திங்கள், 22 செப்டம்பர், 2014

எங்கிருந்த போதும் உன்னை மறக்க முடியுமா?

தினம் ஒரு பாடல்: ஜூலை 7, 2014

உலகில் நாம் ஒவ்வொருவரும் வாழ விரும்புவதற்கு ஓரே காரணம் உறவுகள். தாய், தந்தை, சித்தப்பா, சித்தி, மாமன், அத்தை, அண்ணன், தம்பி, அக்காள், தங்கை முதலான உறவுகளுடன் ஒருவரின் சிறுவயதில் துவங்கும் வாழ்க்கை அவ்வுறவுகளுடனும் அவ்வுறவுகளின் குழந்தைகளுடனும் வளர்கிறது. இடையில் ஏதேனும் ஒரு சமயம் ஒருவருக்குத் திருமணம் நடக்கையில் கணவன், மனைவி உறவு ஒரு புது இன்ப உறவாக வருகிறது. 

சுகமான அந்த இல்லற இன்பம் பிள்ளைகள் பிறந்ததும் சொர்க்கலோகமாக மாறுகிறது. அதுவரை தனக்காகவும் தன் வாழ்க்கைத் துணைவருக்காகவும் வாழ்ந்த வாழ்க்கை முற்றிலும் பிள்ளைகளுக்காக என மலர்கையில் அந்த இன்பம் பன்மடங்காகப் பெருகிக் குதூகலத்தில் உள்ளமும் உயிரும் அனைத்து உணர்வுகளும் திளைக்கின்றன.

இடையில் தாய், தந்தை மற்றும் பிற மூத்த உறவினர்கள் ஒவ்வொருவராக உயிர் நீத்து இவ்வுலகை விட்டுப் போகும் படலம் தொடங்கித் தொடர்கையில் வாழ்க்கையின் நிலையாமை ஓரளவு புரிகிறது. 

பின்னர் பிள்ளைகளுக்குத் திருமணம் செய்து வைப்பதும் அவர்கள் இல்லற வாழ்வை அனுபவிப்பதைக் கண்டு மகிழ்வதுமாகத் தொடரும் வாழ்க்கை பேரன், பேத்தி பாக்கியம் கிடைத்ததும் ஒரு உச்ச கட்டத்தைத் தொடுகிறது. 

உச்ச கட்டத்தின் அடுத்த பகுதி வீழ்ச்சியேயன்றோ? அவ்வியற்கை நியதிப்படி ஒருவரின் வாழ்க்கைத் துணை இந்த உலகை விட்டுப் பிரிகையில் அத்துயர் அதுவரை அனுபவித்த துயர்கள் அனைத்தையும் மிஞ்சுமளவு பெருந்துயராகத் தென்படுகிறது. வாழ்க்கைத் துணையின் மறைவுக்குப் பின்னர் ஒருவரது நினைவு முழுதும் அதன் பிறகு அத்துணையுடன் வாழ்ந்த நாட்களையும் நிகழ்ச்சிகளிலும் எண்ணிப்பார்த்து மகிழ்ந்தும் சோகத்தில் மூழ்கியும் இருக்கும் நிலையிலேயே இறப்பு வரை கழிகிறது. வாழ்வின் பெரும்பகுதியில் தன் செயல்களுக்கு ஊக்கமளித்து உடன் இருந்து இன்ப துன்பங்களில் பங்குகொண்டு வாழ்விற்கு ஒருஅர்த்தத்தைத் தந்த உன்னத 
உறவல்லவா? அவ்வுறவின் பிரிவு ஒருவரை நிலைகுலையச் செய்து விடுகிறது. இவ்வுண்மை எனது மூத்தோர் படும் அனுபவங்களைக் கேட்டுணர்ந்து சொல்கிறேன். 

அத்தகைய பிரிவுத் துயரைப் பேரன் பேத்திகள் ஓரளவு குறைக்கின்றன என்பதால் வாழ்வும் ஓடுகிறது. பிரிவுத் துயர் என்பது மூத்த வயதினரை மட்டுமின்றி இளம் காதலர்களையும் பல சந்தர்ப்பங்களில் படுத்துகின்றது. காதல் வயப்பட்ட ஒரு இளம்பெண்ணின் அத்தகைய பிரிவுத் துயரை வெளிப்படுத்தும் ஒருஇனிய பாடல் இதோ:


திரைப்படம்: நீங்காத நினைவு
இயற்றியவர்: கவிஞர் வாலி
இசை: கே.வி.மஹாதேவன்
பாடியவர்: பி.சுசீலா

எங்கிருந்த போதும் உன்னை மறக்க முடியுமா?
என்னை விட்டு உன் நினைவைப் பிரிக்க முடியுமா?
எங்கிருந்த போதும் உன்னை மறக்க முடியுமா?
என்னை விட்டு உன் நினைவைப் பிரிக்க முடியுமா? ஆஆஆ
எங்கிருந்த போதும் உன்னை மறக்க முடியுமா ஆ ஆ

கண்கள் காணும் கனவிலே உன் முகம் இருக்கும்
காற்றிலாடும் ரோஜாப் போல் சிவந்தே சிரிக்கும்
கண்கள் காணும் கனவிலே உன் முகம் இருக்கும்
காற்றிலாடும் ரோஜாப் போல் சிவந்தே சிரிக்கும்
அன்பு உண்மையாயிருந்தால் உன்னை அழைக்கும்
அன்பு உண்மையாயிருந்தால் உன்னை அழைக்கும்
இன்பமே வாழ்விலே தந்திடும்

எங்கிருந்த போதும் உன்னை மறக்க முடியுமா?
என்னை விட்டு உன் நினைவைப் பிரிக்க முடியுமா?
எங்கிருந்த போதும் உன்னை மறக்க முடியுமா? ஆ ஆ

பூவுமில்லை பொட்டுமில்லை புன்னகையில்லை
நீ இல்லாத உலகத்திலே சிங்காரமில்லை
பூவுமில்லை பொட்டுமில்லை புன்னகையில்லை
நீ இல்லாத உலகத்திலே சிங்காரமில்லை
வாழ்வுமில்லை வளமுமில்லை சந்தோஷமில்லை
வாழ்வுமில்லை வளமுமில்லை சந்தோஷமில்லை
வருவதே நிம்மதி இல்லையே

எங்கிருந்த போதும் உன்னை மறக்க முடியுமா?
என்னை விட்டு உன் நினைவைப் பிரிக்க முடியுமா?
எங்கிருந்த போதும் உன்னை மறக்க முடியுமா? ஆஆஆஆ ஆ