ஞாயிறு, 30 அக்டோபர், 2011

போட்டது மொளச்சுதடி கண்ணம்மா

உழுதுண்டு வாழ்வாரே வாழ்வார் மற்றெல்லாம்
தொழுதுண்டு பின்செல் பவர்

வெற்றுடம்புடன் வயலில் இறங்கி சேற்றிலும் சகதியிலும் வெயிலின் கொடுமையினையும் பாராது நாளெல்லாம் உழைத்து, நிலத்தை உழுது, நீர் பாய்ச்சி, உரமிட்டு வளப்படுத்திப் பின் விதை விதைத்து, நாற்றைப் பிடுங்கி நட்டுப் பயிர் வளர்த்து உலகுக்கெல்லாம் உணவளிக்கும் உழவர்களே மனித குலத்தோரில் தலைசிறந்தவர்கள் ஆவர். ஏனைய பிற வர்க்கத்தினரெல்லாம் உழவர்களைத் தொழுது அவர்கள் அளிக்கும் உணவைப் பெற்று உயிர் வாழும் சாமான்யர்களே என்பது இக்குறளின் பொருள். உழவர்கள் பயிர் விளையப் பாடுபடவில்லையெனில் உலகிலுள்ள அனைவரும் வெகுவிரைவில் உண்ண உணவின்றி மடியலாகும்.

தேராட்டம் காரினிலே ரொம்பத் திமிரோடு போறவரே எங்க
ஏரோட்டம் நின்னு போனா உங்க காரோட்டம் என்னவாகும்?

என்று ஒரு விவசாயி தெருவில் நடந்து செல்கையில் அவரை அலட்சியம் செய்து அவர் மேல் மோதாக்குறையாக விரைவாகத் தனது காரை ஓட்டிச் செல்லும் ஒருவரைப் பார்த்துப் பாடுவதாக அமைந்த கவிஞர் கண்ணதாசனின் பாடல் வரிகளும் விவசாயியின் மேன்மையை எடுத்துச் சொல்கின்றன.

உலகிலுள்ளோர் யாவரும் கைகூப்பித் தொழுது வணங்கிப் போற்றத் தக்க இத்தகைய விவசாயிகளுக்கு நமது பாரதத் திருநாட்டில் உரிய மரியாதை கிடைக்கிறதா? அவர்களது உழைப்பிற்குத் தகுந்த ஊதியம் கிடைக்கிறதா? இயற்கைச் சீற்றங்கள் மற்றும் அரசின் செயல்பாடுகள் உட்பட்ட பல்வேறு சமுதாயச் சிக்கல்களிலிருந்து மீள இவ்விவசாயிகளுக்கு ஏதேனும் வழியிருக்கிறதா? உலகிலுள்ளோர் அனைவருக்கும் உணவு வழங்கும் இந்த விவசாயிகள் குடும்பத்தார் உண்ணப் போதிய உணவாகிலும் கிடைக்கிறதா?

இன்றைய சூழ்நிலையில் இந்திய நாட்டின் பல்வேறு மாநிலங்களிலும் தினமும் நடைபெறும் நிகழ்ச்சிகளைப் பற்றி அறிகையில் இக்கேள்விகளுக்கு இல்லை என்ற பதிலே கிடைக்கிறது.

முறைகேடாக் விவசாய நிலங்களை மாநில அரசுகள் விவசாயிகளுக்கு உரிய இழப்பீடு வழங்காமல் தட்டிப் பறித்து அரசின் சாலை முதலிய திட்டங்களுக்கும் பன்னாட்டு நிறுவனங்கள் ஏற்படுத்தும் தொழிற்சாலைகளுக்கும் வழங்கப் படுவது பல ஆண்டுகளாகத் தொடர்ந்து நடைபெற்று வரும் ஒரு அவலமாகும். அதன் உச்சகட்டமாக இன்று மஹாராஷ்டிர மாநிலத்தில் அணு மின் நிலையம் அமைக்க ஜெய்தாபூர் எனும் ஊரிலிருக்கும் விவசாய நிலங்கள் பெருமளவில் மக்களின் விருப்பத்திற்கு மாறாக அரசினால் கையகலப் படுத்தப் பட்டதால் அப்பகுதி மக்கள் மேற்கொண்ட போராட்டத்தை அடக்க அரசு மேற்கொண்ட துப்பாக்கி சூட்டில் சில விவசாயிகள் பலியாகியுள்ளனர். இதே போல் உத்திரப்பிரதேச மாநிலத்தை ஆளும் மாயாவதி அரசு பல விவசாயிகளின் நிலங்களை வலுக்கட்டாயமாகப் பிடுங்கிக்கொண்டு அவர்களுக்கு உரிய இழப்பீடு வழங்க மறுத்து வருவதால் உண்டான கிளர்ச்சியை அடக்கப் போலீசார் மேற்கொண்ட துப்பாக்கி சூட்டில் சில விவசாயிகள் இறந்தது மட்டுமின்றி அவர்களுள் இருந்த தீவிரவாதப் போக்குள்ள சிலர் தாங்கள் வைத்திருந்த துப்பாக்கிகளால் திருப்பி சுட்டதில் போலீசார் சிலரும் உயிரிழந்துள்ளனர்.

இவ்வாறு விவசாயிகள் அல்லலுறுகையில் கலங்கிய குட்டையில் மீன்பிடிப்பது போல் அரசியல்வாதிகள் பலர் இவ்விவசாயிகளுக்காகக் குரல் கொடுப்பதாக நாடகமாடும் அவலமும் இடையிடையே அரங்கேறுகிறது. ஆந்திர மானிலத்திலும் பிற பல மாநிலங்களிலும் கடும் உழைப்பால் விவசாயிகள் உற்பத்தி செய்த அதிகப் படியான தானியங்களை சேமிக்கத் தகுந்த கிடங்குகளைக் கட்டாமல் அரசுகள் வாளாவிருந்ததால் இவ்வாறு உற்பத்தியான தானியங்கள் அரசு நிறுவனங்களால் கொள்முதல் செய்யப் படாமையால் அவ்விவசாயிகள் அவற்றைப் பாதிக்கும் குறைந்த விலையில் நஷ்டத்திற்குத் தனியார் துறை வியாபாரிகளுக்கு விற்க வேண்டிய கட்டாய சூழ்நிலையில் தள்ளப்பட்டுள்ளனர். ஏற்கெனவே கொள்முதல் செய்யப்பட்ட தானியங்கள் ஏராளமானவை வெட்ட வெளியில் அடுக்கப்பட்டதால் கெட்டுப் போய் வீணாகியுள்ளன. அவ்வாறு வீணகும் தானியங்களைத் தீயிட்டுக் கொளுத்துவது ஒன்றே அரசுகள் செயல்பாடாக உள்ளது. மாறாக வீணாகும் தானியங்களை ஏழை மக்களூக்கு விநியொகிக்கும்படி உச்சநீதிமன்றம் பல முறை அறிவுறுத்தியும் செவிடன் காதில் ஊதிய சங்கு போலவே அவ்வறிவுறைகளை அரசு ஏற்காமல் அலட்சியப் போக்கையே தொடர்ந்து கடைபிடித்து வருகிறது.

இவ்வாறு விவசாயின் வயிற்றில் அன்றாடம் அடித்து, தனியார் துறைப்பணமுதலைகளின் கைப்பாவையாக ஆகி நாட்டை சுடுகாடாக மாற்றிக்கொண்டிருக்கின்றனர் இன்றைய சுயந்ல அரசியல்வாதிகளும் அதிகாரிகளும். இந்த நிலை மாறி விவசாயிக்கு உரிய மரியாதை அளிக்கப்பட்டு அவர்கள் இலாபகரமாக விவசாயம் செய்ய ஏதுவான சூழ்நிலையை அரசுககள் ஏற்படுத்திக் கொடுத்தால் மட்டுமே அவர்களுக்கும் சேர்த்து அனைவருக்கும் உணவு கிடைக்கும்.

வரப்புயற நீருயரும் நீருயர நெல்லுயரும்
நெல்லுயரக் குடியுயரும் குடியுரக் கோனுயர்வான்

அந்த நல்ல நாள் விரைவில் வாராதா? தான் அல்லலுற்ற போதிலும் உலகிலுள்ள பிறர் வாழக் கனியும் கிழங்கும் தானியங்களும் கணக்கின்றித் தரும் விவசாயியின் வாழ்வில் இன்பம் மலராதா? இத்தகைய கேள்விகள் தினமும் மனதைத் துளைத்து வருத்தத்தை அளிக்கும் போதிலும் பாரதத்துக்கு ஆங்கிலேயரின் ஆட்சியிலிருந்து சுதந்திரம் கிடைத்ததற்கு முன்பாகவே சுதந்திரம் கிடைத்து விட்டதாக உணர்ந்து

ஆடுவோமே பள்ளு பாடுவோமே
ஆனந்த சுதந்திரம் அடைந்து விட்டோமென்று ஆடுவோம்

என்று மஹாகவி பாரதியார் பாடியது போல் விவசயிகளது வாழ்வில் இன்பம் மலர்ந்து அவர்கள் நல்வாழ்வு வாழ்வதாக உணர்ந்து அந்த உணர்விலிருந்து மலர்கிறது இன்றைய பாடல்.

போட்டது மொளச்சுதடி கண்ணம்மா

திரைப்படம்: நவராத்திரி
இயற்றியவர்: கவிஞர் கண்ணதாசன்
இசை: கே.வி. மஹாதேவன்
பாடியவர்: டி.எம். சௌந்தரராஜன்

போட்டது மொளச்சுதடி கண்ணம்மா கைநிறைய
கேட்டது கெடைச்சுதடி சின்னம்மா
போட்டது மொளச்சுதடி கண்ணம்மா
கேட்டது கெடைச்சுதடி சின்னம்மா கைநிறைய
கேட்டது கெடைச்சுதடி சின்னம்மா
போட்டது மொளச்சுதடி கண்ணம்மா
கேட்டது கெடைச்சுதடி சின்னம்மா கைநிறைய
கேட்டது கெடைச்சுதடி சின்னம்மா

நாத்து வந்து சிரிக்குதடி காலத்திலே
சோத்துப் பானை கொதிக்குதடி நேரத்திலே
நாத்து வந்து சிரிக்குதடி காலத்திலே
சோத்துப் பானை கொதிக்குதடி நேரத்திலே நேரத்திலே

போட்டது மொளச்சுதடி கண்ணம்மா
கேட்டது கெடைச்சுதடி சின்னம்மா கைநிறைய
கேட்டது கெடைச்சுதடி சின்னம்மா

மண்ண நம்பி உழுது வச்சி மழைய நம்பி வெதெ வெதெச்சி
மண்ண நம்பி உழுது வச்சி மழைய நம்பி வெதெ வெதெச்சி
வயல நம்பி வாழ்ந்திருந்தா கண்ணம்மா
வயல நம்பி வாழ்ந்திருந்தா கண்ணம்மா ஒரு
பயல நம்பத் தேவையில்லே சின்னம்மா ஒரு
பயல நம்பத் தேவையில்லே சின்னம்மா

போட்டது மொளச்சுதடி கண்ணம்மா
கேட்டது கெடைச்சுதடி சின்னம்மா கைநிறைய
கேட்டது கெடைச்சுதடி சின்னம்மா

ஆட்டம் போடும் மனிதருக்கும் ஆரவாரம் செய்பவர்க்கும்
ஆட்டம் போடும் மனிதருக்கும் ஆரவாரம் செய்பவர்க்கும்
கோட்டை கட்டி வாழ்பவர்க்கும் கண்ணம்மா
கோட்டை கட்டி வாழ்பவர்க்கும் கண்ணம்மா இந்த
மூட்டையில் தான் உயிரிருக்கு சின்னம்மா நெல்லு
மூட்டையில் தான் உயிரிருக்கு சின்னம்மா

போட்டது மொளச்சுதடி கண்ணம்மா
கேட்டது கெடைச்சுதடி சின்னம்மா கைநிறைய
கேட்டது கெடைச்சுதடி சின்னம்மா

போயும் போயும் மனிதனுக்கிந்த

இன்று தேதி 13. ஆங்கிலேயர்களின் நம்பிக்கைப்படி 13 ஒரு அதிர்ஷ்டமில்லாத எண் (அன்லக்கி நம்பர்). ஆனால் இதே எண் தமிழர்களுக்கு அதிர்ஷடத்தைக் கொண்டு வந்துள்ளதென எண்ணுமளவிற்கு இன்று வெளியிடப்பட்ட மாநிலத் தேர்தல் முடிவுகள் மக்கள் விரோதமான அரசியல்வாதிகளின்ன் போக்கிற்கு பதிலடி கொடுத்துள்ளதைக் காட்டுகின்றன.

சிலர் பிறரது தவறுகளால் விளையும் பலன்களைக் கண்டு தங்களைத் திருத்திக் கொள்வர். இன்னும் சிலம் தமது தவறுகளால் விளையும் பலன்களைக் கண்டு திருந்துவர். வேறு சிலர் எதனைக் கண்டும் திருந்த மாட்டார்கள். இத்தகைய திருந்தாத மனிதர்களையே திரும்பத் திரும்பத் தங்களது தலைவர்களாகத் தேர்ந்தெடுக்கும் வழக்கம் இன்னமும் மாறியதாகத் தெரியவில்லை.

தற்போதைய ஆட்சி மாற்றத்துக்கு வழிவகுத்ததவர்கள் சுமார் 45% வாக்காளர்களே. 40% வாக்காளர்கள் பழைய ஆட்சியே தொடர்வதற்கே வாக்களித்துள்ளனர். இந்த நிலை மிகவும் தெளிவாக உணர்த்துவது என்னவெனில் மக்களில் ஒரு சாரார் ஒரு தலைவரைத் தேர்ந்தெடுக்கையில் அவரை நல்லவர் என்று கண்மூடித் தனமாக நம்புவதும், ஒரு சாரார் அனைவருமே தவறு செய்பவர்களே என்று அலட்சிய மனப் பான்மையுடன் வாக்களிக்காதிருப்பதும், ஒரு சாரார் நேர்மையைக் கடைபிடிக்காமல் கையூட்டும் இலவசப் பரிசுகளையும் பெற்றுக்கொண்டு தங்களுக்கு சாதகமாக செயல்படும் தலைவர்களை மட்டுமே தேர்ந்துடுப்பதும், ஒரு சாரார் நாட்டு நடப்புகளைப் பற்றி அறிந்து கொள்ளாது தெளிவில்லாத மன நிலையில் யாரோ ஒருவருக்கு வாக்களிப்பதும், பலர் வாக்களிக்காதிருப்பதுமே ஆகும்.

மக்களில் பலர் சமுதாய உணர்வின்றி வாழ்ந்து வருவது இதன் மூலம் தெளிவாகிறது. தன் வாழ்நாள் முழுவதும் பொய்மையே பேசிப் பிறரை என்றும் ஏமாற்றியே வாழ்ந்து வரும் சிலர் அவர்களது குற்றங்கள் ஆதாரபூர்வமாகப் பலரும் அறியும் வண்ணம் வெளீயான பின்னரும் தங்களைக் குற்றமற்றவர்களென்று கூறிக்கொண்டு மீண்டும் மீண்டும் மக்களின் அறியாமையைத் தமக்கு சாதகமாகப் பயன்படுத்திக் கொண்டு தொடர்ந்து தன் சுயநலனை மட்டுமே பேணி வாழ இடமளிக்கும் இத்தகைய பகுத்தறிவற்ற சமுதாய நிலை மாறி உண்மையைத் தெளிவாக அறிந்து அதன் அடிப்படையில் தம்மை ஆள்வோரைத் தேர்ந்தெடுக்கும் அறிவுபூர்வமான சமுதாய நிலை என்று நம் நாட்டில் மலர்கிறதோ அன்றே மக்கள் நல்வாழ்வு வாழ வழிபிறக்கலாகும். அதுவரை தற்போது நிகழ்ந்துள்ளது போன்ற மாற்றங்கள் எவையும் நிரந்தரமான நற்பலனை ஏற்படுத்துவது நிச்சயமல்ல.

மனிதனை மனிதன் மதிப்பது மட்டுமின்றி மனித மனத்தின் தன்மையை அறிந்து அவ்வறிவின் மூலம் தெளிவான முடிவுகளை மேற்கொள்ளும் தகுதியை என்று மக்கள் அடைகின்றனரோ அன்றே சமுதாயம் வளம் பெறும். பொய் முகங்களை அணிந்து மெய்யன்பர்கள் போல் நாடகமாடும் போலிகளை அடையாளம் காண்பதே மெய்யான பகுத்தறிவாகும்.

போயும் போயும் மனிதனுக்கிந்த

திரைப்படம்: தாய் சொல்லைத் தட்டாதே
இயற்றியவர்: கவிஞர் கண்ணதாசன்
இசை: கே.வி. மஹாதேவன்
பாடியவர்: டி.எம். சௌந்தரராஜன்
ஆண்டு: 1962

போயும் போயும் மனிதனுக்கிந்த
புத்தியைக் கொடுத்தானே இறைவன்
புத்தியைக் கொடுத்தானே அதில்
பொய்யும் புரட்டும் திருட்டும் கலந்து
பூமியைக் கெடுத்தானே மனிதன்
பூமியைக் கெடுத்தானே

போயும் போயும் மனிதனுக்கிந்த
புத்தியைக் கொடுத்தானே

கண்களிரண்டில் அருளிருக்கும் சொல்லும்
கருத்தினில் ஆயிரம் பொருளிருக்கும்
கண்களிரண்டில் அருளிருக்கும் சொல்லும்
கருத்தினில் ஆயிரம் பொருளிருக்கும்
உள்ளத்தில் பொய்யே நிறைந்திருக்கும் அது
உடன் பிறந்தோரையும் கருவறுக்கும்

பாயும் புலியின் கொடுமையை இறைவன்
பார்வையில் வைத்தானே புலியின்
பார்வையில் வைத்தானே இந்தப்
பாழும் மனிதன் குணங்களை மட்டும்
போர்வையில் மறைத்தானே இதயப்
போர்வையில் மறைத்தானே

போயும் போயும் மனிதனுக்கிந்த
புத்தியைக் கொடுத்தானே

கைகளைத் தோளில் போடுகிறான் அதைக்
கருணை என்றவன் கூறுகிறான்
கைகளைத் தோளில் போடுகிறான் அதைக்
கருணை என்றவன் கூறுகிறான்
பைகளில் எதையோ தேடுகிறான் கையில்
பட்டதை எடுத்து ஓடுகிறான்

போயும் போயும் மனிதனுக்கிந்த
புத்தியைக் கொடுத்தானே இறைவன்
புத்தியைக் கொடுத்தானே அதில்
பொய்யும் புரட்டும் திருட்டும் கலந்து
பூமியைக் கெடுத்தானே மனிதன்
பூமியைக் கெடுத்தானே

போயும் போயும் மனிதனுக்கிந்த
புத்தியைக் கொடுத்தானே

ஆதௌ கீர்த்தனாரம்பத்திலே

மானிடப் பிறவியின் மகத்துவத்தையும் மானிடராய்ப் பிறந்தோர் நல்வாழ்வு வாழக் கடைபிடிக்க வேண்டிய அறநெறிகள் முதலானவற்றையும் அனைவரும் உணரும் பொருட்டு ஞானியர் பிறருக்கு உபதேசம் செய்யக் கையாண்ட சிறந்ததோர் வழி கதைகள் வாயிலாகவும் பாடல்கள் வாயிலாகவும் அவற்றை எடுத்துக் கூறுவதே. இக்கதைகளில் கற்பனையாகப் புனையப் பட்டவையும் தருமநெறி தவறாது உண்மையில் நம்மிடையே வாழ்ந்த உத்தமர்களைப் பற்றியவையும் உள. இத்தகைய கதைகளைப் பிரசங்கங்கள் வாயிலாக உலகத்தாருக்கு எடுத்துக் கூறுவோர் இடையிடையே சங்கீதத்துடன் கூடிய பாடல் வரிகளை அமைத்து, சொல்லும் கதைக்கேற்ப அவ்வப்பொழுது அக்கதைக்குத் தக்க கேள்விகளையும் விமர்சனங்களையும் வெளிப்படுத்தவென்றே தன்னுடன் மேடையில் சிலரைத் தயார் செய்து வைத்துக் கொள்வது மரபு. இதற்குக் கதாகாலக்ஷேபம் என்று பெயர்.

அத்தகைய கதாகாலக்ஷேபம் ஒன்று நடிகர் திலகம் சிவாஜி க்ணேசன், நாட்டியப் பேரொளி பத்மினி இணைந்து நடித்த தெய்வப் பிறவி திரைப்படத்தில் இடம் பெற்றுள்ளது. கே.ஏ. தங்கவேலு அவர்கள் செய்வதாக அமைந்த இந்தக் கதா காலக்ஷேபத்தில் தங்கவேலு அவர்களின் குரலுக்கேற்றவாறே சிறிதும் மாறுபாடின்றி அமைந்த சீர்காழி கோவிந்தராஜன் அவர்கள் பாடல் வரிகளைப் பாட, அதே இசை லயத்தைப் பின்பற்றி கதையை தங்கவேலு அவர்கள் விவரிக்க, கதை பாடல் அனைத்தையும் தங்கவேலுவே சொல்லிப் பாடுகிறாறோ எனக் காண்போரும் கேட்போரும் திகைக்குமளவுக்கு மிகவும் இயல்பாக அமைந்தது அக்கதா காலக்ஷேபம். அதை இங்கே காண்க:

ஆதௌ கீர்த்தனாரம்பத்திலே

திரைப்படம்: தெய்வப் பிறவி
இயற்றியவர்: தஞ்சை ராமையாதாஸ்
இசை: கே.வி. மஹாதேவன்
பாடியவர்: சீர்காழி கோவிந்தராஜன்
க்தை கூறுபவர்: கே. ஏ. தங்கவேலு

ஆதௌ கீர்த்தனாரம்பத்திலே,

எல்லோருடைய மணிபர்சும் ஜாக்கிரதை! ஜாக்கிரதை!
மனிதனை மனிதன் மதித்திட வேண்டும் மாறா அன்புடனே எந்நாளும்
சீராய் வாழ்ந்திடனும் எல்லோரும் சேர்ந்தே வாழ்ந்திடனும்

மெய்யன்பர்களே, பாற்கடலிலே பள்ளிக்கொண்டிருந்த பரந்தாமன், ஸ்ரீகிருஷ்ணனாக அவதாரம் பண்ணினார். மனிதனை மனிதன் தித்து நடக்க வேண்டுமென்ற நீதியை எடுத்துக் காட்டினார். எப்படியோ, துவாபர யுகத்திலே, குசேலர் என்ற ஒரு பக்திமான் இருந்தார். அவருக்குக் குழந்தைகள், கெடையாது. பர்த் கண்ட்ரோல் இல்லாத அந்தக் காலத்திலே, மனுஷன் வதவதன்னு 27 குழந்தைகளைப் பெத்ததெடுத்துட்டார், அதாகப்பட்டது ரெண்டே கால் டஜன். நெனச்சா தூக்கம் வருமோ?

ஒரு தலைக்கு நாலு இட்டிலின்னா கணக்கு கூட்டினாலும் இருபத்தி ஏழு குழந்தைகளுக்கு என்னாச்சுன்னு நீங்களே கணக்கு கூட்டிப் பாருங்கோ. சாம்பாரைப் பத்தி அப்புறம் யோசிப்போம்.

குழந்தைகள் பேரு?

அஸ்வினி பரணி கார்த்திகை ரோகிணி மிருகசீரிஷம் திருவாதிரை ஆறு
புனர்பூசம் பூசம் ஆயில்யம் மகம் பூரம் உத்திரம் ஹஸ்தம் பதிமூணு
சித்திரை ஸ்வாதி விசாகம் அனுஷம் கேட்டை மூலம் பூராடம் இருபது
உத்திராடம் திருவோணம் அவிட்டம் சதயம் பூரட்டாதி உத்திரட்டாதி ரேவதி

ஏன் மாமா கூப்டீங்களா?

நீ என்ன, குசேலனுக்குக் கடைசிக் குழந்தையா? அடச் சே போ! பேரைச் சொல்ற எனக்கே இப்படி மே மூச்சு கீழ் மூச்சு வாங்குதுன்னா, அந்தக் கொழந்தைகளை வச்சுகிட்டு அந்த மனுஷன் என்ன பாடு பட்டிருப்பார்! ஆனாப் படல்லே. காரணம், குழந்தைகளுக்குள்ளார அவ்வளவு ஒத்துமை. ஒத்துமைக்குக் காரணம்? அந்தக் காலத்துலே அரசியல் கட்சிகள் கிடையாது. அது மட்டுமல்ல? அவருக்கு வாய்த்த மனைவி சுசீலை, உத்தமி பத்தினி. அதிகமா சொல்லுவானேன், நம்ம மாதவன் சம்சாரம் தங்கம்மா இல்லே, இவங்களைப் பாத்தா அவங்களைப் பாக்க வேண்டியதில்லே. ஆனா கொஞ்சூண்டு கெழடு தட்டியிருக்கும் அந்தம்மா முகத்திலே. அதற்குக் காரணம் அவங்க மேல தப்பில்லே, நம்பர் இருபத்தேழு.

இந்தக் குழந்தைகளெல்லாம் அந்த அம்மாளை சுத்திக்கொண்டு சதாசர்வ காலமும் பசி, பசி, இப்படி அருந்துவதற்குப் பாலில்லாதபடி

அம்மா பசிக்குதே, தாயே பசிக்குதே!

இப்படியென்று அகோரமாகக் கோரஸ் பாட ஆரம்பிச்சுட்டா. அது மட்டுமல்ல, அண்டை வீடு அடுத்த வீட்டுல இருக்கற கொழந்தகள் சாப்பிடும் பலகாரங்களைப் பார்த்துவிட்டு இப்போ போலீஸ்லே வளர்க்கறாங்களே அந்த நாயைப் போலே உர்ர்

மோப்பம் பிடித்த ஓர் பாலகன் தேங்காய்
ஆப்பம் வேண்டுமென்று கேட்டனன், கேட்டனன் பசி
ஏப்பாம் விட்ட சிறு பாலகன் மயங்கித்
தொப்பென்று பூமியில் விழுந்தனன், விழுந்தனன்
அது மட்டுமா?
ஆடையில்லாத ஓர் பாலகன் திங்க
சிகடை வேண்டுமென்று கேட்டனன், கேட்டனன்
கோடையிடி கேட்ட நாகம் போல்
தொந்தரினனனோ தொந்தரினோ தரினோ ரினோ னோ நோ ஏஓஓஓஓ ஏஏஏஏஓஓ

எடாடேய், டேய், டேய், ஒக்காருங்கோ. ஒக்காருங்கோ. நான் என்னடான்ன எல்லரையும் இருக்க வைக்கறேன், நீ எழுந்து போக வைக்கறே கிரகம், கிரகம், இன்னைக்கு கிரகப் பிரவேசண்டா அட அபிஷ்டு!

கோடையிடி கேட்ட நாகம் போல் நாகம் போல்
நெஞ்சம் குமுறித் தாயும் அழுதனள் ஏ..ஏ..ஏ ஆங்

அழுதனள். இந்த விஷயங்களை தன் கணவனிடத்திலே சொல்வதற்காக நாதான்னு அப்படி தொட்டா. பொசுக்குனு ஒரு சத்தம்.

குனிஞ்சு பாத்தார். அங்கே ஒரு பையன் விழுந்து கெடக்குறான்.

"ஆஹா! சுசீலை, இது என்ன நம்பர் இருபத்தி எட்டா?"ன்னு கேட்டார்.

அல்ல நாதா, நம்முடைய கடைசிக் குழந்தை பட்டினி பசியிலும் இப்படிக் கீழே கெடக்கறான்னு சொன்னாள். ம்ம்ம்ம் "இதையெல்லாம் பார்த்துக்கொண்டு நீங்கள் சும்மா இருக்கலாமா?" என்று கேட்டாள்.

"பெண்ணே, நான் என்ன செய்யட்டும் எங்கே போகட்டும்" என்றார்.

போய் வருவீர் போய் வருவீர் துவாரகை போய்வருவீர் ஸ்வாமீ
போய் வருவீர் போய் வருவீர் துவாரகை போய்வருவீர்
அன்பர்கள் நினைப்பதை அக்கணம் தந்திடும்
ஆஆஆஆஆஆ..ஏஏஏஏ...ஏஏஏஏ... ஏஏஏ ஏஏஏஏஏஏஏ
அன்பர்கள் நினைப்பதை அக்கணம் தந்திடும்
ஆலிலை மேல் வந்த அரியன் வாழ்ந்திடும்
துவாரகை போய் வருவீர்

இந்த வார்த்தையைக் கேட்ட உடனே மனுஷன் துடிச்சுட்டான். என்ன இருந்தாலும் மானஸ்தன், என்னைப் போல.

"சுசீலை, கிருஷ்ண பரமாத்மா என்னுடைய பால்ய நண்பனாக இருந்த போதிலும் வெட்கம் மானத்தை விட்டு

எப்படி எடுத்துரைப்பேன் நண்பனிடம் எப்படி எடுத்துரை
ஃபேன் ஃபேன் ஃபேன்
வரும்படி இல்லாத வறுமையின் கொடுமையை
எப்படி எடுத்துரைப்பேன்?
உப்புக்கும் பருப்புக்கும் காசில்லை என்று
உப்புக்கும் பருப்புக்கும் காசில்லை என்று
உப்புக்கும் பருப்புக்கும் செப்புக் காசில்லை என்று
உன்னா ஆஆஆஆஆஆ.... ஆஆஆஆ.........

ஆஹா! கிருஷ்ணா, ஆள் தெரியாமக் கூட்டிட்டு வந்துட்டேனேடா!

உன்னால் முடிந்ததை பிச்சை தர வேணுமென்று
எப்படி எடுத்துரைப்பேன்? "

என்று சொன்னார்.

ஸ்வாமி, பசி வந்திடில் பத்தும் பறந்து போம்னு சொல்லுவாங்க. அது நெஜமோ பொய்யோ, பசி வந்திடில் பிராணன் போறது நிச்சயம். இன்னும் கொஞ்ச நேரம் நீங்க வெயிட் பண்ணினா பெரிய பசங்கள்ளாம் சின்னப் பசங்களைப் போட்டு முழுங்கிடுவாங்கள் போலிருக்குது. அதனால் நீங்கள் உடனே துவாரகைக்குப் புறப்படுங்கன்னு சொன்னார். கவலையில்லாமல் தவலையிலிருந்து அவலை எடுத்து ஒரு படி போட்டு அவரிடத்திலே கொடுத்தாள்.

அதை அவர் எடுத்துக்கொண்டு

நடந்தார் பல நாடு நகரமதைக் கடந்தார்
நடந்தார் பல நாடு நகரமதைக் கடந்தார்
பல காத துரமே நடந்தார்
செல்வம் தன்னைத் தேடி துவாரகை செல்வன் தன்னை நாடி
காடு மேடு பள்ளமென்று பாராது நில்லாது
தள்ளாத வயதில் வேகமாய் நடந்தார்

இப்படியாகத் தானே துவாரகாபுரியை அடை...ந்தார்.

கண்ணன் இருக்கும் படியான அரண்மனையை அடைந்தார். கதவுகளோ திறந்து கிடந்தன. தேர்தல்லே வெற்றியடைஞ்ச எம்.எல்.ஏ. அசெம்ப்ளிக்குள்ளார நொழையற மாதிரி மனுஷன் சர்வ சாதரணமாகப் போக ஆரம்பிச்சுட்டார்.

கண்டார்கள் காவலர்கள், கொண்டார்கள் கோபம்.

"நில்லையா, சொல்லையா,
நில்லையா, நீ யாரென்ற விவரத்தை சொல்லையா
வல்லார்கள் எல்லோரும் வணங்கிடும் வாசலில்
வல்லார்கள் எல்லோரும் வணங்கிடும் வாசலில்
கல்லாத மனுஷன் போல் சொல்லாமல் செல்கின்றீர்
நில்லையா, கொஞ்சம் தள்ளையா, பெரிய தொல்லையா!"

இப்படியாக மிரட்டினார்கள். ஏ பரமாத்மா! உன்னைப் பார்ப்பதற்காகப் படாத பாடுபட்டு ஓடிவந்த என்னிடத்தில் இவர்கள் தடார் புடார் என்று பாடுகிறார்களே! இவனுகளைப் பாத்தாலும் சம்திங் வாங்கற ஆளாவும் தெரியல்லையே! நான் என்ன செய்வேன் எங்கு போவேன்? ஏ கிருஷ்ணா பரமாத்மா கோவிந்தா என்று கதறினார்.

இந்தக் கதறலைக் கேட்ட கிருஷ்ண பரமாத்மா ஓடோடி வந்தார், நெஞ்சாரத் தழுவிக் கொண்டார். ஆஹா! இத்தனை நாட்களுக்குப் பிறகு என்னை அன்போடு பார்க்க வந்திருக்கிறீர்களே, அண்ணி எனக்காக என்ன கொடுத்தடுப்பினார்கள் என்று கேட்டாஆஆஆர். பக்திப் பரவசத்திலே எண்சாண் உடம்பையும் ஒரு ஜாணாகக் ஒடுக்கிக் கொண்டு தான் கொண்டு வந்த அவல் முடிச்சை அவர் முன்பதாக வைத்தாஆஆஆஆர் கக. ஐயோ!

எடுத்தார், பிரித்தார், ஹஹஹஹ சிரித்தார்
புசித்தார் ஒரு பிடி அவலைப் புசித்தார்
அன்போடு தருதல் விஷமாகினும் அது அமுதமாகுமெனப் புசித்தார்
தன் அன்பன் படுகின்ற துன்பம் நீங்கிப் பேரின்ப வாழ்வு பெறப் புசித்தார்
மறுபடி ஒரு பிடி எடுத்தார், தடுத்தாள்,

யார்? ருக்மிணி, ஏன் தடுத்தாள்? அந்த ஏழை குடுக்கற அவலை சாப்பிட்டா கால்ரா வந்துடுமேன்னா தடுத்தாள்? அல்லள். அன்போடு ஒருத்தர் காபி கொடுத்தால் அவங்களுக்கு திருப்பி ஓவல் குடுக்கணும், குடுப்போமோ? இந்தக் காலத்திலே விஷம் கொடுக்காம இருந்தாப் போறாதா?

தன் அன்பனைப் பார்த்த ஆனந்தத்திலே வந்த வேலையை மறந்துட்டுக் குசேலர் போயிட்டார்.

இங்கே கண்ணன் சிரித்தார், அங்கே கனகலட்சுமி சிரித்தாள். உடனே மண் குடிசை எல்லாம் மாளிகையாகிவிட்டது. எல்லாம் அஸ்திவாரம் போட்ட கட்டடம், காரணம், காண்ட்ராக்ட்லே உடலை, அன்பர் மாதவன் தப்பா நெனைச்சுக்கப் பிடாது.

அந்தக் காலத்திலே இருந்த கிருஷ்ணனைப் போல இந்தக் காலத்திலே உதவி செய்றவங்க யாராவது இருந்தாங்களா? இருந்தார், தன் உழைப்பினாலே வந்த செல்வங்களை மத்தவங்களுக்கு வாரி வாரி வழங்கிய ஓரே ஒரு கிருஷ்ணனும் மறைந்தார்.

அவர் மட்டும் தானா? குசேலரைப் போல இருந்த மாதவனுக்கு சாமிநாதப் பிள்ளையோட உதவியினாலே இன்றைக்கு இவ்வளவு பெரிய வீட்டைக் கட்டி இங்கே கிரகப் பிரவேசம், அடியேனுக்கு அதில ஒரு சான்ஸ். ஆனா ஒரு விண்ணப்பம், குசேலனைப் போல மாதவனுக்கு இருபத்தேழு வேணாம். யோசனை செய்து, நிதானமா ஒண்ணு ரெண்டோட,

மங்களம் சுபமங்களம் நித்ய ஜெய மங்களம் சுப மங்களம்
நித்ய ஜெய மங்களம் சுப மங்களம்!

நம்ம பார்வதி எங்கே?

இதோ, இங்கே தாம்பா இருக்கேன்.

ஓ, கூட்டத்திலே எங்கேயோ காணமப் போயிடப் போறியோன்னு கேட்டேன், வா, வீட்டுக்குப் போவோம்.

ஆத்திலே தண்ணீ வர

வருடந்தோறும் மேதினம் வருவதும் அன்றொரு நாள் தொழிலாளர்களுக்கு விடுமுறை அளித்து விட்டு நாட்டிலுள்ள தலைவர்கள் என அழைக்கப்படும் பலரும் தொழிலாளர்களுக்கு வாழ்த்துச் சொல்வதும் தொழிலாளர்கள் நலன் பற்றி அறிக்கை வெளியிடுவதும் வாடிக்கையாகிப் போன நிலையில் இந்த ஆண்டும் அந்த மேதினம் வந்து வந்த சுவடே தெரியாமல் போய்விட்டது. ஞாயிற்றுக்கிழமை மேதினமாகிப் போனதால் ஒரு நாள் கூடுதல் விடுமுறை கிடைக்கும் வாய்ப்பும் கைநழுவிப் போனது ஒன்றே தொழிலாளர்களுக்கு இந்த வருடம் மிச்சம்.

அதிகாலையில் தொடங்கி அந்தி சாயும் வரை அன்றாடம் ஓயாது உழைத்துப் பிறருக்கு வீடுகள் கட்டித் தரும் கட்டடத் தொழிலாளிகள் குடியிருப்பதோ குடிசையிலும் தெருவோரத்திலும். படாத பாடுபட்டுப் பட்டும் நூலுமாக நெய்து பிறர் அணிந்து மகிழ ஆடைகள் செய்யப் பாடுபடும் நெசவாளர்கள் கட்டுவதோ கந்தை. குடிப்பதோ கஞ்சி. இதுவே இந்தியா என்று சொல்லி உலகிலுள்ளோர் யாவரும் எள்ளி நகையாடுமளவுக்கு நாட்டில் அரசாங்கங்கள் ஆட்சிபுரிகின்றன.

ஏழைகள் நலனுக்காகப் பாடுபடுவோம் என வாக்குறுதியளித்து ஆட்சிக்கு வருவோர் செய்வதோ அரசுத் தொழிகள் யாவற்றையும் முடக்கிப் போட்டு கல்வி, மருத்துவம், விமானப் போக்குவரத்து, எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயு, தகவல் தொழில்நுட்பம், தொலைத் தொடர்பு என அனைத்துத் துறைகளையும் தனியாருக்கு தாரை வார்த்து அவர்கள் வரி ஏய்ப்பு செய்ய வழிவகுத்து அதன் மூலம் தங்கள் குடும்பத்தாரும் கூட்டத்தாரும் மட்டுமே செல்வந்தர்களாக வகை செய்து மக்களை சுரண்டுவது ஒன்றே. நாட்டின் கனிம வளங்களை சட்டவிரோதமாகச் சுரங்கங்கள் வெட்டி எடுத்து வெளிநாட்டினருக்கு விற்று நம் நாட்டில் மலைவாழ் மக்கள் குடியிருப்புப் பகுதிகளை அழித்து இயற்கையை மாசுபடுத்தி சுடுகாடாக ஆக்குகவதும், ஆற்று மணலை அளவின்றி அள்ளிச் சென்று அநியாய விலைக்கு வீடுகளும் பிற கட்டிடங்களும் கட்ட விற்று நிலத்தடி நீர் வற்றச் செய்து ஆறுகளை வெறும் புதைகுழிகளாக ஆக்கி மக்கள் குடிக்கவும் நீர் இல்லாமல் செய்வதொன்றே ஜனநாயக ஆட்சியின் செயல்பாடு. பல நாட்களாய்ப் பாடுபட்டு நெல்லும், கனியும், கிழங்கும் தானியங்களும் விளைவித்து அவற்றை விற்பனை செய்து தாமும் பிறரும் வாழ வழிசெய்யலாம் எனக் காத்திருக்கும் விவசாயிகளது விளைபொருட்களுக்கு ஏற்ற விலை கிடைக்காமல் செய்து இடைத் தரகர்கள்கள் கொள்ளையடிக்க விட்டு விவசாயிகள் விளைநிலங்களை அடிமாட்டு விலைக்கு விற்பனை செய்யும் நிலைக்குத் தள்ளி அந்நிலங்களைப் பலமடங்கு விலைக்கு கட்டுமானப் பணிக்கு விற்று தாங்கள் மட்டுமே இலாபம் அடைவதொன்றே அரசியல்வாதிகளின் தலையாய தொழிலாக உள்ளது.

காத்திருந்தவன் பெண்டாட்டியை நேற்று வந்தவன் கொண்டு போவது போல் பாடுபட்டவன பலனடைய வழியின்றிச் செய்து இவ்வாறு நாட்டு மக்களைக் காக்காமல் அவர்களது அடிப்படை உரிமைகளைப் பரித்து வாழ வழியில்லாமல் செய்து தாங்கள் மட்டும் பலனடையும் வகையில் அரசியல்வாதிகளும் அரசாங்கங்களும் செயல்படுவது ஏன். இதற்கெல்லாம் காரணம் என்ன? விடை இதோ:

ஆத்திலே தண்ணீ வர

ஆஆஆஆஆஆ ஓஓஓஓஓஓஓஓ ஓஓஓ

ஆத்திலே தண்ணீ வர அதிலொருவன் மீன் பிடிக்க
காத்திருந்த கொக்கு அதைக் கவ்விக் கொண்டு போவதும் ஏன்
ஆத்திலே தண்ணீ வர அதிலொருவன் மீன் பிடிக்க
காத்திருந்த கொக்கு அதைக் கவ்விக் கொண்டு போவதும் ஏன்
கண்ணம்மா கண்ணம்மா அதைப்
பார்த்து அவன் ஏங்குவதேன் சொல்லம்மா

பாத்தி கட்டி நாத்து நட்டுப் பலனெடுக்கு்ம் நாளையிலே
பூத்ததெல்லாம் வேறொருவன் பாத்தியமாப் போவதுமேன்
பாத்தி கட்டி நாத்து நட்டுப் பலனெடுக்கு்ம் நாளையிலே
பூத்ததெல்லாம் வேறொருவன் பாத்தியமாப் போவதுமேன்
கண்ணம்மா கண்ணம்மா கலப்பை
புடிச்சவனும் தவிப்பது ஏன் சொல்லம்மா கலப்பை
புடிச்சவனும் தவிப்பது ஏன் சொல்லம்மா

நன்னானே நானேனானே நானே நன்னானே
நன்னானே நன்னானே நானே நன்னானே
நன்னானே நானேனானே நானே நன்னானே
நன்னானே நன்னானே நானே நன்னானே

பஞ்செடுத்துப் பதப்படுத்தி பக்குவமாய் நூல் நூற்று
நெஞ்சொடிய ஆடை நெய்தோம் கண்ணம்மா இங்கு
கந்தலுடை கட்டுவதேன் சொல்லம்மா
பஞ்செடுத்துப் பதப்படுத்தி பக்குவமாய் நூல் நூற்று
நெஞ்சொடிய ஆடை நெய்தோம் கண்ணம்மா இங்கு
கந்தலுடை கட்டுவதேன் சொல்லம்மா ஆஆஆஆஆ

காத்திருக்கும் அத்தை மவன் கண்கலங்கி நிற்கையிலே
நேத்து வந்த ஒருவனுக்கு மாத்து மாலை போடுவதேன்?
காத்திருக்கும் அத்தை மவன் கண்கலங்கி நிற்கையிலே
நேத்து வந்த ஒருவனுக்கு மாத்து மாலை போடுவதேன்?
கண்ணம்மா கண்ணம்மா அவள்
நேத்திரத்தைப் பறிப்பதும் ஏன் சொல்லம்மா

நன்னானே நானேனானே நானே நன்னானே
நன்னானே நன்னானே நானே நன்னானே

ஏற்றத் தாழ்வும் ஏமாற்றும் இவ்வுலகில் இருப்பதுதான்
இத்தனைக்கும் காரணமாம் கண்ணம்மா
ஏற்றத் தாழ்வும் ஏமாற்றும் இவ்வுலகில் இருப்பதுதான்
இத்தனைக்கும் காரணமாம் கண்ணம்மா இதை
எல்லோர்க்கும் நீ எடுத்து சொல்லம்மா கண்ணம்மா
எல்லோருக்கும் நீ எடுத்து சொல்லம்மா

ஆத்திலே தண்ணீ வர அதிலொருவன் மீன் பிடிக்க
காத்திருந்த கொக்கு அதைக் கவ்விக் கொண்டு போவதும் ஏன்
கண்ணம்மா கண்ணம்மா அதைப்
பார்த்து அவன் ஏங்குவதேன் சொல்லம்மா

நன்னானே நானேனானே நானே நன்னானே
நன்னானே நன்னானே நானே நன்னானே
கண்ணம்மா சொல்லம்மா கண்ணம்மா சொல்லம்மா
நன்னானே நானேனானே நானே நன்னானே
நன்னானே நன்னானே நானே நன்னானே

ராமன் எத்தனை ராமனடி

மனிதன் என்பவன் தெய்வமாகலாம்
வாரி வாரி வழங்கும் போது வள்ளலாகலாம்

என்று மனிதப் பிறவியின் உயர்வைப் பற்றி எழுதிய கவிஞர் கண்ணதாசன் அத்தகைய உயர்ந்த மானுடப் பிறவியை அடைந்த மனிதன் மிகவும் தாழ்ந்து போய் இருக்கும் சமுதாய அவலத்தையும் சாடுகிறார்.

கொல்லும் பாம்பின் கொடும் விஷத்தை
சொல்லில் கொடுக்கத் தெரிந்து கொண்டான்
குள்ளநரி போல் தந்திரத்தால்
குடியைக் கெடுக்கப் புரிந்து கொண்டான்
வெள்ளிப் பணத்தால் மற்றவரை
விலைக்கு வாங்கத் தெரிந்து கொண்டான்
மனிதனாக வாழ மட்டும் மனிதனுக்குத் தெரியவில்லை

http://www.thamizhisai.com/tamil-cinema/tamil-cinema-001/azhagu-nila/manidhan-ellam.php

மனிதன் மனிதனாக வாழ்வது எப்படி என்று எத்தனையோ ஞானியரும் மேதையரும் என்னென்னவோ எழுதி வைத்த் போதிலும் அவை யாவும் நமது மக்களுக்கு எளிதில் புரிவதில்லை. காரணம் அவர்கள் எழுதி வைத்த தத்துவங்களும் அறிவுரைகளும் கூர்ந்து கவனிப்பவர்க்கல்லாது மற்றவர்க்கு எளிதில் மனதில் பதிவதில்லை. இதே தத்துவங்களையும் அறிவுரைகளையும் ஒருவர் தம் வாழ்நாளில் கடைபிடித்தாரெனில் அவரது வாழ்வே பிறருக்கு வழிகாட்டுகிறது. தனியே விளக்கங்கள் ஏதும் கூறாமல் அவரைப் போல் வாழ வேண்டும் என்று ஒரே வாக்கியத்தில் யாருக்கும் வழி காட்டலாம். தம் வாழ்க்கையே பிறருக்கு வேதமாக விளங்கும் வண்ணம் உலகில் வாழும் அத்தகைய உன்னத புருஷர்களுடன் பழகும் வாய்ப்பு அனைவருக்கும் கிடைப்பதில்லையாதலால். இந்த உன்னத புருஷர்களின் வாழ்க்கை வரலாறு கதைகளாகவும் காவியங்களாகவும் எழுதி வைக்கப் படுகையில் அது சாமான்யருக்கும் எளிதில் புரியும் வண்ணமாகவும் படிப்பதற்கு சுவாரஸ்யமாகவும் அமைவதால் அவர்களுக்குப் பயனளிக்கும் விதத்தில் விளங்குகின்றன.

மனிதர்களுள் உத்தமன் யாரெனில் நம் பாரத தேசத்தில் அயோத்தியை ஆண்ட மன்னன் தசரத குமாரன் ஸ்ரீராமனே என்று கற்றோர் கூறுவர். காரணம் ஸ்ரீராம சரிதத்தில் சிறு குழந்தைப் பருவமுதல் ஸ்ரீ ராமன் எவ்வாறு வாழ்ந்தான், தன் வாழ்வில் பல்வேறு சந்தர்ப்பங்களில் தனக்கு ஏற்பட்ட இன்னல்களையும் தாங்கி தரும நிறியில் நிலைத்து நின்று எவ்வாறு தன்னை நம்பியவர்களைக் காத்தான் எனபன போன்ற அனைத்தும் இராமாயண காவியத்தில் மிக அழகாகவும் கேட்கக் கேட்கத் தெவிட்டாத இனிமையுடனும் கூறப்படுகின்றன.

தாயை தெய்வமாக மதித்து வணங்கி அவருக்கு ஆயுள் உள்ளளவும் சேவை செய்வதும், தந்தையின் சொற்படி நடந்து அவருக்குப் பெருமை தேடித்தருவதும், சகோதரர்களுக்காகத் தன் சுகங்களை முழுமனதுடன் விட்டுக் கொடுப்பதும், தனக்கு உதவி செய்தவருக்குப் பிரதி உபகாரம் செய்து நன்றி மறவாதிருப்பதும், தன்னையே நம்பி தன் பெற்றோரையும் உற்றார் உறவினர் யாவரையும் பிரிந்து வந்து மணந்த மனைவியைப் போற்றி அவளுக்கு உண்மையுள்ளவனாய் வாழ்நாள் முழுதும் விளங்குவதும், தருமநெறியில் நில்லாது பிறருக்கு அநீதி இழைத்து அட்டூழியங்கள் புரியும் தீயவரை அழித்து நல்லவர்களைக் காப்பதும் ஒவ்வொரு ஆண்மகனுக்கும் முக்கியமான கடைமைகளாகும். அத்தகைய கடமைகளை முறையாக நிறைவேற்றிய உன்னத புருஷனாம் ஸ்ரீராமனின் கதையைக் கேட்டாலும், அவன் நாமத்தை உச்சரித்தாலும் அந்த ஸ்ரீராமனைப் போலவே வாழ்வில் உயர்ந்து தெய்வமாகப் போற்றப்படும் நிலையை அடையலாம் எனும் உண்மையினை ஸ்ரீராமனைப் போலவே வாழ்ந்து காட்டிய அண்ணல் காந்தியடிகளின் வாழ்க்கை வரலாற்றைக் கொண்டு அறிகிறோம்.

ராமன் எத்தனை ராமனடி

திரைப்படம்: லட்சுமி கல்யாணம்
இயற்றியவர்: கவிஞர் கண்ணதாசன்
இசை: எம்.எஸ். விஸ்வநாதன்
பாடியவர்: பி. சுசீலா

ராமன் எத்தனை ராமனடி
ராமன் எத்தனை ராமனடி

ராமன் எத்தனை ராமனடி அவன்
நல்லவர் வணங்கும் தேவனடி தேவன்
ராமன் எத்தனை ராமனடி அவன்
நல்லவர் வணங்கும் தேவனடி தேவன்
ராமன் எத்தனை ராமனடி

கல்யாணக் கோலம் கொண்ட கல்யாண ராமன்
கல்யாணக் கோலம் கொண்ட கல்யாண ராமன்
காதலுக்கு தெய்வம் அந்த சீதாராமன்
அரசாள வந்த மன்னன் ராஜா ராமன்
அரசாள வந்த மன்னன் ராஜா ராமன்
அலங்கார ரூபன் அந்த சுந்தர ராமன் ராமன்

ராமன் எத்தனை ராமனடி
ராமன் எத்தனை ராமனடி

தாயே என் தெய்வம் என்ற கோசல ராமன்
தாயே என் தெய்வம் என்ற கோசல ராமன்
தந்தை மீது பாசம் கொண்ட தசரத ராமன்
வீரமென்னும் வில்லை ஏந்தும் கோதண்ட ராமன்
வீரமென்னும் வில்லை ஏந்தும் கோதண்ட ராமன்
வெற்றி என்று போர் முடிக்கும் ஸ்ரீஜெய ராமன் ராமன்

ராமன் எத்தனை ராமனடி அவன்
நல்லவர் வணங்கும் தேவனடி தேவன்
ராமன் எத்தனை ராமனடி

வம்சத்திற்கொருவன் ரகுராமன்
மதங்களை இணைப்பவன் சிவராமன்
வம்சத்திற்கொருவன் ரகுராமன்
மதங்களை இணைப்பவன் சிவராமன்
மூர்த்திக்கு ஒருவன் ஸ்ரீராமன்
முடிவில்லாதவன் அனந்த ராமன்
மூர்த்திக்கு ஒருவன் ஸ்ரீராமன்
முடிவில்லாதவன் அனந்த ராமன்

ராமஜெயம் ஸ்ரீ ராமஜெயம்
நம்பிய பேருக்கு ஏது பயம்
ராமஜெயம் ஸ்ரீ ராமஜெயம்
நம்பிய பேருக்கு ஏது பயம்
ராமஜெயம் ஸ்ரீ ராமஜெயம்
ராமனின் கைகளின் நானபயம்
ராமஜெயம் ஸ்ரீ ராமஜெயம்
ராமனின் கைகளின் நானபயம்

ராம்ராம் ராம்ராம் ராம்ராம் ராம்ராம்
ராம்ராம் ராம்ராம் ராம்ராம் ராம்ராம்
ராம்ராம் ராம்ராம் ராம்ராம் ராம்ராம்
ராம்ராம் ராம்ராம் ராம்ராம் ராம்ராம்
ராம்ராம் ராம்ராம் ராம்ராம் ராம்ராம்

ராமன் எத்தனை ராமனடி

சிந்தையறிந்து வாடி

நாமனைவரும் பிறந்தது முதலே மாயையில் உழன்று இனம் புரியாத ஒரு மயக்க நிலையிலேயே இவ்வுலகில் வாழ்கிறோம். நிலையாமை ஒன்றே நிலையானதுலகு எனும் நிதர்சனமான உண்மையை உணராமல் நம்முள் பல்வேறு காரணங்களுக்காகவும் ஏற்றத் தாழ்வு பாராட்டுகிறோம். அறிவென நாம் நினைப்பதெல்லாம் அறிவல்ல.

எப்பொருள் எத்தன்மைத்தாயினும் அப்பொருள்
மெய்ப்பொருள் காண்ப தறிவு

எனும் குறள் வழி நின்று ஆழ்ந்து சிந்திப்போமாகில் நமது இந்த பூதவுடல் திட திரவப் பொருட்களாலானது என்றும், காலப்போக்கில் பௌதிக இரசாயன மாற்றங்களுக்குள்ளாகி ஒரு குறிப்பிட்ட காலத்தில் முழுதும் சிதைந்து போய் மண்ணோடு மண்ணாகக் கூடியது எனும் உண்மையை நாம் உணர்வோம். நம் உடலில் இயக்கம் நிலைபெறக் காரணமாகிய உயிர் இவ்வுடலை விட்டுப் பிரிந்த பின்னர் வேறு உடலைத் தரிக்கிறது என்று ஒரு சாராரும், உடல் அழிகையில் உயிரும் அழிகிறது என மற்றொரு சாராரும், உயிர் அமரநிலை அடைகிறது என வேறொரு சாராரும் கருதுகையில் இவ்வாறான பலவிதமான கருத்துக்களுள் எது உண்மை என்று நம் யாருக்கும் தெரியாது என்பதே கண்கூடான உண்மை.

இளமைப் பருவத்தில் இவ்வுலகம் முழுவதும் இன்பமயமானதெனவும் நாம் வாழ்வில் அனுபவிக்கப் பல சுகங்கள் உள்ளன எனவும் எண்ணி அத்தகைய சுகங்களைத் தேடி அனுபவிப்பதிலேயே இளமைக் காலம் முழுவதையும் நாம் கழித்து விடுகிறோம். இளமைப் பருவம் முடிந்து முதுமை சிறிது சிறிதாக நம்மை வந்தடைகையில் நாம் சிறிது சிறிதாக நம் இன்பக் கனவுகளிலிருந்து விடுபட்டு நாம் இவ்வுலகை விட்டுச் செல்லும் காலம் விரைவில் வருவதை எண்ணி மயங்குகிறோம், இவ்வுலகில் நாம் வாழ்நாளில் பழகிய உறவுகளிடமிருந்தும் வேறு பல விஷயங்களிலிருந்தும் பிரிந்து செல்ல மனமில்லாமையால் மரணத்தைக் கண்டு அஞ்சுகிறோம். இத்தகைய மரண பயம் அனைத்து உயிர்களுக்கும் உண்டாவது இயற்கையே. மரண பயமின்றி மரணத்தைத் துச்சமாக மதித்து வீரச் செயல்கள் பல புரிவோரும் நம்மிடையே உள்ளனர் என்பதையும் நாமறிவோம்.

கடவுள் இல்லையென மறுத்துத் தான் ஒரு பகுத்தறிவாளன் என்று பறைசாற்றிக் கொண்டு சாதிமத பேதத்தை வளர்த்துப் பொன்னுக்கும் பொருளுக்கும் அடிமையாகித் தம் வாழ்நாள் முழுமையும் பொய்யிலேயே வாழ்ந்த பொய்யர்களின் பொய் மூட்டையின் சுருக்கு அவிழ்ந்து விட்டது. இத்தகைய பொய்யர்களும் தம் கொள்கைகளைக் காற்றில் பறக்கவிட்டுப் பல காரணங்களால் ஆலயங்களுக்குச் சென்று வழிபடுவதும் இரகசியமாகப் பல வ்அழிபாடுகளைச் செய்வதும் அம்பலமாகியுள்ளது. இத்தகைய செயல்களுக்கு அவர்களுக்குத் தன்னையறியாமல் ஏற்பட்ட அச்சமே காரணமாகும்.

பெரும்பாலானோர் வாழ்நாளின் பெரும்பகுதியை சுகபோகங்களில் கழித்து முதுமையடைந்த பின்னர் ஞானத்தை அடைந்து அதன் பின்னர் இவ்வுலக இன்பங்களில் பற்றை விடுத்து என்றும் நிரந்தரமான பொருளான இறைவனை நாடுகின்றனர். இத்தகையோரில் குறிப்பிடத் தக்கவர்கள் அருணகிரிநாதரும், பட்டிணத்தாரும் ஆவர். இவர்கள் தம் வாழ்நாளில் பெரும் செல்வந்தர்களாக வாழ்ந்து பின்னர் மெய்ஞானமெய்தினர் என்பது சரித்திரம். இதற்கு மாறாக குழந்தைப் பருவத்திலேயே வாழ்வின் அநித்திய நிலையை அறிந்து ஞானமெய்தியவர்கள் பலரும் நம்மிடையே அன்றும் இன்றும் என்றும் வாழ்ந்து வருவதும் கண்கூடான உண்மையே. இத்தகைய ஞானியரில் குறிப்பிடத் தக்க சிலர் திருஞான சம்பந்தர், ஆண்டாள், ஸ்ரீவள்ளி ஆகியோர் ஆவர். திருஞான சம்பந்தர் சிறு பிள்ளையாக இருந்த காலத்தில் தன் தாய் தன்னைத் தனியே விட்டுச் சென்ற தருணத்தில் அம்மா என்று பசிக்குரல் கொடுக்கையில் அக்குரல் கேட்டு ஓடோடி வந்து இறைவி அவருக்கு ஞானப்பாலூட்டியமையால் கவிபாடும் திறம் பெற்று இளம் வயதிலேயே பெரும் ஞானியானார். ஆண்டாள் சிறுமியாக இருந்த காலத்திலிருந்தே ஸ்ரீமந் நாராயணுக்குத் தன் தந்தை பூஜை செய்கையில் அணிவிப்பதற்காகத் தொடுத்த மாலையைத் தான் அணிந்து அழகு பார்த்துப் பின்னர் கொடுத்ததும் அரங்கனையே தன் மணாளனாக மனதில் வரித்து அவ்வண்ணமே அடைந்ததும் புராணம். அதே போல் மலைக்குறவர் குலத்தில் உதித்த ஸ்ரீவள்ளி தமிழ்க் கடவுள் முருகனையே கணவனாக வரித்துப் பின்னர் அவனையே மணமுடிந்ததும் புராணத்தில் நாம் காண்கிறோம்.

இத்தகைய கதைகளெல்லாம் கற்பனையாகவே இருப்பினும் அவற்றில் கூறப்படும் மையக்கருத்து யாதெனில் நாம் அடையத்தக்க மெய்ப்பொருள் என்றும் இறையருள் ஒன்றே என்பதாகும்.

உருவாய் அருவாய் உளதாய் இலதாய்
மருவாய் மலராய் மணியாய் ஒளியாய்
கருவாய் உயிராய் கதியாய் விதியாய்
குருவாய் வருவாய் அருள்வாய் குகனே

என்று அருணகிரிநாதர் மொழிந்துள்ளதன் தத்துவமாவது இவ்வுலகில் உள்ளவை யாவும் இறைவனின் வடிவமே என்பதே. எங்கும் இறைவன் நிறைந்திருப்பதைக் காண்பவனே மெய்ஞானி.

இறைவனை நாம் எந்த வடிவத்தில் வழிபடுகிறோமோ அந்த வடிவத்திலேயே அவன் நமக்கு அருள்புரிகிறான் என்பது பகவத் கீதை கூறும் ரகசியம். அவ்வழியே ஆராய்வோமெனில் திருஞான சம்பந்தர் ஞானப் பால் உண்ட கதையும், ஆண்டாள் அரங்கநாதனை மணாளனாய் அடைந்த கதையும் ஸ்ரீவள்ளி முருகனை மணந்ததும் உண்மையே என்பதை உணரலாகும்.

சிந்தையறிந்து வாடி

திரைப்படம்: ஸ்ரீவள்ளி
இயற்றியவர்: பாபநாசம் சிவன்
இசை: ஆர். சுதர்சன், ராஜகோபாலஷர்மா
பாடியவர்: பி.ஏ. பெரியநயகி

சிந்தையறிந்து வாடி குமரன் சிந்தையறிந்து வாடி
செல்வக் குமரன் சிந்தையறிந்து வாடி செல்வக் குமரன்
செந்தூரிடம் தங்கும் கொந்தாள் மலர்க் கந்தன்
சிந்தையறிந்து வாடி

அந்தோ என் ஆசையெல்லாம்
அந்தோ என் ஆசையெல்லாம் கொள்ளை கொண்டானே
அந்தோ என் ஆசையெல்லாம் கொள்ளை கொண்டானே
அந்தோ என் ஆசையெல்லாம் கொள்ளை கொண்டானே
ஆறுமுக வடிவேலன் சிவபாலன் சிந்தையறிந்து வாடி

சின்னஞ்சிறு வயதில் என்னை மாலையிட்டானே
சின்னஞ்சிறு வயதில் என்னை மாலையிட்டானே
சிரிக்கச் சிரிக்கப் பேசி கைவளை தொட்டானே

அன்னம் பாலும் வெறுக்க அவனியில் கைவிட்டானே
அன்னம் பாலும் வெறுக்க அவனியில் கைவிட்டானே
அன்னம் பாலும் வெறுக்க அவனியில் கைவிட்டானே
அடிமைப்பெண்டிர் என்றே முடிய மறந்திட்டானே
சிந்தையறிந்து வாடி

கட்டித் தொட்டுமே இதழ் கனியமுதம் கொடுத்தான்
கட்டித் தொட்டுமே இதழ் கனியமுதம் கொடுத்தான்
கலவி மதனைப் போலே குலவி முத்தம் கொடுத்தான்
கலவி மதனைப் போலே குலவி முத்தம் கொடுத்தான்

கலவி மதனைப் போலே குலவி முத்தம் கொடுத்தான்
எட்டுக்குடி வேலவன் இசையமுதம் படித்தான்
எட்டுக்குடி வேலவன் இசையமுதம் படித்தான்
என்றும் பிர்யேனென்று என் கைமேல் அடித்தான்
என்றும் பிர்யேனென்று என் கைமேல் அடித்தான்

சிந்தையறிந்து வாடி செல்வக் குமரன் சிந்தையறிந்து வாடி
செந்தூரிடம் தங்கும் கொந்தாள் மலர்க் கந்தன்
சிந்தையறிந்து வாடி

ஏர் முனைக்கு நேர் இங்கே

உணவின்றி யாரும் உயிர் வாழ்தல் அரிது. உலகில் வாழும் அனைத்து உயிர்களுக்கும் உணவளிப்பவை மரங்களும், செடி கொடிகளும் பயிர் வகைகளும் ஆகும். இவற்றுக்கு ஆதாரமான காடுகளையும் வயல்களையும் நாள்தோறும் மனிதன் அழித்து வருவது ஆபத்துக்கறிகுறி ஆகும். அதை விடவும் அதிக ஆபத்துக்கறிகுறி யாதெனில் மக்கள் தொகை அதிகரித்துக்கொண்டு வருவதாகும். மஹாகவி பாரதியார் வாழ்ந்த காலத்தில் அதாவது 1921ஆம் ஆண்டுக்கு முன் 30 கோடியாக இருந்த நம் நாட்டின் மக்கள் தொகை இன்று அதாவது சுமார் 100 ஆண்டுகளில் 121 கோடியாக உயர்ந்துள்ளது. ஒரு புறம் மக்கள் தொகை உயர மறுபுறம் அவர்களுக்கு உணவாதாரமாக விளங்கும் காடுகளும் விளைநிலங்களும் வெகுவாகக் குறைந்து வருவது மிகவும் ஆபத்தான விளைவுகளை நோக்கியல்லவா உள்ளது. இதே நிலை நீடித்தால் இன்னும் சில ஆண்டுகளில் நமக்கெல்லாம் உணவு கிடைப்பதே அரிதாகிவிடக் கூடுமல்லவா?

நம்மில் பெரும்பாலோர் நம் வாழ்வில் பெரும்பான்மையான நேரத்தை நமது வருங்கால வாழ்விற்கும் நமது பிள்ளைகளும் சந்ததியினரும் சிறப்பாக வாழவும் தேவையான பொருளைத் தேடுவதிலேயே செலவிடுவதால் மனித சமுதாயத்தை எதிர்நோக்கியுள்ள இத்தகைய பேரபாயத்தைத் தவிர்ப்பது குறித்து சிந்திக்கத் தவறுகிறோம். இதற்கு அடிப்படைக் காரணம் சுயநலம். பண்டைக் காலத்தில் மக்கள் விருந்தோம்பலைத் தலையாய கடமையாக எண்ணி ஒவ்வொரு நாளும் குறைந்தது ஒரு விருந்தினருக்காவது முதலில் உணவு அளித்த பின்னரே தாங்கள் உணவருந்துவது எனும் கட்டுப்பாட்டுடன் வாழ்ந்து வந்தனர். இதற்கான ஆதாரங்கள் புராண இதிகாசக் கதைகளில் மட்டுமல்லாது நம் நாட்டின் உண்மை சரித்திரக் கதைகளிலும் உள்ளன. மனிதர்களுக்கு மட்டுமின்றி பறவைகள், விலங்குகள், செடி கொடிகள் முதலியவற்றுக்கும் பரிந்து தம் தேவைகளை அவற்றுக்காகத் தியாகம் செய்த பல மஹாத்மாக்களைக் குறித்து நாம் அறிகிறோம்.

பறவைகளுக்காக்த் தன் தொடையை வாளால் அரிந்து கொடுத்த செம்பியன் எனும் சிபிச் சக்கரவர்த்தி, தனது மகன் ஓட்டிச் சென்ற தேரில் அடிபட்டு மாட்டின் கன்று ஒன்று இறந்ததால் அம்மாட்டின் குறையைத் தீர்க்கத் தன் மகனையே தேர்க்காலில் இட்டுக் கொன்ற மனு நீதிச் சோழன், கொழுகொம்பின்றி வாடிய முல்லைக் கொடிக்குத் தன் தேரை ஈந்த வள்ளல் பாரி, தான் நீடூழி வாழ வேண்டுமென வாழ்த்தி ஒருவர் கொடுத்த அரிய நெல்லிக்கனியை ஔவையாருக்களித்த வள்ளல் அதியமான் நெடுமான் அஞ்சி, இன்னும் இவர்கள் போன்ற எத்தனையோ உன்னத மனிதர்களைப் பற்றி நாம் இத்தகைய கதைகளில் படிக்கிறோம். இவற்றுள் பல கற்பனைக் கதைகளாக இருந்த போதிலும் இவற்றை நம் முன்னோர்கள் முதல் நம்முடன் வாழும் மக்கள் அனைவரும் சொல்லியும் கேட்டும் வருவது மனித குலத்தின் தருமசிந்தையையே காட்டுகிறது.

இத்தகு உயர்ந்த தரும சிந்தை கொண்ட தெய்வ வடிவுடன் விளங்கும் மனிதர்களாகிய நாம் சுயநலத்தைத் தள்ளி விட்டு இவ்வுலகைக் காக்கும் கடமையில் சற்றே கவனம் செலுத்த வேண்டிய தருணம் வந்துவிட்டது. போதும், அநியாய வழிகளில் ஈட்டிய பெரும்பொருளைக் கொண்டு பேராசை கொண்ட மாந்தர் பலர் விவசாயிகள் பிழைக்க வழியில்லாத நிலையை உருவாக்கி, அவர்களின் விளைநிலங்களைக் குறைந்த விலைக்கு வாங்கி அவற்றையே பல மடங்கு அதிக விலைக்கு வீட்டு மனைகளாகவும் தொழிற்சாலைகளுக்கான இடமாகவும் விற்று விவசாயம் நடைபெறுவதைத் தடுத்து, உணவு உற்பத்தியைக் குறைத்து, மனித குலத்தை அழிவுப் பாதையில் இட்டுச் செல்லும் ஈனத்தை மாற்றுவோம். விவசாய நிலங்களைக் காப்போம்.

ஆற்று மணலைக் கட்டுப்பாடின்றி லாரிகளில் அள்ளிச் சென்று கட்டடங்கள் கட்டுவதற்குப் பயன்படுத்தி நிலத்தடி நீர் இல்லாமல் செய்யும் சமூகவிரோத செயலைத் தடுத்திடுவோம். காடுகளையும் மரங்களையும் அழிக்கும் நிலையை மாற்றி மரங்கள் பல நட்டு இயற்கையைக் காக்க முயற்சிகள் மேற்கொள்வோம். விவசாயத்தினால் விளையும் காய்கறிகள், கனிகள் முதலியவை கெட்டு அழுகி வீணாவதைக் குறைக்கக் குளிர்பதக் கிடங்குகளை அமைப்போம். குறிப்பிட்ட பருவகாலத்தில் மட்டும் விளையும் அரிய வகைக் காய்கறிகளையும் பழங்களையும் இதன் மூலம் ஆண்டுதோறும் கிடைக்க வழி செய்வோம். இடைத் தரகர்களை நீக்கி விவசாயிகளின் விளைபொருட்களுக்கு உரிய நியாமமான விலை அவர்களுக்குக் கிடைக்கச் செயது விவசாயிகள் சுரண்டப்படுவதைத் தவிர்த்து விவசாயிகள் தன் விளைநிலங்களை விற்கும் அவலத்தைப் போக்க ஆவன செய்வோம். விவசாய விளைபொருட்களை ஏற்றிச் செல்லும் வாகனங்களுக்கு வரிவிலக்கு அளீத்து விளை பொருட்கள் பொதுமக்களுக்கு நியாயமான விலையில் கிடைக்கச் செய்வோம்.

ஆட்சியாளர்கள் இதற்கான உரிய நடவடிக்கைகளை எடுக்குமாறு நாம் சமுதாய அமைப்புகள் வழியே வலியுறுத்துவோம். விவசாயம் செழித்தால் நம் வாழ்வில் என்றும் பஞ்சமில்லை.

ஏர் முனைக்கு நேர் இங்கே

திரைப்படம்: பிள்ளைக் கனியமுது
இயற்றியவர்: மருதகாசி
இசை: கே.வி. மஹாதேவன்
பாடியவர்: டி.எம். சௌந்தரராஜன்

ஏர் முனைக்கு நேர் இங்கே எதுவுமே இல்லே
ஏஏஏ ஏஏஏ ஏஏஏஏஏஏ
என்றும் நம்ம வாழ்விலே பஞ்சமே இல்லே
ஆஆஆஆ ஆஆஆஆஆ ஆஆஆஆஆஆஆ
ஏர் முனைக்கு நேர் இங்கே எதுவுமே இல்லே
என்றும் நம்ம வாழ்விலே பஞ்சமே இல்லே

பூமியிலே மாரியெல்லாம் சூரியனாலே பயிர்
பூப்பதுவும் காய்ப்பதுவும் மாரியினாலே
பூமியிலே மாரியெல்லாம் சூரியனாலே பயிர்
பூப்பதுவும் காய்ப்பதுவும் மாரியினாலே நாம்
ஷேமமுற நாள் முழுதும் உழைப்பதனாலே நாம்
ஷேமமுற நாள் முழுதும் உழைப்பதனாலே இந்த
தேசமெல்லாம் செழித்திடுது நம்ம கையாலே

ஏர் முனைக்கு நேர் இங்கே எதுவுமே இல்லே
என்றும் நம்ம வாழ்விலே பஞ்சமே இல்லே

நெற்றி வேர்வை சிந்தினோமே முத்து முத்தாக அது
நெல்மணியாய் வெளஞ்சிருக்கு கொத்துக் கொத்தாக
நெற்றி வேர்வை சிந்தினோமே முத்து முத்தாக அது
நெல்மணியாய் வெளஞ்சிருக்கு கொத்துக் கொத்தாக
பக்குவமாய் அறுத்து அதைக் கட்டுக் கட்டாக
பக்குவமாய் அறுத்து அதைக் கட்டுக் கட்டாக அடிச்சுப்
பதரை நீக்கிக் குவிச்சி வைப்போம் முத்து முத்தாக

ஏர் முனைக்கு நேர் இங்கே எதுவுமே இல்லே
என்றும் நம்ம வாழ்விலே பஞ்சமே இல்லே

வளர்ந்து விட்ட பருவப்பெண் போல் உனக்கு வெட்கமா? தலை
வளைஞ்சு சும்மாப் பாக்குறியே தரையின் பக்கமா
வளர்ந்து விட்ட பருவப்பெண் போல் உனக்கு வெட்கமா? தலை
வளைஞ்சு சும்மாப் பாக்குறியே தரையின் பக்கமா இது
வளர்த்து விட்ட தாய்க்குத் தரும் ஆசை முத்தமா? இது
வளர்த்து விட்ட தாய்க்குத் தரும் ஆசை முத்தமா? என்
மனைக்கு வரக் காத்திருக்கும் நீயும் சொத்தம்மா?

ஏர் முனைக்கு நேர் இங்கே எதுவுமே இல்லே
என்றும் நம்ம வாழ்விலே பஞ்சமே இல்லே
ஏர் முனைக்கு நேர் இங்கே எதுவுமே இல்லே
என்றும் நம்ம வாழ்விலே பஞ்சமே இல்லே