செவ்வாய், 12 ஜூலை, 2011

இன்பம் எங்கும் இங்கே

தற்காத்து தற்கொண்டாற் பேணித் தகைசான்ற
சொற்காத்துச் சோர்விலாள் பெண்

எனும் குறளில் வள்ளுவர், மனைவி எனும் உயரிய இடத்தைப் பெற்ற பெண்ணின் இலக்கணத்தைத் தெள்ளத் தெளிவாக விளக்குகிறார். மனைவியானவள் முதற்கண் தன்னைக் காத்துக்கொண்டு தனது கணவனைப் பேண வேண்டும். அதாவது தனது உடல் நலத்தையும் தன்மானத்தையும் சமுதாயத்தில் ஒரு இல்லத்தரசிக்குரிய மரியாதையையும் காத்துக்கொண்டு கணவனது தேவைகளறிந்து பணிவிடை செய்து அவனது உடல் நலம், தன்மானம் மற்றும் மரியாதையை நிலைநிறுத்த வேண்டும். அதன் பின்னர் தகுதிவாய்ந்த பெருமை கொள்ளத் தக்க சொற்களைப் பேசி தனது வாக்கைக் காப்பாற்றி எக்காலத்தும் தனது கடமையை சோர்வின்றிச் செய்ய வேண்டும் என்பதே இக்குறள் கூறும் நெறியாகும்.

மனைவி என்பவள் வாழ்க்கைத் துணைவியாவாள். தன் வாழ்நாள் உள்ளளவும் தன்னுடைய கணவனுக்கு அவனது கடமைகள் அனைத்திலும் உறுதுணையாக விளங்குவதுடன் அவனுடை சுகதுக்கங்களில் பங்கு கொண்டு அவனது வாழ்வை மகிழ்ச்சி நிறைந்ததாக அமைக்க வேண்டும். நமது பாரத சமுதாயத்தில் குடும்பப் பெண்களுள் பெரும்பாலோர் இத்தகைய உன்னதமான பணியை ஒழுங்காகச் செந்து வருவதாலேயே தொன்று தொட்டு உலகில் உள்ள அனைத்து நாடுகளையும் விட நமது நாடு கலாச்சாரத்தில் உயர்ந்ததாகக் கருதிப் போற்றப் படுகிறது.

இத்தகைய பெண்ணைப் பெண்ணரசி என்று நம் முன்னோர்கள் புகழ்ந்தனர். பெண்மையை ஆளும் உன்னத குணம் வாய்ந்தவள் என இதற்குப் பொருள் கொள்ளலாம். இத்தகைய பெண்களை நாம் எங்கும் தேட வேண்டியதில்லை. நம்முடனே இன்று பழகும் மூத்த நண்பர்களிடையே நாம் இத்தகைய பெண்களைக் காண முடியும்.

மழலைகளின் அன்புக்குரிய தாத்தாவான சீனுத் தாத்தாவின் அன்புக்குரிய மனைவியான சரோஜா பாட்டி இன்று நம்மிடையே வாழும் பெண்ணரசிகளுள் ஒருவர். 80 வயதை நெருங்கும் சீனு தாத்தாவுடன் அவர் இன்றும் மிகவும் மகிழ்ச்சியாக வாழ்கிறார். திருமணமான புதிதில் கணவனிடம் அன்பு கொண்ட ஒரு மனைவி கணவனிடத்தே எத்துணை வாஞ்சையைப் பொழிவாரோ அதை விடவும் மேலான அன்பைத் தன் கணவரிடம் கொண்டுள்ள நிலை கீழ்க்கண்ட இணையப் பக்கத்திலும் அதனுடன் இணைந்துள்ள பிற பக்கங்களிலும் விளங்கும்.

http://mazhalaigal.com/entertainment/photo/photo-001/0716vs11s_snow.php

தாத்தாவும் பாட்டியும் சிறு குழந்தைகள் போல விளையாடுவது கண்டு துள்ளாத மனமும் துள்ளும்.

சரோஜா பாட்டிக்கு இன்று பிறந்த நாள். இந்த நன்னாளில் அவரை வாழ்த்தி வணங்கி அவரது நல்லாசிகளை வேண்டுகிறோம். அவரும் சீனு தாத்தாவும் வாழ்வது போலவே நாம் அனைவரும் நம் வாழ்நாள் முழுவதும் என்றும் ஆனந்தம் பொங்கும் நல்வாழ்வு வாழ வேண்டுமென இறைவனை வேண்டுவோம்.

சரோஜா பாட்டிக்கு இன்றைய பாடலைக் காணிக்கையாக்கி அவர் இருக்கும் இடத்தில் இன்பம் என்றும் ஆட்சி புரிய வேண்டுமென இறைவனை வேண்டுகிறேன்.

இன்பம் எங்கும் இங்கே

திரைப்படம்: பெண்ணரசி
இயற்றியவர்: ஏ. மருதகாசி
இசை: கே.வி. மஹாதேவன்
பாடியோர்: எம்.எஸ். ராஜேஸ்வரி, திருச்சி லோகநாதன்

இன்பம் எங்கும் இங்கே ஆட்சி புரியுது
இன்பம் எங்கும் இங்கே ஆட்சி புரியுது
இயற்கையிலே யாவும் இணைந்தாடுது
ஜீவ சுகம் தேடுது
இன்பம் எங்கும் இங்கே ஆட்சி புரியுது
இயற்கையிலே யாவும் இணைந்தாடுது
ஜீவ சுகம் தேடுது

இன்பம் எங்கும் இங்கே ஆட்சி புரியுது
இன்பம் எங்கும் இங்கே ஆட்சி புரியுது
இனிமையிலே யாவும் இணைந்தாடுது
வாழ்வின் துணை தேடுது
இன்பம் எங்கும் இங்கே ஆட்சி புரியுது
இனிமையிலே யாவும் இணைந்தாடுது
வாழ்வின் துணை தேடுது
இன்பம் எங்கும் இங்கே ஆட்சி புரியுது

ஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஆ
ஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஆ

பொங்கி வரும் நிலவைக் கண்டு
அல்லி முகம் சிவக்குது
போதையூட்டும் தேனைச் சிந்தி
ஜாதிமல்லி சிரிக்குது
சிந்து பாடி வண்டு தேன் தேடும் காட்சி கண்டு
சிந்தை மயங்கிக் காதல் பண் பாடுது
சிந்தை மயங்கிக் காதல் பண் பாடுது

இன்பம் எங்கும் இங்கே ஆட்சி புரியுது

அன்பு மயமான இந்த உலகிலே ஓஓஓஓஓ
பலரறிய அரசன் அரசியாவோம் விரைவிலே
ஆ.ஆ.ஆ.ஆஆஆஆஆஆஆஆ

உலவும் தென்றலிலே உல்லாசம் காணுவோம்
நிலவும் வானும் போல குலவி மகிழுவோம்
என்னைப் போரில் வெற்றி கண்ட என்னுயிர் ஜோதியே
என்னையே வென்றவளே ஈடில்லாப் பெருநிதியே
என்னைப் போரில் வெற்றி கண்ட என்னுயிர் ஜோதியே
என்னையே வென்றவளே ஈடில்லாப் பெருநிதியே
இசைந்த காதல் வாழ்வின் ஆனந்தமே
இசைந்த காதல் வாழ்வின் ஆனந்தமே

இன்பம் எங்கும் இங்கே ஆட்சி புரியுது
இயற்கையிலே யாவும் இணைந்தாடுது
ஜீவ சுகம் தேடுது
இன்பம் எங்கும் இங்கே ஆட்சி புரியுது

மடி மீது தலை வைத்து

உறவின்றி உலக வாழ்வில்லை. ஒருவரும் தனக்கென மட்டும் வாழ இயலாது. இன்ப துன்பங்களையும் மற்ற பல பொருட்களையும் செயல்பாடுகளையும் பலரும் பகிர்ந்து அனுபவித்தலே வாழ்க்கையாகும். இவ்வுலகில் பிறந்த நாள் முதல் சில காலம் வரை பெற்றோரும் உற்றாரும் பெரும்பான்மையான உறவாக விளங்கினாலும் வளர்ந்து உலக வாழ்க்கையெனும் போராட்டத்தில் ஈடுபட்டுப் பாடுபடும் காலம் வருகையில் நண்பர்களும் சமூகத்தினருமே பெரும்பான்மையான உறவாக அமைகின்றனர்.

இதற்கிடையில் உரிய காலம் வருகையில் பலருக்கு இல்லற வாழ்வு பெற்றோரால் அமைத்துத் தரப்படுகிறது. ஒரு சில அதிர்ஷ்டசாலிகளுக்கு மட்டுமே தம் மனதைக் கவர்ந்த ஒருவரோடு காதல் ஏற்பட்டு, அக்காதல் கனிந்து கல்யாணத்தில் நிறைவடையும் இனிய வாழ்வு அமைகிறது.

காதலில் அதிக இன்பம் தருவது காதல் கொண்ட ஆணும் பெண்ணும் ஒருவரை மற்றவர் விட்டுப் பிரியாமையை விரும்பும் நிலையே. இரு மனங்கள் ஒன்றாய் இணைந்த பின்னர் அங்கே புணர்ச்சி பழகுதல் அவசியமற்றதாகிறது. துணை தேடும் மனங்களுக்குத் தக்க வாழ்க்கைத் துணையைத் தேடித் தருவதே காதல். மற்றதெல்லாம் காதல் ஆகாது.

சின்னஞ்சிறு வயதில் உலக வாழ்வில் படும் துன்பங்களை மறக்க ஒருவருக்குத் தேவை தஞ்சமென அடைய ஒரு தாயின் மடி. வளர்ந்து பருவமடைந்த பின்னர் அத்தாயின் மடி பலருக்குக் கிடைப்பதில்லை. தாயின் மடி கிடைக்காவிடிலென்ன, கனவிலும் மறவாக் காதல் உறவு கொண்ட அன்பரின் மடியே அடைக்கலம் என்று அடைவது பேரின்பமல்லவா!

மடி மீது தலை வைத்து

திரைப்படம்: அன்னை இல்லம்
இயற்றியவர்: கவிஞர் கண்ணதாசன்
இசை: கே.வி. மஹாதேவன்
பாடியோர்: டி.எம். சௌந்தரராஜன், பி. சுசீலா

மடி மீது தலை வைத்து விடியும் வரை தூங்குவோம்
மறு நாள் எழுந்து பார்ப்போம்
மடி மீது தலை வைத்து விடியும் வரை தூங்குவோம்
மறு நாள் எழுந்து பார்ப்போம்
மடி மீது தலை வைத்து விடியும் வரை தூங்குவோம்
மறு நாள் எழுந்து பார்ப்போம்

மங்கலக் குங்குமம் நெஞ்சிலே மல்லிகை மலர்கள் மண்ணிலே
மங்கலக் குங்குமம் நெஞ்சிலே மல்லிகை மலர்கள் மண்ணிலே
பொங்கிய மேனி களைப்பிலே பொழுதும் புலரும் அணைப்பிலே
ஆஹா ஓஹோ ம்ம்ம்

மடி மீது தலை வைத்து விடியும் வரை தூங்குவோம்
மறு நாள் எழுந்து பார்ப்போம்

இரவே இரவே விடியாதே இன்பத்தின் கதையை முடிக்காதே
இரவே இரவே விடியாதே இன்பத்தின் கதையை முடிக்காதே
சேவல் குரலே கூவாதே சேவல் குரலே கூவாதே
சேர்ந்தவர் உயிரைப் பிரிக்காதே சேர்ந்தவர் உயிரைப் பிரிக்காதே

மடி மீது தலை வைத்து விடியும் வரை தூங்குவோம்
மறு நாள் எழுந்து பார்ப்போம்

வாயின் சிவப்பு விழியிலே மலர்க்கண் வெளுப்பு இதழிலே
வாயின் சிவப்பு விழியிலே மலர்க்கண் வெளுப்பு இதழிலே
காயும் நிலவின் அழகிலே காலம் நடக்கும் உறவிலே

மடி மீது தலை வைத்து விடியும் வரை தூங்குவோம்
மறு நாள் எழுந்து பார்ப்போம்

மன்னவனே அழலாமா

இள வயதில் மனைவியை இழந்த ஆண்கள் சிலர் தமது குழந்தைகளின் நலனுக்காக மற்றொரு பெண்ணைத் திருமணம் புரிந்து கொள்வதுண்டு. வேறு சிலர் வாழ்நாள் முழுவதும் தம் மனைவியின் நினைவாகவே வாழ்ந்து தமது குழந்தைகளுக்குத் தாமே தாயும் தந்தையுமாக இருந்து அனைத்து விதங்களிலும் அவர்களது வளர்ச்சிக்கு உதவுவதும் உண்டு. தன் மனைவி இறந்த பின்னர் வேறொரு பெண்ணைத் திருமணம் செய்து கொள்ள விருப்பம் இல்லாத ஆண்கள் தம் குழந்தைகளைக் காக்க அவர்களுக்குத் தாயாய் விளங்க வேறொரு பெண் அவசியமாக இருக்குமாயின் குழந்தைகளின் நலனுக்காக வேறொரு பெண்ணைத் திருமணம் செய்து கொள்வதும் உண்டு. இத்தகைய முடிவுக்குக் குடும்பத்தில் இருக்கும் பிற உறவினர்களின் வற்புறுத்தலும் காரணமாக அமைவதுண்டு.

இவ்வாறு தம் விருப்பத்துக்கு மாறாக சந்தர்ப்ப சூழ்நிலைகளால் உந்தப்பட்டு வேறொரு பெண்ணை மணந்த ஆண்களுள் சிலர் தம் மனைவியின் நினைவு மனதில் என்றும் இருக்கும் நிலையில் புதிதாய் மணந்த பெண்ணை மனைவியாக ஏற்று அப்பெண்ணுடன் மனமொப்பி வாழத் தயங்குவதுண்டு. இத்தகைய தயக்கத்தினால் அந்தப் பெண் மனம் வருந்துவதும் உண்டு. தன் குழந்தைகளுக்குத் தாயாகவும் தனக்கு இரண்டாம் தாரமாகவும் வந்து வாய்த்த அப்பெண்ணிற்கும் வாழ்வில் ஆசாபாசங்கள் உண்டு என்பதை உணர்ந்து கொண்டு அக்கணவன் அவளை உரிய அன்புடன் நடத்தி அவளிடம் இணங்கி வாழ்வது அப்பெண்ணுக்கும் அக்கணவனுக்கும் மட்டுமன்றி அவர்களது குழந்தைகளுக்கும் நல்வாழ்வை அளிக்கும்.

புதிதாய் மணந்த பெண்ணுடன் சகஜமாய் வாழத் தயங்கித் தன் மனைவியின் நினைவால் தொடர்ந்து வாடும் சில ஆண்களுக்கு குடும்பத்திலுள்ள மூத்த உறவினர்கள் மற்றும் நண்பர்கள் தக்க அறிவுரை கூறித் திருத்துவதுண்டு. ஆனால் இத்தகைய ஆண் ஒருவனுக்கு இறந்து போன அவனது மனைவியே அவனது மனதுக்குள் வந்து தன்னையே நினைத்து வருந்துவதை நிறுத்திவிட்டு, தனக்குப் பின் அவனுக்கு மனைவியாய் வாழவந்த பெண்ணை முறையாக மதித்து வாழும்படி அறிவுரை கூறுவதாக அமைந்ததொரு அரிய பாடல் இன்றைய பாடலாக மலர்கிறது.

மன்னவனே அழலாமா

ஆ..ஆஆஆ. ஆஆஆஆஆ
ஆ..ஆஆஆ. ஆஆஆஆஆ
ஆஆ ஆஆ ஆஆ ஆஆ

மன்னவனே அழலாமா கண்ணீரை விடலாமா?
உன்னுயிராய் நானிருக்க என்னுயிராய் நீயிருக்க
மன்னவா மன்னவா மன்னவா
மன்னவனே அழலாமா கண்ணீரை விடலாமா?
உன்னுயிராய் நானிருக்க என்னுயிராய் நீயிருக்க

கண்ணை விட்டுப் போனாலும் கருத்தை விட்டுப் போகவில்லை
கண்ணை விட்டுப் போனாலும் கருத்தை விட்டுப் போகவில்லை
மண்ணை விட்டுப் போனாலும் உன்னை விட்டுப் போகவில்லை
மண்ணை விட்டுப் போனாலும் உன்னை விட்டுப் போகவில்லை
இன்னொருத்தி உடலெடுத்து இருப்பவளும் நானல்லவா?
கண்ணெடுத்தும் பாராமல் கலங்குவதும் வீணல்லவா?
மன்னவா மன்னவா மன்னவா

மன்னவனே அழலாமா கண்ணீரை விடலாமா?
உன்னுயிராய் நானிருக்க என்னுயிராய் நீயிருக்க

உன்மயக்கம் தீர்க்கவந்த பெண்மயிலைப் புரியாதா?
உன்மயக்கம் தீர்க்கவந்த பெண்மயிலைப் புரியாதா?
தன்மயக்கம் தீராமல் தவிக்கின்றாய் தெரியாதா?
தன்மயக்கம் தீராமல் தவிக்கின்றாய் தெரியாதா?
என்னுடலில் ஆசையென்றால் என்னை நீ மறந்து விடு
என்னுயிரை மதித்திருந்தால் வந்தவளை வாழவிடு

மன்னவனே அழலாமா கண்ணீரை விடலாமா?
உன்னுயிராய் நானிருக்க என்னுயிராய் நீயிருக்க