திங்கள், 23 நவம்பர், 2009

எத்தனை காலந்தான் ஏமாற்றுவார்

"இப்போது நாட்டை ஆள்பவர்கள் ஏமாற்றுக் காரர்கள், நல்லவர்களைப் போல் நடித்து நாட்டைக் கொள்ளையடிக்கிறார்கள். இவர்களை விரட்டிவிட்டு எங்களை ஆட்சியில் அமர்த்துங்கள். நாட்டிலுள்ள தெருக்கள் அனைத்திலும் பள்ளிக்கூடங்கள் கட்டி கல்வியறிவில்லாதவர் யாருமில்லை எனும் நிலையை உருவாக்குவோம். பொதுமக்கள் அனைவருக்கு ஆளுக்கொரு வீடு கட்டித்தருவோம், நாட்டில் தொழில்கள் பல்கிப் பெருக வகை செய்வோம். நாட்டில் உண்ண உணவில்லாது வாடுபவர் யாருமில்லாத நிலையை உருவாக்குவோம்." என்றெல்லாம் அடுக்குமொழியுடன் அலங்கார வார்த்தைகள் நிறைந்த மேடைப் பேச்சுக்கள் வாயிலாகவும், இசைநயமிக்க பாடல்கள் மூலமும் மக்களிடம் கூறி வாக்குப் பெற்று ஆள வந்தவர்கள் செய்தது என்ன?

முன்னர் ஆண்டவர்களுக்குத் தெரியாத பல புதிய ஏமாற்று வேலைகளைச் செய்து முன்னவர் லட்சங்களைக் கொள்ளையடித்த சாதனையை முறியடித்துக் கோடிகளில் புரண்டனர், புரள்கின்றனர். தெருவெங்கும் பள்ளிகள் கட்டினரா? ஆம் உள்ளேயும் வெளியேயும் சென்று வரத் தேவையான வழித்தடங்கள் இல்லாத சிறு வீடுகளிலும் தனியார் பலர் பள்ளிகளைக் கட்டி அவற்றில் சேர்பவர்களிடம் வழக்குத்துக்கு மிகவும் அதிகமான, அநியாயமான தொகையைக் கல்விக் கட்டணமாக வசூலித்ததுடன் அவ்வப்பொழுது அஜாக்கிரதையான நிர்வாகத்தினால் விளைந்த தீ விபத்துக்களுக்குப் பால்மணம் மாறாத பச்சிளம் குழந்தைகளைப் பலியாக்கினர்.

ஆளுக்கொரு வீடு கட்டினரா? ஆம் அவர்களது உற்றார், உறவினர், அவர்களுக்கு நிதியளிக்கும் நபர்கள் ஆகியோருக்கு. நாட்டில் தொழில்கள் பெருகினவா? ஆம், அன்னிய நாட்டவர்களின் முதலீட்டில் தொழிற்சாலைகள் உருவாகி, உறப்பத்தியால் வரும் லாபத்தில் பெரும்பகுதி அவர்கள் கையில் போய்ச் சேர, நம் மக்களில் சிலருக்கு அங்கு கூலிக்கு வேலை கிடைக்கின்றது. நம் அரசியல்வாதிகளுக்குப் பெட்டிக் கணக்கில் பணம் கிடைக்கின்றது.

உண்ண உணவில்லாத நிலை நாட்டில் உருவாகியதா? பல இடங்களில் விவசாயிகள் எலிக்கறியை உண்டு வாழ வழி கிடைத்தது. கடன் தொல்லை தாங்காமல் பல விவசாயிகள் தற்கொலை செய்து கொண்டனர். இது போன்றவை தவிர, கையில் காசுள்ளவர்கள் யாவருக்கும் உணவு கிடைக்கும் நிலை உருவாகியுள்ளது. இன்று மக்கள் தங்கள் குழந்தைகளைப் பள்ளிகளிலும் கல்லூரிகளிலும் சேர்க்கவும், தங்களுக்கும் குழந்தைகளுக்கும் நோய்கள் வரும் காலத்தில் அவற்றுக்கான சிகிச்சை பெறுவதற்கும் ஊரெல்லாம் கையேந்திப் பிச்சை கேட்க வேண்டிய நிலை உருவாகியுள்ளது. இந்நிலை நீடித்தால் நம் வருங்கால சந்ததிகள் உலகில் வாழ முடியுமா?

நாமெல்லாம் என்ன செய்கிறோம்?

தேடிச் சோறு நிதந்தின்று பல சின்னஞ்சிறு கதைகள் பேசி மனம் வாடித் துன்பமிக உழன்று பிறர் வாடப் பல செயல்கள் செய்து நரை கூடிக் கிழப்பருவமெய்திக் கொடுங்கூற்றுக்கிரையெனப் பின் மாயும் பல வேடிக்கை மனிதரைப் போல..

வீழ்ந்து கிடக்கிறோம். நமது வயிறு நிரம்பினாற் போதும் என்று நாட்டில் நடக்கும் அநீதிகளை நீக்க எம்முயற்சியும் எடுக்காமல் வாளாவிருக்கிறோம். நாமனைவரும் சிந்தித்து இம்முறைகேடுகளை நீக்கிட எதிர்காலத்தில் மக்கள் அனைவரும் நல்வாழ்வு வாழ வழி தேடுவது மிகவும் அவசியம், அவசரம். நாம் பட்ட துன்பங்கள் நமது சந்ததியினர் படாதிருக்க உரிய நடவடிக்கை எடுப்பது நம் அனைவரது கடமை. இளைஞர்களே சிந்தியுங்கள், நாட்டைக் காக்க நல்லதொரு வழி காணுங்கள்.

எத்தனை காலந்தான் ஏமாற்றுவார்

மலைக் கள்ளன்


டி.எம். சௌந்தரராஜன்
ஆ..ஆ...ஆ..ஆ..ஆ..
எத்தனை காலந்தான் ஏமாற்றுவார் இந்த நாட்டிலே - இன்னும்
எத்தனை காலந்தான் ஏமாற்றுவார் இந்த நாட்டிலே
சொந்த நாட்டிலே நம் நாட்டிலே

சத்தியம் தவறாத உத்தமன் போலவே நடிக்கிறார்
சத்தியம் தவறாத உத்தமன் போலவே நடிக்கிறார்
சமயம் பார்த்துப் பல வகையிலும் கொள்ளை அடிக்கிறார்
சமயம் பார்த்துப் பல வகையிலும் கொள்ளை அடிக்கிறார்
பக்தனைப் போலவே பகல் வேஷம் காட்டிப்
பாமர மக்களை வலையினில் மாட்டி

எத்தனை காலந்தான் ஏமாற்றுவார் இந்த நாட்டிலே
சொந்த நாட்டிலே நம் நாட்டிலே

தெருவெங்கும் பள்ளிகள் கட்டுவோம்
தெருவெங்கும் பள்ளிகள் கட்டுவோம் - கல்வி
தெரியாத பேர்களே இல்லாமல் செய்வோம் - கல்வி
தெரியாத பேர்களே இல்லாமல் செய்வோம்
கருத்தாகப் பல தொழில் பயிலுவோம்
கருத்தாகப் பல தொழில் பயிலுவோம் - ஊரில்
கஞ்சிக்கில்லை என்ற சொல்லினைப் போக்குவோம் - ஊரில்
கஞ்சிக்கில்லை என்ற சொல்லினைப் போக்குவோம்

எத்தனை காலந்தான் ஏமாற்றுவார் இந்த நாட்டிலே
சொந்த நாட்டிலே நம் நாட்டிலே

ஆளுக்கொரு வீடு கட்டுவோம்
ஆளுக்கொரு வீடு கட்டுவோம் - அதில்
ஆன கலைகளை சீராகப் பயில்வோம் - அதில்
ஆன கலைகளை சீராகப் பயில்வோம்
கேளிக்கையாகவே நாளினைப் போக்கிட
கேள்வியும் ஞானமும் ஒன்றாகத் திரட்டுவோம்

இன்னும் எத்தனை காலந்தான் இன்னும்
எத்தனை காலந்தான் ஏமாற்றுவார் இந்த நாட்டிலே
இந்த நாட்டிலே இந்த நாட்டிலே இந்த நாட்டிலே

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக