வியாழன், 21 ஜனவரி, 2016

என் நெஞ்சு உன்னையகலாது

தினம் ஒரு பாடல் - செப்டம்பர் 17, 2014
மனிதர்களுடன் பழகுவதை விட மரம், செடி, கொடிகளுடனும் விலங்குகளுடனும் பழகுவது மனதுக்கு இனிமை தருவதாகும். மனிதர்கள் பெரும்பாலும் உள்ளத்தில் ஒன்றும் உதட்டில் ஒன்றும் வைத்துப் பழகுவதால் அவர்களது சுயநலம் நமக்குத் தெரிகையில் மனம் துயரப்படுகிறது, ஆனால் மரங்கள், செடிகள், கொடிகள், விலங்குகள் ஆகிய உயிர்கள் வாய் விட்டுப் பேசுவதில்லையானாலும் மௌன மொழியில் அவை பேசும் செய்திகளை நாம் பழகப் பழக அறிந்து கொள்ளலாம். அத்தகைய அறிவு நாம் ஒவ்வொருவரும் பெறத் தக்கதே. மரம், செடி, கொடிகள் மற்றும் விலங்குகளின் பாஷை நமக்குப் புலப்பட்டு நாம் அவர்களுடன் மனம் விட்டுப் பழகப் பழக சொர்க்கமே தெரியும் என்பதை இயற்கை விஞ்ஞானிகளும், மிருகங்கள் நலம் பேணும் ஆர்வலர்களும் அறிவர். 

மரங்கள் வெயிலில் வாடுவோர்க்கு நிழல் தரும். மழையில் நனைவோருக்கு ஒதுங்க இடமளிக்கும். மரங்கள் பகலில் காற்றிலிருக்கும் கரியமில வாயுவை (கார்பன் டையாக்சைடு) இலைகளில் வழியே உட்கிரகித்துப் பிராண வாயுவை (ஆக்சிஜன்) வெளியிடுவதால் காற்றை சுத்தம் செய்து ஆரோக்கியம் பெருக உதவுகின்றன. மேகங்களை ஈர்த்து மழையுண்டாகச் செய்வதுடன் பல்விதமான, காய்கள், கனிகள், மலர்கள் முதலிய அரிய பொருட்களை நமக்குத் தருகின்றன. புளிய மரம், மாமரம், பலா மரம், கொய்யா மரம், ஆப்பிள் மரம், முருங்கை மரம், தென்னை மரம், பனை மரம், வாழை மரம் எனப் பலவகை மரங்கள் காய் கனிகள் தருகின்றன. வாத நாராயண மரம், வன்னி மரம், புன்னை மரம் முதலியவை அழகிய மலர்களைச் சொரிந்து இயற்கையை வளமாக்குகின்றன. தேக்கு, வெண் தேக்கு போன்ற மரங்கள் மேசை, நாற்காலிகள், கதவுகள் போன்ற பொருட்களைச் செய்ய உதவுகின்றன. பல வித மரங்கள் சிற்ப வேலைப்பாடுகள் செய்ய உதவுகின்றன. கருவேல மரம் போன்ற பல மரங்கள் விறகாக எரிக்க உதவுகின்றன. சவுக்கு, மூங்கில் போன்ற மரங்கள் கட்டுமானப் பணிகளுக்கு உதவுகின்றன.

மரங்களைப் போலவே செடி கொடிகளும் பல்வேறு வகையான கறி காய்கள், பழங்கள், மலர்கள் முதலியவற்றைத் தருவதுடன் சுற்றுப்புறத்தை அழகுபடுத்தி மாசின்றிப் பாதுகாக்கின்றன.

மிருகங்கள் நம்முடம் எளிதில் பழகாவிட்டாலும் பழகிய பின்னர் அவை நம் மீது பொழியும் அன்பு வார்த்தைகளால் வர்ணிக்க இயலாத அளவுக்குத் தூய்மையாகவும், இன்பம் தருவதாகவும் அமையும். மிருகங்கள் நிறைந்த வனப் பகுதிகளில் வாழும் மக்கள் இயற்கையாகவே அன்பு நிறைந்தவர்களாக இருப்பர். அதிலும் குறிப்பாக மனிதர்களே இல்லாத வனப்பகுதியில் வாழும் மனிதர்கள் பெரும்பாலும் மிருகங்களுடன் பழகி வாழ்வதால் அவர்கள் மனதிலும் கள்ளம் கபடு இரா. உண்மை அன்பை அத்தகைய மனிதர்கள் நிச்சயம் தருவர்.

ஆதிகாலத்தில் இயற்கையுடன் இயைந்து வாழ்ந்த மனிதர்கள் மிருகங்களுடன் ஒன்றாய் வாழ்ந்த நிலை மாறிக் காடுகளை அழித்து வீடுகள் கட்டி வாழத் தொடங்கிய நாள் முதல் அவர்களுள் போட்டி பொறாமைகளும், பொய் சூது சூழ்ச்சிகளும் பெருகிவிட்டன. மனிதனின் மனதில் கள்ளத்தனம் குடிபுகுந்தது. மற்றவரை ஏய்த்துப் பிழைக்க அவன் தெரிந்து கொண்டான். அதனால் நகரங்களில் வாழும் அனைவரது வாழ்க்கையும் நரகமானது. 

அத்தகைய நகரமொன்றில் வாழும் குடும்பத்திலிருந்து ஒரு இளம் பெண் வனத்தில் மாட்டிக் கொள்கிறாள். எதிர் பாராத விதமாக அவ்வனத்தில் தனியே வாழும் வாலிபன் ஒருவனின் துணை அவளுக்குக் கிடைக்கிறது. அவளை அவன் அன்புடன் பாதுகாக்கிறான். அவள் பேசும் மொழி அவனுக்குத் தெரியவில்லையாயினும் அவளது மனதின் மொழியை அவன் அறிந்து அவளிடம் அளவிடற்கரிய அன்பைச் செலுத்துகிறான். அவள் அவன் மேல் அன்பு கொண்டு தன் மொழியை அவனுக்குக் கற்பிக்கிறாள். அவனை நாளடைவில் மனதாரக் காதலிக்கிறாள். 

அவனுடன் வனமெங்கும் சுற்றித் திரிந்து மகிழ்கிறாள். யானை மேல் அவனுடன் ஒரு ராணிபோல் பவனி வருகிறாள். உள்ளமும் உள்ளமும் ஒன்றொடொன்று இணைந்த காதலின் இன்பம் எல்லையில்லாததல்லவா? 

அத்தகைய காதலை வெளிப் படுத்தும் பாடல் இதோ பி. சுசீலா அவர்களின் இனிய குரலில் ஹிந்தியிலிருந்து டப்பிங் செய்யப்பட்ட படத்தில்:



திரைப்படம்: நகரத்தில் ஜிம்போ
இயற்றியவர்: குயிலன்
இசை: சித்ரகுப்த்
பாடியவர்: பி. சுசீலா
 
என் நெஞ்சு உன்னையகலாது
அன் பையசைக்க முடியாது

ஆஅ ஆஅ

என் நெஞ்சு உன்னையகலாது
அன் பையசைக்க முடியாது

அருவியில் ஆடி நாமே ஆனந்தம் காண்போமே
காதலின் இன்பத் தேனை மகிழ்வாக அடைவோமே
உளந்தனில் என்றும் மீளா ஆனந்தம் காண்போமே
காதலின் இன்பத் தேனை மகிழ்வாக அடைவோமே
நம் வழியில் பூ விழுந்தே நல்ல மணத்தைப் பரப்பும்

என் நெஞ்சு உன்னையகலாது
அன் பையசைக்க முடியாது
என் நெஞ்சு உன்னையகலாது
அன் பையசைக்க முடியாது

மத்தகஜத்தில் ஏறி குல மன்னர்களைப் போலே
மெத்த நலங்கள் கொண்டே பூங்கானகம் ஆள்வோமே
மத்தகஜத்தில் ஏறி குல மன்னர்களைப் போலே
மெத்த நலங்கள் கொண்டே பூங்கானகம் ஆள்வோமே
ஆரமுதை நீரனையே அள்ளிநிதம் பருகும்

என் நெஞ்சு உன்னையகலாது
அன் பையசைக்க முடியாது
என் நெஞ்சு உன்னையகலாது
அன் பையசைக்க முடியாது

ஆஅ ஆஅ ஆஅ