சனி, 20 செப்டம்பர், 2014

கலங்காதிரு மனமே

தினம் ஒரு பாடல், ஜூன் 27, 2014

நான் கவிஞனில்லை; எனினும் ஒரு நல்ல ரசிகன். கண்ணனுக்கும் ரசிகன் அவன் தாசனுக்கும் ரசிகன் சிறு வயது முதலே எனக்குத் துணை பாடல்களே. 'தனிமையிலே இனிமை காண்பவனே யோகி' என்றான் கண்ணன் 

தன் கீதையில். 'தனிமையிலே இனிமை காண முடியுமா?' என்று கேள்வி கேட்டான் கண்ணதாசன். 

என்னால் முடியும் எனப் பதிலுரைக்கிறேன் கண்ணதாசனுக்கு. தனிமையில் இருந்து கொண்டு மனம் எனும் மாயக் கணிணியின் நினைவுப் பதிவுகளிருந்து கண்ணதாசன் எனும் காவியத்தின் வரிகளை அசைபோட்டால் தனிமையில் இனிமை தானே வரும் அன்று. 

இன்று மனக் கணிணியுடன் நிஜக் கணிணியும் துணையிருக்கையில் அவன் பாடல்களையும் ஏனைய தமிழ்க் கவிஞர் பெருமக்களின் பாடல்களையும் இணையதளம் வாயிலாகவும் கணிணியின் நினைவுப் பெட்டகத்தில் பதிவு செய்து கொண்டும் கேட்டு மகிழும் வாய்ப்பு பன் மடங்காய்ப் பெருகி நிலைபெற்றிருக்கையில் தனிமையில் ஏன் இனிமை காண முடியாது? 

இன்றும் நான் இனிமை காண்கிறேன் தனிமையில், இசையென்னும் இன்ப வெள்ளத்தில் நீந்திக்கொண்டு!

'யான் பெற்ற இன்பம் பெருக இவ்வையகம் 
வான் பற்றி நின்ற மறை பொருள் சொல்லிடின் 
ஊன் பற்றி நின்ற உயர் திரு மந்திரம் 
தான் பற்றப் பற்றத் தலைப் படும் தானே' 

எனும் திருமந்திரப் பாடலில் காணும் அறிவுரைப்படி யான் பெற்ற இசையென்னும் இன்ப வெள்ளத்தை இந்த வையகம் முழுமையும் பெற வைக்கும் பேரவாவினால் தமிழை சிறிதும் கற்றறியாத நான் எழுதிவரும் 'தினம் ஒரு பாடல்' தொடர் கடிதங்களுடன் நான் கேட்டு ரசித்து மகிழ்ந்த பாடலின் வரிகளுடன் பாடலின் ஒலி ஒளிப் பதிவுகளுக்கான இணைப்புகளையும் இணையத் தமிழ் அன்பர்களுடன் பகிர்ந்து மகிழும் ஆனந்தம் இசை கேட்கும் ஆனந்தத்தையும் விட மிகப் பெரிது என்பதை உணர்கிறேன்.

இதில் பேரானந்தம் தரும் அனுபவங்கள் என்னவெனில் என் போன்றே இப்பாடல்களைக் கேட்டு மகிழும் பல தமிழ் அன்பர்கள் தம் மனதாரத் தங்கள் மகிழ்ச்சியை வெளிப்படுத்தி எனக்குப் பாராட்டுகள் தெரிவிப்பதுவே. 

ஒரு முறை கவியரசு கண்ணதாசன் அவர்களின் மகன் கண்ணதாசன் பாடல்களுடன் நான் எழுதுவது குறித்து எனக்குப் பாராட்டுத் தெரிவித்து ஒரு மின்னஞ்சல் செய்திருந்தார். வசிஷ்டர் வாயால் 'பிரம்ம ரிஷி' எனும் பெரும் பெயர் பெற்ற மாமுனிவன் விஸ்வாமித்திரனும் அடைந்திராத மகிழ்ச்சியை நான் அன்று அடைந்தேன். 

நேற்று எனக்கு 'காவிரி மைந்தன்' எனும் கண்ணதாசனின் சீடர் ஒருவர் 'தினம் ஒரு பாடல்' மிக அருமையாக உள்ளதாகத் தெரிவித்து என்னுடன் தொடர்பு கொண்டார். 

கவிஞர் கண்ணதாசனுக்கு அர்ப்பணிக்கப்பட்ட அவரது இணையதளம் தமிழ் நதி  

அதில் கவிஞர் கண்ணதாசன் எழுதிய முதல் பாடல் குறித்த ஒரு சிறு மடலைக் கண்டேன். கண்ணதாசனைப் பற்றியும் அவர் கவிதைகள் பற்றியும் நான் அறிந்தது சொற்பமே. இன்னும் எவ்வளவோ உள்ளன. அவற்றையறிய இணையத் தமிழ் ஊடகங்கள் மிகவும் உதவிபுரிகின்றன.

தேமதுரத் தமிழோசை உலகமெலாம் பரவும் வகை செய்தல் வேண்டும்.

அம்முதல் பாடலாவது:


திரைப்படம்: கன்னியின் காதலி
இயற்றியவர்: கவியரசு கண்ணதாசன்
இசை: எஸ்.எம். சுப்பையா நாயுடு
பாடியவர்: கே.வி. ஜானகி

கலங்காதிரு மனமே நீ
கலங்காதிரு மனமே - உன்
கனவெல்லாம் நினைவாகும் ஒரு தினமே
ஒரு தினமே 
கலங்காதிரு மனமே நீ
கலங்காதிரு மனமே 

கடினப்படாமல் ஏதும் கைக்கு வராது
கடினப்படாமல் ஏதும் கைக்கு வராது
கண்டப்படுவார் தம்மைக் கைநழுவாதே
கண்டப்படுவார் தம்மைக் கைநழுவாதே
அடுத்தடுத்து முயன்றால் ஆகாததேது?
அடுத்தடுத்து முயன்றால் ஆகாததேது? உனக்கு 
ஆகாததேது? 

கலங்காதிரு மனமே நீ
கலங்காதிரு மனமே 

ஆண் வாடை கூடாதென்றாள் அல்லியும் ஒரு நாள்
ஆண் வாடை கூடாதென்றாள் அல்லியும் ஒரு நாள்
அருஜ்ஜுனன் வலைதனில் 
அருஜ்ஜுனன் வலைதனில் வீழ்ந்தனள் சரியாய் 

கலங்காதிரு மனமே நீ
கலங்காதிரு மனமே 

பகட்டுக்காக உன்னைப் பார்க்கவே மறுத்தாலும்
பகட்டுக்காக உன்னைப் பார்க்கவே மறுத்தாலும்
பருவக் காலம் அவளைப் பாடாய்ப் படுத்தி விடும்
பருவக் காலம் அவளைப் பாடாய்ப் படுத்தி விடும் 

அடுத்த கணம் உன் மேல் ஆசையும் வைப்பாள்
அடுத்த கணம் உன் மேல் ஆசையும் வைப்பாள்
ஆஹாஹா என்று முத்தமும் கொடுப்பாள்
ஆஹாஹா என்று முத்தமும் கொடுப்பாள் 

கலங்காதிரு மனமே நீ
கலங்காதிரு மனமே - உன்
கனவெல்லாம் நினைவாகும் ஒரு தினமே
ஒரு தினமே