வியாழன், 28 ஜனவரி, 2016

கண்ணீலே நீர் எதற்கு?

ஐம்புலன்களின் வழியே ஆசைகள் நம் மனதினுள்ளே புகுந்து கொண்டு நம்மை ஆட்டிப் படைக்கின்றன. ஆசைவசப்பட்டவர்கள் தன் சுய உணர்வையே இழக்கும் நிலைக்கும் சில சமயங்களில் விதியினால் தள்ளப்படுவதுண்டு. விதி என்றால் என்ன? ஒரு கல்லை மேலே எரிந்தால் அது பூமியை நோக்கிக் கீழே விழுந்தே தீர வேண்டும். அது ஒரு விதி. அதே போல் ஆசைகள் துன்பத்தை விளைவிப்பது உறுதி. அதுவே விதி. அந்த விதியின் வலிமையை இளமையில் யாரும் உணர்வதில்லை. ஆசைவயப்பட்ட உள்ளம் அந்த ஆசை நிறைவேறுவதொன்றே குறிக்கோளாகக் கொண்டு நம்மை செயல்பட வைக்கிறது. ஆசை நிறைவேறி விட்டால் ஆணவம் வந்து அறிவைத் திரையிட்டு மறைக்கிறது. ஆசை நிறைவேறாத நிலை வந்தால் கோபமும் துக்கமும் மேலோங்கி அறிவை 
மழுங்கடிக்கின்றன. அத்தகைய மோஹ மாயையில் மூழ்கி உழலும் மனம் எளிதில் தெளிவடைவதில்லை.

தெளிந்த சிந்தையே அமைதிக்கு வழி, அறிவுக்கு வழி, இன்பத்துக்கு வழி. அத்தகைய தெளிந்த சிந்தை வேண்டின் ஆசைகளைக் கட்டுப்படுத்துதல் மிகவும் அவசியம். அவசியமான, நியாயமான தேவைகளை நிறைவேற்றிக் கொள்வதுடன் திருப்தியடைவதே ஆசைகளை அடக்குவதன் அடையாளம். ஒருவரும் உணவின்றி உயிர் வாழ்தல் அரிது. அவ்வுணவும் வயிறு நிறையுமளவே உண்ண இயலும். எண்ணிறந்த செல்வத்தை நியாயாற்ற முறையில் பேராசையால் சேர்த்து வைத்தவரால் அதிகம் உண்ண இயலுமா? உண்டால் செரிக்குமா? 

செல்வம் சேர்க்கும் ஆசையைக் காட்டிலும் அதிக வலுவானது காதல் ஆசை. அதுவும் வாலிப வயதில் அது எல்லை மீறவும் கூடும். ஆசை அறிவை மழுங்கச் செய்து தன் மேல் காதல் கொள்வதாகக் கூறும் ஒருவரது உண்மை நிலையை உணர மறுக்கும் நிலையில் மனம் ஆசைவயத்தில் செயல்படுகிறது. தன்னை உண்மையாகக் காதலிப்பதாக உறுதியளித்தவர் மனதில் உண்மையில்லை எனும் தீர்மானத்துக்கு மனம் சந்தர்ப்ப சூழ்நிலைகளால் வருகையில் அங்கே உயிர் துடித்து உள்ளம் துவண்டு வாழ்க்கையின் மேலேயே வெறுப்பு ஏற்படுமளவு அறிவு முற்றிலும் மழுங்கி விடுகிறது. 

ஒரு செல்வந்தரின் மகன் தன் தந்தையிடம் பணத்தை வாங்கி உல்லாச வாழ்வு வாழ்கிறான். தான் பார்க்கும் பெண்கள் பலரையும் தொடர்ந்து சென்று அவர்களோடு பழகிப் பொழுதைக் கழிக்கிறான். இடையில் தன் நண்பனின் தங்கையைக் கண்டு அவளிடம் மனதைப் பறிகொடுக்கிறான். இதுகாறும் தான் சென்ற பாதை தவறு என உணர்ந்து தன் காதலியுடன் சேர்ந்து வாழக் கனவு காண்கிறான். ஆனால் அவனது தந்தை அவனது தவறான போக்கைக் 
கேள்விப்பட்டு அவன் திருந்தி வாழத் தன் சகோதரியின் மகளை அவனுக்கு மணமுடித்து வைக்க எண்ணி அதை அவன் மறுக்கவிடாமல் செய்வதற்காகத் தன் சொத்துக்கள் அனைத்தையும் தன் சகோதரியின் மகள் பெயரில்  எழுதி வைத்துவிட்டு இறந்து விடுகிறார். இடையில் பழைய துஷ்ட சகவாசத்தால் ஏற்பட்ட சில சகாக்கள் இவனைப் பெரும் குற்றச் செயலில் மாட்ட வைக்க முயன்று அவனிடன் பணம் கேட்டு மிரட்டுகின்றனர். அதனால் அவன் தனது அத்தை மகளிடமிருந்து அவர்களுக்குத் தரத் தேவையான பணத்தைப் பெற வேண்டி அவளை விரும்புவது போல் காட்டிக் கொள்கிறான்.

இந்நிலையில் அவனது காதலியின் அண்ணன் இவனது செயல்களில் சந்தேகம் கொண்டு தன் தங்கையிடம் தனது நண்பனின் மோசத்தைப் பற்றிச் சொல்ல அந்தப் பெண்ணின் மனம் கதறுகிறது. கண்ணில் நீர் பெருக்கெடுத்து ஓடுகிறது. அவளுடன் சேர்ந்து அவளது அண்ணனும் அழுகிறான். அவர்கள் இருவரது உள்ளங்களுள் குமுறிப் பெருக்கெடுக்கும் உணர்ச்சி வெள்ளத்தைக் கவிஞர் வார்த்தைகளால் வடிக்க இந்தத் துடிப்பு மிக்க பாடல் உருவானது.


திரைப்படம்: போலீஸ்காரன் மகள்
இயற்றியவர்: கவிஞர் கண்ணதாசன்
இசை:  எம்.எஸ். விஸ்வநாதன், டி.கே. ராமமூர்த்தி
குரல்: சீர்காழி கோவிந்தராஜன், எஸ். ஜானகி

கண்ணீலே நீர் எதற்கு? ஹோ
காலமெல்லாம் அழுவதற்கு
நெஞ்சிலே நினைவெதற்கு? ஹோ
வஞ்சகரை மறாப்பதற்கு
கண்ணீலே நீர் எதற்கு? ஹோ
காலமெல்லாம் அழுவதற்கு

இன்பமெனும் மொழியெதற்கு?
செல்வத்தில் மிதப்பவர்க்கு
துன்பமென்ற சொல்லெதற்கு?
உள்ளமென்ப துள்ளவர்க்கு
கண்ணீலே நீர் எதற்கு? ஹோய்
காலமெல்லாம் அழுவதற்கு

கையிலே வளைவெதற்கு?
காதலியை அணைப்பதற்கு
காலிலே நடையெதற்கு?
காதலித்து திரிவதற்கு

கண்ணீலே நீர் எதற்கு? ஹோ
காலமெல்லாம் அழுவதற்கு

பாசமென்ற சொல்லெதற்கு?
பார்த்திருந்து துடிப்பதற்கு
ஆசை கொண்ட வாழ்வெதற்கு?
அன்றாடம் சாவதற்கு

கண்ணீலே நீர் எதற்கு? ஹோ
காலமெல்லாம் அழுவதற்கு

பூவிலே தேனெதற்கு?
வண்டு வந்து சுவைப்பதற்கு
வண்டுக்கு சிறகெதற்கு?
உண்ட பின்பு பறப்பதற்கு

கண்ணீலே நீர் எதற்கு? ஹோ
காலமெல்லாம் அழுவதற்கு
நெஞ்சிலே நினைவெதற்கு? ஹோ
வஞ்சகரை மறாப்பதற்கு
கண்ணீலே நீர் எதற்கு? ஹோ
காலமெல்லாம் அழுவதற்கு