புதன், 27 ஜனவரி, 2016

பண்ணோடு பிறந்தது தாளம்

பெண்களை தெய்வங்களாகப் போற்றி வணங்கிப் பூசித்துப் பெருமை கொள்ளும் அறிவிற் சிறந்த மாந்தர் வாழும் நாடு நமது பாரத நாடு. அத்தகைய மாண்பின் மகிமையால் நம் நாடு எத்தனையோ அன்னிய ஆக்கிரமிப்புகளையும், பொருளாதார, கலாச்சார சீர்கேடுகளையும் சந்தித்த போதும் அத்தகைய தீமைகளின் பிடியிலிருந்து மீண்டெழுந்து தலை நிமிர்ந்து வீறுநடை போடும் சக்திகொண்டு விளங்குவதன் ரகசியம் நம் தேசத்துப் பெண்களின் ஒழுக்க நெறிகளும் இல்லற நிர்வாகத் திறனும் ஆகும். இதனை அறிவுடையோர் எவரும் தயங்காது ஒத்துக்கொள்வர். நாம் ஒவ்வொருவரும் பிள்ளைப்பிராயத்திலிருந்து வளர்ந்து ஆளாகி வாழ்வில் சிறந்து விளங்க நம் ஒவ்வொருவரின் தாயார் எத்தனை சீரிய பராமரிப்பை நல்கியுள்ளார் என்பதை எண்ணிப் பார்த்தால் பெண்ணின் பெருமை விளங்கும். 

தன் கணவன் ஈட்டித் தரும் பொருள் அளவில் சொற்பமேயாயினும் அதிலும் சிறிதளவேனும் மிச்சம் பிடித்து, செலவைக் கட்டுப்படுத்தித் தன் பிள்ளைகளின் எதிர்காலத்துக்காக சேமித்து வைக்கும் பொறுப்பு நம் நாட்டுப் பெண்மணிகளிடம் நிலைபெற்று விளங்கும் தலையாய மேலாண்மைத் திறமாகும். இத்தகைய திறம் வாய்ந்த பெண்கள் உலகின் பிற நாடுகளில் குறைவே. நம் நாட்டின் பண்பாடு தொன்றுதொட்டு சிறந்து விளங்கிடக் காரணம் பெண்களுக்கு நாமனைவரும் தரும் உயர்ந்த மரியாதையே ஆகும்.

தற்காத்துத் தற்கொண்டாற் பேணித் தகைசான்ற
சொற்காத்துச் சோர்விலாள் பெண்.

என வள்ளுவர் ஈராயிரம் ஆண்டுகளுக்கு முன்னரே வகுத்துச் சென்ற இலக்கணப்படி நமது நாட்டின் பெண்கள் நடந்து வருவதாலேயே பெருமை பெறுகின்றனர்.

நாற்குணமும் நாற்படையா ஐம்புலனும் நல்லமைச்சா
ஆர்க்கும் சிலம்பே அணிமுரசா வேற்படையும் 
வாளுமே கண்ணா வதன மதிக்குடைக்கீழ் 
ஆளுமே பெண்மை யரசு.

எனப் புகழேந்திப் புலவர் தன் நளவெண்பா நாயகி தமயந்தியைப் புகழ்கிறார். தமயந்தியானவள் பெண்களுக்கு அமைய வேண்டிய அச்சம், மடம், நாணம் பயிர்ப்பு எனும் நான்கு குணங்களும் சிறந்து விளங்கி ஒரு நாட்டின் ரத, கஜ, துரக பதாதிகள் என அறியப்பட்ட நான்கு படைகளுக்கொப்பாக விளங்கிட, அவளது ஐம்புலன்களும் அறிவிற் சிறந்து நிற்கும் அமைச்சர்களுக்கொப்பாகத் திகழ, அவள் நடக்கையில் ஜல் ஜல் என ஆர்ப்பரிக்கின்ற அவளது காற்சிலம்பே போர் முரசாக விளங்க, அவளது இரு கண்களும் வேலும் வாளூமாகப் போர் புரியும் பெண்மையாகிய அரசு அவளது முழுமதியையொத்த முகமாகிய வெண்கொற்றக் குடையின் கீழ் ஆளுகிறது என அழகிய தமிழ்மொழியில் விளக்குகிறார்.

இந்த நான்கு குணங்களுள் மிகவும் இன்றியமையாதது மூன்றாவது குணமான நாணம். நாணமே பெண்மையின் அழகுக்கு அணிகலனாகிறது, பெண்ணின் அடக்கத்தையும் நல்லொழுக்கத்தையும் வெளிப்படுத்துகிறது. நாணமுள்ள பெண்களையே ஆடவர் விரும்பி மணக்க முன்வருகின்றனர் ஏனெனில் நாணம் எனும் குணம் நிறையப் பெற்ற பெண் பிற மூன்று குணங்களையும் அடைந்திருத்தல் உறுதி. நாணம் என்பது தம்மிலும் மூத்தோரிடத்தில் அவள் செலுத்தும் மரியாதை, பக்தி மற்றும் தன்னில் இளையோரிடம் காட்டும் அன்பும் கருணையும் ஆகிய அத்துணைப் பண்புகளையும் ஒருங்கே கொண்ட ஒப்புயர்வற்ற குணமாகும்.


திரைப்படம்: விடிவெள்ளி
இயற்றியவர்: கவிஞர் கண்ணதாசன்
இசை: ஏ.எம். ராஜா
பாடியோர்: ஜிக்கி, பி.பி. ஸ்ரீனிவாஸ்

ம்ஹ்ம்ம் ம்ம்ம் ஆஆஆஆ ஆஆஆஆஆ 
ம்ஹ்ம்ம் ம்ஹ்ம்ம் ம்ஹ்ம்ம் ம்ம்ம்

பண்ணோடு பிறந்தது தாளம்
பண்ணோடு பிறந்தது தாளம் குலப்
பெண்ணோடு பிறந்தது நாணம்
பண்ணோடு பிறந்தது தாளம்

கண்ணோடு கலந்தது காட்சி அந்தக்
கலையாவும் பெண்மையின் ஆட்சி
கண்ணோடு கலந்தது காட்சி அந்தக்
கலையாவும் பெண்மையின் ஆட்சி
மண்ணோடு மலர்ந்தது மானம் குல
மகள் கொண்ட சீதனம் யாவும்

பண்ணோடு பிறந்தது தாளம் குலப்
பெண்ணோடு பிறந்தது நாணம்
பண்ணோடு பிறந்தது தாளம்

செல்வோம் என்றே ஆசை எண்ணும் அங்கு
செல்லாமலே கால்கள் பின்னும்
செல்வோம் என்றே ஆசை எண்ணும் அங்கு
செல்லாமலே கால்கள் பின்னும்
சொல்வோம் என்றே உள்ளம் ஓடும் வார்த்தை
சொல்லாமலே இதழ் மூடும்

ம்ஹ்ம்ம் ஹ்ஹ்ம்ம் ம்ம் ம்ஹ்ம் குலப்
பெண்ணோடு பிறந்தது நாணம்
பண்ணோடு பிறந்தது தாளம்

ஒரு நாளும் பாடாத உள்ளம் இந்த
உறவாலே இசையோடு துள்ளும்
ஒரு நாளும் பாடாத உள்ளம் இந்த
உறவாலே இசையோடு துள்ளும்
படிக்காத பாடங்கள் சொல்லி முன்பு
பழகாத கல்விக்குத் தானிந்தப் பள்ளி

காணாத கதை இங்கு காண்போம் அதைக்
கண்டாலே பேரின்பம் தோன்றும்
காணாத கதை இங்கு காண்போம்

அஹஹ ஹாஹஹா ஹாஹஹ ஹாஆஆ
ம்ஹ்ம்ம் ம்ஹ்ம் ஹ்ம்ம்ம் ஹ்ம்ம்ம்
அஹஹ ஹாஹஹா ஹாஹஹ ஹாஆஆ
ம்ஹ்ம்ம் ம்ஹ்ம் ஹ்ம்ம்ம் ஹ்ம்ம்ம்