ஞாயிறு, 15 ஜனவரி, 2012

ஜகம் புகழும் புண்ய கதை

நாட்டு மக்கள் எல்லோரும் எல்லா நலமும் பெற்று நல்வாழ்வு வாழ்ந்தது ராமராஜ்யம் என்ற கருத்து தொன்றுதொட்டு நிலவுகிறது. ராமாயண காவிய நாயகன் ஸ்ரீ ராமனை அக்காவியத்தை இயற்றிய வால்மீகி ஒரு உன்னத குணம் நிரம்பிய, தந்தை தாய் சொற்படி நடந்த, தன்னை நம்பியவர்களைக் காத்த, அனைவரையும் சகோதரர்களாக பாவித்த, தன் மனைவியைத் தவிர வேறொரு பெண்ணை மனதாலும் நினையாத உத்தம புருஷனாக மட்டுமே விவரித்திருக்கிறார். பிற்காலத்தில் வந்த மனிதர்கள் ராமாயணத்தைத் தொடர்ந்து படித்துப் பிறருக்குச் சொல்கையில் ஸ்ரீ ராமனின் குணங்களையும் பெருமையையும் போற்றி அவனை ஒரு அவதாரமாக உருவாக்கிவிட்டனர்.

ராமாயணத்தில் ஸ்ரீ ராமனின் நற்குணங்கள் பல்வேறு சந்தர்ப்பங்களில் தெளிவாக விளக்கப்பட்டுள்ளன. சிறு வயது முதலே ராமன் தனது மூன்று சகோதரர்களிடத்திலும் அளவிடற்கரிய அன்பு கொண்டவனாகவும் அவர்கள் யாவரும் போற்றி வணங்கத் தக்க அறிவும் பொறுமையும் வீரமும் கொண்ட பெருந்தகையாகவும் விளங்கினான். தன்னைப் பெற்ற தாயான கௌசல்யா மட்டுமின்றி தன் சிற்றன்னையரான கைகேயி, சுமத்திரை ஆகியோரையும் சமமான பிரியத்துடனும் மரியாதையுடனும் நடத்தினான் ஸ்ரீராமன்.

கைகேயி தசரதனிடம் வரம் பெற்று அவற்றின் படி பரதன் நாட்டை ஆளவும் ராமன் பதினான்காண்டுகள் வனவாசம் செய்யவும் பணிக்கையில் அவளது ஆணையைத் தன் தந்தையின் ஆணையாகவே ஏற்றதுடன் தனது தம்பியான பரதன் நாடாள அமைந்தது குறித்து எவ்விதப் போறாமையும் கொள்ளாது தனக்கு அரசபதவி கிடைத்தால் அடையும் மகிழ்ச்சியை விடவும் அதிகமான மகிழ்ச்சியை வெளிப்படுத்தினான்.

மன்னவன் பணியன்றாகின் நும் பணி மறப்பனோ என்
பின்னவன் பெற்ற செல்வம் அடியனேன் பெற்றதன்றோ!

என உரைத்து மகிழ்ச்சியுடன் வனவாசம் மேற்கொள்கிறான். கோபாவேசம் கொண்டு கொதித்தெழுந்த இலக்குவனை அமைதிப் படுத்தி அவனையும் உடன் அழைத்துச் சென்றான். வன வேடனான குகனையும், வானரனான சுக்ரீவனையும், அரக்கனான விபீஷணனையும் அவர்களது குலம் இனம் முதலியவற்றைப பற்றி சற்றும் பொருட்படுத்தாது தன் சகோதரர்களாக ஏற்றான். சீதையை இராவணன் கவர்ந்து செல்கையில் அவனுடன் போராடி உயிர் துறக்கும் நிலையில் இருந்த கழுகான ஜடாயுவைப் போற்றி வணங்கி ஜடாயு இறந்ததும் அப்பறவையைத் தன் தந்தையாகவே பாவித்து ஈமச் சடங்குகளைச் செய்தான். சுக்ரீவனுக்கு அடைக்கலம் கொடுத்தவுடன் தனது வாக்குறுதியைக் காக்கத் தனக்கு அவப்பெயர் நேர்வதைப் பற்றியும் கவலை கொள்ளாது அக்கிரமமாய் நடந்த வாலியை மறைந்திருந்து கொன்றான்.

இராவணனின் சகோதரர்கள், புதல்வர்கள், படைத்தலைவர்கள் யாவரையும் வென்று அழித்த பின்னர் இராவணன் தன்னந்தனியாகத் தன்னுடன் போர் செய்து தோற்ற பொழுது அவனுக்கு மேலும் போராட ஒரு சந்தர்ப்பததைத் தர விழைந்து, "இன்று போய் நாளை வா" என்று யுத்தத்திலும் உயர்ந்த தரும நெறியைக் கடைபிடித்தான்.

இன்று நம் நாட்டில் நடக்கும் ஆட்சியை எண்ணிப் பார்க்கையில் மனம் மிக நோகிறது. மக்களைக் காக்க வேண்டிய அரசாங்கம் மக்களைச் சுரண்டுகிறது. காவல் துறை குற்றவாளிகளைக் கண்டறிந்து தண்டித்து அவர்களிடமிருந்து மக்களைப் பாதுகாப்பதற்குப் பதில் குற்றவாளிகளுடன் கூட்டுச் சேர்ந்து கொண்டு செயல்படுகையில் தீவிரவாதிகளால் மக்கள் தாக்கப்பட்டு தங்கள் இன்னுயிரை இழக்கின்றனர். காவல் துறையினரை முறையாக மக்களைக் காக்கும் பணியில் ஈடுபடுத்தி அவர்களுக்குத் தகுந்த சாதனைகளையும் தக்க அதிகாரங்களையும் வழங்காமல் அவர்களை மந்திரிமார்கள் வீட்டைக் காவல் காக்கவும் அவர்கள் வெளிக்குப் போகையில் விளக்குப் பிடிக்கவும் உபயோகப்படுத்தி காவல் துறையினருக்குரிய மரியாதையைக் கெடுத்து நாட்டைக் கெடுக்கும் அமைச்சர்கள் அடங்கிய அரசாங்கம் மக்களைக் காக்க எவ்வித முயற்சியும் செய்யாது தவிக்க விடுகிறது.

இந்த இழிநிலை மாறி மீண்டும் ராமராஜ்யம் வரவேண்டுமெனும் பேரவாவில் ஸ்ரீராமனின் புண்யகதையை எடுத்துரைக்கும் பாடல் இன்றைய பாடலாக மலர்கிறது.

ஜகம் புகழும் புண்ய கதை

திரைப்படம்: லவகுசா
பாடலாசிரியர்: ஏ. மருதகாசி
இசை: கே.வி. மஹாதேவன்
பாடியவர்: பி. சுசீலா, பி. லீலா
ஆண்டு: 1963

ஜகம் புகழும் புண்ய கதை இராமனின் கதையே உங்கள்
செவி குளிரப் பாடிடுவோம் கேளுங்கள் இதையே
ஜகம் புகழும் புண்ய கதை இராமனின் கதையே

ஆஆஆ ஆஆஆஆஆ ஆஆஆஆ ஆஆஆஆஆஆ
ஆஆஆஆஆஆஆ ஆஆஆஆ ஆஆஆஆ ஆஆஆஆ ஆஆஆஆ

இகபர சுகமெலாம் அடைந்திடலாமே
இந்தக் கதை கேட்கும் எல்லோருமே
இனிக்குது நாவெல்லாம் உரைத்திடும் போதிலே
இனிக்குது நாவெல்லாம் உரைத்திடும் போதிலே
இணையே இல்லாத காவியமாகும்

ஜகம் புகழும் புண்ய கதை இராமனின் கதையே உங்கள்
செவி குளிரப் பாடிடுவோம் கேளுங்கள் இதையே

அயோத்தி மன்னன் தசரதனின் அருந்தவத்தால்
அவன் மனைவி கௌசல்யா கைகேயி சுமித்திரை
கருவினிலே உருவானார் இராம லக்ஷ்மணர்
கனிவுள்ள பரதன் சத்ருக்னர் நால்வன்

ஆஆஆ ஆஆஆஆஆ ஆஆஆஆஆ

நாட்டினர் போற்றவே நால்வரும் பலகலை
ஆற்றலும் அடைய மன்னன் வளர்த்து வந்தானே
காட்டினில் கௌசிகன் யாகத்தைக் காக்கவே
கண்மணி ராமலக்ஷ்மணரை அனுப்பினனே
கண்மணி ராமலக்ஷ்மணரை அனுப்பினனே
தாடகை சுபாஹுவை தரையினில் வீழ்த்தியே
தவசிகள் யாகம் காத்து ஆசி கொண்டனரே
தாடகை சுபாஹுவை தரையினில் வீழ்த்தியே
தவசிகள் யாகம் காத்து ஆசி கொண்டனரே
பாதையில் அகலிகை சாபத்தைத் தீர்த்தபின்
பாதையில் அகலிகை சாபத்தைத் தீர்த்தபின்
சீர்பெரும் மிதிலை நகர் நாடிச் சென்றனரே

வீதியில் சென்றிடும் போதிலே ராமன்
சீதையைக் கன்னிமாட மீதிலே கண்டான்
காதலினால் இருவர் கண்களும் கலந்தன
காதலினால் இருவர் கண்களும் கலந்தன
கன்னியை வில்லொடித்து சொந்தமும் கொண்டான்
ஆணவத்தால் அறிவிழந்த பரசுராமன்
அகந்தைதனை அடக்கி ராமன் வெற்றி கொண்டான்
அரும் புதல்வன் வீரத்தைக் கண்ட மன்னன்
அளவில்லா ஆனந்த நிலையைக் கண்டான்

ஜகம் புகழும் புண்ய கதை இராமனின் கதையே உங்கள்
செவி குளிரப் பாடிடுவோம் கேளுங்கள் இதையே
ஜகம் புகழும் புண்ய கதை இராமனின் கதையே உங்கள்
செவி குளிரப் பாடிடுவோம் கேளுங்கள் இதையே
ஜகம் புகழும் புண்ய கதை இராமனின் கதையே

மன்னவன் தசரதன் கண்மணி ராமனுக்கு
மணிமுடி சூட்டவே நாள் குறித்தானே

ஆஆஆஆஆ ஆஆஆ ஆஆஆ ஆஆ ஆஆஆஆஆஆ
ஆஆஆஆஆஆஆஆஆஆஆ

மன்னவன் தசரதன் கண்மணி ராமனுக்கு
மணிமுடி சூட்டவே நாள் குறித்தானே
மக்கள் யாவரும் மகிழ்வுடன் நகரையே
மகர தோரணத்தால் அலங்கரித்தாரே
மந்தரை போதனையால் மனம் மாறிக் கைகேயி
மணிமுடி பரதன் சூடி நாட்டை ஆளவும்
வனத்தில் ராமன் பதினான்கண்டுகள்
வாழவும் மன்னனிடம் வரமது கேட்டாள்

அந்த சொல்லைக் கேட்ட மன்னர்
மரண மூர்ச்சை அடைந்த பின்னர்
ராமனையும் அழைக்கச் செய்தாள்
தந்தையுனை வனம் போகச் சொல்லி
தம்பி பரதனுக்கு மகுடத்தைத் தந்தார் என்றாள்
சஞ்சலமில்லாமல் அஞ்சலவண்ணனும்
சம்மதம் தாயே என வணங்கிச் சென்றான்
விஞ்சிய கோபத்தால் வெகுண்டே வில்லெடுத்த
தம்பி இலக்குவனை சாந்தமாக்கினான்

இளையவனும் ஜானகியும் நிழல் போல் தொடரவே
மரவுறி தரித்து ராமன் செல்வது கண்டு
இளையவனும் ஜானகியும் நிழல் போல் தொடரவே
மரவுறி தரித்து ராமன் செல்வது கண்டு
கலங்கி நாட்டு மக்கள் கண்ணீர் சிந்தியே

ஆஆஆஆ ஆஆஆஆ ஆஆஆஆஆஆ ஆஆஆஆ

கலங்கி நாட்டு மக்கள் கண்ணீர் சிந்தியே
இதயங்கள் போவதென்று தடுத்தனர் சென்றே

ஆறுதல் கூறியே கார்முகில் வண்ணன்
அன்புடன் அவர்களிடம் விடையும் கொண்டானே
அன்னையும் தந்தையும் சொன்ன சொல் காக்கவே
அண்ணலும் கானகத்தை நாடிச் சென்றானே

ஜகம் புகழும் புண்ய கதை இராமனின் கதையே உங்கள்
செவி குளிரப் பாடிடுவோம் கேளுங்கள் இதையே
ஜகம் புகழும் புண்ய கதை இராமனின் கதையே

ஜகம் புகழும் புண்ய கதை இராமனின் கதையே உங்கள்
செவி குளிரப் பாடிடுவோம் கேளுங்கள் இதையே
ஜகம் புகழும் புண்ய கதை இராமனின் கதையே உங்கள்
செவி குளிரப் பாடிடுவோம் கேளுங்கள் இதையே
ஜகம் புகழும் புண்ய கதை இராமனின் கதையே

கங்கைக் கரை அதிபன் பண்பில் உயர்ந்த குகன்
அன்பால் ராமபிரான் நண்பனாகினான்
கங்கைக் கரை அதிபன் பண்பில் உயர்ந்த குகன்
அன்பால் ராமபிரான் நண்பனாகினான்
பஞ்சவடி செல்லும் பாதையைக் காட்டினான்
பஞ்சவடி செல்லும் பாதையைக் காட்டினான்
அஞ்சனவண்ணன் அங்கு சென்று தங்கினான்
அஞ்சனவண்ணன் அங்கு சென்று தங்கினான்

ராவணனின் தங்கை கொடியவள் சூர்ப்பனகை
ராமபிரான் மீது மையல் கொண்டாள்
ராவணனின் தங்கை கொடியவள் சூர்ப்பனகை
ராமபிரான் மீது மையல் கொண்டாள்
கோபம் கொண்ட இளையோன் கூரம்பால் அவளை
மானபங்கம் செய்து விரட்டி விட்டான்
தங்கையின் போதையால் தசகண்ட ராவணன்
ஜானகி தேவியை சிறையெடுத்தான்
தங்கையின் போதையால் தசகண்ட ராவணன்
ஜானகி தேவியை சிறையெடுத்தான்
நெஞ்சம் கனலாகி கண்கள் குளமாகி
தம்பியுடன் தேவியைத் தேடிச்சென்றான்
ராமன் தேடிச் சென்றான்

வழியிலே ஜாடாயுவால் விவரமெல்லாம் அறிந்தான்
வாயு மைந்தன் அனுமானின் நட்பைக் கொண்டான்
ஆழியைத் தாண்டியே இலங்கை சென்ற அனுமான்
அன்னையை அசோகவனத்தில் கண்டான்

ஆஆஆஆஆஆ ஆஆஆஆஆஆஆஆஆஆ

ராமசாமியின் தூதன் நானடா ராவணா என்றான்
ராமசாமியின் தூதன் நானடா ராவணா என்றான் அனுமான்
லங்காபுரியைத் தீக்கிரையாக்கி கிஷ்கிந்தை சென்றான்
கண்டேன் அன்னையை என்றே ராமனை சேவித்தே நின்றான்
கடலைக் கடந்து அண்ணல் வானர சேனையுடன் சென்றான்
வானர சேனையுடன் சென்றான்
விபீஷணனின் நட்பைக் கொண்டான் ராவணனை வென்றான்
வீரமாதா ஜானகி தேவியைத் தீக்குளிக்கச் செய்தான்

ஆஆஆஆஆஆஆ ஆஆஆஆஆஆஆ ஆஆஆஆஆஆஆ

கற்பின் கனலைக் கனிவுடன் ஏற்று அயோத்தி நகர் மீண்டான்
கற்பின் கனலைக் கனிவுடன் ஏற்று அயோத்தி நகர் மீண்டான்
கலங்கிய மக்கள் களிப்புற ராமன் அரசுரிமை கொண்டான்
அரசுரிமை கொண்டான்
ஆஆஆ ஆஆஆ ஆஆஆ ஆஆஆ ஆஆஆஆஆஆ ஆஆஆஆஆஆ

ஜகம் புகழும் புண்ய கதை இராமனின் கதையே உங்கள்
செவி குளிரப் பாடிடுவோம் கேளுங்கள் இதையே
ஜகம் புகழும் புண்ய கதை இராமனின் கதையே

ஸ்ரீ ராகவம் தசரதாத்மஜம் அப்ரமேயம்
சீதாபதிம் ரகுகுலான்மயரக்ஷமீயம்
ஆஜானுபாகும் அரவிந்த தளாய தாட்ச்ம்
ராமம் நிசாசர விநாசகரம் நமாமி

ஒன்று எங்கள் ஜாதியே

இன்று இந்தியர்கள் அனைவருக்கும் ஒரு திருநாள். ஆட்சியாளர்களும், அதிகாரிகளும் எவ்வித முறைகேடுகளில் ஈடுபட்டாலும் அவர்களைத் தட்டிக்கேட்க அஞ்சிய காலம் முடிந்து மக்கள் சக்திக்கு ஆட்சியாளர்கள் அனைவரும் தலைவணங்கும் காலம் வந்துள்ளது.

ஊழல் துயர்க்கடல் நீந்துவர் நீந்தார்
அன்னாவடி சேரா தார்

ஆங்கிலேய ஆட்சிக்கு எதிராக மஹாத்மா காந்தியடிகளின் தலைமையில் எண்ணிறந்த தியாகிகள் ஒன்று கூடிப் போராடிப் பெற்றுத் தந்த சுதந்திரத்தை சிறிது சிறிதாக உள்நாட்டுப் புல்லுருவிகள் பன்னாட்டு நிறுவனங்களுக்கு விற்று, இந்திய மக்களை வறுமையில் வாடவிட்டுத் தாம் மட்டும் பெரும் பணக்காரர்களாக உலாவிவரும் ஊழல் மலிந்த அராஜக ஆட்சியால் வாடி, அனுதினமும் துயரக்கடலில் முழ்கிக் கரையேற வழி தெரியாமல் தத்தளித்த இந்திய மக்களுக்கு அத்துயரக்கடலிலிருந்து மீண்டு கரை சேர உறுதுணையாக வந்த தோணியாக வந்துதித்தார் அன்னா ஹசாரே எனும் காந்தியவாதி.

தாங்கள் செய்யும் ஊழல் குற்றங்களைச் சுட்டிக்காட்டுபவர்களின் மீது எவ்வாறேனும் பழிசுமத்தி, "நாங்கள் செய்யும் ஊழலைச் சுட்டிக்காட்ட உனக்கு அருகதையில்லை" எனும் ரீதியில் பிரச்சாரம் செய்து அடாவடியாகத் தொடர்ந்து ஊழலிலேயே ஈடுபட்டிருக்கும் அரசியல்வாதிகள் பலரும் இன்று பெட்டிப்பாம்மாக அடங்கி விட்டனர். இத்தகைய மாற்றத்திற்குக் காரணம் அன்னா ஹசாரே அவர்களின் தவமும் தியாகமுமே ஆகும். ஆயுள் முழுதும் பிரம்மச்சரிய விரதம் பூண்டு திருமணம் செய்து கொள்ளாது துறவு வாழ்க்கை வாழ்ந்து வரும் இம்மஹானின் தவ வலிமை தெரியாது அவர் மீது அவதூறு பிரச்சாரம் மேற்கொண்டவர்கள் கண்காணாத இடத்திற்கு ஓடி ஒளிந்து கொண்டனர். பன்னிரண்டு நாட்கள் தொடர்ந்து உண்ணாவிரதமிருந்த அன்னாவின் போராட்டத்துக்கு இந்திய அரசு தலைவணங்கி அவரது மூன்று கோரிக்கைகளான அனைத்துக் கீழ்மட்ட அரசு அதிகாரிகளையும் லோக்பால் அமைப்பின் கீழ் கொண்டு வருவது, அனைத்து மாநிலங்களிலும் லோகாயுத்தா அமைப்பை ஏற்படுத்துவது, பொது மக்கள் அரசுத்துறை அலுவலகங்களின் உதவியைப் பல்வேறு காரணங்களுக்காக அணுகுகையில் அவர்களுக்கு உரிய சேவையை ஊர்ஜிதம் செய்யவல்ல சிட்டிஜன்ஸ் சார்டர் அமைப்பது ஆகியவற்றை நிறைவேற்றுவதாகப் பாரளுமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றியதை அடுத்து இன்று அவர் தன் உண்ணாவிரதத்தை முடித்துக் கொள்கிறார்.

அன்னாவின் தலைமையை ஏற்று அவரது உண்ணாவிரத்துக்கு ஆதரவாக டில்லி ராம்லீலா மைதானத்திலும் பிற பல ஊர்களிலும் உள்ள மக்கள் பலர் இளைஞர்கள், முதியவர் என்ற பாகுபாடின்றித் தாங்களும் உண்ணாவிரதம் மேற்கொண்டனர். இந்த அறப்போராட்டத்தில் பங்குபெற லட்சக்கணக்கில் அலைகடலெனத் திரண்ட மக்கள் கூட்டம் யாரும் காசுகொடுத்துக் கூட்டிவந்த கூட்டமல்ல. அன்பால் தானாக சேர்ந்த கூட்டம். இவர்களுக்கு ஆதரவாகப் பல பொதுநலத்தொண்டர்கள் திரண்டு அனைவருக்கும் உணவு, குடிநீர், அவசர மருத்துவ உதவி ஆகியவற்றை வழங்கிவருகின்றனர். மேலும் பல தொண்டர்கள் போராட்டத்தில் பங்குகொண்டு நாட்டு மக்கள் அனைவருக்கும் விழிப்புணர்வு ஏற்படுத்தும் சேவையைப் பல்வேறு ஊடகங்கள் வாயிலாக மேற்கொண்டு வருகின்றனர்.

இந்திய வரலாற்றில் முதன்முறையாக மக்கள் சக்தியை உணர்ந்து அவர்கள் மனதுக்கிசைவான வகையில் ஊழல் எனும் கொடிய அரக்கனால் ஏற்பட்ட அவர்களது குறைகள் தீர்க்கப் படுவதின் அவசியத்தை அரசியல்வாதிகள் பலரும் உணர்ந்து பாராளுமன்றத்தில் தங்களது ஜனநாயகக் கடமைகளை நிறைவேற்றியுள்ளனர். ஊழலில்லாத நல்லாட்சி நாட்டில் நிலவிடச் செய்வதில் முதல் கட்டம் அரசியல்வாதிகளல்லாத, தேர்தல்களில் வெற்றிபெறாத சாமான்ய மக்களின் தலைவரான அன்னாவின் ஆணையின் பேரில் நிறைவேறியுள்ளது. சட்டங்கள் இயற்றுவது தேர்தலில் வெற்றிபெற்று ஆட்சிக்கு வருபவர்களின் ஏகபோக உரிமையாக விளங்குவதும் அவர்களைத் தேர்த்லில் தேர்ந்தெடுத்து ஆட்சி பீடத்தில் அமர்த்தி வைக்கும் மக்களது உரிமை ஐந்தாண்டுகளுக்கு ஒரு முறை தேர்தலில் வக்களிப்பது ஒன்றே என்பதும் இனி நட்வாது. மக்கள் பிரதிநிதிகள் இனிமேல் மக்கள் விரோத சட்டங்கள் ஏதும் இயற்ற முடியாது. மக்கள் பிரதிநிதிகள் மக்களின் சேவகர்களே, மக்களே எஜமானர்கள் எனும் உண்மையை யாவரும் உணரவைத்தது இன்றைய மக்களின் ஒருங்கிணைந்த அறவழிப் போராட்டம்.

தேர்தலில் மட்டுமல்லாது தேர்தல் முடிந்து அமையும் ஆட்சியின் போதும் அரசு முறையாக நடக்காவிடில் அந்த அரசை அகற்றி வேறு அரசை அமைக்கும் வலிமை மக்களிடம் உள்ளது எனும் உண்மையை உலகறிய எடுத்துக் காட்டிய வரலாற்றினைப் படைத்தது இன்றைய நாள்.

ஊழலுக்கு எதிராகப் போராட ஒரு வலுவான அமைப்பு உருவாகிவிட்டது. இவ்வமைப்பை பிரபல பொதுநலத் தொண்டர்கள் பலருடன் பல்வேறு தலைவர்கள், திரைத் துறையினர் மற்றும் பல்லாயிரக்கணக்கான இளைஞர்கள் ஒன்று சேர்ந்து மிகவும் வலுவான ஒரு இயக்கமாக உருவாக்கியுள்ளனர். இது ஒரு தேசபக்தர்கள் பேரியக்கம். நம் இந்தியத் தாய்த் திருநாடு உலகம் வியந்து நோக்கும் வல்லரசாக உருவாக்கவென்றே உருவான இயக்கம். இனி என்றும் சீனாக் காரர்களும் சிங்களவர்களும் இந்தியர்களை ஏளனமாக எண்ணிக் கொடுமைப்படுத்த இயலாது. ஊழல் ஒழிந்து இந்திய நாடு எல்லாத் துறைகளிலும் முன்னணியில் விளங்கும் நாள் வெகு தொலைவில் இல்லை. இனி படித்த திறமைவாய்ந்த இளைஞர்கள் யாரும் வேலை தேடி அந்நிய நாடுகளுக்குக் செல்ல வேண்டியதில்லை. இந்திய மண்ணின் இயற்கை வளங்களை சுரங்கங்களின் வழியே சுரண்டிக் கள்ளத்தனமாக அயல்நாடுகளுக்குக் கடத்தி யாரும் பெரும் செல்வந்தர்களாவது இனி நடவாது.

மக்களுக்கு உண்மையான சேவை புரியும் தலைவர்கள் மட்டுமே இனி பதவிகளைப் பெற முடியும். காசு பணம் செலவழித்துத் தேர்தலில் வெற்றிபெற்று நாடடைச் சுரண்டும் திட்டம் இனி நிறைவேறாது. உழைப்பவர் மட்டுமே வாழ்வில் உயர இயலும். திருடர்கள் சிறையில் மட்டுமே வாழ இயலும். இனி ஜாதியின் பெயரால் மக்களைப் பிரித்தாளும் சூழ்ச்சி பலிக்காது ஏனெனில் இனி இந்தியர்கள் அனைவரும் ஓரே ஜாதி.

நானும் அன்னா, நீயும் அன்னா நம்
நாட்டு மக்கள் அனைவரும் அன்னா

ஒன்று எங்கள் ஜாதியே

திரைப்படம்: பணக்காரக் குடும்பம்
இயற்றியவர்: கவிஞர் கண்ணதாசன்
இசை: எம்.எஸ். விஸ்வநாதன், டி.கே. ராமமூர்த்தி
பாடியோர்: டி.எம். சௌந்தரராஜன், எல்.ஆர். ஈஸ்வரி
aandu: 1964

அஹா ஆஆஆஆஆஆஆ அஹா ஆஆஆஆஆஆஆ
ஓஓஓஓஓஓஓ ஓஓஓஓஓஓ

ஒன்று எங்கள் ஜாதியே ஒன்று எங்கள் நீதியே
ஒன்று எங்கள் ஜாதியே ஒன்று எங்கள் நீதியே
உழைக்கும் மக்கள் யாவரும் ஒருவர் பெற்ற மக்களே
உழைக்கும் மக்கள் யாவரும் ஒருவர் பெற்ற மக்களே

வெள்ளை மனிதன் வேர்வையும் கருப்பு மனிதன் கண்ணீரும்
வெள்ளை மனிதன் வேர்வையும் கருப்பு மனிதன் கண்ணீரும்
உப்பு நீரின் வடிவிலே ஒன்று சேரும் கடலிலே
உப்பு நீரின் வடிவிலே ஒன்று சேரும் கடலிலே

ஒன்று எங்கள் ஜாதியே ஒன்று எங்கள் நீதியே
உழைக்கும் மக்கள் யாவரும் ஒருவர் பெற்ற மக்களே
உழைக்கும் மக்கள் யாவரும் ஒருவர் பெற்ற மக்களே

ஆதி மனிதன் கல்லை எடுத்து வேட்டை ஆடினான்
அடுத்த மனிதன் காட்டை அழித்து நாட்டைக் காட்டினான்
மற்றும் ஒருவன் மண்ணில் இறங்கிப் பொன்னைத் தேடினான்
ஆதி மனிதன் கல்லை எடுத்து வேட்டை ஆடினான்
அடுத்த மனிதன் காட்டை அழித்து நாட்டைக் காட்டினான்
மற்றும் ஒருவன் மண்ணில் இறங்கிப் பொன்னைத் தேடினான்
நேற்று மனிதன் வானில் தனது தேரை ஓட்டினான்
இன்று மனிதன் வெண்ணிலாவில் இடத்தைத் தேடினான்
நேற்று மனிதன் வானில் தனது தேரை ஓட்டினான்
இன்று மனிதன் வெண்ணிலாவில் இடத்தைத் தேடினான்
வரும் நாளை மனிதன் ஏழு உலகை ஆளப் போகிறான்
வரும் நாளை மனிதன் ஏழு உலகை ஆளப் போகிறான்

ஒன்று எங்கள் ஜாதியே ஒன்று எங்கள் நீதியே
உழைக்கும் மக்கள் யாவரும் ஒருவர் பெற்ற மக்களே
உழைக்கும் மக்கள் யாவரும் ஒருவர் பெற்ற மக்களே

மன்னராட்சி காத்து நின்றதெங்கள் கைகளே
மக்களாட்சி காணச் செய்ததெங்கள் நெஞ்சமே
எங்கள் ஆட்சி என்றும் ஆளும் இந்த மண்ணிலே
மன்னராட்சி காத்து நின்றதெங்கள் கைகளே
மக்களாட்சி காணச் செய்ததெங்கள் நெஞ்சமே
எங்கள் ஆட்சி என்றும் ஆளும் இந்த மண்ணிலே
கல்லில் வீடு கட்டித் தந்ததெங்கள் கைகளே
கருணை தீபம் ஏற்றி வைத்ததெங்கள் நெஞ்சமே
கல்லில் வீடு கட்டித் தந்ததெங்கள் கைகளே
கருணை தீபம் ஏற்றி வைத்ததெங்கள் நெஞ்சமே
இல்லை என்பதில்லை நாங்கள் வாழும் நாட்டிலே
இல்லை என்பதில்லை நாங்கள் வாழும் நாட்டிலே

ஆஆஆ ஆஆஆ அஹ்ஹா அஹஹா லலலா லலலா லலலா லலலா

ஒன்று எங்கள் ஜாதியே ஒன்று எங்கள் நீதியே
உழைக்கும் மக்கள் யாவரும் ஒருவர் பெற்ற மக்களே
உழைக்கும் மக்கள் யாவரும் ஒருவர் பெற்ற மக்களே

அறிவுக்கு வேலை கொடு

ஊழலுக்கு எதிரான போராட்டதுக்குத் தங்களது ஆதரவை இங்கே தெரிவிக்கவும்

மக்களால் மக்களுக்காக மக்களைக் கொண்டு நடக்கும் ஆட்சியே ஜனநாயக ஆட்சி என்று வரையறுத்து விட்டு, ஐந்தாண்டுகளுக்கொரு முறை அவதூறு பிரச்சாரங்களாலும், ஓட்டுக்குப் பணம் கொடுத்தும், இலவசங்களை வாரி வழங்கியும், கள்ள ஓட்டுப் போட்டும், கூலிக்கு ஆள் பிடித்துக் கருப்புப் பணத்தைச் செலவழித்துப் பேருந்துகள் மூலம் பல ஊர்களிலிருந்து ஆட்களை வரவழைத்துக் கூட்டத்தைச் சேர்த்துத் தம் வலிமையைக் காட்டியும் மோசடியான வழிகளில் தேர்தலில் வெற்றிபெற்றுப் பதவிக்கு வரும் மக்கள் பிரதிநிதிகளைக் கொண்டு அமையப் பெறும் ஆட்சி உண்மையில் மக்களின் பிரதிநிதிகளால், மக்களின் பிரதிநிதிகளுக்காக மக்களின் பிரதிநிதிகளைக் கொண்டு நடைபெறும் ஆட்சியாகவே விளங்குவது நம் நாட்டில் தற்போது நடைபெறும் போலி ஜனநாயகம். இதில் பதவிக்கு வந்தவுடன் மக்களின் ஓட்டுகளைப் பெற்று ஆட்சிக்கு வந்த அரசு பிரதிநிதிகள் மக்களின் தேவைகளைப் புறந்தள்ளி விட்டு சட்டவிரோதமான நடவடிக்கைகளாலும் ஊழலாலும் தாம் மட்டும் செல்வந்தர்களாக விளங்கும் முயற்சிகளை மட்டுமே மேற்கொண்டு வருகின்றனர்.

ஊழல் செய்யும் அரசு அதிகாரிகளையும், அமைச்சர்களையும், நீதி தவறிய நீதிபதிகளையும் தண்டிக்க எவ்வித வழியும் இல்லாத வகையிலான வலுவற்ற சட்டங்களை இயற்றிக் குற்றவாளிகள் தப்பிக்கவும் நேர்மையான அப்பாவி மக்கள் அவதிக்குள்ளாகவும் வழிவகுத்து மக்களை ஏமாற்றி வருகிறது இந்தியாவின் மத்திய அரசு. பல வருடங்களாக இந்திய மக்களிடம் கொள்ளையடித்த பெரும்பணத்தை அயல்நாட்டு வங்கிகளில் முடக்கி விட்டு சுதந்திரமாகத் திரியும் குற்றவாளிகளை தண்டிக்கவும் அவர்கள் சுருட்டிய பெரும்பணத்தைத் திரும்பப் பெற்று நாட்டு நலனுக்காகச் செலவிட வழிவகுக்கவும் வேண்டிய மத்திய அரசு அதற்கு நேர்மாறாகச் செயல் பட்டு எவ்வாறாகிலும் தங்கள் ஆட்சியைத் தக்க வைத்துக் கொள்வது குறித்து மட்டுமே சிந்தனை செய்து அதனை செயல்படுத்த முறைகேடான வழிகளில் மத்திய புலனாய்வுத் துறையைப் பயன்படுத்துகிறது. தினந்தோறும் பொது மக்களிடமிருந்து முறைகேடாக வசூலிக்கப் படும் லஞ்சப்பணம், நிலம் மற்றும் பிற சொத்துக்கள் விற்பனையின் தொடர்பான பத்திரப் பதிவுகளில் மோசடி செய்து சொத்துக்களின் மதிப்புத் தொகையைக் குறைத்து எழுதி பத்திரப் பதிவு மூலம் அரசுக்குக் கிடைக்கும் வருவாயைக் குறைப்பதுடன் கருப்புப் பணம் நாட்டில் பெருகவும் மட்டுமே தற்போதைய ஆட்சியும் சட்டதிட்டங்களும் உதவுகின்றன.

அரசாங்கத்தின் இத்தகைய மோசடிகளைச் சுட்டிக்காட்டி முறையான மக்கள் பாதுகாப்புச் சட்ட்டத்தை இயற்ற வலியுறுத்தி வரும் அன்னா ஹசாரே தலைமையில் செயல்படும் சமூக சேவகர்கள் அமைப்பை எவ்வாறேனும் அடக்கி ஒடுக்கிவிட்டுத் தங்களது அராஜக ஆட்சியைத் தொடரலாம் என மனப்பால் குடித்த மத்திய அரசின் பிரதிநிதிகள் இன்று செய்வதறியாது திகைக்கின்றனர். காரணம், அன்னா ஹசாரேயின் தலமையில் நடக்கும் அறப் போருக்கு ஆதரவாக லட்சக்கணக்கான மக்கள் நாடெங்கிலும் ஒன்று கூடித் தங்கள் மனத்தாங்கலை வெளிப்படுத்தி வருகின்றனர். ஆறாவது நாளாகத் தன் உண்ணாவிரதத்தைத் தொடரும் அன்னா ஹசாரே மக்கள் நலச் சட்டம் முறையாக இயற்றப்படும் வரையில் தொடர்ந்து போராடும் முடிவை அறிவித்துள்ளார். அவரது முடிவுக்கு அனைத்து மக்களும் ஆதரவாகவே உள்ளனர்.

அரசு பிரதிநிதிகள் இதுவரை தங்களது பகுத்தறிவை உபயோகிக்காது ஆணவத்தால் அறிவிழந்து கட்டவிழ்த்து விட்ட அடக்குமுறைகளைக் கைவிட்டு ஜனநாயகத்தைக் காக்க உடனடியாக உரிய நடவடிக்கை எடுப்பது நலம். அவ்வாறன்றித் தங்களது வழக்கமான வழியில் சதிகள் செய்து மக்களை மீண்டும் ஏமாற்ற முயல்வதும் அன்னா ஹசாரே போன்ற தன்னலமற்ற மக்கள் தலைவர்களுக்குக் குழி பறிப்பதும் தங்களுக்குத் தாங்களே குழி பறிக்கும் செயலாகவே முடியும். இந்த உண்மையை உணர்ந்து தங்களது தவறுகளைத் திருத்திக் கொண்டு செயல்பட்டால் அவர்கள் மன்னிக்கப் படலாம். இல்லாவிடில் அவர்கள் யாரும் பெரும் பழியிலிருந்தும் பேரழிவிலிருந்தும் பெரும் அவமானத்திலிருந்தும் தப்பிக்க இயலாத நிலை விரைவில் உருவாகும் அபாயம் உள்ளது.

அரசு பிரதிநிதிகளே! இது உங்களுக்கு இறுதி வாய்ப்பு. திருந்துங்கள், முறைகேடான சட்டத்தைத் திருத்துங்கள். மக்களைக் காக்கவும் குற்றவாளிகளைத் தண்டிக்கவும் ஊழல் மூலம் மக்களிடம் கொள்ளையடிக்கப் பட்ட பணம் முழுவதையும் மீட்கவும் உரிய நடவடிக்கை எடுங்கள். இல்லாவிடில் உங்களைக் காக்க அந்த ஆண்டவனாலும் இயலாமற் போய்விடும்.

அறிவுக்கு வேலை கொடு

திரைப்படம்: தலைவன்
இயற்றியவர்: வாலி
இசை: எஸ்.எம். சுப்பையா நாயுடு
பாடியவர்: டி.எம். சௌந்தரராஜன்

அறிவுக்கு வேலை கொடு பகுத்தறிவுக்கு வேலை கொடு
அறிவுக்கு வேலை கொடு பகுத்தறிவுக்கு வேலை கொடு
மூடப் பழக்கத்தை விட்டு விடு
காலம் மாறுது கருத்தும் மாறுது நாமும் மாற வேண்டும்
நம்மால் நாடும் மாற வேண்டும்

அறிவுக்கு வேலை கொடு பகுத்தறிவுக்கு வேலை கொடு

ஒன்பது வாசல் வைத்தே உடம்பென்னும்
கோட்டையைக் காட்டி வைத்தான் அந்தக்
கோட்டைக்கு விளக்காக அறிவென்னும்
தீபத்தை ஏற்றி வைத்தான்
ஒன்பது வாசல் வைத்தே உடம்பென்னும்
கோட்டையைக் காட்டி வைத்தான் அந்தக்
கோட்டைக்கு விளக்காக அறிவென்னும்
தீபத்தை ஏற்றி வைத்தான்
ஆகாத வழக்கமெல்லாம் அறிவுக்குப்
பொருந்தாத பழக்கமெல்லாம்
ஆக்கத்தைக் கெடுத்து வைக்கும் மனிதனின்
அழிவுக்கு வழி வகுக்கும்
ஆக்கத்தைக் கெடுத்து வைக்கும் மனிதனின்
அழிவுக்கு வழி வகுக்கும்

அறிவுக்கு வேலை கொடு பகுத்தறிவுக்கு வேலை கொடு

மண்வெட்டி கையிலெடுப்பார் சிலபேர்
மற்றவர்க்குக் குழி பறிப்பார் அது
தன் பக்கம் பார்த்திருக்கும் என்பதைத்
தானறிய மறந்திருப்பார்
மண்வெட்டி கையிலெடுப்பார் சிலபேர்
மற்றவர்க்குக் குழி பறிப்பார் அது
தன் பக்கம் பார்த்திருக்கும் என்பதைத்
தானறிய மறந்திருப்பார்
பந்தெடுத்து விட்டு எரிந்தால் சுவர் மேல்
பட்டது போல் திரும்பி வரும்
பந்தெடுத்து விட்டு எரிந்தால் சுவர் மேல்
பட்டது போல் திரும்பி வரும் இந்த்த்
தத்துவத்தைத் தானறிந்தால் பிறர்க்குத்
தீங்கு செய்யும் எண்ணம் வருமோ? இந்த்த்
தத்துவத்தைத் தானறிந்தால் பிறர்க்குத்
தீங்கு செய்யும் எண்ணம் வருமோ?

அறிவுக்கு வேலை கொடு பகுத்தறிவுக்கு வேலை கொடு
ஆஹாஹஹ ஹா

நீ எந்த ஊரு நான் எந்த ஊரு?

இந்தியா ஆங்கிலேயர் ஆட்சியை எதிர்த்துப் போராடி வென்ற்தற்கு முக்கியக் காரணகர்த்தா மஹாத்மா காந்தி ஆவார். சுதந்திரப் போருக்கு அவர் வகுத்து வழிநடத்தியது சத்தியாக்கிரகம் எனும் அஹிம்சை வழி. ஆங்கிலேய அரசின் அடக்குமுறையை எதிர்த்து நாடெங்கிலும் பொதுக்கூட்டங்கள் நடத்தியும், அந்நிய நாட்டுப் பொருட்களை நெருப்பிட்டு அழித்தும், சட்டத்தை மீறி உப்பளங்களில் உப்பெடுத்தும் மற்றும் பல வழிகளில் இந்திய மக்களை ஒன்று திரட்டி அவர் நடத்திய போராட்டத்தில் பங்கு பெற்றவர்கள் யாரும் வன்முறையைக் கையாளவில்லை. ஆங்கிலேய அதிகாரிகள் தடியால் அடித்த போதும் துப்பாக்கி குண்டுகளால் சுட்ட போதும் அவ்வதிகாரிகளை யாரும் திருப்பித் தாக்க முயற்சிக்கவில்லை.

"ஒருவன் உன்னை ஒரு கன்னத்தில் அறைந்தால் நீ மறு கன்னத்தைக் காட்டு" என இயேசுபிரான் கூறிய அறிவுரை வழியே நின்று மஹாத்மாவின் தலைமையில் நம் முன்னோர்கள் கோடானு கோடிப் பேர்கள் ஒன்றிணைந்து கத்தியின்றி ரத்தமின்றி நடத்திய யுத்தத்தின் பலனாகவே நமது நாட்டிற்குச் சுதந்திரம் கிடைத்தது. மஹாத்மா தொடுத்த அறவழிப் போருக்கு நெஞ்சில் இயல்பாக இரக்கமில்லாத ஆங்கிலேயர்களும் தலைவணங்கினர். அதே அறவழியில் இன்று இந்திய மக்கள் ஆயிரக்கணக்கில் நாட்டின் பல நகரங்களிலும் கிராமங்களிலும் மற்றும் பல அயல்நாடுகளிலுள்ள இந்திய தூதரகத்தின் முன்னரும் ஒன்று திரண்டு தற்போது நாட்டில் தலைவிரித்தாடும் லஞ்ச ஊழல் எனும் கொடுமையை எதிர்த்து, அக்கொடுமையை நீக்கவல்ல மக்கள் சட்டத்தைப் பல ஆண்டுகளாக இயற்றப் போவதாகக் கூறிக்கொண்டு செயலில் இறங்காமல் மக்களைத் தொடர்ந்து ஏமாற்றிவரும் அரசாங்கத்தை தகுந்த மக்கள் சட்டத்தை நிறைவேற்ற வைக்கும் உன்னத நோக்கத்துடன் காந்தியடிகள் வழியே அன்ன ஹசாரே எனும் உத்தமர் தலைமையில் போராடி வருகின்றனர்.

அன்னா ஹசாரே இம்முயற்சியில் மேற்கொண்டுள்ள உண்ணாவிரதத்தின் ஐந்தாம் நாள் நடந்து கொண்டிருக்கும் நிலையில் இந்திய அரசு இந்த அறவழிப் போராட்டத்தை முறியடிக்கும் ஓரே நோக்கத்துடன். இப்போராட்டத்துக்கு ஆர்.எஸ். எஸ். இயக்கம் ஆதரவளிக்கிறது என்றும், அரசைக் கவிழ்க்க நடத்தப்படும் எதிர்க்கட்சிகளின் சதிகளுள் இப்போராட்டமும் ஒன்று என்றும் இப்போராட்டத்தை அன்னா ஹசரேயின் மூலம் அமெரிக்கா நடத்துகிறது என்றும் பல்வேறு பொய்ப் பிரச்சாரங்களைக் கட்டவிழ்த்து விட்டதுடன் தொடர்ந்து மக்களை ஏமாற்றும் வழியில் மட்டுமே செயல்பட்டு வருவது வருந்தத் தக்கது. அசத்திய மார்க்கத்தில் செயல்படும் சுயநலவாதிகளைக் கொண்டு நடத்தப்படும் இந்த அரசுக்கு அறப் போராட்டத்தின் வலிமை இன்னும் புரியவில்லை என்றே தோன்றுகின்றது. இந்த அரசு எவ்வளவு தான் முயன்றாலும் நாள் தோறும் லஞ்ச ஊழலால் அவதியுறும் மக்களின் மனங்களில் கொழுந்து விட்டெறியும் சுதந்திர தாகத்தை அடக்க இயலாது.

லஞ்ச ஊழல் ஒழிந்து தவறு செய்யும் அதிகாரிகளும் அமைச்சர்களும் பிற குற்றவாளிகளும் உரிய காலத்தில் விரைந்து தம் குற்றங்களுக்குரிய தண்டனையைப் பெறும் நிலையை நாட்டில் ஏற்படுத்தத் தக்க மக்கள் சட்டம் இயற்றப்பட்டு செயல்படுத்தப்படும் வரையில் இந்த இரண்டாம் சுதந்திரப் போர் ஓயாது. "வந்தே மாதரம்! இங்குலாப் ஜிந்தாபாத்" எனும் சுதந்திர முழக்கமும் அடங்காது, உரக்க உரக்க மேலெழும். இந்திய மக்களாகிய நாம் நாட்டில் லஞ்ச ஊழல் ஒழிந்து அனைவரும் நல்வாழ்வு வாழ வேண்டுமெனில் அனைவரும் ஒற்றுமையுடன் அன்னா ஹசாரேயின் வழியில் தொடர்ந்து செயல்பட்டுப் போராட வேண்டும். நமது இப்போராட்டம் வெற்றி பெற்றால் நம் நாடு உலக அரங்கில் முன்னேற்றமடைந்து இந்தியா வல்லரசாகும் கனவும் நிறைவேறும்.

"பாரத நாடு பழம்பெரு நாடு நீரதன் புதல்வர் இந்நினைவகற்றாதீர்" எனும் மஹாகவி பாரதியாரின் வரிகளை நாம் என்றென்றும் மனதில் கொண்டு, "இந்தியா, என் தாய் நாடு, இந்தியர்கள் யாவரும் என் உடன் பிறந்தவர்கள்' எனும் கொள்கையுடன் நாம் வாழ்வது இப்போராட்டத்துக்கு வலிமை சேர்க்கும். அவ்வாறன்றி சுயநலத்துடன் நாமும் நம் குடும்பத்தினரும் மட்டும் நன்றாக இருந்தால் போதும் நாட்டிலுள்ள பிறர் எவ்வாறாகிலும் வாடட்டும் எனும் போக்கில் நடந்தால் நம் நாடு உலக அரங்கில் முன்னேற்றமடைவது கடினம்.

நீ எந்த ஊரு நான் எந்த ஊரு?

திரைப்படம்: திருப்பாச்சி
இயற்றியவர்: பேரரசு
இசை: தீனா, மணி ஷர்மா, தேவி ஸ்ரீ ப்ரசத்
பாடியவர்: திப்பு

வாரே வாரே வாராரே அ தள்ளு வாரே வாரே வாராரே ஒத்துடா
வாரே வாரே வாராரே அடங்குடா
மச்சி மச்சி மச்சி மச்சி மச்சி மச்சி மச்சான்

நீ எந்த ஊரு நான் எந்த ஊரு? முகவரி தேவையில்லே இல்லே இல்லே
நீ என்ன உறவு நான் என்ன உறவு? சொந்தத்தில் அர்த்தமில்லே இல்லே இல்லே
தொப்புள் கொடி உறவா? இல்லே இல்லே ஏ
கட்சிக் கொடி உறவா? இல்லே இல்லே ஹை
மேட்டுக்குடி உறவா? இல்லே இல்லே அட
கள்ளுக் கடை உறவா? இல்லவே இல்லே

உன்னை யாரோ பெத்திருக்க என்னை யாரோ பெத்திருக்க
ஆனாலும் நீயும் நானும் அண்ணன் தம்பிடா ஹேய்
உன்னை யாரோ பெத்திருக்க என்னை யாரோ பெத்திருக்க
ஆனாலும் நீயும் நானும் அண்ணன் தம்பிடா

நீ எந்த ஊரு நான் எந்த ஊரு? முகவரி தேவையில்லே
இல்லே இல்லே இல்லே இல்லே
நீ என்ன உறவு நான் என்ன உறவு சொந்தத்தில் அர்த்தமில்லே
இல்லே இல்லே இல்லே இல்லே

எம்மோ எம்மோ எம்மோ எம்மோ
எம்மோ எம்மோ எம்மோ எம்மோ
எம்மோ எம்மோ எம்மோ எம்மோ
கக்காலக்கா கக்காலக்கா கக்காலக்கா கா
ஹே ஹே ஹேஹேஹே ஹே ஹே ஹேஹேஹே

சாமி வரம் தந்துட்டா ஓஓஓஓஓ கொட்டும் மழை கொட்டுண்டா
ஏழை மனம் பொங்குண்டா ஓஓஓஓஓ நன் ஐயனாரு பக்தண்டா
மண்ணை நம்பி வேரு விண்ணை நம்பி ஆறு
என்னை நம்பி யாரும் கெட்டதில்லை பாரு ஓஓஓஓ ஓஓஓஓ
ஒனக்கொரு பேரு எனக்கொரு பேரு
ஒண்ணு சேத்துப் பாரு இந்தியன்னு பேரு ஓஓஓஓ ஓஓஓஓ

பொறப்பும் இறப்பும் அவன் கையிலே நாம
வாழும் வாழ்க்கை நம்ம கையிலே ஹேய்
பொறப்பும் இறப்பும் அவன் கையிலே நாம
வாழும் வாழ்க்கை நம்ம கையிலே ஹே

நீ எந்த ஊரு நான் எந்த ஊரு? முகவரி தேவையில்லே
இல்லே இல்லே இல்லே இல்லே
நீ என்ன உறவு நான் என்ன உறவு? சொந்தத்தில் அர்த்தமில்லே
இல்லே இல்லே இல்லே இல்லே

அல்லேலல்லே லேலல்லோ தோதோதோ
அல்லேல்ல்லே லேலல்லோ தோ
அல்லேலல்லே லேலல்லோ தோதோதோதோ
அல்லேல்ல்லே லேலல்லோ தோ
அல்லேலல்லே லேலத்தோ ஹேய் அல்லேலல்லே லேலத்தோ
அல்லேலல்லே லேலத்தோ ஹேய் அல்லேலல்லே லேலத்தோ
ஆஹா ஆஆஆஆஆ ஏஹே ஏஏஏஏஏ

அம்மையப்பன் தானடா நம்மையாளும் சாமிடா
கருவறைத் தொழிடா நம்ம உயிர் நாடிடா
கண்ணப் பொத்திப் பாரு காதைப் பொத்தி வாழு
வாயைப் பொத்தி வாழு நம்ம காந்தி மொழி கேளு ஓஓஓஓ ஓஓஓஓ
ஆத்திகந்தான் மூச்சு சத்தியந்தான் பேச்சு
ஆசையெல்லாம் போச்சு நம்ம புத்தர் கொடியேத்து ஓஓஓஓ ஓஓஓஓ

அட பொறப்பும் இறப்பும் அவன் கையிலே நாம
வாழும் வாழ்க்கை நம்ம கையிலே ஹே
பொறப்பும் இறப்பும் அவன் கையிலே நாம
வாழும் வாழ்க்கை நம்ம கையிலே

நீ எந்த ஊரு
நீ எந்த ஊரு நான் எந்த ஊரு? முகவரி தேவையில்லே இல்லே இல்லே
நீ என்ன உறவு நான் என்ன உறவு? சொந்தத்தில் அர்த்தமில்லே இல்லே இல்லே
தொப்புள் கொடி உறவா இல்லே இல்லே
கட்சிக் கொடி உறவா? இல்லே இல்லே
மேட்டுக்குடி உறவா? இல்லே இல்லே அட
கள்ளுக் கடை உறவா? இல்லவே இல்லே

உன்னை யாரோ பெத்திருக்க என்னை யாரோ பெத்திருக்க
ஆனாலும் நீயும் நானும் அண்ணன் தம்பிடா ஹேய்
உன்னை யாரோ பெத்திருக்க என்னை யாரோ பெத்திருக்க
ஆனாலும் நீயும் நானும் அண்ணன் தம்பிடா நாம அண்ணன் தம்பிடா

திருடாதே, பாப்பா திருடாதே

ஞாலம் கருதினுக் கைகூடும் காலம்
கருதி இடத்தாற் செயின்

எனும் வள்ளுவர் வாக்கை மெய்ப்பிக்கும் விதமாக இன்று நம் நாட்டில் கத்தியின்றி ரத்தமின்றி ஒரு மாபெரும் புரட்சி உருவாகி இதுகாலம் நாட்டு மக்களை ஏமாற்றி ஊழல் செய்து பிழைத்து வந்த அரசியல்வாதிகள் பலரும் தலைகுனிந்து அடிபணியும் நிலையை ஏற்படுத்தியுள்ளார் காந்தியவாதி அன்னா ஹசாரே. ஊழலுக்கு எதிராக ஒரு வலுவான மக்கள் நலச் சட்டம் வகுக்க வேண்டுமென்று போராடிவரும் அவர் தக்க சமயம் பார்த்துத் தனது பெரும் போராட்டத்தைப் பிரம்மாண்டமான அளவில் தொடர்ந்துள்ளார். சுதந்திர தினத்திற்கு மறுதினம் காலவரையற்ற உண்ணாவிரதத்தைத் தொடங்கிய அவர் இந்திய பாராளுமன்றத்தின் மழைக்காலக் கூட்டத் தொடர் நடைபெரும் இன்றைய காலத்தில் மிகவும் முன்யோசனையுடன் சட்ட வல்லுனர்களான பிரசாந்த் பூஷன், சாந்தி பூஷண், அரவிந்த் கேசரிவால் மற்றும் புகழ்பெற்ற முன்னாள் காவல்துறைப் பெண் அதிகாரி கிரண் பேடி ஆகியோருடைய வலுவான துணையுடன் வியூகம் அமைத்து இந்திய மக்கள் பல்லாயிரக்கணக்கானோரை ஒன்றுதிரட்டி நடத்தும் இப்பெரும் போராட்டம் நாட்டின் பல்வேறு நகரங்களில் மட்டுமின்றிப் பல கிராமப் புறங்களிலும் பெருமளவில் அங்குள்ள மக்களால் கடைபிடிக்கப் படுவதோடு உலகெங்கிலுமுள்ள இந்தியர்களும் பங்குபெறும் நிலை இன்று உருவாகியுள்ளது.

சில மாதங்களுக்கு முன்னர் யோகா குரு பாபா ராம்தேவ் அவர்கள் டெல்லியின் ராம்லீலா மைதானத்தில் நடத்திய உண்ணாவிரதத்தை நள்ளிரவில் டெல்லி போலீசாரைக் கொண்டு தடியடி நடத்தி அப்பாவி மக்களையும் இளம் குழந்தைகளையும் மூதாட்டிகளையும் காயப்படுத்தி அடக்கியதுடன், பாபா ராம்தேவின் உதவியாளரின் மேல் போலிப் பட்டப் படிப்புச் சான்றிதழ் மூலம் நேபாளத்திலிருந்து இந்தியாவில் குடியேறியதாக வழக்குத் தொடுத்து அவரது போராட்டத்தைக் கட்டுப்படுத்தியது போல் அன்னா ஹசாரேயின் போராட்டத்தையும் கட்டுப்படுத்தி விடலாம் என மனப்பால் குடித்த மத்திய அமைச்சர்களின் சதிச் செயல் பலிக்கவில்லை. அன்னா ஹசாரே ஊழல் புரிந்ததாக இவர்கள் குற்றம் சாட்டியதும் எடுபடவில்லை. தாங்கள் செய்யும் ஊழல்களை யாரேனும் சுட்டிக் காட்டி மக்கள் நலனைக் காக்கப் போராடுகையில் அத்தகைய போராட்டத்தின் காரணத்தை உணர்ந்து உரிய நடவடிக்கை எடுத்து மக்களைக் காக்கும் கடமையைச் செய்வதற்கு பதில் அவ்வாறு தம் மீது குற்றம் சுமத்துபவர்கள் மீது பழி சுமத்தி தம் குற்றங்களைச் சுட்டிக்காட்ட அவர்காளுக்கு அருகதையில்லை எனும் விதத்தில் வாதாடித் தங்களது பகற்கொள்ளையைத் தொடர்ந்து நடத்தப் போட்ட சதித் திட்டங்கள் அம்பலமாகி விட்டன. மக்க்ள் இனிமேல் ஏமாற மாட்டார்கள். அதிலும் நம் நாட்டு இளைஞர்களை என்றும் ஏமாற்ற முடியாது. தகவல் தொழில்நுட்ப்ம் நன்கு வளர்ந்துள்ள நிலையில் நம் நாட்டு அரசியல்வாதிகளின் சாயம் சுத்தமாக வெளுத்துவிட்டது.

இனிமேல் எத்தர்கள் நல்லவர்களாக நடித்து நாட்டு மக்களை மொட்டையடித்து சொத்து சேர்க்கும் சதிச் செயல்கள் நிறைவேறா. குற்றம் புரிந்தவர்கள் தண்டனை அடைந்தே தீர வேண்டும். உப்புத் தின்றவன் த்ண்ணீர் குடித்தே தீர வேண்டும். இன்று நாட்டில் சட்டமியற்றுவோரே குற்றவாளிகளாக விளங்குவதால் குற்றங்களைக் களைவதற்கு ஏற்ற சட்டங்களையும் அவர்களே இயற்ற வேண்டும் எனும் மிகவும் இக்கட்டான நிலை நாட்டில் இருப்பதாலேயே நாட்டு மக்களுக்கு நலம் புரியும் மக்கள் சட்டம் முறையாக நிறைவேறுவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. இருப்பினும் இச்சிக்கல்கள் யாவையும் தீர்த்து மக்கள் நலம் பேணாத அரசு பதவியில் இருக்க இயலாது எனும் நிலைமையை அன்னா ஹசாரேயின் போராட்ட்ம் ஏற்படுத்தியுள்ளது.

மந்திரிகள் என உங்களைக் கூறிக்கொள்ளும் திருடர்களே, நீங்களாகத் திருந்துவதற்கு இது ஒரு அரிய வாய்ப்பு. நீங்கள் இன்றே திருந்த வேண்டும், இல்லாவிடில் பின்னர் வருந்த நேரிடும்.

திருடாதே, பாப்பா திருடாதே

திரைப்படம்: திருடாதே
இயற்றியவர்: பட்டுக்கோட்டை கல்யாண சுந்தரம்
இசை: எஸ்.எம். சுபைய்யா நாயுடு
பாடியவர்: டி.எம். சௌந்தரராஜன்

திருடாதே, பாப்பா திருடாதே
திருடாதே, பாப்பா திருடாதே
திருடாதே, பாப்பா திருடாதே
வறுமை நிலைக்கு பயந்துவிடாதே
வறுமை நிலைக்கு பயந்துவிடாதே
திறமை இருக்கு மறந்து விடாதே
திருடாதே, பாப்பா திருடாதே

சிந்தித்துப் பார்த்து செய்கையை மாற்று
சிறுசாய் இருக்கையில் திருத்திக்கோ தவறு
சிறுசாய் இருக்கையில் திருத்திக்கோ
சிந்தித்துப் பார்த்து செய்கையை மாற்று
சிறுசாய் இருக்கையில் திருத்திக்கோ தவறு
சிறுசாய் இருக்கையில் திருத்திக்கோ
தெரிஞ்சும் தெரியாம நடந்திருந்தா அது
திரும்பவும் வராம பாத்துக்கோ
தெரிஞ்சும் தெரியாம நடந்திருந்தா அது
திரும்பவும் வராம பாத்துக்கோ

திருடாதே, பாப்பா திருடாதே

திட்டம் போட்டுத் திருடுற கூட்டம்
திருடிக்கொண்டே இருக்குது
திட்டம் போட்டுத் திருடுற கூட்டம்
திருடிக்கொண்டே இருக்குது அதை
சட்டம் போட்டுத் தடுக்குற கூட்டம்
தடுத்துக்கொண்டே இருக்குது
சட்டம் போட்டுத் தடுக்குற கூட்டம்
தடுத்துக்கொண்டே இருக்குது
திருடராய்ப் பார்த்துத் திருந்தாவிட்டால்
திருட்டை ஒழிக்க முடியாது
திருடராய்ப் பார்த்துத் திருந்தாவிட்டால்
திருட்டை ஒழிக்க முடியாது

திருடாதே, பாப்பா திருடாதே

கொடுக்குற காலம் நெருங்குவதால் இனி
எடுக்குற அவசியம் இருக்காது
கொடுக்குற காலம் நெருங்குவதால் இனி
எடுக்குற அவசியம் இருக்காது இனி
எடுக்குற அவசியம் இருக்காது
இருக்குறதெல்லாம் பொதுவாய்ப் போனால்
இருக்குறதெல்லாம் பொதுவாய்ப் போனால்
பதுக்குற வேலையும் இருக்காது
ஒதுக்குற வேலையும் இருக்காது
உழைக்குற நோக்கம் உறுதியாயிட்டா
ஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஆ
உழைக்குற நோக்கம் உறுதியாயிட்டா
கெடுக்குற நோக்கம் வளராது மனம்
கீழும் மேலும் புரளாது
உழைக்குற நோக்கம் உறுதியாயிட்டா ஆஆஆஆஆஆஆ
கெடுக்குற நோக்கம் வளராது

திருடாதே, பாப்பா திருடாதே
வறுமை நிலைக்கு பயந்துவிடாதே
திறமை இருக்கு மறந்து விடாதே
திருடாதே, பாப்பா திருடாதே
பாப்பா திருடாதே