ஞாயிறு, 14 பிப்ரவரி, 2016

ஒன்றுபட்டால் உண்டு வாழ்வு

தினம் ஒரு பாடல் _ நவம்பர் 28 2015

"பகையாளி குடும்பத்தை உறவாடிக் கெடு" என்றொரு வழக்கு தொன்றுதொட்டே வழங்கி வருகிறது. நண்பரைப் போல் உறவாடி பகைவரின் நம்பிக்கைக்குப் பாத்திரமாகி தக்க சமயம் பார்த்து நம்பிக்கை துரோகம் செய்து பகைவரை அழிப்பது அரசியலில் ஒரு தந்திரம். இதை உலகெங்கிலும் பல நாடுகளை ஆட்சி செய்த அந்நாளைய மன்னர்களும் இந்நாளைய அரசியல்வாதிகளும் சிறப்பாகவே செய்து வருகின்றனர்.  இவ்வாறு மக்களை மதரீதியில் பிரித்து வைத்து ஒற்றுமையைக் குலைத்து, ஜாதி மதக் கலவரங்களைத் தூண்டி அத்தகைய நிலைமையைத் தங்களுக்கு சாதகமாக்கிக்கொண்டு இந்தியாவை ஆங்கிலேயர் 200 ஆண்டுகள் அடிமைப் படுத்தி ஆண்டு வந்தனர். இவ்வாறு மதக் கலவரத்தைத் தூண்ட வெள்ளையர்கள் நம் நாட்டின் வரலாற்றின் முக்கிய நிகழ்வுகளை உண்மைக்குப் புறம்பாகத் திரித்துக் கூறியும் வரலாற்று ஆதாரங்கள் பலவற்றை அழித்தும் பொய்க் கதைகளைப் பரப்பினர்.

ஆங்கிலேயரிடமிருந்து இந்தியா சுதந்திரமடைந்து 65 ஆண்டுகளுக்கு மேல் ஆன நிலையில் இத்தகைய பிரித்தாளும் சூழ்ச்சி பன்மடங்காகப் பெருகி நாடெங்கும் மக்கள் மதவெறித் தாக்குதலில் ஈடுபட்டு ஒருவரோடொருவர் முரண்பட்டுக் கொலைபாதகச் செயல்களைப் புரியவும் தயங்காத சூழ்நிலையை உருவாக்கி விட்டனர் சில சுயநல அரசியல்வாதிகள். ஒரு மதத்தவரை உயர்த்திப் பேசுவதும் பிற மதத்தவரைத் தாழ்த்துவதும் இவர்களது தந்திரம். இவ்வாறு மாறுபட்ட அணிகளில் இயங்கி ஒருவரோடொருவர் சண்டை பிடித்துக் கொள்ளும் அரசியல்வாதிகள் மக்களை ஏமாற்றுவதில் மட்டும் ஒற்றுமையாக இருக்கின்றனர். ஒரு கட்சியினர் புரியும் குற்றங்களுக்கான தண்டனையிலிருந்து மாற்றுக் கட்சியினர் குற்றவாளிகளைத் தப்புவிப்பது எழுதப்படாத ஒரு ஒப்பந்தமாகவே நம் நாட்டில் நிலவுகிறது.

ஜனநாயகம் என்பது நம் நாட்டில் உள்ளதா என்பதே கேள்விக்குறியாக உள்ளது. ஐந்தாண்டுகளுக்கொரு முறை மத்திய அரசையும் மாநில அரசுகளையும், உள்ளாட்சி நிர்வாகிகளையும் தேர்வு செய்ய வாக்களிப்பது ஒன்றே ஜனநாயகத்தின் அடையாளமாக இருக்கிறது. வாக்களித்து ஆட்சியாளர்களைத் தேர்வு செய்த பின்னர் மக்கள் தூக்கி எரியப் படுவதும், அரசியல்வாதிகள் தேர்தலில் நிற்கையில் தந்த வாக்குறுதிகளைத் தாம் வென்ற பின்னர் நிறைவேற்றாமலேயே தட்டிக் கழித்துத் தமது சொத்து சுகங்களைப் பெருக்குவதிலேயே குறியாகச் செயல்பட்டு மக்களை நிரந்தரமாக ஏமாற்றிப் பிழைப்பது வாடிக்கையாகி விட்டது.

இத்தகைய அரசியல் சூழ்ச்சிகளை முறியடிக்க மக்கள் செய்யத்தக்கது ஒன்றே ஒன்று மட்டுமே. எக்காராணம் கொண்டும் தம்மில் ஒற்றுமை நீங்காமல் பாதுகாப்பாக அனைத்து மதத்தினரும் தமது சொந்த சகோதரர்களாக பாவித்து நாம் இந்தியர்கள் எனும் உணர்வுடன் வாழ்ந்து நேர்மையற்ற அரசியல்வாதிகளை அரசியல் களத்தில் நிற்கவொட்டாமல் செய்வதொன்றே அரசியல்வாதிகளின் பிரித்தாளும் சூழ்ச்சியை முறியடிக்கும் உபாயமாகும்.

மத நல்லிணக்கத்தைப் பேணிக் காப்போம்! அனைத்து மதத்தினரையும் அரவணைத்து பாரதத் தாயின் புதல்வர்கள் என்ற ஓரே அடையாளத்துடன் வாழ்வோம்! ஜனநாயகத்தை மீட்போம்! நாட்டைக் காப்போம்!


இயற்றியவர்: பட்டுக்கோட்டை கலியாணசுந்தரம்
இசை: கே.வி. மஹாதேவன்
பாடியோர்: ஜிக்கி, டி. எம். சௌந்தரராஜன்

ஒன்றுபட்டால் உண்டு வாழ்வு
ஒற்றுமை நீங்கிடில் தாழ்வு ஒ ஓஓஓ
ஒன்றுபட்டால் உண்டு வாழ்வு
ஒற்றுமை நீங்கிடில் தாழ்வு
உள்ளத்திலே ஒரு கள்ளமில்லாமல்
ஊருக்குள்ளே பல பேதம் கொள்ளாமல்

ஒன்றுபட்டால் உண்டு வாழ்வு
ஒற்றுமை நீங்கிடில் தாழ்வு

ஆஆ ஆஆ ஆஆ ஆஆ ஆஆ

ஜாதிகள் யாவும் ஒன்றாக மாறும்
தேதியில் தோன்றும் பெருமை
சண்டைகள் தீர்ந்தே மனிதர்கள் சேர்ந்தால்
தாரணியில் அது புதுமை

ஜாதிகள் யாவும் ஒன்றாக மாறும்
தேதியில் தோன்றும் பெருமை
சண்டைகள் தீர்ந்தே மனிதர்கள் சேர்ந்தால்
தாரணியில் அது புதுமை

உண்மை தெரிந்தால் தன்னை உணர்ந்தால்
ஓடி மறைந்திடும் மடமை
ஓடி மறைந்திடும் மடமை

ஒன்றுபட்டால் உண்டு வாழ்வு
ஒற்றுமை நீங்கிடில் தாழ்வு

நேசமும் அன்பும் நிலையாக வேண்டும்
நேர் வழி வேண்டும் உறவில்
பேசிடும் அன்பு செயல் முறையானால்
பேரின்பம் வேறெது உலகில்

நேசமும் அன்பும் நிலையாக வேண்டும்
நேர் வழி வேண்டும் உறவில்
பேசிடும் அன்பு செயல் முறையானால்
பேரின்பம் வேறெது உலகில்

காணா வளமும் மாறா நலமும்
கண்டிடலாம் அன்பு நினைவில்
கண்டிடலாம் அன்பு நினைவில்

ஒன்றுபட்டால் உண்டு வாழ்வு
ஒற்றுமை நீங்கிடில் தாழ்வு
உள்ளத்திலே ஒரு கள்ளமில்லாமல்
ஊருக்குள்ளே பல பேதம் கொள்ளாமல்

ஒன்றுபட்டால் உண்டு வாழ்வு
ஒற்றுமை நீங்கிடில் தாழ்வு