வெள்ளி, 4 ஜூலை, 2014

மல்லிகைப் பூ ஜாதி ரோஜா

june 04, 2014

ஏறத் தாழ ஒரு வருடத்துக்கு என் உடல் நிலை, மற்றும் பல்வேறு கடமைகள் காரணமாகத் தடைபட்டிருந்ததினம் ஒரு பாடல் பதிவைத் திரும்பவும் புத்துணர்ச்சியோடு தொடர்கிறேன். 60 ஆண்டுகளைக் கடந்து வருகின்ற ஜீலை மாதம் 8ஆம் நாள் 61 வயது நிறைவடைய இருக்கும் நான் என் அனுபவத்தில் கண்டறிந்து உணர்ந்தவற்றை இணையத் தமிழ் நண்பர்கள் பலருடன் பகிர்ந்து கொள்ளும் பெரும் பேறு கிட்டியது என் பெரும் பாக்கியம்.


வாழ்வில் என்றும் நாம் பிறர்க்கு உதவி செய்யத்தக்க சந்தர்ப்பத்தை எதிர்நோக்கியே வாழ வேண்டும். தனக்கு தனக்கு என்று மட்டும் வாழ்ந்து அடையாளம் தெரியாமல் மடிவது மடமை. நம்மிடம் எவ்வளவு பொருள் உள்ளது என்பது பிறர்க்கு உதவி செய்ய ஒரு பொருட்டல்ல. இன்றும் நம்மிடையே பலர் பிறருக்குதவும் நோக்கத்துடனே வாழ்ந்து வருகின்றனர், தான் ஈட்டிய செல்வமனைத்தையும் பிறர் நலனுக்காகவே செலவிட்டுத் தியாக வாழ்வு வாழ்கின்றனர். இத்தகைய தெய்வப் பிறவிகளைப் பற்றிய செய்திகள் முகநூல் உட்படப் பல இணைய தளங்களில் தினந்தோறும் வருவதைப் பார்க்கிறோம். நாமும் அத்தகைய நல்லோரை உதாரணங்களாகக் கொண்டு சேவை மனப்பான்மையுடன் வாழ்வோமெனில் அதில் கிடைக்கும் பேரானந்தம் வேறுதிலும் கிடைக்காது என்ற உண்மையை உணர்வோம். 


முக்கியமாக நாம் உடல் ஊனமுற்றோருக்கும், பார்வையற்றோருக்கும், வறுமையால் வாடும் ஏழைகளுக்கும், வயதில் மூத்தவர்களுக்கும் உவந்து சேவை செய்ய வேண்டும். அப்பொழுதுதான் நாம் மனித நிலையிலிருந்து தெய்வ நிலையை எய்த முடியும். அதையே கவிஞர் கண்ணதாசன், "மனிதன் என்பவன் தெய்வமாகலாம், வாரி வாரி வழங்கும் போது வள்ளலாகலாம், வாழை போலத் தன்னைத் தந்து தியாகியாகலாம்!" என்று எல்லோரும் புரிந்து கொள்ளும் எளிய சொற்களால் இனிமையாக விளக்கினார்.


ஒரு பார்வையற்ற பெண் ஒரு பொருட்காட்சித் திடலில் ஓரிடத்தில் நின்று கொண்டு தான் தொடுத்த பூக்களை விற்கும் முயற்சியில் அங்குள்ள மக்களைத் தன் இனிய குரலால் பாடி அழைக்கிறாள். தான் தொடுத்த பூக்களை வாங்கி இன்புறுமாறு வேண்டுகிறாள். ஆனால் அங்குள்ள மனிதர்கள் திடலில் அமைத்திருக்கும் விளையாட்டு அரங்கங்களில் பொழுதைக் கழித்துக் கொண்டு இவளை கவனிக்கத் தவறுகையில் அப்பெண்ணின் அருகே சற்று தொலைவில் நின்று கொண்டிருக்கும் ஒரு அன்புள்ளம் கொண்ட வாலிபன் அப்பெண்ணின் துன்பத்தைக் கண்டு மனம் வாடுகிறான். அவள் துன்பம் தீருமா என ஏங்குகிறான். சற்று நேரத்தில் அவனுக்கு ஒரு யோசனை தோன்றுகிறது. தனது கால்சட்டைப் பையில் வைத்திருக்கும் "மவுத் ஆர்கன்" இசைக் கருவியைக் கைகளில் எடுத்துக்கொண்டு அப்பெண் பாடும் பாடலுக்கேற்றவாறு அதனை வாசிக்கிறான்.


அவ்விசை கேட்டு அங்கு கூடியிருக்கும் மக்கள் சட்டெனத் திரும்பி இவர்கள் இருவரும் இருக்கும் திசையில் பார்க்கின்றனர். பின்னர் அவர்களில் பலர் இவர்களிடம் வந்து நிற்கின்றனர். அவர்களுள் பலர் அப்பெண்ணின் பூக்களை விலை கொடுத்து வாங்குகின்றனர். சில நொடிகளில் பூக்கள் அனைத்தும் விற்றுத் தீர்ந்து விடுகின்றன. அவ்வாலிபன் பூக்கள் விற்ற காசை எண்ணுகிறான். அப்பெண் தன் பூக்கூடையைத் தடவிப் பார்க்கிறாள். அதில் ஓரே ஒரு ரோஜா மலர் மட்டும் உள்ளது. அதனை எடுத்து உள்ளன்புடன் தன் துயர் துடைக்கத் துணை வந்த அவ்வாலிபனிடம் கொடுக்கிறாள். தன் இதயத்தையே அவனுக்குத் தருவதாக அர்த்தம்.


உள்ளத்தைத் தொடும் இப்பாடல் காட்சி "ராஜி என் கண்மணி" என்ற பழைய திரைப்படத்தில் இடம் பெற்றது. கண்பார்வையற்ற பெண்ணாக பராசக்தி திரைப்படத்தில் நடிகர் திலகம் சிவாஜி கணேசனின் தங்கை கல்யாணி வேடமேற்று நடித்த ஸ்ரீ ரஞ்சனியும் அவ்வாலிபனாக முன்னாள் நகைச்சுவை நடிகர் டி.ஆர். ராமச்சந்திரனும் சிறப்புற நடித்து நம் கண்களில் நீரை வரவழைக்கின்றனர்.


தன்னலம் மறப்போம்! உலகுக்குதவ உழைப்போம்!



திரைப்படம்: ராஜி என் கண்மணி 
பாடலாசிரியர்: 
இசை: எஸ். ஹனுமந்த ராவ் 
பாடியோர்: ஆர். பாலசரஸ்வதி 
Year: 1954ஆண்டு: 1954 

மல்லிகைப் பூ ஜாதி ரோஜா
முல்லைப் பூவும் வேணுமா?
தொட்டாலும் கை மணக்கும் பூவும்
பட்டான ரோஜா பூவும்
கதம்பம் வேணுமா?
மல்லிகைப் பூ ஜாதி ரோஜா
முல்லைப் பூவும் வேணுமா?
தொட்டாலும் கை மணக்கும் பூவும்
பட்டான ரோஜா பூவும்
கதம்பம் வேணுமா?

சும்மா கையாலே தொடுத்தாலும்
கண்ணாலே கண்டதில்லை
அம்மா வாங்குவீர்! ஐயா வாங்குவீர்!
அம்மா வாங்குவீர்! ஐயா வாங்குவீர்!

பண்பான காதலி முன்பாகத் தூது போகும்
ஆசை மலர்ந்து ஆனந்தமே உண்டாகும்.
பண்பான காதலி முன்பாகத் தூது போகும்
ஆசை மலர்ந்து ஆனந்தமே உண்டாகும்.

ரோஜா மலர் வேணுமா 
ஜாதி மலர் வேணுமா?
ரோஜா மலர் வேணுமா நல்ல
ஜாதி மலர் வேணுமா?
சல்லாப மாலை உல்லாச வேளை
எல்லோரும் வாங்கிடுவீரே!

மல்லிகைப் பூ ஜாதி ரோஜா
முல்லைப் பூவும் வேணுமா?
தொட்டாலும் கை மணக்கும் பூவும்
பட்டான ரோஜா பூவும்
கதம்பம் வேணுமா?

ரோஜா மலர் வேணுமா நல்ல
ஜாதி மலர் வேணுமா?
சல்லாப மாலை உல்லாச வேளை
எல்லோரும் வாங்கிடுவீரே!

மல்லிகைப் பூ ஜாதி ரோஜா
முல்லைப் பூவும் வேணுமா?
தொட்டாலும் கை மணக்கும் பூவும்
பட்டான ரோஜா பூவும்
கதம்பம் வேணுமா?