வெள்ளி, 19 பிப்ரவரி, 2016

மகராஜா ஒரு மகராணி

தினம் ஒரு பாடல் - டிசம்பர் 02, 2015

இல்லறத்தில் நல்லறத்தைப் பேணும் இணையிலா மதிப்பு மிகு சமுதாயம் நம் இந்திய சமுதாயம். நம் சமுதாய அமைப்பைச் சீர்குலைத்து நம் நாட்டை எல்லாத் துறைகளிலும் பின்தங்கிய நிலையிலேயே என்றும் வைத்திருந்து தாங்கள் லாபமடையும் நோக்கத்துடன் கட்டவிழ்த்து விடப்பட்ட அந்நிய நாட்டுக் கலாச்சாரச் சீர்கேட்டு இயந்திரங்களான பலவிதமான திரைப்படங்களும் தொலைக்காட்சி நிகழ்ச்சிகளும் மற்றும் போதை மருந்துகள், பலவிதமான மதுபான வகைகள், புகையிலையை அடிப்படையாகக் கொண்ட சிகரெட் போன்ற எவையும் நம் கலாச்சாரத்தை சீர்குலப்பதில் இதுவரை வெற்றி கண்டதில்லை. இனிமேலும் வெற்றி காணம் போவதுமில்லை. அதன் காரணம் நம் குடும்ப அமைப்பில் கணவன் மனைவி இருவரிடையே ஏற்படும் இணைபிரியாத உறவுப் பிணைப்பேயாகும்.

காதல் ஒருவனைக் கைப்பிடித்தே அவன் 
காரியம் யாவினும் கை கொடுத்தே
மாதர் அறங்கள் பழமையைக் காட்டிலும்
மாட்சி பெறச் செய்து வாழ்வமடி

என்ற பாரதியின் வரிகளுக்கிணங்கக் கணவனும் மனைவியும் ஒருவரோடொருவர் தீராப் பாசம் கொண்டு இருவரும் இணைபிரியாமல் ஆயுட்காலம் முழுவதும் எத்துணை நன்மை தீமைகள் வந்துற்ற போதும் அவையனைத்தையும் இருவரும் சேர்ந்தே எதிர்கொள்ளும் வாழ்க்கை முறையை நம் மக்கள் கடைபிடிப்பதுடன் தங்கள் வருங்கால சந்ததியினருக்கும் தமது வாழ்வின் மூலம் செயல்முறையிலேயே விளக்கி வரும் நடைமுறை நம் நாட்டின் குடும்ப அமைப்பை வலுவூட்டுகிறது. ஒரு ஆணும் ஒரு பெண்ணும் கணவன் மனைவியாகத் திருமணத்தில் ஒன்று சேர்ந்து வாழ்வைத் துவங்குகையில் இருவரும் ஒருவரிடம் மற்றவர் காணும் இன்பத்தைப் பெரிதாகக் கருதி மகிழ்ந்து இல்வாழ்வு வாழ்கின்றனர். அவ்வுறவு அப்பெண் தன் முதல் குழந்தையை வயிற்றில் சுமந்து பெறுகையில் மேலும் வலுபடுகிறது. கர்ப்பமுற்றுத் தாயாகும் நிலையில் இருக்கும் தன் மனைவியைக் கணவன் கண்ணும் கருத்துமாகப் பேணிப் பாதுகாக்கத் தொடங்குகிறான். அச்சூழலில் அப்பெண்ணுக்கு அனைத்து உறவுகளுமே அவள் கணவன் வடிவில் அமைவது நம் இல்லறத்தின் மகிமையாகும்.

குழந்தை பிறந்தவுடன் கணவனும் மனைவியும் அடையும் பேரின்பத்துக்கு ஈடிணையே கிடையாதென்பது அவ்வாறு முதல் குழந்தை பெறும் தம்பதியருக்கேயன்றி வேறு யாருக்கும் முழுமையாகப் புரியாது. அது முதற்கொண்டு அத்தம்பதியரின் முழுக் கவனமும் தங்களது குழ்ந்தையைப் பேணி வளர்ப்பதிலேயே செல்கிறது. அக்குழந்தைக்கு விதவிதமாக உடைகளும் அலங்காரங்களும் சூட்டி மகிழ்ந்து அது மழலையில் அம்மா, அப்பா என அழைத்திடும் தருணத்தை வெகு ஆவலுடன் எதிர்பார்த்துக் காத்திருப்பதில் இருக்கும் சுகமே தனி. குழந்தை முதலி அம்மா என்றோ அப்பா என்றோ அழைத்து விட்டால் அன்று குதூகலம் பொங்கி வழியும். பின் அக்குழந்தை சின்னச்சின்ன நடைநடந்து செம்பவள வாய்திறந்து அம்மா என்றழைத்துக்கொண்டு விளையாடுவதும் புதிய வார்த்தைகளைக் கற்றுக்கொள்வதும் வாழ்வின் அனுபவித்து மகிழும் காலமே. பிள்ளை சற்றே வளர்ந்து நன்கு பேசிப் பழகும் தருணத்தில் கணவன் மனைவி இருவருக்கும் மட்டுமன்றி அக்குழந்தைக்கும் அதனுடன் ஒன்றாக வளர்ந்து உறவு கொண்டாடி மகிழ் இன்னுமொரு குழந்தை வேண்டும் எனும் ஆவல் பிறக்கிறது. 

இரண்டாவது குழந்தை பெறும் ஆசை பெருகப் பெருக இல்லறத்தின் சுவை மேலும் பன்மடங்காகக் கூடுகிறது. நம் முன்னோர்கள் பழங்காலத்தில் கட்டுப்பாடின்றி அளவுக்கதிகமான பிள்ளைகளைப் பெற்றதால் அவர்களை முறையாக வளர்த்து ஆளாக்க முடியாமல் பல காலம் அவதியுற்றனர் என்பது நம்மில்  50 ஆண்டுகளைக் கடந்தவர்களுக்கு மட்டுமே நன்கு புரியும். அத்தகைய அவதியைத் தவிர்க்கவே நாட்டில் குடும்பக் கட்டுப்பாடு அமலுக்கு வந்தது. மூன்று குழந்தைகள் என்று கட்டுப் பாடு முதலில் தொடங்கித் தற்போது இரண்டு என்ற அளவில் குறைந்து சிலர் ஒன்றே ஒன்று கண்ணே கண்ணு என்ற நிலையை உருவாக்கிடப் பெரும் முயற்சி செய்து வருகின்றனர். அவ்வாறு உடன் பிறப்பே இல்லாமல் ஒரே குழந்தையாக வளரும் பிள்ளைகள் சகோதர பாசத்தை உணர மாட்டர்கள். எனவே இரண்டு குழந்தைகள் என்ற அளவில் நிறுத்திக் கொண்டு அளவான குடும்பத்துடன் மகிழ்ச்சியாக வாழ்வதே உத்தமம்.


திரைப்படம்: இரு மலர்கள்
இயற்றியவர்: கவிஞர் வாலி
இசை: எம்.எஸ். விஸ்வநாதன்
பாடியோர்: டி.எம். சௌந்தரராஜன், சதன், ஷோபா

மகராஜா ஒரு மகராணி இந்த இருவருக்கும் இவள் குட்டி ராணி
குட்டி ராணி கொக் சிக் கொக் சிக்
மகராஜா ஒரு மகராணி இந்த இருவருக்கும் இவள் குட்டி ராணி

பொங்கும் அழகில் தங்க நிலாவே தங்கச்சிப் பாப்பாவோ?
பொங்கும் அழகில் தங்க நிலாவே தங்கச்சிப் பாப்பாவோ?
புத்தம் புதிய பூச்செண்டாட்டம் புன்னகை செய்வாளோ?
புத்தம் புதிய பூச்செண்டாட்டம் புன்னகை செய்வாளோ?

அம்மா கொக் சிக் கொக் சிக்

மகராஜா ஒரு மகராணி இந்த இருவருக்கும் இவள் குட்டி ராணி

மலர்களெல்லாம் இவளுக்கென்றே மாளிகை அமைத்ததம்மா
மலர்களெல்லாம் இவளுக்கென்றே மாளிகை அமைத்ததம்மா
மாலைத் தென்றல் சொன்னதைக் கேட்கும் மந்திரி ஆனதம்மா
பூனையும் நாயும் காவல் காக்கும் சேனைகள் ஆனதம்மா
அம்மா அப்பா மடி மேல் இவளின் ராஜாங்கம் நடக்குதம்மா

அம்மா கொக் சிக் கொக் சிக்

மகராஜா ஒரு மகராணி இந்த இருவருக்கும் இவள் குட்டி ராணி

யாரது இங்கே மந்திரி? குட்டி ராணி வந்தா நீ எந்திரி
யாரது இங்கே மந்திரி? குட்டி ராணி வந்தா நீ எந்திரி
வணக்கம் வணக்கம்
வணக்கம் வணக்கம் சின்ன ராணி இங்கு
எனக்கிட்ட கட்டளை என்ன ராணி?
ஓடிப் பிடித்து விளையாட ஒரு தம்பிப் பாப்பா வேண்டும் என் கூட
ஓடிப் பிடித்து விளையாட ஒரு தம்பிப் பாப்பா வேண்டும் என் கூட
ஆகட்டும் தாயே அது போல நீங்க நினைத்ததை முடிப்பேன் மணம் போலே

இவளுக்கொரு தம்பிப் பயல் இனிமேல் பிறப்பானோ?
இளவரசன் நான் தான் என்று போட்டிக்கு வருவானோ?
ராணியம்மா மனது வைத்தால் எதுவும் நடக்குமம்மா
ராஜாவுக்கும் இது போல் ஆசை நாள் தோறும் இருக்குதம்மா

அம்மா கொக் சிக் கொக் சிக்

மகராஜா ஒரு மகராணி இந்த இருவருக்கும் இவள் குட்டி ராணி
மகராஜா ஒரு மகராணி இந்த இருவருக்கும் இவள் குட்டி ராணி