வெள்ளி, 26 பிப்ரவரி, 2016

கண்ணுக்கு குலமேது?

தினம் ஒரு பாடல் - 18 பிப்பிரவரி 2016

அரசியல் என்பது ஒரு சாக்கடை என்பது இந்தியாவில் மட்டுமல்ல, உலகெங்கிலும் அவ்வாறே நடைமுறையில் உள்ளது என்பதை அறிந்தால் நாம் எளிதில் நம்ப மாட்டோம் ஆனால் உண்மை அதுவேயாகும். உலக அரசியல் இந்திய அரசியலை விடவும் மிகவும் மோசமான பாதையில் செல்கிறது. மனித உயிர்களை வைத்து விளையாடுகின்றனர் அரசியல்வாதிகளும் அவர்களது ஊழல்களுக்கு உறுதுணையாய் நின்று உலக மக்கள் கடுமையாய் உழைத்து ஈட்டிய பொன் பொருளைக் கொள்ளையடிக்கும் வர்த்தக நிறுவனங்களும். மருந்துகள் எனும் பெயரில் விஷத்தை மனிதர்களின் உடலுக்குள் செலுத்தி வியாதிகள் வரச் செய்து பல தனியார் மருத்துவமனைகளில் சென்று சிகிச்சை பெறும் நிலைக்குத் தள்ளுகின்றனர். இதற்கு வசதியாகவே அரசு மருத்துவ மனைகள் போதிய மருத்துவ வசதியோ, மருத்துவர்களோ, உரிய மருந்துகளோ, முறையான நடைமுறையோ இல்லாது செயல்படும் நிலையை உருவாக்குகின்றனர் அரசியல்வாதிகள். அரசு மருத்துவ மனையில் சேர்ந்தால் உயிர் பிழைப்பது நிச்சயமல்ல எனத் தெரிகின்ற நிலையில் மக்கள் வேறு வழியின்றி உயிரைக் காப்பாற்றிக் கொள்ளத் தனியார் மருத்துவ மனைகளை நாடுகின்றனர். முக்காலே மூணு வீசம் தனியார் மருத்துவ மனைகளில் வசூலிக்கும் கட்டணம் சாமான்ய மக்களால் செலுத்த இயலாத அளவுக்கு அநியாயமாக உயர்த்தப்பட்டுள்ள நிலையில் பலர் போதிய மருத்துவ உதவி பெற இயலாத நிலையில் உயிர் விடும் கொடுமைகள் தினந்தோறும் நடந்து கொண்டிருந்த போதிலும் அதைப் பற்றி எந்த செய்தி நிறுவனங்களும் போதிய அக்கரை செலுத்தாமையால் மருத்துவத் துறையில் நிகழும் அநீதிகள் மக்களுக்குத் தெரியாமலே போய் விடுகின்றன.

சுற்றுப்புறச் சூழலைத் தூய்மையாக வைத்திருக்க வேண்டி மக்களிடம் வீட்டு வரி, சாலை வரி, குடிநீர் வரி, சுகாதார வரி எனப் பலவித வரிகளைத் தொடர்ந்து வசூல் செய்து சேர்த்த நிதியை அதற்குரிய பணியில் செலவிடாமல் குப்பை கூளங்கள் தெருக்களெங்கும் கொட்டிக் கிடக்க, சாக்கடைகள் அடைபட்டிருக்க, குடிநீருடன் சாக்கடை கலக்க, ஆற்று மணல் கொள்ளை போகவும் ஆற்று நீர் வற்றவும், ஆற்று நீரில் ஆலைக் கழிவு நீர் தடையின்றிக் கழிக்கவும் வகை செய்து மக்களின் வரிப்பணத்தையும் விழுங்கி ஏப்பம் விட்டு மேலும் நோய் நொடிகள் பரவ வகை செய்து அவ்வழியிலும் தனியார் மருத்துவ மனைகளையே மக்கள் மீண்டும் மீண்டும் நாடிச் செல்லும் நிலையை உருவாக்கும் விதத்திலேயே மாநில மத்திய அரசுகள் செயல்படுகின்றன. பலவிதமான கவர்ச்சிகரமான திட்டங்கள் அறிவிக்கப் பட்டாலும் அவற்றில் எவையும் நிறைவேற்றப் படுவதில்லை. மாறாகத் தேர்தல் வருகின்ற சமயத்தில் இலவசத் தொலைக்காட்சி, இலவச மிக்சி, இலவச மடிக்கணிணி, இலவசக் குடிநீர், இலவச மருந்துகள் எனப் பலவிதமாக மக்கள் உயிர்வாழ இலவசங்களை நம்பும் நிலைக்கு அனைவரையும் பிச்சைக் காரர்களை விடவும் கேவலமான நிலையில் வைத்து அவர்களது பொன்னான வாக்குகளை விலைக்கு வாங்கி மீண்டும் மீண்டும் ஆட்சிப் பொறுப்பில் எவ்வாறாயினும் அமர்ந்து விடுகின்றனர் ஊழல் அரசியல்வாதிகள். மக்களும் வேறு மாற்றில்லாமையால் மாறி மாறி ஊழல் அரசியல்வாதிகளையே தேர்ந்தெடுக்கும் கட்டாயத்தில் வைக்கப்பட்டு வாழ வழி தெரியாமல் உழல்கின்றனர். ஏதோ தங்கள் அப்பன் பாட்டன் சேர்த்து வைத்த பரம்பரைச் சொத்துக்களிலிருந்து தானதருமம் வாரி வழங்குகிற பாவனையில் மக்களிடமிருந்து வசூலிக்கும் வரிப் பணத்தின் ஒரு பகுதியை இலவசங்களுக்குச் செலவழித்து வள்ளல்கள் போன்றதொரு பிரமையை ஏற்படுத்திக்கொண்டு காசுக்கு ஜே போடும் கூட்டமொன்றின் துணையுடன் பவனி வருகின்றனர் ஊழல் அரசியல்வாதிகள். 

மக்கள் ஒற்றுமையாக இருக்க இயலாத நிலையையும் சாதி மத பேதங்களைத் தூண்டிவிட்டு உருவாக்கி விடுகின்றனர் நம் அரசியல்வாதிகள். அதனால் மக்கள் சிதறுண்டு கிடக்கையில் காசுக்கு ஓட்டுக்கள் வாங்குவது அரசியல்வாதிகளுக்கு எளிதாய் விடுகிறது. இதனுடன் சாராயமும் தண்ணீர் போலத் தாராளமாக அரசாங்கத்தாலேயே விற்கப்படுகிறது நம் தமிழ்த் திரு நாட்டில். பொழுது விடிந்தவுடன் கால்கள் தாமாகவே நம் குடிமக்களை சாராயக் கடைகளுக்கு இட்டுச் செல்கின்றன. தாம் உழைத்து சம்பாத்தித்த பணத்துடன் வீட்டில் மனைவியும் குழந்தைகளும் வேலை செய்து சம்பாதிக்கும் தொகையையுமே இவர்கள் சாராயம் வாங்கச் செலவழிக்கின்றனர். இந்த அரசியல்வாதிகள் எத்தனை கோடிகள் பணம் சேர்த்தாலும் சேர்த்த பணத்தை அனுபவிக்க அவர்கள் நீண்ட காலம் வாழ்வதில்லை. நோய் நொடிகள் அவர்களையும் விட்டு வைப்பதில்லை. இவ்வாறு தானும் வாழாமல் பிறரையும் வாழவிடாமல் மிருகங்களினும் கேவலமாக உயிர்வாழ்வோர் இழிவானவர்களே.

ஔவையார் சொல்கிறார்

சாதி இரண்டொழிய வேறில்லை சாற்றுங்கால்
நீதிவழுவா நெறிமறையின் மேதினியில்
இட்டார் பெரியார் இடாதார் இழிகுலத்தோர்
பட்டாங்கில் உள்ள படி.

என்று.

அதாவது தான் நேர்மையாக உழைத்து ஈட்டிய பொருளைக் கஷ்டப்படும் பிறருக்குக் கொடுத்து உதவுவோர் பெரியார். கொடுக்காமல் எல்லாம் தனக்கென வாழ்வோர் இழிகுலத்தோர் என்கிறார். 

நம் பாரத நாட்டின் பழம் பெரும் காவியங்களில் ஒன்று மஹாபாரதம். அதில் கூறப்படும் நிகழ்ச்சிகள் அனைத்தையும் அனைவரும் ஏற்றுக்கொள்ளாவிடினும் அக்காவியம் வாழ்க்கையின் பரிமாணங்களை விளக்கி நமக்குப் பல் நீதி நெறிகளை எடுத்துரைக்கிறது என்பது யாரும் மறுக்க முடியாத உண்மையாகும். அக்கதையில் குந்திதேவி எனும்ஒரு இளம் பருவப்பெண் துருவாச மகரிஷி தங்கள் அரண்மனைக்கு வரும் போது அவருக்கு மிகுந்த பக்தியுடன் விருந்தோம்பலைச் செய்யவே மனம் மகிழ்ந்த மகரிஷி அவளுக்கு ஒரு மந்திரத்தை உபதேசிக்கிறார். அம்மந்திரத்தைக் கூறி அவள் எந்த தெய்வத்தை அழைத்தாலும் அத்தெய்வம் பிரத்தியக்ஷமாகித் தன் அம்சமுள்ள புத்திர்ப்பேற்றை அவளுக்குக் கொடுக்கும் என ஆசீர்வதிக்கிறார். அவள் அம்மந்திரத்தை சோதித்துப் பார்க்கும் ஆவலில் வானத்தில் பிரகாசிக்கும் சூரிய பகவானை நோக்கி அம்மந்திரத்தை உச்சரிக்கவே சூரியன் வந்து அவளுக்குஒரு ஆண் பிள்ளையைக் கொடுக்கிறான். பிள்ளையைப் பெற்றெடுத்த குந்திதேவி பழிக்கஞ்சி அக்குழந்தையை அழகிய ஒரு பேழையில் வைத்து மூடி நதியில் விட்டு விடுகிறாள். குழந்தையை திருதராஷ்டிர மன்னனின் தேரோட்டி எடுத்து கர்ணன் எனப் பெயர் சூட்டி வளர்க்கிறான். கர்ணன் பெரிய வீரனாக வளர்ந்த போதிலும் அவன் ஒருதேரோட்டி மகன் ஆனதால் அருஜ்ஜுனனுடன் சமமாக யுத்தம் செய்ய யோக்கியதையற்றவன் என பீஷ்மரும், துரோணரும், பாண்டவர்களும் அவனை அவமதிக்கையில் திருதராஷ்டிர மன்னனின் மகன் துரியோதனன் கர்ணனைத் தான் அங்கேயே அங்க தேசத்து அரசனாக முடி சூட்டி வைக்கிறான். அவையினரின் மத்தியில் தான் பட்ட அவமானத்தைத் துடைத்து கௌரவம் கொடுத்த துரியோதனனிடம் கர்ணன் நட்புக் கொள்கிறான். இடையில் கர்ணன் வேறொரு சிற்றரசனின் மகளை சந்தித்துக் காதல் கொள்ளவே துரியோதனனும் அவன் மனைவியும் அச்சிற்றரசனைக் கண்டு அவன் பெண்ணைக் கர்ணனுக்கு மண முடிக்கின்றனர். கர்ணன் ஒரு தேரோட்டி மகன் எனத் தெரிய வரவும் பெண்ணைக் கொடுத்த சிற்றரசன் தன் பெண்ணைக் கணவன் வீட்டுக்கு அனுப்பாமல் கர்ணனை அவன் குலத்தைச் சொல்லி அவமானப் படுத்துகிறான். மனம் புண்ணாகித் தன் அரண்மனைக்குத் திரும்பும் கர்ணனுக்கு ஒரு இன்ப அதிர்ச்சி, அங்கே அவன் மனைவி வந்திருக்கிறாள். அவள் அவன் மனதைத் தேற்றி அவன்ஒரு கொடையாளி, எனவே பிறரை விட மேலானவன், வீரமானவன் என அவனது மனதில் இருக்கும் சோகத்தை மாற்றுகிற வகையில் அமைந்த பாடல் இன்றைய பாடலாக அமைகிறது.

சாதிகள் இல்லையடி பாப்பா குலத்
தாழ்ச்சி உயர்ச்சி சொல்லல் பாவம்
நீதி உயர்ந்த மதி கல்வி அன்பு
நிறைய உடையவர்கள் மேலோர்

எனும் மஹாகவி பாரதியாரின் உணர்ச்சி மிகும் அறிவுரைகளை செவி மடுப்போம். சாதிச் சண்டையை ஒழிப்போம். சாதி மதச் சண்டையை வளர்த்து அரசியல் ஆதாயம் தேடும் தருக்கர் கூட்ட்டத்தைத் தமிழகத்தில் கால் பதிய வைக்க மாட்டோம் எனும் உறுதியுடன் தமிழ் மக்கள் யாவரும் ஒன்று பட்டு வாழ்வோம், உயர்வோம், நாட்டை உயர்த்துவோம். தமிழனென்று சொல்லித் தலை நிமிர்ந்து நிற்போம்.


திரைப்படம்: கர்ணன்
இயற்றியவர்: கவிஞர் கண்ணதாசன்
இசை: மெல்லிசை மன்னர்கள் எம்.எஸ். விஸ்வநாதன், டி.கே. ராமமூர்த்தி
பாடியவர்: P. சுசீலா

கண்ணுக்கு குலமேது?
கண்ணுக்கு குலமேது கண்ணா கருணைக்கு இனமேது?
கண்ணுக்கு குலமேது கண்ணா கருணைக்கு இனமேது?
கண்ணுக்கு குலமேது? 
விண்ணுக்குள் பிரிவேது கண்ணா?
விண்ணுக்குள் பிரிவேது கண்ணா? விளக்குக்கு இருளேது?

கண்ணுக்கு குலமேது கண்ணா கருணைக்கு இனமேது?
கண்ணுக்கு குலமேது?

பாலினில் இருந்தே ஆ..ஆ..ஆ..ஆ..
பாலினில் இருந்தே நெய் பிறக்கும் கண்ணா
பரம்பொருள் கண்டே உயிர் பிறக்கும்
வீரத்தில் இருந்தே குலம் பிறக்கும் அதில்
மேலென்றும் கீழென்றும் எங்கிருக்கும்?

கண்ணுக்கு குலமேது கண்ணா கருணைக்கு இனமேது?
கண்ணுக்கு குலமேது?

கொடுப்பவர் எல்லாம் ஆ..ஆ..ஆ..ஆ..
கொடுப்பவர் எல்லாம் மேலாவர் கையில்
கொள்பவர் எல்லாம் கீழாவார்
தருபவன் இல்லையோ கண்ணா நீ
தருமத்தின் தாயே கலங்காதே
தருமத்தின் தாயே கலங்காதே

கண்ணுக்கு குலமேது கண்ணா கருணைக்கு இனமேது?
கண்ணுக்கு குலமேது?