வெள்ளி, 27 நவம்பர், 2009

திருமகள் தேடி வந்தாள் என்தன் இதயத்தில் குடி புகுந்தாள்

“இல்லதென் இல்லவன் மாண்பானால் உள்ளதென்
இல்லவள் மாணக் கடை”
என்பது வள்ளுவன் வாக்கு. இதன் பொருளாவது, மனைவி நற்பண்பு உடையவளானால் வாழ்க்கையில் இல்லாதது என்ன? அவள் நற்பண்பு இல்லாதவளானால் வாழ்க்கையில் இருப்பது என்ன?

இதே கருத்தை

இல்லாள் அகத்திருக்க இல்லாததொன்றில்லை
இல்லாளும் இல்லாளேயாமாயின் இல்லாள்
வலிகிடந்த மாற்றமுரைக்குமேல் அவ்வில்
புலிகிடந்ததூராய் விடும்

என விளக்கமாக எடுத்துரைத்து,

இல்லறமல்லது நல்லறமன்று என ஔவை மூதாட்டி அறிவுறுத்தினாள். அதற்கொப்பவே முற்காலத்தி்ல் முனிவர்களும் பிற இறையடியார்களும் இல்லறத்தை மேற்கொண்டு

அறனெனப் பட்டதே இல்வாழ்க்கை அஃதும்
பிறன் பழிப்பதில்லாயின் நன்று

எனும் குறள் கூறும் நெறியில் வாழ்ந்து இறைவனை அறியும் பேறு பெற்றனர் என்பதை வரலாறு விளக்குகின்றது.

ஒருவனுக்கு மனைவியாய் வாய்க்கும் பெண் நற்பண்புகள் நிறையப் பெற்றவளாக இருப்பின் அவள் புகுந்த வீடு ஒரு ஆலயமாக விளங்குவது உறுதி. அப்பெண் அவ்வாலயத்தில் தெய்வமாக விளங்கி சகல செல்வங்களையும் பெற்றுத் தரும் சக்தியைப் பெறுகிறாள். அத்தகைய குணவதியான பெண்ணை மனைவியாக அடைந்தவன் வாழ்வில் பெறும் மகிழ்ச்சிக்கு எல்லையே இல்லை.

திருமகள் தேடி வந்தாள் என்தன் இதயத்தில் குடி புகுந்தாள்

படம்: இருளும் ஒளியும்
இயற்றியவர்: கவிஞர் கண்ணதாசன்
இசை: கே.வி. மஹாதேவன்
பாடியோர்: எஸ்.பி. பாலசுப்பிரமணியம், பி. சுசீலா

திருமகள் தேடி வந்தாள் ஆ.ஆஆஆ
என்தன் இதயத்தில் குடி புகுந்தாள் ஆஆ ஆஆஆ
குலமகள் கோலத்திலே தேவி மருமகளாக வந்தாள் ஆஆஆஆஆஆஆ

திருமகள் தேடி வந்தாள் என்தன் இதயத்தில் குடி புகுந்தாள்
குலமகள் கோலத்திலே தேவி மருமகளாக வந்தாள் ஆஆஆஆஆஆஆ.
திருமகள் தேடி வந்தாள்

ஆஆ..... ஆஆஆ
மஞ்சள் தந்தவள் விசாலாட்சி நல்ல மலர்களைத் தந்தவள் மீனாட்சி
குங்குமம் தந்தவள் காமாட்சி எங்கள் குடும்பத்தில் தேவியுன் அரசாட்சி

திருமகள் தேடி வந்தாள் என்தன் இதயத்தில் குடி புகுந்தாள்
குலமகள் கோலத்திலே தேவி மருமகளாக வந்தாள் ஆஆஆஆஆஆஆ
திருமகள் தேடி வந்தாள்

ஆஹாஹா அ ஆஹாஹா ஆஹஹஹா ஹ ஹாஆஆஆ

திருமலை திருப்பதிப் பால் பழங்கள் - உயர்
தென் திருப்பழனியின் தேன் குடங்கள்
கனிவாய் மொழிதரும் வாசகங்கள் - என்
காதல் தெய்வத்தின் உயர் குணங்கள்
காதல் தெய்வத்தின் உயர் குணங்கள்

திருமகள் தேடி வந்தாள் என்தன் இதயத்தில் குடி புகுந்தாள்
குலமகள் கோலத்திலே தேவி மருமகளாக வந்தாள் ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்
திருமகள் தேடி வந்தாள்

வா வாத்யாரே ஊட்டாண்டே நீ வராங்காட்டி நான் உடமாட்டேன்

சென்னை என்றதுமே தமிழ் மக்கள் அனைவருக்கும் முதலில் மனதில் வருவது சென்னை செந்தமிழ் மொழியே ஆகும். தமிழ்த் திரையுலகில் இந்த சென்னை செந்தமிழை சிறப்பாகக் கையாண்ட பிரபல நடிகர்கள் பலர் உள்ளனர். குறிப்பாக இது நகைச்சுவை நடிகர்கள் வாயிலாக வெளிப்படுகையில் மிகவும் ரசிக்கத்தக்கதாகும். கலைவாணர் என்.எஸ். கிருஷ்ணன், ஜே.பி. சந்திரபாபு, நாகேஷ் உள்ளிட்ட நகைச்சுவை நடிகர்கள் சென்னை செந்தமிழைத் திறம்படப் பேசி நடித்திருந்தாலும், இவர்கள் அனைவரையும் மிஞ்சும் படியாக அசத்தியவர்கள் துக்ளக் சோ ராமசாமி அவர்களும் மனோரமா ஆச்சி அவர்களும் ஆவர். இவர்கள் சென்னை செந்தமிழில் பேசி இணைந்து நடித்து 1968ஆம் ஆண்டில் வெளியான பொம்மலாட்டம் திரைப்படம் சக்கைப் போடு போட்டது.
இப்படத்தில் குறிப்பிடத்தக்க அம்சங்களாவன, ஜாம்பஜார் ஜக்குவாக நடிக்கும் சோ, கதாநாயகன் ஜெய் சங்கருக்கு கதாநாயகி ஜெயலலிதாவிடம் தன் காதலை சொல்லக் கற்றுக் கொடுக்க, அதன் படியே ஜெய்சங்கரும் ஜெயலலிதாவிடம் சென்று ஜக்கு சென்னை செந்தமிழில் உரைத்த காதல் மொழிகளை அப்படியே ஒப்பிபதும், சோவின் காதலியாக வரும் மனோரமா முதன்முதலில் தன் சொந்தக் குரலில் பாடிய இப் பாடலும் ஆகும்.

வா வாத்யாரே ஊட்டாண்டே நீ வராங்காட்டி நான் உடமாட்டேன்

படம்: பொம்மலாட்டம்
இயற்றியவர்: கவிஞர் வாலி
இசை: வி. குமார்
பாடியவர்: மனோரமா

வா வாத்யாரே ஊட்டாண்டே நீ வராங்காட்டி நான் உடமாட்டேன்
ஜாம்பஜார் ஜக்கு நான் சைதாப் பேட்டே கொக்கு
ஜாம்பஜார் ஜக்கு நான் சைதாப் பேட்டே கொக்கு
வா வாத்யாரே ஊட்டாண்டே நீ வராங்காட்டி நான் உடமாட்டேன்
ஜாம்பஜார் ஜக்கு நான் சைதாப் பேட்டே கொக்கு
ஜாம்பஜார் ஜக்கு நான் சைதாப் பேட்டே கொக்கு

வாராவதிலே நின்னுகினிருந்தேன் அமராவதியாட்டம்
சைட்டடிச்சு நீ ஜகா வாங்கினே அம்பிகாபதியாட்டம்
வாராவதிலே நின்னுகினிருந்தேன் அமராவதியாட்டம்
சைட்டடிச்சு நீ ஜகா வாங்கினே அம்பிகாபதியாட்டம்
லவ்வாப் பாத்து சோக்கா பேசி டேக்கா குடுத்தே பின்னாலே
லவ்வாப் பாத்து சோக்கா பேசி டேக்கா குடுத்தே பின்னாலே
சர்தான் வாம்மா கண்ணு படா பேஜாராச்சு நின்னு அட
சர்தான் வாம்மா கண்ணு படா பேஜாராச்சு நின்னு

வா வாத்யாரே ஊட்டாண்டே நீ வராங்காட்டி நான் உடமாட்டேன்
ஜாம்பஜார் ஜக்கு நான் சைதாப் பேட்டே கொக்கு
ஜாம்பஜார் ஜக்கு நான் சைதாப் பேட்டே கொக்கு

நைனா ஒன் நெனப்பாலே நான் நாஸ்தா பண்ணி நாளாச்சு
நைனா ஆஆஆஆஆ ஆஆஆஆஆ ஆ ஆஆஆஆஆ
நைனா ஒன் நெனப்பாலே நான் நாஸ்தா பண்ணி நாளாச்சு
மச்சான் ஒன் மூஞ்சேப் பாத்து ஜால்னா நெனப்பு வந்தாச்சு அட
மச்சான் ஆஆஆஆஆ ஆஆஆஆஆ ஆ ஆஆஆஆஆ
மச்சான் ஒன் மூஞ்சேப் பாத்து ஜால்னா நெனப்பு வந்தாச்சு
ஆயா கட இடியாப்போன்ன பாயா கறியும் நீயாச்சு
ஆயா கட இடியாப்போன்ன பாயா கறியும் நீயாச்சு

வாவா மச்சான் வா மச்சான் வாவா மச்சான் வா மச்சான்
வாவா மச்சான் ஒண்ணா சேந்து வாராவதிக்கே போகல்லாம்

வா வாத்யாரே ஊட்டாண்டே நீ வராங்காட்டி நான் உடமாட்டேன்
ஜாம்பஜார் ஜக்கு நான் சைதாப் பேட்டே கொக்கு
ஜாம்பஜார் ஜக்கு நான் சைதாப் பேட்டே கொக்கு

சின்னஞ்சிறு சிட்டே என்தன் சீனா கற்கண்டே

காதலின் உயர்வைப் பாடாத கவிஞர்கள் யாருளர்? காதலுக்கு ஜாதியில்லை, மதமுமில்லை, நாடு நகர பேதம் ஏதுமில்லை. உள்ளங்கள் சங்கமித்து ஒருவரை ஒருவர் உணர்ந்து கொண்டு உள்ளத்தை நன்றாய்ப் புரிந்து கொண்டால் இருவர் என்பது மாறிவிடும், இரண்டும் ஒன்றாய்க் கலந்துவிடும்.
இதனை உலகுக்கு உணர்த்தும் வகையில் சீனாவில் வசிக்கும் நம் அருமை நண்பர் ஒருவர் உயர்ந்த அன்பினாலும் தெளிந்த அறிவாலும், அனைவரும் போற்றும் பண்பாலும் தன் மனம் கவர்ந்த சீனப் பெண் ஒருத்தியைத் தன் வாழ்க்கைத் துணைவியாகத் தேர்ந்தெடுத்துள்ளார். விரைவில் அப்பெண்ணுடன் இந்தியா வந்து தன் தாய் தந்தையர் ஆசிகளுடன் திருமணம் புரிந்து கொள்ள அனைத்து ஏற்பாடுகளும் செய்துள்ள நம் நண்பர், விரைவில் மனைவியாக இருக்கும் தன் காதலியிடம் தன் காதலை எவ்வாறு எடுத்துரைத்திருப்பார், அவரது காதலி அவரது காதலை எவ்வாறு ஏற்றார் எனும் சூழ்நிலையை எண்ணிப் பார்க்கையில் மனதில் ஓடியது ஒரு இனிய பழந்தமிழ்த் திரைப் பாடல்.

இருமனம் ஒன்றுபட்டு இல்வாழ்வில் இணையவிருக்கும் இளம் இன்டர்நேஷனல் தம்பதியருக்கு எனது அன்புப் பரிசாக மலர்கிறது இப்பாடல்:

சின்னஞ்சிறு சிட்டே என்தன் சீனா கற்கண்டே

படம்: அலிபாபாவும் 40 திருடர்களும்
இயற்றியவர்: ஏ. மருதகாசி
இசை: எஸ். தக்ஷிணாமூர்த்தி
பாடியவர்: எஸ்.ஜி. கிருஷ்ணன், ஜமுனா ராணி

சின்னஞ்சிறு சிட்டே என்தன் சீனா கற்கண்டே என் சீனா கற்கண்டே
ஜில்ஜில் என்று ஆடிக்கொண்டு வா பொன்வண்டே கிட்டே வா பொன் வண்டே
கொஞ்சிக் கொஞ்சிப் பேச வந்த கோமாளி ராஜா நீ கோமாளி ராஜா
கெஞ்சிக் கெஞ்சிக் கிட்டே வந்து செய்யாதே தாஜா நீ செய்யாதே தாஜா
சின்னஞ்சிறு சிட்டே என்தன் சீனா கற்கண்டே என் சீனா கற்கண்டே
ஜில்ஜில் என்று ஆடிக்கொண்டு வா பொன்வண்டே கிட்டே வா பொன் வண்டே

சிட்டு என்றும் பட்டு என்றும் யாரை ஏய்க்கப் பாக்குறே
தட்டாதே என் சொல்லை தவுலத் உன்னை ஏய்க்கப் பாக்கல்லே
நான் உன்னை ஏய்க்கப் பாக்கல்லே
கட்டிக் கொள்ளும் முன்னே நம்ப மாட்டா புல்புல்லே

சின்னஞ்சிறு சிட்டே கொஞ்சம் கிட்டே வாயேண்டி நீ கிட்டே வாயேண்டி
சீமான் எந்தன் நெஞ்சைத் தொட்டுத் தான் பாரேண்டி

கொஞ்சிக் கொஞ்சிப் பேச வந்த கோமாளி ராஜா என் கோமாளி ராஜா
கெஞ்சிக் கெஞ்சிக் கிட்டே வந்து செய்யாதே தாஜா நீ செய்யாதே தாஜா

நம்பச் செய்து ஓடிப் போனா நான் என்ன செய்வது?
நல்லா இல்லே என்தன் மேலே சந்தேகம் நீ கொள்வது வீண் சந்தேகம் நீ கொள்வது
அல்லா மேலே ஆணை உன்னை நிக்காஹ் செய்வது நிக்காஹ் செய்வது

கொஞ்சிக் கொஞ்சிப் பேச வந்த கோமாளி ராஜா என் கோமாளி ராஜா
கெஞ்சிக் கெஞ்சிக் கிட்டே வந்து செய்யாதே தாஜா நீ செய்யாதே தாஜா
சின்னஞ்சிறு சிட்டே என்தன் சீனா கற்கண்டே என் சீனா கற்கண்டே
ஜில்ஜில் என்று ஆடிக்கொண்டு வா பொன்வண்டே கிட்டே வா பொன் வண்டே

வெள்ளி மலை மன்னவா வேதம் நீ அல்லவா?

பிரபல தமிழ்த் திரைப்பட நடிகையும் பாடகியுமான திருமதி எஸ். வரலக்ஷ்மி தனது 84ஆவது வயதில் நேற்று சென்னையில் ஒரு மருத்துவமனையில் காலமானார் எனும் செய்தி கேட்டு பெற்ற தாய்க்கு இணையான ஒருவரைப் பிரிந்த உணர்வு எழுகிறது. தேனூறும் குரல் கொண்ட தாயாக விளங்கிய அவரது பாடல்கள் அமுத கானங்களாகும். வீரபாண்டியக் கட்டபொம்மன், கந்தன் கருணை, பூவா தலையா?, பணமா பாசமா? மாட்டுக்கார வேலன், நீதிக்குத் தலை வணங்கு உட்படப் பல தமிழ்த் திரைப்படங்களில் தனது அபார நடிப்புத் திறமையால் தமிழ்த் திரையுலக ரசிகர்களது மனதைக் கொள்ளை கொண்ட அவருக்கு என் இதயபூர்வமான அஞ்சலியை சமர்ப்பிக்கிறேன்.
சிவபெருமானைக் குறித்துக் கடும் தவம் புரியும் சூரபத்மன் எனும் கொடிய அரக்கன் சிவனது சக்தியைத் தவிர வேறு யாதொரு சக்தியாலும் தனக்கு மரணம் இல்லையெனும் வரத்தை சிவபெருமானிடம் பெற்ற பின்னர் ஆணவத்தால் மதி மயங்கி, தேவேந்திரன் உள்ளிட்ட வானவர்கள் அனைவரையும் சிறையில் தள்ளுகிறன். தேவேந்திரனின் மனைவியான இந்திராணி சூரபன்மனிடமிருந்து எப்படியோ தப்பிச் சென்று சிவபெருமானின் கருணையை வேண்டிப் பாடுகிறாள்.

வெள்ளி மலை மன்னவா வேதம் நீ அல்லவா?

வெள்ளி மலை மன்னவா வேதம் நீ அல்லவா?
வெள்ளி மலை மன்னவா வேதம் நீ அல்லவா?
முன்னோர்க்கும் முன்னவா மூண்ட கதை சொல்லவா?
முன்னோர்க்கும் முன்னவா மூண்ட கதை சொல்லவா?
வெள்ளி மலை மன்னவா ஆ

அஞ்செழுத்தும் என்தன் நெஞ்செழுத்தல்லவா?
ஐம்புலனும் உன்தன் அடைக்கலமல்லவா?
அஞ்சு நன்னெஞ்சுக்கு ஆறுதல் சொல்லவா? ஆ
அஞ்சு நன்னெஞ்சுக்கு ஆறுதல் சொல்லவா?
அபாயம் நீக்க வரும் சிவாயமல்லவா?

வெள்ளி மலை மன்னவா வேதம் நீ அல்லவா?
முன்னோர்க்கும் முன்னவா மூண்ட கதை சொல்லவா?
வெள்ளி மலை மன்னவா ஆ

வானுலகம் விழுவதென்ன வானவர் தான் அழுவதென்ன?
வானுலகம் விழுவதென்ன வானவர் தான் அழுவதென்ன?
சேனை அசுரர் குலம் ஜெயக்கொடி தான் கொள்வதென்ன?
சேனை அசுரர் குலம் ஜெயக்கொடி தான் கொள்வதென்ன?

தேவர் குரல் கேட்டு உன் திருவடியைக் காட்டு
அபயக் கரம் நீட்டு உன் அருள் முகத்தைக் காட்டு
தேவர் குரல் கேட்டு உன் திருவடியைக் காட்டு
அபயக் கரம் நீட்டு உன் அருள் முகத்தைக் காட்டு ஆ... வெள்ளி மலை மன்னவா வேதம் நீ அல்லவா?
முன்னோர்க்கும் முன்னவா மூண்ட கதை சொல்லவா?
வெள்ளி மலை மன்னவா ஆ

தென்றலில் ஆடும் கூந்தலில் கண்டேன் மழை கொண்ட மேகம்

சங்ககாலம் தொட்டு தற்காலம் வரையில் பெண்களின் அழகை வர்ணிக்காத கவிஞர்கள் யாரும் இருப்பதாகத் தெரியவில்லை. பெண் என்றாலே இக் கவிஞர்களுக்கு அவளது அழகு ஒன்றே முன்னிலையில் வரும் போலும். பெண்களின் வனப்பை வர்ணித்த கவிஞர்கள் அவர்களது கூந்தலை வர்ணிக்கத் தவறுவதில்லை.
பெண்களின் கூந்தலில் அப்படி என்ன மாயமிருக்குமோ தெரியவில்லை. முத்தமிழ்ச் சங்கம் வளர்த்த மதுரையைத் தலைநகராகக் கொண்டு பாண்டிய நாட்டை ஆண்ட மன்னர்களுள் ஒருவனான ஷெண்பகப் பாண்டியன் தன் மனையாளின் கூந்தலினின்று வரும் நறுமணத்தில் மயக்கமுற்று அமமணம் கூந்தலின் இயற்கையான மணமா அன்றி வாசனாதி திரவியங்களைப் பூசிக் கொள்வதினாலும் மணம் வீசும் மலர்களைச் சூடிக் கொள்வதனாலும் ஏற்பட்டதா என ஐயமுற்று, புலவர்களிடையே இது குறித்த பெரும் சர்ச்சசை ஏற்படக் காரணமாயிருந்து உலகத்தையே ரக்ஷித்துக் காக்கும் அந்த சிவபெருமானையே மண்ணில் எழுந்தருளச் செய்யத் தூண்டுகோலாக ஆனான்.

இன்னொரு பாண்டிய மன்னனான சுந்தரபாண்டியன் தன் காதலியின் கூந்தலை மழை மேகத்துக்கு நிகராக எண்ணி மயங்குகிறான் இங்கே.

தென்றலில் ஆடும் கூந்தலில் கண்டேன் மழை கொண்ட மேகம்

பட்ம்: மதுரையை மீட்ட சுந்தரபாண்டியன்
இசை: எம்.எஸ். விஸ்வநாதன்
பாடியோர்: வாணி ஜெயராம், ஜேசுதாஸ்
ஆண்டு: 1978

தென்றலில் ஆடும் கூந்தலில் கண்டேன் மழை கொண்ட மேகம்
தென்றலில் ஆடும் கூந்தலில் கண்டேன் மழை கொண்ட மேகம் - என்
தேவதை அமுதம் சிந்திடும் நேரம் இனி என்ன நாணம் - என்
தேவதை அமுதம் சிந்திடும் நேரம் இனி என்ன நாணம் இனி என்ன நாணம்?

மன்னவன் உங்கள் பொன்னுடலன்றோ இந்திரலோகம்?
மன்னவன் உங்கள் பொன்னுடலன்றோ இந்திரலோகம்? அந்தி
மாலையில் இந்த மாறனின் கணையில் ஏனிந்த வேகம் ஏனிந்த வேகம்?

தென்றலில் ஆடும் கூந்தலில் கண்டேன் மழை கொண்ட மேகம்

பாவையுடல் பாற்கடலில் பள்ளி கொள்ள நான் வரவோ?
பாவையுடல் பாற்கடலில் பள்ளி கொள்ள நான் வரவோ?
பனி சிந்தும் கனி கொஞ்சும் பூவிதழில் தேன் பெறவோ?

மாலை வரும் நேரமெல்லாம் மன்னன் வரப் பார்த்திருந்தேன்
மாலை வரும் நேரமெல்லாம் மன்னன் வரப் பார்த்திருந்தேன்
வழியெங்கும் விழி வைத்துப் பார்த்த விழி பூத்திருந்தேன்

தென்றலில் ஆடும் கூந்தலில் கண்டேன் மழை கொண்ட மேகம்

ஆலிலையின் ஓரத்திலே மேகலையின் நாதத்திலே
ஆலிலையின் ஓரத்திலே மேகலையின் நாதத்திலே
இரவென்றும் பகலென்றும் காதல் மனம் பார்ப்பதுண்டோ?

கள்ள விழி மோகத்திலே துள்ளி வந்த வேகத்திலே
கள்ள விழி மோகத்திலே துள்ளி வந்த வேகத்திலே
இதழ் சிந்தும் கவி வண்ணம் காலை வரை கேட்பதுண்டோ?
காலை வரை கேட்பதுண்டோ?

தென்றலில் ஆடும் கூந்தலில் கண்டேன் மழை கொண்ட மேகம்

கறபகத்துச் சொலையிலே பூத்த மலர் நீயல்லவோ?
விழியென்னும் கருவண்டு பாட வந்த பாட்டென்னவோ?
காவியத்து நாயகினின் கட்டழகின் மார்பினிலே
சுகமென்ன சுகமென்று மோகனப் பண் பாடியதோ?
மோகனப் பண் பாடியதோ?

தென்றலில் ஆடும் கூந்தலில் கண்டேன் மழை கொண்ட மேகம் - என்
தேவதை அமுதம் சிந்திடும் நேரம் இனி என்ன நாணம் இனி என்ன நாணம்

ரோஜா மலரே ராஜகுமாரி ஆசைக் கிளியே அழகிய ராணி

காதல் என்பது ஒரு ஆணும் பெண்ணும் ஒருவரையொருவர் உணர்ந்து கொண்டு இருவரும் இணைந்து வாழ விரும்பும் நிலையாகும். காதல் ஒருவரின் செல்வத்தைப் பார்த்தோ, ஜாதி மதங்களைப் பார்த்தோ வருவதில்லை. உள்ளங்கள் ஒன்றோடொன்று உறவாடி ஒன்று கூடும் உணர்வே காதல். இருப்பினும் காதல் கைகூடும் சாத்தியக் கூறுகளை நன்கு ஆராய்ந்தறிந்து அறிவுபூர்வமாக செயல்படுவதே செய்யத்தக்கது. பொருளாதார ஏற்றத் தாழ்வும் ஜாதி மத வேறுபாடுகளும் காதலின் வெற்றி தோல்விகளைப் பெரிதும் பாதிக்கின்றன என்பது மறுக்க முடியாத உண்மை.
ஒரு அரசனின் மகள் ஒரு சாதாரணக் குடிமகனையோ அல்லது அரசாங்கத்தில் பணிசெய்யும் ஒரு வீரனையோ காதலிப்பது இருவருக்கும் ஆபத்தை விளைவிக்கும் நிலைமையையே உருவாக்கியதை வரலாறுகள் சொல்கின்றன.

இவ்வரலாறுகளை நன்கு அறிந்த போதிலும் காதலர்கள் காதலிப்பதை விட்டுவிட்டனரா எனில் இல்லை என்பதே உண்மை. எவ்வாறாயினும் இந்தக் காதல் படுத்தும் பாடு சொல்லி மாளாது. காதல் வியாதி தொற்றிக் கொண்டால் அதிலிருந்து மீள்வது மிகவும் கடினம் போலவே தோன்றுகிறது.

ரோஜா மலரே ராஜகுமாரி ஆசைக் கிளியே அழகிய ராணி

திரைப்படம்: வீரத் திருமகன்
பாடியோர்: பி.பி. ஸ்ரீனிவாஸ், பி. சுசீலா
எம்.எஸ். விஸ்வநாதன், டி.கே. ராமமூர்த்தி
ஆண்டு: 1962

ரோஜா மலரே ராஜகுமாரி ஆசைக் கிளியே அழகிய ராணி
அருகில் வரலாமா ஹோய் வருவதும் சரிதானா உறவும் முறை தானா?

வாராய் அருகே மன்னவன் நீயே காதல் சமமன்றோ?
வேதம் நிலையன்றோ காதல் நிலையன்றோ?

ஏழையென்றாலும் ராஜகுமாரன் ராஜாமகளின் காதல் தலைவன்
உண்மை இதுவன்றோ உலகின் முறையன்றோ என்றும் நிலையன்றோ?

வானத்தின் மீதே பற்ந்தாலும் காக்கை கிளியாய் மாறாது
கோட்டையின் மேலே நின்றாலும் ஏழையின் பெருமை உயராது
ஓடியலைந்து காதலில் கலந்து நாட்டை இழந்தவர் பலருண்டு

மன்னவன் நாடும் மணிமுடியும் மாளிகை வாழ்வும் தோழியரும்
பஞ்சணை சுகமும் பால் பழமும் படையும் குடையும் சேவகரும்
ஒன்றாய் இணையும் காதலர் முன்னே கானல் நீர்போல் மறையாதோ

ரோஜா மலரே ராஜகுமாரி ஆசைக் கிளியே அழகிய ராணி
அருகில் வரலாமா ஹோய் வருவதும் சரிதானா உறவும் முறை தானா?

பாடும் பறவைக் கூட்டங்களே பச்சை ஆடைத் தோட்டங்களே
விண்ணில் தவழும் ராகங்களே வேகம் போகும் மேகங்களே
ஓர் வழி கண்டோம் ஒரு மனமானோம் வாழிய பாடல் பாடுங்களே
ஓர் வழி கண்டோம் ஒரு மனமானோம் வாழிய பாடல் பாடுங்களே

கலையாத கல்வியும் குறையாத வயதுமோர்

நாம் இன்பமாய் வாழ மிகவும் அவசியமானவை முழுமையான அறிவு தரும் கல்வி, நீண்ட ஆயுள், உண்மையான, ஆபத்ததி்ல் உதவு்ம் நணபர்ககள், அழியாத செல்வங்கள், முதுமையிலும் இளமையுடன் திகழும் வன்மையுடன் கூடிய உடல் நலம், நோயற்ற உடல், எப்பொழுதும் உற்சாகமாக சோர்வின்றி இயங்கும் மனம், என்றும் மாறாத அன்பைப் பொழியும் மனைவி, சொன்ன சொல் தவறாத குழந்தைகள், என்றும் குறையாத புகழ், சொன்ன சொல் தவறாமல் காக்கும் திறம், பிறருக்குத் தேவையான உதவிகளைச் செய்யத் தடையில்லாத வாழ்க்கை நிலை, நாட்டில் தர்ம நீதி தவறாத ஆட்சி, துன்பம் இல்லாத வாழ்க்கை, நல்லோர் சேர்க்கை முதலியன ஆகும்.
இவை அனைத்தினையும் குறைவறத் தருபவள் அன்னை அபிராமியே.

கலையாத கல்வியும் குறையாத வயதுமோர்

படம்: திருமலை தென்குமரி
இயற்றியவர்: அபிராமி பட்டர்
இசை: குன்னக்குடி வைத்தியநாதன்
பாடியவ்ர்: சீர்காழி கோவிந்தராஜன்

கலையாத கல்வியும் குறையாத வயதுமோர்
கபடு வாராத நட்பும்

கன்றாத வளமையுங் குன்றாத இ­ளமையும்
கழுபிணியிலாத உடலும்

சலியாத மனமும் அன்பு அகலாத மனைவியும்
தவறாத சந்தானமும்

தாழாத கீர்த்தியும் மாறாத வார்த்தையும்
தடைகள் வாராத கொடையும்

தொலையாத நிதியமும் கோணாத கோலும் ஒரு
துன்பமில்லாத வாழ்வும்

துய்ய நின் பாதத்தில் அன்பும் உதவி பெரிய
தொண்டரொடு கூட்டு கண்டாய்

அலையாழி அறிதுயிலு மாயனது தங்கையே!
ஆதிகட வூரின் வாழ்வே!
அலையாழி அறிதுயிலு மாயனது தங்கையே!
ஆதிகட வூரின் வாழ்வே!

அமுதீசர் ஒருபாகம் அகலாத சுகபாணி!
அருள்வாமி! அபிராமியே!
அமுதீசர் ஒருபாகம் அகலாத சுகபாணி!
அருள்வாமி! அபிராமியே!

தனம் தரும் கல்வி தரும் ஒரு நாளும் தளர்வு அறியா
மனம் தரும் தெய்வ வடிவும் தரும் நெஞ்சில் வஞ்சம் இல்லா
இனம் தரும் நல்லன எல்லாம் தரும் அன்பர் என்பவர்க்கே
க்னம் தரும் பூங்குழலாள் அபிராமி கடைக்கண்களே
பூங்குழலாள் அபிராமி கடைக்கண்களே

மனம் கனிவான அந்தக் கன்னியைக் கண்டால்

உறவுகள் வளர் அன்பு மலர வேண்டும். அன்பு மலரக் கனிவு பிறக்க வேண்டும். கனிவின் பிறப்பிடம் எதுவோ? சற்றும் தயங்காமல் கூறலாம் தாயென்று. தாயை விடவும் மேலான கனிவுடன் அருள்புரிபவன் இறைவன் என்று அடியார்கள் குறிப்பிடுகின்றனர்.
பால்நினைந்தூட்டும் தாயினும் சாலப் பரிந்து நீ பாவியேனுடைய
ஊனினை உருக்கு உள்ளொளி பெருக்கி உலப்பிலா ஆனந்தமாய
தேனினைச் சுரந்து புறம்புறம் திரிந்த செல்வமே சிவபெருமானே
யானுனைத் தொடர்ந்து சிக்கெனப் பிடித்தேன் எங்கெழுந்தருளுவது இனியே

என்று மாணிக்கவாசகர் திருவாசகத்தில் பாடியுள்ளார்.

இறைவனை நாம் காண்கிறோமோ இல்லையோ? உணர்கிறோமோ இல்லையோ? ஆனால் தாயினைக் கணந்தோறும் காண்கிறோம், உணர்கிறோம் ஒவ்வொரு பெண்ணிடத்திலும். தாயாக விளங்குவது பெண்மையல்லவா? அப்பெண்மைக்கு அணிகலன் கனிவல்லவா?

ஒரு பெண்ணின் மேல் ஒருவருக்கு உண்மையான காதல் அரும்ப அவள் கனிந்த மனம் கொண்டவளாக இருத்தல் அவசியம். கனிவு கொண்ட பெண்ணிடம் காதல் கொண்டால்...........

மனம் கனிவான அந்தக் கன்னியைக் கண்டால்

படம்: இது சத்தியம்
இயற்றியவர்: கவிஞர் கண்ணதாசன்
இசை: எம்.எஸ். விஸ்வநாதன், டி.கே. ராமமூர்த்தி
டி.எம். சௌந்தரராஜன், எல்.ஆர். ஈஸ்வரி
ஆண்டு: 1963

மனம் கனிவான அந்தக் கன்னியைக் கண்டால் கல்லும் கனியாகும்
ஆஹஹ ஹஹ ஹஹ ஹஹ ஹஹஹாஹாஹாஹா
மனம் கனிவான அந்தக் கன்னியைக் கண்டால் கல்லும் கனியாகும்
முதல் முதலாக அவள் கைகள் விழுந்தால் முள்ளும் மலராகும்
ஆஹா முள்ளும் மலராகும் ஆஹா கல்லும் கனியாகும்

பாதிக் கண்ணை மூடித் திறந்து பார்க்கும் பார்வை காதல் விருந்து
ம்ம் ம்ம் ம்ம்ம்ம்ம்
பாதிக் கண்ணை மூடித் திறந்து பார்க்கும் பார்வை காதல் விருந்து
ஜாதிக் கொடியில் பூத்த அரும்பு சாறு கொண்ட காதல் கரும்பு
அன்னம் என்ற நடையினைக் கண்டு மன்னர் தம்மை மறந்ததும் உண்டு
அன்னம் என்ற நடையினைக் கண்டு மன்னர் தம்மை மறந்ததும் உண்டு

மனம் கனிவான அந்தக் கன்னியைக் கண்டால் கல்லும் கனியாகும்
முதல் முதலாக அவள் கைகள் விழுந்தால் முள்ளும் மலராகும்
ஆஹா முள்ளும் மலராகும் ஆஹா கல்லும் கனியாகும்


ஆஆஆஆஆஆ ஆஆஆஆஆஆ ஆஆஆஆஆ ஆஆஆஆஆஅ

வாழைத் தோட்டம் போல இருந்தாள் வண்டு போல பாடித்திரிந்தாள் ஆஆஆ....
வாழைத் தோட்டம் போல இருந்தாள் வண்டு போல பாடித்திரிந்தாள்
தென்னம் பாளை போல சிரித்தாள் சின்னக் கண்ணில் என்னை அழைத்தாள்
கன்னம் என்ற கனிகளின் மீது இன்னும் நாணம் மோதுவதேனோ?
கன்னம் என்ற கனிகளின் மீது இன்னும் நாணம் மோதுவதேனோ?

அவள் இவள் தானா இவள் அவள் தானா அதைத் தெளிவாய்ச் சொல்லலாமா?
அவள் வரலாமா நலம் பெறலாமா அவர் சம்மதம் தரலாமா?
அவர் சம்மதம் தரலாமா அதைத் தெளிவாய்ச் சொல்லலாமா?

வானம்பாடி போலப் பறந்தாள் வாழ்வு தேடித் தேடியலைந்தாள்
வானம்பாடி போலப் பறந்தாள் வாழ்வு தேடித் தேடியலைந்தாள்
காதல் தந்த கள்வனைக் கண்டாள் கன்னி தந்த கையில் விழுந்தாள்
தஞ்சம் தஞ்சம் என்று மலர்ந்தாள் நெஞ்சம் யாவும் அவனிடம் தந்தாள்
தஞ்சம் தஞ்சம் என்று மலர்ந்தாள் நெஞ்சம் யாவும் அவனிடம் தந்தாள்

அவள் இவள் தானா இவள் அவள் தானா அதைத் தெளிவாய்ச் சொல்லலாமா?
அவள் வரலாமா நலம் பெறலாமா அவர் சம்மதம் தரலாமா?
அவர் சம்மதம் தரலாமா அதைத் தெளிவாய்ச் சொல்லலாமா?
ஆஹஹஹ ஹாஹாஹா ஆஹஹஹ ஹாஹாஹா ஆஹஹஹ ஹாஹாஹா

சொல்லடி அபிராமி சொல்லடி அபிராமி

ஒரு பாடலில் இறுதிச் சொல்லை அடுத்த பாடலின் முதற் சொல்லாக வைத்துப் பல பாடல்களைக் கோவையாகப் பாடுவது அந்தாதி என அறியப் படுகிறது. இத்தகைய பாடல்களும் திருக்கடவூர் அபிராமி பட்டர் அருளிச் செய்த அபிராமி அந்தாதி மிகவும் பிரசித்தமானது.
பட்டர் ஆலயத்தில் மோன நிலையிலிருக்கையில் அப்போதைய சோழ நாட்டு மன்னன் இரண்டாம் சரபோஜி ராவ் போன்ஸ்லே ஆலய தரிசனத்துக்கு வர, யோக நிலையிருந்த பட்டர் மன்னரைக் கவனிக்கவில்லை. இது கண்ட மன்னன் அவரிடம் சென்று, "இன்று என்ன திதி?" என வினவ, பட்டர் அன்னையின் முகதரிசனத்தை மனதில் கண்டு "பௌர்ணமி" எனச் சொல்கிறார். அன்று உண்மையில் அமாவாசை. மன்னவன் மீண்டும், "இன்று பௌர்ணமியானால் இரவில் முழு நிலவு வானில் வர வேண்டுமல்லவா? நிலவு வருமா?" என்று கேட்க, "வரும்" என்று யோக நிஷ்டையிலிருந்தவாறே கூறி விடுகிறார் பட்டர்.

தன்னை அவர் பரிகாசம் செய்வதாகத் தவறாக எண்ணிய மன்னன், "இன்றிரவு முழு நிலவு வரவில்லையெனில் நீர் மரண தண்டனை பெறுவீர்" எனக் கூறிச் சென்றவன் பட்டரை அந்தரத்தில் தொங்கும் ஊஞ்சல் போன்றதொரு பலகையின் மேல் நிறுத்தி வைத்து அதன் கீழே நெருப்பு மூட்டி நிலவு வராமை கண்டதும் அவருக்கு மரண தண்டனையை நிறைவேற்ற ஆயத்தம் செய்துவிடுகிறான்.

அபிராமியை மனதில் துதித்து

உதிக்கின்ற செங்கதிர் உச்சித் திலகம் உணர்வுடையோர்
மதிக்கின்ற மாணிக்கம் மாதுளம் போது மலர்க்கமலை
துதிக்கின்ற மின்கொடி மென்கடிக் குங்கும தோயமென்ன
விதிக்கின்ற மேனி அபிராமி என்றன் விழுத்துணையே.

என்ற பாடலில் துவங்கி

குழையைத் தழுவிய கொன்றையந்தார் கமழ் கொங்கைவல்லி
கழையைப் பொருத திருநெடுந்தோளும் கருப்பு வில்லும்
விழையப் பொரு திறல் வேரியம் பாணமும் வெண் நகையும்
உழையைப் பொரு கண்ணும் நெஞ்சில் எப்போதும் உதிக்கின்றவே

என்ற பாடலில் முதல் பாடலின் முதல் வார்த்தை இறுதிப் பாடலின் இறுதி வார்த்தையாக முடியுமாறு நூறு பாடல்களைப் பாடுகிறார்.

விழிக்கே அருளுண்டு அபிராமவல்லிக்கு; வேதம் சொன்ன
வழிக்கே வழிபட நெஞ்சுண்டு எமக்கு; அவ்வழி கிடக்க
பழிக்கே சுழன்று, வெம்பாவங்களே செய்து, பாழ்நரகக்
குழிக்கே அழுந்தும் கயவர்தம்மோடு என்ன கூட்டு இனியே?

என்ற 79-ஆம் பாடலைப் பாடுகையில் அம்பிகைத் தன் காதில் அணிந்திருந்த ஸ்ரீசக்ர ரூபமாகிய 'தாடங்கம்' என்னும் திருத்தோட்டினை எடுத்து விண்ணில் வீச அது பூரண சந்திரனாகத் தோற்றமளிக்கிறது. தமிழ்த் திரையில் இக்காட்சியை அருமையாகப் படமெடுத்துள்ளனர். இக்காட்சியில் மேற் சொன்ன அபிராமி அந்தாதி பாடல்களுக்கு பதிலாகக் கவிஞர் கண்ணதாசன் அபிராமி அந்தாதியின்

மணியே மணியின் ஒளியே ஒளிரும் அணிபுனைந்த வணியே
அணியும் அணிக்கழகே அணுகாதவர்க்குப் பிணியே
பிணிக்கு மருந்தே அமரர் பெரும் விருந்தே
பணியேன் ஒருவரை நின் பத்மபாதம் பணிந்த பின்னே

என்ற வேறொரு பாடலை முதல் பத்தியாகக் கொண்டு எழுதிய ஜனரஞ்சகமான பாடல் இடம் பெறுகிறது.

அன்னையின் திருப்பெயரைச் சொல்லும் அப்பாடலும் அருமையானதே.

சொல்லடி அபிராமி சொல்லடி அபிராமி

படம்: ஆதி பராசக்தி
இயற்றியவர்ள: கவிஞர் கண்ணதாசன்
இசை: கே.வி. மஹாதேவன்
பாடியவர்: டி.எம். சௌந்தரராஜன்

மணியே மணியின் ஒளியே ஒளிரும் அணிபுனைந்த வணியே
அணியும் அணிக்கழகே அணுகாதவர்க்குப் பிணியே
பிணிக்கு மருந்தே அமரர் பெரும் விருந்தே
பணியேன் ஒருவரை நின் பத்மபாதம் பணிந்த பின்னே

சொல்லடி அபிராமி சொல்லடி அபிராமி - வானில்
சுடர் வருமோ எனக்கு இடர் வருமோ?
பதில் சொல்லடி அபிராமி வானில்
சுடர் வருமோ எனக்கு இடர் வருமோ?
பதில் சொல்லடி அபிராமி
நில்லடி முன்னாலே நில்லடி முன்னாலே - முழு
நிலவினைக் காட்டு உன் கண்ணாலே

சொல்லடி அபிராமி

பல்லுயிரும் படைத்த பரமனுக்கே - சக்தி
படைத்ததெல்லாம் உன்தன் செயலல்லவோ?
பல்லுயிரும் படைத்த பரமனுக்கே - சக்தி
படைத்ததெல்லாம் உன்தன் செயலல்லவோ? - நீ
சொல்லுக்கெல்லாம் சிறந்த சொல்லல்லவோ? - நீ
சொல்லுக்கெல்லாம் சிறந்த சொல்லல்லவோ? - இந்த
சோதனை எனக்கல்ல உனக்கல்லவோ?

சொல்லடி அபிராமி

வாராயோ ஒரு பதில் கூறாயோ? - நிலவென
வாராயோ அருள் மழை தாராயோ?
வாராயோ ஒரு பதில் கூறாயோ? - நிலவென
வாராயோ அருள் மழை தாராயோ?

வானம் இடிபடவும் பூமி பொடிபடவும்
நடுவில் நின்றாடும் வடிவழகே
கொடிகளாட முடிகளாட குடிபடை
எழுந்தாட வரும் கலையழகே
பிள்ளை உள்ளம் துள்ளும் வண்ணம் பேரிகை
கொட்டி வர மத்தளமும் சத்தமிட

வாராயோ ஒரு பதில் கூறாயோ நிலவென
வாராயோ அருள் மழை தாராயோ?

செங்கையில் வண்டு கலிம் கலிம் என்று
ஜெயம் ஜெயம் என்றாட - இடை
சங்கதமென்று சிலம்பு புலம்பொடு
தண்டை கலந்தாட - இரு
கொங்கை கொடும்பகை வென்றனமென்று
குழைந்து குழைந்தாட - மலர்ப்
பங்கயமே உனைப் பாடிய பிள்ளை முன்
நிலவு எழுந்தாட
விரைந்து வாராயோ எழுந்து வாராயோ
கனிந்து வாராயோ

காளி பயங்கரி சூலி மதாங்கினி கண்களில் தெரிகின்றாள்
கண்கள் சிவந்திடும் வண்ணம் எழுந்தொரு காட்சியைத் தருகின்றாள்
வாழிய மகன் இவன் வாழிய என்றொரு வாழ்த்தும் சொல்கின்றாள்
வானகம் வையகம் எங்கணுமே ஒரு வடிவாய்த் தெரிகின்றாள்
அன்னை தெரிகின்றாள் என் அம்மை தெரிகின்றாள்
அன்னை தெரிகின்றாள் என் அம்மை தெரிகின்றாள்
ஓம் சக்தி ஓம் சக்தி ஓம் சக்தி ஓம் சக்தி ஓம்

ஞாயிறு என்பது கண்ணாக திங்கள் என்பது பெண்ணாக

காதல் கொண்ட ஆணுக்கும் பெண்ணுக்கும் இந்த உலகமே மறந்து விடுமோ? காதலனுக்கு இவ்வுலகிலுள்ள சிறப்பானவை அனைத்தும் தன் காதலி உருவில் தெரியும் போலும்! அவளூக்கும் தனக்கும் முன் ஜன்மத்திலிருந்தே உறவு உண்டென்று கற்பனை செயது கொண்டு அவளிடம் அவன் சென்று தன் எண்ணங்களைச் சொன்னதும் அவளும் அவன் கற்பனையில் மயங்கி, தன் பங்குக்கு ஏதேதோ கற்பனைகளில் மிதப்பதுடன், தன் வாழ்வே அவனோடு தான் என்று முடிவெடுக்கிறாள்.
இத்தகைய மயக்கம் இருவரின் காதலும் உண்மையாய் இருப்பின் சுகமாகவே இருக்கும், காதல் கனிந்து கைகூடினால் வாழ்வும் இனிமையாகவே விளங்கும்.

ஞாயிறு என்பது கண்ணாக திங்கள் என்பது பெண்ணாக

படம்: காக்கும் கரங்கள்
இயற்றியவர்: கவிஞர் கண்ணதாசன்
இசை: கே.வி. மஹாதேவன்
பாடியோர்: டி.எம். சௌந்தரராஜன், பி. சுசீலா

ம்ஹ்ம்ஹ்ம்ஹ்ம்ஹ்ம்.. ம்ஹ்ம்ஹ்ம்ஹ்ம்ஹ்ம்.. ம்ஹ்ம்ஹ்ம்ஹ்ம்
ஹ்ம்ஹ்ம்ஹ்ம்.. ஹ்ம்ஹ்ம்ஹ்ம் ஹ்ம்ஹ்ம்ஹ்ம் ஹ்ம்ஹ்ம்ஹ்ம்

ஞாயிறு என்பது கண்ணாக திங்கள் என்பது பெண்ணாக
செவ்வாய் கோவைப் பழமாக சேர்ந்தே நடந்தது அழகாக
ஞாயிறு என்பது கண்ணாக திங்கள் என்பது பெண்ணாக
செவ்வாய் கோவைப் பழமாக சேர்ந்தே நடந்தது அழகாக

நேற்றைய பொழுது கண்ணோடு இன்றைய பொழுது கையோடு
நாளைய பொழுதும் உன்னோடு நிழலாய் நடப்பேன் பின்னோடு
நேற்றைய பொழுது கண்ணோடு இன்றைய பொழுது கையோடு
நாளைய பொழுதும் உன்னோடு நிழலாய் நடப்பேன் பின்னோடு

ஊருக்குத் துணையாய் நானிருக்க எனக்கொரு துணையை எதிர்பார்த்தேன்
உள்ளத்தின் கோவிலில் விளக்கேற்ற மைவிழிக் கிண்ணத்தில் நெய் வார்த்தேன்
உள்ளத்தின் கோவிலில் விளக்கேற்ற மைவிழிக் கிண்ணத்தில் நெய் வார்த்தேன்

ஞாயிறு என்பது கண்ணாக திங்கள் என்பது பெண்ணாக
நாளைய பொழுதும் உன்னோடு நிழலாய் நடப்பேன் பின்னோடு

முன்னொரு பிறவி எடுத்திருந்தேதேன் உன்னிடம் மனதைக் கொடுத்திருந்தேன்
பின்னொரு பிறவி எடுத்து வந்தேன் பேசிய பதிலைக் கொடுக்க வந்தேன்
பின்னொரு பிறவி எடுத்து வந்தேன் பேசிய பதிலைக் கொடுக்க வந்தேன்

ஞாயிறு என்பது கண்ணாக திங்கள் என்பது பெண்ணாக
நாளைய பொழுதும் உன்னோடு நிழலாய் நடப்பேன் பின்னோடு

வெற்றி வேண்டுமா? போட்டுப் பாரடா எதிர்நீச்சல்

கடலில் வழியாகவும் ஆற்று வழியாகவும் கப்பலிலோ, படகுகளிலோ பயணம் செய்யும் மனிதர்கள் எதிர்பாராமல் வரும் புயல், வெள்ளம் போன்ற அபாயங்கள் ஏற்படுகையில் அவர்களுள் நீச்சல் தெரிந்தவர்கள் நீந்திக் கரை சேர முயற்சி செய்கின்றனர். நீந்தத் தெரியாதவர்கள் நீரில் மூழ்கி மடிகின்றனர். இவை தவிரப் பல்வேறு காரணங்களால் ஏற்படும் வெள்ளச் சூழ்நிலைகளிலிருந்தும் மீள ஒவ்வொருவரும் நீச்சல் அறிந்திருத்தல் அவசியம்.
அது போலக் காலமெனும் கடலிலே வாழ்க்கை எனும் ஓடத்தில் பயணம் செய்யும் நாம் ஒவ்வொருவரும், இன்னல்கள் எனும் பேரலை வந்து ஓடத்தைத் துன்பங்கள் எனும் நீரில் முழ்கடிக்கையில் முயற்சியுடையவன் நீந்திக் கரை சேர்கிறான். முயற்சியற்றவன் மீள முடியாமல் தவிக்கிறான். வாழ்க்கைப் பயணத்தில் நீச்சல் கற்பது என்பது தொழில் செய்யக் கற்றுக் கொள்ளுதல் எனக் கொள்ளலாம். தொழிலுக்குத் தன்னைத் தகுதியுடையவனாகச் செய்து கொள்வதே யோகம் எனப்படும் என மஹாகவி பாரதியார் பகவத் கீதையில் குறிப்பபிட்டுள்ளார்.

வாழ்க்கைப் போராட்டத்தில் வெற்றி பெற வேண்டுமெனில் சோதனைகள் எனும் நீரோட்டத்தை எதி்த்துப் பயணிக்க எதிர்நீச்சல் போடுவது அவசியமாகிறது.

வெற்றி வேண்டுமா? போட்டுப் பாரடா எதிர்நீச்சல்

படம்: எதிர்நீச்சல்
இயற்றியவர்: கவிஞர் வாலி
இசை: எம்.எஸ். விஸ்வநாதன்
பாடியவர்: சீர்காழி கோவிந்தராஜன்
ஆண்டு: 1968

அகர முதல எழுத்தெல்லாம் ஆதி
பகவன் முதற்றே உலகு

வெற்றி வேண்டுமா? போட்டுப் பாரடா எதிர்நீச்சல்
சர்தாம் போடா தலைவிதி என்பது வெறுங்கூச்சல்
எண்ணித் துணிந்தால் இங்கு என்ன நடக்காதது
கொஞ்சம் முயன்றால் இங்கு எது கிடைக்காதது?
வெற்றி வேண்டுமா? போட்டுப் பாரடா எதிர்நீச்சல்

பிள்ளையைப் பெறுகிற அம்மாவுக்கு பத்து மாதமும் எதிர்நீச்சால்
பொறக்குற கொழந்த நடக்குற வரையில் தரையில் போடுவது எதிர்நீச்சல்
பள்ளிக்குப் பள்ளி இடத்துக்கு அலையும் அப்பனுக்கது தான் எதிர்நீச்சல்
பிள்ளைக்கு எப்படி இடம் கிடைச்சாலும் பரிட்சை வந்தா எதிர்நீச்சல் எதிர்நீச்சல்

வெற்றி வேண்டுமா? போட்டுப் பாரடா எதிர்நீச்சல்

கடற்கரையோரம் நடக்குற காதல் கல்யாணம் முடிப்பது எதிர்நீச்சல்
கணக்குக்கு மேலே பிள்ளையைப் பெத்து காலங்கழிப்பதும் எதிர்நீச்சல்
கண்மூடி வழக்கம் மண்மூடிப் போகக் கருத்தைச் சொல்லுவது எதிர்நீச்சல்
வீட்டுக்கு வீடு ஓட்டுக்கள் வாங்கி பதவிக்கு வருவது எதிர்நீச்சல் எதிர்நீச்சல்

வெற்றி வேண்டுமா? போட்டுப் பாரடா எதிர்நீச்சல்
சர்தாம் போடா தலைவிதி என்பது வெறுங்கூச்சல்
எண்ணித் துணிந்தாலின்று என்ன நடக்காதது
கொஞ்சம் முயன்றாலின்று எது கிடைக்காதது?
வெற்றி வேண்டுமா போட்டுப் பாரடா எதிர்நீச்சல்

சொப்பன வாழ்வில் மகிழ்ந்து

மனிதன் உறக்கத்தில் மாத்திரமல்லாது விழித்திருக்கையிலும் கனவு காண்கிறான். இதைப் பகல் கனவு என்போம். தினமும் கூலி வேலை கிடைப்பதே கிள்ளுக்கீரையாக இருந்து சோற்றுக்குத் திண்டாடும் ஏழை தான் கார், பங்களா என்று பெரும் செல்வந்தனாக வாழக் கனவு காண்கிறான். உண்மையாகவே செல்வச் செழிப்போடு வாழும் செல்வந்தன் உலகின் முதல் செல்வந்தனாக வேண்டிக் கனவு காண்கிறான்.
இப்பிறவிக்குத் தான் எங்கிருந்து வந்தோமென்பதும் இப்பிறவியின் முடிவில் எங்கே செல்கிறோம் என்றும் எண்ணிப் பார்க்காது இடையிடையே வந்து போகும் பகட்டான வாழ்வை நிலையென எண்ணி, அதனை அடையப் பொய் கூறிப் பிறரை ஏமாற்றவும் மனிதன் தயங்குவதில்லை.நிலையற்ற செல்வத்தில் மனதைச் செலுத்தி நிலையான செல்வமான இறைவனை மறந்து, மயக்க்த்தில் வாழ்ந்து மயக்கத்திலேயே மடிகிறான் மனிதன். என்னே பேதமை?

சொப்பன வாழ்வில் மகிழ்ந்து

சொப்பன வாழ்வில் மகிழ்ந்து
சொப்பன வாழ்வில் மகிழ்ந்து - சுப்ரமண்ய
ஸ்வாமி உனை மறந்தார் - அந்தோ
சொப்பன வாழ்வில் மகிழ்ந்து - சுப்ரமண்ய
ஸ்வாமி உனை மறந்தார் - அந்தோ
அற்பப் பணப் பேய் பிடித்தே - அறிவிழந்து
அற்பர்களைப் புகழ்வார்
அற்பப் பணப் பேய் பிடித்தே அறிவிழந்து
அற்பர்களைப் புகழ்வார்

நாவால் பொய் மொழிவார் - பொருள் விரும்பி
நாவால் பொய் மொழிவார் - தனது வாழ்
நாளெல்லாம் பாழ் செய்வார் - அந்தோ
நாவால் பொய் மொழிவார் - உன்தன்
பாவன நாமமதை ஒரு பொழுதும்
பாவனை செய்தறியார்
பாவன நாமமதை ஒரு பொழுதும்
பாவனை செய்தறியார்

அந்தோ விந்தையிதே - அறிந்தறிந்து
ஆழ்நரகில் உழல்வாரே - மாந்தர்
அந்தோ விந்தையிதே - அறிந்தறிந்து
ஆழ்நரகில் உழல்வாரே - இவர்
சிந்தை திருந்தி உய்ய - குகனே உன்தன்
திருவருள் புரியாயோ
சிந்தை திருந்தி உய்ய - குகனே உன்தன்
திருவருள் புரியாயோ

கண்ணன் வருவான் கதை சொல்லுவான்

தாய்மார்கள் கோகுலத்துக் கண்ணனைத் தங்கள் குழந்தையாக பாவித்து வழிபடுவது வழக்கத்தில் இருந்து வருகிறது. கண்ணன் பிறந்த தினமான கோகுலாஷ்டமி நாளில் வீட்டு வாசலில் இருந்து பூஜை அறை வரையிலும் குழந்தை கண்ணனின் பாதங்களை அரிசி மாவினால் கோலமிட்டு மகிழ்ந்து, அன்று உப்பு சிகடை, வெல்லச் சிகடை என்று பலகாரங்கள் செய்து குழந்தைகளுக்கும் பிற குடும்பத்தவருக்கும் தந்து தாமும் உண்டு மகிழ்வர் நம் அன்னையர்
உண்ண உண்ணத் தெவிட்டாதே -- அம்மை
உயிரெனும் முலையினில் உணர்வெனும் பால்;
வண்ணமுற வைத்தெனக்கே -- என்றன்
வாயினிற்கொண் டூட்டுமோர் வண்மையுடையாள்,

கண்ணனெனும் பெயருடையாள் -- என்னைக்
கட்டிநிறை வான் எனுந்தன் கையி லணைத்து
மண்ணெனுந்தன் மடியில் வைத்தே -- பல
மாயமுறுங் கதைசொல்லி மனங்களிப் பாள்.

இன்பமெனச் சிலகதைகள் -- எனக்
கேற்றமென்றும் வெற்றியென்றும் சில கதைகள்
துன்பமெனச் சிலகதைகள் -- கெட்ட
தோல்வியென்றும் வீழ்ச்சியென்றுஞ் சிலகதைகள்
என்பருவம் என்றன்விருப்பம் -- எனும்
இவற்றினுக் கிணங்கவென் னுளமறிந்தே
அன்பொடவள் சொல்லிவருவாள்; -- அதில
அற்புதமுண் டாய்ப்பர வசமடைவேன்.

என்று கண்ணனைத் தன் தாயாகக் கண்டு பாடினார் பாரதியார்.

கண்ணன் புல்லாங்குழலெடுத்து ஊதினால் அவ்விசையைக் கேட்டு புல்வெளியில் பல இடங்களில் மேயச் சென்ற மாடுகள் அனைத்தும் கண்ணை இருக்குமிடம் தேடி வந்திடுமாம். வேணுகானத்தைக் கேட்டால் கோபியர்களும் கோபிகைகளும் தங்கள் பணிகள் அனைததியும் நிறுத்திவிட்டு மனம் மயங்கி அக்குழலிசையில் லயிப்பராம்.

அத்தகைய கண்ணன் வந்து தன் குழந்தைக்குத் தாலாட்டுப் பாடித் தூங்க வைத்து, புல்லாங்குழலில் பாட்டிசைத்து, பாலூட்டி சீராட்டி மகிழ்விக்க வேண்டுமென விரும்பிப் பாடுகிறாள் ஒரு பெண்.

கண்ணன் வருவான் கதை சொல்லுவான்

படம்: பஞ்சவர்ணக் கிளி
இயற்றியவர்: கவிஞர் வாலி
இசை: எம்.எஸ். விஸ்வநாதன், டி.கே. ராமமூர்த்தி
பாடியவர்: பி. சுசீலா
ஆண்டு: 1965

கண்ணன் வருவான் கதை சொல்லுவான்
வண்ண மலர்த் தொட்டில் கட்டித் தாலாட்டுவான்
குழலெடுப்பான் பாட்டிசைப்பான்
வலம்புரிச் சங்கெடுத்துப் பாலூட்டுவான்
வலம்புரிச் சங்கெடுத்துப் பாலூட்டுவான்

பச்சை வண்ணக் கிளி வந்து பழம் கொடுக்க
பட்டு வண்ணச் சிட்டு வந்து மலர் கொடுக்க
கன்னங்கரு காக்கை வந்து மை கொடுக்க
கண்ணன் மட்டும் கன்னத்திலே முத்தம் கொடுக்க
முத்தம் கொடுக்க முத்தம் கொடுக்க

தத்தித் தத்தி நடக்கையில் மயில் போலே
திக்கித் திக்கிப் பேசுகையில் குயில் போலே
கொஞ்சிக் கொஞ்சி எடுக்கையில் கொடடி போலே
அஞ்சி அஞ்சி விழுவாய் மடி மேலே

ஆரிரோ ஆரிராரி ஆரிராரி ஆராரோ
ஆராரோ ஆரிராரி ராரிராரி ராரிரோ
ஆரிராரி ராரிராரி ஆராரோ ஆரிராரி ராரிராரி ஆராரோ

உனக்கென்றும் எனக்கென்றும் உறவு வைத்தான்
இருவரின் கணக்கிலும் வரவு வைத்தான்
ஒருவரின் குரலுக்கு மயங்க வைத்தான்
உண்மையை அதிலே உறங்க வைத்தான்
உறங்க வைத்தான் உறங்க வைத்தான்

தத்தித் தத்தி நடக்கையில் மயில் போலே
திக்கித் திக்கிப் பேசுகையில் குயில் போலே
கொஞ்சிக் கொஞ்சி எடுக்கையில் கொடி போலே
அஞ்சி அஞ்சி விழுவாய் மடி மேலே

ஆரிரோ ஆரிராரி ஆரிராரி ஆராரோ
ஆராரோ ஆரிராரி ராரிராரி ராரிரோ
ஆரிராரி ராரிராரி ஆராரோ ஆரிராரி ராரிராரி ஆராரோ

உலகம் பிறந்தது எனக்காக ஓடும் நதிகளும் எனக்காக

மனிதன் உலகில் பிறந்து இரண்டு மூன்று ஆண்டுகளே நிறைந்த நிலையில் புத்தகப் பையைச் சுமக்கத் துவங்கி, பை மூட்டையாகிப் பள்ளிக்கும் வீட்டுக்குமாக சுமைதாங்கியாய் நடந்து, நாளில் பெரும்பாலான நேரத்தை செலவிட்ட பின்னர் வீடு வந்து சேர்ந்ததும் மீண்டும் வீட்டுப்பாடம் என்று புத்தகமும் நோட்டுமாக உட்கார்ந்து, அல்லல்பட்டுப் பள்ளிப் படிப்பில் தேர்ச்சி பெற்றுக் கல்லூரியில் நுழைந்து, அங்கும் மூளையைக் கசக்கிப் பிழிந்து, இருக்கும் சிறிது உற்சாகத்தை முக்காலே மூணு வீசம் தொலைத்த பின்னர் வேலை தேடும் படலம் ஆரம்பமாகிறது.
வேலை கிடைத்து, இராப் பகலாக உழைத்துப் பொருளீட்டி, திருமணம் செய்து, குழந்தைகள் பெற்று, அவர்களுக்காகவென மேலும் மேலும் பொருளீட்டும் பொறுப்பை ஏற்று, அவர்களுக்கு வாழ்க்கை அமைத்துக் கொடுக்கவென்று பாடுபட்டு, இவ்வாறாக வாழ்வில் பெரும்பகுதியைக் கவலையிலேயே செலவிடும் மனிதன் வாழ்வின் இன்பத்தைத் தொலைத்து விட்டு பணம் எனும் காகிதத்தை எண்ணி எண்ணிச் சேர்ப்பதில் பொழுதை வீணடிக்கிறான்.

தன் தேவைக்கேற்ற அளவு மட்டுமே பொருளீட்டி, மிகுந்த நேரத்தை மகிழ்ச்சியாக வாழ்வதற்கென செலவிட்டு, உலகின் பல இடங்களுக்கும் சென்று, இயற்கைக் காட்சிகளையும் பிற மக்களையும் கண்டு, அவ்வபபோது தனது ஆத்ம நண்பர்களுடன் கூடி மகிழ்ந்து உறவாடி, தனக்கும் பிறருக்கும் மகிழ்ச்சி தரவல்ல செயல்களையே பெரும்பாலும் செய்து, வாழ்வாங்கு வாழ்பவன் இவ்வுலகிலேயே சொர்க்கத்தைக் காண்கிறான். இவ்வுலகு அனைத்தையும் தனதாக ஆத்மார்த்தமாக உணரும் அவன் அழியும் பொருட்களான, பணம், வீடு, நிலம் முதலியவற்றை அடைவதில் இன்பம் காண்பதில்லை, மாறாக, அழியாப் பொருளாகிய ஞானத்தைத் தேடி அடைகிறான். முக்தி பெறுகிறான்.

உலகம் பிறந்தது எனக்காக ஓடும் நதிகளும் எனக்காக

படம்: பாசம்
இயற்றியவர்: கவிஞர் வாலி
இசை: எம்.எஸ். விஸ்வநாதன, டி.கே. ராமமூர்த்தி
பாடியவர்: டி.எம். சௌந்தரராஜன்
ஆண்டு: 1961

paasam-the-movie

உலகம் பிறந்தது எனக்காக ஓடும் நதிகளும் எனக்காக
மலர்கள் மலர்வது எனக்காக அன்னை மடியை விரித்தாள் எனக்காக
உலகம் பிறந்தது எனக்காக ஓடும் நதிகளும் எனக்காக
உலகம் பிறந்தது எனக்காக ஓடும் நதிகளும் எனக்காக
மலர்கள் மலர்வது எனக்காக அன்னை மடியை விரித்தாள் எனக்காக
உலகம் பிறந்தது எனக்காக ஓடும் நதிகளும் எனக்காக

காற்றில் மிதக்கும் ஒலிகளிலே கடலில் தவழும் அலைகளிலே
இறைவன் இருப்பதை நானறிவேன் என்னை அவனே தானறிவான்
இறைவன் இருப்பதை நானறிவேன் என்னை அவனே தானறிவான்

உலகம் பிறந்தது எனக்காக ஓடும் நதிகளும் எனக்காக

தவழும் நிலவாம் தங்கரதம் தாரகை பதித்த மணி மகுடம்
குயில்கள் பாடும் கொண்டது எனது அரசாங்கம்
குயில்கள் பாடும் கொண்டது எனது அரசாங்கம்

உலகம் பிறந்தது எனக்காக ஓடும் நதிகளும் எனக்காக

எல்லாம் எனக்குள் இருந்தாலும் என்னைத் தனக்குள் வைத்திருக்கும்
அன்னை மனமே என் கோயில் அவளே என்றும் என் தெய்வம்
அன்னை மனமே என் கோயில் அவளே என்றும் என் தெய்வம்

உலகம் பிறந்தது எனக்காக ஓடும் நதிகளும் எனக்காக
உலகம் பிறந்தது எனக்காக ஓடும் நதிகளும் எனக்காக
மலர்கள் மலர்வது எனக்காக அன்னை மடியை விரித்தாள் எனக்காக
உலகம் பிறந்தது எனக்காக ஓடும் நதிகளும் எனக்காக

நீ தானா என்னை நினைத்தது?

ஆதிகாலம் தொட்டே மனிதன் பல விதமான கனவுகளிலும் கற்பனைகளிலும் திளைத்து அவற்றில் தான் அனுபவிக்க இயலாதவற்றை வேறொருவர் அனுபவித்ததாகக் காட்டும் பல விதமான ஸ்வாரஸ்யமான கதைகள் புனைந்து அந்தக் கதைகளைப் பிறருடன் பகிர்ந்து கொண்டு வந்திருக்கிறான்.
நாளடைவில் மனிதன் விஞ்ஞான அறிவு வளர்ச்சி பெற்று இயற்கையின் பல ரகசியங்களை அறிந்து அவற்றைப் பல கருவிகளின் துணையுடன் பிரயோகித்து, தான் கனவுகளிலும் கற்பனையில் கண்டவற்றை நிஜ வாழ்வில் நிகழ்த்திக் காட்டிப் பல அற்புதங்களைப் புரிந்து வந்திருக்கிறான்.

புஷ்பக விமானத்தைக் கதைகளில் காட்டிய மனிதன் காலப்போக்கில் ஆகாய விமானத்தைக் கண்டு அதன் மூலம் மனிதர்கள் உலகெங்கிலும் பறந்து செல்லும் வசதியைப் படைத்தான். மாயக்கண்ணாடியைக் கற்பனைக் கதைகளில் காட்டியவன் பின்னர் விண்வெளி ஆராய்ச்சயின் வாயிலாக செயற்கைக் கோள்களையும் பிற சாதனங்களையும் கண்டுபிடித்த நிலையில் உலகின் பல பகுதிகளில் வாழும் மனிதர்கள் ஒருவரையொருவர் தமது இருப்பிடத்திலிருந்தே கண்டு உரையாடும் அதிசயத்தை கணிணியின் உதவியுடனும் வெப் காமெராவின் உதவியோடும் நிகழ்த்திக் காட்டினான்.

சாகா வரத்துடன் என்றும் 16 வயதுடன் இளைஞனாக வாழும் மார்க்கண்டேயன் எனும் கதாபாத்திரத்தைப் புராண கதைகளில் படைத்த மனிதன் எதிர்காலத்தில் உண்மையாகவே மார்க்கண்டேயன் போல் பிறரும் வாழும் வழியையும் காணக்கூடும். "மண் மீது மாளாமல் மார்க்கண்டேயன் போல் வாழ்தல்' சாத்தியம் என்று மஹாகவி பாரதியார் தாம் எழுதிய பகவத் கீதை உரையில் குறிப்பிட்டுள்ளார். அமரகவியல்லவா? அவர் சொன்ன வாக்குப் பலிக்கும் என உறுதியாக நம்பலாம்.

மஹாபாரதக் கதைகளில் மேற்குறிப்பிட்டது போல் இடம் பெறும் மூடிய பெட்டி வடிவிலான ஒரு மாயக்கண்ணாடி திறந்த நிலையில் அதன் முன்னர் நிற்பவரின் மனதில் யார் இருக்கிறாரோ அவரைக் காட்டவல்லது. அதன் முன் பலராமன் நிற்கையில் அது அவரிடம் கதாயுதப் பயிற்சி பெற்ற பிரிய சீடனான துரியோதனனைக் காட்டும், கண்ணன் நிற்கையில் சகுனியைக் காட்டும். பின்னர் பலராமனின் மகளான வத்சலாவிடம் அதைக் கொடுக்க அவள் தனது தனியறையில் அதனைத் திறந்து பார்க்க அது அவளது மனதில் நின்ற அபிமன்யுவைக் காட்டும். அக்காட்சியில் இடம் பெறும் பாடல்:

நீ தானா என்னை நினைத்தது?

படம்: மாயா பஜார்
இயற்றியவர்: தஞ்சை டி.என். ராமையா தாஸ்
இசை: கண்டசாலா
பாடியோர்: கண்டசாலா, ஜிக்கி
ஆண்டு: 1957

நீ தானா? ஆ...
நீ தானா என்னை நினைத்தது? நீ தானா என்னை அழைத்தது?
நீ தானா என் இதயத்திலே நிலை தடுமாறிட உலவியது?
நீ தானா?

நீ தானே என்னை நினைத்தது? நீ தானே என்னை அழைத்தது?
நீ தானே என் இதயத்திலே நிலை தடுமாறிட உலவியது?
நீ தானே?

கனவினிலே ஒரு நினைவாகி - என்
நினைவினிலே ஒரு கனவாகி
கனவோ நினைவோ காண்பது மாயையோ?
கலவர மேவிடும் நிலவரமானேன்

நீ தானா என்னை நினைத்தது? நீ தானா என்னை அழைத்தது?
நீ தானா என் இதயத்திலே நிலை தடுமாறிட உலவியது?
நீ தானா?

கண்களில் நிலவும் காய்ந்திடவே இனி
என் மனதில் மணம் கமழ்ந்திடவே
கண்களில் நிலவும் காய்ந்திடவே இனி
என் மனதில் மணம் கமழ்ந்திடவே
கண்ணையும் மனதையும் கவர்ந்திடவே மெய்
காதலினாலே மகிழ்ந்திடவே

நீ தானே என்னை நினைத்தது? நீ தானே என்னை அழைத்தது?
நீ தானே என் இதயத்திலே நிலை தடுமாறிட உலவியது?
நீ தானே? நீ தானே?

ஒடிவது போல் இடை இருக்கும் இருக்கட்டுமே

கவிஞர்கள் ஒரு பெண்ணின் அழகை வர்ணிக்கையில் முக்கியமாக அவளது இடை பற்றிக் குறிப்பிடத் தவறுவதில்லலை. ஒரு பெண் நாட்டியமாடுகையில் அவளது இடையசைவே அனைத்திலும் மேலாக அனைவரது கருத்தையும் கவரவல்லது. சாமுத்ரிகா லக்ஷணப் படி ஒரு பெண்ணுக்கு இடை மெலிதாக இருத்தல் அவசியம். பெண்ணின் இடையைப் பூங்கொடிக்கும், மயிரிழைக்கும், சிவபெருமானின் சிறு வாத்தியமான உடுக்கைக்கும் இணையாகக் கொண்டு பல புலவர்கள் பாடியுள்ளனர்.
பவளக் கொடியில் பழுத்த செவ்வாயும் பனி முறுவல்
தவளத் திருநகையும் துணையா எங்கள் சங்கரனைத்
துவளப் பொருது துடியிடை சாய்க்கும் துணை முலையாள்
அவளைப் பணிமின் கண்டீர் அமராவதி ஆளுகைக்கே

என்று அந்தப் பராசக்தியை வர்ணித்துப் பாடுகையில் அபிராமி பட்டர் அவளது இடை உடுக்கையைப் போன்றுள்ளதெனக் குறிப்பிடுகின்றார்.

சூதளவளவெனும் இளமுலை துடியளவளவெனும் நுண்ணிடை
காதளவளவெனும் மதர்விழிக் கடையமுதனையவர் திறமினோ

என்று கலிங்கத்துப் பரணியில் வரும் கடைதிறப்பு பகுதியில் இடம்பெற்ற பாடலில் பெண்ணின் இடைக்கு உடுக்கையை உவமையாகக் கூறுகிறார் செயங்கொண்டார்.

இழையொன்றிரண்டு வகிர்செய்த நுண்ணிடை ஏந்திய பொற்
குழையொன்றிரண்டு விழியணங்கே கொண்ட கோபந்தணி
மழையொன்றிரண்டுகைப் பாணாபரணன் நின் வாயில் வந்தால்
பிழையொன்றிரண்டு பொறாரோ குடியியிற் பிறந்தவரே

என்று தன் சிஷ்யையான சோழ நாட்டு அரசி அரசன் மேல் கொண்ட கோபத்தைத் தணிக்க வேண்டி்ப் பாடிய பாடலில் மயிரிழை ஒன்றை இரண்டாக வகிர்ந்தால் எவ்வளவு இருக்குமோ அவ்வளவே உள்ள இடையுடைய பெண்ணே என வர்ணித்துள்ளார்.

சங்ககாலப் புலவர்களுக்கு சற்றும் இளைக்காத தற்காலப் புலவர்களும் இப்பான்மையைத் தொடர்ந்தே கவிதை புனைகின்றனர்.

ஒடிவது போல் இடை இருக்கும் இருக்கட்டுமே

படம்: இதயத்தில் நீ
இயற்றியவர்: வாலி
இசை: எம்.எஸ். விஸ்வநாதன்
பாடியவர்: பி.பி. ஸ்ரீனிவாஸ்
ஆண்டு: 1960

ஒடிவது போல் இடை இருக்கும் இருக்கட்டுமே ஹோய் - அது
ஒய்யார நடை நடக்கும் நடக்கட்டுமே ஹோய் - ஆஹா
ஒடிவது போல் இடை இருக்கும் இருக்கட்டுமே ஹோய் - அது
ஒய்யார நடை நடக்கும் நடக்கட்டுமே

சுடுவது போல் கண் சிவக்கும் சிவக்கட்டுமே - கண்
சுட்டு விட்டால் கவி பிறக்கும் பிறக்கட்டுமே கண்
சுட்டு விட்டால் கவி பிறக்கும் பிறக்கட்டுமே - ஆஹா

ஒடிவது போல் இடை இருக்கும் இருக்கட்டுமே - அது
ஒய்யார நடை நடக்கும் நடக்கட்டுமே

தொடுவது போல் கை துடிக்கும் துடிக்கட்டுமே - இளம்
தோகை நெஞ்சில் இடம் பிடிக்கும் பிடிக்கட்டுமே - - இளம்
தோகை நெஞ்சில் இடம் பிடிக்கும் பிடிக்கட்டுமே - ஆஹா
தொடர்வது போல் கால் தொடரும் தொடரடடுமே - கொஞ்சம்
தொடர்ந்து வந்தால் கொடி படரும் படரட்டுமே

கொடி மலர் போல் இதழ் விரியும் விரியட்டுமே - அது
குளிர் நிலவாய் நகை புரியும் புரியட்டுமே - அது
குளிர் நிலவாய் நகை புரியும் புரியட்டுமே

ஆஹாஹா ஆஹஹஹஹா

இறைவன் இருக்கின்றானா? மனிதன் கேட்கிறான்

சரீர சம்பந்தத்தால் உணர்கின்ற மாயங்களால் மதிமயங்கிய மனிதர்கள் தம் உள்ளேயே இறைவன் இருப்பதை அறியாமல் வெளியே எங்கெங்கோ தேடுகிறார்கள். தன் மனதில் தோன்றியவாறெல்லாம் பல வடிவங்களைக் கற்பித்து அவையே இறை என்று தன்னைத் தானே ஏமாற்றிக் கொள்வதுடன் பிறரையும் ஏமாற்றுகிறான் அறிவிற் குறைந்த மனிதன்.
உள்ள தனைத்திலும் உள்ளொளி யாகி
ஒளிர்ந்திடும் ஆன்மாவே-இங்கு,
கொள்ளற் கரிய பிரமமென் றேமறை
கூவுதல் கேளீரோ?

இறைத் தன்மைகளான அன்பும் அறிவும் பெறாத மனிதன் இறைவனைக் காண்பதெங்கே? நீ இறைவனை நோக்கி ஓர் அடி எடுத்து வைத்தால் இறைவன் உன்னை நோககிப் பல அடிகள் எடுத்து வைக்கிறான் என மெய்ஞ்ஞானிகள் கூறுகின்றனர். இறைவனை நோக்கிய பயணத்திற்கு இன்றியமையாத பக்தி, கருணை, உண்மை, நேர்மை, அடக்கம், உள்ளத்துறுதி முதலான நற்பண்புகள் அமையப் பெறாத மனிதன் இறைவனை ஒருபோதும் காணமாட்டான்.

இறைவன் இருக்கின்றானா? மனிதன் கேட்கிறான்

படம் : அவன் பித்தனா?
பாடியவர் : டி.எம்.எஸ்., சுசீலா
இயற்றியவர் : கவிஞர் கண்ணதாசன்
இசை : ஆர். பார்த்தசாரதி
ஆண்டு: 1966

இறைவன் இருக்கின்றானா?
இறைவன் இருக்கின்றானா? மனிதன் கேட்கிறான் - அவன்
இருந்தால் உலகத்திலே எங்கே வாழ்கிறான்? எங்கே வாழ்கிறான்?
நான் ஆத்திகனானேன் அவன் அகப்படவில்லை
நான் நாத்திகனானேன் அவன் பயப்படவில்லை

மனிதன் இருக்கின்றானா?
மனிதன் இருக்கின்றானா? இறைவன் கேட்கிறான் - அவன்
இருந்தால் உலகத்திலே எங்கே வாழ்கிறான்? எங்கே வாழ்கிறான்?
நான் அன்பு காட்டினேன் அவன் ஆட்கொள்ளவில்லை
இந்தத் துன்பம் தீர்க்கவும் அவன் துணை வரவில்லை

கண்ணிலே உறுதியில்லை காதலுக்கோர் நீதியில்லை
ஒரு நாள் இருந்த மனம் மறு நாள் இருப்பதில்லை
குடிசையில் ஓர் மனது கோபுரத்தில் ஓர் மனது
கூடாத சேர்க்கை எல்லாம் கூடினால் பல மனது

மனிதன் இருக்கின்றானா?

பார்ப்பவன் குருடனடி படிப்பவன் மூடனடி
உள்ளதை சொல்பவனே உலகத்தில் பித்தனடி
நீரோ கொதிக்குதடி நெருப்போ குளிருதடி
வெண்மையைக் கருமை என்று கண்ணாடி காட்டுதடி

இறைவன் இருக்கின்றானா?

ஒன்றையே நினைத்திருந்தும் ஒன்றாக வாழ்ந்திருந்தும்
பெண்ணாகப் பிறந்தவரை கண்ணாக யார் நினைத்தார்?
இருந்தால் இருந்த இடம் இல்லையேல் மறந்து விடும்
இவர்தான் மனிதர் என்றால் இயற்கையும் நின்றுவிடும்

மனிதன் இருக்கின்றானா?

சந்தேகம் பிறந்து விட்டால் சத்தியமும் பலிப்பதில்லை
சத்தியத்தைக் காப்பவனும் சாட்சி சொல்ல வருவதில்லை
வழக்கும் முடியவில்லை மனிதரின் தீர்ப்பும் இல்லை
மனிதனை மறந்து விட்டு வாழ்பவன் இறைவன் இல்லை

இறைவன் இருக்கின்றானா?
மனிதன் இருக்கின்றானா?
இறைவன் இருக்கின்றானா? மனிதன் கேட்கிறான் - அவன்
இருந்தால் உலகத்திலே எங்கே வாழ்கிறான் ? எங்கே வாழ்கிறான் ?

கல்யாண நாள் பார்க்கச் சொல்லலாமா?

வாழ்க்கையில் நாம் தொடர்ந்து பல பண்டிகைகளையும் வைபவங்களையும் அனைவருடன் கொண்டாடி மகிழ்கிறோம். மனித வாழ்வில் மிகவும் இன்றியமையாத வைபவம் திருமணமாகும். "இல்லறமல்லது நல்லறமன்று" என ஔவை மூதாட்டி மொழிந்தது போலவே, "உரிய வயதில் திருமணம் செயது கொள்ளாதவன் ஒரு சமூக விரோதியாக மாற வாய்ப்புள்ளது" என கிரேக்கப் பேரறிஞர் பிளேட்டோ கூறியுள்ளதாகக் கேள்விப்பட்டிருக்கிறேன்.
திருமணம் ஒருவருக்கு வாழ்க்கைத் துணையை அமைத்துக் கொடுப்பதால் ஏனைய அனைத்து வைபவங்களைக் காட்டிலும் அதிகப் படியான அக்கரையுடனும் முன்யோசனையுடனும் தீர்க்கமாக ஆலோசித்து ஆராய்ந்து வாழ்க்கைத் துணையை அமைத்துக் கொள்வது இன்றியமையாதது. இத்தகைய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை முறையாக மேற்கொள்ளாமல் அவசரத்தினால் முக்கியமான விஷயங்களை கவனிக்கத் தவறி, திட்டமிடாது மணவாழ்க்கையை அமைத்துக் கொள்வோர் திருமணத்திற்குப் பின்னர் மன நிறைவான வாழ்க்கையை வாழ்வர் என்பதற்கு உத்தரவாதம் கிடையாது.

ஒருவர் தனது குடும்பத்தாருக்கென சொந்தமாக ஒரு வீட்டைக் கட்டுகையில் எவ்வாறு அனைவரது தேவைகளையும் மனதில் கொண்டு அவற்றைப் பூர்த்தி செய்யத்தக்க வகையில் திட்டமிட்டு செயல்படுகிறாரோ அதே போல் தனது புத்திரர்கள் மற்றும் புத்திரிகளுக்குத் திருமணம் செய்து வைக்கையிலும் திட்டமிட்டு செயல்பட வேண்டும்.

இதனைக் கருத்தில் கொண்டே, "வீட்டைக் கட்டிப் பார் கல்யாணத்தைப் பண்ணிப் பார்." என்று நம் முன்னோர்கள் சொல்லி வைத்துள்ளனர். திருமணத் திட்டத்தில் மிகவும் முக்கியமானது திருமண நாள் குறித்தல். திருமணம் நடைபெறும் நாள் திருமணத்திற்கு வருவோரும் வாழ்த்துச் சொல்வோரும் நல்ல நாள் எனக் கருதும் நாளாக இருக்க வேண்டும். திருமண நாள் சரியாகக் குறிக்கவில்லையெனில் சில அன்பர்களது அதிருப்தியைப் பெற நேருவதால் அங்கே மகிழ்ச்சி குறைய வாய்ப்புள்ளது.

திருமண நாள் குறித்த பின்னர் பெற்றோர், உற்றார், உறவினர் அனைவரது மனங்களும் அந்நாள் என்று வரும் என்று எதிர்பார்த்துக் காத்திருப்பது ஒரு சுகமான அனுபவம். அதனிலும் மேலாக மணமகனுக்கும் மணமகளுக்கும் விளையும் இத்தகைய எதிர்பார்ப்பு பல கனவுகளை அவர்கள் மனதில் உருவாக்கி கனவுலகில் சஞ்சாரம் செய்ய வைப்பது இயல்பு.

அது சரி, ஒருவர் மேல் ஒருவர் காதல் கொண்ட ஆண் மகனும் பெண் மகளும் தமது திருமணத்துக்கு நாள் குறிப்பது குறித்த எண்ணங்களை ஒருவரோடொருவர் பரிமாறிக்கொள்ளும் அனுபவம் எப்படி இருக்கும்?

கல்யாண நாள் பார்க்கச் சொல்லலாமா?

படம்: பறக்கும் பாவை
இயற்றியவர்: கவிஞர் கண்ணதாசன்
பாடியவர்: டி.எம். சௌந்தரராஜன், பி. சுசீலா
ஆண்டு: 1966

கல்யாண நாள் பார்க்கச் சொல்லலாமா? - நாம்
கையோடு கை சேர்த்துக் கொள்ளலாமா?
செல்லாத இடம் நோக்கிச் செல்லலாமா?
சிந்தாமல் சிதறாமல் அள்ளலாமா?

கல்யாண நாள் பார்க்கச் சொல்லலாமா? - நாம்
கையோடு கை சேர்த்துக் கொள்ளலாமா?

வண்ண மணி மண்டபத்தில் துள்ளி விழுவோமா?
மந்திரத்தில் கண் மயங்கிப் பள்ளி கொள்ளுவோமா?
சொன்னவர்கள் சொன்னபடி அள்ளி வருவோமா?
தொட்டு வரும் தென்றலுக்கு தூது விடுவோமா?

கல்யாண நாள் பார்க்கச் சொல்லலாமா? - நாம்
கையோடு கை சேர்த்துக் கொள்ளலாமா?

கண்ணாடி பார்த்தபடி கதை படிப்போமா?
பொன்னான கன்னங்களில் படம் வரைவோமா?
நடந்ததை நினைத்தபடி ரசித்திருப்போமா?
நாளை இன்னும் அதிகம் என்று பிரிந்திருப்போமா?

கல்யாண நாள் பார்க்கச் சொல்லலாமா? - நாம்
கையோடு கை சேர்த்துக் கொள்ளலாமா?

சந்திரனைத் தேடிச் சென்று குடியிருப்போமா?
தமிழுக்குச் சேதி சொல்லி அழைத்துக் கொள்வோமா?
அந்திப் பட்டு வானத்திலே வலம் வருவோமா?
அங்கும் ஒரு ராஜாங்கம் அமைத்திருப்போமா?

கல்யாண நாள் பார்க்கச் சொல்லலாமா? - நாம்
கையோடு கை சேர்த்துக் கொள்ளலாமா?
செல்லாத இடம் நோக்கிச் செல்லலாமா?
சிந்தாமல் சிதறாமல் அள்ளலாமா?

காலத்தில் அழியாத காவியம் தர வந்த

எந்த ஒரு தொழிலையும் செய்கையில் அதில் பக்தி சிரத்தையுடன் ஈடுபட்டாலன்றி அது சிறக்காது.
பக்தியினாலே இந்தப் பாரினில் எய்திடும் மேன்மைகள் கேளடி
சித்தந்தெளியும் இங்கு செய்கையனைத்திலும் செம்மை பிறந்திடும்
வித்தைகள் சேரும்- நல்ல வீரர் உறவு கிடைக்கும் மனத்திடை
தத்துவம் உண்டாம்-நெஞ்சிற் சஞ்சலம் நீங்கி உறுதி விளங்கிடும்

அனைத்திற்கும் மேலாக தெய்வ பக்தி மிகவும் அவசியம். தெய்வத்தின் அருளிருந்தால் சாதிக்க முடியாதது ஏதுமில்லை. எவ்வாறாயினும் நாம் ஈடுபடும் முயற்சி பலிதமாக உரிய காலம் வரும் வரை காத்திருக்க வேண்டும். காத்திருக்கப் பொறுமை மிகவும் தேவையானது.

உரிய காலம் வருமுன்னரே நாம் மேற்கொண்ட முயற்சியில் பலன் விளையுமென எதிர்பார்த்து மனம் சோர்தல் கூடாது. இடையிடையே வரும் தடங்கல்களினாலும் வேறு பல சோதனைகளாலும் நமது முயற்சியைக் கைவிடுதலும் கூடாது. முயற்சியுடையார் இகழ்ச்சியடையார், முயற்சி திருவினையாக்கும் என்றெல்லாம் நம் முன்னோர்கள் கூறிய முதுமொழிகளை மனதில் நிலை நிறுத்தி தொடர்ந்து முயல்வதுடன் பக்தி செய்து வந்தால் காரியம் கைகூடும்.

காலத்தில் அழியாத காவியம் தர வந்த

திரைப்படம்: மஹாகவி காளிதாஸ்
இயற்றியவர்: கவிஞர் கண்ணதாசன்
இசை: கே.வி. மஹாதேவன்
பாடியவர்: கே.பி. சுந்தராம்பாள்
ஆண்டு: 1966

காலத்தில் அழியாத காவியம் தர வந்த
மாபெரும் கவி மன்னனே உனக்கு
தாயொரு மொழி சொல்லுவேன்

உணர்ச்சியில் விளையாடும் உன்னதக் கவிச்சிங்கம்
உணர்ச்சியில் விளையாடும் உன்னதக் கவிச்சிங்கம்
தளர்ச்சியில் விழலாகுமா மகனே சந்தனம் சேறாகுமா?

காலத்தில் அழியாத காவியம் தர வந்த
மாபெரும் கவி மன்னனே உனக்கு
தாயொரு மொழி சொல்லுவேன்

பல்லக்கு பரிவாரம் படையுடன் முடியும் உன்
சொல்லுக்கு விலையாகுமே மகனே உன்
தோளுக்குள் புவி ஆளுமே
ஊருக்குக் கதை சொல்வோர் உள்ளத்தை வதை செய்தால்
ஊருக்குக் கதை சொல்வோர் உள்ளத்தை வதை செய்தால்
சீர்பெறும் கவி வாடுமே மகனே
தெய்வத்தின் முகம் வாடுமே

காலத்தில் அழியாத காவியம் தர வந்த
மாபெரும் கவி மன்னனே உனக்கு
தாயொரு மொழி சொல்லுவேன்

வாழ்வென்றும் தாழ்வென்றும் வளமென்றும் குறைவென்றும்
சக்கரம் சுழல்கின்றது அதில் தான் சரித்திரம் நிகழ்கின்றது
யாருக்கும் வாழ்வுண்டு அதற்கொரு நாளுண்டு
அது வரை பொறுப்பாயடா மகனே என்
அருகினில் இருப்பாயடா

காலத்தில் அழியாத காவியம் தர வந்த
மாபெரும் கவி மன்னனே உனக்கு
தாயொரு மொழி சொல்லுவேன்

பார்த்தேன் சிரித்தேன் பக்கத்தில் அழைத்தேன்

கவிஞர் கண்ணதாசன் ஒரு புகழ்பெற்ற எழுத்தாளருமாவார்.
கவிஞர் கண்ணதாசன்

கண்ணதாசன் வாழ்க்கைக் குறிப்பு

பிறப்பு - 24.6.1927, சிறுகூடல்பட்டி
பெற்றோர் - சாத்தப்பன், விசாலாட்சி
மரபு - தன வணிகர்
இயற்பெயர் - முத்தையா
உடன்பிறந்தோர் - எண்மர்
கல்வி - ஆரம்பக் கல்வி சிறுகூடல்பட்டியில்
உயர்நிலைப் பள்ளி - அமராவதி புதூர், எட்டாவது வரை

1943 - முதற் பணி - திருவொற்றியூர், அஜாக்ஸ் கம்பெனி
1944 - இலக்கியப் பணி - திருமகள் ஆசிரியர்
1944 - முதற் கவிதை - முதற் கவிதை
1945/46 திரை ஒலி, மேதாவி ஆசிரியர்
1949 சண்டமாருதம் ஆசிரியர்
1949 திரைப்படத் துறை பயிற்சி
1949 - முதற் பாடல் - படம் கன்னியின் காதலி, பாடல் கலங்காதேதிருமனமே
1949 - அரசியல் - தி.மு.கழகம், ஆரம்ப கால உறுப்பினர்
1950 - திருமணங்கள் - பொன்னழகி, பார்வதி
1952-53 - முதற்காவியம் - மாங்கனி, டால்மியாபுரம் பெயர் மாற்றப் போராட்டத்தில் ஈடுபட்டுத் தண்டனைக் குள்ளாகிச் சிறையில் இருந்தபோது எழுதப்பட்டது
1952-53 - கதை வசனம் - இல்லற ஜோதி, சிறையில் இருந்தபோது
1954, - முதற் பத்திரிகை - தென்றல் கிழமை இதழ், தொடர்ந்து தென்றல் திரை சண்டமாருதம், மாதம் இருமுறை,
1956 முல்லை இலக்கிய மாத இதழ்
1957 - தேர்தல் - இரண்டாவது பொதுத் தேர்தலில் திருக்கோஷ்டியூர் தொகுதியில் தி.மு.கழகத்தின் சார்பில் போட்டியிட்டுத் தோல்வி
1957 - திரைப்படத் தயாரிப்பு - மாலையிட்ட மங்கை
1958-59 - சிவகங்கைச்சீமை, கவலை இல்லாத மனிதன்
1960 - 61 - அரசியல் மாற்றம் - - தி.மு.கழகத்திலிருந்து விலகல், தென்றல் நாளிதழ் துவக்கம், புதிய கட்சி - தமிழ்த் தேசியக் கட்சி - சம்பத் தலைமையில் துவக்கம், தென்றல் திரை நாளிதழ் துவக்கம்,
1962-63இல் காங்கிரஸில் இணைப்ப மீண்டும் திரைப்படம் - வானம்பாடி, இரத்தத் திலகம், கறுப்புப் பணம் 1964 - 66 - அகில இந்திய காங்கிரஸ் செயற்குழு உறுப்பினர்
1968-1969 - கண்ணதாசன் மாத இதழ், கடிதம் நாளிதழ்
1970 - ரஷ்யப் பயணம், சிறந்த பாடலாசிரியர் விருது - மத்திய, மாநில அரசுகள்
1971, 1975 - மலேஷியா பயணம்
1978 - அரசவைக் கவிஞர்
1979 - சாகித்ய அகாடமி பரிசு - சேரமான் காதலி
1979 - அண்ணாமலை அரசர் நினைவுப் பரிசு (சிறந்த கவிஞர்)
1981 - அமெரிக்கா பயணம் (டெட்ராய்ட் நகர் தமிழ் சங்க விழா)

இறுதி நாட்கள் - உடல்நிலை காரணமாக 24.7.81 சிகாகோ நகர் மருத்துவ மனையில் அனுமதிக்கப்பட்டு 17.10.81 சனிக்கிழமை இந்தியநேரம் 10.45 மணிக்கு அமரநிலை எய்தினார். 20.10.81 அமெரிக்காவிலிருந்து பொன்னுடலம் சென்னைக்குக் கொண்டு வரப்பட்டு, இலட்சக்கணக்கான மக்களiன் இறுதி அஞ்சலிக்குப் பிறகு அரசு மரியாதையுடன் 22.10.81இல் எரியூட்டப்பட்டது.

புனைபெயர்கள் - காரை முத்துப் புலவர், வணங்காமுடி, கமகப்பிரியா, பார்வதிநாதன், ஆரோக்கியசாமி
குடும்பம் - இரு மனைவியரும் ஒன்பது ஆண் மக்களும் ஐந்து பெண் மக்களும் உள்ளனர்.
(தொகுப்பு - இராம. கண்ணப்பன் )

நாவல்கள்

அவள் ஒரு இந்துப் பெண்
சிவப்புக்கல் மூக்குத்தி
ரத்த புஷ்பங்கள்
சுவர்ணா சரஸ்வதி
நடந்த கதை
மிசா
சுருதி சேராத ராகங்கள்
முப்பது நாளும் பவுர்ணமி
அரங்கமும் அந்தரங்கமும்
ஆயிரம் தீவு அங்கயர்கண்ணி
தெய்வத் திருமணங்கள்
ஆயிரங்கால் மண்டபம்
காதல் கொண்ட தென்னாடு
அதைவிட ரகசியம்
ஒரு கவிஞனின் கதை
சிங்காரி பார்த்த சென்னை
வேலங்காட்டியூர் விழா
விளக்கு மட்டுமா சிவப்பு
வனவாசம்
அத்வைத ரகசியம்
பிருந்தாவனம்
வாழ்க்கைச்சரிதம்
எனது வசந்த காலங்கள்
எனது சுயசரிதம்
வனவாசம்
கட்டுரைகள்
கடைசிப்பக்கம்
போய் வருகிறேன்
அந்தி, சந்தி, அர்த்தஜாமம்
நான் பார்த்த அரசியல்
எண்ணங்கள்
தாயகங்கள்
கட்டுரைகள்
வாழ்க்கை என்னும் சோலையிலே
குடும்பசுகம்
ஞானாம்பிகா
ராகமாலிகா
இலக்கியத்தில் காதல்
தோட்டத்து மலர்கள்
இலக்கிய யுத்தங்கள்
போய் வருகிறேன்
நாடகங்கள்
அனார்கலி
சிவகங்கைச்சீமை
ராஜ தண்டனை
கவிதை நூல்கள்
கண்ணதாசன் கவிதைகள் - 6 பாகங்களில்
திரைப்படப் பாடல்கள் - 2 பாகங்களில்
பாடிக்கொடுத்த மங்களங்கள்
கவிதாஞ்சலி
தாய்ப்பாவை
ஸ்ரீகிருஷ்ண கவசம்
அவளுக்கு ஒரு பாடல்
சுருதி சேராத ராகங்கள்
முற்றுப்பெறாத காவியங்கள்
பஜகோவிந்தம்
கிருஷ்ண அந்தாதி, கிருஷ்ண கானம்

இவை தவிர கவிஞர் கண்ணதாசன் பகவத் கீதைக்கு உரை எழுதியுள்ளார், அபிராமி பட்டரின் அபிராமி அந்தாதிக்கு விளக்கவுரையும் எழுதியுள்ளார்.

அபிராமி பட்டரின் அபிராமி அந்தாதி - கவிஞர் கண்ணதாசன் விளக்க உரையுடன்

அபிராமி அந்தாதியில் வரும் பாடல்களான,

அறிந்தேன், எவரும் அறியா மறையை, அறிந்துகொண்டு
செறிந்தேன், நினது திருவடிக்கே,-திருவே.- வெருவிப்
பிரிந்தேன், நின் அன்பர் பெருமை எண்ணாத கரும நெஞ்சால்,
மரிந்தே விழும் நரகுக்கு உறவாய மனிதரையே.

வந்தே சரணம் புகும் அடியாருக்கு, வானுலகம்
தந்தே பரிவொடு தான் போய் இருக்கும்--சதுர்முகமும்,
பைந் தேன் அலங்கல் பரு மணி ஆகமும், பாகமும், பொற்
செந் தேன் மலரும், அலர் கதிர் ஞாயிறும், திங்களுமே.

குறித்தேன் மனத்தில் நின் கோலம் எல்லாம், நின் குறிப்பு அறிந்து
மரித்தேன் மறலி வருகின்ற நேர்வழி, வண்டு கிண்டி
வெறித்தேன் அவிழ் கொன்றை வேணிப் பிரான் ஒரு கூற்றை, மெய்யில்
பறித்தே, குடிபுகுதும் பஞ்ச பாண பயிரவியே.

என்ற பாடல்களின் தாக்கமும் அவருடைய கவியுள்ளத்தில் இருந்திருக்கிறது என்பது அவர் இயற்றிய திரைப்பாடல் ஒன்றில் தெரிய வருகிறது.

பார்த்தேன் சிரித்தேன் பக்கத்தில் அழைத்தேன்

திரைப் படம்: வீர அபிமன்யு
பாடியவர்கள்: பீ. சுசீலா - பி.பி.ஸ்ரீனிவாஸ்
இசை: கே.வி. மஹாதேவன்
இயற்றியவர்: கவிஞர் கண்ணதாசன்
ஆண்டு: 1965

பார்த்தேன் சிரித்தேன் பக்கத்தில் அழைத்தேன்
அன்று உனைத் தேன் என நான் நினைத்தேன்
அந்த மலைத் தேன் இதுவென மலைத்தேன்
பார்த்தேன் சிரித்தேன் பக்கத்தில் அழைத்தேன்
உனைத் தேன் என நான் நினைத்தேன்
அந்த மலைத் தேன் இதுவென மலைத்தேன்

பார்த்தேன் சிரித்தேன் பக்கம் வரத் துடித்தேன்
அன்று உனைத் தேன் என நான் நினைத்தேன்
அந்த மலைத் தேன் இவரென மலைத்தேன்
பார்த்தேன் சிரித்தேன் பக்கம் வரத் துடித்தேன்
உனைத் தேன் என நான் நினைத்தேன்
அந்த மலைத் தேன் இவரென மலைத்தேன்

கொடித் தேன் இனி எங்கள் குடித் தேன் என
ஒரு படித் தேன் பார்வையில் குடித்தேன்
கொடித் தேன் இனி எங்கள் குடித் தேன் என
ஒரு படித் தேன் பார்வையில் குடித்தேன்
துளித் தேன் சிந்தாமல் களித்தேன் ஒரு
துளித் தேன் சிந்தாமல் களித்தேன் கைகளில்
அணைத்தேன் அழகினை ரசித்தேன்

பார்த்தேன் சிரித்தேன் பக்கம் வரத் துடித்தேன்
உனைத் தேன் என நான் நினைத்தேன்
அந்த மலைத் தேன் இவரென மலைத்தேன்

மலர்த் தேன் போல் நானும் மலர்ந்தேன் உனக்கென
வளர்ந்தேன் பருவத்தில் மணந்தேன்
மலர்த் தேன் போல் நானும் மலர்ந்தேன் உனக்கென
வளர்ந்தேன் பருவத்தில் மணந்தேன்
எடுத்தேன் கொடுத்தேன் சுவைத்தேன்
எடுத்தேன் கொடுத்தேன் சுவைத்தேன் இனி தேன்
இல்லாதபடி கதை முடித்தேன்

பார்த்தேன் சிரித்தேன் பக்கத்தில் அழைத்தேன்
உனைத் தேன் என நான் நினைத்தேன்
அந்த மலைத் தேன் இதுவென மலைத்தேன்

நிலவுக்கு நிலவு சுகம் பெற நினைத்தேன்
உலகத்தை நான் இன்று மறந்தேன்
உலகத்தை மறந்தேன் உறக்கத்தை மறந்தேன்
உன்னுடன் நான் ஒன்று கலந்தேன்

பார்த்தேன் சிரித்தேன் பக்கத்தில் அழைத்தேன்
உனைத் தேன் என நான் நினைத்தேன்
அந்த மலைத் தேன் இதுவென மலைத்தேன்

தோள் கண்டேன் தோளே கண்டேன்

கவிச் சக்கரவர்த்தி கம்பர் தனது இராமாயண மஹா காவியத்தில் ஸ்ரீ ராமனின் அழகை வர்ணிக்கும் விதமாக
தோள்கண்டார் தோளே கண்டார்
தொடுகழல் கமலம் அன்ன
தாள்கண்டார் தாளே கண்டார்
தடக்கை கண்டாரும் அஃதே
வாள்கொண்ட கண்ணார் யாரே
வடிவினை முடியக் கண்டார்
ஊழ்கொண்ட சமயத்து அன்னான்
உருவுகண் டாரை ஒத்தார்.

எனும் பாடல் மூலமாக அவன் மிதிலை நகர் வீதி வழியே நடந்து செல்கையில் அவன் அழகை அங்குள்ள மங்கையர் ரசித்ததை எடுத்துரைக்கிறார்.

ராமபிரானின் தோள்கள், கழல் எனும் ஆபரணத்தை அணிந்த தாமரை மலரையொத்த பாதங்கள், திடமான கைகள் என ஒவ்வொரு அங்கத்தையும் பார்த்த பெண்கள் அவ்வங்கத்தை விட்டுப் பார்வையை நீக்க விரும்பாத அளவு அதன் வனப்பால் ஈர்க்கப் பட்டதால் வேறோர் அங்கத்தைப் பார்க்கவில்லையாதலால் அவர்களுள் யாரும் ராமனின் முழு உருவத்தையும் ரசிக்க இயலாத நிலையிலிருந்தனராம்.

இவ்வாறு பெண்கள் ஒரு ஆடவனின் அழகை ரசித்தது போல் ஒரு ஆடவன் தன் மனம் கவர்ந்த பெண்ணொருத்தியின் அழகை ரசித்து மகிழும் சூழ்நிலைக்குத் தக்க பாடல் ஒன்றை இயற்ற வேண்டியிருந்த தருணத்தில் பழந்தமிழ் இலக்கியங்களைச் சுவைத்து, அவற்றின் சாற்றைப் பிழிந்து தனது பாடல்களில் அள்ளித்தந்த கவியரசர் கண்ணதாசன் கவிச்சக்கரவர்த்தியின் இப்பாடலை மனதில் கொண்டு இதே பாணியில் எழுதியதோர் இனிய பாடல்:

தோள் கண்டேன் தோளே கண்டேன்

திரைப் படம்: இதயக் கமலம்
இயற்றியவர்: கவிஞர் கண்ணதாசன்
இசை: கே.வி. மஹாதேவன்
பாடியவர்: பி.பி. ஸ்ரீனிவாஸ், பி. சுசீலா
ஆண்டு: 1965

தோள் கண்டேன் தோளே கண்டேன்
தோளிலிரு கிளிகள் கண்டேன்
வாள் கண்டேன் வாளே கண்டேன்
வட்டமிடும் விழிகள் கண்டேன்
தோள் கண்டேன் தோளே கண்டேன்
தோளிலிரு கிளிகள் கண்டேன்
வாள் கண்டேன் வாளே கண்டேன்
வட்டமிடும் விழிகள் கண்டேன்
தோள் கண்டேன் தோளே கண்டேன்

கட்டாத மேகம் கட்டி வந்த கூந்தல்
எட்டாத நிலவு எட்டி வந்த போது ஆ..ஆ..
கட்டாத மேகம் கட்டி வந்த கூந்தல்
எட்டாத நிலவு எட்டி வந்த போது எட்டி வந்த போது

தோள் கண்டேன் தோளே கண்டேன்
தோளிலிரு கிளிகள் கண்டேன்
வாள் கண்டேன் வாளே கண்டேன்
வட்டமிடும் விழிகள் கண்டேன்
தோள் கண்டேன் தோளே கண்டேன்

செண்டு வண்ணச் சிட்டு சின்ன முல்லை மொட்டு
குங்குமப் பொட்டு கொஞ்சும் நெஞ்சைத் தொட்டு ஆ..ஆ..
செண்டு வண்ணச் சிட்டு சின்ன முல்லை மொட்டு
குங்குமப் பொட்டு கொஞ்சும் நெஞ்சைத் தொட்டு
கொஞ்சும் நெஞ்சைத் தொட்டு தொட்டு

தோள் கண்டேன் தோளே கண்டேன்
தோளிலிரு கிளிகள் கண்டேன்
வாள் கண்டேன் வாளே கண்டேன்
வட்டமிடும் விழிகள் கண்டேன்
தோள் கண்டேன் தோளே கண்டேன்

தேடி வந்த திங்கள் திங்களில் செவ்வாய்
செவ்வாயின் வெள்ளி சேர்த்தெடுத்தேன் அள்ளி ஆ..ஆ..
தேடி வந்த திங்கள் திங்களில் செவ்வாய்
செவ்வாயின் வெள்ளி சேர்த்தெடுத்தேன் அள்ளி
சேர்த்தெடுத்தேன் அள்ளி அள்ளி

தோள் கண்டேன் தோளே கண்டேன் ஆ..
தோளிலிரு கிளிகள் கண்டேன் ஆ..
வாள் கண்டேன் வாளே கண்டேன் ஆ..
வட்டமிடும் விழிகள் கண்டேன் ஆ..
தோள் கண்டேன் தோளே கண்டேன் ஆ..

மாமா மாமா மாமா மாமா மாமா மாமா

காதல் என்பது ஒவ்வொரு ஆணுக்கும் பெண்ணுக்கும் பருவ வயதில் இயல்பாக ஏற்படும் உணர்வு. ஆணும் பெண்ணும் சேர்வதாலேயே உயிர் வாழ்க்கை உலகில் நிலைபெறுகிறது. காதல் செய்வோர் உணர்ச்சிவசப் பட்டுத் தவறு செய்வதால் பல இக்கட்டான சூழ்நிலைகள் ஏற்பட வாய்ப்புள்ளது. ஆகவே காதல் கொள்வோர் தம் உணர்ச்சியைக் கட்டுப்படுத்தப் பழக வேண்டும். ஒரு ஆணும் பெண்ணும் ஒருவரையொருவர் விரும்புகையில் அத்தகைய விருப்பம் வாழ்நாளில் கணவன் மனைவியாக ஒருங்கிணைந்து மனமொப்பி வாழ வகை செய்தாலே அது காதல் எனக் கொள்ளலாகும்.
வெறும் பாலுணர்ச்சி மேலீட்டால் ஒருவர் மேல் ஒருவருக்கு ஏற்படும் ஈர்ப்பு என்றும் காதலாவதில்லை. தாம் இருவரும் இணைந்து வாழ்வது சாத்தியம் என்றும் அதனால் நல்வாழ்வுக்கு வழி பிறக்கும் என்றும் எல்லா வித்த்திலும் ஆராய்ந்தறிந்த பின்னரே காதலை வெளிப்படுத்தலாம். அவ்வாறன்றி உருவத்தைப் பார்த்து ஏற்படும் மயக்கத்தைக் காதல் என்றெண்ணிப் பிதற்றுதல் பயன் தராது.

ஒரு ஆணும் பெண்ணும் ஒருவரை ஒருவர் நன்கு புரிந்து கொண்டு தமக்குத் தகுந்த துணை என்று நன்கு அறிந்து தேர்ந்து காதல் கொண்ட பின்னர் திருமணம் வரை உணர்ச்சிகளுக்கு இடம் கொடாமல் சமுதாயத்தில் தமக்குரிய மதிப்பைக் காக்கு்ம் விதமாக ஒருவரையொருவர் தொட்டுப் பழகாமல் தூர நின்றே பழகுவது காதலுக்கு மரியாதை தரும். வாழ்வு சிறக்க வழிகோலும்.

மாமா மாமா மாமா மாமா மாமா மாமா

திரைப்படம்: குமுதம்
இயற்றியவர்: மருதகாசி
இசை: கே.வி. மஹாதேவன்
பாடியோர்: டி.எம். சௌந்தரராஜன், ஜமுனா ராணி
ஆண்டு: 1962

மாமா மாமா மாமா மாமா மாமா மாமா
ஏம்மா ஏம்மா ஏம்மா ஏம்மா ஏம்மா ஏம்மா

சிட்டுப் போலப் பெண்ணிருந்தா வட்டமிட்டு சுத்தி சுத்தி
கிட்டக் கிட்ட ஓடி வந்து தொடலாமா?
சிட்டுப் போலப் பெண்ணிருந்தா வட்டமிட்டு சுத்தி சுத்தி
கிட்டக் கிட்ட ஓடி வந்து தொடலாமா? தாலி
கட்டுமுன்னே கை மேலே படலாமா?

மாமா மாமா மாமா மாமா மாமா மாமா

வெட்டும் விழிப் பார்வையினால் ஒட்டுறவாய்ப் பேசிவிட்டு
எட்டி எட்டி இப்படியும் ஒடலாமா? ம்ம்
வெட்டும் விழிப் பார்வையினால் ஒட்டுறவாய்ப் பேசிவிட்டு
எட்டி எட்டி இப்படியும் ஒடலாமா? கையைத்
தொட்டுப் பேச மட்டும் தடை போடலாமா?

ஏம்மா ஏம்மா ஏம்மா ஏம்மா ஏம்மா ஏம்மா

ஊரறிய நாடறிய பந்தலிலே நமக்கு
உத்தவங்க மத்தவங்க மத்தியிலே
ஊரறிய நாடறிய பந்தலிலே நமக்கு
உத்தவங்க மத்தவங்க மத்தியிலே
ஒண்ணாகி ஆஹா
ஒண்ணாகி உறவு முறை கொண்டாடும் முன்னாலே
ஒருவர் கையை மற்றொருவர் பிடிக்கலாமா? இதை
உணராமே ஆம்பளைங்க துடிக்கலாமா

மாமா மாமா மாமா மாமா மாமா மாமா

ஹோய் ஹோய் ஹோய் ஹோய் ஹோய் ஹோய்

நாடறிய ஒண்ணாகும் முன்னாலே தூண்டி
போடுகின்ற உங்களது கண்ணாலே
நாடறிய ஒண்ணாகும் முன்னாலே தூண்டி
போடுகின்ற உங்களது கண்ணாலே
ஜாடை காட்டி ம்ம் ஆசை மூட்டி ம்ம்
ஜாடை காட்டி ஆசை மூட்டி சல்லாபப் பாட்டுப் பாடி
நீங்க மட்டும் எங்களைத் தாக்கலாமா? உள்ள
நிலையறிஞ்சும் இந்தக் கேள்வி கேட்கலாமா?

ஏம்மா ஏம்மா ஏம்மா ஏம்மா ஏம்மா ஏம்மா

கன்னிப் பொண்ணப் பாத்தவுடன் காதலிச்சு அவளைக்
கைவிட்டு ஒம்பது மமேல் ஆசை வச்சு
கன்னிப் பொண்ணப் பாத்தவுடன் காதலிச்சு அவளைக்
கைவிட்டு ஒம்பது மமேல் ஆசை வச்சு
வண்டாக ஆஹா
வண்டாக மாறுகிற மனமுள்ள ஆம்பிளைங்க
கொண்டாட்டம் போடுவதப் பாத்ததில்லையா? பெண்கள்
திண்டாடும் கதைகளைக் கேட்டதில்லையா?

மாமா மாமா மாமா மாமா மாமா மாமா

ஹோய் ஹோய் ஹோய் ஹோய் ஹோய் ஹோய்

ஒண்ண விட்டு ஒண்ணத் தேடி ஓடுறவன் நிதமும்
ஊரை ஏச்சு வேஷமெல்லாம் போடுறவன்
ஒண்ண விட்டு ஒண்ணத் தேடி ஓடுறவன் நிதமும்
ஊரை ஏச்சு வேஷமெல்லாம் போடுறவன்
உள்ள இந்த ஒலகத்தையே உத்துப் பாத்தா நீங்க இப்போ
சொல்லுறது எல்லாமே உண்மை தான்
கொஞ்சும் தூர நின்னு பழகுவதும் நன்மை தான் நன்மை தான்

ஆமா ஆமா ஆமா ஆமா ஆமா ஆமா

கட்டுப்பாட்ட மீறாமே சட்டதிட்டம் மாறமே
காத்திருக்க வேணும் கொஞ்ச காலம் வரையில்
கட்டுப்பாட்ட மீறாமே சட்டதிட்டம் மாறமே
காத்திருக்க வேணும் கொஞ்ச காலம் வரையில் பிறகு
கல்யாணம் ஆகிவிட்டா ஏது தடை ஏது தடை

மாமா மாமா மாமா ஆமா மாமா மாமா மாமா
ஆமா ஆமா ஆமா போடு ஆமா ஆமா ஆமா

தூளியிலே ஆட வந்த வானத்து மின் விளக்கே

பாடலுடன் இசைந்து இசைத்து இசையாத உள்ளங்களை இசைய வைப்பது இசை. பாடல்களுள் சிறந்ததும் மிகவும் இனிமையானதும் தாலாட்டு. தாலாட்டுப் பாட்டைக் கேட்டு உறங்காத குழந்தைகள் மிகவும் சிலவாகவே இருக்க வேண்டும். குழந்தையைத் தொட்டிலிலிட்டு ஆட்டியவாறே தாய் பாடும் தாலாட்டைப் போல் இனிமையானது இவ்வுலகில் அக்குழந்தைக்கு வேறில்லை. தாலாடடுப் பாடல் தாய் மட்டுமே பாட வேண்டுமெனும் கட்டாயம் ஏதுமில்லை. தந்தை, சகோதரன் நண்பர் என யார் பாடினாலும் அது கேட்பதற்கு இனிமையாக இருந்தால் குழந்தை உறங்குதல் எளிது.
சிறுவனாக இருந்த காலத்தில் என் இளைய சகோதரியைத் தொட்டிலிலிட்டு ஆட்டித் தாலாட்டுப் பாடித் தூங்க வைத்த அனுபவமும், பின்னர் மணமாகி என் மகன் பிறந்த பின்னர் அவனைத் தூளியிலிட்டு ஆட்டித் தாலாட்டிய அனுபவமும் எனக்கு நிறைய உண்டு. என் மகன் பிறந்த காலத்தில் தமிழ்த் திரைவானில் பிரபலமானதொரு தாலாட்டுப் பாடலை நான் பாட, அதைக் கேட்டவாறு உறங்கப் பழகிய என் மகன் அப்பாடலைத் திரும்பத் திரு்ம்பப் பல முறைகள் பாடக் கூறிக் கேட்டதும் எனது வாழ்வில் மிகவும் சுவையான அனுபவம்.

தூளியிலே ஆட வந்த வானத்து மின் விளக்கே

திரைப்படம்: சின்னத்தம்பி
இயற்றியவர்: வாலி
இசை: இளையராஜா
பாடியவர்: மனோ
ஆண்டு: 1991

தூளியிலே ஆட வந்த வானத்து மின் விளக்கே
ஆழியிலே கண்டெடுத்த அற்புத ஆணிமுத்தே
தொட்டில் மேலே முத்து மாலே வண்ணப்
பூவா வெளையாட சின்னத் தம்பி எச பாட
தூளியிலே ஆட வந்த வானத்து மின் விளக்கே
ஆழியிலே கண்டெடுத்த அற்புத ஆணிமுத்தே

பாட்டெடுத்து நாம் படிச்சா காட்டறுவி கண்ணுறங்கும்
பட்ட மரம் பூ மலரும் பாறையிலும் நீர் சுரக்கும்
பாட்டெடுத்து நாம் படிச்சா காட்டறுவி கண்ணுறங்கும்
பட்ட மரம் பூ மலரும் பாறையிலும் நீர் சுரக்கும்
ராகமென்ன தாளமென்ன அறிஞ்சா நான் படிச்சேன்
ஏழு கட்ட எட்டுக் கட்டே தெரிஞ்சா நான் படிச்சேன்
நான் படைச்ச ஞானமெல்லாம் யார் கொடுத்தா சாமி தான்
ஏடெடுத்துப் படிச்சதில்லே சாட்சி இந்த பூமி தான்

தொட்டில் மேலே முத்து மாலே வண்ணப்
பூவா வெளையாட சின்னத் தம்பி எச பாட

சோறு போடத் தாயிருக்கா பட்டினிய பாத்ததில்லே
தாயிருக்கும் காரணத்தால் கோயிலுக்குப் போனதில்லே
சோறு போடத் தாயிருக்கா பட்டினிய பாத்ததில்லே
தாயிருக்கும் காரணத்தால் கோயிலுக்குப் போனதில்லே
தாயடிச்சு வலிச்சதில்லே இருந்தும் நானழுவேன்
நானழுகத் தாங்கிடுமா உடனே தாயழுவா
ஆக மொத்தம் தாய் மனசு போல் நடக்கும் பிள்ள தான்
வாழுகிற வாழ்க்கையிலே தோல்விகளே இல்ல தான்

தொட்டில் மேலே முத்து மாலே வண்ணப்
பூவா வெளையாட சின்னத் தம்பி எச பாட

தூளியிலே ஆட வந்த வானத்து மின் விளக்கே
ஆழியிலே கண்டெடுத்த அற்புத ஆணிமுத்தே
தொட்டில் மேலே முத்து மாலே வண்ணப்
பூவா வெளையாட சின்னத் தம்பி எச பாட வண்ணப்
பூவா வெளையாட சின்னத் தம்பி எச பாட

கோபியர் கொஞ்சும் ரமணா கோபால கிருஷ்ணா

மிகவும் அழகுவாய்ந்த ஒரு கட்டிளம்பெண் வாலிபப் பருவத்திலிருக்கும் ஒரு ஆடவனைக் கண்டு தன் காதலைப் பார்வையாலும் தன் நடவடிக்கையாலும் வெளிப்படுத்தினால் அந்த ஆடவன் இளம் வயதிலேயே துறவறம் மேற்கொண்ட முற்றும் துறந்த ஒரு முனிவனாயினும் அவனது மனம் ஒரு நொடிப்பொழுதாகிலும் சஞ்சலமடைவதே மனித இயற்கை. அவ்வாறு மனம் சஞ்சலப் படவில்லையாயினும் அவனது மனதில் அவளைப் பற்றி எழும் சிந்தனைகள் அவளது அழகினைக் குறித்தும், அவளது செயல்கள் குறித்துமே இருத்தல் இயல்பு.
அரங்கநாதரின் மேல் பக்திகொண்டு அரங்கனுக்குத் தொண்டு செய்வதையே தன் வாழ்க்கையாகக் கொண்டு வாழும் அடியார் ஒருவர் மேல் அத்தகைய அழகு மங்கை ஒருத்தி தன் காதல் கணைகளைத் தொடுத்தாள் அவரைத் தன் அழகுக்கு அடிமையாக்கும் எண்ணத்துடன். அவள் மேல் சாதாரண மனிதர் போல் மோகம் கொள்ளாமல் அவள் தன் மேல் காட்டும் அன்பிலும் அவள் அழகிலும் அரங்கனையே கண்டு சேவித்தார் அவ்வடியார். அவரே தொண்டரடிப் பொடியாழ்வார். இந்தத் தொண்டரடிப் பொடியாழ்வாரின் கதையை நடிகர் திலகம் சிவாஜி கணேசனும், நாட்டியப் பேரொளி பத்மினியும் இணைந்து நடித்து தமிழ்த் திரையில் நடிப்பின் புதியதொரு பரிமாணத்தை அற்புதமாகக் காட்டியுள்ளனர் ஏ.பி. நாகராஜன் அவர்கள் இயக்கத்தில் வெளிவந்த திருமால் பெருமை திரைப்படத்தில்.

கோபியர் கொஞ்சும் ரமணா கோபால கிருஷ்ணா

திருமால் பெருமை
கவிஞர் கண்ணதாசன்
கே.வி. மஹாதேவன்
டி.எம். சௌந்தரராஜன்
ஆண்டு: 1968

கோபியர் கொஞ்சும் ரமணா கோபால கிருஷ்ணா
கோபியர் கொஞ்சும் ரமணா கோபால கிருஷ்ணா
கோபியர் கொஞ்சும் ரமணா

மாபாரதத்தின் கண்ணா கண்ணா கண்ணா கண்ணா
மாபாரதத்தின் கண்ணா மாயக்கலையின் மன்னா
மாபாரதத்தின் கண்ணா மாயக்கலையின் மன்னா
மாதவா கார்மேக வண்ணா - மதுசூதனா
மாதவா கார்மேக வண்ணா - மதுசூதனா
கோபியர் கொஞ்சும் ரமணா

தாயின் கருணை உள்ளம் தந்தையின் அன்பு நெஞ்சம்
தாயின் கருணை உள்ளம் தந்தையின் அன்பு நெஞ்சம்
தாயின் கருணை உள்ளம் தந்தையின் அன்பு நெஞ்சம்
தந்தவன் நீயே முகுந்தா ஸ்ரீ வைகுந்தா
தந்தவன் நீயே முகுந்தா ஸ்ரீ வைகுந்தா

கோபியர் கொஞ்சும் ரமணா கோபால கிருஷ்ணா
கோபியர் கொஞ்சும் ரமணா கோபால கிருஷ்ணா
கோபியர் கொஞ்சும் ரமணா கோபால கிருஷ்ணா
கோபியர் கொஞ்சும் ரமணா ரமணா ரமணா

கடவுள் தூங்கவில்லை அவன் கண்ணில் மயக்கமில்லை

தினை விதைத்தவன் தினை அறுப்பான்
வினை விதைத்தவன் வினை அறுப்பான்
இது இயற்கையின் விதி, இதனை எவராலும் மாற்ற இயலாது. செய்த காரியங்களுக்கேற்ற பிரதிபலன் நிச்சயம் கிட்டும். நாம் ஒருவருக்கு நன்மை செய்தோமெனில் அது நமக்குப் பிற்காலத்தில் ஏதேனும் ஒரு விதத்தில் நன்மை பயப்பதும், தீமை செய்தோமாயின் நமக்குப் பிரதியாகத் தீமை பயப்பதும் உறுதி. குற்றம் பரிந்தவன் குற்ற உணர்வுடனேயே நிம்மதியின்றி வாழ நேரிடும்.

பிறர் அறிய மாட்டார் என எண்ணிச் செய்யும் பாப காரியங்கள் உரிய காலத்தில் அனைவருக்கும் தெரிய வரும். எவரும் உண்மையை இறைவனிடமிருந்தும் உலகத்தாரிடமிருந்தும் மறைத்தல் இயலாது. வாழ்க்கையை மகிழ்ச்சியுடன் கழிக்க நாம் செய்ய வேண்டுவது என்னவெனில், மனதால் பிறருக்கு யாதொரு துன்பமும் நினைக்காமல், செயல்களால் யாதொரு துன்பமும் விளைவிக்காமல் உலகம் உய்யும் பொருட்டு நல்ல செயல்களையே செய்து அனைவரது அன்பையும் பெறுவது ஒன்றே.

கடவுள் தூங்கவில்லை அவன் கண்ணில் மயக்கமில்லை

படம்: மன்னிப்பு
இயற்றியவர்: வ்ஆலி
இசை: எஸ்.எம். சுப்பையா நாயுடு
பாடியவர்: சீர்காழி கோவிந்தராஜன்

பாதை தெரிகின்றது அவன் பயணம் தொடர்கின்றது
யார் சிரித்தாலும் யார் அழுதாலும் தன் வழி நடக்கின்றது

கடவுள் தூங்கவில்லை
கடவுள் தூங்கவில்லை அவன் கண்ணில் மயக்கமில்லை
கடவுள் தூங்கவில்லை அவன் கண்ணில் மயக்கமில்லை
கடவுள் தூங்கவில்லை
உண்மை என்ற சொல்லை அவன் மறைத்து வைப்பதில்லை
உண்மை என்ற சொல்லை அவன் மறைத்து வைப்பதில்லை
கடவுள் தூங்கவில்லை

கண்ணுக்குள் ஆயிரம் காட்சி வரும் உன் நெஞ்சுக்குள் ஆயிரம் நினைவு வரும்
கண்ணுக்குள் ஆயிரம் காட்சி வரும் உன் நெஞ்சுக்குள் ஆயிரம் நினைவு வரும்
மண்ணுக்குள் உடலை மறைத்தாலும்
மண்ணுக்குள் உடலை மறைத்தாலும் நீ மனதுக்குள் மறைத்தது வெளியாகும்

கடவுள் தூங்கவில்லை தூங்கவில்லை

இருட்டில் தருமம் இருக்கின்றது அதில் காலத்தின் வெளிச்சம் விழுகின்றது
இருட்டில் தருமம் இருக்கின்றது அதில் காலத்தின் வெளிச்சம் விழுகின்றது
உலகத்தின் பார்வையில் படுகின்றது
உலகத்தின் பார்வையில் படுகின்றது அது உள்ளத்தின் நினைவைத் தொடுகின்றது

கடவுள் தூங்கவில்லை தூங்கவில்லை

ஒவ்வொரு மனிதனும் இறக்கின்றான் அவன் இருப்பவன் கண்ணைத் திறக்கின்றான்
ஒவ்வொரு மனிதனும் இறக்கின்றான் அவன் இருப்பவன் கண்ணைத் திறக்கின்றான்
அறிந்தவன் தெரிந்தே நடிக்கின்றான்
அறிந்தவன் தெரிந்தே நடிக்கின்றான் அவன் ஆட்டத்தின் முடிவில் துடிக்கின்றான்

கடவுள் தூங்கவில்லை அவன் கண்ணில் மயக்கமில்லை
கடவுள் தூங்கவில்லை
உண்மை என்ற சொல்லை அவன் மறைத்து வைப்பதில்லை
உண்மை என்ற சொல்லை அவன் மறைத்து வைப்பதில்லை
கடவுள் தூங்கவில்லை தூங்கவில்லை

சக்தி கொடு சக்தி கொடு சக்தி கொடு

பொதுவாக மரணத்தைக் கண்டு அஞ்சாதவர் யாருமில்லை. தனக்கு மரண பயமில்லை என்று சொல்வோர் உண்மையில் தனது மரண பயத்தை மறைக்கிறார்கள் அல்லது நடிக்கிறார்கள். உண்மையாகவே மரண பயமில்லாதவர் தமது பூவுலக வாழ்வை செவ்வனே வாழ்ந்து, தன் குடும்பத்துக்கும், சமுதாயத்துக்குமான தனது கடமைகளைக் குறைவின்றி நிறைவு செய்தவரே ஆவர். பிறர் நலனில் அக்கரை கொண்டு தன்னலம் கருதாது வாழ்க்கை நடத்துவோர்க்கு மடடுமே மரண பயமில்லாத நிலை கிட்டும்.
மரணம் என்பது உடலுக்கு இயற்கையாக உரிய காலத்தில் கிடைக்கும் கதியாகும். அது என்றாகிலும் ஒரு நாள் நடந்தே தீரும். அதை மாற்றுவது மார்க்கண்டேயன் தவிர யாருக்கும் இயலாது.

இவ்வுலகில் நாம் வாழ்கையில் நமது கடமைகளைச் சீராக நிறைவேற்ற நமக்கு சக்தி தேவை. அத்தகைய சக்தியை நாம் இறையருளைக் கொண்டே பெற முடியும். இதற்குப் பிரார்த்தனை மிகவும் முக்கியமான சாதனமாகும். இறை சக்தியை மனதாரத் தொழுது வேண்டுவோர்க்கு சக்தி கிடைக்கும்.

சக்தி கொடு சக்தி கொடு சக்தி கொடு
>சக்தி கொ
படம்: பாபா
இயற்றியவர்: வைரமுத்து
இசை; ஏ.ஆர். ரஹ்மான்
பாடியவர்: கார்த்திக்

நம் நடை கண்டு அகங்காரம் தூளாக வேண்டும்
நம் படை கண்டு திசையெல்லாம் பயந்தோட வேண்டும்
சக்தி கொடு சக்தி கொடு சக்தி கொடு சக்தி கொடு
சக்தி கொடு சக்தி கொடு சக்தி கொடு சக்தி கொடு
இறைவா இறைவா

தாயும் நீயே தந்தையும் நீயே உயிரும் நீயே உண்மையும் நீயே
தாயும் நீயே தந்தையும் நீயே உயிரும் நீயே உண்மையும் நீயே

தூணிலும் இருப்பாய் துரும்பிலும் இருப்பாய்
கொடுமை அழித்துவிட கொள்கை ஜெயித்துவிட சக்தி கொடு சக்தி கொடு

நம் நடை கண்டு அகங்காரம் தூளாக வேண்டும்
நம் படை கண்டு திசையெல்லாம் பயந்தோட வேண்டும்
சக்தி கொடு

வெள்ளதில் வீழ்ந்தவரை கரையேற்ற சக்தி கொடு
பள்ளத்தில் கிடப்பவரை மேடேற்ற சக்தி கொடு
தீமைக்கும் கொடுமைக்கும் தீ வைக்க சக்தி கொடு
வறுமைக்குப் பிறந்தவரை வாழ்விக்க சக்தி கொடு
எரி மலைகள் என் காலில் தூளாக சக்தி கொடு
ஒரு வார்த்தை சொன்னாலே ஊர் மாற சக்தி கொடு

தாயும் நீயே தந்தையும் நீயே உயிரும் நீயே உண்மையும் நீயே
இறைவா இறைவா

முடிவெடுத்த பின்னால் நான் தடம் மாற மாட்டேன்
முன் வைத்த காலை நான் பின் வைக்க மாட்டேன்
எனை நம்பி வந்தவரை ஏமாற்ற மாட்டேன்
ஏணியாய் நான் இருந்து யேமாற மாட்டேன்
உப்பிட்ட தமிழ் மண்ணை நான் மறக்க மாட்டேன்
உப்பிட்ட தமிழ் மண்ணை நான் மறக்க மாட்டேன்
நான் உயிர் வாழ்ந்தால் இங்கே தான் ஓடிவிட மாட்டேன்
கட்சிகளை பதவிகளை நான் விரும்பமாட்டேன்
காலத்தின் கட்டளையை நான் மறுக்க மாட்டேன்

இறைவா இறைவா
தாயும் நீயே தந்தையும் நீயே உயிரும் நீயே உண்மையும் நீயே
தாயும் நீயே தந்தையும் நீயே உயிரும் நீயே உண்மையும் நீயே
தூணிலும் இருப்பாய் துரும்பிலும் இருப்பாய்
கொடுமை அழித்துவிட கொள்கை ஜெயித்துவிட
சக்தி கொடு சக்தி கொடு சக்தி கொடு
நம் நடை கண்டு அகங்காரம் தூளாக வேண்டும்
நம் படை கண்டு திசையெல்லாம் பயந்தோட வேண்டும்
சக்தி கொடு சக்தி கொடு

சந்திரோதயம் ஒரு பெண்ணானதோ?

அழகு மிளிரும் உலகினை நாம் கண்குளிரக் காண்பதற்கு சூரிய வெளிச்சமும் சந்திரனின் ஒளியும் உதவுகின்றன. சூரியன் அதிகாலையில் கீழ் வானத்தில் உதிக்கும் பொழுதும் அந்தியில் மேற்கே மறையும் பொழுதும் விண்ணில் மேகங்களுடனும், பூமியின் பல்வேறு பகுதிகளுடனும் சூரியனின் கிரணங்கள் கலந்து காட்டும் பல விதமான எண்ணிறந்த வர்ண ஜாலங்கள் பார்க்கப் பார்க்கப் பரவசமூட்டும்.
சூரியனின் உதயமும் அஸ்தமனமும் குறிப்பாகக் கன்னியாகுமரியில் மிக அற்புதமான காட்சிகளாகும். அத்துடன் ஆண்டின் குறிப்பிட்ட காலத்தில் ஒரே நேரத்தில் சூரியன் மேற்குக் கடலில் மறைகையில் கிழக்குக் கடலில் சந்திரன் மேலெழும் காட்சி மிகவும் அற்புதமானது,

ஒவ்வொரு ஆண்டிலும் தினந்தோறும் சூரியன் காலையில் உதிக்கும் நேரமும் மாலையில் மறையும் நேரமும் நாமறிவோம் ஆனால் சந்திரன் உதிக்கும் நேரத்தை அறிவோமாவெனில் இல்லையென்றே கூற வேண்டும். சந்திரன் பொதுவாக இரவில் வானத்தில் நம் கண்களுக்குப் புலப்பட்டாலும் பல நாட்களில் பகல் பொழுதிலேயே தோன்றி விடுவதும் கண்கூடு. ஆனால் சந்திரன் எப்போது தோன்றினாலும் அதன் அழகை அனைவரும் வியந்து ரசிக்கிறோம்.

சந்திரனின் நடமாட்டத்ததைக் கணிக்க இயலாதது போல் பெண்களின் மனத்தில் ஓடும் எண்ணங்களையும் அவர்களது செயல்பாடுகளையும் கணிக்க இயலாத நிலை இருப்பதாலேயே பெண்ணை சந்திரனுடன் ஒப்பிடுகின்றரோ கவிஞர்கள்? இதோ ஒரு கவிஞர் ஒரு பெண்ணை சந்திரனின் உதயத்துக்கு ஒப்பிடுகிறார்.

சந்திரோதயம் ஒரு பெண்ணானதோ?

படம் : சந்திரோதயம்
குரல் : டி.எம். சௌந்தரராஜன், பி. சுசீலா
இசை : எம்.எஸ்.விஸ்வநாதன்
இயற்றியவர்: வாலி
ஆண்டு: 1966

சந்திரோதயம் ஒரு பெண்ணானதோ? செந்தாமரை இரு கண்ணானதோ?
சந்திரோதயம் ஒரு பெண்ணானதோ? செந்தாமரை இரு கண்ணானதோ?
பொன்னோவியம் என்று பேரானதோ? என் வாசல் வழியாக வலம் வந்ததோ?
சந்திரோதயம் ஒரு பெண்ணானதோ? செந்தாமரை இரு கண்ணானதோ?

குளிர் காற்று கிள்ளாத மலரல்லவோ? கிளி வந்து கொத்தாத கனியல்லவோ?
குளிர் காற்று கிள்ளாத மலரல்லவோ? கிளி வந்து கொத்தாத கனியல்லவோ?
நிழல் மேகம் தழுவாத நிலவல்லவோ? நெஞ்சோடு நீ சேர்த்த பொருளல்லவோ?
எந்நாளும் பிரியாத உறவல்லவோ?

இளம் சூரியன் உந்தன் வடிவானதோ? செவ்வானமே உந்தன் நிறமானதோ?
பொன் மாளிகை உந்தன் மனமானதோ? என் காதல் உயிர் வாழ இடம் தந்ததோ?
இளம் சூரியன் உந்தன் வடிவானதோ? செவ்வானமே உந்தன் நிறமானதோ?

ஆஆஆஆஆ ஆஆஆ ஆஆஆஆ ஆஆஆஆஆ ஆஆஆஆ ஆஆஆஆஆ
ஆஆஆஆஆ ஆஆஆ ஆஆஆஆ ஆஆஆஆஆ ஆஆஆஆ ஆஆஆஆஆ

முத்தாரம் சிரிக்கின்ற சிரிப்பல்லவோ? முழு நெஞ்சைத் தொடுகின்ற நெருப்பல்லவோ?
முத்தாரம் சிரிக்கின்ற சிரிப்பல்லவோ? முழு நெஞ்சைத் தொடுகின்ற நெருப்பல்லவோ?
சங்கீதம் பொழிகின்ற மொழியல்லவோ? சந்தோஷம் வருகின்ற வழியல்லவோ?
என் கோயில் குடி கொண்ட சிலையல்லவோ?

சந்திரோதயம் ஒரு பெண்ணானதோ? செந்தாமரை இரு கண்ணானதோ?

அலையோடு பிறவாத கடல் இல்லையே நிழலோடு நடக்காத உடல் இல்லையே
துடிக்காத இமையோடு விழியில்லையே துணையோடு சேராத இனமில்லையே
என் மேனி உனதன்றி எனதில்லையே

இதழோடு இதழ் வைத்து இமை மூடவோ? இருக்கின்ற சுகம் வாங்கத் தடை போடவோ?
மடி மீது தலை வைத்து இளைப்பாறவோ? முகத்தோடு முகம் வைத்து முத்தாடவோ?
கண் ஜாடை கவி சொல்ல இசை பாடவோ?

இளம் சூரியன் உந்தன் வடிவானதோ? செவ்வானமே உந்தன் நிறமானதோ?
சந்திரோதயம் ஒரு பெண்ணானதோ? செந்தாமரை இரு கண்ணானதோ?
ஆஆஆஆ ஆஆஆஆஆ ஆஆஆஆ ஆஆஆஆஆ

நிற்பதுவே நடப்பதுவே பறப்பதுவே

கண்ணால் காண்பதும் பொய், காதால் கேட்பதும் பொய், தீர விசாரிப்பதே மெய் என்று நம் முன்னோர்கள் பண்டைக்காலம் தொட்டே கூறிவரும் தத்துவத்தை மெய்ப்பித்தது புகழ்பெற்ற விஞ்ஞானி கண்டறிந்த பொது சார்புக் கோட்பாடு (theory of relativity) .எனும் தத்துவம்.
ஒரு முறை விஞ்ஞானி ஐன்ஸ்டீன், "நாம் பார்ப்பவையெல்லாம் நிஜமல்ல" எனும் ரீதியில் தான் கண்டறிந்த தத்துவத்தை விளக்குகையில் அவ்விளக்கத்தைக் கேட்டுக்கொண்டிருந்த இளைஞன் ஒருவன் அவரிடம், "தங்கள் கூற்றை ஒப்புக்கொள்ள இயலாது. நான் தற்போது தங்களைப் பார்க்கிறேன், தாங்கள் நிஜமில்லையா?" என்று கேட்டானாம். ஐன்ஸ்டீன் அவனிடம் வானத்தில் ஜொலித்துக் கொண்டிருந்த ஒரு நட்சத்திரத்தைச் சுட்டிக் காட்டி, "அந்த நட்சத்திரம் தெரிகிறதா?" என்று கேட்க அவன், "ஆம்" என்று பதிலிறுத்தானாம். பதிலாக ஐன்ஸ்டீன், "அந்த நட்சத்திரம் வெகு காலத்திற்கு முன்பே எரிந்து மறைந்து விட்டது. நீ தற்போது பார்க்கும் ஒளி அந்த நட்சத்திரம் பல நூறு ஆண்டுகளுக்கு முன்னர் அது வெளீயிட்ட ஒளியே என்று கூறி அந்த உண்மையை விளக்கவே இளைஞன் மலைத்துப் போனானாம்.

அவ்வாறெனில், நாம் காண்பவை அனைத்தும் பொய்யா? நாம் இருப்பதும் பொய்யா? வானும், நதியும் கடலும் மலையும் ஆறும் சோலையும், மான்களும் மீன்களும் என நாம் பார்க்கும் ஜீவராசிகள் அனைத்துப் பொய்யா? உண்மை எது பொய் எது என்று உண்மையிலேயே விளங்கவில்லை.

நிற்பதுவே நடப்பதுவே பறப்பதுவே

படம்: பாரதி
இயற்றியவர்: பாரதியார்
இசை: இளையராஜா
பாடியவர்: உன்னிகிருஷ்ணன்
ஆண்டி: 2000

நிற்பதுவே நடப்பதுவே பறப்பதுவே
நிற்பதுவே நடப்பதுவே பறப்பதுவே
நிற்பதுவே நடப்பதுவே பறப்பதுவே நீங்களெல்லாம்
சொற்பனந்தானோ? பல தோற்ற மயக்கங்களோ?
சொற்பனந்தானோ? பல தோற்ற மயக்கங்களோ?

கற்பதுவே கேட்பதுவே கருதுவதே நீங்களெல்லாம்
அற்ப மாயைகளோ? உம்முள் ஆழ்ந்த பொருளில்லையோ?
அற்ப மாயைகளோ? உம்முள் ஆழ்ந்த பொருளில்லையோ?

வானகமே இளவெயிலே மரச்செறிவே
வானகமே இளவெயிலே மரச்செறிவே நீங்களெல்லாம்
கானலின் நீரோ? வெறும் காட்சிப் பிழைதானோ?
வானகமே இளவெயிலே மரச்செறிவே நீங்களெல்லாம்
கானலின் நீரோ? வெறும் காட்சிப் பிழைதானோ?
போனதெல்லாம் கனவினைப்போல் புதைந்தழிந்தே போனதனால்
நானும் ஓர் கனவோ? இந்த ஞாலமும் பொய்தானோ?

நிற்பதுவே நடப்பதுவே பறப்பதுவே
நிற்பதுவே நடப்பதுவே பறப்பதுவே நீங்களெல்லாம்
சொற்பனந்தானோ? பல தோற்ற மயக்கங்களோ?
சொற்பனந்தானோ? பல தோற்ற மயக்கங்களோ?

காலமென்றே ஒரு நினைவும் காட்சியென்றே பல நினைவும்
கோலமும் பொய்களோ? அங்குக் குணங்களும் பொய்களோ?
காலமென்றே ஒரு நினைவும் காட்சியென்றே பல நினைவும்
கோலமும் பொய்களோ? அங்குக் குணங்களும் பொய்களோ?
காண்பவெல்லாம் மறையுமென்றால் மறைந்ததெல்லாம் காண்பமன்றோ?
நானும் ஓர் கனவோ? இந்த ஞாலமும் பொய்தானோ?

நிற்பதுவே நடப்பதுவே பறப்பதுவே
நிற்பதுவே நடப்பதுவே பறப்பதுவே நீங்களெல்லாம்
சொற்பனந்தானோ? பல தோற்ற மயக்கங்களோ?
சொற்பனந்தானோ? பல தோற்ற மயக்கங்களோ?
கற்பதுவே கேட்பதுவே கருதுவதே நீங்களெல்லாம்
அற்ப மாயைகளோ? உம்முள் ஆழ்ந்த பொருளில்லையோ?
அற்ப மாயைகளோ? உம்முள் ஆழ்ந்த பொருளில்லையோ?