செவ்வாய், 24 ஜனவரி, 2012

மதுரை அரசாளும் மீனாட்சி


மாதா, பிதா, குரு, தெய்வம் என்று நம் ஒவ்வொருவரையும் காக்கும் சக்திகளை வரிசைப் படுத்தியுள்ளனர் நம் முன்னோர்கள். தாயிற் சிறந்த கோவிலுமில்லை, தந்தை சொல் மிக்க மந்திரமில்லை, குருவே துணை என்று இவற்றுள் முதல் மூவரைப் பற்றியும் சிறப்பித்த பின்னரே தெய்வத்தைக் குறித்துப் பல துதிகள் வழங்கப் பட்டன. இவற்றில் அன்னையின் அன்பிற்கு ஈடாக ஏதும் இல்லை என்பதனாலேயே பால் நினைந்தூட்டும் தாயினும் சாலப் பரிந்து இறைவன் அருள்வதாக இறைவனின் அடியார்கள் இறைவனைத் தாய்க்கு நிகராகக் கொண்டு வழிபட்டனர். அவ்வாறு தாயின் வடிவில் அருள் புரிபவள் அன்னை பராசக்தி. அவள் காஞ்சிமாநகரில் காமாட்சியாகவும், மதுரையம்பதியில் மீனாட்சியாகவும், காசியில் விசாலாட்சியாகவும் அருள் பாலிக்கிறாள்.

காஞ்சி காமாட்சி ஆலயம் காஞ்சி ஸ்ரீ மடாதிபதிகளால் நிர்வகிக்கப் படுகிறது. இவ்வாலயத்தில் அன்னை மீனாட்சியின் அருள் அனைவருக்கும் சமமாகக் கிடைக்கும் வகையில் கட்டணம் ஏதும் வசூலிப்பதில்லை. காஞ்சி காமகோடி பீடாதிபதி காமாட்சியின் ஆலயத்துக்குப் பொன்கூரை வேய்ந்து சிறப்பித்துள்ளார். ஸ்ரீ மடத்தின் மூலம் எண்ணற்ற தரும கைங்கர்யங்கள் நிறைவேற்றப் படுகின்றன.

ஆண்டவன் சன்னதியில் அனைவரும் சமம் என்பது உண்மையின் தத்துவம். முற்காலத்தில் நம் நாட்டை ஆண்ட மன்னர்கள் மக்கள் யாவரையும் சமமாக மதித்துப் போற்றினர் எனும் உண்மையை உலகத்தார்க்கு உணர்த்துபவை அம்மன்னர்கள் அரும்பாடுபட்டுக் கட்டிய அற்புதமான ஆலயங்கள். ஆனால் இன்றோ கருப்புப் பண பலத்தாலும் ஆள் பலத்தாலும் ஆட்சிக்கு வந்து நாட்டை ஆட்டிப் படைக்கும் சுயநலவாதிகள் மக்களைப் பல்வேறு வழிகளிலும் கசக்கிப் பிழிந்து அவர்கள் தங்கள் உயிர் வாழ்வுக்காகப் பாடுபட்டு ஈட்டும் பணத்தைப் பகல் கொள்ளையடிக்கவென்று வகுத்த திட்டங்களுள் ஒன்றே ஆலய தரிசன டிக்கட்.

மதுரை மீனாட்சியம்மன் ஆலயத்தை நான் முதலில் தரிசித்தது என் தாய், தந்தை, சகோதரன், சகோதரி ஆகியோருடன் 1964ஆம் ஆண்டாகும். அதன் பின்னர் 1980ஆம் ஆண்டு ஒரு முறை என் தந்தையுடன் சென்று தரிசித்தேன். அப்பொழுது அங்கு திருமுருக கிருபானந்த வாரியார் சொற்பொழிவு நிகழ்ந்தது. சொற்பொழிவை என் தந்தையுடன் அமர்ந்து கேட்டேன். சொற்பொழிவு முடிந்ததும் திருமுருக கிருபானந்தவாரியார் அவர்கள் தன்னிடம் வரிசையில் வந்து நின்ற அன்பர்கள் அனைவருக்கும் தனது திருக்கரத்தால் திருநீறு அணிவித்து ஆசி வழங்கினார். வரிசையில் நானும் நின்று அவர் கையால் திருநீறு அணியப் பெற்றேன். அதன் பின்னர் என் மனைவியுடன் 1984ஆம் ஆண்டு மீனாட்சியம்மனை தரிசித்தேன். அப்பொழுதெல்லாம் பொதுமக்கள் அனைவரும் எவ்விதக் கட்டுப்பாடுமின்றி ஆலயத்தினுள் சென்று பார்வையிடவும் வழிபடவும் முடிந்தது. ஆனால் தற்போது 2012 ஜனவரி முதல் தேதியன்று என் கல்லூரித் தொழர்களுடன் அமைந்த மதுரை சந்திப்பின் போது நண்பர்கள் அனைவருடனும் சேர்ந்து தரிசிக்கச் செல்கையில் முன்பிருந்த உற்சாகம் இல்லை, காரணம் தர்ம தரிசனம், சிறப்பு தரிசனம் என பக்தர்களைப் பிரித்து தரிசன டிக்கட் மூலம் வசூல் வேட்டை நடத்த ஆலயமெங்கும் அமைக்கப் பட்ட தடைகள். 1995ஆம் வருடம் முதலே இந்த அவலம் நிறைவேறி வருகிறது என அவ்வமயம் அங்கே வந்திருந்த மூத்த அன்பர் ஒருவர் மூலம் அறிந்தேன்.

கடவுளைக் காட்சிப் பொருளாக்கிக் காசு பண்ணும் சிறுமை கண்டு மனம் கொதிக்கிறதேயன்றி ஆலயத்தில் இறைவழிபாட்டில் ஈடுபாடு வரவில்லை. ஆலயம் தொல்பொருட்காட்சியகமாக மாறியுள்ளதை உணர்ந்து அதிர்ச்சியுற்றேன். ஆலய்த்தின் உள்ளே பல கடைகள் அலங்காரப் பொருட்களும் கடவுளர் படங்களும் பிற பொருட்கள் பலவும் விற்பனை செய்யும் வகையில் அமைக்கப்பட்டுள்ளன. அன்னை மீனாட்சியின் கைகள், கால்கள் மட்டுமன்றிக் கண்களையும் கட்டிப் போட்டது போன்றதோர் உணர்வே மேலோங்கியது.

நாட்டு மக்களைக் காப்பது அரசின் கடமை. அக்கடமையை அரசு முறையாக ஆற்றாமல் பல்வேறு வகையிலும் மக்கள் துன்புறுவதை அனுமதித்துள்ள நிலையில் மன நிம்மதி நாடி ஆலயங்களுக்குச் சென்று ஆண்டவனிடம் தங்கள் மனக்குறையை முறையிடச் செல்ல வேண்டுமாயின் அதற்கும் காசு கொடுத்தாலே இயலும் எனும் இக்கட்டான சூழ்நிலை நாட்டுக்குக் கேடு விளைவிப்பதாகும். இந்நிலைமை மாற வேண்டும். இறைவன் அருள் அனைவர்க்கும் எளிதில் கிட்ட வேண்டும். இறையருள் வியாபாரப் பொருளாக்கப் பட்டது மனித வர்க்கத்தின் சுயநல வெறியாட்டத்தின் உச்சகட்டமாகும். இத்தகைய வெறியாட்டம் அழிவுக்கே வழி வகுக்கும்.

இதனால் எழும் பெரிய சந்தேகம்: மதுரை மீனாட்சி ஆள்கிறாளா அல்லது அடிமையாக ஆளப்படுகிறாளா?

மதுரை அரசாளும் மீனாட்சி

திரைப்படம்: திருமலை தென்குமரி
இயற்றியவர்: உளுந்தூர்ப் பேட்டை சண்முகம்
இசை: குன்னக்குடி வைத்தியநாதன்
பாடியவர்: சீர்காழி கோவிந்தராஜன்

ஓம்
சஹனா பவது;சகனௌ புனக்து
சக வீர்யம் கரவாவகை
தேஜஸ் விநாவதி தமஸ்து
மா வித் விஷாவகை
ஓம் சாந்தி சாந்தி சாந்தி

மதுரை அரசாளும் மீனாட்சி
மாநகர் காஞ்சியிலே காமாட்சி
மதுரை அரசாளும் மீனாட்சி
மாநகர் காஞ்சியிலே காமாட்சி
மதுரை அரசாளும் மீனாட்சி

தில்லையில் அவள் பெயர் சிவகாமி
திருக்கடவூரினிலே அபிராமி
தில்லையில் அவள் பெயர் சிவகாமி
திருக்கடவூரினிலே அபிராமி
நெல்லையில் அருள்தருவாள் காந்திமதி
நெல்லையில் அருள்தருவாள் காந்திமதி
அன்னை அவளல்லால் ஏது கதி?

மதுரை அரசாளும் மீனாட்சி
மாநகர் காஞ்சியிலே காமாட்சி
மதுரை அரசாளும் மீனாட்சி

திரிபுர சுந்தரி சீர்காழியிலே சீர்காழியிலே
ஆஆஆஆஆஆஆ ஆஆஆஆஆ....
திரிபுர சுந்தரி சீர்காழியிலே
சிவசக்தி பார்வதி கயிலையிலே
திரிபுர சுந்தரி சீர்காழியிலே
சிவசக்தி பார்வதி கயிலையிலே
வரம் தரும் கற்பகமாம் மயிலையிலே
வரம் தரும் கற்பகமாம் மயிலையிலே
வஞ்சமில்லா நெஞ்சில் வாழ்பவளே

மதுரை அரசாளும் மீனாட்சி
மாநகர் காஞ்சியிலே காமாட்சி
மதுரை அரசாளும் மீனாட்சி

திருவேற்காட்டினிலே கருமாரி
தென்புதுவை நகரினிலே முத்துமாரி
திருவேற்காட்டினிலே கருமாரி
தென்புதுவை நகரினிலே முத்துமாரி
சமயபுரம் தன்னில் மகமாயி
சமயபுரம் தன்னில் மகமாயி
சௌபாக்யம் தந்திடுவாள் மாகாளி சகல
சௌபாக்யம் தந்திடுவாள் மாகாளி