திங்கள், 23 நவம்பர், 2009

கல்வியா செல்வமா வீரமா?

"கல்வியையும் செல்வத்தையும் அடக்கிவிட்டு வீரத்திற்கே முதலிடம் கொடுக்க நினைக்கும் சூராதி சூரனே, மன்னவனும் நீயோ? வளநாடும் உனதோ? உன்னையறிந்தோ யாம் தமிழை ஓதினோம்” என்ற பாட்டைப் பாடி “எங்களுக்கெல்லாம் ஏற்கெனவே வழி காட்டியிருக்கிறான் ஒரு ஆசுகவி. உன்னைப் போல் அதிகார ஆணவம் படைத்த ஒரு அரசன் அலைகள் பாயும் கடலைக் காட்டி, தண்ணீரா, இவ்வாழியும் எனக்கடிமை என்றானாம், அதற்கு என்னைப் போல் ஒரு புலவன் உலகெலாம் உமக்கடிமை, நீரோ எமக்கடிமை என்றானாம். அம்மொழியே பொன்மொழியாகக் கொண்டு சூளுரைக்கிறேன், மண்ணும் விண்ணுமறியக் கூறுகிறேன், என் எண்ணும் எழுத்தும் அன்னை கலைவாணியைப் பாடுமேயல்லாது காக்கை கழுகு தின்னும் மனித சடலத்தைப் பாடவே பாடாது, கல்வி செல்வத்துக்கடங்காது, வீரத்திற்கடி பணியாது, உன் மிரட்டலும் நடக்காது, அப்படி மிரட்டினால் சுட்டெரிக்கும் என் சொல்லுக்கு உன் உயிரே தப்பாது"
கல்வி, செல்வம், வீரம் இவை மூன்றில் எது உயர்ந்தது என ஒரு சமயம் கலைமகள், அலைமகள், மலைமகள் மூவருள்ளும் போட்டி ஏற்பட, அவர்கள் முறையே வித்யாபதி எனு்ம் ஒரு ஊமையைப் பேச வைத்துப் புலவனாக்கியும், ஒரு பிச்சைக்காரியை செல்வாம்பிகை எனும் பெயருடன் செல்வபுரம் எனும் நாட்டுக்கு அரசியாக ஆக்கியும், ஒரு கோழையை வீரனாக ஆக்கி, வீரமல்லன் எனும் பட்டம் பெறச் செய்து, செல்வபுரத்தின் தளபதியாக ஆக்கியும் இவர்கள் மூவரையும் மோதவிட்டுத் தமது அருள் பெற்றவரே பிற அனைவரிலும் உயர்ந்தவர் என சாதிக்க முயல்கின்றனர்.

இறுதிக்கட்டத்தில் வீரமல்லன் அனைவரையும் அடக்கியாளும் நிலை பெற்று செல்வாம்பிகையையும் வித்யாபதியையும் தண்டனைக்குள்ளாக்கும் காட்சியில் வித்யாபதியாக நடிக்கும் நடிகர் திலகம் சிவாஜி கணேசன் பேசும் வசனமே மேற்கண்டது.

ஏ.பி. நாகராஜன் இயக்கிய சரஸ்வதி சபதம் எனும் இப்படத்தின் மையக்கருத்தை விளக்கும் இனிய பாடல்:

கல்வியா செல்வமா வீரமா?

இயற்றியவர்: கவிஞர் கண்ணதாசன்
இசை: கே.வி. மஹாதேவன்
பாடியவர்: டி.எம். சௌந்தரராஜன்

கல்வியா செல்வமா வீரமா? அன்னையா தந்தையா தெய்வமா?
கல்வியா செல்வமா வீரமா? அன்னையா தந்தையா தெய்வமா?
ஒன்றில்லாமல் மற்றொன்று உருவாகுமா? - இதில்
உயர்வென்றும் தாழ்வென்றும் பிரிவாகுமா?
ஒன்றில்லாமல் மற்றொன்று உருவாகுமா? - இதில்
உயர்வென்றும் தாழ்வென்றும் பிரிவாகுமா?

கல்வியா செல்வமா வீரமா?

படித்தவன் கருத்தெல்லாம் சபையேறுமா? - பொருள்
படைத்தவன் கருத்தானால் சபை மீறுமா?
படித்தவன் கருத்தெல்லாம் சபையேறுமா? - பொருள்
படைத்தவன் கருத்தானால் சபை மீறுமா?
படித்தவன் படைத்தவன் யாராயினும்
படித்தவன் படைத்தவன் யாராயினும் - பலம்
படைத்திருந்தால் அவனுக்கிணையாகுமா? - பலம்
படைத்திருந்தால் அவனுக்கிணையாகுமா?

கல்வியா செல்வமா வீரமா?

ஒன்றுக்குள் ஒன்றாகக் கருவானது - அது
ஒன்றினில் ஒன்றாகப் பொருளானது
ஒன்றுக்குள் ஒன்றாகக் கருவானது - அது
ஒன்றினில் ஒன்றாகப் பொருளானது
ஒன்றை ஒன்று பகைத்தால் உயர்வேது?
ஒன்றை ஒன்று பகைத்தால் உயர்வேது? - மூன்றும்
ஓரிடத்தில் இருந்தால் நிகரேது? - மூன்றும்
ஓரிடத்தில் இருந்தால் நிகரேது?

கல்வியா செல்வமா வீரமா?

மூன்று தலைமுறைக்கும் நிதி வேண்டுமா? - காலம்
முற்றும் புகழ் வளர்க்கும் மதி வேண்டுமா?
மூன்று தலைமுறைக்கும் நிதி வேண்டுமா? - காலம்
முற்றும் புகழ் வளர்க்கும் மதி வேண்டுமா?
தோன்றும் பகை நடுங்கும் பலம் வேண்டுமா?
தோன்றும் பகை நடுங்கும் பலம் வேண்டுமா? - இவை
மூன்றும் துணை இருக்கும் நலம் வேண்டுமா? - இவை
மூன்றும் துணை இருக்கும் நலம் வேண்டுமா?

கல்வியா செல்வமா வீரமா?

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக