திங்கள், 23 நவம்பர், 2009

பூங்கொடி தான் பூத்ததம்மா

ஆசைகளே துன்பத்துக்குக் காரணம், ஆகவே ஆசையை விட்டொழியுங்கள் என்று ஞானியர்கள் அறிவுறுத்துகின்றனர். ஆனால் அவ்வாறு ஆசைகளை அறவே ஒழிக்க அந்த ஞானிகளாலேயே இயலாதென்பதுவே உண்மை. ஆனால் ஞானிகள் தங்களது ஆசைகளை அறவே ஒழிக்கும் முயற்சியில் தொடர்ந்து ஈடுபட்டுள்ளனர் என்பதும் உண்மை. இதனை ஞானயோகம் என்று சொல்வர். இதனைக் கடைபிடிப்பது சாமான்யர்களுக்கு இயலாது. எது சாத்தியமோ அதனையே முயற்சிக்க வேண்டு்ம். ஆகவே உலக வாழ்வில் இல்லற மார்க்கமே சிறந்ததென ரிஷிகளுள் தலையாயவராகக் கருதப் படும் ஜனக முனிவர் அறிவுறுத்தி, அதன்படி வாழ்ந்தும் காட்டினார் எனப் பல அறிஞர்கள் எழுதிய நூல்களின் வாயிலாக அறிகிறோம்.
அவ்வாறு இல்லற வாழ்வில் ஈடுபடுவோர்க்கு ஆசைகளே வாழ்வுக்கு ஆதாரம், ஆனால் ஆசைகள் அளவுக்குட்பட்டும், நியாயமானவையாகவும் அமைய வேண்டும். பேராசையாகவோ அடுத்தவர் உரிமையைப் பறிப்பதாகவோ அமைவது தவறு.

நாணத்தினாலும், தேவையற்ற அச்சத்தினாலும் ஏற்படும் தயக்கத்தால் மனதில் எழும் ஆசைகளை வெளியில் சொல்லாமல் மறைத்தல் அவ்வாசைகள் நிறைவேறுதில் தாமதத்தையும் ஆசைகள் நிறைவேறா நிலைமையையும் ஏற்படுத்துதல் உண்டு.

குறிப்பாகக் காதல் உணர்வுகளை மறைப்பதால் அக்காதல் நிறைவேறுதல் சாத்தியமாகாது. ஒருவரைக் காதலிக்கும் ஆணோ பெண்ணோ தனது காதலைத் தான் காதலிக்கும் நபரிடம் விரைவில் தெரிவிப்பது அக்காதல் வெற்றியடையத் தேவையான முதல் முயற்சியாகும். அம்முயற்சியில் தோல்வி கண்டால் பாதகமில்லை, மனதைத் தேற்றிக்கொள்ள வழிகள் உள்ளன, ஆனால் முயற்சியே செய்யாதிருந்து, அதனால் உள்ளத்தில் உதித்த காதல் கானல் நீராவது மிகவும் வேதனை தரக்கூடியதாகும்.

பூங்கொடி தான் பூத்ததம்மா

இதயம்
இளையராஜா
எஸ்.பி. பாலசுப்பிரமணியம்

பூங்கொடி தான் பூத்ததம்மா பொன்வண்டு தான் பார்த்ததம்மா
பாட்டெடுக்க தாமதிக்க வாடைக் காற்று பூப்பறித்து போனதம்மா
பூங்கொடி தான் பூத்ததம்மா பொன்வண்டு தான் பார்த்ததம்மா

ஆசைக்குத் தாள் போட்டு அடைத்தென்ன லாபம்?
அது தானே குடந்தன்னில் எரிகின்ற தீபம்
மனதோடு திரை போட்டு மறைக்கின்ற மோகம்
மழை நீரைப் பொழியாமல் இருக்கின்ற மேகம்
சிலருக்கு சில நேரம் துணிச்சல்கள் பிறக்காது
துணிச்சல்கள் பிறக்காமல் கதவுகள் திறக்காது
காட்டாத காதலெல்லாம் மீட்டாத வீணையைப் போல் ஓ..ஓ..ஓ..ஓ..ஓ..ஓ..

பூங்கொடி தான் பூத்ததம்மா பொன்வண்டு தான் பார்த்ததம்மா
பாட்டெடுக்க தாமதிக்க வாடைக் காற்று பூப்பறித்து போனதம்மா
பூங்கொடி தான் பூத்ததம்மா பொன்வண்டு தான் பார்த்ததம்மா

தாய் கூட அழுகின்ற பிள்ளைக்குத் தானே
பசி என்று பரிவோடு பாலூட்ட வருவாள்
உன் வீட்டுக் கண்ணாடி ஆனாலும் கூட
முன் வந்து நின்றால் தான் முகம் காட்டும் இங்கே
மனதுக்குள் பல கோடி நினைவுகள் இருந்தாலும்
உதடுகள் திறந்தால் தான் உதவிகள் பெறக்கூடும்
கோழைக்குக் காதலென்ன? ஊமைக்குப் பாடலென்ன? ஓ..ஓ..ஓ..ஓ..ஓ..ஓ..

பூங்கொடி தான் பூத்ததம்மா பொன்வண்டு தான் பார்த்ததம்மா
பாட்டெடுக்க தாமதிக்க வாடைக் காற்று பூப்பறித்து போனதம்மா
பூங்கொடி தான் பூத்ததம்மா பொன்வண்டு தான் பார்த்ததம்மா

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக