ஞாயிறு, 31 ஜனவரி, 2016

வசந்த முல்லை போலே வந்து

மங்கையரை மலர்களுக்கொப்பிடுவதுண்டு, அவர்கள் மலர்களைப் போல மென்மையான உடலும் மனமும் கொண்டு மலர்களைப் போல வாழ்வில் மணம் பரவச் செய்யும் மேன்மையினால். ஒவ்வொரு ஆணின் வாழ்விலும் ஒரு பெண் வந்து வாழ்க்கைத் துணையாக அமைந்த பின்னரே வாழ்வு மலர்கிறது, வாரிசுகள் பிறக்கின்றன. குடும்பம் அமைகின்றது, இல்லறம் செழிக்கின்றது. தன் மனதுக்கிசைந்த பெண்ணை விரும்பிக் காதலித்து மணமுடித்து உடன் சேர்ந்து வாழும் வாழ்வு அமையப்பெற்ற ஆண்கள் பிற ஆண்களைக் காட்டிலும் மிகவும்  கொடுத்து வைத்தவர்கள் என்பதில் ஐயமில்லை ஏனெனில் இருவர் மனமும் ஒருங்கிணைந்த நிலையில் தொடங்கித் தொடரும் வாழ்வில் தங்குதடைகள் எத்துணை வரினும் இருவரும் கூடி முயன்று அவற்றை வெல்லுவது மிக எளிது. 

கணவன் மனைவி உறவு முன்பின் அறிமுகமில்லாத ஆண் பெண் பாலரிடையே உருவாகுகையில் அத்தகைய மனம் ஒன்று பட்ட நிலை எய்துவது சற்றுக் கடினமே. இருவரும் ஒருவரையொருவர் புரிந்துகொண்டு கருத்து வேறுபாடுகள் உருவாவதைத் தவிர்த்து ஒற்றுமையாக வாழப் பழகுவதே பெரிய சவாலாக அமைகிறது. எவ்வளவு பெரிய பிரச்சினைகள் எழுந்த போதிலும் அவற்றைத் தீர்த்துக்கொண்டு ஒன்றாக வாழ்வதே குறிக்கோளாகக் கொண்டு இருவரும் விட்டுக்கொடுத்து ஒருவர் மற்றவர் நலனைப் பெரிதென எண்ணி சுயநல உணர்வை அகற்றி வாழப்பழகுகையில் அங்கே இல்லற உறவு மிகவும் மேம்படுகிறது, வாழ்வில் வெற்றி காண வழி பிறக்கிறது. இருமனம் ஒன்றுபட்டு இணைந்து வாழும் முறைமையைக் கற்றுத்தேர்ந்த தம்பதியருக்குத் தம் குழந்தைகளை வளர்த்து ஆளாக்குவது எளிதாகவும் இனிதாகவும் அமைகிறது. 

கணவன் மனைவியரிடையே கருத்து வேறுபாடு எழுந்து அதைப் பெரிது படுத்தி இருவரும் ஒற்றுமையின்றி சண்டையிட்டுக்கொள்ளும் நிலை உருவாக விட்டால் அவர்களது சிறு பிரச்சினைகளையும் சமாளிப்பது மிகவும் கடினமானதாகிவிடுகிறது. ஒற்று பட்டு வாழப் பழகாத தம்பதியினர் தம் பிள்ளைகளை முறையாக வளர்க்க முடியாமல் தவிப்பதுண்டு. பல சமயங்களில் குழந்தைகளின் வாழ்க்கை தடம் மாறி நெறி கெட்டுத் தவறான வழியில் குழந்தைகள் செல்ல ஏதுவாகிறது. கணவனும் மனைவியும் ஒற்றுமையாய் வாழப் பழகிக்கொண்டால் இவ்வுலகமே சொர்க்கமாகிறது இல்லையேல் நரகமாகிறது.

முற்காலத்தில் அரசகுமாரர்களும் அரசகுமாரிகளும் காதல் வயப்பட்டு சரித்திரம் படைத்ததுண்டு. அவர்களும் உள்ளங்கள் ஒன்றாகித் துள்ளும் இன்பம் போல வேறில்லை என்பதை உணர்ந்து காதலைப் புனிதமாகக் கருதிப் போற்றினர். அத்தகைய அரச பரம்பரைகளைப் பின்னணியாகக் கொண்டு பல திரைப்படங்கள் தமிழிலும் பிற மொழிகளிலும் வெளிவந்துள்ளன. அக்கதைகளில் காதல் காட்சிகள் மிகவும் சிறப்பாக அமைந்து இன்னிசையும் நடனமும் ஒன்று கலந்து வடிவமைக்கப்பெற்றதால் மீண்டும் மீண்டும் கண்டு களிக்க விருப்பம் ஏற்படும் வகையில் திரைப்படங்கள் அமைந்தன. 

நம் கதாநாயகி, "இந்தப் புறா ஆட வேண்டுமானால் இளவரசர் பாட வேண்டும்." என்று கேட்க அவளது காதலனான இளவரசன், "ஓ, பாட வேண்டுமா?" என்று கேட்டுவிட்டுப் பாடுகிறான்.


திரைப்படம்: சாரங்கதாரா
பாடலாசிரியர்: ஏ. மருதகாசி
இசை: ஜி. ராமநாதன்
பாடியோர்: : டி.எம். சௌந்தரராஜன்
ஆண்டு: 1958

வசந்த முல்லை போலே வந்து
அசைந்து ஆடும் பெண்புறாவே
வசந்த முல்லை போலே வந்து
அசைந்து ஆடும் பெண்புறாவே
மாயமெலாம் நானறிவேனே
வா வா ஓடி வா!

வசந்த முல்லை போலே வந்து
அசைந்து ஆடும் பெண்புறாவே
மாயமெலாம் நானறிவேனே
வா வா ஓடி வா!
வசந்த முல்லை போலே வந்து
அசைந்து ஆடும் பெண்புறாவே

இசையினில் மயங்கியே இன்புறும் அன்பே வா
ஆஆஅ ஆ ஆஆஅ ஆ ஆஆஅ ஆ ஆஆஆஆஆ
இசையினில் மயங்கியே இன்புறும் அன்பே வா
ஈடில்லா உன்னையே என் மனம் நாடுதே
ஈடில்லா உன்னையே என் மனம் நாடுதே

வசந்த முல்லை போலே வந்து
அசைந்து ஆடும் பெண்புறாவே
மாயமெல்லாம் நானறிவேனே
வா வா ஓடி வா!
வசந்த முல்லை போலே வந்து
அசைந்து ஆடும் பெண்புறாவே

சிந்தனை விருந்தாகி ஜீவியக் கனவாகி
விந்தைகள் புரிந்தாய் நானறியாமலே
சிந்தனை விருந்தாகி ஜீவியக் கனவாகி
விந்தைகள் புரிந்தாய் நானறியாமலே
மந்திரக் கண்ணாலே தந்திர வலை வீசும்
சுந்தர வடிவே உன் துணை காணவா!
மந்திரக் கண்ணாலே தந்திர வலை வீசும்
சுந்தர வடிவே உன் துணை காணவா!
இந்திர வில் நீயே சந்திர ஒளி நீயே!
இந்திர வில் நீயே சந்திர ஒளி நீயே!
ஈடில்லா உன்னையே என் மனம் நாடுதே
ஈடில்லா உன்னையே என் மனம் நாடுதே

வசந்த முல்லை போலே வந்து
அசைந்து ஆடும் பெண்புறாவே
மாயமெல்லாம் நானறிவேனே
வா வா ஓடி வா!
வசந்த முல்லை போலே வந்து
அசைந்து ஆடும் பெண்புறாவே