திங்கள், 23 நவம்பர், 2009

சில்லென்று பூத்த சிறுநெருஞ்சிக் காட்டினிலே

ஒரு பெண்ணின் மேல் காதல் கொண்ட ஆடவனுக்கு இவ்வுலகமே அவளாகத் தோன்றுதல் காதல் செய்யும் மாயம். காதலி வருகைக்காகக் காத்திருக்கும் நேரம் அவனுக்கு முள் மேல் நிற்பது போன்ற துன்பத்தைத் தரும். அவள் வந்து விட்டாலோ வாடிய அவன் முகம் ஒளிபெறும். அவள் பேசும் மொழி அவனுக்குத் தேன் போல இனிப்பதுடன் அவளது உருவம் உலகிலுள்ள அழகிய பொருட்களையெல்லாம் நினைவுறுத்தும்.
அவளது முகம் மலர்ந்து சிரிப்பது முழுமதி போலவும், இடை மலர்க்கொடி போலவும், அவளது நீல விழிகளே கடலுக்கு நீல நிறத்தைத் தந்தாற் போலவும் இவ்வாறாகப் பலவிதமான கற்பனைகளில் மிதப்பதும் அவற்றைக் கவிதையில் வடிப்பதும் காதலர்க்கு வாடிக்கை. கவிஞர்களல்லவா கவிதைகளை வடிக்கின்றனர்? எனும் கேள்வி எழுமாயின் கவிஞர்கள் எல்லாரும் காதல் உணர்வு கொண்ட மாந்தர்களே என்பதை உணர்ந்தால் பதில் கிடைக்கும். கவிஞர்களெல்லாம் காதலர்களே, ஆனால் காதலர்களெல்லாம் கவிஞர்கள் அல்ல, என்றாலும் காதல் உணர்வு உள்ளத்தில் உருவாகிவிட்டால் கவிஞர் அல்லாத யாரும் கவிஞராகலாம்.

சில்லென்று பூத்த சிறுநெருஞ்சிக் காட்டினிலே

மாலையிட்ட மங்கை
கவிஞர் கண்ணதாசன்
டி.ஆர். மஹாலிங்கம்
எம்.எஸ். விஸ்வநாதன், டி.கே. ராமமூர்த்தி

சில்லென்று பூத்த சிறுநெருஞ்சிக் காட்டினிலே
நில்லென்று கூறி நிறுத்தி வழி போனாளே
நின்றது போல் நின்றாள் நெடுந்தூரம் பறந்தாள்
நிற்குமோ ஆவி நிலைக்குமோ நெஞ்சம்
மணம் பெறுமோ வாழ்வே ஆ.ஆ. ஆஆஆஆஆ

செந்தமிழ்த் தேன் மொழியாள் நிலாவென
சிரிக்கும் மலர்க் கொடியாள் நிலாவென
சிரிக்கும் மலர்க் கொடியாள்
பைங்கனி இதழில் பழரசம் தருவாள்
பருகிடத் தலை குனிவாள்

காற்றினில் பிறந்தவளோ புதிதாய்க்
கற்பனை வடித்தவளோ ஆ..ஆஆ...ஆஆ.
காற்றினில் பிறந்தவளோ புதிதாய்க்
கற்பனை வடித்தவளோ
சேற்றினில் மலர்ந்த செந்தாமரையோ
செவ்வந்திப் பூச்சரமோ - அவள்

செந்தமிழ்த் தேன் மொழியாள் நிலாவென
சிரிக்கும் மலர்க் கொடியாள் நிலாவென
சிர்க்கும் மலர்க் கொடியாள்
பைங்கனி இதழில் பழரசம் தருவாள்
பருகிடத் தலை குனிவாள்

கண்களில் நீலம் விளைத்தவளோ அதைக்
கடலினில் கொண்டு கரைத்தவளோ
பெண்ணுக்குப் பெண்ணே பேராசை கொள்ளும்
பேரழகெல்லாம் படைத்தவளோ - அவள்

செந்தமிழ்த் தேன் மொழியாள் நிலாவென
சிரிக்கும் மலர்க் கொடியாள் நிலாவென
சிர்க்கும் மலர்க் கொடியாள்
பைங்கனி இதழில் பழரசம் தருவாள்
பருகிடத் தலை குனிவாள்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக