திங்கள், 23 நவம்பர், 2009

மண்ணுக்கு மரம் பாரமா மரத்துக்கு இலை பாரமா?

உயிர்களுக்கிடையில் திகழும் பாசப் பிணைப்பினாலேயே உலகம் செயல்படுகிறது. ஒரு தாய் தன் பிள்ளையிடம் காட்டும் பாசத்துக்கு வேறெவர் பாசமும் ஈடாகாது என்பது அனைவரும் அறிவோம். இதில் விதிவிலக்கும் உண்டு என்பதை மறுக்க முடியாதாயினும் இயற்கை நியதிப்படி தாயின் பாச உணர்வே அனைத்திலும் உயர்ந்ததென்பதை ஒப்புக்கொள்கிறோம். இத்தகு தாய்ப்பாசம் மனிதர்களிடம் மட்டுமின்றி அனைத்து உயிர்களிடமும் ஓரே தரத்தில் உயர்ந்து விளங்குவதையும் காண்கிறோம். உதாரணமாக ஒரு கோழி சாதாரணமாக உயரப் பறப்பதில்லை. ஆனால் அதே கோழி பருந்தொன்று தன் குஞ்சினைக் கவ்விச் செல்லக் கண்டு வானுயரப் பறந்து பருந்தினை விரட்டித் தன் குஞ்சினைக் காத்த காட்சியை நான் கண்டிருக்கிறேன்.
ஒரு பெண் தான் பெற்ற செல்வங்கள் அனைத்திலும் உயர்ந்ததாக உள்ளுணர்வாலும் பகுத்தறிவாலும் ஒன்றுபட்ட நோக்குடன் கருதுவது தான் ஈன்ற மகவையே ஆகும். தனக்கு எத்தகைய துன்பம் நேரிடினும் அதனால் தன் குழந்தைக்கு ஊறு விளையாது பார்த்துக் கொள்வது ஒரு தாயின் இயல்பு. பத்து மாதம் வயிற்றில் சுமந்து தன் ரத்தத்தையே பாலாக்கி ஊட்டி வளர்த்து, தன் உயிரையே பணயம் வைத்து, உலகில் வேறு யாராலும் தாங்க இயலாத பிரசவ வேதனையை அனுபவித்துப் பெறும் பிள்ளை அல்லவா? அதனை விடவும் உயர்ந்த செல்வம் உலகில் வேறுண்டோ?

"ஆல்ஃப்ரட் லார்ட் டென்னிசன்" எனும் ஆங்கிலக் கவிஞர் தான் எழுதிய "ஹோம் தே ப்ராட் ஹர் வாரியர் டெட்" எனும் கவிதையில் கூறுவதாவது: ஒரு பெண்ணின் கணவன் போரில உயிர்துறக்கவே அவனது உடலை அவனது வீட்டுக்குக் கொண்டு வருகின்றனர். அவனது மரணத்தினால் ஏற்பட்ட துக்கத்தால் அப்பெண் ஸ்தம்பித்துப் பேச்சற்றவளாகி நிலைகுலைந்து ஒரு மூலையில் உட்கார்ந்து விடுகிறாள். அவள் அழவில்லை, வாயைத் திறந்து பேசவுமில்லை. துக்கம் விசாரிக்க வந்திருந்த அண்டை வீட்டார்கள் பலர் அவளை அழ வைக்க முயற்சிக்கின்றனர், ஏனெனில் அவள் தனது துக்கத்தை வெளியே அழுது கொட்டாவிடில் அவள் இறந்து விடும் அபாயம் உள்ளது. அவர்கள் செய்த முயற்சிகள் பலனளிக்கவில்லை, அவள் அழவில்லை. இந்நிலையில் அவர்களுள் இருந்த ஒரு மூதாட்டி வேறோரிடத்தில் இருந்த அப்பெண்ணின் சிறு குழந்தையை எடுத்து வந்து அவளது மடியில் கிடத்த, "ஓ மை சைல்ட், ஐ லிவ் ஃபார் தீ" என்று கூறிக் கதறியழுகிறாள்.

தான் வழ்வதே தன் குழந்தைக்காக எனும் மன நிலை கொண்டவள் தாய் எனும் உண்மையைக் கவிஞர் தெளிவாக்குகிறார்.

மண்ணுக்கு மரம் பாரமா மரத்துக்கு இலை பாரமா?

படம்: தை பிறந்தால் வழி பிறக்கும்
இயற்றியவர்: சுரதா
இசை: கே.வி. மஹாதேவன்
பாடியவர்: எம்.எஸ். ராஜேஸ்வரி
ஆண்டு: 1958

மண்ணுக்கு மரம் பாரமா மரத்துக்கு இலை பாரமா?
கொடிக்குக் காய் பாரமா பெற்றெடுத்த குழந்தை தாய்க்கு பாரமா?
மண்ணுக்கு மரம் பாரமா மரத்துக்கு இலை பாரமா?
கொடிக்குக் காய் பாரமா பெற்றெடுத்த குழந்தை தாய்க்கு பாரமா?

வாடிய நாளெல்லாம் வருந்தி வருந்தித் தவமிருந்து
வாடிய நாளெல்லாம் வருந்தி வருந்தித் தவமிருந்து
தேடிய நாள் தன்னில் செல்வமாய் வந்தவளே
தேடிய நாள் தன்னில் செல்வமாய் வந்தவளே
மலடி மலடி என்று வையகத்தால் ஏசாமல்
மலடி மலடி என்று வையகத்தால் ஏசாமல்
தாயென்ற பெருமை தனை மனங்குளிரத் தந்தவளே
தாயென்ற பெருமை தனை மனங்குளிரத் தந்தவளே
கொடிக்குக் காய் பாரமா பெற்றெடுத்த குழந்தை தாய்க்கு பாரமா?

மண்ணுக்கு மரம் பாரமா மரத்துக்கு இலை பாரமா?
கொடிக்குக் காய் பாரமா பெற்றெடுத்த குழந்தை தாய்க்கு பாரமா?

அழுதா அரும்புதிரும் அண்ணாந்தால் பொன்னுதிரும்
அழுதா அரும்புதிரும் அண்ணாந்தால் பொன்னுதிரும்
சிரிச்சா முத்துதிரும் வாய் திறந்தால் தேன் சிதரும்
சிரிச்சா முத்துதிரும் வாய் திறந்தால் தேன் சிதரும்
பிள்ளையைப் பெற்று விட்டால் போதுமா?
பேணி வளர்க்க வேணும் தெரியுமா?
பிள்ளையைப் பெற்று விட்டால் போதுமா?
பேணி வளர்க்க வேணும் தெரியுமா?
அல்லலைக் கண்டு மனசு அஞ்சுமா? குழந்தை
அழுவதைக் கேட்டு மனசு மிஞ்சுமா?
அல்லலைக் கண்டு மனசு அஞ்சுமா? குழந்தை
அழுவதைக் கேட்டு மனசு மிஞ்சுமா?

மண்ணுக்கு மரம் பாரமா மரத்துக்கு இலை பாரமா?
கொடிக்குக் காய் பாரமா பெற்றெடுத்த குழந்தை தாய்க்கு பாரமா?

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக