வியாழன், 21 ஜூலை, 2011

என்ன தான் நடக்கும் நடக்கட்டுமே

இவ்வுலக வாழ்வு அநித்தியம் என்பது அனைவருக்கும் பொதுவான விதி. இதில் நல்லவ்ர்க்கொரு முடிவு தீயவர்க்கு வேறு என்பதில்லை. உடலுடன் உலகில் பிறந்த அனைவரும் ஒரு நாள் மண்ணுக்கிரையாவது உறுதி. நல்லவர்க்கும் தீயவர்க்கும் கிடைக்கும் முக்கிய பலனாவது நல்லவர் இம்மண்ணுலகை விட்டு மறைந்த பின்னரும் பிறரால் அன்புடன் நினைத்துப் போற்றப்படுவர், தீயவர் தூற்றப்படுவர். முந்தைய தலைமுறையைச் சேர்ந்த மக்களில் பெரும்பாலோர் போதிய கல்வியறிவும் உலகைப் பற்றிய பொது அறிவும் பெறாதவராக விளங்கியதால் அநேகர் குறுகிய மனப்பான்மையுடன் செயல்பட்டனர். இதனால் உலகில் உள்ள நாடுகள் பலவற்றில் மக்களை அடிமைகளாக்கி ஆள்வோர் தம் சுயநலத்தையே பேணும் வகையில் ஏற்பட்ட முடியாட்சியும் வேறுவிதமான அடக்குமுறை ஆட்சியும் நிலவி இன்றளவும் தொடர்கிறது.

இந்நிலையில் இதுபோன்ற அடக்குமுறை என்றும் தொடர்ந்து நீடிக்க இயலாதெனும் உண்மையை எகிப்து நாட்டு மக்கள் உலகனைத்தும் அறியும் விதமாக நடத்திய அமைதிப் புரட்சியின் மூலம் உறுதியுடன் நிலை நாட்டியுள்ளனர். இக்கலகத்தின் ஆரம்ப நாட்களில் காவல்துறையினரின் அடக்குமுறைத் தாக்குதலில் பலர் தம் இன்னுயிரை இழந்த போதிலும் எஞ்சிய மக்கள் அனைவரும் உயிருக்கு பயந்து எங்கும் ஓடிவிடாமல் ஓரே இடத்தில் லட்சக்கணக்கில் ஒன்று கூடி எவ்வித வன்முறையிலும் ஈடுபடாது மிகவும் கட்டுப்பாட்டுடன் கொடுங்கோலன் முபாரக்கிற்கெதிராகக் குரல் கொடுத்தனர்.

உலகனைத்தும் தொலைக்காட்சிகள் வழியாகவும் இணையதளங்கள் வழியாகவும் தொடர்ந்து இப்புரட்சி குறித்த செய்திகள் அவ்வப்போது சென்றடைந்ததால் உலகில் பிற நாடுகள் யாவும் ஒரு மனதாக எகிப்து நாட்டு மக்களுக்குத் தங்கள் ஆதரவைத் தெரிவித்து வந்த நிலையில் எகிப்து நாட்டின் காவல் துறையினர் பணியில் ஈடுபடாமல் ஒதுங்கியிருந்ததால் நாட்டில் உள்ள தீயவர்கள் பலரும் பொதுமக்களின் சொத்துக்களையும் பிற பொதுச் சொத்துக்களையும் கொள்ளையடிக்கும் செயலில் ஈடுபடவே நாட்டின் இராணுவம் செயலில் இறங்கியது. இராணுவம் புரட்சியாளர்களைத் தாக்காமல் அவர்களுக்குப் பாதுகாப்பாக விளங்கி அவர்களை இடையில் தாக்கும் செயலில் ஈடுபட்ட முபாரக் ஆதரவுக் கும்பலின் அடாவடிச் செயல்களைக் கட்டுப்படுத்தியது மிகவும் பாராட்டுக்குரியது.

அன்று மஹாபாரத யுத்தம் 18 நாட்கள் நடந்தது. அந்த யுத்தத்தில் ஒரு அரச குடும்பத்தினரும் நாட்டு மக்களும் இரு கட்சிகளாகப் பிரிந்து ஒருவரையொருவர் ஆயுதங்களால் தாக்கிக் கொன்றது மட்டுமல்லாது இவர்களுடன் நட்பாக இருந்த பல நேச நாடுகளின் படைகளும் கலந்து கொண்டு பேரழிவிற்கு வித்திட்டன. இறுதியில் தருமம் வென்றதாகக் கூறப்பட்டாலும் அங்கே மகிழ்ச்சி நிலவவில்லை.

இன்று எகிப்து மக்கள் புரட்சியும் 18 நாட்கள் நடந்தது. கத்தியின்றி ரத்தமின்றி அஹிம்சை வழியில் போராடிய மக்கள் இறுதியில் இராணுவத்தின் உதவியுடன் உறுதியான வெற்றிபெற்று கொடுங்கோலன் முபாரக் நாட்டை விட்டு ஓட்டம் பிடிக்க வ்ழிவகுக்கவே, நாட்டில் முப்பது ஆண்டுகளுக்கும் மேலாக நிலவிய சோகங்கள் யாவும் மறைந்து முதல் முறையாக மகிழ்ச்சி நிலவுகிறது.

எகிப்து நாட்டில் நடந்த புரட்சியின் வெற்றியால் உற்சாகம்டைந்த பல அரேபிய நாடுகளின் மக்களும் ஒன்றன் பின் ஒன்றாக முடியாட்சி ஒழிந்து தங்களது நாடுகளிலும் ஜனநாயகம் மலர வேண்டுமென்று குரல் கொடுக்கத் துவங்கியுள்ளனர்.

நம் நாட்டில் பெயரளவில் ஜனநாயக ஆட்சி நடந்தாலும் இங்கே நீதி நிலைபெற வழியில்லாமல் ஆட்சி அமைப்புகளும் சட்டதிட்டங்களும் மிகவும் பாரபட்சமாக இருப்பதால் மக்களுக்கு நீதி எனும் பெயரில் வெறும் வாக்குறுதிகளும் எதிர்த்துக் குரல் கொடுத்தால் தேசதுரோகக் குற்றம் சாட்டப்பட்டு சிறையிலடைக்கப்படும் கொடுமையும் மட்டுமே கிடைக்கிறது. இந்நிலை விரைவில் மாறும். எகிப்து நாட்டின் இளைஞர் கூட்டம் இன்று செயல்படுத்திய அமைதிப் புரட்சியினை நம் நாட்டு இளைய தலைமுறையினர் நாளை நிச்சயமாக செயல்படுத்துவர். அவர்களை வழி நடத்திச் செல்ல ஏற்ற தலைவர்களும் இப்புரட்சியில் பங்கு கொண்டு தீயவர்களை நீதியின் முன் நிறுத்தி நன்மைகளை மக்கள் அடைய வழிவகுக்க நிச்சயம் வருவார்கள்.

என்ன தான் நடக்கும் நடக்கட்டுமே

திரைப்படம்: பணத்தோட்டம்
இயற்றியவர்: கவிஞர் கண்ணதாசன்
இசை: எம்.எஸ். விஸ்வநாதன், டி.கே. ராமமூர்த்தி
பாடியவர்: டி.எம். சௌந்தரராஜன்

என்ன தான் நடக்கும் நடக்கட்டுமே
இருட்டினில் நீதி மறையட்டுமே
தன்னாலே வெளிவரும் தயங்காதே - ஹா
என்ன தான் நடக்கும் நடக்கட்டுமே
இருட்டினில் நீதி மறையட்டுமே
தன்னாலே வெளிவரும் தயங்காதே
தலைவன் இருக்கிறான் மயங்காதே - ஒரு
தலைவன் இருக்கிறான் மயங்காதே

பின்னாலே தெரிவது அடிச்சுவடு
முன்னாலே இருப்பது அவன் வீடு
பின்னாலே தெரிவது அடிச்சுவடு
முன்னாலே இருப்பது அவன் வீடு
நடுவினிலே நீ விளையாடு
நல்லதை நினைத்தே போராடு
நல்லதை நினைத்தே போராடு - ஹா

என்ன தான் நடக்கும் நடக்கட்டுமே
இருட்டினில் நீதி மறையட்டுமே
தன்னாலே வெளிவரும் தயங்காதே
தலைவன் இருக்கிறான் மயங்காதே - ஒரு
தலைவன் இருக்கிறான் மயங்காதே

உலகத்தில் திருடர்கள் சரிபாதி
ஊமைகள் குருடர்கள் அதில் பாதி
உலகத்தில் திருடர்கள் சரிபாதி
ஊமைகள் குருடர்கள் அதில் பாதி
கலகத்தில் பிறப்பது தான் நீதி - மனம்
கலங்காதே மதி மயங்காதே
கலங்காதே மதி மயங்காதே

என்ன தான் நடக்கும் நடக்கட்டுமே
இருட்டினில் நீதி மறையட்டுமே
தன்னாலே வெளிவரும் தயங்காதே
தலைவன் இருக்கிறான் மயங்காதே - ஒரு
தலைவன் இருக்கிறான் மயங்காதே

மனதுக்கு மட்டும் பயந்து விடு
மானத்தை உடலில் கலந்து விடு
மனதுக்கு மட்டும் பயந்து விடு
மானத்தை உடலில் கலந்து விடு
இருக்கின்ற வரையில் வாழ்ந்து விடு
இரண்டினில் ஒன்று பார்த்து விடு
இரண்டினில் ஒன்று பார்த்து விடு

என்ன தான் நடக்கும் நடக்கட்டுமே
இருட்டினில் நீதி மறையட்டுமே
தன்னாலே வெளிவரும் தயங்காதே
தலைவன் இருக்கிறான் மயங்காதே - ஒரு
தலைவன் இருக்கிறான் மயங்காதே

ஆஹஹா ஆஹஹா ஓஹோஹோ ஓஹோஹோ
ம்ஹ்ம் ம்ஹ்ம் ம்ஹ்ம் ம்ஹ்ம்

யாரை எங்கே வைப்பது என்று

ஆதி கால்ம் தொட்டே உலகத்தவர் அனைவரும் கண்டு வியக்கும்படியாக எல்லா வளங்களும் நிறைந்து விளங்கிவரும் நாடு நம் பாரத நாடு. உலக நாடுகளுக்கிடையே போக்குவரத்து முதலில் கடல் வழியே துவங்கி வளர்ந்த காலத்தில் பலர் இந்தியாவுக்குக் கடல் வழியே பயணம் செய்து இந்தியாவைக் கண்டுபிடிக்க முயன்றனர். இந்தியாவைக் கண்டுபிடிக்கும் முயற்சியில் இறங்கியவர்களுள் ஒருவரான அமெரிக்கோ வெஸ்புகி அமெரிக்காவைக் கண்டுபிடித்தார். அமெரிக்காவை இந்தியா என அவர் எண்ணினார். அக்காலத்தில் அமெரிக்காவில் வாழ்ந்திருந்த பழங்குடி மக்கள் இதன் காரணமாகவே இன்றும் அமெரிக்க இந்தியர்கள் அல்லது செவ்விந்தியர்கள் என அழைக்கப்படுகின்றனர்.

அவ்வாறாக உலகிலுள்ளோரெல்லாம் கண்டு வியக்கும்படியான இயற்கை வளங்களும், மனித வளமும் கொண்ட நமது நாடு இன்று நியாயமாக உலக நாடுகள் அனைத்திலும் மேலான நிலையில் முன்னணியில் இருக்க வேண்டும். ஆனால் உண்மையில் இன்னமும் நம் நாடு சாலை வசதிகள் போன்ற அடிப்படைத் தேவைகளுக்கும் உலக வங்கியிலிருந்து கடன் பெற வேண்டிய நிலையில் உள்ளது. இதன் காரணம். நமது நாட்டில் நீதி என்பது உண்மையாய் உழைப்பவருக்கு எட்டாக் கனியாக விளங்குவதேயாகும். தீவிரவாதிகளுடன் அரசியல் கட்சிகள் வெளிப்படையாகக் கூட்டணி அமைத்து நாட்டின் சில பகுதிகளில் தேர்தலை சந்திக்க முயல்கையில் வேறு சில இடங்களில் ஏழைகளுக்கு சேவை செய்யும் நோக்குடன் செயல்புரிபவர்கள் தீவிரவாதிகளென முத்திரை குத்தப்பட்டு சிறையிலடைக்கப் படும் கொடுமை நிறைவேறி வருகிறது.

மக்களின் பணத்தைக் கொள்ளையடித்தவர்கள் பலர் சுதந்திரமாக உள்நாட்டிலும் வெளிநாடுகளிலும் சுற்றுப்பயணம் செய்து வருகையில் உண்மையாய் உழைக்கும் மக்கள் வறுமையில் வாடுகின்றனர். இந்த நிலைமை நீடிக்குமானால் நம் நாட்டில் வெகுவிரைவில் இன்று எகிப்து நாட்டில் நடைபெறுவது போன்ற புரட்சி வெடிக்கும். இதன் அறிகுறியாக காந்தி மஹாத்மா மறைந்த நாளான, தியாகிகள் தினமாகக் கொண்டாடப் பட்ட நேற்றைய தினம் நம் நாட்டின் பல பகுதிகளிலும் பல்லாயிரக்கணக்கான மக்கள் நேர்மைக்குப் பெயர் பெற்ற முன்னாள் உயர் காவல்துறை அதிகாரி திருமதி கிரண் பேடி தலைமையில் டெல்லியிலும் அத்தகைய பிற தலைவர்களின் தலைமையில் நாட்டில் பல்வேறு ஊர்களிலும் ஊழல் ஒழியப் பெருங்குரல் கொடுத்து மாபெரும் ஊர்வலத்தை நடத்தியுள்ளனர்.

பெரும்பொருள் செலவழித்து ஊர்கள் தோறும் அலங்கார மேடை போட்டு நல்லவர்கள் போல் நடித்துப் பொய்ப் பிரச்சாரம் மேற்கொண்டு மீண்டும் மீண்டும் மக்களை ஏமாற்றி அரசு பதவிகளில் நீடிக்கலாம் என மனப்பால் குடிக்கும் பேதைகளின் உண்மை சுயரூபம் வெளிப்பட்டு வருகிறது.

யாரை எங்கே வைப்பது என்று

திரைப்படம்: பலே பாண்டியா
பாடியவர்: டி.எம். சௌந்தரராஜன், பி. சுசீலா
இயற்றியவர்: கவிஞர் கண்ணதாசன்
இசை: விஸ்வநாதன் ராமமூர்த்தி
ஆண்டு: 1962
யாரை எங்கே வைப்பது என்று யாருக்கும் தெரியல்லே
யாரை எங்கே வைப்பது என்று யாருக்கும் தெரியல்லே - அட
அண்டங்காக்கைக்கும் குயில்களுக்கும் பேதம் புரியல்லே
யாரை எங்கே வைப்பது என்று யாருக்கும் தெரியல்லே - அட
அண்டங்காக்கைக்கும் குயில்களுக்கும் பேதம் புரியல்லே
பேதம் புரியல்லே

பேரெடுத்து உண்மையைச் சொல்லி பிழைக்க முடியல்லே - இப்போ
பீடிகளுக்கும் ஊதுபத்திக்கும் பேதம் தெரியல்லே
பேரெடுத்து உண்மையைச் சொல்லி பிழைக்க முடியல்லே - இப்போ
பீடிகளுக்கும் ஊதுபத்திக்கும் பேதம் தெரியல்லே
பேதம் தெரியல்லே

யாரை எங்கே வைப்பது என்று யாருக்கும் தெரியல்லே - அட
அண்டங்காக்கைக்கும் குயில்களுக்கும் பேதம் புரியல்லே
பேதம் புரியல்லே

நானிருக்கும் இடத்தினிலே அவன் இருக்கின்றான்
அவனிருக்கும் இடத்தினிலே நான் இருக்கின்றேன்
நாளை எங்கே யாரிருப்பார் அதுவும் தெரியல்லே - இப்போ
நல்லவனுக்கும் கெட்டவனுக்கும் பேதம் தெரியல்லை
அட என்னத்தச் சொல்வேண்டா தம்பி என்னத்தச் சொல்வேண்டா

தம்பி ஒருவன் வெளியில் நின்று காசை எண்ணுகிறான்
நம்பி ஒருவன் சிறையில் வந்து கம்பி எண்ணுகிறான்
உண்மை இங்கே கூட்டுக்குள்ளே கலங்கி நிக்ககுதடா - அட
உருட்டும் புரட்டும் சுருட்டிக் கொண்டு வெளீயில் நிற்குதடா
அட என்னத்தச் சொல்வேண்டா தம்பி என்னத்தச் சொல்வேண்டா

யாரை எங்கே வைப்பது என்று யாருக்கும் தெரியல்லே - அட
அண்டங்காக்கைக்கும் குயில்களுக்கும் பேதம் புரியல்லே
பேதம் புரியல்லே

மூடருக்கும் மனிதர் போல முகம் இருக்குதடா
மோசம் நாசம் வேஷமெல்லாம் நிறைந்திருக்குதடா
காலம் மாறும் வேஷம் கலையும் உண்மை வெல்லுமடா
கதவு திறந்து பறவை பறந்து பாடிச் செல்லுமடா - அட
என்னத்தச் சொல்வேண்டா தம்பியோ என்னத்தச் சொல்வேண்டா

யாரை எங்கே வைப்பது என்று யாருக்கும் தெரியல்லே - அட
அண்டங்காக்கைக்கும் குயில்களுக்கும் பேதம் புரியல்லே
பேதம் புரியல்லே

பம்பரக் கண்ணாலே

இயற்கையன்னையின் கருணையினால் இணைந்த இரு உள்ளங்களில் தோன்றும் காதல் எண்ணங்கள் கண்களின் வழியே பரிமாறப்பட்டு இதயங்களில் இசைந்து இருமனம் ஒருமனமாவது தெய்வீகக் காதல். தமிழில் மட்டுமின்றி உலகில் உள்ள அனைத்து மொழிகளிலும் உள்ள இலக்கியங்களில் மிகவும் அதிகமாக விவரிக்கப் பட்டிருப்பது காதலே எனில் அது மிகையாகாது.

"எண்ணரு நலத்தினாள் இனையள் நின்றுழி
கண்ணொடு கண்ணிணை கவ்வி, ஒன்றையொன்று
உண்ணவும் நிலைபெறாது உணர்வும் ஒன்றிட
அண்ணலும் நோக்கினான், அவளும் நோக்கினாள்.

பருகிய நோக்கு எனும் பாசத்தால் பிணித்து
ஒருவரை ஒருவர்தம் உள்ளம் ஈர்த்தலால்
வரி சிலை அண்ணலும் வாள்கண் நங்கையும்
இருவரும் மாறிப் புக்கு, இதயம் எய்தினார்"

என்று கவிச்சக்கரவர்த்தி கம்பர் இராமனும் சீதையும் இவ்வாறு காதல் கொண்டதை வர்ணிக்கிறார்.

கம்ப ராமாயணத்தில் கம்பர் வர்ணித்த இக்காதல் காட்சி பிற்காலத் தமிழ்க் கவிஞர்களின் மனதைப் பெரிதும் கவர்ந்திருக்க வேண்டும் என்பது தமிழ்த் திரைப்படங்கள் பலவற்றில் இடம் பெற்ற காதல் காட்சிகளிலிருந்து தெளிவாகிறது. அத்தகைய காதல் காட்சிகளில் மிகவும் இனிமையான பாடல்கள் பலவும் திரைப்படங்களில் இடம் பெற்றுள்ளன. அப்பாடல்களில் கம்பரின் கற்பனையில் உதித்த கருத்துக்களுடன் காதலினால் இணைந்த இருவர் தம் இதயத்தில் எழும் ஏக்கத்தையும் அந்த ஏக்கத்தினால் அவர்களது உள்ளங்கள் படும் பாட்டையும் விவரிக்கும் விதமாக அமையப்பெற்ற பாடல்கள் பலவுண்டு.

அத்தகைய பாடல்கள் பெரும்பாலும் திரைப்படங்களில் தோன்றும் கதாநாயகன் நாயகியரிடையே உண்டாகும் காதல் காட்சிகளிலேயே இடம் பெற்றாலும் இடையிடையே நகைச்சுவைப் பாத்திரங்களுக்கிடையே தோன்றும் காதல் குறித்தும் இவை போன்ற சிறப்பான பாடல்களை அமைத்துப் பல படங்களை உருவாக்கியிருக்கிறார்கள் நம் தமிழ்த் திரையுலக சிற்பிகள்.

பம்பரக் கண்ணாலே

பம்பரக் கண்ணாலே காதல் சங்கதி சொன்னாளே
திரைப்படம்: மணமகன் தேவை
இயற்றியவர்: கே.டி. சந்தானம்
இசை: ஜி. ராமநாதன்
பாடியவர்: ஜே.பி. சந்திரபாபு

பம்பரக் கண்ணாலே காதல் சங்கதி சொன்னாளே
தங்கச் சிலைபோல் வந்து மனதை தவிக்க விட்டாளே
தங்கச் சிலைபோல் வந்து மனதை தவிக்க விட்டாளே
பம்பரக் கண்ணாலே காதல் சங்கதி சொன்னாளே
தங்கச் சிலைபோல் வந்து மனதை தவிக்க விட்டாளே

கட்டாணி முத்தழகி காணாத கட்டழகி
தொட்டாலும் கைமணக்கும் சிங்காரி
கட்டாணி முத்தழகி காணாத கட்டழகி
தொட்டாலும் கைமணக்கும் சிங்காரி
தொட்டாலும் கைமணக்கும் சிங்காரி
கட்டுப்படியாகல்லே காதல் தரும் வேதனே
கட்டுப்படியாகல்லே காதல் தரும் வேதனே
தங்கச் சிலைபோல் வந்து மனதை தவிக்க விட்டாளே

பம்பரக் கண்ணாலே காதல் சங்கதி சொன்னாளே
தங்கச் சிலைபோல் வந்து மனதை தவிக்க விட்டாளே

கண்டவுடன் காதலே கொண்டாள் என் மீதிலே
பெண்டாட்டி ஆகிடும் நாள் எப்போது
கண்டவுடன் காதலே கொண்டாள் என் மீதிலே
பெண்டாட்டி ஆகிடும் நாள் எப்போது என்
பெண்டாட்டி ஆகிடும் நாள் எப்போது?
திண்டாடித் தவிக்கிறேன் தினம் தினமும் துடிக்கிறேன்
திண்டாடித் தவிக்கிறேன் தினம் தினமும் துடிக்கிறேன்
தங்கச் சிலைபோல் வந்து மனதை தவிக்க விட்டாளே

பம்பரக் கண்ணாலே காதல் சங்கதி சொன்னாளே
தங்கச் சிலைபோல் வந்து மனதை தவிக்க விட்டாளே

டரரடியா டாங் டரரடியா டாங் டரரடியா டாங் டரரடியா டாங்