திங்கள், 23 நவம்பர், 2009

தெய்வம் தந்த வீடு வீதியிருக்கு

வேதாந்தமும் சித்தாந்தமும் நாம் வாழ்வில் படும் துன்பங்களால் ஏற்படும் துயரங்களை மறந்து, இயற்கையின் ரகசியத்தை ஓரளவு உணர்ந்து, தொடர்ந்து மன அமைதியுடன் வாழத் துணைபுரிகின்றன. உண்மையாய் உழைத்து, தன் கடமைகளைச் செய்வதில் கண்ணும் கருத்துமாக இருந்து, தன்னை நம்பியவர்களைக் காப்பதில் உறுதியாக நிற்பவனுக்கு சந்தர்ப்ப சூழ்நிலை காரணமாக ஏற்படும் இடர்களை நீக்க தெய்வம் உற்ற துணையாக நிற்கும். அவனது நண்பர்களும், உற்றார், உறவினர் முதலான யாவரும் அவனுக்கு முன்வந்துதவுவர். அவன் சமுதாயத்தில் அனைவராலும் தொடர்ந்து மதிக்கப்படுவான்.
தன் கடமைகளை மறந்து, வாழ்வின் அடிப்படைத் தேவைகளைப் பூர்த்தி செய்துகொள்வதற்குமே பிறரது தயவை எதிர்நோக்கி சோம்பேரியாக வாழும் சிலர் நாவில் இவ்வேதாந்தமும் சித்தாந்தமும் சிக்கித் தவிப்பதுண்டு. முற்றும் துறந்த ஞானியர் போல் தத்துவங்களை அள்ளி வீசுவதில் இத்தகையவர்கள் உண்மை ஞானிகளை விடவும் வல்லவர்களாக விளங்குவதுண்டு. இத்தகைய வீணர்களுக்கு தெய்வமும் உதவாது, பிறரும் அவனை மதிக்க மாட்டார்கள். தன் தவறுகளை உணர்ந்து நல்வழியில் உழைத்து வாழ அவன் முயலாதவரை அவனது வாழ்வு பெரும்பாலும் துயரமானதாகவே அமையும்.

அத்தகையதொரு கதாபத்திரத்தை இயக்குநர் சிகரம் கே. பாலச்சந்தர் 1975ஆம் ஆண்டு வெளிவந்த தனது "அவள் ஒரு தொடர்கதை" படத்தில் அமைத்தார். அக்கதாபாத்திரத்தில் ஜெய்கணேஷ் மிகவும் இயல்பாக நடித்துள்ளார். இவர் பாடுவதாக அமைந்த ஒரு பாடலை ஜெசுதாஸ் அவர்கள் பாடியுள்ளா. வீணை பாலச்சந்தர் இயக்கத்தில் 1964ஆம் வருடம் வெளிவந்த "பொம்மை" எனும் திரைப்படத்தில் வரும் "நீயும் பொம்மை, நானும் பொம்மை" என்று பிச்சைக்காரன் ஒருவன் பாடுவதாக அமைந்த பாடலைப் பாடி தமிழ்த்திரையுலகில் காலடி எடுத்து வைத்த ஜேசுதாஸ் அதன் பின்னர் தமிழ்ப் படங்களில் நீண்ட காலத்துக்குப் பின்னர் தன் இசைப்பயணத்தைத் தொடர ஒரு படிக்கல்லாக அமைந்தது "தெய்வம் தந்த வீடு வீதியிருக்கு" எனும் அவள் ஒரு தொடர்கதை திரைப்படப் பாடல்.

தெய்வம் தந்த வீடு வீதியிருக்கு

அவள் ஒரு தொடர்கதை
கவிஞர் கண்ணதாசன்
எம்.எஸ். விஸ்வநாதன்
கே.ஜே. ஜேசுதாஸ்

தெய்வம் தந்த வீடு வீதியிருக்கு
தெய்வம் தந்த வீடு வீதியிருக்கு
இந்த ஊரென்ன சொந்த வீடென்ன ஞானப் பெண்ணே
வாழ்வின் பொருளென்ன நீ வந்த கதை என்ன?

நான் கேட்டுத் தாய் தந்தை படைத்தாரா? ஆ..
நான் கேட்டுத் தாய் தந்தை படைத்தாரா? - இல்லை
என் பிள்ளை எனைக் கேட்டுப் பிறந்தானா?
தெய்வம் செய்த பாபம் இது போடி தங்கச்சீ
கொன்றால் பாபம் தின்றால் போச்சு இதுதான் என் கட்சி
ஆதி வீடு அந்தம் காடு இதில்
நான் என்ன அடியே நீ என்ன ஞானப் பெண்ணே
வாழ்வின் பொருளென்ன நீ வந்த கதை என்ன?

வெறும் கோவில் இதிலென்ன அபிஷேவம் உன்
மனமெங்கும் தெருக்கூத்து பகல் வேஷம்
கள்ளிக்கென்ன முள்ளில் வேலி போடி தங்கச்சி
காட்டுக்கேது தோட்டக்காரன் இதுதான் என் கட்சி
கொண்டதென்ன கொடுப்பதென்ன - இதில்
தாயென்ன மணந்த தாரம் என்ன ஞானப் பெண்ணே
வாழ்வின் பொருளென்ன நீ வந்த கதையென்ன?

தெளிவாகத் தெரிந்தாலே சித்தாந்தம் - அது
தெரியாமல் போனாலே வேதாந்தம்
மண்ணைத் தோண்டித் தண்ணீர் தேடும் அன்புத் தங்கச்சி
என்னைத் தோண்டி ஞானம் கண்டேன் இதுதான் என் கட்சி
உண்மை என்ன பொய்மை என்ன இதில்
தேனென்ன கடிக்கும் தேளென்ன ஞானப் பெண்ணே
வாழ்வின் பொருளென்ன நீ வந்த கதை என்ன?

தெய்வம் தந்த வீடு வீதியிருக்கு
தெய்வம் தந்த வீடு வீதியிருக்கு

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக