ஆதியில் மனிதர்கள் விலங்குகளுடன் விலங்குகளாய்க் காடுகளில் வசிக்கையில் கொடிய விலங்குகளிடமிருந்தும் இயற்கைச் சீற்றங்களிலிருந்தும் தங்களைக் காத்துக்கொள்ள ஒன்று சேர்ந்து கூட்டம் கூட்டமாக வசித்தனர். நாளடைவில் அவர்கள் உலகில் உள்ள பல்வேறு பொருட்களின் உபயோகம் குறித்தும், இயற்கை சக்தியினைத் தன் தேவைகளுக்காகப் பயன்படுத்தும் நுட்பத்தையும் அறிந்துகொண்டு பல இயந்திரங்களையும் உபகரணங்களையும் கண்டு பிடித்து உருவாக்கினர். இத்தகைய அறிவு வளர வளர அவர்கள் காடுகளை அழித்து வீடுகள் கட்டி, நாடு நகரங்களை நிர்மாணித்தனர்.
விஞ்ஞானமும் தொழில்நுட்பமும் வளர்ந்த நிலையில் மனிதர்கள் கடலிலும் வானிலும் பயணம் செய்யும் வழிமுறைகளைக் கண்டனர், பின்னர் சந்திரனுக்கும் வேறு கிரகங்களுக்கும் செல்ல வழி கண்டனர். உணவு, உடை, இருப்பிடம் எனும் அடிப்படைத் தேவைகள் பூர்த்தியாகவே மனிதர்கள் பலவிதமான கேளிக்கைகளையும் தகவல் தொடர்பு சாதனங்களையும் கண்டறிந்ததால் இன்று உலகெங்கிலுமுள்ளோர் ஒருவரோடொருவர் கருத்துப் பரிமாற்றம் செய்யவும், இசை மற்றும் பேசும்படங்கள் உள்ளிட்ட பலவகையான கேளிக்கைகளை அனுபவிக்கவும் முடிகிறது.
இன்னும் இத்தகைய கண்டுபிடிப்புகள் எத்தனை எத்தனையோ உருவாக்கிவிட்டு, மேலும் புதிய சாதனங்களையும் தொழில் நுட்பங்களையும் உருவாக்கி, உயிரினங்கள் அனைத்தையும் விட மிகவும் அதிக அறிவுள்ள நிலையை அடைந்து, பல்வேறு விஷயங்களை அறிந்த மனிதன், மனிதனாக மனிதத் தன்மையுடன் வாழ்வது எப்படி என்பதை மட்டும் இன்னமும் அறிந்து கொள்ளவில்லை.
மனிதன் எல்லாம் தெரிந்து கொண்டான்
அழகு நிலா
கவிஞர் கண்ணதாசன்
சீர்காழி கோவிந்தராஜன் 1960
மனிதன் எல்லாம் தெரிந்து கொண்டான்
வாழும் வகை புரிந்து கொண்டான்
இருந்த போதும் மனிதனுக்கு
ஒன்று மட்டும் தெரியவில்லை ஹோ
மனிதன் எல்லாம் தெரிந்து கொண்டான்
வாழும் வகை புரிந்து கொண்டான்
இருந்த போதும் மனிதனுக்கு
ஒன்று மட்டும் தெரியவில்லை ஹோ
இனிய குரலில் குயில் போலே
இசையும் அழகாய்ப் பாடுகின்றான்
எருதுகள் போலே வண்டிகளை
இழுத்துக் கொண்டு ஓடுகின்றான்
வனத்தில் வாழும் பறவைகள் போல்
வானில் பறந்து திரிகின்றான்
வனத்தில் வாழும் பறவைகள் போல்
வானில் பறந்து திரிகின்றான்
மனிதனாக வாழ மட்டும்
மனிதனுக்குத் தெரியவில்லை ஹோ
மனிதன் எல்லாம் தெரிந்து கொண்டான்
வாழும் வகை புரிந்து கொண்டான்
இருந்த போதும் மனிதனுக்கு
ஒன்று மட்டும் தெரியவில்லை ஹோ
கொல்லும் பாம்பின் கொடும் விஷத்தை
சொல்லில் கொடுக்கத் தெரிந்து கொண்டான்
குள்ளநரி போல் தந்திரத்தால்
குடியைக் கெடுக்கப் புரிந்து கொண்டான்
வெள்ளிப் பணத்தால் மற்றவரை
விலைக்கு வாங்கத் தெரிந்து கொண்டான்
வெள்ளிப் பணத்தால் மற்றவரை
விலைக்கு வாங்கத் தெரிந்து கொண்டான்
மனிதனாக வாழ மட்டும்
மனிதனுக்குத் தெரியவில்லை ஹோ
மனிதன் எல்லாம் தெரிந்து கொண்டான்
வாழும் வகை புரிந்து கொண்டான்
இருந்த போதும் மனிதனுக்கு
ஒன்று மட்டும் தெரியவில்லை ஹோ
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக