புதன், 9 ஜூலை, 2014

கடவுளும் நானும் ஒரு ஜாதி

தினம் ஒரு பாடல், ஜூன் 8, 2014

"புல்லாகிப் பூடாய்ப் புழுவாய் மரமாகிப்
பல்விருக மாகிப் பறவையாய்ப் பாம்பாகிக்
கல்லாய் மனிதராய்ப் பேயாய்க் கணங்களாய்
வல்லசுர ராகி முனிவராய்த் தேவராய்ச்
செல்லாஅ நின்றஇத் தாவர சங்கமத்துள்
எல்லாப் பிறப்பும் பிறந்திளைத்தேன் எம்பெருமான்
மெய்யேயுன் பொன்னடிகள் கண்டின்று வீடுற்றேன்.'' 

என்ற மாணிக்கவாசகரின் திருவாசகத் தீர்ப்பிலிருந்து தெரிவதென்னவெனில் மனிதப் பிறப்பெய்துமுன் நாம் ஒவ்வொருவரும் மனிதரிலும் அறிவிலும் ஆற்றலிலும் குறைந்த பல பிறப்புக்களை எடுத்துள்ளோம் என்பதே. அத்தகைய மனிதப் பிறவி பெறுதற்கரிது ஏனெனில் அறிவை வளர்த்துக்கொண்டு, பற்றுக்களைக் களைந்து பரம மெய்ஞ்ஞானம் பெற்றுப் பிறவிப் பிணி நீக்கிப் பேரின்ப வாழ்வு வாழ ஒரு வாய்ப்பை அளிப்பது மனிதப் பிறவி. 

இப்பிறவியில் மனத்தை அசுத்தப்படுத்தும் காமம், குரோதம், கோபம், லோபம் மதம், மாத்சர்யம் ஆகிய ஆறு தீய குணங்களை ஞானத் தீயால் பொசுக்கித் தவத்தால் அழிப்பவர் யாரோ அவரே மனிதப் பிறவியை அடுத்து வரக்கூடிய பேய், கணங்கள், வல்லசுரர் எனும் பாபம் நிறைந்த சபிக்கப்பட்ட பிறப்புகளை எய்தாமல் நேரடியாக முனிவராகவும் தேவராகவும் ஆக வல்லவர் ஆவார்.

தேவர் எனப்படும் கடவுளுக்குப் பிறப்பும் இல்லை இறப்பும் இல்லை. அத்தகைய இறைத் தன்மையையும் அதற்கேற்ற வல்லமையையும் இவ்வுலகில் பிறந்த ஒவ்வொருவராலும் அடைய முடியும் என்று சுவாமி விவேகானந்தர் தம் ராஜ யோகா உரையில் உறுதியாகக் குறிப்பிடுகின்றார். அத்துடன் தவம் செய்யும் வழிகள், தவம் செய்வோர் அடையத்தக்க பல்வேறு அமானுஷ்ய சக்திகள் ஆகியன பற்றியும் விவரமாகக் குறிப்பிட்டுக் காட்டுகிறார். ஒரே சமயத்தில் பல இடங்களில் தோன்றுவதும், எங்கோ வேறு ஓரிடத்தில் நடைபெறும் நிகழ்வை 
ஞானக் கண்ணால் காண்பதும், எங்கோ வெகுதொலைவில் இருக்கும் ஒருவரிடம் மனத்தால் தொடர்பு கொண்டு பேசுவதும் அத்தகைய சக்திகளுள் சிலவாகும் என்கிறார் விவேகானந்தர்.

கோயில் சுடுகாடு கொல்புலித்தோல் நல்லாடை 
தாயுமிலி தந்தையிலி தான் தனியன் காணேடீ 
தாயுமிலி தந்தையிலி தான்தனியன் ஆயிடினும் 
காயில் உலகனைத்துங் கற்பொடிகாண் சாழலோ

திருவாசகத்தின் எனும் வரிகளால் தாயும் தந்தையுமற்ற அநாதை என்று இறைவனை இகழ்வது போலப் புகழ்கிறார் மாணிக்க வாசகர். அதன் உள்ளர்த்தமாவது தாய், தந்தை, உற்றார் உறவினர் என்பவர்கள் யாவரும் நமக்கு உண்மையான சொந்தங்களல்ல, இடையில் தோன்றி மறையும் பந்தங்களே என்பதாகும். இவ்வுண்மை உணர்ந்தோரே ஞானியராகத் தகுந்தவர் ஆவர். நம்மால் இல்லறம் நடத்துகையில் முனிவர்கள் போல் தவம் செய்தல் சாத்தியமன்றெனினும். கர்மயோகம் செய்வதன் மூலம் இல்லறத்திலேயே ஞானம் எய்துதல் இயலும் என்பதை உலகுக்கு உணர்த்திய முனிவர் சனகர் ஆவார். 

ஞானமடைவதற்கு முதலில் எதற்கும் துக்கப்படும் இயல்பைக் கைவிட வேண்டும். எது வந்தாலும் ஏற்றுக்கொள்ளும் மனப்பக்குவம் அடைதல் வேண்டும். புல்லினும் அற்பமான கவலையை விடுத்து தான் வாழும் ஒவ்வொரு நிமிடமும் பேரானந்த நிலையில் லயித்திருக்க எவன் ஒருவன் பழகிக்கொள்கிறானோ அவனே ஞானியாவான்.

நம் கதாநாயகன் அத்தகைய ஒரு ஞானியாவான். படிப்பறிவற்ற அநாதையாயிருக்கையிலும் கவலையின்றிக் கை வண்டியிழுத்துக் கடவுள் தன்மையுடன் வாழ்பவன்.



திரைப்படம்: தாயில்லாப் பிள்ளை
இயற்றியவர்: கவிஞர் கண்ணதாசன்
இசை: கே.வி. மஹாதேவன்
பாடியவர்: ஏ.எல். ராகவன்

ஹாஹஹாஹா ஹாஹாஹாஹா ஹாஹஹாஹ ஹா
ஹாஹஹாஹா ஹாஹாஹாஹா ஹாஹஹாஹ ஹா

கடவுளும் நானும் ஒரு ஜாதி ஒரு ஜாதி அந்த
கௌரவம் எனக்கும் சரிபாதி
கடவுளும் நானும் ஒரு ஜாதி ஒரு ஜாதி அந்த
கௌரவம் எனக்கும் சரிபாதி
கடவுளும் நானும் ஒரு ஜாதி ஒரு ஜாதி

கடவுளைப் பெத்த அம்மா யாருன்னு
கடவுளுக்கே இன்னுந் தெரியாது 
கடவுளைப் பெத்த அம்மா யாருன்னு
கடவுளுக்கே இன்னுந் தெரியாது இந்தக்
கட்டையப் பெத்தவ யாரோ எவரோ
எனக்கும் இன்னும் புரியாது
கட்டையப் பெத்தவ யாரோ எவரோ
எனக்கும் இன்னும் புரியாது
புரியாது புரியாது புரியாது

கடவுளும் நானும் ஒரு ஜாதி ஒரு ஜாதி 

அடி விழுந்தாலும் உதை விழுந்தாலும்
கடவுள் அழுவது இல்லீங்க
அடி விழுந்தாலும் உதை விழுந்தாலும்
கடவுள் அழுவது இல்லீங்க என்ன
அடிச்சுப் பாருங்க ஒதைச்சுப் பாருங்க
நானும் அழவே மாட்டேங்க
அடிச்சுப் பாருங்க ஒதைச்சுப் பாருங்க
நானும் அழவே மாட்டேங்க
அழ மாட்டேங்க அழ மாட்டேங்க அழ மாட்டேங்க!

கடவுளும் நானும் ஒரு ஜாதி ஒரு ஜாதி

கடவுள் படித்த பள்ளிக்கூடத்த 
தேடுறேன் தேடுறேன் பல நாளா
கடவுள் படித்த பள்ளிக்கூடத்த 
தேடுறேன் தேடுறேன் பல நாளா அதக் 
காண முடியல்லே அதனால் நானும்
படிப்ப விட்டுட்டேன் சிலநாளா
காண முடியல்லே அதனால் நானும்
படிப்ப விட்டுட்டேன் சிலநாளா
சில நாளா சில நாளா சில நாளா

கடவுளும் நானும் ஒரு ஜாதி ஒரு ஜாதி அந்த
கௌரவம் எனக்கும் சரிபாதி
கடவுளும் நானும் ஒரு ஜாதி ஒரு ஜாதி

ஹாஹஹாஹா ஹாஹாஹாஹா ஹாஹஹாஹ ஹா
ஹாஹஹாஹா ஹாஹாஹாஹா ஹாஹஹாஹ ஹா