செவ்வாய், 19 ஜனவரி, 2016

ஆண்டவன் ஒரு நாள் கடை விரித்தான்

தினம் ஒரு பாடல் - செப்டம்பர் 13, 2014
மனிதன் தோன்றிய காலத்திலிருந்து தன் பலஹீனத்தை முழுதும் உணர்ந்திருந்தான். தான் வாழும் காலம் மிகவும் குறுகியதே என்றும் தான் ஒரு நாளல்லது ஒரு நாள் இவ்வுலகை விட்டுச் செல்வது நிச்சயம் என்றும் தெளிவாக அறிந்திருந்தான். அத்துடன் உலகில் பிறப்பெடுத்த ஜீவராசிகள் படும் அவஸ்தைகளைக் கண்கூடாகக் கண்டான். அதே போன்ற அவஸ்தைகளைத் தானும் தன் சுற்றத்தாரும் படுவதையும் கண்டான். அத்தகைய துன்பங்களைத் தாங்கத் தேவையான மனோவலிமையை அடைய மனிதன் வழிதேடினான்.

அத்தகைய தேடலினால் தோன்றியதே இறை வழிபாடாகும். தன்னையும் பிற உயிர்களையும் படைத்த ஏதோ ஒருசக்தி அனைவரையும் காத்தும் அழித்தும் அருள்புரிவதை மனிதன் உணர்ந்ததாலேயே அச்சக்தியை தெய்வமெனக் கொண்டு பூஜித்தான். அத்தகைய பூஜையில் தன் மனம் அமைதியடைவதையும் துன்பங்களைத் தாங்கும் வலிமை தன் மனதிற்கு அப்பூஜையின் பலனாகக் கிடைப்பதையும் அவன் உணர்ந்தான். அத்தகைய தெய்வ பக்தியைத் தன் சந்ததியினருக்கும் ஊட்டி அவர்களும் தெய்வ வழிபாட்டைத் தவறாமல் செய்வதை வலியுறுத்தினான். 

நாமும் நம் முன்னோர்கள் வழிகாட்டிய பாதையில் சென்று தெய்வ வழிபாட்டை வாழ்க்கையின் இன்றியமையாத அம்சமாகக் கருதி ஆலயங்களிலும், இல்லங்களிலும், திருமணம் போன்ற வைபவங்களிலும் இறை வழிபாட்டுக்குப் பிரதான இடமளித்து என்றும் எங்கும் அமைதி நிலவி நன்மை விளையப் பிரார்த்தனை செய்கிறோம்.

பண்டைக் காலத்திலிருந்தே புலவர்கள் கவிதைகளையும் காவியங்களையும் இயற்றுகையில் முதற்கண் இறைவன் அருளை வேண்டிச் சில வரிகள் புனைந்த பின்னரே ஏனைய பகுதிகளைப் புனைந்து வருவது மரபாயிற்று. எனது நினைவுக்கெட்டிய வரை இதுவரை நானறிந்த புலவர்கள் யாவரும் இறைவனைத் தம் தலைவனாகவும், குருவாகவும் வழிபட்டு இறையருள் தமக்கு எளிதாகக் கிட்டும் என்று நம்பினர். இறைவன் கேட்ட வரங்களைத் தருபவனாகவே சித்தரித்திருக்கின்றனர். இறைவன் தன் அருளை அடியார்களுக்கு எவ்விதப் பிரதியுபகாரமும் எதிர்பாராமலேயே அருள்கிறான். 

மனிதன் தன் பிரியத்தினால் இறைவனுக்குத் தேங்காய், பழங்கள், பக்ஷணங்கள் என விமரிசையாக ஒரு படையல் செய்து நிவேதனம் செய்கின்றான். அவ்வாறு நிவேதனம் செய்த பண்டங்களைத் தன் சுற்றத்தாரும் பிற மாந்தர்களும் அருந்தக் கொடுத்து ஆண்டவனுக்குக் கொடுத்ததாகவே பாவித்து மகிழ்ச்சியடைகிறான். இதன் ரகசியமாவதுஒருவன் எல்லையில்லாத ஆனந்தத்தை அடைவது பிறருக்கு ஏதேனும் உதவி செய்வதிலும், ஏதோ சில பொருட்களைக் கொடுப்பதிலும் என்பதுவே ஆகும்.

இருப்பினும் உழைத்து வாழும் முறையை நிலைத்து நிற்கச் செய்யவும் உலகம் சோம்பலின்றி இயங்கவும் மனிதன் ஆதிகாலத்தில் பண்ட மாற்று முறையிலும் பின்னர் நாகரிகம் வளர்ந்த பின்னர் பணம் கொடுத்தும் தனக்கு எந்த ஒருதருணத்திலும் தேவைப் படும் பொருளையும் பிறரிடமிருந்து வாங்கிக்கொள்ளும் வியாபாரத்தை அமைத்தான். 

புலவர்கள் பலர் இறைவனைத் தன் தந்தையாகவும், தாயாகவும், பிள்ளையாகவும் மற்றும் பல உறவினர்களாகவுமே எண்ணி அதன்படியே தன் கவிதைகளை உருவாக்கி வந்துள்ளனர்.

அப்பன் நீ, அம்மை நீ, ஐயனும் நீ, 
அன்புடைய மாமனும் மாமியும் நீ, 
ஒப்புடைய மாதரும் ஒண் பொருளும் நீ, 
ஒரு குலமும் சுற்றமும் ஓர் ஊரும் நீ, 
துய்ப்பனவும் உய்ப்பனவும் தோற்றுவாய் நீ, 
துணையாய் என் நெஞ்சம் துறப்பிப்பாய் நீ, 
இப்பொன் நீ, இம்மணி நீ, இம்முத்தும் நீ, 
இறைவன் நீ ஏறூர்ந்த செல்வன்நீயே!

என்று அப்பர் பாடியுள்ளார். இப்பாடலை தவறாமல் தினம்தோறும் காலையில் அலுவலகத்துக்குச் செல்லும் முன் என் தந்தை பூஜை செய்கையில் பாடக் கேட்டுள்ளேன்.

தற்காலப் புலவர் ஒருவர், அற்புதமான பல பாடல்களை அன்று முதல் நேற்று வரை எண்ணிறந்த தமிழ்த் திரைப் படங்களுக்கு எழுதியவர், ஒரு பாடலில் இறைவனை ஒரு வியாபாரியாக வர்ணித்து மனிதர்கள் தமக்கு வேண்டிய பொருளை விற்பனை செய்ததாகக் கற்பித்து எழுதியுள்ளார். இறைவன் எதையும் இலவசமாகத் தருவதில்லை. அவரவற்கேற்ற விலைக்கே தருவதாக உண்மை நிலையை உணர்த்தி மனிதனின் குணாதியத்தை அருமையாக அப்பாடலில் அவர் எடுத்துக் காட்டியுள்ளார்.



திரைப்படம்: டெல்லி மாப்பிள்ளை
இயற்றியவர்: கவிஞர் வாலி
இசை: திரையிசைத் திலகம் கே.வி. மஹாதேவன்
பாடியவர்: டி.எம். சௌந்தரராஜன்

ஆண்டவன் ஒரு நாள் கடை விரித்தான் அதில்
ஆயிரம் ஆயிரம் பொருள் குவித்தான்
அவரவர் நிலமைக்கு விலையைச் சொன்னான்
அவரவர் தேவைக்கு வாங்கச் சொன்னான்

ஆண்டவன் ஒரு நாள் கடை விரித்தான் அதில்
ஆயிரம் ஆயிரம் பொருள் குவித்தான்
அவரவர் நிலமைக்கு விலையைச் சொன்னான்
அவரவர் தேவைக்கு வாங்கச் சொன்னான்

பெண்களோ அழகை வாங்க வந்தார்
ஆண்களோ ஆசையை வாங்க வந்தார்
பெண்களோ அழகை வாங்க வந்தார்
ஆண்களோ ஆசையை வாங்க வந்தார்
தலைவர்கள் புகழை வாங்கிக் கொண்டார்
புலவர்கள் பொய்களை வாங்கிக் கொண்டார்

ஆண்டவன் ஒரு நாள் கடை விரித்தான் அதில்
ஆயிரம் ஆயிரம் பொருள் குவித்தான்
அவரவர் நிலைமைக்கு விலையைச் சொன்னான்
அவரவர் தேவைக்கு வாங்கச் சொன்னான்

குருடர்கள் பார்த்திட விழி கேட்டார்
ஊமைகள் பேசிட மொழி கேட்டார்
குருடர்கள் பார்த்திட விழி கேட்டார்
ஊமைகள் பேசிட மொழி கேட்டார்
உறவினர் மாண்டவர் உயிர் கேட்டார்
ஒரு சிலர் வேலுக்கு விலை கேட்டார்

எதையும் வாங்கிட மனிதர் வந்தார் விலை
என்னவென்றாலும் அவர் தந்தார்
இதயம் என்பதை விலையாய்த் தந்து 
அன்பை வாங்கிட எவருமில்லை

எதையும் வாங்கிட மனிதர் வந்தார் விலை
என்னவென்றாலும் அவர் தந்தார்
இதயம் என்பதை விலையாய்த் தந்து 
அன்பை வாங்கிட எவருமில்லை ஹஹஹஹஹ
அன்பை வாங்கிட எவருமில்லை!