திங்கள், 23 நவம்பர், 2009

அமைதியான நதியினிலே ஓடும் ஓடம்

உலகத்தோடு ஒட்ட ஒழுகல் பல கற்றும்
கல்லார் அறிவிலா தார்
எனும் குறளுக்கேற்ப நம்மைச் சேர்ந்தவர்களின் கருத்துக்களுக்கு மதிப்பளித்து, நம் கருத்து ஒன்றே எடுபட வேண்டும் எனும் பிடிவாதத்தை விட்டு வளைந்து கொடுத்து வாழ்வதுவே அறிவுடைமையாகும். இதனை விட்டுக் கொடுத்து வாழ்தல் என்று சொல்கிறார்கள் நம் மூத்தோர். நமது சமுதாயத்தில் குடும்பப் பெண்களுக்கு இத்தகைய குணம் மிகவும் அவசியம்.

நாணலானது காற்றடிக்கையில் அதற்கேற்றாற்போல் வளைந்து கொடுக்கும் தன்மையால் சேதாரமில்லாமல் பிழைக்கிறது, ஆனால் காற்றை எதிர்த்து நிற்கும் மூங்கில் மரங்கள் காற்று பலமாக வீசுகையில் ஒடிந்து விழுகின்றன. நமது சக்திக்கேற்ற செயல்களையே நாம் செய்ய வேண்டும். நமது சக்திக்கு அப்பாற்பட்ட செயலைச் செய்ய முயலுகையில் ஆபத்து விளைகிறது.

சிறு ஓடத்தில் அமர்ந்து ஓர் ஆற்றைக் கடக்கையில் ஆற்றில் வெள்ளம் அளவுக்கு அதிகமானால் கரையில் ஒதுங்குவதே பிழைக்கும் வழி. அது போல நம்மால் எதிர்த்து வெல்ல இயலாத பகை நம்மை விதிவசத்தால் அண்டினால் அதனிடமிருந்து ஒதுங்கி வாழ்தல் நன்று.

மேற்சொன்ன கருத்துக்களை எளிமையான உவமைகளுடன் அழகிய தமிழில் தரும் ஓர் இனிய பாடல்:

அமைதியான நதியினிலே ஓடும் ஓடம்

படம்: ஆண்டவன் கட்டளை
இயற்றியவர்: கவிஞர் கண்ணதாசன்
பாடியோர்: டி.எம். சௌந்தரராஜன், பி. சுசீலா
இசை: எம்.எஸ். விஸ்வநாதன்

அமைதியான நதியினிலே ஓடும் ஓடம்
அளவில்லாத வெள்ளம் வந்தால் ஆடும்
அமைதியான நதியினிலே ஓடும் ஓடம்
அளவில்லாத வெள்ளம் வந்தால் ஆடும்
காற்றினிலும் மழையினிலும் கலங்க வைக்கும் இடியினிலும்
காற்றினிலும் மழையினிலும் கலங்க வைக்கும் இடியினிலும்
கரையினிலே ஒதுங்கி நின்றால் வாழும் ஹோய் ஹோய்
அமைதியான நதியினிலே ஓடும் ஓடம்
அளவில்லாத வெள்ளம் வந்தால் ஆடும்

தென்னை இளங்கீற்றினிலே ஏ... ஏ..
தென்னை இளங்கீற்றினிலே தாலாட்டும் தென்றலது
தென்னை இளங்கீற்றினிலே தாலாட்டும் தென்றலது
தென்னை தனை சாய்த்து விடும் புயலாக வரும்பொழுது
தென்னை தனை சாய்த்து விடும் புயலாக வரும்பொழுது

அமைதியான நதியினிலே ஓடும் ஓடம்
அளவில்லாத வெள்ளம் வந்தால் ஆடும்

ஆற்றங்கரை மேட்டினிலே ஆடி நிற்கும் நாணலது
ஆற்றங்கரை மேட்டினிலே ஆடி நிற்கும் நாணலது
காற்றடித்தால் சாய்வதில்லை கனிந்த மனம் வீழ்வதில்லை
காற்றடித்தால் சாய்வதில்லை கனிந்த மனம் வீழ்வதில்லை

அமைதியான நதியினிலே ஓடும் ஓடம் (ஓ..)
அளவில்லாத வெள்ளம் வந்தால் ஆடும்
அமைதியான நதியினிலே ஓடும் ஓடம்
அளவில்லாத வெள்ளம் வந்தால் ஆடும்

நாணலிலே காலெடுத்து நடந்து வந்த பெண்மை இது
நாணலிலே காலெடுத்து நடந்து வந்த பெண்மை இது
நாணம் எனும் தென்றலிலே தொட்டில் கட்டும் மென்மையிது
நாணம் எனும் தென்றலிலே தொட்டில் கட்டும் மென்மையிது

அமைதியான நதியினிலே ஓடும் ஓடம்
அளவில்லாத வெள்ளம் வந்தால் ஆடும்

அந்தியில் மயங்கி விழும் காலையில் தெளிந்து விடும்
அந்தியில் மயங்கி விழும் காலையில் தெளிந்து விடும்
அன்பு மொழி கேட்டுவிட்டால் துன்பநிலை மாறிவிடும்
அன்பு மொழி கேட்டுவிட்டால் துன்பநிலை மாறிவிடும்

அமைதியான நதியினிலே ஓடும் ஓடம்
அளவில்லாத வெள்ளம் வந்தால் ஆடும்
காற்றினிலும் மழையினிலும் கலங்க வைக்கும் இடியினிலும்
கரையினிலே ஒதுங்கி நின்றால் வாழும் ஓ..ஓ..
அமைதியான நதியினிலே ஓடும் ஓடம் (ஓ..)

அளவில்லாத வெள்ளம் வந்தால் ஆடும்
அமைதியான நதியினிலே ஓடும் ஓடம்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக