகலாம், வாரி வாரி வழங்கும் போது வள்ளலாகலாம், வாழை போலத் தன்னைத் தந்து தியாகியாகலாம்!" என்று எல்லோரும் புரிந்து கொள்ளும் எளிய சொற்களால் இனிமையாக விளக்கினார்.


ஒரு பார்வையற்ற பெண் ஒரு பொருட்காட்சித் திடலில் ஓரிடத்தில் நின்று கொண்டு தான் தொடுத்த பூக்களை விற்கும் முயற்சியில் அங்குள்ள மக்களைத் தன் இனிய குரலால் பாடி அழைக்கிறாள். தான் தொடுத்த பூக்களை வாங்கி இன்புறுமாறு வேண்டுகிறாள். ஆனால் அங்குள்ள மனிதர்கள் திடலில் அமைத்திருக்கும் விளையாட்டு அரங்கங்களில் பொழுதைக் கழித்துக் கொண்டு இவளை கவனிக்கத் தவறுகையில் அப்பெண்ணின் அருகே சற்று தொலைவில் நின்று கொண்டிருக்கும் ஒரு அன்புள்ளம் கொண்ட வாலிபன் அப்பெண்ணின் துன்பத்தைக் கண்டு மனம் வாடுகிறான். அவள் துன்பம் தீருமா என ஏங்குகிறான். சற்று நேரத்தில் அவனுக்கு ஒரு யோசனை தோன்றுகிறது. தனது கால்சட்டைப் பையில் வைத்திருக்கும் "மவுத் ஆர்கன்" இசைக் கருவியைக் கைகளில் எடுத்துக்கொண்டு அப்பெண் பாடும் பாடலுக்கேற்றவாறு அதனை வாசிக்கிறான்.


அவ்விசை கேட்டு அங்கு கூடியிருக்கும் மக்கள் சட்டெனத் திரும்பி இவர்கள் இருவரும் இருக்கும் திசையில் பார்க்கின்றனர். பின்னர் அவர்களில் பலர் இவர்களிடம் வந்து நிற்கின்றனர். அவர்களுள் பலர் அப்பெண்ணின் பூக்களை விலை கொடுத்து வாங்குகின்றனர். சில நொடிகளில் பூக்கள் அனைத்தும் விற்றுத் தீர்ந்து விடுகின்றன. அவ்வாலிபன் பூக்கள் விற்ற காசை எண்ணுகிறான். அப்பெண் தன் பூக்கூடையைத் தடவிப் பார்க்கிறாள். அதில் ஓரே ஒரு ரோஜா மலர் மட்டும் உள்ளது. அதனை எடுத்து உள்ளன்புடன் தன் துயர் துடைக்கத் துணை வந்த அவ்வாலிபனிடம் கொடுக்கிறாள். தன் இதயத்தையே அவனுக்குத் தருவதாக அர்த்தம்.


உள்ளத்தைத் தொடும் இப்பாடல் காட்சி "ராஜி என் கண்மணி" என்ற பழைய திரைப்படத்தில் இடம் பெற்றது. கண்பார்வையற்ற பெண்ணாக பராசக்தி திரைப்படத்தில் நடிகர் திலகம் சிவாஜி கணேசனின் தங்கை கல்யாணி வேடமேற்று நடித்த ஸ்ரீ ரஞ்சனியும் அவ்வாலிபனாக முன்னாள் நகைச்சுவை நடிகர் டி.ஆர். ராமச்சந்திரனும் சிறப்புற நடித்து நம் கண்களில் நீரை வரவழைக்கின்றனர்.


தன்னலம் மறப்போம்! உலகுக்குதவ உழைப்போம்!



திரைப்படம்: ராஜி என் கண்மணி 
பாடலாசிரியர்: 
இசை: எஸ். ஹனுமந்த ராவ் 
பாடியோர்: ஆர். பாலசரஸ்வதி 
Year: 1954ஆண்டு: 1954 

மல்லிகைப் பூ ஜாதி ரோஜா
முல்லைப் பூவும் வேணுமா?
தொட்டாலும் கை மணக்கும் பூவும்
பட்டான ரோஜா பூவும்
கதம்பம் வேணுமா?
மல்லிகைப் பூ ஜாதி ரோஜா
முல்லைப் பூவும் வேணுமா?
தொட்டாலும் கை மணக்கும் பூவும்
பட்டான ரோஜா பூவும்
கதம்பம் வேணுமா?

சும்மா கையாலே தொடுத்தாலும்
கண்ணாலே கண்டதில்லை
அம்மா வாங்குவீர்! ஐயா வாங்குவீர்!
அம்மா வாங்குவீர்! ஐயா வாங்குவீர்!

பண்பான காதலி முன்பாகத் தூது போகும்
ஆசை மலர்ந்து ஆனந்தமே உண்டாகும்.
பண்பான காதலி முன்பாகத் தூது போகும்
ஆசை மலர்ந்து ஆனந்தமே உண்டாகும்.

ரோஜா மலர் வேணுமா 
ஜாதி மலர் வேணுமா?
ரோஜா மலர் வேணுமா நல்ல
ஜாதி மலர் வேணுமா?
சல்லாப மாலை உல்லாச வேளை
எல்லோரும் வாங்கிடுவீரே!

மல்லிகைப் பூ ஜாதி ரோஜா
முல்லைப் பூவும் வேணுமா?
தொட்டாலும் கை மணக்கும் பூவும்
பட்டான ரோஜா பூவும்
கதம்பம் வேணுமா?

ரோஜா மலர் வேணுமா நல்ல
ஜாதி மலர் வேணுமா?
சல்லாப மாலை உல்லாச வேளை
எல்லோரும் வாங்கிடுவீரே!

மல்லிகைப் பூ ஜாதி ரோஜா
முல்லைப் பூவும் வேணுமா?
தொட்டாலும் கை மணக்கும் பூவும்
பட்டான ரோஜா பூவும்
கதம்பம் வேணுமா?