ஞாயிறு, 30 அக்டோபர், 2011

ஏர் முனைக்கு நேர் இங்கே

உணவின்றி யாரும் உயிர் வாழ்தல் அரிது. உலகில் வாழும் அனைத்து உயிர்களுக்கும் உணவளிப்பவை மரங்களும், செடி கொடிகளும் பயிர் வகைகளும் ஆகும். இவற்றுக்கு ஆதாரமான காடுகளையும் வயல்களையும் நாள்தோறும் மனிதன் அழித்து வருவது ஆபத்துக்கறிகுறி ஆகும். அதை விடவும் அதிக ஆபத்துக்கறிகுறி யாதெனில் மக்கள் தொகை அதிகரித்துக்கொண்டு வருவதாகும். மஹாகவி பாரதியார் வாழ்ந்த காலத்தில் அதாவது 1921ஆம் ஆண்டுக்கு முன் 30 கோடியாக இருந்த நம் நாட்டின் மக்கள் தொகை இன்று அதாவது சுமார் 100 ஆண்டுகளில் 121 கோடியாக உயர்ந்துள்ளது. ஒரு புறம் மக்கள் தொகை உயர மறுபுறம் அவர்களுக்கு உணவாதாரமாக விளங்கும் காடுகளும் விளைநிலங்களும் வெகுவாகக் குறைந்து வருவது மிகவும் ஆபத்தான விளைவுகளை நோக்கியல்லவா உள்ளது. இதே நிலை நீடித்தால் இன்னும் சில ஆண்டுகளில் நமக்கெல்லாம் உணவு கிடைப்பதே அரிதாகிவிடக் கூடுமல்லவா?

நம்மில் பெரும்பாலோர் நம் வாழ்வில் பெரும்பான்மையான நேரத்தை நமது வருங்கால வாழ்விற்கும் நமது பிள்ளைகளும் சந்ததியினரும் சிறப்பாக வாழவும் தேவையான பொருளைத் தேடுவதிலேயே செலவிடுவதால் மனித சமுதாயத்தை எதிர்நோக்கியுள்ள இத்தகைய பேரபாயத்தைத் தவிர்ப்பது குறித்து சிந்திக்கத் தவறுகிறோம். இதற்கு அடிப்படைக் காரணம் சுயநலம். பண்டைக் காலத்தில் மக்கள் விருந்தோம்பலைத் தலையாய கடமையாக எண்ணி ஒவ்வொரு நாளும் குறைந்தது ஒரு விருந்தினருக்காவது முதலில் உணவு அளித்த பின்னரே தாங்கள் உணவருந்துவது எனும் கட்டுப்பாட்டுடன் வாழ்ந்து வந்தனர். இதற்கான ஆதாரங்கள் புராண இதிகாசக் கதைகளில் மட்டுமல்லாது நம் நாட்டின் உண்மை சரித்திரக் கதைகளிலும் உள்ளன. மனிதர்களுக்கு மட்டுமின்றி பறவைகள், விலங்குகள், செடி கொடிகள் முதலியவற்றுக்கும் பரிந்து தம் தேவைகளை அவற்றுக்காகத் தியாகம் செய்த பல மஹாத்மாக்களைக் குறித்து நாம் அறிகிறோம்.

பறவைகளுக்காக்த் தன் தொடையை வாளால் அரிந்து கொடுத்த செம்பியன் எனும் சிபிச் சக்கரவர்த்தி, தனது மகன் ஓட்டிச் சென்ற தேரில் அடிபட்டு மாட்டின் கன்று ஒன்று இறந்ததால் அம்மாட்டின் குறையைத் தீர்க்கத் தன் மகனையே தேர்க்காலில் இட்டுக் கொன்ற மனு நீதிச் சோழன், கொழுகொம்பின்றி வாடிய முல்லைக் கொடிக்குத் தன் தேரை ஈந்த வள்ளல் பாரி, தான் நீடூழி வாழ வேண்டுமென வாழ்த்தி ஒருவர் கொடுத்த அரிய நெல்லிக்கனியை ஔவையாருக்களித்த வள்ளல் அதியமான் நெடுமான் அஞ்சி, இன்னும் இவர்கள் போன்ற எத்தனையோ உன்னத மனிதர்களைப் பற்றி நாம் இத்தகைய கதைகளில் படிக்கிறோம். இவற்றுள் பல கற்பனைக் கதைகளாக இருந்த போதிலும் இவற்றை நம் முன்னோர்கள் முதல் நம்முடன் வாழும் மக்கள் அனைவரும் சொல்லியும் கேட்டும் வருவது மனித குலத்தின் தருமசிந்தையையே காட்டுகிறது.

இத்தகு உயர்ந்த தரும சிந்தை கொண்ட தெய்வ வடிவுடன் விளங்கும் மனிதர்களாகிய நாம் சுயநலத்தைத் தள்ளி விட்டு இவ்வுலகைக் காக்கும் கடமையில் சற்றே கவனம் செலுத்த வேண்டிய தருணம் வந்துவிட்டது. போதும், அநியாய வழிகளில் ஈட்டிய பெரும்பொருளைக் கொண்டு பேராசை கொண்ட மாந்தர் பலர் விவசாயிகள் பிழைக்க வழியில்லாத நிலையை உருவாக்கி, அவர்களின் விளைநிலங்களைக் குறைந்த விலைக்கு வாங்கி அவற்றையே பல மடங்கு அதிக விலைக்கு வீட்டு மனைகளாகவும் தொழிற்சாலைகளுக்கான இடமாகவும் விற்று விவசாயம் நடைபெறுவதைத் தடுத்து, உணவு உற்பத்தியைக் குறைத்து, மனித குலத்தை அழிவுப் பாதையில் இட்டுச் செல்லும் ஈனத்தை மாற்றுவோம். விவசாய நிலங்களைக் காப்போம்.

ஆற்று மணலைக் கட்டுப்பாடின்றி லாரிகளில் அள்ளிச் சென்று கட்டடங்கள் கட்டுவதற்குப் பயன்படுத்தி நிலத்தடி நீர் இல்லாமல் செய்யும் சமூகவிரோத செயலைத் தடுத்திடுவோம். காடுகளையும் மரங்களையும் அழிக்கும் நிலையை மாற்றி மரங்கள் பல நட்டு இயற்கையைக் காக்க முயற்சிகள் மேற்கொள்வோம். விவசாயத்தினால் விளையும் காய்கறிகள், கனிகள் முதலியவை கெட்டு அழுகி வீணாவதைக் குறைக்கக் குளிர்பதக் கிடங்குகளை அமைப்போம். குறிப்பிட்ட பருவகாலத்தில் மட்டும் விளையும் அரிய வகைக் காய்கறிகளையும் பழங்களையும் இதன் மூலம் ஆண்டுதோறும் கிடைக்க வழி செய்வோம். இடைத் தரகர்களை நீக்கி விவசாயிகளின் விளைபொருட்களுக்கு உரிய நியாமமான விலை அவர்களுக்குக் கிடைக்கச் செயது விவசாயிகள் சுரண்டப்படுவதைத் தவிர்த்து விவசாயிகள் தன் விளைநிலங்களை விற்கும் அவலத்தைப் போக்க ஆவன செய்வோம். விவசாய விளைபொருட்களை ஏற்றிச் செல்லும் வாகனங்களுக்கு வரிவிலக்கு அளீத்து விளை பொருட்கள் பொதுமக்களுக்கு நியாயமான விலையில் கிடைக்கச் செய்வோம்.

ஆட்சியாளர்கள் இதற்கான உரிய நடவடிக்கைகளை எடுக்குமாறு நாம் சமுதாய அமைப்புகள் வழியே வலியுறுத்துவோம். விவசாயம் செழித்தால் நம் வாழ்வில் என்றும் பஞ்சமில்லை.

ஏர் முனைக்கு நேர் இங்கே

திரைப்படம்: பிள்ளைக் கனியமுது
இயற்றியவர்: மருதகாசி
இசை: கே.வி. மஹாதேவன்
பாடியவர்: டி.எம். சௌந்தரராஜன்

ஏர் முனைக்கு நேர் இங்கே எதுவுமே இல்லே
ஏஏஏ ஏஏஏ ஏஏஏஏஏஏ
என்றும் நம்ம வாழ்விலே பஞ்சமே இல்லே
ஆஆஆஆ ஆஆஆஆஆ ஆஆஆஆஆஆஆ
ஏர் முனைக்கு நேர் இங்கே எதுவுமே இல்லே
என்றும் நம்ம வாழ்விலே பஞ்சமே இல்லே

பூமியிலே மாரியெல்லாம் சூரியனாலே பயிர்
பூப்பதுவும் காய்ப்பதுவும் மாரியினாலே
பூமியிலே மாரியெல்லாம் சூரியனாலே பயிர்
பூப்பதுவும் காய்ப்பதுவும் மாரியினாலே நாம்
ஷேமமுற நாள் முழுதும் உழைப்பதனாலே நாம்
ஷேமமுற நாள் முழுதும் உழைப்பதனாலே இந்த
தேசமெல்லாம் செழித்திடுது நம்ம கையாலே

ஏர் முனைக்கு நேர் இங்கே எதுவுமே இல்லே
என்றும் நம்ம வாழ்விலே பஞ்சமே இல்லே

நெற்றி வேர்வை சிந்தினோமே முத்து முத்தாக அது
நெல்மணியாய் வெளஞ்சிருக்கு கொத்துக் கொத்தாக
நெற்றி வேர்வை சிந்தினோமே முத்து முத்தாக அது
நெல்மணியாய் வெளஞ்சிருக்கு கொத்துக் கொத்தாக
பக்குவமாய் அறுத்து அதைக் கட்டுக் கட்டாக
பக்குவமாய் அறுத்து அதைக் கட்டுக் கட்டாக அடிச்சுப்
பதரை நீக்கிக் குவிச்சி வைப்போம் முத்து முத்தாக

ஏர் முனைக்கு நேர் இங்கே எதுவுமே இல்லே
என்றும் நம்ம வாழ்விலே பஞ்சமே இல்லே

வளர்ந்து விட்ட பருவப்பெண் போல் உனக்கு வெட்கமா? தலை
வளைஞ்சு சும்மாப் பாக்குறியே தரையின் பக்கமா
வளர்ந்து விட்ட பருவப்பெண் போல் உனக்கு வெட்கமா? தலை
வளைஞ்சு சும்மாப் பாக்குறியே தரையின் பக்கமா இது
வளர்த்து விட்ட தாய்க்குத் தரும் ஆசை முத்தமா? இது
வளர்த்து விட்ட தாய்க்குத் தரும் ஆசை முத்தமா? என்
மனைக்கு வரக் காத்திருக்கும் நீயும் சொத்தம்மா?

ஏர் முனைக்கு நேர் இங்கே எதுவுமே இல்லே
என்றும் நம்ம வாழ்விலே பஞ்சமே இல்லே
ஏர் முனைக்கு நேர் இங்கே எதுவுமே இல்லே
என்றும் நம்ம வாழ்விலே பஞ்சமே இல்லே

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக