திங்கள், 1 பிப்ரவரி, 2016

எத்தனை கோடி பணமிருந்தாலும்

ஆயுள் முழுவதும் பொருளீட்டுவதிலேயே பெரும்பான்மையான நேரத்தை செலவிடும் நாம் அவ்வாறு பாடுபட்டு ஈட்டிய பொருளை வாழ்க்கை சிறக்கப் பயன்படுத்துகிறோமா என எண்ணிப் பார்த்தோமெனில் அனேகமாக நூற்றுக்குத் தொண்ணூறு பேர்களுக்கு மேல் இல்லையெனும் எண்ணத்தையே பெறுவார்கள். இதன் காரணம் பொருள் சேர்க்க செலவிடும் நேரத்தில் அப்பொருளை எவ்வாறு செலவிடுவது என்று திட்டமிடவும்  அவ்வாறு திட்டமிடும் செலவுகள் முறையானவை தானா, நமக்கும் பிறருக்கும் நன்மை பயக்கத் தக்கவையா என ஆழ்ந்து சிந்தித்து செயல்படுவோர் எவ்வளவு குறைந்த பொருளை ஈட்டினாலும் அதனால் மகிழ்ச்சியடைவர். மாறாக ஈட்டும் பொருளை மதுவருந்துதல் போன்ற தவறான பழக்கத்தினால் வீணடித்து சிற்றின்ப நாட்டத்தில் வாழ்வைக் கழிப்போர் விரைவில் பெருந்துன்பமுற்று மகிழ்ச்சியை இழப்பர். 

மதுவிலக்கு நம் தமிழ்நாட்டில் 1971 வரை அமுலிலிருந்த போதிலும் கள்ளச் சாராய வியாபாரம் ஆங்காங்கே நடந்து கொண்டுதானிருந்தது. இருப்பினும் மது அருந்துவோர் வெகு சிலரே இருந்தனர். எவரேனும் மது அருந்தி விட்டுத் தெருவில் நடந்தால் போலீஸ்காரர் அவரை ஊதச் சொல்லி சாராய வாடை வந்தால் கைது செய்வதுண்டு. இருப்பினும் மதுவின் கெடுதலை எடுத்துச் சொல்லி மக்களை நல்வழிப்படுத்தும் விதமாகப் பல திரைப்படக் கதைகள் அக்காலத்தில் அமைந்திருந்தன.  மதுவிலக்கு அமுலிலிருந்த போதும் மதுவிலக்கு பற்றிய விழிப்புணர்வை மக்களுக்கு ஊட்டி சாராயத்தின் கொடுமைகளிலிருந்து அவர்களைக் காப்பாற்றும் விதத்தில் அரசு செயல்பட்டு வந்தது. 

1972ஆம் ஆண்டு மதுவிலக்கு தளர்த்தப்பட்டு கள்ளுக் கடைகளும் சாராயக் கடைகளும் பெட்டிக்கடைகளுக்கீடாக மது விற்பனையில் மும்முரம் காட்டித் தமிழகத்தில் இருக்கும் லட்சக்கணக்கான மக்களைக் குடிகாரர்களாக்கி அவர்கள் உழைத்து ஈட்டும் பணத்தில் பெரும் பகுதியை மதுவருந்துவதற்காகவே செலவு செய்ய வைக்கும் நிலை அன்று முதல் இன்றுவரை நீடிக்கிறது. மதுவின் கெடுதியை மக்களுக்கு எடுத்துச் சொல்லி விளங்க வைக்கும் பணியில் அரசு சிறிதளவும் அக்கரை காட்டாமல் சாராய சாம்ராஜ்யம் கொடிகட்டிப் பறக்கிறது.

மதுவை ஆரம்ப காலத்தில் அற்ப சந்தோஷத்திற்காகப் பயன்படுத்தியவர்கள் நாளடைவில் மதுவிற்கடிமையாகி மது அருந்தாமல் சிறிது நேரமும் இருக்க முடியாத நிலைமைக்குத் தள்ளப்பட்டு, தன் வருவாய் மட்டுமின்றித் தன் குடும்பத்தாரின் பொருட்களையும் விற்று மதுவைக் குடிக்குமளவுக்கு அறிவு மழுங்கித் தன்னிலை குலைந்து நடைபிணமாக மிக இழிவான வாழ்க்கை நடத்துகின்றனர். இத்தகைய மது அடிமைகள் பெரும்பாலோர் மதுவிற்காகத் தம் ஓட்டுரிமையையும் அடமானம் வைக்கின்றனர். அதனாலேயே மீண்டும் மீண்டும் நாட்டை ஆளும் உரிமையை சமூக விரோதிகள் அடைந்து மக்கள் விலைவாசி ஏற்றத்தாலும் சமூக சீர்கேடுகளாலும் பெரும் அவதியுறும் நிலை நிலவுகிறது. 

இவ்வாறு மதுவுக்கு அடிமையான தொழிலாளிகள் பலர் தங்களது குழந்தைகளை முறையாக வளர்த்த இயலாமல் அவதிப்படுகின்றனர். பெரும்பாலோரது குழந்தைகள் பள்ளிப் படிப்பைத் தொடர வழியின்றிக் குழந்தைத் தொழிலாளர்களாக வேலை செய்து தம் குடும்பங்களைக் காக்கும் கடமையை இளம் வயதிலேயே சுமக்க வேண்டிய நிலை வருகிறது. தாய்மார்களும் தம் கணவன்மார்கள் குடிகாரர்களாக சீரழிந்து கிடக்கும் நிலையில் பல வீடுகளில் குற்றேவல் புரிந்து தம் குடும்பத்தைக் காப்பாற்ற வேண்டிய நிலைக்குத் தள்ளப்பட்டு அவதியுறுகின்றனர். இந்தப் பாழாய்ப் போன மதுவை அருந்தி மயங்கிக் கிடக்கும் நிலையிலிருந்து மக்கள் என்று மீள்கின்றனரோ அன்றே அரசு நல்லரசாக இருக்க வாய்ப்பு வரும். அதுவரை சங்கடங்கள் மேலும் தொடருமேயன்றி விடிவு காலம் விரைவில் வாராது.


திரைப்படம்: அன்பு எங்கே
இயற்றியவர்: கவிஞர் கண்ணதாசன்
இசை: வேதா
பாடியவர்: பி. சுசீலா
ஆண்டு: 1958

எத்தனை கோடி பணமிருந்தாலும்
நிம்மதி வேண்டும் வீட்டிலே
நிம்மதி வேண்டும் வீட்டிலே
எத்தனை கோடி பணமிருந்தாலும்
நிம்மதி வேண்டும் வீட்டிலே
நிம்மதி வேண்டும் வீட்டிலே

உத்தமமான மனிதர்களைத்தான்
உலகம் புகழுது ஏட்டிலே இந்த
உலகம் புகழுது ஏட்டிலே

அர்த்த ராத்திரி பனிரெண்டு மணிக்கு
ஆடிக்கொண்டே நுழைவதை
அகப்பட்டதெல்லாம் தூக்கி எறிந்து
ஆர்ப்பாட்டங்கள் செய்வதை
அடுத்த நாளில் நினைத்துப் பார்த்தால்
வெட்கம் வருவது இல்லையா?
அடுத்த நாளில் நினைத்துப் பார்த்தால்
வெட்கம் வருவது இல்லையா?
சின்னையா நீ சொல்லையா
சின்னையா நீ சொல்லையா

எத்தனை கோடி பணமிருந்தாலும்
நிம்மதி வேண்டும் வீட்டிலே
நிம்மதி வேண்டும் வீட்டிலே

அன்னமுமிட்டுத் தாலாட்டி
ஆசையோடு வளர்த்தாள் - அந்த
அன்னையரின் எண்ணம் தன்னைக்
கனவினிலே வளர்த்தே
முன்னவர் போல் பெயரெடுத்து
முறையோடு வாழும்
முடிவு கொள்வீர் வாழ்வினில் நாளும்
துணை புரிவேன் நானும் தினம்
துணை புரிவேன் நானும்

எத்தனை கோடி பணமிருந்தாலும் 
நிம்மதி வேண்டும் வீட்டிலே 
நிம்மதி வேண்டும் வீட்டிலே
நிம்மதி வேண்டும் வீட்டிலே