திங்கள், 23 நவம்பர், 2009

கோடை மறைந்தால் இன்பம் வரும்

பகற்பொழுதின் வெப்பத்தால் வாடி மாலை முடிந்து இரவு வருமுன்னரே வெப்பம் தணிக்கும் வழி வேண்டி மொட்டை மாடியில் படுத்துறங்கி, வழக்கத்திற்கு மாறாக அதிகாலையிலேயே சுட்டெரிக்கும் வெயில் பட்டு விழித்தெழுந்து. மீண்டும் அன்றாடப் பணிகளில் புழுங்கித்தவித்து. மாலை மீண்டும் வருவதெப்போதென்று வானைப் பார்த்த வண்ணமே நாளைக் கழிக்கும் கோடை காலத்தில் நமக்குச் சற்றே இதமளிப்பது வானத்தில் வரும் வெண்ணிலவு.
காலை வந்த செம்பரிதி கடலில் மூழ்கிக் கனல் மாறிக் குளிரடைந்த ஒளிப்பிழம்பான அதன் தண்ணொளியில் உடலின் வெப்பம் தணிவதுடன் மனச்சோர்வும் மறைந்து புது உற்சாகம் பெருகுவது அனைவரும் அனுபவித்தறிந்த உண்மை.

என்னதான் நிலா வந்து வெயில் பட்டு வாடிய மேனியைச் சற்றே குளிர்வித்தாலும் கோடை என்று மறையும் என்று எதிர்பார்த்து ஏங்கும் மனிதர் குலத்துக்குக் கோடை மறைந்தாலே இன்பம் வரும்.

அவ்வாறு வரும் இன்பத்தை மெய்யன்பு கொண்டோரே முழுமையாக அனுபவிக்க இயலும்.

உண்மைக் காதல் கொண்ட ஆணும் பெண்ணும் ஒருவரோடொருவர் அளவளாவி ஆனந்தமடையும் காலம் கோடை மறைந்த பின் வரும் வசந்த காலமல்லவோ?

கோடை மறைந்தால் இன்பம் வரும்

திரைப்படம்: மஞ்சள் மகிமை
இசை: மாஸ்டர் வேணு
பாடியோர்: பி.சுசீலா, கண்டசாலா
ஆண்டு: 1959

கோடை மறைந்தால் இன்பம் வரும்
கோடை மறைந்தால் இன்பம் வரும் - கூடி
பிரிந்தவர் சேர்ந்தாலே சொந்தம் வரும்
கோடை மறைந்தால் இன்பம் வரும்

ஓடும் தென்றல் முன்னால் வரும்
ஓடும் தென்றல் முன்னால் வரும் - இசை
பாடும் குயிலோசை தன்னால் வரும்
ஓடும் தென்றல் முன்னால் வரும்

வாசமாமலர் வாவென்றசைந்ததே
ஆசையாய் வண்டு நேசம் இசைத்ததே
பேசினால் சுகம் வருமோ தெரிந்தே
மாசிலா இன்பம் இனிமேல் நமதே

கோடை மறைந்தால் இன்பம் வரும்

பாரிங்கே கண்ணே பாராய் சந்திரோதயம்
பகலில் தோன்றவும் ஆமோ அதிசயம்
பாரிங்கே கண்ணே பாராய் சந்திரோதயம்
பகலில் தோன்றவும் ஆமோ அதிசயம்
பளிங்கு நீர் தனில் விளங்கும் இம்மதியம்
பாவை உனதொரு முகமே உதயம்

ஓடும் தென்றல் முன்னால் வரும்

ஆனந்தம் அது எங்கே பிறந்தது?
அமைந்த ஆண் பெண் அன்பால் வளர்ந்தது
ஊனும் உயிரும் ஒன்றாய்க் கலந்தது
உண்மைக் காதல் உறவே பெரிது

கோடை மறைந்தால் இன்பம் வரும் கூடி
பிரிந்தவர் சேர்ந்தாலே சொந்தம் வரும்
கோடை மறைந்தால் இன்பம் வரும்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக