ஞாயிறு, 20 அக்டோபர், 2013

உன்னையறிந்தால் நீ உன்னையறிந்தால்

நாம் அனைவரும் வாழ்வில் வெற்றி பெற விழைந்து முயற்சிக்கிறோம் என்றாலும் வாழ்வின் நோக்கம் என்ன என்பதை நாம் அறிவதில்லை. வாழ்வின் ரகசியமும் நமக்குத் தெரியாது, ஆனால் நாம் ஒவ்வொருவரும் எல்லாம் தெரிந்த ஞானி போல் பிறருக்கு அறிவுரை வழங்கத் தயங்குவதில்லை. முற்றும் துறந்த ஞானியர் போல் வேடந்தரித்த பலரும் மனித சமுதாயத்தில் கலந்து மற்றவர்களை ஞான மார்க்கத்தில் இட்டுச் செல்ல முயற்சி செய்வதாகக் கூறிக்கொண்டு தாமும் பொருள் ஒன்றையே தேடி அஞ்ஞானத்தில் உழல்கின்றனர். இத்தகைய மாந்தர்கள் தம் வாழ்வில் ஒரு நாளும் வெற்றி பெறுவதில்லை. எவ்வளவு பொருள் சேர்த்த போதிலும் அவ்வாறு சேர்த்த பொருளைக் கொண்டு அவர்களும் பயனடைவதில்லை பிறரும் பயனடைய அனுமதிப்பதில்லை. தங்கள் வாழ்நாளை வீணாளாக்கி மடிகின்றனர் இத்தகைய வேடதாரிகள்.

வாழ்க்கை என்றோ ஒரு நாள் தொடங்கி என்றோ ஒரு நாள் முடிவதல்ல. வாழ்க்கை நம் பிறப்புக்கு முன்னரும் இருந்தது. நம் இறப்புக்குப் பின்னரும் நிச்சயம் இருக்கும். அதில் எவ்வித மாற்றமுமில்லை, காரணம் உலகில் ஆக்கம் அழிவு என்பன யாவும் மாயத் தோற்றங்களே. விஞ்ஞான ரீதியாகவும் இவ்வுண்மை நிரூபிக்கப் பட்டு அறிஞர்கள் அனைவராலும் ஒப்புக்கொள்ளப்பட்டதாகும். ஞானமும் விஞ்ஞானமும் ஆத்மாவின் சக்தியால் பெறப்படுபவை, அழியாத் தன்மையவை, இப்பிறவியில் நாம் கொண்ட உடலோடு நாம் அடைந்த ஞானமும் விஞ்ஞானமும் அழிவதில்லை வரும் பிறவியில் நாம் இப்பிறவியிலடைந்த ஞானத்தை மூலதனமாகக் கொண்டு மேலும் விருத்தியடைய வாய்ப்புள்ளது. ஞான மார்க்கத்தின் உச்சமாவது தன்னையறிதல். அதன் லக்ஷணம் பரோபகாரம். தன்னையறிந்த ஞானி பிறரைப் போல் பொருளிலும் அநித்தியமான உறவுகளிலும் சிற்றின்பத்திலும் மனதைச் செலுத்தித் துயருறுவதில்லை, மாறாக ஞானத்தை அடைய விரும்பியும் வழி தெரியாமல் தவிக்கும் மற்றவர்க்கு ஞான மார்க்கத்தைக் காட்டி வழிநடத்துவார். அது மட்டுமின்றி உலகில் பல வகைகளிலும் துயருறும் உயிர்களுக்கு உதவிப் பிறரது துயர் துடைப்பதையே தம் வாழ்வின் லட்சியமாகக் கொள்வார். அதே லட்சியப் பாதையில் தன் அன்பர்களையும் வழிநடத்திச் செல்வார். 

பண்டைய புராணங்களில் இடம்பெற்ற பல மாமுனிவர்கள் மட்டுமின்றி புத்தர், ஏசு, காந்தி முதலான சரித்திர புருஷர்களும் வாழ்ந்த வாழ்க்கையை அறிகையில் மெய்ஞானிகளின் தன்மையும் செயல்பாடும் நமக்குத் தெளிவாகப் புரியும். வாழ்வில் நாம் வெற்றி பெற வேண்டுமெனில் முதலில் நாம் யாரென்று அறிய வேண்டும். அதற்கு முதற்கண் ஐம்புலன்களால் அனுபவிக்கும் இன்ப துன்பங்களில் மதிமயங்கி மனம் பேதலிக்காமல் தெளிவான அறிவு பெற்றுத் திகழ வேண்டும். நாம் யாரென்று நாம் அறிகையில் நாம் இவ்வுலகத்து வாழ்வில் ஏற்படும் அனைத்து சூழ்நிலைகளிலும் போராடி வெற்றி பெறலாம்.

உன்னையறிந்தால் நீ உன்னையறிந்தால்

திரைப்படம்: வேட்டைக் காரன்
இயற்றியவர்: கவிஞர் கண்ணதாசன்
இசை: கே.வி. மஹாதேவன்
பாடியவர்: டி.எம். சௌந்தரராஜன்

உன்னையறிந்தால் நீ உன்னையறிந்தால்
உலகத்தில் போராடலாம்
உயர்ந்தாலும் தாழ்ந்தாலும் தலை வணங்காமல் நீ வாழலாம்
உன்னையறிந்தால் நீ உன்னையறிந்தால்
உலகத்தில் போராடலாம்
உயர்ந்தாலும் தாழ்ந்தாலும் தலை வணங்காமல் நீ வாழலாம்

மானம் பெரியதென்று வாழும் மனிதர்களை 
மானென்று சொல்வதில்லையா? தன்னைத் 
தானும் அறிந்து கொண்டு ஊருக்கும் சொல்பவர்கள்
தலைவர்கள் ஆவதில்லையா? 
மானம் பெரியதென்று வாழும் மனிதர்களை 
மானென்று சொல்வதில்லையா? தன்னைத் 
தானும் அறிந்து கொண்டு ஊருக்கும் சொல்பவர்கள்
தலைவர்கள் ஆவதில்லையா?

ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்

உன்னையறிந்தால் நீ உன்னையறிந்தால்
உலகத்தில் போராடலாம்
உயர்ந்தாலும் தாழ்ந்தாலும் தலை வணங்காமல் நீ வாழலாம்

லரலார லரலார லரலாராரி லாராரிரார 

மாபெரும் சபைகளில் நீ நடந்தால் உனக்கு
மாலைகள் விழ வேண்டும் ஒரு
மாற்றுக் குறையாத மன்னவன் இவனென்று
போற்றிப் புகழ வேண்டும்
மாபெரும் சபைகளில் நீ நடந்தால் உனக்கு
மாலைகள் விழ வேண்டும் ஒரு
மாற்றுக் குறையாத மன்னவன் இவனென்று
போற்றிப் புகழ வேண்டும்

ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்

உன்னையறிந்தால் நீ உன்னையறிந்தால்
உலகத்தில் போராடலாம்
உயர்ந்தாலும் தாழ்ந்தாலும் தலை வணங்காமல் நீ வாழலாம்

ஹூ ஹூ ஹூ ஹூ

சங்கீத சௌபாக்யமே

இப்பிறவி நமக்கு இறைவன் கொடுத்த வரம் ஆகும். எனவே நாம் இவ்வாழ்க்கையைப் பயனுள்ளாதாகச் செய்ய வேண்டியது மிகவும் அவசியம். அதற்கு முதலில் நாம் நம் வாழ்வை இனிதாக அமைத்துக்கொள்ள வேண்டும். அதற்கு முதற்கண் மனதில் அமைதியும் சந்தோஷமும் என்றும் நிலைத்திருக்குமாறு நாம் நம் வாழ்நாட்களைக் கழிக்க வேண்டும். வாழ்க்கையில் வரும் இன்ப துன்பங்களில் உழன்று மனம் பேதலிக்காமல் தெளிந்த மனநிலையில் திகழ வேண்டும். இதற்கு மிகவும் உறுதுணையாக விளங்குவது இசையாகும். இசை இவ்வுலகில் எங்கணும் நிறைந்திருக்கிறது. மஹாகவி பாரதியார் முதலான புலவர்கள் இசையில் மூழ்கித் திளைத்து இன்ப வாழ்வு வாழக் கற்றுக்கொண்டதனாலேயே அவர்களால் இவ்வுலகம் உய்யும் வழியுரைக்க இயன்றதென்பது உண்மை.

கானப் பறவை கலகலெனும் ஓசையிலும்,
காற்று மரங்களிடைக் காட்டும் இசைகளிலும்,
ஆற்றுநீ ரோசை அருவி யொலியினிலும்,

நீலப் பெருங்கடலேந் நேரமுமே தானிசைக்கும்
ஓலத் திடையே உதிக்கும் இசையினிலும்,
மானுடப் பெண்கள் வளருமொரு காதலினால்
ஊனுருகப் பாடுவதில் ஊறிடுந்தேன் வாரியிலும்,
ஏற்றநீர்ப் பாட்டின் இசையினிலும்,நெல்லிடிக்குங்

கோற்றொடியார் குக்குவெனக் கொஞ்சும் ஒலியினிலும்
சுண்ண மிடிப்பார்தஞ் சுவைமிகுந்த பண்களிலும்
பண்ணை மடவார் பழகுபல பாட்டினிலும்
வட்டமிட்டுப் பெண்கள் வளைக்கரங்கள் தாமொலிக்கக்
கொட்டி யிசைத்கதிடுமோர் கூட்டமுதப் பாட்டினிலும்.

வேயின் குழலோடு வீணைமுதலா மனிதர்
வாயினிலுங் கையாலும் வாசிக்கும் பல்கருவி
நாட்டினிலுங் காட்டினிலும் நாளெல்லாம் நன்றொலிக்கும்
பாட்டினிலும் நெஞ்சைப் பறிகொடுத்தேன் பாவியேன்

என்ற பாரதியின் வரிகள் பாரதியாரின் இசையார்வத்தையும் ஞானத்தையும் விளக்குகின்றது.

இசைக்கருவிகளில் தலையாயது வீணையாகும். அதனாலேயே அதனைக் கலைமகள் கையிலிருப்பதாகக் கொண்டு போற்றுகிறோம். வீணையின் இசை கல்மனம் கொண்டோரையும் உருக வைக்கும் தன்மையதாகும். வீணை மீட்டிப் பாடுவதில் இலங்கேஸ்வரன இராவணன் வல்லவனாய்த் திகழ்ந்தான் என்பது பிரசித்தி. அவன் வீணை மீட்டிப் பாடும் போட்டியில் அகத்திய முனிவரிடம் தோற்ற பின்னர் வீணையிசைப்பதில் ஆர்வமற்று இருந்ததாக ஒரு கருத்தும் நிலவுகின்றது. இராம காவியத்தை முழுமையாகப் படம் பிடித்துத் தமிழ் மக்கள் யாவரும் கண்டு மகிழும் வண்ணம் சிறப்புற அமைந்த சம்பூர்ண இராமாயணம் திரைப்படத்தில் ஒரு காட்சி, அதில் இராவணனில் அரசவையில் வீணை மீட்டிப் பாட அனுமதி கேட்டு ஒரு இசைக்கலைஞன் வருகிறான். அவன் பாட்டு மிக இனிமையாக இருந்த போதிலும் வீணை மீட்டுவதில் போதிய பயிற்சியின்மையால் அவன் கச்சேரி களைகட்டுவதில்லை. அதைத் தொடர்ந்து இராவணன் வீணை மீட்டிப் பாட வேண்டுமென அவனது சகோதரர்களும், அமைச்சர்களும் அவனது பட்டத்து ராணி மண்டோதரியும் வேண்டுகின்றனர். இராவணனாக வேடமேற்று பழம் பெரும் நடிகர் டி.கே. பகவதி நடித்துள்ளார். இராவணன் பாடுவதாக அமைந்த அப்பாடலை இன்றைய பாடலாக சமர்ப்பிக்கிறேன்.


சங்கீத சௌபாக்யமே
சங்கீத சௌபாக்யமே என்றும் குன்றாத பெரும் பாக்யமே
சங்கீத சௌபாக்யமே என்றும் குன்றாத பெரும் பாக்யமே
சங்கீத சௌபாக்யமே 

மங்காத ஸ்வர ஞானம் ஆஆஆஆஆஆஆ ஆஆஆஆஆஆ

ஸ் ஸ்நிஸ் ரிரிஸ் ஸ்நிஸ் ரிஸ்நிதபத
நீஸ்தாநி மாதகாமகரிஸ் ககமமததநிநி ஸ்ஸ்ரிமக்

மங்காத ஸுர ஞானம் மாறாத லய ஞானம்

தீம் தகிட தகதிமி ததிமி தகிட
தாங்கிடதரிகிட தாங்கிடதரிகிட தா தாங்கிடதக தரிகிடதக

மங்காத ஸுர ஞானம் மாறாத லய ஞானம்
மாசின்றி உறவாடும் ஆனந்த மயமான
சங்கீத சௌபாக்யமே என்றும் குன்றாத பெரும் பாக்யமே
சங்கீத சௌபாக்யமே 

காலங்களைக் குறித்துப் பாடும் ராகங்களைக் கேட்கப் பிரியப் படுகிறோம். தயவு செய்து பதிலும் இசை ரூபமாகவே வர விரும்புகிறோம். காலையில் பாடும் ராகம் என்னவோ?

ஆஆஆஆஆஆ ஆஆஆஆஆஆ
பபக பதத பபக பதாப கபததப கதபத ஸ்ரிகபஸ்நித பூபாளம்

உச்சி வேளை ராகம்?

மபததபம ரிகமரீஸ்நித பாமதாப நிநிதப ரிகமமரிரி ஸநி சாரங்கா

மாலையில் பாடும் ராகம்?

ஸ்ஸ் நித நிநிதம கா... கமதம நிநிதம ஸ்ஸ்நித வசந்தா

குணங்களைக் குறிக்கும் ராகங்களைக் கேட்க விரும்புகிறோம். இரக்கம் பற்றிய ராகம் என்னவோ?

பாஸ்நிபமகம பதநிஸ் தபமக ரிகமக ரிபமக நீலாம்பரி

மகிழ்ச்சிக்குரிய ராகம்?

ஸ்கம பநிப மகபஸ்நிஸ்ரிநிஸ் ஸ்ஸ்ரிநி நிநிதப பபநிம பமகம தன்யாசி

யுத்த ராகம்?

ஸ்பமப மகமபம கமபம கமகஸ் தாஸ்நிஸ்
ஸ்ஸ்ஸ்ப்ப்ப் ஸ்ஸ்ஸ்க்ஸ்த மஸ்ஸ்நி பமகஸ் கம்பீரநாட்டி

பாக்களை இயற்றப் பயன்படும் ராகங்களைக் கேட்கப் பிரியப் படுகிறோம் அப்பா. வெண்பா பாடுவது எந்த ராகத்தில் இருக்க வேண்டும்?

ஸ்ஸ்நிதபமக ரிஸ்ரிக் மபதநி சங்கராபரணம்

அகவற்பாடா?

தாநித மகரிநி தநிரிக மதநிரி தோடி

யாழிசைக்கு?

மாநிதாநி மாத பாம கரிநிரி கல்யாணி

ஸ்வாமி, கயிலை நாதனை கானத்தால் கவர்ந்த ராகம்?

கா கா கமககரி ரிகரிரிஸ் ரிகரிஸ்நித பதஸ்
ரிகரிரி ஸ்ரிஸ்நி ஸ்நிபாத பதஸ்
மகரிஸ் பமகரி தபமக நிநிதப ஸ்நிதப மகபதஸ் காம்போதி
கமகம ரிகரிக ஸ்ரிஸ்ரி ஸ்ரிஸ்நிதப காம்போதி
பதநிஸ்நிதபம காம்போதி தபமக பமகரி காம்போதி

தை பொறந்தா வழி பொறக்கும்

பழையன கழிதலும் புதியன புகுதலும் வேண்டி போகிப் பண்டிகையுடன் தொடங்கும் இப்பொங்கல் திருநாள் தமிழ் மக்கள் அனைவருக்கும் நல்வாழ்வை நல்கும் விதமாக அமைய இறைவனை வேண்டுகிறேன்.


இந்திய மாநிலங்களுக்கிடையேயான நதி நீர்ப் பங்கீடு தொடர்பான பிரச்சினைகளுள் தமிழ்நாட்டுக்கும் கர்நாடக மாநிலத்துக்குமிடையே நிலவி வரும் காவிரி நீர்ப் பிரச்சினையே பெரிதென எண்ணி வந்த நிலையில் அதனை விடவும் மிகப்பெரியதான பிரச்சினையாக உருவெடுத்துள்ளது தமிழகத்துக்கும் கேரளத்துக்கும் இடையேயான முல்லைப் பெரியாறு அணைப் பிரச்சினை. பருவமழை நன்கு பெய்யும் காலங்களில் போதிய அளவு நீர் காவிரி நதியிலிருந்து தமிழக விவசாயிகளுக்குக் கிடைப்பதால் அந்த ஆண்டு காவிரிப் பிரச்சினை எழுவதில்லை. ஆனால் அதற்கு மாறாக முல்லைப் பெரியாறிலிருந்து தமிழகத்துக்குத் தண்ணீர் கிடைக்காமல் செய்ய வழி தேடுகின்றனர் கேரள அரசியல்வாதிகள். இப்பிரச்சினையில் உச்சநீதி மன்றத்தின் தீர்ப்பையும் மதிக்காமல் கேரள மாநில அரசு செயல்படுவதால் இரு மாநில மக்களிடையே தீராத பிரச்சினை உருவாக வழி வகுத்துள்ளது. ஆண்டாண்டு காலமாகத் தமிழகத்திலிருந்து சபரிமலைக்குச் செல்லும் ஐயப்ப பக்தர்கள் தாக்கப்படுகின்றனர். தமிழகத்துக்கு வரும் கேரள மக்கள் தாக்கப் படுகின்றனர். கேரளாவுக்கு வழக்கமாகத் தமிழகத்திலிருந்து கொண்டு செல்லும் உணவு முதலிய அத்தியாவசியப் பொருட்கள் செல்ல முடியாத சூழ்நிலையை உருவாக்கி இரு மாநில மக்களும் துன்புறும் நிலையை விளைவித்து வேடிக்கை பார்க்கும் அரசியல்வாதிகளின் சூழ்ச்சியை இரு மாநில மக்களும் உணர வேண்டும்.

முன்பிருந்தது போலவே இரு மாநில மக்களும் சகோதர பாவனையுடன் பழகவும் தமிழக விவசாயிகளுக்குத் தொடர்ந்து முல்லைப் பெரியாறிலிருந்து நீர் கிடைத்து விவசாயம் செழித்து இரு மாநில மக்களும் தவறாது பயன் பெறவும் உரிய சூழ்நிலை உருவாக வேண்டும்.

ஆற்று மணல் கொள்ளை தடுக்கப் படல் வேண்டும். அதனால் ஏற்படும் நிலத்தடி நீர்க் குறைபாடு நீங்க வேண்டும். ஆலைக் கழிவுகளால் நதி நீர் மாசுபடுவது தடுக்கப் பட வேண்டும். சிறிது காலத்திற்கு முன்பு வரை இருந்தது போல் சுத்தமான குடிநீர் நதிகளிலிருந்தும் கிணறுகளிலிருந்தும் மக்கள் அனைவருக்கும் தடையின்றிக் கிடைக்க வழி ஏற்பட வேண்டும். விவசாயிகளது விளைநிலங்கள் செயற்கை உரங்களாலும், பூச்சிக் கொல்லி மருந்துகளின் பாதிப்பாலும் நச்சுத் தன்மையடைவது தடுக்கப் பட்டுப் பண்டைய இயற்கை விவசாய முறையை அனைத்து விவசாயிகளும் நடைமுறைப்படுத்தி விளைச்சல் பெருக வழி ஏற்பட வேண்டும்.

விவசாயிகள் கடன் சுமையாலும், இடைத்தரகர்களினால் ஏற்படும் வருவாய் இழப்பாலும் வருந்தும் நிலை மாற வேண்டும். உழைப்பவர் உயரும் நிலை வர வேண்டும். மத்தியிலும் மாநிலத்திலும் நல்லாட்சி நிலவ வேண்டும். மக்கள் யாவரும் எல்லா வளங்களும் குறைவின்றி நிறையப் பெற்று சுகவாழ்வு வாழ வேண்டும். விலைவாசிகள் குறைய வேண்டும். நம் வருங்கால சந்ததிகள் இவ்வுலகில் நாம் வாழ்ந்ததை விடவும் அதிக வசதிகளோடும் மகிழ்ச்சியோடும் ஒற்றுமை உணர்வுடன் நீளாயுள் பெற்று வாழ வேண்டும்.

பொங்கல் திருநாள் எல்லாருக்கும் எல்லா நலன்களையும் அருளப் பிரார்த்திப்போம்.

அருட் பேராற்றல் கருணையினால் உடல் நலம் நீளாயுள், நிறை செல்வம் உயர் புகழ் மெய்ஞானம் ஓங்கி வாழ்க!  அருட் பேராற்றல் இரவும் பகலும், எல்லா நேரங்கலிலும், எல்லா இடங்கலிலும், எல்லாத் தொழில்களிலும், 
உறுதுணையாகவும், பாதுகாப்பாகவும், வழி நடத்துவதாகவும் அமையுமாக! 

வாழ்க வையகம்! வாழ்க வளமுடன்!
 


திரைப்படம்: தை பிறந்தால் வழி பிறக்கும்
இயற்றியவர்: ஏ. மருதகாசி
இசை: கே.வி. மஹாதேவன்
பாடியோர்: டி.எம். சௌந்தரராஜன், பி. சுசீலா

தை பொறந்தா வழி பொறக்கும் தங்கமே தங்கம்
தங்கச் சம்பா நெல் விளையும் தங்கமே தங்கம்
தை பொறந்தா வழி பொறக்கும் தங்கமே தங்கம்

ஆடியிலே வெதை வெதைச்சோம் தங்கமே தங்கம்
ஐப்பசியில் களையெடுத்தோம் தங்கமே தங்கம்
கார்த்திகையில் கதிராச்சு தங்கமே தங்கம்
கார்த்திகையில் கதிராச்சு தங்கமே தங்கம்
கழனியெல்லாம் பொன்னாச்சு தங்கமே தங்கம்

தை பொறந்தா வழி பொறக்கும் தங்கமே தங்கம்
தங்கச் சம்பா நெல் விளையும் தங்கமே தங்கம்
தை பொறந்தா வழி பொறக்கும் தங்கமே தங்கம்

கன்னியரின் மனசு போலே தங்கமே தங்கம்
கல்யாணமாகுமடி தங்கமே தங்கம் ஆமா
கன்னியரின் மனசு போலே தங்கமே தங்கம்
கல்யாணமாகுமடி தங்கமே தங்கம்
வண்ண மணி கைகளிலே தங்கமே தங்கம்
வண்ண மணி கைகளிலே தங்கமே தங்கம் ஆமா
வளையல்களும் குலுங்குமே தங்கமே தங்கம்

தை பொறந்தா வழி பொறக்கும் தங்கமே தங்கம்
தங்கச் சம்பா நெல் விளையும் தங்கமே தங்கம்
தை பொறந்தா வழி பொறக்கும் தங்கமே தங்கம்

சுத்தச் சம்பா நெல்லு குத்தி தங்கமே தங்கம்
முத்ததிலே சோறு பொங்கி தங்கமே தங்கம்
குத்து வெளக்கேத்தி வச்சு தங்கமே தங்கம்
குத்து வெளக்கேத்தி வச்சு தங்கமே தங்கம்
கொண்டாடி மகிழ்ந்திடுவோம் தங்கமே தங்கம்

தை பொறந்தா வழி பொறக்கும் தங்கமே தங்கம்
தங்கச் சம்பா நெல் விளையும் தங்கமே தங்கம்
தை பொறந்தா வழி பொறக்கும் தங்கமே தங்கம்

உள்ளத்திலே உரம் வேணுமடா

வாழ்க்கை என்பது ஒரு போராட்டம். அதில் நாமெல்லோரும் நம்மையறியாமல் தள்ளப்பட்டுள்ளோம். இங்கே தனது இலக்கு எது என்பதைத் தெளிவாக உணர்பவன் வெற்றியடைகிறான். இலக்கில்லாமல் இன்ப நாட்டம் கொண்டு அலைபவன் தோல்வியடைகிறான். ஒவ்வொருவரும் தன் வாழ்வின் இலக்கை நிர்ணயிக்கையில் அது ஒரு மாபெரும் வெற்றியைத் தேடித்தருவதாக அமைத்துக்கொள்தல் அவசியம். அத்தகைய வெற்றி தன் ஒருவருக்கு மட்டுமின்றித் தன்னைச் சேர்ந்த பலருக்கும் ஏனைய சமுதாயத்தினருக்கும் நன்மை பயப்பதாக அமையுமாகில் அது புகழைத் தேடித் தருகிறது. பிறரது நலன் கருதாமல் தனது சுகம் ஒன்றை மட்டுமே கருதி நிர்ணயிக்கப்படும் இலட்சியம் புகழைத் தராது மாறாகப் பிறர் நம்மை இகழ்ந்து வெறுத்தொதுக்கும் நிலையை ஏற்படுத்தக்கூடும். உதாரணத்துக்கு மருத்துவத் துறையில் ஆராய்ச்சி செய்யும் ஒருவர் தன் ஆராய்ச்சியின் வாயிலாகப் புதிய மருந்தொன்றைக் கண்டுபிடிக்கையில் அம்மருந்து சொற்ப செலவிலோ இலவசமாகவோ உலகிலுள்ள மக்கள் அனைவருக்கும் பயன்படுமானால் அவர் அடையும் புகழுக்கு அளவேயில்லை. மாறாகத் தன் கண்டுபிடிப்பு பெரும் தொகை செலவழித்து மருத்துவ சிகிச்சை பெற முன்வருவோர்க்கு மட்டுமே பயன் பட்டு அதனால் பெரும் செல்வம் ஈட்ட அவர் முற்படுவாரெனில் அவர் பொருள் ஒன்றைத் தவிர வேறு எவ்விதப் பயனையும் அடைய மாட்டார், புகழையும் அடையார்.

இலக்கை நிர்ணயித்த பின்னர் அதனை அடையப் பாடுபட வேண்டும். எந்த ஒரு உன்னத இலட்சியத்தையும் ஒருவர் அடைய முயல்கையில் ஏனைய அனைவரும் அவருக்கு உறுதுணையாயிருப்பர் என்பதற்கு எவ்வித உத்தரவாதமுமில்லை. மாறாக அவர் தனது இலட்சியத்தை அடைய விடாமல் அவரது முயற்சிகளுக்கு முட்டுக் கட்டை போட்டு அவரைத் தோல்விப்பாதையில் செலுத்தப் பலர் முற்படக்கூடும். அவரது முயற்சியை எள்ளி நகையாடி அவமரியாதை செய்யக்கூடும். அத்தகைய தீய சக்திகளின் முயற்சிகளுக்கு பலியாகாமல் தன் இலட்சியப் பாதையில் தொடர்ந்து செல்லஒருவர்க்கு மிகவும் இன்றியமையாதவை உள்ளத்துறுதியும் உண்மை உழைப்பும் அனைவரிடமும் கொள்ளும் ஒற்றுமை உணர்வுமே ஆகும்.

மெய்வருத்தம் பாரார் பசிநோக்கார் கண்டுஞ்சார்
எவ்வெவர் தீமையு மேற்கொள்ளார் - செவ்வி
அருமையும் பாரா ரவமதிப்புங் கொள்ளார்
கருமமே கண்ணாயி னார்

எனும் குமரகுருபரர் நீதி நெறி விளக்கப் பாடல் தரும் அறிவுரைகளை மனதில் நிலைநிறுத்தித் தன் முயற்சியை என்றும் கைவிடாது தொடர்ந்து தன் இலட்சியப் பாதையில் பயணம் செய்பவர் வெற்றியடைவது உறுதி.

உள்ளத்திலே உரம் வேணுமடா

திரைப்படம்: விஜயபுரி வீரன்
இயற்றியவர்: கே. ஆத்மநாதன்
இசை: டி.ஆர். பாப்பா
பாடியவர்: ஏ.எம். ராஜா

உள்ளத்திலே உரம் வேணுமடா
உள்ளத்திலே உரம் வேணுமடா
உண்மையிலே திறம் காணுமடா
ஒற்றுமையால் வெற்றி ஓங்குமடா

உள்ளத்திலே உரம் வேணுமடா
உள்ளத்திலே உரம் வேணுமடா
உண்மையிலே திறம் காணுமடா
ஒற்றுமையால் வெற்றி ஓங்குமடா

வல்லவன் போலே பேசக்கூடாது
வானரம் போலே சீறக்கூடாது
வல்லவன் போலே பேசக்கூடாது
வானரம் போலே சீறக்கூடாது
வாழத் தெரியாமலே கோழைத்தனமாகவே
வாலிபத்தை விட்டு விடக் கூடாது
வாழத் தெரியாமலே கோழைத்தனமாகவே
வாலிபத்தை விட்டு விடக் கூடாது

மானம் ஒன்றே பிரதானமென்றே
மறந்து விடாதே வாழ்வினிலே
மானம் ஒன்றே பிரதானமென்றே
மறந்து விடாதே வாழ்வினிலே

உள்ளத்திலே உரம் வேணுமடா
உள்ளத்திலே உரம் வேணுமடா
உண்மையிலே திறம் காணுமடா
ஒற்றுமையால் வெற்றி ஓங்குமடா

வண்டியும் ஒரு நாள் ஓடத்திலேறும்
ஓடமும் ஒரு நாள் வண்டியிலேறும்
வண்டியும் ஒரு நாள் ஓடத்திலேறும்
ஓடமும் ஒரு நாள் வண்டியிலேறும்
ஏட்டுச் சுரைக்காயெல்லாம் மூட்டை கட்டியாகணும்
நாட்டினிலே வீரம் பொங்கும் நாள் வரணும்
ஏட்டுச் சுரைக்காயெல்லாம் மூட்டை கட்டியாகணும்
நாட்டினிலே வீரம் பொங்கும் நாள் வரணும்

மானம் ஒன்றே பிரதானமென்றே
மறந்து விடாதே வாழ்வினிலே
மானம் ஒன்றே பிரதானமென்றே
மறந்து விடாதே வாழ்வினிலே

உள்ளத்திலே உரம் வேணுமடா
உள்ளத்திலே உரம் வேணுமடா
உண்மையிலே திறம் காணுமடா
ஒற்றுமையால் வெற்றி ஓங்குமடா

உள்ளத்திலே உரம் வேணுமடா
உள்ளத்திலே உரம் வேணுமடா
உண்மையிலே திறம் காணுமடா
ஒற்றுமையால் வெற்றி ஓங்குமடா

இன்பக் கனா ஒன்று கண்டேன்

மாயா உலகிலே மனம் மயங்கி மதி கலங்கி எதற்கெடுத்தாலும் வாடுவதும் வருந்துவதுமாக ஓயாத் துயர்பட்டு உழலும் மானுடர்களே! தேக சம்பத்தால் விளைந்த ஆணவமெனும் தொழுநோய் பிடித்தும் தேம்பியலையும் மனதைத் தேற்ற வழி தெரியாமல் துயருறும் நம் துன்பங்கள் யாவும் நீக்கி இன்பமெய்த வழி ஒன்றே ஆகும். அதுவே தெய்வபக்தி. நான் என்பதும் நீ என்பதும் எனது உனதென்பதும் அறியாமையால் விளையும் பொய்த் தோற்றங்களே என்பதை உணர்ந்தால் இவ்வுலகில் உள்ள பொருட்களாலும் ஐம்புலன்களால் நாம் அடையும் சிற்றின்பங்களாலும் மயங்காமல் உள்ளத் தெளிவுபெற்று உய்யலாம். அழியும் உடல்களைத் தாங்கி ஆணவத்தாலழியும் மானுடரிடம் மெய்யன்பை எதிர்பார்த்து ஏமாற்றமடையாமல் அழியா மெய்ப்பொருளான ஆண்டவனைச் சரணடைந்து அவன் மேல் அன்பு கொண்டு அவன் அருள் மழையில் நனைந்து மகிழ்வதே பேரின்பமாகும். 

கோதை ஆண்டாள் பிள்ளைப் பிராயத்திலேயே கண்ணன் மேல் அளவிலா அன்பு கொண்டு அவனையே தன் மணாளனாக வரித்தாள். அவனுக்கு தினமும் தன் கைகளாலேயே அழகிய மலர் மாலைகளைத் தொடுத்து, அதனை அவன் அணியுமுன்னர் தான் அணிந்து மகிழ்ந்து அவன் நாமமதே மூச்சாக வாழ்ந்திருந்து அவனை அடைந்து அவனுடன் ஐக்கியமாகி மாயையிலிருந்து விடுபட்டு இறைநிலையெய்தினாள். தேவர் தலைவன் மகள் தெய்வயானையும் மலைக்குறமகள் வள்ளியும் முருகனையே மணாளனாக அடையவேண்டித் தவம் புரிந்து அவனை மணமுடித்து அவனோடு இரண்டறக் கலந்து தெய்வநிலையெய்தினர். 

பண்டைத் தமிழ்ப்புலவர்கள் இத்தகைய இறைக்காதலில் பெண்களைக் காதலியாகவும் இறைவனைக் காதலனாகவும் வைத்துத் தம் காவியங்களைப் படைத்தனர். மஹாகவி பாரதியார் இந்நிலையிலிருந்து மாறுபட்டு ஆணைக் காதலனாகவும் இறைவியைக் காதலியாகவும் வைத்துக் கவிதைகள் புனைந்தார். 

திருமணப் பருவமெய்திய ஒவ்வொருவரும் தனக்கு அமையவிருக்கும் வாழ்க்கைத் துணையை எண்ணிக் கனவு காண்பது இயல்பேயாயினும் அக்கனவுகளில் அடையும் சுகம் மிகவும் சொற்பமானதே. ஆனால் அந்த தெய்வத்தையே மணாளனாக வரித்த இப்பெண்டிர் காணும் கனவோ பேரின்பம் தரவல்லது என்பதை யாரும் சொல்லித் தெரிய வேண்டியதில்லை. இறைவன் அருள் பெற்று ஆட்கொள்ளப் படும் ஒருபக்தையின் பரவச நிலைக்கு ஈடு இணை கிடையாது. அவள் எய்தும் இன்பத்துக்கு அளவும் முடிவும் கிடையாது. என்றென்றும் நிலையான இன்பநிலை பெற விரும்புவோர் செய்யத்தக்கது இறைவனைச் சரணடைதல் ஒன்றாயாகும். இறைவன் மேல் கொள்ளும் காதலால் விளையும் இன்பம் தேக சம்பந்தம் உள்ளதல்ல, அது ஆன்மா ஆண்டவனுடன் ஐக்கியமாகும் நிலையாகும். அழகன் முருகன் மேல் ஆசை வைத்த ஒரு பக்தை பாடுவதாக அமைந்த பாடலொன்று இன்றைய பாடலாக மலர்கிறது.


இயற்றியவர்: கு.சா. கிருஷ்ணமூர்த்தி
பாடியவர்: எம்.எம். தண்டபாணி தேசிகர்

இன்பக் கனா ஒன்று கண்டேன்
இன்பக் கனா ஒன்று கண்டேன் பாங்கி
இன்பக் கனா ஒன்று கண்டேன் பாங்கி
என்னுளம் மகிழ்வு கொண்டேன் என் பாங்கி
இன்பக் கனா ஒன்று கண்டேன் பாங்கி
என்னுளம் மகிழ்வு கண்டேன் என் பாங்கி
இன்பக் கனா ஒன்று கண்டேன்

தென்பழனி ஊரன் சேவற்கொடிக் காரன்
தென்பழனி ஊரன் சேவற்கொடிக் காரன்
என்னுயிர்க் காதாரன் இரவில் எனையடைய
என்னுயிர்க் காதாரன் இரவில் எனையடைய

இன்பக் கனா ஒன்று கண்டேன்

பன்னிரு தோளழகும் பரந்த விழியழகும்
மின்னொளி வேலழகும் மேனியழகும்
பன்னிரு தோளழகும் பரந்த விழியழகும்
மின்னொளி வேலழகும் மேனியழகும் காதல்
கன்னல் மொழியழகும் களிற்றின் நடையழகும்
கன்னல் மொழியழகும் களிற்றின் நடையழகும்
பொன்மயில் தன்னழகும் புன்னகையின் அழகும்
பொன்மயில் தன்னழகும் புன்னகையின் அழகும்

இன்பக் கனா ஒன்று கண்டேன் பாங்கி
என்னுளம் மகிழ்வு கொண்டேன் என் பாங்கி
இன்பக் கனா ஒன்று கண்டேன்

தென்றல் மலர் மணத்தை வாரியிறைத்தெங்கும்
திங்கள் நடந்ததென்தன் தேகம் சிலிர்த்தது
தென்றல் மலர் மணத்தை வாரியிறைத்தெங்கும்
திங்கள் நடந்ததென்தன் தேகம் சிலிர்த்தது
அன்றிற் பேடோடு நடம் ஆடிக்களித்த போது
அன்றிற் பேடோடு நடம் ஆடிக்களித்த போது
ஆறுமுகன் வந்தென்னை அணைந்து சுகித்ததைப் போல்
ஆறுமுகன் வந்தென்னை அணைந்து சுகித்ததைப் போல்

இன்பக் கனா ஒன்று கண்டேன்

முன்னர் யான் கண்டறியா மோகக் கிளர்ச்சி பல
மூண்டது என்னுள்ளத்தில் முற்றும் எனை மறந்தேன்
முன்னர் யான் கண்டறியா மோகக் கிளர்ச்சி பல
மூண்டது என்னுள்ளத்தில் முற்றும் எனை மறந்தேன்
உன்னைக் கைவிடேன் என்றோர் உறுதிமொழியும் தந்தான்
உன்னைக் கைவிடேன் என்றோர் உறுதிமொழியும் தந்தான்
ஒப்பிவிட்டேன் நானினி தப்பிதம் ஏதுமுண்டோ?
ஒப்பிவிட்டேன் நானினி தப்பிதம் ஏதுமுண்டோ?

இன்பக் கனா ஒன்று கண்டேன்

அன்புடன் பேசி என்னை அணைத்துப் பிடித்திழுத்தான்
அதரம் கனிய முத்தம் அமுதமெனக் கொடுத்தான்
அன்புடன் பேசி என்னை அணைத்துப் பிடித்திழுத்தான்
அதரம் கனிய முத்தம் அமுதமெனக் கொடுத்தான்
துன்பம் பிறப்பிறப்பு சோர்வுமில்லாதொழித்தான்
துன்பம் பிறப்பிறப்பு சோர்வுமில்லாதொழித்தான்
தோகையே இதன் பயன் சொல்லடி நீயறிந்தால்
தோகையே இதன் பயன் சொல்லடி நீயறிந்தால்

இன்பக் கனா ஒன்று கண்டேன் பாங்கி
என்னுளம் மகிழ்வு கொண்டேன் என் பாங்கி
இன்பக் கனா ஒன்று கண்டேன்

எத்தனை எத்தனை இன்பமடா

உலகிலுள்ள ஜீவராசிகளுள் மிகவும் உயர்ந்தவர்கள் மனிதர்கள் எனவும் மனிதர்கள் ஆறறிவு படைத்தவர்கள் எனவும் நாம் பெருமிதம் கொள்கிறோம், ஆனால் நாம் வாழும் முறையும் நடந்துகொள்ளும் விதமும் அதற்கு ஏற்றாற்போல் உள்ளனவா என்று சிந்தித்துப் பார்க்கையில் நமக்குள்ளே ஐயம் எழுகிறது, உண்மையிலேயே  நாம் ஆறறிவு படைத்தவர்களா என. சிற்றெரும்புகள் சாரை சாரையாகச் சென்று உணவு எங்கிருந்தாலும் அதைத் தம் மறைவான இருப்பிடத்துக்குக் கொண்டு சேர்க்க ஒன்று சேர்ந்து உழைக்கின்றன. பகிர்ந்துண்டு வாழ்கின்றன. நம்மில் அனேகர் தினமும் காலையில் காக்கைகளுக்கு உணவளித்த பின்னரே உண்கிறோம். அவ்வாறு நாம் அளிக்கும் உணவைக் காக்கைகள் தன் இனத்தைக் காகா என்று கூவியழைத்து ஒன்று சேர்ந்து உண்கின்றன. ஏனைய பிற உயிரினங்களும் இவ்வாறே உணவைத் தம் இனத்துடன் சேர்ந்து உண்கின்றன. நாம் என்ன செய்கிறோம்?

 நெற்றி வியர்வை நிலத்தில் விழப் பாடுபட்டு உழைத்து மனித குலத்தவர்க்கு உணவை உற்பத்தி செய்யும் விவசாயிகளின் விளைபொருட்களை மிகவும் குறைந்த விலைக்கு இடைத் தரகர்கள் மூலம் வாங்கி அவற்றைப் பத்து மடங்கு விலைக்கு சந்தையில் விற்கிறோம். விவசாயிகளின் வயிற்றில் அடிக்கிறோம். அவர்கள் தம் விளைநிலங்களை விற்கத் தூண்டி அந்நிலங்களை அழிக்கிறோம். நாட்டையும் நாட்டு மக்களையும் காக்க்கவென்று நாம் தேர்ந்தெடுக்கும் அரசியல்வாதிகள் தம் கடமையை மறந்து சுயநலம் பேணுவதையும் தாம் மட்டும் பெரும்பொருள் சேர்த்து வாழ நாட்டு மக்களை வறுமையில் வாடவிட்டுப் பின் அவர்களைப் பிச்சையெடுக்கும் நிலைக்குத் தள்ளுவதற்கொப்பாக இலவச அரிசி என்றும் ஏழைகள் மறுவாழ்வு  பெற உதவுகிறோம் என்று நலத்திட்ட உதவிகள் எனும் பெயரில் மேலும் கொள்ளையடித்து விலைவாசியை ஏற்றி சமுதாயத்தை சீர்குலைக்கின்றனர். 

முறையாக ஆட்சி நடைபெற்றால் அனைவருக்கும் கல்வியும், வேலை வாய்ப்பும், மருத்துவ உதவியும் தவறாது கிடைக்கும் எனும் நிலையிருக்கையில் சாதி மதங்களின் பெயரால் இட ஒதுக்கீடு எனப் பாகுபாடு செய்து மக்களிடையே ஒற்றுமை குலையக் காரணமாகும் அரசியல்வாதிகளின் சூழ்ச்சியை உணராமல் நாம் நம்முள்ளே சண்டை செய்து வேற்றுமையை வளர்க்கிறோம்.

இவ்வுலகில் இல்லாததொன்றில்லை. இயற்கை வளங்கள் எல்லாம் நமக்கே சொந்தம். அவற்றை முறையாகப் பகிர்ந்துண்டு வாழ்வோமெனில் அனைவருக்கும் வாழ்க்கைக்குத் தேவையான அனைத்தும் உறுதியாகக் கிடைக்கும் என்பதை உணராமல் நாம் ஒவ்வொருவர் பெயரிலும் சொத்து சேர்க்கவும் பிறரை விட வசதியான வாழ்வு வாழவும் மட்டும் பாடுபடுகிறோம். இத்தகைய சுயநல முயற்சிகளில் மனதைச் செலுத்தி இயற்கை வளங்கள் அழிக்கப்படுவதைக் கண்டும் காணாமல் வாழ்கிறோம். பதவியிலிருப்பவர்கள் ஆற்று மணலை தினமும் அள்ளிச் சென்று நிலத்தடி நீர் வற்றச் செய்வதும் ஆறுகள் வற்றிப் போகச் செய்வதும் கண்கூடாகத் தெரிந்தும் நாம் இத்தகைய முறைகேடுகளைத் தடுக்க ஒன்று சேர்ந்து போராடுவதில்லை. 

இறைவன் நமக்கு அளித்துள்ள இன்பங்களை அனுபவிக்காமல் நம்மிடம் இல்லாததை நினைத்து ஏங்குவதும் வாழ்நாளை வீணாக்கி நம்மை நாமே துன்புறுத்திக் கொள்வதுடன் பிறரையும் துன்பத்துக்குள்ளாக்குவதும் நம் அறிவுக்கு அழகல்லவே. உலகைக் காக்க நம்மாலியன்றதைச் செய்தோமெனில் நமது தேவைகள் தானாகவே பூர்த்தியாகும் எனும் உண்மையை அனைவரும் உணர்ந்து சுயநலம் விடுத்து எல்லோரும் ஒன்றுபட்டு உலக நலக் கருதி உழைத்து உயர்வதே ஆறறிவு படைத்த மனிதகுலத்துக்குப் பெருமை சேர்க்கும்.

பகுத்துண்டு பல்லுயி ரோம்புதல் ஆன்றோர்
தொகுத்தவற்றுள் எல்லாம் தலை.


திரைப்படம்: ஆசை முகம்
இயற்றியவர்: கவிஞர் வாலி
இசை: எஸ்.எம். சுப்பையா நாயுடு
பாடியவர்: பி.பி. ஸ்ரீநிவாஸ்

எத்தனை எத்தனை இன்பமடா இவை
எல்லாம் உனக்கே சொந்தமடா
எத்தனை எத்தனை இன்பமடா இவை
எல்லாம் உனக்கே சொந்தமடா

மரம் படைத்தான் ஒரு கொடி படைத்தான் அந்த
மரத்தைத் தழுவி அதைப் படர வைத்தான் படர வைத்தான்
மரம் படைத்தான் ஒரு கொடி படைத்தான் அந்த
மரத்தைத் தழுவி அதைப் படர வைத்தான்
மலர் படைத்தான் நறுமணங் கொடுத்தான் அதில்
வடியும் தேனையும் உனக்களித்தான்
மலர் படைத்தான் நறுமணங் கொடுத்தான் அதில்
வடியும் தேனையும் உனக்களித்தான்

எத்தனை எத்தனை இன்பமடா இவை
எல்லாம் உனக்கே சொந்தமடா

உன்னைப் படைத்தான் ஒரு பெண்ணைப் படைத்தான் காதல்
உறவு கொள்ளவும் வழிவகுத்தான் வழிவகுத்தான்
உன்னைப் படைத்தான் ஒரு பெண்ணைப் படைத்தான் காதல்
உறவு கொள்ளவும் வழிவகுத்தான்
பொன்னைப் படைத்தான் பல பொருள் படைத்தான் இந்த
பூமியில் சொர்க்கம் காண வைத்தான்
பொன்னைப் படைத்தான் பல பொருள் படைத்தான் இந்த
பூமியில் சொர்க்கம் காண வைத்தான்

எத்தனை எத்தனை இன்பமடா இவை
எல்லாம் உனக்கே சொந்தமடா

கண் கொடுத்தான் நீ காண்பதற்கு பல
காட்சி தந்தான் கண்டு களிப்பதற்கு களிப்பதற்கு
கண் கொடுத்தான் நீ காண்பதற்கு பல
காட்சி தந்தான் கண்டு களிப்பதற்கு
மனங் கொடுத்தான் ஒன்றை நினைப்பதற்கு நல்ல
மதி கொடுத்தான் எண்ணிப் பார்ப்பதற்கு
மனங் கொடுத்தான் ஒன்றை நினைப்பதற்கு நல்ல
மதி கொடுத்தான் எண்ணிப் பார்ப்பதற்கு

எத்தனை எத்தனை இன்பமடா இவை
எல்லாம் உனக்கே சொந்தமடா

ஆஹஹஹாஹஹா ஆஹஹஹா ஓஹோ 
ஹோஹொஹோஹொஹோ ம்ஹ்ம்ஹ்ம்ஹ்ம்

அன்பினாலே உண்டாகும் இன்பநிலை

இவ்வுலக வாழ்வு அநித்தியமானது, வாழ்வில் நாம் ஈட்டுபவை, இழப்பவை யாவும் அநித்தியமானவை, இன்று போனால் நாளை வரலாம், இன்று வந்திடில் நாளை மறையலாம், ஆனால் அன்பும் பாசமும் நித்தியமானவை, என்றும் நிலைத்திருப்பவை, நம் வாழ்வை இன்பமயமாக்குபவை. இவ்வுலகில் யாரும் தனக்கென மட்டுமே வாழ்தல் சாத்தியமில்லை. பஞ்சமா பாதகங்கள் புரிந்து பலரையும் வருத்தி வாழும் கொடியோரும் தமக்கென யாரேனும் சிலரிடமாவது அன்பும் பாசமும் கொண்டிருப்பர் என்பது நிதர்சனமான உண்மை, ஆயினும் பலருக்கு அநீதியிழைத்து சிலரிடம் அன்பு செலுத்துவோர் காணும் இன்பம் முழுமையானதாக இருக்காது. அவர்களுக்கு என்றென்றும் ஏதேனும் மனக்குறைகள் இருந்துகொண்டே இருக்கும். எதைக் கொண்டும் திருப்தியடையாமல் எந்நாளும் கவலையிலே மூழ்கியிருப்பார்கள் இத்தகைய குறைகுணத்தோர். 

வாழ்வை முழுமையாக அனுபவிக்கத் தெரிந்தவர்களே முக்தியடையும் தகுதியைப் பெறுகின்றனர். முக்தி என்பது எந்நிலையிலும் ஆத்ம திருப்தியோடு அமைதியாகத் திகழும் நிலை. முக்தி பெற ஒவ்வொருவரும் தொடர்ந்து முயற்சி செய்தாலே முடியும். கண்களை மூடிக்கொண்டு சில மணித்துளிகள் தியானம் செய்வதால் மட்டுமே முக்தியை அடைந்துவிட முடியாது. வாழ்நாள் உள்ளளவும் ஒவ்வொரு நொடியுலும் நாம் எண்ணும் எண்ணங்கள், செய்யும் செயல்கள், பேசும் பேச்சுக்கள், அறியும் விஷயங்கள் அனைத்தும் எவ்விதத்திலும் நம் மனதையோ பிறர் மனங்களையோ புண்படுத்தா வண்ணம் அமைந்திருப்பது அவசியம். அப்பொழுது அமைதி நிலைபெறும். அறிந்தோ அறியாமலோ நாம் பிறரது மனதைப் புண்படுத்த நேருமாயின் கூடிய விரைவில் நம் தவறுக்கு வருந்தி மன்னிப்புக் கோருவதே உயர்ந்த பண்பாகும். 

பெரும் செல்வந்தரான ஒரு நிலச்சுவான்தார் தன் நிலத்தில் நெடுங்காலமாக நல்ல விளைச்சல் இல்லாமல் அவதிப்படுகையில் அவரது ஜோதிடர் கூறிய அறிவுரைப்படி திருவிடைமருதூர் சிவன் கோவிலில் ஒருயாகம் செய்தார் ஆனால் ஆணவத்தினால் அவர் அந்த யாகத்தில் கலந்து கொண்ட முதியவர் ஒருவரது மனதைப் புண்படுத்தி விட்டார். ஆயினும் தான் செய்தது தவறு என்று அவர் அறியவில்லை. யாகம் முடிந்த பின்னர் அவர் பிரசாதத்தினை எடுத்துக்கொண்டு காஞ்சி பரமாச்சார்யாரிடம் சென்றார். பரமாச்சார்யார் அவர் செய்த பாபத்தைச் சுட்டிக்காட்டிப் பரிகாரம் தேடும் படி அறிவுறுத்தவே தான் செய்த தவற்றை உணர்ந்த அவர் தன்னால் அவமானப் பட்ட பெரியவரிடம் மன்னிப்பு வேண்டிப் பெறும் நோக்கத்துடன் அப்பெரியவர் இருக்கும் ஊருக்குச் சென்ற சமயம் அப்பெரியவர் இவ்வுலகை விட்டே சென்ற நிலையில் ஈமச் சடங்குகள் நடைபெறுவதைக் கண்டு மனம் புழுங்கினார். அதன் பின்னர் தான் ஈட்டிய பொருளனைத்தையும் தான தருமங்கள் செய்து வாழ்ந்தார். இருப்பினும் அவரது மனக்கவலை என்றும் நீங்கவேயில்லை.


பிற உயிர்களிடம் அன்பு செலுத்துவோம், குடும்பத்தாரை அரவணைத்துச் செல்வோம், உற்றார் உறவினருடன் ஒன்றுபட்டு வாழ்வோம், நண்பர்களுடன் இயன்ற பொழுதெல்லாம் கலந்து மகிழ்வோம். துன்பப்படுவோர்க்கு நம்மால் இயன்ற உதவிகளை செய்வோம். அகந்தையை அகற்றி அன்பும் பாசமும் மேலோங்க இன்புற்று வாழ்ந்து தன்னிறைவு பெறுவோம்.

உலகமெலாம் பருவமழை ஒத்தபடி பெய்யட்டும்!
உழவரெலாம் தானியத்தை உவப்புடனே பெருக்கட்டும்!
பல தொழில்கள் புரிகின்ற பாட்டாளி உயரட்டும்!
பகுத்துணர்வில் தொகுத்துணர்வு பண்பாட்டைப் பெருக்கட்டும்!கலகங்கள் போட்டிபகை கடந்தாட்சி நடக்கட்டும்!
கல்லாமை,கடன்,வறுமை களங்கங்கள் மறையட்டும்!
நல வாழ்வை அளிக்கும் மெய்ஞ்ஞான ஒளி வீசட்டும்!
நம் கடமை அற வாழ்வின் நாட்டத்தே சிறக்கட்டும்!’’
வாழ்க வையகம்! வாழ்க வளமுடன்!

அன்பினாலே உண்டாகும் இன்பநிலை


திரைப்படம்: பாசவலை
இயற்றியவர்: ஏ. மருதகாசி
இசை: எம்.எஸ். விஸ்வநாதன், டி.கே. ராம மூர்த்தி
பாடியவர்: சி.எஸ். ஜெயராமன்
ஆண்டு: 1956

அன்பினாலே உண்டாகும் இன்பநிலை அதை
அணைந்திடாத தீபமாக்கும் பாசவலை

அன்பினாலே உண்டாகும் இன்பநிலை
அன்பினாலே உண்டாகும் இன்பநிலை அதை
அணைந்திடாத தீபமாக்கும் பாசவலை
பாசவலை பாசவலை
அன்பினாலே உண்டாகும் இன்பநிலை

சொந்தமெனும் உறவுமுறை நூலினாலே
சொந்தமெனும் உறவுமுறை நூலினாலே - அருட்
ஜோதியான இறைவன் செய்த பின்னல் வேலை
பாசவலை பாசவலை - அருட்
ஜோதியான இறைவன் செய்த பின்னல் வேலை
பாசவலை பாசவலை

அன்பினாலே உண்டாகும் இன்பநிலை

கொஞ்சுமொழி குழந்தைச் செல்வம் நிறைந்ததாலே ஏ...
கொஞ்சுமொழி குழந்தைச் செல்வம் நிறைந்ததாலே நல்ல
குலவிளக்காய் மனைவி வந்து அமைந்ததாலே நல்ல
குலவிளக்காய் மனைவி வந்து அமைந்ததாலே
தம்பி தமையன் ஒன்று சேர்ந்து வாழ்வதாலே
தம்பி தமையன் ஒன்று சேர்ந்து வாழ்வதாலே
சம்சாரத்திலே எந்த நாளும் மனசு போலே

அன்பினாலே உண்டாகும் இன்பநிலை அதை
அணைந்திடாத தீபமாக்கும் பாசவலை
அன்பினாலே உண்டாகும் இன்பநிலை