புதன், 9 டிசம்பர், 2009

ஒண்ணிலே இருந்து இருபது வரைக்கும் கொண்டாட்டம்

சாதாரண மனிதனின் தேவைகளுக்கும் அவனது வருவாய்க்கும் இடைவெளி என்றுமே மிக அதிகம். "அன்றாடங்காய்ச்சி" என்று அழைக்கப்படும் ஏழை வர்க்கத்துக்கு தினமும் வயிற்றுப் பசிக்கு சோறு கிடைத்தாலே போதும் எனும் எண்ணம் இருக்கும். நடுத்தர வர்க்கத்தாருக்கு, உணவு, உடை, இருப்பிடம் உட்படப் பல விதமான செலவினங்களையும் பூர்ததி செய்ய வேண்டியுள்ளது. மேல்மட்ட வர்க்கத்தாருக்கு இருக்கும் பணம் போதாது மேலும் மேலும் பணம் ஈட்ட வேண்டுமென்னும் தேவை. இவர்களுள் நடுத்தர வர்க்கத்தார், அதிலும் குறிப்பாக மாத சம்பளத்தை நம்பி வாழ்க்கை நடத்துவோரின் நிலைமை என்றுமே தருமசங்கடமானதாகும்.

ஒவ்வொரு மாதமும் முதல் தேதி என்று வரும், கடும்பத் தலைவரின் சம்பளம் வந்தவுடன் அதை வாங்க வேண்டும், இதை வாங்க வேண்டும் என்று குடும்பத்திலுள்ள ஒவ்வொரு உறுப்பினரும் மிகவும் எதிர்பார்த்துக் காத்திருப்பதும், முதல் தேதி வந்து சம்பளம் கிடைதத பின்னர் ஒரு சில தினங்களுக்குள்ளே சம்பளத் தொகை முழுவதும் உள்ள தேவைகளைப் பூர்த்தி செய்யப் போதுமானதாக இல்லாமல் தீர்ந்து போவதும், அடுத்த மாதம் தேவையைப் பூர்த்தி செய்து கொள்ளலாம் என்று மனதைத் தேற்றிக்கொண்டு வாழ்வதும் இவர்களுக்கு சகஜமாகி விட்டது.

இவர்களுள் சிலர் பல சமயங்களில் கல்வி, மருத்துவ சிகிச்சை முதலிய எதிர்பாராத செலவினங்களினால் மிகவும் இக்கட்டான சூழ்நிலையில் சிக்கிக் கொள்வதும் சகஜமாகவே நிகழ்கின்றது.


ஒண்ணிலே இருந்து இருபது வரைக்கும் கொண்டாட்டம்


திரைப்படம்: முதல் தேதி
இயற்றியவர்: கலைவாணர் என்.எஸ். கிருஷ்ணன்
இசை: டி.ஜி. லிங்கப்பா
பாடியவர்: கலைவாணர் என்.எஸ். கிருஷ்ணன்
ஆண்டு: 1955

ஒண்ணிலே இருந்து இருபது வரைக்கும் கொண்டாட்டம்
கொண்டாட்டம் கொண்டாட்டம் தேதி
ஒண்ணிலே இருந்து சம்பள தேதி
ஒண்ணிலே இருந்து இருபது வரைக்கும் கொண்டாட்டம் - இருபத்
தொண்ணிலே இருந்து முப்பது வரைக்கும் திண்டாட்டம் - இருபத்
தொண்ணிலே இருந்து முப்பது வரைக்கும் திண்டாட்டம்
திண்டாட்டம் திண்டாட்டம் சம்பளத் தேதி
ஒண்ணிலே இருந்து இருபது வரைக்கும் கொண்டாட்டம்
கொண்டாட்டம் கொண்டாட்டம்

பண்ணிய வேலைக்குப் பலன் தருவது ஒண்ணிலே
தேதி ஒண்ணிலே - மனுஷன்
படாத பாடு படுவது இருபத்தொண்ணிலே இருபத்தொண்ணிலே
முன்னே பட்ட கடனைத் தீர்ப்பான் ஒண்ணிலே - தேதி
ஒண்ணிலே பின்னும்
மூணாம் பேஸ்து விழுந்தது போலே
முகம் சோர்ந்திடும் இருபத்தொண்ணிலே

ஒண்ணிலே இருந்து இருபது வரைக்கும் கொண்டாட்டம்
கொண்டாட்டம் கொண்டாட்டம்

தென்பழனி திருப்பதிக்கும் ஸ்ரீரங்கம் போவதற்கும்
சில்லரையைப் போட்டு வைப்பார் தேதி ஒண்ணிலே
தென்பழனி திருப்பதிக்கும் ஸ்ரீரங்கம் போவதற்கும்
சில்லரையைப் போட்டு வைப்பார் தேதி ஒண்ணிலே
அன்புடனே போட்டு வைத்த உண்டியல் வாயைக் கொஞ்சம்
அன்புடனே போட்டு வைத்த உண்டியல் வாயைக் கொஞ்சம்
அகலமாக்கி ஆட்டிப் பார்ப்பார் இருபத்தொண்ணிலே - ஆமா
தென்பழனி திருப்பதிக்கும் ஸ்ரீரங்கம் போவதற்கும்
சில்லரையைப் போட்டு வைப்பார் தேதி ஒண்ணிலே

சினிமா ட்ராமா காட்சிகளுக்கு டிக்கட் கிடைக்காதொண்ணிலே
தியேட்டர் காலி ஆளிருக்காது தேதி இருபத்தொண்ணிலே
சிகரெட் பீடி வெற்றிலை பாக்கு விற்பனை அதிகம் ஒண்ணிலே
தெருவில் எறிந்த துண்டு பீடிக்கு கிராக்கி வந்திடும் இருபத்தொண்ணிலே

கொண்டவனும் கொண்டவளும் குழந்தை குட்டியோடு
கும்மாளம் கொட்டுவது ஒண்ணிலே - தேதி ஒண்ணிலே அவர்
கூச்சல் கிளப்பிகிட்டு குஸ்திகளும் போட்டுகிட்டு
கோணிக்கொள்வார் இருபத்தொண்ணிலே - கொஞ்சம்
கோணிக்கொள்வார் இருபத்தொண்ணிலே

தம்பிகளின் வாடகை சைக்கிளோட்டம் ஒண்ணிலே
தம்பிகளின் வாடகை சைக்கிளோட்டம் ஒண்ணிலே
தரையில் நடந்து வருவார் இருபத்தொண்ணிலே
நண்பர் நடமாட்டமெல்லாம் ஒண்ணிலே
எந்த நாயும் எட்டிப் பார்க்காது இருபத்தொண்ணிலே

கொண்டாட்டந்தான் தேதி ஒண்ணிலே - பின்பு
திண்டாட்டந்தான் இருபத்தொண்ணிலே
கொண்டாட்டந்தான் தேதி ஒண்ணிலே - பின்பு
திண்டாட்டந்தான் இருபத்தொண்ணிலே

கண்ணே கலைமானே கன்னி மயிலென

நமது நாடு வெள்ளையரிடமிருந்து சுதந்திரமடைந்து 62 ஆண்டுகளாகியும் மக்களுக்கு உண்மையான சுதந்திரம் கிடைத்ததா எனில் இல்லை. ஒரு சாரார் சட்ட விரோதமான நடவடிக்கைகளில் ஈடுபட்டு, பிற மக்களைச் சுரண்டிப் பண முதலைகளாக மிக ஆடம்பரமாக வாழ்கையில் மற்றொரு சாரார் அன்றாடம் உணவுக்கே வழியின்றித் தவிக்கின்றனர். கொலை, கொள்ளை மற்றும் கற்பழிப்பு முதலான பாதகங்கள் பகிரங்கமாக அனைவரும் அறியும் வண்ணமாகவே தைரியமாக இத்தகையோரால் அனுதினமும் நடைபெறுவது சகஜமாகிவிட்டது.

பெண் விடுதலை பற்றி அந்நாளிலிருந்து இந்நாள் வரையிலும் சமுதாய அக்கரை கொண்ட பல தலைவர்கள் தொடர்ந்து
எடுத்துரைத்து, பெணகளுக்கு சமுதாயத்தில் சம உரிமை கொடுக்கவும், அவர்களை மரியாதையுடன் நடத்தவும் வேண்டி வருகின்ற போதிலும், நம் நாட்டில் பல பெண்களை ஏமாற்றி அவர்களது பெண்மையைச் சூரையாடுவதுடன் அவர்களை மாடுகளுக்கொப்பாகக் கருதி விலைமாதர்களாக விற்று விடும் கொடுமைகளும் பகிரங்கமாகப் பல நகரங்களில் தினமும் நடைபெறுவதை அரசியல் தலைவர்கள் உட்பட அனைவரும் அறிந்த போதிலும், இக்கொடுமைகளைத் தடுக்கவும் இதில் பாதிக்கப் பட்ட பெண்ணினத்தைக் காக்கவும் ஒருவரும் உரிய நடவடிக்கை எடுக்காதது வேதனைக்குரியது.

இருப்பினும் நாட்டு மக்களிடையே பல நல்ல உள்ளங்கள் ஆங்காங்கே இத்தகைய கொடுமைகளால் பாதிக்கப்பட்ட பெண்கள் பலருக்கு மறுவாழ்வளித்துக் காத்து வருகின்றனர். ஒரு விபத்தினால் மன நிலை பாதிக்கப்பட்டு தன் சுய நினைவுகளை இழந்த நிலையி்ல் விலைமாதாக விற்கப்பட்ட ஒரு அப்பாவிப் பெண்ணைக் காப்பாற்றிய நமது இன்றைய பாடலின் நாயகன் அவளைப் போற்றிப் பாதுகாத்து, அவளுக்கு உரிய மருத்துவ சிகிச்சையளிக்கச் செய்து, அவள் சுயநினைவை அடைய வழி கோலுகிறான், அவள் மேல் காதலும் கொள்கிறான். சுயநினைவடைந்த பின்னர் அப்பெண் அவனை அடையாளம் கண்டு கொண்டாளா? அவனை ஏற்றுக் கொண்டாளா?

விடை சொல்கிறது மூன்றாம் பிறை.


கண்ணே கலைமானே கன்னி மயிலென


திரைப்படம்: மூன்றாம் பிறை
இயற்றியவர்: கவியரசு கண்ணதாசன்
இசை: இளையராஜா
பாடியவர்: கே.ஜே. ஜேசுதாஸ்
ஆண்டு: 1982

கண்ணே கலைமானே கன்னி மயிலெனக்
கண்டேன் உனை நானே
கண்ணே கலைமானே கன்னி மயிலெனக்
கண்டேன் உனை நானே
அந்தி பகல் உன்னை நான் பார்க்கிறேன்
ஆண்டவனே இதைத் தான் கேட்கிறேன்
ராரிராரோ உராரிரோ ராரிராரோ உராரிரோ
கண்ணே கலைமானே கன்னி மயிலெனக்
கண்டேன் உனை நானே

ஊமை என்றால் ஒரு வகை அமைதி
ஏழை என்றால் அதில் ஒரு அமைதி
நீயோ கிளிப்பேடு பண்பாடும் ஆனந்தக் குயில் பேடு
ஏனோ தெய்வம் சதி செய்தது பேதை கோலம் விதி செய்தது

கண்ணே கலைமானே கன்னி மயிலெனக்
கண்டேன் உனை நானே
அந்தி பகல் உன்னை நான் பார்க்கிறேன்
ஆண்டவனே இதைத் தான் கேட்கிறேன்
ராரிராரோ உராரிரோ ராரிராரோ உராரிரோ

காதல் கொண்டேன் கனவினை வளர்த்தேன்
கண்மணி உன்னை நான் கருத்தினில் நிறைத்தேன்
உனக்கே உயிரானேன் எந்நாளும் எனை நீ மறவாதே
நீயில்லாமல் எது நிம்மதி நீதான் என்று என் சன்னதி

கண்ணே கலைமானே கன்னி மயிலெனக்
கண்டேன் உன்னை நானே
அந்தி பகல் உன்னை நான் பார்க்கிறேன்
ஆண்டவனே இதைத் தான் கேட்கிறேன்
ராரிராரோ உராரிரோ ராரிராரோ உராரிரோ
ராரிராரோ உராரிரோ ராரிராரோ உராரிரோ

வா அருகில் வா தா உயிரைத் தா

திரைப்படங்களுக்குத் திகில் கதை எழுதித் தாயாரிப்பதில் ஆங்கிலப் படத் தயாரிப்பாளர்கள் மிகவும் முயற்சியெடுத்து அதற்காக விசேஷமான அரிதாரம், காட்சியமைப்புகள் எனப் பல விதத்திலும் மிகவும் பாடுபட்டு, நிறைய செலவு செய்து தயாரிப்பார்கள். நம் இந்தியத் தயாரிப்பாளர்கள் மிகவும் புத்திசாலிகள். இத்தகைய அனாவசிய செலவுகளைத் தவிர்த்து, மிகவும் எளிய முறையில் இத்தகைய திகில் கதைகளை எழுதிப் படமாக்கி விடுவார்கள். இதற்கு இவர்கள் கடைபிடிக்கும் தொழில் நுட்பம் ஒரு பெண்ணுக்கு வெள்ளைச் சேலையைக் கட்டி விட்டு இரவு நேரத்தில் நிழலும் ஒளியும் கலந்த சூழ்நிலையில் நடமாட வைத்து, காட்சிக்கேற்றாற்போல் இசையமைத்து அசத்திவிடுவதே.


வா அருகில் வா தா உயிரைத் தா

திரைப்படம்: அதே கண்கள்
இயற்றியவர்: தெரிந்தால் தெரிவியுங்கள்
இசை: வேதா
பாடியவர்: பி. சுசீலா
ஆண்டு: 1967

ஆ... ஆஆஆஆ ஆ... ஆஆஆஆ

வா அருகில் வா தா உயிரைத் தா
வா அருகில் வா தா உயிரைத் தா
ஆயிரம் காலங்கள் காத்திருந்தேனே நான்
வாசலைத் தேடி வா வா வா

பெண் பாவம் உன்னைத் தொடர்ந்து வரும் - ஒரு
நிழல் போலே அது நடந்து வரும்
கண்ணீரால் விதி எழுதி வைத்தும் - என்
கதை கேட்டால் கண்ணும் கனிந்துருகும்

வா அருகில் வா தா உயிரைத் தா
வா அருகில் வா

சிறைக் கதவை ஏன் திறக்கவில்லை? - நீ
விடுதலையே கொடுக்கவில்லை
நானிருப்பேன் உன்னை நினைத்திருப்பேன்
ஒரு குரல் கொடுத்தே நிதம் அணைத்திருப்பேன்

வா அருகில் வா தா உயிரைத் தா
வா அருகில் வா

நீ இல்லாத உலகத்திலே நிம்மதி இல்லை

சிறிது காலத்துக்கு முன்னர் வரை நம் நாட்டில் பெண்கள் பெரும்பாலும் திருமணத்திற்குப் பின்னர் இல்லத்தரசிகளாகவே வாழ்ந்தனர். குடும்பத்துக்குத் தேவையான பொருளீட்டும் கடமை அவர்களது கணவன்மார்களையே சேர்ந்திருந்தது. இதற்கு முக்கியக் காரணம் கணவன் ஒருவனது வருமானத்திலேயே தங்கள் வாழ்க்கையை இனிமையாகக் கழித்து, தங்களது குழந்தைகளையும் ஆளாக்க முடிந்த நிலை நிலவியதேயாகும். பின்னர் உருவான அரசியல் சமுதாய சூழ்நிலைகளினால் விலைவாசி பரமபதப் பாம்பு போல் ஏறிய காரணத்தாலும், ஆடம்பரமாக வாழ வேண்டுமெனும் ஆசையினாலும் ஆண், பெண் இரு சாராரும் பணிக்குச் செல்வதும் திருமணமான பின்னரும் கணவன், மனைவி இருவரும் அலுவல் செய்து குடும்ப நிர்வாகத்துக்கான பொருளீட்டுவதும் வாடிக்கையாகி விட்டன. இருப்பினும் இக்காலத்திலும் பல பெண்கள் திருமணம் முடிந்த பின்னர் இல்லத்தரசிகளாக வாழ்க்கை நடத்துவதையே பெரிதும் விரும்பி ஏற்கின்றனர்.

இத்தகைய பெண்கள் தமக்குப் பிடித்த ஆண்களிடத்தில் காதல் கொண்டால் அவர்களது மனதில் எழும் எண்ணங்கள் பெரும்பாலும் தம் கணனுடன் சேர்ந்து இல்லற வாழ்வை இன்பமாகச் சுவைப்பதிலேயே இருப்பது வழக்கம். காதலித்தவனைக் கைப்பிடிக்க இயலாத சூழல் உருவானால் அத்தகைய பெண் வருத்தமுற்று வாடுவதும் பெரும்பாலும் தான் விரும்பிய ஆடவனுடன் சேர முடியவில்லையே எனும் ஏக்கத்தினாலேயே ஏற்படுகிறது.


நீ இல்லாத உலகத்திலே நிம்மதி இல்லை


படம்: தெய்வத்தின் தெய்வம்
இயற்றியவர்: கவிஞர் கண்ணதாசன்
இசை: ஜி. ராமநாதன்
பாடியவர்: பி.சுசீலா
ஆண்டு: 1962

நீ இல்லாத உலகத்திலே நிம்மதி இல்லை உன்
நினைவில்லாத இதயத்திலே சிந்தனையில்லை சிந்தனையில்லை
காயும் நிலா வானில் வந்தால் கண்ணுறங்கவில்லை
காயும் நிலா வானில் வந்தால் கண்ணுறங்கவில்லை உன்னைக்
கண்டு கொண்ட நாள் முதலாய் பெண்ணுறங்கவில்லை பெண்ணுறங்கவில்லை

உன் முகத்தைப் பார்ப்பதற்கே கண்கள் வந்தது
உன் மார்பில் சாய்வதற்கே உடல் வளர்ந்தது
கன்னி மனம் உனக்கெனவே காத்திருக்குது
கன்னி மனம் உனக்கெனவே காத்திருக்குது - இந்தக்
காவல் தாண்டி ஆவல் உன்னைத் தேடி ஓடுது தேடி ஓடுது

பொன் விலங்கை வேண்டுமென்றே பூட்டிக் கொண்டேனே - உன்னைப்
புரிந்த போது சிறையில் வந்து மாட்டிக் கொண்டேனே
இன்று நாளை என்று நாளை என்று நாளை எண்ணுகின்றேனே
இன்று நாளை என்று நாளை என்று நாளை எண்ணுகின்றேனே - நான்
என்றும் உன்தன் எல்லையிலே வந்திடுவேனே வந்திடுவேனே

நீ இல்லாத உலகத்திலே நிம்மதி இல்லை உன்
நினைவில்லாத இதயத்திலே சிந்தனையில்லை சிந்தனையில்லை